கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தேர்தல் கணக்குகளுக்கு அப்பால் பாஜக எதிர்ப்பு அரசியலின் எல்லைகள்

Loading

மேற்கு வங்கம், அஸ்ஸாம் முதலான மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் விவாதங்களில் கவனிக்கத்தக்க விசயம், பாஜக பெற்ற வெற்றியின் அளவு மட்டுமல்ல; அந்த வெற்றியை விளக்குவதற்காக முன்வைக்கப்பட்ட அரசியல் பகுப்பாய்வுகளின் பலவீனமும்தான். மதச்சார்பற்ற மற்றும் மாநில கட்சிகளின் பெரும்பாலான எதிர்வினைகள், வாக்குரிமை பறிப்பு குறித்த குற்றச்சாட்டுகளையே மையமாகக் கொண்டிருந்தன.

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுதல், நிர்வாகத் தடைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் அதிகார அமைப்புகளின் தவறான பயன்பாடு போன்றவை தேர்தல் முடிவுகளைப் பாதித்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இத்தகைய செயல்முறைகள் இன்றைய இந்திய அரசியலில் கசப்பான உண்மையாகவும், படிப்படியாக இயல்பாக்கப்பட்ட ஒன்றாகவும் மாறிவருவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

ஆனால், தற்போதைய அரசியல் நெருக்கடி என்பது வெறும் வாக்குரிமை பறிப்பு சார்ந்தது மட்டுமல்ல. ‘இந்தச் சூழல், எதிர்க்கட்சி அரசியலின் தற்போதைய நிலையைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது?’ என்பது அதைவிட முக்கியமான கேள்வியாகும். 

இந்த நெருக்கடியை தேர்தல் சார்ந்த ஒன்றாக மட்டும் பார்க்காமல், ஆட்சி முறையிலுள்ள அடிப்படைச் சிக்கலாகவே பார்க்க வேண்டும். இங்கு அதிகாரம் என்பது வெறும் அடக்குமுறையாலும் வெளிப்படையான வன்முறையாலும் மட்டுமே செயல்படுவதில்லை. மாறாக, மக்களை நிர்வகிப்பது, ஆவணங்களின் கட்டுப்பாடு, குடியுரிமை, நலத்திட்ட அணுகல் மற்றும் தேர்தல் சட்டபூர்வத்தன்மை ஆகியவற்றின் வழியாகவே அது இயங்குகிறது.

இந்த அர்த்தத்தில், வாக்குரிமை பறிப்பு என்பது ஜனநாயகத்திற்கான ஒரு விதிவிலக்கல்ல; மாறாக, ஜனநாயகத்தின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட செயல்முறையாகவே அது மாற்றப்பட்டு வருகிறது. நவீன அரசு யார் அரசியலில் அங்கீகரிக்கப்பட வேண்டும், யார் ஆளப்பட வேண்டும் என்பதை  தீர்மானிக்கிறது. இந்த முறைகேடுகளைச் செய்த அதே அதிகார அமைப்புகளிடம் முறையீடு செய்வது, எதிர்க்கட்சிகளின் அரசியல் கற்பனைத்திறன் வறண்டுவிட்டதையே காட்டுகிறது. இவர்களின் எதிர்ப்பு என்பது அரசியல் களத்திலிருந்து விலகி, வெறும் சட்ட ரீதியான (Juridical) புகார்களாகவும், மனுக்களாகவும் மட்டுமே சுருங்கிப் போகிறது.

அன்றாட வாழ்வில் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் வெகுசன  அரசியல் அமைப்புகளை மறுகட்டமைப்பதற்கான முயற்சிகள் எங்கும் காணப்படவில்லை.

இதுவே பல மதச்சார்பற்ற மற்றும் மாநில அரசியல் அமைப்புகளின் பலவீனமாகும். ஜனநாயகச் சிதைவை அம்பலப்படுத்துவது மட்டுமே அரசியல் ஆதரவைத் திரட்டப் போதுமானது என்று அவை நம்புகின்றன. அரசியல் இயக்கங்கள், நிறுவனங்கள் நியாயமாகச் செயல்பட்டதால் உயிர் வாழவில்லை; மாறாக, மக்கள் இயக்கம், ஒற்றுமை மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் நிலையான கட்டமைப்புகளை அவை கட்டியெழுப்பியதால்தான் உயிர் வாழ்ந்தன’ என்ற உண்மையை வரலாறு உணர்த்துகிறது.

 இன்று அத்தகைய கட்டமைப்புகள் இல்லாததால், அநீதிகள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் கூட, அந்த அதிருப்தியை நீடித்த அரசியல் இயக்கமாக மாற்றக்கூடிய ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் சக்தி உருவாகவில்லை.

அரசியல் என்பது அடிப்படையில் மேலாதிக்கத்தை (Hegemony) உருவாக்கும் செயல்முறையாகும். வெவ்வேறு சமூகக் கோரிக்கைகளை ஒரு பெரிய அரசியல் களமாக இணைப்பதே அதன் மையம். பாஜக வெற்றியின் ரகசியம் வெறும் நிர்வாக அதிகாரத்தில் மட்டும் இல்லை; “தேசம் vs தேச விரோதம்”, “நாகரிகம் vs அச்சுறுத்தல்”, “பெரும்பான்மை பாதிப்பு vs சிறுபான்மை ஆதரவு”போன்ற இரு துருவ அரசியல் எல்லைகளை உருவாக்கிய திறனிலும்தான் உள்ளது. இக்கருத்துகள் உண்மைக்கு நெருக்கமானவையா என்பது இங்கு முக்கியமல்ல; உணர்வுகள், அடையாளங்கள் மற்றும் எதிர்காலக் கனவுகளை ஒரே அரசியல் கதைவடிவமாக (Narrative) மாற்றுவதே மேலாதிக்க அரசியலின் வெற்றியாகும்.

இதற்கெதிராக, பல மதச்சார்பற்ற கட்சிகள் நேர்மறை அரசியலை விட எதிர்மறை அரசியலிலேயே செயல்படுகின்றன. “பாஜகவைத் தடுக்க எங்களுக்கு வாக்களியுங்கள்.” என்பதுடன்  முஸ்லிம்களிடம் அவை முன்வைக்கும் செய்தி சுருங்கிவிடுகிறது.

இது மிகவும் சமநிலையற்ற ஓர் அரசியல் உறவை உருவாக்குகிறது. முஸ்லிம்கள், மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டிய “தற்காப்பு வாக்காளர்களாக” (Defensive Voters) மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். அதேசமயம், முஸ்லிம் சமூகங்களுக்கான மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய சமூக-பொருளாதாரத் திட்டங்களை முன்வைப்பதிலிருந்து கட்சிகள் தந்திரமாகத் தப்பித்துக் கொள்கின்றன. இந்திய மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான சுமை இவ்வாறு பெரும்பாலும் முஸ்லிம்களின் தோள்களில் மட்டுமே சுமத்தப்படுகிறது.

இதனால்தான் முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில்கூட பாஜக முன்னேற்றம் கண்டதாகக் கூறப்பட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. “முஸ்லிம்கள் சரியாக வாக்களிக்க வேண்டும்; இல்லையெனில் மதச்சார்பற்ற ஜனநாயகம் பாதிக்கப்படும்” என்ற மறைமுக எச்சரிக்கையை அந்த அதிர்ச்சி உள்ளடக்கியுள்ளது.

ஆனால், கடந்த பல தசாப்தங்களில் மதச்சார்பற்ற ஜனநாயகம் முஸ்லிம்களுக்கு உண்மையில் என்ன வழங்கியது? “மிக மோசமான ஒன்றிலிருந்து” ஒரு தற்காலிகப் பாதுகாப்பைத் தவிர வேறென்ன கிடைத்தது?

அரசியல் பிரதிநிதித்துவக் குறைவு, கல்வியில் புறக்கணிப்பு, பொருளாதார நிலையற்ற தன்மை, பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் அவ்வப்போது வெடிக்கும் மதவெறி வன்முறைகள் — எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவை இந்தியக் கட்டமைப்பின் நிதர்சனங்களாகவே இருந்து வருகின்றன. அரசியல் என்பது வெறும் அழிவைத் தடுக்கிற கருவியாக மட்டுமே மாறிவிட்டால், ஒரு கட்டத்தில் ‘அச்சம்’ என்பது மக்களை இயக்கும் சக்தியை இழந்துவிடும்.

பொருளாதார அச்சங்கள், சாதி சமத்துவமின்மை, வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் மற்றும் சிறுபான்மையினர் ஒதுக்கப்படுதல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் மாற்று அரசியல் களத்தை மதச்சார்பற்ற கட்சிகள் உருவாக்கத் தவறிவிட்டன. மதச்சார்பின்மை என்பது ஒரு விரிவான அரசியல் கனவாக இல்லாமல், வெறும் தற்காப்பு நிர்வாகமாகச் சுருங்கிவிட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய விவாதங்கள் வெளிப்படுத்திய மற்றொரு முக்கியப் பிரச்சினை, ‘இஸ்லாமிய வெறுப்பை’ வெளிப்படையாகப் பெயரிட்டுப் பேசுவதில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இருக்கும் தயக்கமாகும். குறிப்பாக அஸ்ஸாமில் NRC, தடுப்பு முகாம்கள் மற்றும் “சட்டவிரோத ஊடுருவலாளர்கள்” என்ற சொல்லாடல்கள் பெருமளவில் முஸ்லிம்களையே பாதித்துள்ளன.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International) போன்ற மனித உரிமை அமைப்புகள் அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடுகளை ஆவணப்படுத்தியுள்ளன. இருந்தாலும், இக்கொள்கைகளை எதிர்க்கும் காங்கிரஸ் அல்லது திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள்கூட அவற்றை “இஸ்லாமிய வெறுப்பு” அல்லது “முஸ்லிம் எதிர்ப்பு இனவெறி” என்ற மொழியில் அரிதாகவே விவரிக்கின்றன.

அதற்குப் பதிலாக, அவர்கள் “அரசியலமைப்பு மாண்புகள்”, “ஜனநாயகம்” போன்ற பாதுகாப்பான சொற்களுக்குள் தங்களைச் சுருக்கிக் கொள்கின்றனர். இந்த உரையாடல்களில் முஸ்லிம்கள் ஒரு நிர்வாகப் பிரச்சினையாகவோ அல்லது ஒரு வாக்கு வங்கியாகவோ மட்டுமே தெரிகிறார்களே தவிர, இனவெறி கலந்த அரசியல் நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாகப் பார்க்கப்படுவதில்லை.

இந்துத்துவ மேலாதிக்கம் ஏற்கனவே இந்திய அரசியல் உரையாடலின் எல்லைகளை மாற்றிவிட்டது. “சட்டவிரோத குடியேறி”, “ஊடுருவலாளர்” போன்ற பாஜகவின் சொற்களஞ்சியத்திற்குள்ளேயே நின்றுகொண்டுதான் மதச்சார்பற்ற கட்சிகளும் பேசுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான அநீதியைப் பற்றிப் பேசினால் அது “சிறுபான்மை ஆதரவு அரசியல்” என முத்திரை குத்தப்படும் என்ற அச்சம் அவர்களைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டது.

‘ஜனநாயகம் எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டது?’ என்பதை விட,‘இந்துத்துவ அரசியலின் வீச்சை எதிர்கொள்ளக்கூடிய வலிமையான மக்கள் ஒற்றுமையையும், புதிய அரசியல் நம்பிக்கையையும் உருவாக்குவதில் மதச்சார்பற்ற மற்றும் மாநில அரசியல் ஏன் தோல்வியடைந்துள்ளது?’ என்பதே இந்தத் தேர்தல்களுக்குப் பின் எழவேண்டிய உண்மையான கேள்வியாகும்.

(Source: The Limits of Anti – BJP Politics)

(தமிழில்: செய்யது அலீ)

Related posts

Leave a Comment