கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃகாமினயீ: இஸ்லாமிய ஈரானைச் செதுக்கிய சிற்பி

Loading

பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் ரஹ்பர் (வழிகாட்டி) ஃகாமினயீ. அவர் இமாம் ஃகொமேனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.

சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பீடிகையில் அமெரிக்கா தன் இராணுவக் கப்பல்களை ஈரானியக் கடற்பகுதிக்கு அருகில் நிறுத்தியது. இச்சூழலில், அமெரிக்காவுடன் கூட்டுசேர்ந்த இஸ்ரேல் 2026 பிப்ரவரி 28 அன்று, புனித றமளான் மாதத்தில் ஈரானின் பல இடங்களில் தாக்குதல் தொடுத்தது. குறிப்பாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள இஸ்லாமியக் குடியரசின் தலைவர் சையித் அலீ ஃகாமினயீயின் அலுவலக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 86 வயதான ரஹ்பர் ஃகாமினயீ, அவருடைய குடும்பத்தார், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) சில முக்கியத் தலைவர்கள் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

பெருவாரியான தன்னுடைய உரைகளில், இயற்கையாக மரணிப்பதைவிட இறைவனின் வழியில், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சமரசமின்றி ‘ஷஹீது’ ஆவதே தனது இலட்சியம் என ரஹ்பர் ஃகாமினயீ கூறிவந்தார். இந்நிலையில், தற்போது அவர் அந்தப் பாக்கியத்தை அடைந்துள்ளார்.

தீவிரத் திட்டமிடலுக்கும் கடுமையான தேடலுக்கும் பிறகு ரஹ்பர் ஃகாமினயீயைக் கொன்றதுபோல் டிரம்பும் நெதன்யாஹுவும் ஊடகங்களில் பேட்டியளிக்கின்றனர்; ஆனால் அது உண்மை அல்ல. எதார்த்தம் என்னவென்றால், ஃகாமினயீயின் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைப் பல சந்தர்ப்பங்களில் மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது பதுங்குக் குழிக்குச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஏனெனில், அவரது குடியிருப்பும் அலுவலகமும் அமைந்துள்ள ‘பைத்தே ரஹ்பாரீ’ என்பது தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஒரு சாதாரண வளாகமாகும். அதில் தாக்குதல் நடத்தப்பட்டால் பாதிப்புகள் பலமாக இருக்கும் என ஏற்கெனவே கடுமையாக எச்சரித்துள்ளனர். இதை மறுத்த ரஹ்பர் ஃகாமினயீ, ‘உங்களால் ஈரானில் உள்ள 9 கோடி மக்களையும் இடமாற்ற முடியும் என்றால் நானும் வருகிறேன்’ எனக் கூறிவிட்டார்.

அந்நிய நாடுகள் ஈரானில் நேரடியாகத் தலையிட்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முயல்வது இதுவே முதன்முறை அல்ல. இதற்கு முன்னரும் இது நடந்துள்ளது. இதற்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது மொசாதெக் ஈரானின் எண்ணெய் வளத்தைத் தேசியமயமாக்கினார். இதன் விளைவாக, அமெரிக்காவும் பிரிட்டனும் CIA, MI6 என்னும் தங்கள் உளவு அமைப்புகளை வைத்து 1953 ஆகஸ்ட் 19 அன்று அவரது ஆட்சியைக் கவிழ்த்தனர்; மீண்டும் முந்தைய ஆட்சியாளர் ஷாவிடமே முழு அதிகாரத்தையும் ஒப்படைத்தனர். மேற்கத்தியத் தலையீடுகளால் ஈரானில் பல்லாண்டுகளாக நிலையற்ற ஓர் அரசியல் சூழலே நிலவிவந்தது. அப்போது சிறுவனாக இருந்த ஃகாமினயீமீது இந்நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஹ்பர் அலீ ஃகாமினயீயின் வாழ்வு, அரசியல், ஆன்மிகச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 3 முக்கிய நபர்களாக இமாம் றூஹுல்லாஹ் ஃகொமேனீ, சையித் குதுப், நவாப் சஃபவீ ஆகியோரைக் குறிப்பிடலாம். என்னதான் ஃகாமினயீ இஸ்லாத்தின் ‘ஷீஆ’ பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் எகிப்தின் சன்னீ முஸ்லிம் அறிஞரான சையித் குதுப், பிரபலப் பாகிஸ்தான் கவிஞர் இக்பால் ஆகியோரின் சிந்தனைகளையும், எகிப்தின் முன்னாள் அதிபர் ஜமால் அப்துல் நாசரின் ஏகாதிபத்திய, ஸியோனிச எதிர்ப்பு நிலைப்பாட்டையும் உள்வாங்கத் தயங்கியதில்லை.

ஃகாமினயீயைப் புரிந்துகொள்ளாமல் சமகால ஈரானைப் புரிந்துகொள்ள முடியாது. அவர் வெறும் ஓர் அரசியல் தலைவரோ, ஒரு பாரம்பரிய மார்க்க அறிஞரோ மட்டுமல்ல; ஈரானிய வரலாற்றின் அனைத்துப் புள்ளிகளும் ஒன்றிணையும் ஒரு குறியீடாகவும் அவர் திகழ்கிறார்.

மஷ்ஹது எனும் ஆன்மிக நகரின் தெருக்களிலிருந்து இஸ்லாமியக் குடியரசின் உயரதிகாரம்வரை அவர் மேற்கொண்ட பயணம் என்பது வெறும் ஒரு தனிமனித வரலாறு மட்டுமல்ல; அது நவீன ஈரானின் மாற்றங்கள், மோதல்கள், கனவுகள், நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றைக் காட்டும் ஒரு பெருந்திரை.

ஈரானில் பல தலைவர்கள் கொல்லப்பட்டு, மக்கள் பல நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும் எப்படி அவர்கள் இஸ்லாமிய அரசுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை ஃகாமினயீயின் வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஃகாமினயீயின் வாழ்க்கையை இஸ்லாமியப் புரட்சிக்கு முன், இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் எனப் பிரித்து எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இஸ்லாமியப் புரட்சிக்கு முன்: ஆரம்பக்கால வாழ்வு

வலுவான இஸ்லாமியப் பற்றுடைய, எளிய குடும்பப் பின்னணியைக் கொண்ட அலீ ஃகாமினயீ 1939 ஏப்ரல் 19 அன்று ஈரானின் வடகிழக்கில் உள்ள புனித நகரமான மஷ்ஹதில் பிறந்தார். இஸ்லாமியக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த அவருடைய தந்தை ஆயத்துல்லாஹ் சையித் ஜாவது ஃகாமினயீ சிறந்த ஆலிமாகவும் (மார்க்க அறிஞர்), தொழுகைகளை முன்னின்று நடத்துபவராகவும் இருந்துள்ளார். அவர் உலகப் பொருள்கள், ஆதாயங்கள்மீது பற்றற்ற நபராகவும், வலிமையான மார்க்கப் பற்றுடனும் ஏறத்தாழ எளியதொரு துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இஸ்லாமியப் புரட்சி வெற்றி பெற்று, ஜாவது ஃகாமினயீயின் மகன்கள் அரசாங்கத்தின் உயர் பொறுப்புகளில் அமர்ந்தபோதும் அவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தே மரணித்தார்.

ஃகாமினயீயின் தாயார் ஃகதீஜா மிர்தாமதீ மிகப் புத்திசாலியாகவும், கல்வியில், குறிப்பாகக் குர்ஆன், ஹதீஸ், வரலாறு, இலக்கியங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்துள்ளார். மிர்தாமதீ, குழந்தைகளைச் சுற்றி அமரவைத்துத் தன் இனிமையான குரலில் குர்ஆன் ஓதுவார்; அப்போது, அதில் இடம்பெறும் நபிமார்களின் வரலாறுகளை விளக்கிக்கூறும் வழக்கம் கொண்டவராக இருந்தார்.

ஃகாமினயீ தனது சிறு வயதில் ஓர் அறையும், இருண்ட ஒரு நிலவறையும் கொண்ட வெறும் 60-70 சதுர மீட்டர் வீட்டிலேயே வாழ்ந்துள்ளார். சில இரவுகளில் வெறும் ரொட்டியும் காய்ந்த திராட்சையும்தான் அவரின் உணவாக இருந்துள்ளது. அவர் இமாம் ரெஸா தர்ஹாவின் நிழலிலேயே வளர்ந்தார். இறையச்சமும், வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான மனப்பான்மையும் நிறைந்த அந்த நகரத்தின் சூழலில், அவர் மார்க்க அறிவியலுடன் சேர்த்து ஆரம்பக்காலப் புரட்சிகர எண்ணங்களையும் உள்வாங்கிக்கொண்டார்.

ஃகாமினயீ தனது 4ஆம் வயதிலேயே தன்னுடைய மூத்த சகோதரருடன் சேர்ந்து மஷ்ஹது நகரில் உள்ள ‘தய்யானத்’ (Dayyanat) ஆரம்பப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். அதேவேளை, அவர் மஷ்ஹதில் உள்ள பல குர்றாக்களிடமிருந்து (குர்ஆன் ஓதுவதில் தேர்ச்சிபெற்றவர்கள்) குர்ஆன் ஓதக் கற்றுக்கொண்டார். இஸ்லாமியச் சட்டத்துறை, நீதித்துறை, நீதித்துறையின் கொள்கைகள் ஆகியவற்றிலும் தேர்ச்சிபெற்றார்.

காலனியப் போரும் புரட்சிக்கான பாடமும்

ஃகாமினயீ தனது 12ஆவது வயதில், ஈரானின் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தைக் காண நேர்ந்தது. 1951ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானியப் பிரதமர் முஹம்மது மொசாதெக், தேசச் சுதந்திரத்திற்காகத் துணிச்சல்மிக்க சில முடிவுகளை எடுத்தார். அதில் முதன்மையானது, ஆங்லோ-ஈரானிய எண்ணெய் நிறுவனத்தைத் தேசியமயமாக்குதல். இதனால், ஈரானின் எண்ணெய் வளம் மீதான பிரிட்டிஷ் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது. மொசாதெக்கின் இந்த முடிவு, ஈரானுக்குள்ளும் சர்வதேச அளவிலும் மிகப் பெரிய ஓர் அதிகாரப் போராட்டத்தை உருவாக்கியதை இளம் ஃகாமினயீயும் அவருடைய தலைமுறையினரும் நேரில் கண்டனர்.

பிரிட்டன் இதற்குப் பதிலடியாக தெஹ்ரான்மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது; ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் முயற்சியிலும் அது இறங்கியது. ஆனால் நீதிமன்றம் 1952இல் அதை விசாரிக்க மறுத்துவிட்டது.

மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த மொசாதெக், மன்னர் ஷாவால் கட்டுப்படுத்தப்பட்ட நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தினார். மேலும், பாமர ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களையும் நிதியுதவிகளையும் வழங்கினார். இதனால் ஈரானின் நகரங்கள்முதல் கிராமங்கள்வரை மொசாதெக்கின் புகழ் பரவியிருந்தது. இதற்கு நேர்மாறாக, சில மேற்கத்திய ஆதரவு உயர்த்தரப்பினர் அவரை எதிர்த்தனர். ஈரானை மீண்டும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடித்த பிரிட்டிஷ், அமெரிக்க உளவு அமைப்புகள் இவர்களுக்குப் பின்னால் இருந்தன. இந்த அதிகாரப் போராட்டம் 1953 ஆகஸ்டில் உச்சம் தொட்டது. சி.ஐ.ஏ.வும் பிரிட்டிஷ் உளவுத்துறையும் ஈரானிய ராணுவத்தின் சில பிரிவுகள், ஷா மன்னரின் ஆதரவாளர்கள் ஆகியோர் உதவியுடன் ஒரு ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை (coup) திட்டமிட்டு அரங்கேற்றின. இம்முயற்சி முதலில் தோல்வியடைந்தது. இதனால் ஷா முஹம்மது ரெஸா பெஹ்லவீ நாட்டைவிட்டுத் தப்பியோடினார். என்றாலும், சதிப்புரட்சிக்கு ஆதரவான ராணுவப் பிரிவுகள் குண்டர்களுடன் இணைந்து தெஹ்ரானைக் கைப்பற்றி மொசாதெக்கைப் பதவியிலிருந்து வீழ்த்தின.

மேற்கு நாடுகளின் நலனைவிட மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட மொசாதெக்கைத் தேசத்துரோகி என முத்திரை குத்தி மூன்று ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். மேலும், மரணிக்கும்வரை அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஃகாமினயீக்கு 15 வயது நெருங்குகையில், அவர் நாயகனாகப் பார்த்த நபருக்கு நடந்த இந்த நிகழ்வு அவரின் புரட்சிகரச் சிந்தனையில் சற்று சுணக்கத்தை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், எகிப்து அதிபர் ஜமால் அப்துல் நாசரின் தலைமையின் கீழ் மேற்கத்திய சக்திகளுக்கு எதிராக மற்றொரு புரட்சிகர மாதிரியை உலகிற்குக் காட்டியது எகிப்து. நாசரும், வளர்ந்துவரும் நாடுகளின் பிற தலைவர்களும் இணைந்து ‘அணிசேரா இயக்கம்’ (Non-Aligned Movement) என்னும் ஓர் உலகளாவிய முன்னணியை உருவாக்க முயன்றனர்.

மொசாதெக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் நாசரின் புகழ் ஓங்கியது. இது ஈரானியர்கள் உட்பட வளர்ந்துவரும் நாடுகளின் மக்களின் இதயங்களில் தேசச் சுதந்திரத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையை நிரப்பியது. 1956 ஜூலை 21 அன்று நாசர் அலெக்சாண்டிரியாவில் நின்று சூயஸ் கால்வாயைத் தேசியமயமாக்குவதாக அறிவித்தார். இதெல்லாம் இளம் ஃகாமினயீக்குப் பல பாடங்களைக் கற்றுத்தந்தது. இவற்றின் படிப்பினைகள் பிற்காலத்தில் இஸ்லாமியப் புரட்சிக்கான பாதையில் மைல்கற்களாக அமைந்தன.

நாசரின் செயல்பாடுகளுக்குக் காலனித்துவ சக்திகளிடமிருந்து எதிர்ப்பு வராமல் இல்லை; மூன்றே மாதங்களில் அது சூயஸ் போராக வெடித்தது. இதில் எகிப்து பெற்ற வெற்றியும், எகிப்தியர்களின் மன உறுதியும், சூயஸ் கால்வாய் மீதான தங்கள் இறையாண்மையைத் தக்கவைக்க அவர்கள் காட்டிய பிடிவாதமும் உலகளாவிய காலனிய எதிர்ப்புச் சக்திகளின் புரட்சிகர உணர்வைப் புதுப்பித்ததுடன், சுதந்திரம், கண்ணியம், சுய நிர்ணயம், எதிர்ப்பு ஆகியவற்றின் அர்த்தங்களையும் அவர்களுக்குக் கற்பித்தன. 1953இல் ரகசியமாக சதிசெய்து மொசாதெக்கை வீழ்த்திய அதே ஏகாதிபத்திய சக்திகள், 1956இல் சூயஸ் கால்வாயை மீண்டும் கைப்பற்ற வெளிப்படையான ஒரு போரை நடத்தின. இவை அனைத்தும், மேற்கத்தியக் காலனியவாதிகள் குறித்த ஃகாமினயீயின் புரிதலை மெருகேற்றி வலுப்படுத்தவும் கூர்மைப்படுத்தவும் உதவின.

ஈரானிலும் எகிப்திலும் ஏகாதிபத்திய சக்திகளின் தலையீட்டிற்கு அந்நாடுகளில் நடக்கும் ஜனநாயக ஆட்சியோ, ராணுவ ஆட்சியோ, வேறு ஆட்சிமுறைகளோ காரணம் அல்ல. அவர்களின் வியூகம்சார் நலன்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தால்கூட, அந்த ஆட்சியைக் கவிழ்க்க சதிசெய்ய ஏகாதிபத்திய சக்திகள் தயங்குவதில்லை. இதுதான் உண்மை. நாசரின் தேசியவாதப் பார்வையும் காலனிய எதிர்ப்பு நிலைப்பாடும் எகிப்திற்குக் காலனிய எதிர்ப்புத் தேசியவாதத்தின் முதல் முன்மாதிரியை அளித்தது. அதுபோல் ஃகாமினயீக்கு அது புரட்சிகர இஸ்லாமிய முன்மாதிரிக்கான பாதையில் புதிய சிந்தனைத் திறப்புகளை வழங்கியது. அவற்றைத் தீர்க்கமாக அரண்செய்யும் விதத்தில் சையித் குதுபின் எழுத்துகளை அவர் கண்டடைந்தார்.

1950களின் தொடக்கத்தில் மொசாதெக் தலைமையிலான தேசியப் புரட்சி, 1960களின் தொடக்கத்தில் ஃகொமேனீ தலைமையிலான இஸ்லாமியப் புரட்சி, எகிப்தியப் புரட்சி ஆகிய அனைத்தும் காலனித்துவ, ஸியோனிச எதிர்ப்பை மையமாகக் கொண்டவை என எகிப்தியத் தத்துவஞானி ஹசன் ஹனஃபீ வாதிடுகிறார்.

குதுபிடமிருந்து காலனிய எதிர்ப்பும், இஸ்லாமிய அரசின் சிந்தனையும்

மஷ்ஹது நகரில் உள்ள பல புகழ்பெற்ற அறிஞர்களிடம் ‘சுதூஹ்’ (மத அறிவியல்) எனப்படும் இடைநிலைக் கல்வியைக் கற்ற ஃகாமினயீ 18 வயதிற்குள் தேர்ந்த அறிஞராக உருவெத்தார். அதுபோல் இஸ்லாமிய இலக்கியங்கள் மீதும் அறபு மொழி மீதும் பேரார்வம் கொண்ட ஓர் அறிவுஜீவியாகவும் உருவெடுத்திருந்தார். வளர்ந்துவரும் அவரின் அறிவுசார் தேடலின் விளைவாய், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நூல்களை அறபியிலிருந்து ஃபார்சீக்கு மொழிபெயர்த்தார். இந்தப் பயணம்தான் ஃகாமினயீக்கு, அவரின் முன்மாதிரிகளுள் ஒருவரான எகிப்தியச் சிந்தனையாளர் சையித் குதுபை அறிமுகம் செய்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அப்துல் நாசர்தான் குதுபைத் தூக்கிலிட்டார்.

சையித் குதுப் முன்வைத்த ‘தனித்துவமான திருக்குர்ஆன் தலைமுறை’ (Unique Qur’anic Generation) பற்றிய பார்வையும், இஸ்லாமிய அழைப்பும், சமூகத் தூய்மைக்கான வழிகாட்டலும் இளம் ஃகாமினயீயின் மனத்தில் தீப்பொறி போன்ற உத்வேகத்தை ஏற்படுத்தின. சமகால ஜாஹிலிய்யா (அறியாமை) என்று பின்னாளில் குதுப் எதைக் குறிப்பிட்டாரோ அதற்கெதிராக இடைவிடாத போராட்டத்தை முன்னெடுக்க இதுவே அவருக்குத் தூண்டுதலாக அமைந்தது.

பின்னாளில் ஃகாமினயீயின் அரசியல் உணர்வில் நாசரின் கருத்துகள் நீர்த்துப்போயின. ஆனால் சையித் குதுபின் சமூக நீதி, மேற்கத்தியக் கலாச்சாரம் மீதான விமர்சனம், இஸ்லாமிய அரசு ஆகிய சிந்தனைகள் இளம் ஃகாமினயீயின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அதனால், குதுபின் சிந்தனையை ஈரானின் கலாச்சாரச் சொற்களஞ்சியத்தில் அறிமுகப்படுத்தி, பொதுக்கூட்டங்களிலும் ரகசியக் கூட்டங்களிலும் அதைப் பேசத் தொடங்கினார்.

ரஹ்பர் ஃகாமினயீ தனது உரை ஒன்றில் இப்படிக் கூறினார்: ‘சையித் குதுப் கூறியது சரிதான்: இஸ்லாத்தின் தூண்கள்மீது நிறுவப்பட்ட ஓர் அரசாங்கத்தின் தாக்கம் என்பது ஆயிரக்கணக்கான புத்தகங்களைவிட மேலானது.’ இதனால் அவர் குதுபின் எல்லாச் சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டார் என்பதல்ல. சையித் குதுப் எழுதிய ‘இஸ்லாமிய நிலங்களின் எதிர்காலம்’, ‘தஃப்சீர் திருக்குர்ஆனின் நிழலில்’ ஆகிய இரண்டு புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் இந்த மொழிபெயர்ப்புகள் வெறும் ஓர் இலக்கிய முயற்சி மட்டுமல்ல; மாறாக அவரின் உரைகளில் வெளிப்படும் ‘சர்வதேச ஆணவம்’ (Global Arrogance), ‘எதிர்ப்புச் சமூகம்’ (The Resistance Society), ‘கலாச்சாரப் படையெடுப்பு’ (Cultural Invasion) போன்ற சொல்லகராதிகளில் அந்தச் சிந்தனைகள் தெளிவாக வெளிப்படுவதைக் காணலாம்.

ஃகாமினயீ தனது கடைசி நாள்கள்வரை தனது உரைகளிலும் பேட்டிகளிலும் சையித் குதுபை மேற்கோள் காட்டுவதைத் தொடர்ந்தார்.

உதாரணமாக மார்ச் 2024இல், காஸாமீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை போர் உச்சத்தில் இருந்தபோது, ஃபலஸ்தீனர்களின் மன உறுதி, தியாகம் ஆகியவற்றின் அர்த்தம் குறித்து ஃகாமினயீ ஆற்றிய உரையில், ‘குர்ஆனில் கலைநயமிக்க உருவகங்கள்’ (Artistic Imagery in the Qur’an) என்ற குதுபின் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டினார். குதுபின் சிந்தனைகளையும் எழுத்துகளையும் அறிவுசார் உத்வேகத்தின் ஊற்றுகளாகக் கருதி அவற்றை மீண்டும்மீண்டும் அவர் பாராட்டினார்.

காலனிய எதிர்ப்பியக்கத்தையும், புரட்சிகர இஸ்லாமிய ஆட்சியையும் இணைக்க விரும்பிய இளைஞர்களுக்குக் குதுபின் கருத்துகளைக் கொண்டுசேர்க்கவும், புகழ்பெற்ற திருக்குர்ஆன் விரிவுரையான ‘திருக்குர்ஆனின் நிழலில்’ தஃப்சீரின் சிந்தனைகள் ஈரானிய மக்களைச் சென்றடைவதற்குமான ஒரு பாலமாகக் குதுபின் புத்தக மொழிபெயர்ப்புகளை ஃகாமினயீ அமைத்தார்.

சையித் குதுபின் எழுத்துகள் ஃகாமினயீயின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) பயிற்சிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. இது, தனது இஸ்லாமியப் புரட்சித் திட்டத்திற்கு வலுசேர்க்கவும், பிரிவினைவாதத் தடைகளையும் தாண்டி புரட்சிகர சன்னீ இஸ்லாமியச் சிந்தனைகளை உள்வாங்கவும் அவர் கொண்டிருந்த பேரார்வத்தை வெளிப்படுத்துகிறது.

சித்தாந்த, அரசியல்ரீதியாக ஈரான் இஸ்லாமியப் புரட்சிக் குழுவுக்கும், குதுப் பயணித்த எகிப்தின் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்துக்கும் மத்தியில் சில வேறுபாடுகள் இருந்தாலும், சையித் குதுபின் பகுப்பாய்வு முறைகளும் கருத்தியல் கருவிகளும் ஈரானியப் புரட்சியின் கருத்தியலில், குறிப்பாக ஃகாமினயீயின் உரையாடல்களில் வலுவான ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டன.

நாசரிடமிருந்து காலனிய எதிர்ப்பு அனுபவத்தையும், சையித் குதுபிடமிருந்து ‘இஸ்லாமிய ஆட்சிமுறை’ பாடத்தையும் எடுத்துக்கொண்டு, அதை ஈரானியச் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியதே ஃகாமினயீயின் மிகப் பெரிய அறிவாளுமையாகும். இந்த அறிவுசார் கலவையே, அடுத்தடுத்த தசாப்தங்களில் ஃகாமினயீயின் இஸ்லாமியச் சித்தாந்தப் பாதையை வழிநடத்தியது.

ஷா மன்னரின் கொடுமையும் புரட்சித் தீயும்

1960களின் இறுதியில், மேற்கு நாடுகளுடனான அன்றைய ஈரான் மன்னர் ஷாவின் தொடர்பு உச்சத்தை அடைந்திருந்த நிலையில், ‘சவாக்’கின் (SAVAK: ரகசியக் காவல் படை) கோர முகம் வெளிப்படத் தொடங்கியது. இதுவே புரட்சிக்கான தொடர் பணிகளில் ஈடுபட ஃகாமினயீக்கு உந்துசக்தியாக அமைந்தது. இதே ஆண்டில்தான் சையித் குதுபும் தூக்கிலிடப்பட்டார். அச்சூழலில், ஃகாமினயீ தன்னுடன் பயிலும் மாணவர்களுடன் இணைந்து, இஸ்லாத்தை விடுதலைக்கான சிந்தனையாக முன்னிறுத்தும் புத்தகங்களை வெளியிட ஒரு மறைமுகப் புத்தகப் பதிப்பு நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனத்தின் மூலமாகத்தான் சையித் குதுப் மற்றும் பலரின் எழுத்துகளை மொழிபெயர்த்து வெளியிட்டனர்.

ஃகாமினயீ ஓர் இளம் மார்க்கக் கல்வி ஆசிரியராக இருந்தபோது, பிரபல இஸ்லாமியப் புரட்சியாளர் ஆஷா மொஜ்தபா நவாப் சஃபவீயுடனான (மிர்-லோஹி) சந்திப்பே அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 1960, 70களிலெல்லாம் ஃகாமினயீ, உள்நாட்டில் ஷா மன்னரின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், வெளியில் ஷாவின் கூட்டாளிகளான மேற்கு நாடுகளுக்கு எதிராகவும் இஸ்லாத்தால் மாபெரும் ஒரு புரட்சியைத் தூண்டிவிட முடியும் என ஆழமாக நம்பினார். இதன் அடிப்படையில் செயல்பட்டதன் காரணமாக, தான் கைதாகி நாடுகடத்தப்பட வாய்ப்பிருக்கிறது என அவருக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் மீண்டும்மீண்டும் தனது சுதந்திரத்தைப் பணயம் வைத்தார்.

பத்தொன்பது வயதிற்குள், அலீ ஃகாமினயீ பாரம்பரிய மார்க்க ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தார். அவர் மஷ்ஹது நகரில் உள்ள மார்க்கப் பள்ளிகளில் மொழி, தர்க்கம், இஸ்லாமியச் சட்டம், அதன் கோட்பாடுகள் குறித்த பல படிப்புகளை முடித்தார். பின்னர், 1950களின் இறுதியில் தனது படிப்பைத் தொடர ஈராக்கில் உள்ள புனிதத் தலங்களுக்குப் பயணம் செய்தார். நஜாஃபிலும் கர்பலாவிலும் அவர் முன்னணி மார்க்க அறிஞர்களிடம் பயின்றார். அறபு மொழியில் மிகச் சிறந்த புலமையைப் பெற்றார்; அது அவருக்குக் கிட்டத்தட்ட இரண்டாவது தாய்மொழியாகவே மாறியது.

தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலால், அவர் ஈரான் திரும்பி கோம் (Qom) நகர மார்க்கப் பள்ளியில் சேர்ந்தார். எல்லாவற்றிற்கும் மேல், அவர் இமாம் றூஹுல்லாஹ் ஃகொமேனீயிடம் பயின்றார். இவரே ஃகாமினயீயின் வாழ்க்கையிலும் நவீன ஈரானின் வரலாற்றிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

1950களின் பிற்பகுதியில், கோம் நகரம் இஸ்லாமியச் சட்டவியல், தத்துவ விவாதங்களின் மையமாகத் திகழ்ந்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, ஷீஆ பிரிவின் உயரதிகார மையமாக விளங்கிய கிராண்ட் ஆயத்துல்லாஹ் ஹொசைன் புருஜெர்தீயின் வழிகாட்டலில் இந்நகரம் இயங்கியது. அவர் சிறந்த மார்க்க அறிஞராகவும், அனைவராலும் மதிக்கப்படும் ஓர் ஆளுமையாகவும் இருந்தார். ஆனால் புருஜெர்தீ அரசியல் விவகாரங்களில் மிக எச்சரிக்கையான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்; ஷா மன்னரின் ஆட்சியைக் கையாள்வதில் ‘நடைமுறைவாத மாதிரி’ (Pragmatic Model) ஒன்றை முன்வைத்தார்.

அவர் இஸ்லாமியச் சிந்தனைப் பிரிவுகளுக்கு மத்தியிலான நல்லுறவில் அதிகக் கவனம் செலுத்தினார்; கெய்ரோவில் உள்ள ‘இஸ்லாமியச் சிந்தனைப் பிரிவுகளுக்கு மத்தியிலான நல்லுறவு இல்லத்திற்கு’ ஆதரவளித்தார். மேலும், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம் ஜஅஃபரீ சட்டப் பிரிவை முறைசார்ந்த ஒரு சட்ட சிந்தனா பள்ளியாக அங்கீகரித்ததை அவர் வரவேற்றார். எனினும் 1961இல் புருஜெர்தீயின் மரணம், அரசியலில் தீவிரமாக ஈடுபடும் அறிஞர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது.

ஃகாமினயீ தனது அரசியல் செயல்பாடுகளுக்கான ஆரம்பப் புள்ளியாக, பிரபல இஸ்லாமியப் புரட்சியாளர் சையித் மொஜ்தபா நவாப் சஃபவீயுடனான சந்திப்பு அமைந்தது எனக் கூறியுள்ளார். சமூகச் செயற்பாட்டாளரிலிருந்து புரட்சிகர அரசியல் செயற்பாட்டாளராக உருவெடுத்த அவர், இஸ்லாம் என்பது தனிநபர் வழிபாடு மட்டுமல்ல, அது அநீதிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு என்பதை முதன்முதலில் சஃபவீயிடமிருந்துதான் கற்றுக்கொண்டார். இதற்குப் பின்புதான் ஆயத்துல்லாஹ் ஃகாமினயீ, ஷா மன்னரின் ஆட்சிக்கு எதிராக மிகத் தெளிவான ஒரு புரட்சிகர உரையாடலை விரைந்து முன்னெடுத்தார்.

ஜனவரி 1963இல், பொது வாக்கெடுப்பிற்காக மன்னர் ஷா முன்வைத்த ‘வெள்ளைப் புரட்சி (White Revolution)’ என்று அழைக்கப்படும் நவீனமயமாக்கல் திட்டத்தை ஃகாமினயீ எதிர்ப்பதாக அறிவித்தார். இந்தத் திட்டத்தில் நிலச் சீர்திருத்தங்கள், காடுகளை அரசுடைமையாக்குதல், சில அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை வழங்குதல், தனிநபர் சட்டங்களில் திருத்தங்கள் ஆகியவை அடங்கும்.

இத்திட்டம் மேற்கத்திய ஆதிக்கத்தையும் மன்னரின் சர்வாதிகாரத்தையும் வலுப்படுத்துவதாக அமைந்தது. குறிப்பாக, ஷாவின் ரகசியக் காவல்துறையான ‘சாவாக்’ அடக்குமுறைகளை அதிகரித்தது; பள்ளிகளுக்கு நிதி அளிக்கும் அறக்கட்டளைகள் மீதான அரசின் கட்டுப்பாட்டையும் தீவிரப்படுத்தியது. அதேவேளை, சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கச் செய்யும் ‘விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தால்’ பெருவாரியான விவசாயிகள் கிராமத்திலிருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தார்கள். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

1963 மே மாதம், ஆஷுறா தினத்திற்கு முன்பாக இமாம் ஃகொமேனீ தன்னுடைய நம்பிக்கைக்குரிய இளம் மாணவரான அலீ ஃகாமினயீயை மஷ்ஹது நகருக்கு ஒரு முக்கியப் பணியுடன் அனுப்பினார். முக்கிய சமய நாள்களைப் புரட்சிகரப் போராட்டமாக மாற்ற அறிஞர்களைத் திரட்டும் பணியை அவர் சிறப்பாகச் செய்தார். இதன் விளைவாக, 1963 ஜூன் 2இல், தனது 24ஆவது வயதில் ஃகாமினயீ முதல் முறையாகக் கைதுசெய்யப்பட்டார்.

மறுநாள், ஜூன் 3 (ஆஷுறா தினம்), ஃகொமேனீ கோம் நகரில் ஆவேசமான உரையாற்றினார். அதில் ஷா மன்னரையும் அவரது வெள்ளைப் புரட்சித் திட்டத்தையும் தாக்கியதுடன், ஈரானில் அமெரிக்கத் தலையீட்டையும், ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் வன்மையாகக் கண்டித்தார். ஜூன் 5 அதிகாலையில் அரசுப் படைகள் ஃகொமேனீயின் வீட்டைத் தாக்கி அவரைக் கைதுசெய்து தெஹ்ரானுக்குக் கொண்டுசென்றன. இது கோமிலும் தலைநகரிலும் மிகப் பெரிய போராட்டங்களைத் தூண்டியது. பின்னர் இது ஷீராஸ், மஷ்ஹது போன்ற நகரங்களுக்கும் பரவியது.

போராட்டக்காரர்கள் தெஹ்ரானில் உள்ள காவல் நிலையங்களைத் தாக்கினர்; இதனால் ராணுவச் சட்டம் (Martial law) அறிவிக்கப்பட்டது. ‘ஃகொமேனீ அல்லது மரணம்!’ என்று முழக்கமிட்ட மக்கள்திரளின் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்; இன்னும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்; பல அறிஞர்கள், மார்க்கப் பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த எழுச்சி ஒடுக்கப்பட்ட பிறகு, ஃகொமேனீ வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் 1964இல் துருக்கிக்கும், அதன் பிறகு ஈராக்கிற்கும் நாடுகடத்தப்பட்டார். இவ்வாறு 1963 ஜூன் எழுச்சியானது, 1979ஆம் ஆண்டில் இஸ்லாமியப் புரட்சிக்கு வழிவகுத்த ஆரம்பக்கட்ட நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது.

1960களின் தொடக்கத்தில் அலீ ஃகாமினயீ தெளிவான ஓர் அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கினார். மேலும் ஃகொமேனீயின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய மாணவராகவும் மாறினார்; அவரின் மற்றொரு குரலாக ஒலிக்கத் தொடங்கினார். கோமில் மார்க்கக் கல்வியைத் தொடர்ந்தவாறே ஈரான் மக்களுக்குப் பாதகமானதும், மேற்கு நாடுகளுக்குப் பயனளிப்பதுமான ஷாவின் ‘வெள்ளைப் புரட்சி’ போன்ற திட்டங்களை எதிர்த்து மேடைகளில் ஆவேசமாக முழங்கினார். இதற்காக ஃகாமினயீ பலமுறை கைதுசெய்யப்பட்டு, ஷாவின் ரகசியப் போலீஸான ‘சாவாக்’ மூலம் உடல், மனச் சித்திரவதைகளுக்கு ஆளானார். ஆனால் அவர் சிறைச்சாலையை ஒரு ‘பல்கலைக்கழகமாக’ கருதினார்; அங்கு பொறுமையையும் மன உறுதியையும் கற்றுக்கொண்டார்.

ஃகாமினயீயை முடக்குவதற்காக மன்னர் ஷா அவரைச் சிறையில் அடைத்ததோடு, தென்கிழக்கு ஈரானில் உள்ள ஈரான்ஷஹ்ர் (Iranshahr) என்ற தொலைதூரப் பகுதிக்கு அவரை நாடுகடத்தவும் செய்தார். ஆனால் அங்கும் அவர் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். ஆச்சரியமாக, அந்தப் பகுதியில் வாழ்ந்த சன்னீ முஸ்லிம் அறிஞர்களுடன் அவர் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டார். தண்டனையாக வழங்கப்பட்ட அந்த நாடுகடத்தல் காலம், உண்மையில் அவரது செல்வாக்கை விரிவுபடுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

1970களில் அலீ ஃகாமினயீ, ஷா மன்னருக்கு எதிராகப் புரட்சிக்கான களத்தை உருவாக்குவதற்காக, ரகசியமாகச் செயல்பட்ட போராளி அறிஞர்கள் வலையமைப்பு ஒன்றின் முக்கிய அங்கமாக மாறினார். பள்ளிவாசல் மேடைகள், ரகசியத் துண்டுப் பிரசுரங்கள், ரகசிய அறைக் கூட்டங்கள் மூலம் புரட்சி நெருப்பை அணையாமல் பாதுகாத்தார்.

1971ஆம் ஆண்டின் ‘சாவாக்’ ஆவணங்கள்படி, ஃகாமினயீ இமாம் ஃகொமேனீயின் நிதி முகவராகச் செயல்பட்டுள்ளார். ‘ஃகும்ஸ்’ (Khums) என்னும் நிதியைத் திரட்டி, அதன் மூலம் புரட்சிகரப் பணிகளுக்கும், சிறையில் இருந்த போராளிகளின் குடும்பங்களுக்கும் நிதியுதவி செய்தார். இதற்காக அவர் பலமுறை கைதுசெய்யப்பட்டு, 1974, 75ஆம் ஆண்டுகளில் கடுமையான தனிமைச் சிறைவாசத்தையும் சித்திரவதைகளையும் அனுபவித்தார்.

ஷா அரசு அவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்தது. குறிப்பாக, நாப்பிலில் இருந்த தன்னுடைய ஆசிரியர் ஃகொமேனீயைச் சந்திக்க அவர் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. மீண்டும்மீண்டும் கைதுசெய்யப்பட்டும், 1977இல் இரண்டாவது முறையாக ஈரான்ஷஹ்ருக்கு நாடுகடத்தப்பட்டும் அவர் தன்னுடைய பணிகளை நிறுத்தவில்லை. 1978 டிசம்பரில் மஷ்ஹது நகரில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார்; மக்கள் ஃகொமேனீயின் தலைமையில் ஒன்றுபட அறைகூவல் விடுத்தார்.

ஜனவரி 1979இல், பாரிஸில் இருந்தவாறு ஃகொமேனீ அமைத்த ‘புரட்சிக் கட்டளைக் குழு’வில் (Revolutionary Command Council) ஃகாமினயீ இடம்பெற்றார். 1979 பிப்ரவரி 1இல் ஃகொமேனீ ஈரான் திரும்பியபோது, அவரை வரவேற்ற லட்சக்கணக்கானோரில் ஃகாமினயீயும் ஒருவர். ‘ஷா மன்னரால் வேட்டையாடப்பட்ட ஒரு மார்க்க அறிஞர்’ என்ற நிலையிலிருந்து, மிக விரைவிலேயே புதிய இஸ்லாமியக் குடியரசின் மிக முக்கியத் தூண்களில் ஒருவராக உயர்ந்தார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசில் ஃகாமினயீ

இறுதியாகப் பல்லாண்டு உழைப்பு, உயிரிழப்பு, தியாகம் என அனைத்தையும் கடந்து மன்னர் ஷா ஆட்சி ஈரானில் வீழ்த்தப்பட்டது; புரட்சிக்கு பின் அது இஸ்லாமியக் குடியரசாகச் செதுக்கப்பட்டது; இஸ்லாமிய அரசாங்கம் ஈரானில் அமைக்கப்பட்டது. ஃகொமேனீயைப் பின்பற்றும் மாணவன் என்ற நிலையைக் கடந்து, 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின், ஃகாமினயீ ஈரானின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உருப்பெற்றிருந்தார். அவரது கனவான இஸ்லாமியப் புரட்சி வெற்றி பெற்றதால் சிறைச்சாலை, நாடுகடத்தல் என எந்த ஓர் அச்சமுமின்றி இப்பொழுது அவர் வீரியத்துடன் மக்கள் முன்பு உரையாற்றும் சூழல் அமைந்தது.

ஷா மன்னரின் வீழ்ச்சிக்குப் பின், இஸ்லாமியக் குடியரசைக் கட்டமைக்கும் புதிய பணி தொடங்கியது. புரட்சிக்குப் பிந்தைய கொந்தளிப்பான நாள்களில் நாட்டை நிர்வகித்த ‘புரட்சிக் கவுன்சிலில்’ அலீ ஃகாமினயீ முக்கிய அங்கம் வகித்தார். மேலும் 1980ஆம் ஆண்டு, தெஹ்ரானின் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இது மிக உயர்ந்த மார்க்க, அரசியல் பொறுப்பாகும். இவரது வாராந்திர உரைகள் வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் ஈரான் முழுவதும் மக்களை ஒன்றிணைக்கும் குரலாக மாறின.

மேலும் 1979இல் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அவர் பங்கேற்றார். குறிப்பாக, மார்க்க அதிகாரத்தையும் நவீன அரசு நிர்வாகத்தையும் இணைக்கும் ‘விலாயத்தே ஃபகீஹ்’ (இஸ்லாமியச் சட்ட வல்லுநரின் அதிகாரம்) என்ற கோட்பாட்டை அரசியலமைப்பில் சேர்ப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.

இந்தக் கட்டத்தில், ஃகாமினயீ தன்னை ஓர் உள்ளூர் மார்க்க அறிஞராகக் குறுக்கிக்கொள்ளாமல், முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் குரலாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். ஈரானில் முன்பு குழப்பம் செய்ததுபோல், இஸ்லாமியப் புரட்சி வெற்றி பெற்ற காலம்முதல் இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் ஈரானில் குழப்பத்தை அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத் துடித்துக்கொண்டிருந்தன. அதனால், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையை (IRGC) உருவாக்குவதற்கு ஆரம்பத்திலேயே ஆதரவளித்தவர்களில் ஒருவராக ஃகாமினயீ இருந்தார். மேற்கத்திய ஆதரவு உள்ளூர், வெளியூர் எதிரிகளிடமிருந்து அரசைப் பாதுகாக்கும் கேடயமாக இந்தப் புதிய படையை அவர் கருதினார். IRGCயுடனான இந்த ஆரம்பக்காலப் பிணைப்பே பிற்காலத்தில் அசைக்க முடியாத ஈரானை உருவாக்க ஆணிவேராக மாறியது.

ஈராக்-ஈரான் போரும், ஃகாமினயீ மீதான கொலை முயற்சியும்

புதிய இஸ்லாமியக் குடியரசு நிலைபெறத் தொடங்கிய செப்டம்பர் 1980இல் சதாம் உசேன் ஈரான் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்ததால் போர் வெடித்தது. எட்டாண்டுகள் நீடித்த இந்தக் கொடூரப் போர், ஃகாமினயீ போன்ற புதிய தலைவர்களுக்குப் பெரும் சோதனையாக அமைந்தது. இதற்கிடையில் 1981 ஜூன் 27, ஃகாமினயீயின் அரசியல் பயணத்தில் ஒரு மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. தெஹ்ரானின் ஒரு மசூதியில் அவர் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, ஓர் ஒலிப்பதிவுக் கருவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. அதில் ஃகாமினயீக்குப் பலத்த காயம் ஏற்பட்டது; அவரின் கழுத்திலும் மார்பகப் பகுதியிலும் இரத்தம் வழிந்தவாறே அவர் வீழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். மருத்துவர்களின் கடும் முயற்சிக்குப் பிறகு ஃகாமினயீ உயிர் பிழைத்தார். இதில் அவரது வலது கை நிரந்தரமாகச் செயலிழந்தது.

இந்நிகழ்வு அவரை மக்கள் மத்தியில் ‘ஒரு வாழும் உயிர்த்தியாகி’யாக உயர்த்தியது. இந்த மக்கள் ஆதரவாலும், அவரது உறுதியான அரசியல் நிலைப்பாட்டாலும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் அவர் ஈரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தத் தாக்குதல் நடந்து 24 மணி நேரத்திற்குள், தெஹ்ரானில் உள்ள ‘இஸ்லாமியக் குடியரசுக் கட்சியின்’ தலைமையகத்தில் அதன் தலைவர்கள் கூட்டத்தின்போது ‘மக்கள் முஜாஹிதீன் அமைப்பு’ (PMOI/MEK) மாபெரும் ஒரு குண்டுவெடிப்பை நடத்தியது. இதில் ஃகாமினயீக்கு அடுத்த நிலையில், புரட்சியின் இரண்டாவது மிக சக்திவாய்ந்த நபராகக் கருதப்பட்ட ஆயத்துல்லாஹ் முஹம்மது பெஹெஷ்தீ உட்பட 73 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தோல்வியடைந்த முதல் கொலை முயற்சி ஃகாமினயீயின் உயிரைக் காப்பாற்றியிருந்தது. அவ்வாறு நடக்காமல் இருந்திருந்தால், மறுநாள் நடந்த குண்டுவெடிப்பில் அவரும் உயிரிழந்திருக்கக்கூடும்.

ஈரானின் அதிபராகவும், ‘உச்சப் பாதுகாப்புக் கவுன்சிலின்’ உறுப்பினராகவும் இருந்து அவர் இந்தப் போரைத் திறமையாக வழிநடத்தினார். ஃகாமினயீ எப்போதும் போர்க்களங்களுக்கு நெருக்கமாகவே இருந்தார்; பலமுறை முன்வரிசைப் படைகளைச் சந்தித்து வீரர்களின் மன உறுதிக்கு உரமூட்டினார். எளிய உடையில் தன்னார்வப் படைவீரர்களுடனும் (Basij), IRGC வீரர்களுடனும் அவர் இருக்கும் புகைப்படங்கள், மக்களுக்கும் தலைமைக்கும் மத்தியிலான ஒற்றுமையைப் பறைசாற்றும் அடையாளமாக மாறின. ராணுவத்தையும் தளபதிகளையும் ஒருங்கிணைத்ததுடன், போருக்கான மக்கள் ஆதரவைத் திரட்டுவதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

ஈராக் தொடங்கிய போர் இருபதாம் நூற்றாண்டின் நீண்டதொரு போராக இருந்தது. ஈரானின் புதிய தலைவர்களுக்கு இந்தப் போர், நெருக்கடிச் சூழலைக் கையாள்வதற்கான பல்கலைக்கழகமாக அமைந்தது. குறிப்பாக ஃகாமினயீ, நெருக்கடியிலும் ஈரான் மக்கள் வெளிப்புற எதிரிக்கு எதிராக ஒற்றுமையாக இருப்பதைக் கண்டார். மார்க்கக் கோட்பாடுகளும் புரட்சிகர முழக்கங்களும் மக்களை ஒன்றுபடுத்தியமை, ஃகாமினயீயின் மனத்திலும் அவரது அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆழமான பாடமாக அமைந்தது.

இக்கட்டான சூழலில் அதிபரான ஃகாமினயீ

1981 ஆகஸ்டில் அதிபர் முஹம்மது அலீ ரஜாய், பிரதமர் முஹம்மது ஜவாது பஹோனர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த அதிபருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பலர் அலீ ஃகாமினயீயைத் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினர். ஆனால் ‘அதிகாரப் பொறுப்புகள் தன்னைச் சோர்வடையச் செய்கின்றன’ என்று அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. அவரின் நம்பிக்கைக்குரியவரான அக்பர் ஹாஷிமீ ரஃப்சஞ்சானீயின் நினைவுக்குறிப்புகளின்படி, ஃகாமினயீ தொடக்கத்தில் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்கத் தயங்கியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் நாட்டின் சூழல் கருதி, இமாம் ஃகொமேனீ நேரடியாகக் கேட்டுக்கொண்டதாலேயே அவர் தேர்தலில் போட்டியிடச் சம்மதித்தார்.

அக்டோபர் 1981இல் நடந்த தேர்தலில், சுமார் 95% வாக்குகள் பெற்று மக்கள் ஆதரவுடன் ஃகாமினயீ அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் இஸ்லாமியக் குடியரசின் மூன்றாவது அதிபராகவும், அப்பொறுப்பு வகித்த முதல் மார்க்க அறிஞராகவும் அவர் தரமுயர்ந்தார்.

அவரது ஆட்சிக்காலம் மிகவும் கொந்தளிப்பான, சவால்கள் நிறைந்த காலகட்டமாக இருந்தது. ஈராக்குடனான போர் தீவிரமடைந்து நாட்டின் வளங்களை உறிஞ்சியதுடன், பொருளாதாரத்தையும் முடக்கியது. அதேநேரம், நாட்டினுள் இருந்த பல்வேறு புரட்சிக் குழுக்களிடையே உள்நாட்டு மோதல்கள் அதிகரித்தன. மேலும், 1979 அமெரிக்கத் தூதரகப் பிணைக்கைதி விவகாரத்தின் விளைவாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளால் ஈரான் சர்வதேச அளவில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, மேற்கு நாடுகளுடனான பதற்றம் உச்சம் தொட்டிருந்தது.

​இந்த இக்கட்டான சூழலில், ஃகாமினயீ தன்னை உணர்ச்சிமிக்க ஒரு பேச்சாளராக மட்டுமன்றி, திறமையான ஒரு நிர்வாகியாகவும் நிரூபிக்க வேண்டியிருந்தது. ஃகாமினயீக்கு முன்னால் அதிபரின் அதிகாரம் வரம்புக்குப்பட்டதாக இருந்தபோதிலும், ஃகாமினயீயின் அரசியல், நிர்வாக அனுபவம் அவரை ஆட்சியின் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியது. அவர் உச்சத் தலைவர் ஃகொமேனீயுடன் பெரிய விவகாரங்களில் எப்போதும் இணைந்து செயல்பட்டதுடன், அவருடன் எந்தவொரு மோதலையும் தவிர்த்தார். அதேசமயம், கடினமான போர்க்காலச் சூழலில் அன்றாட அரசு விவகாரங்களை நேர்த்தியாக நிர்வகித்தார்.

இரண்டாவது முறையாக 1985ஆம் ஆண்டு மீண்டும் அதிபராக அலீ ஃகாமினயீ தேர்ந்தெடுக்கப்பட்டது (1985-1989) மக்களும், புரட்சிகர உயர்மட்ட முக்கியப் புள்ளிகளும் அவர்மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும், ஆட்சியின் முக்கியத் தூணாக அவர் உருவெடுத்ததையும் பறைசாற்றியது.

இஸ்லாமியப் புரட்சி வெற்றி பெற்ற சில ஆண்டுகளிலேயே உருவெடுத்த நெருக்கடியான போர்ச் சூழலில் அதிபரான அலீ ஃகாமினயீ (1981-1989), அதிபர் காலத்தில் தனித்துவமான ஒரு தலைமைத்துவப் பாணியைக் கடைப்பிடித்தார். அவர் எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியில் செய்த மிக முக்கியமான சாதனைகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

1. போர்க்காலப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துதல்

எட்டாண்டுகள் நீடித்த ஈரான்-ஈராக் போரினால் நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்குள்ளானது. எண்ணெய் வருவாய் குறைந்தபோதும், ஃகாமினயீ மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மக்களைப் பாதுகாத்தன:

* ரேஷன் முறையும் விநியோக முறையும்: அத்தியாவசியப் பொருட்கள் விநியோக முறையை (Coupon System) சீரமைத்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கும் உணவுப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்தார்.

* உள்நாட்டு உற்பத்தி: போர்க்காலத் தேவைகளுக்காகவும், சர்வதேசத் தடைகளைச் சமாளிக்கவும் ‘உள்நாட்டு உற்பத்தி’யை ஊக்குவித்தார். இது ஈரானின் தன்னிறைவுக்கான ஆரம்பப்புள்ளி எனலாம்.

2. ராணுவ நிர்வாகமும் ஒருங்கிணைப்பும்

ஃகாமினயீ வெறும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், போரை முன்னின்று வழிநடத்திய ஒரு ராணுவத் தளகர்த்தராகவும் செயல்பட்டார்:

* புரட்சிகரப் பாதுகாப்புப் படையையும் ராணுவத்தையும் இணைத்தல்: புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கும் (IRGC), வழக்கமான ராணுவத்திற்கும் (Artesh) மத்தியிலான பிளவுகளைக் குறைத்து, அவர்களை ஒருங்கிணைத்துப் போர்க்களத்தில் செயல்பட வைத்தார்.

* பாதுகாப்புக் கவுன்சிலில் தலைமை: உச்சப் பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவராக இருந்து, போர்த் தந்திரங்களை வகுப்பதிலும், ஆயுதத் தேவைகளைப் பூர்த்திசெய்வதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.

3. ‘விலாயத்தே ஃபகீஹ்’ சட்டப்பூர்வ வலுவாக்கம்

அரசியல்ரீதியாக இஸ்லாமியக் குடியரசின் அதிகாரக் கட்டமைப்பை உறுதிப்படுத்தினார்:

* உச்சத் தலைவர் ஃகொமேனீயின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருந்த அவர், ‘இஸ்லாமியச் சட்ட வல்லுனரின் அதிகாரம்’ (விலாயத்தே ஃபகீஹ்) என்ற கோட்பாடு நாட்டின் நிர்வாகத்தோடு முழுமையாக இணங்குவதை உறுதிசெய்தார். இது பிற்காலத்தில் அவர் தலைவராக ஆவதற்கான அடித்தளத்தை அமைத்தது.

4. வெளியுறவு, பிராந்தியச் செல்வாக்கு

சர்வதேச அளவில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், அவர் மேற்கொண்ட சில ராஜதந்திர முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை:

* இஸ்லாமிய நாடுகளுடன் உறவு: எகிப்து, லிபியா, சிரியா போன்ற நாடுகளுடன் ரகசிய, நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, போர்க்காலத்தில் ஈரானுக்கான ஆதரவைத் திரட்டினார்.

* இளமையில் தான் பெற்ற காலனித்துவ எதிர்ப்புச் சிந்தனைகளைப் பயன்படுத்தி, மேற்காதிக்கத்திற்கு எதிரான நாடுகளை ஒன்றிணைக்க முயன்றார்.

5. அறிவியல், தொழில்நுட்பத் தொடக்கம்

போரின் இடையில்கூட ஈரானின் எதிர்காலத் தேவைகளைக் கருதி கல்வி, தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்:

* பல்கலைக்கழகங்களைச் சீரமைத்து, ஈரானிய இளைஞர்கள் நவீன அறிவியலையும் இஸ்லாமிய விழுமியங்களையும் ஒருசேரக் கற்கத் தூண்டினார். இதுவே பிற்காலத்தில் ஈரானின் ஏவுகணை, அணுசக்தித் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வித்திட்டது.

6. நாட்டின் உள்கட்டமைப்பு

கிராமப்புற மேம்பாட்டிற்காக ‘ஜிஹாதே சாஸந்தகீ’ (Jihad-e Sazandegi) என்ற கட்டுமான அமைப்பை வலுப்படுத்தி, தொலைதூரக் கிராமங்களுக்கு மின்சாரம், சாலை வசதிகளைக் கொண்டுசென்றார். இது நாட்டின் அடித்தட்டு மக்களிடையே புரட்சிக்கு மிகப் பெரிய ஆதரவை உருவாக்கியது.

ஃகாமினயீயின் அதிபர் காலம் என்பது வெறும் ஆட்சிமுறை மட்டுமல்ல; அது அழிவின் விளிம்பில் இருந்த ஒரு தேசத்தைப் போர்க்களத்திலும் பொருளாதாரத்திலும் நிமிர்த்திக் காட்டிய ஒரு போராட்டக் காலமாகும். ஷா மன்னரின் ஆட்சியில் சாதாரண அரசியல் கைதியாக இருந்த ஃகாமினயீ, ஈராக்குடனான போர் 1988இல் முடிவுக்கு வந்தபோது, போர்க்காலத்தின் மிக உயரிய மைய நிர்வாக அதிகாரியாக உயர்ந்திருந்தார்; போர்க்கால அதிபராக அவர் பெற்ற தனித்துவமான தலைமைத்துவ அனுபவம் அவரை ஆட்சியின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாற்றியது. ஆனால் விதி அவருக்கு இன்னும் பிரம்மாண்டமான ஒரு பொறுப்பைத் தரக் காத்திருந்தது.

1989 ஜூன் 3 அன்று இஸ்லாமியக் குடியரசின் நிறுவனரும் முதல் ரஹ்பருமான இமாம் றூஹுல்லாஹ் ஃகொமேனீ இறையழைப்பை ஏற்றார். அவரது மறைவு, புரட்சிக்குப் பிந்தைய ஈரானிய வரலாற்றில் மிக இக்கட்டான ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எதிர்பாராத இந்தக் கணத்தில் ஃகாமினயீ ஈரானின் ‘உச்சத் தலைவர்’ (ரஹ்பர்) பொறுப்பை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதிபரிலிருந்து ரஹ்பர்

ரஹ்பர் ஃகொமேனீயின் ஈர்ப்புமிக்க ஆளுமையால் கட்டமைக்கப்பட்ட அந்த ஆட்சியில் ஏற்பட்ட மிகப் பெரிய வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்தபோது, 1985முதல் துணை ரஹ்பராக இருந்துவந்த ஆயத்துல்லாஹ் ஹுசைன் அலீ மொன்தஸெரியைவிட ஃகாமினயீயின் பெயர் தொடக்கத்தில் வலுவாகக் கருதப்படவில்லை. இருப்பினும், 1980களின் இறுதியில் நடந்த சில அதிரடி மாற்றங்கள் ஃகாமினயீயைத் தலைமைப் பொறுப்பிற்கு உந்தித்தள்ளின.

முதலாவதாக, ஈரான்-ஈராக் போரின்போது அதிபராகவும் முப்படைகளின் தளபதியாகவும் அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. ராணுவ உடையில், குண்டுவெடிப்பால் காயம்பட்ட தனது வலது கையைத் தாங்கியபடி போர்க்களத்தின் முன்வரிசைக்குச் சென்று வீரர்களிடையே அவர் ஆற்றிய உரைகள், ஈரானியர்களின் மனத்தில் அவரை ஒரு ‘புரட்சிகரப் போராளித் தலைவராக’ ஆழமாகப் பதியவைத்தது.

இரண்டாவதாக, 1981இல் அவர்மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி அவரை ‘வாழும் உயிர்த்தியாகி’யாக மாற்றியது; அந்தத் தாக்குதலில் அவர் சிந்திய ரத்தமும், அதற்குப் பிறகு உள்ளூர், சர்வதேச எதிரிகளை ஒழிப்பதில் அவர் காட்டிய தளராத மன உறுதியும் தலைமைத்துவப் பண்புகளும் மக்கள், புரட்சியாளர்கள் மத்தியில் அவரது அந்தஸ்தை அசைக்க முடியாததாக மாற்றின.

ஈரான்-ஈராக் போர் முடிவுக்கு வந்த 1988ஆம் ஆண்டு, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஈராக் ஆதரவுடன் செயல்பட்டுவந்த ‘மக்கள் முஜாஹிதீன்’ (MEK) என்ற ஈரானிய எதிர்ப்பியக்கம், போரின் இறுதியில் ஈரானுக்குள் ஊடுருவி ஆட்சியைக் கவிழ்க்க ‘ஆப்பரேஷன் இடர்னல் லைட்’ (Operation Eternal Light) என்ற தாக்குதலை நடத்தியது. போர்ச் சூழலில் எதிரிகளுடன் சேர்ந்து நாட்டிற்கு எதிராக சதிசெய்து தாக்குதல் நடத்தியதற்காக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த MEK அமைப்பினருக்கு மரண தண்டனை விதித்தார் ஃகொமேனீ.

இமாம் ஃகொமேனீக்கு அடுத்தகட்ட தலைவராக அறியப்பட்ட ஆயத்துல்லாஹ் மொன்தஸெரீ, ஆயிரக்கணக்கான MEK அமைப்பினர் தூக்கிலிடப்பட்டதை ‘இஸ்லாமியக் குடியரசின் வரலாற்றில் மிகப் பெரிய குற்றம்’ எனப் பகிரங்கமாகக் கண்டித்தார். இந்தத் தண்டனைகளை நிறைவேற்றிய குழுவில், பிற்காலத்தில் அதிபரான இப்றாஹீம் ரைசீயும் (2024இல் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்தவர்) இடம்பெற்றிருந்தார். மொன்தஸெரீயின் இத்தகைய கருத்துகளால் அதிருப்தியடைந்த ஃகொமேனீ, அவர் நாட்டை ‘தாராளவாதிகளிடமும் துரோகிகளிடமும் (MEK அமைப்பு)’ ஒப்படைத்துவிடுவார் எனக் கூறி, மார்ச் 1989இல் அவரைப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் ஃகொமேனீ காலமானார். தொடர்ந்து 1989 ஜூன் 4 அன்று கூடிய நிபுணர்கள் குழு, அடுத்த தலைவரைத் தீர்மானிக்க ரகசியமாக விவாதித்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் அப்போதைய அதிபர் ஹாஷிமீ ரஃப்சஞ்சானீ மிக முக்கியப் பங்காற்றினார்; ‘அலீ ஃகாமினயீ தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர்’ என்று ஃகொமேனீ தன்னிடம் ரகசியமாகக் கூறியிருந்ததை ரஃப்சஞ்சானீ வெளிப்படுத்தினார். இதனால் ஃகாமினயீ பெயர் தலைவர் பொறுப்பிற்கான வாக்கெடுப்புக்கு வந்தது. ஆனால், அலீ ஃகாமினயீ சபையில் எழுந்து நின்று, ‘என்னை இந்தப் பொறுப்பிற்குப் பரிந்துரைப்பதையே நான் எதிர்க்கிறேன்’ என்றும், “நான் ஒரு ‘மார்ஜா’ (மிக உயரதிகாரம் கொண்ட மார்க்க அறிஞர்) அந்தஸ்தில் இல்லாததால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தப் பொறுப்புக்கு நான் தகுதியற்றவன்” என்றும் வாதிட்டார்.

ஃகாமினயீ அப்போது ஒரு நடுத்தர மார்க்க அறிஞராகவே இருந்தார். ‘மார்க்கக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், இங்குள்ள முஃப்தீகள் பலர் என்னுடைய மார்க்கத் தீர்ப்புகளை (ஃபத்வா) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அப்படி இருக்கும்போது நான் எப்படித் தலைமை தாங்க முடியும்?’ என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். கீழ்க்காணும் மிக உணர்ச்சிகரமான கருத்தையும் அவர் பதிவுசெய்தார்: ‘என்னை வேட்பாளராகப் பரிசீலிக்கும் நிலைக்கு வந்திருக்கும் இந்த இஸ்லாமியச் சமூகத்திற்காக நான் கண்ணீர் வடிக்கிறேன். இந்தப் பெரும் பொறுப்பைச் சுமக்க நான் தகுதியற்றவன்.’ ‘என்னைத் தேர்ந்தெடுப்பது தேசத்திற்கு ஒரு சுமையாக அமைந்துவிடும்’ என்றும் அவர் எச்சரித்தார்.

நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் அலீ ஃகாமினயீ ஈரானின் புதிய ரஹ்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு, ஒரு சாதாரணப் புரட்சியாளராகத் தொடங்கி, சிறைவாசம், போர்க்காலச் சவால்கள் ஆகியவற்றைக் கடந்த அலீ ஃகாமினயீ ஈரானின் மிக உயரதிகாரப் பீடத்தில் அமர்ந்தார்.

1979ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ‘மர்ஜா’ தகுதியைப் பெறாத ஃகாமினயீயின் தேர்வு வெகு சிலரால் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும், பொது வாக்கெடுப்பு மூலம் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, மர்ஜாவாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் நீக்கப்பட்டது. இதன் மூலம், இஸ்லாமியக் குடியரசின் புதிய ரஹ்பரான அலீ ஃகாமினயீயின் தேர்வு தக்கவைக்கப்பட்டது.

இந்தத் தலைமை மாற்றம் விரைவாக நடந்தாலும் எளிதானதாக இருக்கவில்லை. ஃகாமினயீ தனது ஆரம்ப நாள்களில் ஏராளமான சட்ட, அரசியல், பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்டார். இதில் முதல் சவாலாக இருந்தது அவரது ‘மார்க்க அதிகாரம்’ குறித்த விவகாரமாகும். ஃகாமினயீ ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் அதிபராகவும் அறியப்பட்டாரே தவிர, ஆழமான சட்ட நிபுணராக அறியப்படவில்லை. இதனால், கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றத் தகுதியான ‘இஜ்திஹாது’ (சுயாதீனமான இஸ்லாமியச் சட்ட ஆய்வுத்திறன்) மேற்கொள்ளும் நிலையை அவர் இன்னும் எட்டவில்லை என்று பல மூத்த அறிஞர்கள் கருதினர். அவரது மார்க்கரீதியான தகுதி குறித்த இந்த விவாதம், அவரது ஆரம்பக்காலத் தலைமைக்குப் பெரியதொரு அச்சுறுத்தலாக உருவெடுத்தது.

இந்த இக்கட்டான சூழலில் ஃகாமினயீயுடன் துணைநின்றது, 1989முதல் 1997வரை அதிபராக இருந்த ஹாஷிமீ ரஃப்சஞ்சானீயும், புரட்சிகரப் பாதுகாப்புப் படையும் (IRGC), கோம் நகரின் பாரம்பரிய மத அமைப்புகளும்தான். ரஃப்சஞ்சானீ அரசியல்ரீதியாகவும் நிபுணர்கள் குழுவுக்குள்ளும் ஃகாமினயீக்கு ஆதரவைத் திரட்டினார். அதேநேரம், புரட்சிகரப் பாதுகாப்புப் படை தனது ராணுவ வலிமை மூலம் நாட்டில் குழப்பங்கள் ஏற்படாமல் தடுத்து நிலைத்தன்மையை உறுதிசெய்தது. கோம் நகரின் மதப் பிரமுகர்கள் நாட்டில் அராஜகம் ஏற்படுவதைத் தவிர்க்க ஃகாமினயீயை ஆதரித்தனர். மக்களின், அரச நிறுவனங்களின் ஆதரவுடன் அதிகாரம் அலீ ஃகாமினயீயின் கைகளில் உறுதியாக நிலைபெற்றது.

இமாம் ஃகொமேனீயின் மகன் அஹ்மது ஃகொமேனீ போன்றோர் மூலம், ஃகாமினயீயின் எதிர்காலம் பற்றி இமாம் ஃகொமேனீ கணித்திருந்த பெருமைமிக்க தகவல்கள் மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டன. காலப்போக்கில், சுயாதீன சட்ட ஆய்வுகள் மேற்கொள்ளும் திறன் படைத்தவராக (முஜ்தஹிது) தன்னை நன்கு மேம்படுத்திக்கொண்ட ஃகாமினயீக்கு, கோம் நகரின் முன்னணி மார்க்கப் பிரமுகர்கள் ‘மகோன்னத ஆயத்துல்லாஹ்’ (Grand Ayatollah) என்ற பட்டத்தை வழங்கி, அவரது மார்க்க அதிகாரத்திற்கு முழுமையான சட்ட அங்கீகாரத்தை வழங்கினர்.

ஃகாமினயீ இஸ்லாமிய மார்க்க அறிஞராக மட்டுமன்றி, பன்முக அறிஞராகவும் திகழ்ந்தார். ரூமி, ஹஃபிஸ் போன்ற பாரசீகக் கவிஞர்களையும், விக்டர் ஹியூகோ, டால்ஸ்டாய் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்களின் இலக்கியங்களையும் தனது உரைகளில் மேற்கோள் காட்டினார். ஃபிரெஞ்சு இலக்கியத்தை விமர்சிப்பதும், அடுத்த சில நிமிடங்களில் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைப் பற்றிப் பேசுவதுமான ஒரு நவீன, அறிவுசார் தலைவராக அவர் தன்னைச் செதுக்கிக்கொண்டார். அறபு மொழியில் புலமை பெற்ற அவர், கவிதை, கலைக் கூடல்கள் மூலம் அறிவுஜீவிகளின் ஆதரவை வென்றார். அதேநேரம், தெஹ்ரானின் எளியதோர் இல்லத்தில் வசித்தார்; ஆடம்பரமற்ற சிறந்த ஆன்மிகத் தலைவராகவும் இருந்தார்.

அறபு மொழியில் ஃகாமினயீக்கு இருந்த புலமை காரணமாக, இன்றும் அவர் பாரசீக, அறபு மொழிகளில் கவிதை மாலைகளை (மாலையில் கவிதைக் கூடல்கள்) தொடர்ந்து நடத்திவந்தார். இந்தக் கூடல்கள் ‘தலைவரே தேசத்தின் கலாச்சாரத் திசைகாட்டி’ என்ற குறியீட்டுச் செய்தியை உலகுக்குக் கடத்தின. இதன் மூலம், கலை, இலக்கியத்தைத் திறந்த மனத்துடன் அணுகும் ஒரு மார்க்கத் தலைவராக அவரைப் பார்த்த சில அறிவுஜீவிகளின் ஆதரவையும் அவரால் பெற முடிந்தது.

சட்ட அறிவு தொடங்கி, அதிகாரத்தின் ஆற்றல்முதல் ரூமியின் ஞானம்வரை அனைத்துப் பண்புகளையும் தன்னுள் ஒருங்கிணைக்க ஃகாமினயீ முயன்றார். கற்றறிந்த இமாம், கவிஞர், நீதியான ஆட்சியாளர் என அனைத்துப் பண்புகளையும் ஒருங்கே பெற்றவராகக் கருதப்படும் அலீ இப்னு அபீதாலிபைப் போன்ற ஒரு ‘சிந்திக்கும் ஃகலீஃபா’வாக (Thinking Caliph) அவர் காட்சியளிக்க விரும்பினார்.

ஃகொமேனீ தனது அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளிலிருந்து மட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான அவருடைய பின்பற்றாளர்களின் இதயங்களிலிருந்தும் பெற்றிருந்தார். இதன் அடிப்படையில் ஃகாமினயீ, ஆட்சி-நிர்வாகத்தைத் திறம்பட நடத்திட, முக்கிய அரசு நிறுவனங்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதில் தீவிரமாக உழைத்தார்: நிபுணர்கள் குழு (Assembly of Experts), பாதுகாவலர் சபை (Guardian Council), நீதித்துறை, ராணுவம், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.

இஸ்லாமியப் புரட்சிக்கு முன் இருந்ததுபோல், அரசு ஒரு தனிநபரைச் சாராமல் இருக்க வேண்டும் என்பதில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு மிகக் கவனமாக இருந்தது. இதனூடே ஆழமான, நிறுவனமயமாக்கப்பட்ட ஓர் உட்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், அமைப்புரீதியான திடீர் சரிவை அது சாத்தியமற்றதாக ஆக்கிவிடும்.

ஈரானில் செயல்படுத்தப்படும் ஷீஆ கொள்கையான ‘விலாயத்தே ஃபகீஹ்’, உச்சத் தலைவர் ஃகாமினயீயின் ஈர்ப்புமிக்க, புரட்சிகர வெளிப்பாட்டிலிருந்து காலப்போக்கில் நிறுவனமயமாக்கப்பட்ட அதிகாரமிக்க ஒரு கட்டமைப்பாக உருவெடுத்தது. இதன் விளைபலனாய், கடந்த மூன்று தசாப்தங்களாகப் பாதுகாவலர் சபை (Guardian Council), நடைமுறைசார் தீர்மானச் சபை (Expediency Discernment Council), நீதித்துறை, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை போன்ற இணை நிறுவனங்கள் சுயேச்சையாகவும், அதேநேரம் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் செயல்படும் அதிகார மையங்களின் சிக்கலான ஒரு வலைப்பின்னலாக உருவெடுத்தன.

இந்த அதிகாரப் பரவல் வியக்கத்தக்க வகையில் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துகிறது; ஏனெனில், அரசு என்பது இப்போது ஒரு தனிநபரின் ஆளுமையால் மட்டுமே சுருக்கப்படாமல், சுயமாகவும் அதேசமயம் ஒன்றை ஒன்று சார்ந்தும் இயங்கும் வலிமைமிக்க ஒரு கட்டமைப்பாக மாறியுள்ளது. இதன் மூலம், தனியொரு தலைமையின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, ஆட்சிமுறை நிரந்தரமான ஓர் இயந்திரம்போலச் செயல்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் பல தலைவர்களைக் கொன்றாலும், அதன் அரசும் அரச நிறுவனங்களும் ஸ்திரத்தன்மையை இழக்காமல் உறுதிபட இயங்குகிறது.

ஆக, ஃகாமினயீ வெறும் அரசியலமைப்புப் பதவியை மட்டுமே நம்பியிருக்கவில்லை; அரசின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள், அலுவலகங்களின் சிக்கலான ஒரு வலையமைப்பையும் அவர் உருவாக்கினார்; எந்த ஒரு வியூகம்சார் முடிவும் அவரது நேரடி மேற்பார்வையில் இருப்பதை உறுதிசெய்தார்.

முப்படைத் தளபதியாக அவர் பாரம்பரிய ராணுவத்தையும், IRGCஐயும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றாலும், அவர் IRGCக்கு ‘புரட்சியின் பாதுகாவலர்’ என்ற தனித்துவமான ஒரு சிறப்பந்தஸ்தை வழங்கினார்.

ஸியோனிச இஸ்ரேலின் உளவமைப்பான மொசாத் உளவாளிகள் ஈரானின் அடிமட்டம்முதல் சில மேல்மட்ட அதிகாரங்கள்வரை பரவி, ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்கவும், அதன் இஸ்லாமிய ஆட்சியைக் கவிழ்க்கவும் சதிசெய்தனர். இதனால் காலப்போக்கில், இஸ்லாமியப் புரட்சியைப் பாதுகாக்கும் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஒரு உபசார ராணுவம் என்ற நிலையோடு மட்டும் நிற்காமல், பொருளாதார, ஊடக, அரசியல் துறைகளிலும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. விளைவாக, அந்நிய சக்திகளிடமிருந்து புரட்சியின் ஆட்சி பாதுகாக்கப்பட்டது.

ஈரான் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாவலர் சபை (Guardian Council) ஜனாதிபதி வேட்பாளர்களின் தகுதியை அரசியலமைப்பின்படி முடிவுசெய்வதாக இருந்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராக இயங்கும் மேற்கு நாடுகளுடன் மென்மை காட்டும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராக மக்களைத் திருப்ப ஊடகத்தை ஒரு முக்கியக் கருவியாக எதிரிகள் பயன்படுத்தினர். ஆகையால்தான் ஊடகங்களையும் முக்கியப் போர்க்களமாகக் கருதிய அரசு, நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் செய்திகள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்தியது.

இமாம் ஃகொமேனீயின் கட்டளையை அமல்படுத்தும் அமைப்பு (EIKO: Execution of Imam Khomeini’s Order)

‘செடாது’ என்னும் இவ்வமைப்பு 1979 புரட்சிக்குப் பிறகு ஷா மன்னருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள், வீடுகள், சொத்துகளை நிர்வகிக்க உருவாக்கப்பட்டது. இது இன்று பல லட்சம் டாலர் சாம்ராஜ்ஜியமாக வளர்ந்துள்ளது. மொஸ்தசஃபான் அறக்கட்டளை (Mostazafan Foundation) ‘ஒடுக்கப்பட்டோருக்கான அறக்கட்டளை’ என்று அழைக்கப்படுகிறது. மத்தியக் கிழக்கிலேயே மிகப் பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான இது, விவசாயம், சுற்றுலா, தொழில், போக்குவரத்து எனப் பல துறைகளில் நூற்றுக்கணக்கான நிறுவனங்களைத் தன்வசம் வைத்துள்ளது. இந்த நிறுவனங்கள் ரஹ்பரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடியவை. இதில் கிட்டும் லாபம், வருமானம் என்பன அரசாங்கத்தின் வரவு-செலவுகளைக் கடந்து ரஹ்பரின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. இவைதான், அரசுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போதுகூட ராணுவம், IRGC, எதிர்ப்பியக்கக் கூட்டணி (Axis of Resistance) ஆகியவற்றை அரண்செய்ய உதவுகின்றன.

எதிர்ப்பியக்கக் கூட்டணியும் ஃபலஸ்தீன் ஆதரவும்

ஃபலஸ்தீன் விடுதலை என்பது ஃபலஸ்தீன் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கடமை என ஆரம்பக்காலம்முதல் ஈரான் இஸ்லாமியக் குடியரசு முழங்கிவருகிறது. இதன் நீட்சியாகவே, 1979இல் அங்கு இஸ்லாமியப் புரட்சி வெற்றியடைந்ததும் முதல் வெளிநாட்டு விருந்தினராக ஃபலஸ்தீனின் யாசர் அறஃபாத் வரவழைக்கப்பட்டார். அவருக்கு ஈரானில் இருந்த இஸ்ரேலியத் தூதரகத்தின் சொத்துகளும், அதோடு தொடர்புடைய இதர சொத்துகளும் தரப்பட்டன.

மேலும், றமளானின் கடைசி வெள்ளிக்கிழமையை ‘யவ்முல் குத்ஸாக’ (குத்ஸ் தினம்) அனுசரிக்க வேண்டும் என ஆகஸ்ட் 1979இல் இமாம் ஃகொமேனீ அறிவித்தார். இஸ்லாமியப் புரட்சியின் இலக்குகளில் ஒன்றாக ஃபலஸ்தீன் விடுதலையும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியப் புரட்சியை உள்நாட்டில் பாதுகாக்கவும், தனது இலக்குகளில் ஒன்றான ஃபலஸ்தீன் விடுதலையை எட்டவும் ஒத்த சிந்தனை கொண்ட பிராந்தியக் கூட்டணி ஒன்று தேவைப்பட்டது. இதிலிருந்தே எதிர்ப்பியக்கக் கூட்டணி’ (Axis of Resistance) என்ற கருத்தாக்கம் உருவானது. இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்கவும் அதை நிர்வகிக்கவும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமான ‘குத்ஸ் படை’ (Quds Force) உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, இஸ்ரேலின் ஆதிக்கத்தை மத்தியக் கிழக்கில் முறியடிப்பதற்காக ஈரான் உருவாக்கிய ஒரு ராணுவக் கூட்டணிதான் ‘எதிர்ப்பியக்கக் கூட்டணி’ (Axis of Resistance).

ஹிஸ்புல்லாஹ்

லெபனானில் 1980ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாஹ் அமைப்பு உருவாக்கப்பட்டதிலும், அதற்குப் பொருளாதார, ஆயுத உதவிகள் அளித்ததன் மூலம் லெபனானின் ஒரு முக்கியத் தீர்மானிக்கும் சக்தியாக அதைத் தரமுயர்த்தியதிலும், இஸ்ரேலின் செல்வாக்கிற்கு ஈடுகொடுக்கும் வலிமைமிக்க ஓர் அமைப்பாக அதை மாற்றியதிலும் ஃகாமினயீயின் பங்கு அளப்பரியது.

ஹமாஸ்

இஸ்ரேலை ‘சட்டவிரோத ஆட்சியமைப்பு’ என்று கருதிய ஃகாமினயீ, ஃபலஸ்தீன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைப் பலமுறை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். 2023இல் ஹமாஸ் நடத்திய ‘அல்அக்ஸா பிரளயம்’ (Al-Aqsa Flood) தாக்குதலைப் பல நாடுகள் கண்டித்தபோதும், ஃகாமினயீ அதை ஒரு ‘நியாயமான, சட்டப்பூர்வ சர்வதேச நகர்வு’ என்று பகிரங்கமாகப் புகழ்ந்துரைத்தார். ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாது போன்ற ஃபலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கு நிதி அளிப்பது, பயிற்சி அளிப்பது என ஈரான் ஒரு மூலோபாயக் கூட்டாளியாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஃபலஸ்தீன் குழுக்களுக்கு வெறுமனே நிதி மட்டும் அளிக்காமல், ஏவுகணைகள், ட்ரோன்களை அவர்களே சுயமாகத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப அறிவையும் ஈரான் வழங்கியது. இதுதான் ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாது அமைப்புகளை இஸ்ரேலுக்கு எதிராகப் பல்லாண்டுகள் தாக்குப்பிடிக்க வைத்தது.

இதேபோல், 2003 சதாம் உசேனின் வீழ்ச்சிக்குப் பின், ஈராக்கில் உள்ள சில குழுக்களையும் எதிர்ப்பியக்கக் கூட்டணியில் ஃகாமினயீ இணைத்துக் கொண்டார்.

சிரியா

அதுபோல் சிரியாவிலும் இஸ்ரேல், அமெரிக்க ஸியோனிச-ஏகாதிபத்தியக் கூட்டணிக்கு எதிராகப் பஷர் அல்ஆஸாது இருந்தார். அவரது ஆட்சியைக் கவிழ்க்க 2011ஆம் ஆண்டு தொடங்கிய கிளர்ச்சிக்கு எதிராக சிரியா அரசுக்குப் பக்கபலமாக இருந்தது ஈரான். ஆஸாதின் வீழ்ச்சி எதிர்ப்பியக்கக் கூட்டணிக்குப் பேரிடியாக அமையும் என ஃகாமினயீ எண்ணினார். இதற்காகத் தளபதி காஸிம் சுலைமானீ போன்ற தன்னுடைய சிறந்த ராணுவ ஆலோசகர்களையும், லெபனான், ஈராக், ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த துணை ராணுவப் படைகளையும் அணிதிரட்டி பஷர் அல்ஆஸாது ஆட்சி கவிழ்வதைத் தடுத்தார்.

யமன் அன்ஸாருல்லாஹ்

2015இல் யமன் போர் தொடங்கியபோது, அங்கிருக்கும் ஹூதிகளுக்கு (அன்ஸாருல்லாஹ் இயக்கம்) ஆதரவளிப்பதன் மூலம் தனது எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்க புதியதொரு முனையைத் திறந்தார். இது ஈரானை இஸ்ரேல், அமெரிக்காவுடன் நேரடியான — அதேசமயம் மறைமுகமான (Proxy War) — மோதலில் ஈடுபடுத்தியது. ஈரானின் வெளியுறவுக் கொள்கை என்பது அதன் தேசிய எல்லைகளைக் கடந்த ஒரு வியூகமாக உருவெடுத்தது. அதிகாரப்பூர்வமாக இது ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இஸ்லாமிய எதிர்ப்பு முன்னணி’ என்று அழைக்கப்படுகிறது.

2003இல் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பிறகு ஒரு கூட்டத்தில் பேசிய ஃகாமினயீ, ‘பக்தாதில் நாம் எதிரியுடன் போரிடாவிட்டால், கெர்மன்ஷாவில் (ஈரானிய நகரம்) போரிட வேண்டியிருக்கும்’ என்று கூறினார். இதன் மூலம், ஈரானின் இஸ்லாமிய அரசுக்கு எதிராகப் பிராந்திய நாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டினார்.

ஃபலஸ்தீனுக்கும், எதிர்ப்பியக்கக் கூட்டணி (Axis of Resistance) அமைப்புகளுக்கும் ஃகாமினயீ அளித்த இந்தத் தீவிர ஆதரவே, இறுதியில் அமெரிக்கா, இஸ்ரேலுடனான நேரடிப் போருக்கு ஈரானை இழுத்துச் சென்றது. ஃகாமினயீ ஃபலஸ்தீன் போராட்டத்தை வெறும் அரசியல் கருவியாக மட்டுமே கையாளவில்லை; அதற்காகத் தனது தேசப் பொருளாதாரத்தையும், இறுதியாகத் தன் உயிரையும் பணயம்வைக்கும் அளவிற்கு அந்த இலக்கில் அவர் உறுதியாக நின்றார்.

எதிர்ப்புக் குரல்களையும் ‘சீர்திருத்த’க் குரல்களையும் அனுமதித்த ஈரான்

ஃகாமினயீ உச்சத் தலைவராக இருந்த காலகட்டத்தில் பல ‘சீர்திருத்த’ நபர்களையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்தார். 1997ஆம் ஆண்டில், ‘சீர்திருத்தவாதி’யான முஹம்மது ஃகாத்தமீ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ‘குடிமைச் சமூகம்’ (Civil Society), ‘நாகரிகங்களுக்கு மத்தியிலான உரையாடல்’ (Dialogue among Civilizations) போன்ற முழக்கங்களை முன்வைத்தார். இவை அனைத்தும், இஸ்லாமியக் குடியரசு மேற்கு நாடுகளுடன் இணக்கமான போக்கைக் கையாளப்போகிறதோ என்ற எண்ணத்தை மக்களிடையே விதைக்கத் தொடங்கின.

ஃகாத்தமீ ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ‘சீர்திருத்தவாதிக’ளுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டது: புதிய செய்தித்தாள்கள் வெளியிடப்பட்டன; பல்கலைக்கழகங்களில் விமர்சனங்கள் அதிகரித்தன; தெருக்களில் மதக் காவல்துறையின் (Religious police) இறுக்கம் சற்றுத் தளர்ந்தது.

ஒரு கட்டத்தில் இவை வரம்புகளை மீறத் தொடங்கியதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ‘சலாம்’ என்னும் பத்திரிகை முடக்கப்பட்டதற்கு எதிராக நாட்டில் மாணவப் போராட்டங்கள் வெடித்தன; சில இடங்களில் இவை அரசுக்கு எதிரான வன்முறையாகவும் மாறின. அமெரிக்கா அதற்குப் பகிரங்கமான தார்மீக ஆதரவை வழங்கியது. இவ்வாறாக, மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டம் அந்நிய சக்திகளால் அரசுக்கு எதிரான கலகமாக மாற்றப்பட்டது. அந்நிய சக்திகளின் இந்த சூழ்ச்சி அங்கு இன்றுவரை தொடர்கிறது.

ஃகாமினயீ இஸ்லாமிய ஆட்சியின் மைய நிலைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாகத் தெரியும் எந்த ஒரு ‘சீர்திருத்தத்தையும்’ நிராகரித்தார். 1999 மாணவர் போராட்டங்களை, ஈரானை உள்ளிருந்தே பலவீனப்படுத்த வெளிநாட்டு எதிரிகளால் தூண்டிவிடப்பட்ட ‘ஒரு கலகம்’ என்று அவர் வர்ணித்தார். இருப்பினும் ஃகாமினயீ, போராட்டக்காரர்களுக்கு இரட்டைச் செய்தியை அனுப்பினார்: ஒருபுறம் போராட்டக்காரர்கள் ஆட்சிக்கு எதிராகச் சவால்விடுவதைத் தவிர்க்குமாறு எச்சரித்தார்; மறுபுறம் மாணவர் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்க குழுக்களை அனுப்பினார்.

எதிர்காலச் சவால்கள் ‘வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து’ மட்டுமல்லாமல், ‘புரட்சிக்குப் பிந்தைய தலைமுறையினரால்’ ஈரானியச் சமூகத்திற்குள்ளிருந்தே வரும் என்பதை ஃகாமினயீ உணர்ந்தார். இவர்கள் ஷா மன்னரின் காலகட்டத்தையோ, ரத்தம் தோய்ந்த எட்டாண்டுகாலப் போரையோ நேரில் பார்த்திராதவர்கள்; அவற்றை வாழ்ந்து அனுபவிக்காதவர்கள்.

ஜூன் 2009இல், ஃகாமினயீ தனது வாழ்நாளின் மிகப் பெரிய ஓர் உள்நாட்டுச் சவாலை எதிர்கொண்டார். அது அதிபர் மஹ்மூது அஹ்மதி நிஜாத் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது நிகழ்ந்தது. அந்த வெற்றியில் பெரும் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி மக்கள் தெஹ்ரானிலும் பிற நகரங்களிலும் ‘எனது வாக்கு எங்கே?’ என முழக்கமிட்டு வீதிக்கு வந்தனர். தோல்வியுற்ற வேட்பாளரான மீர் ஹுசைன் மூஸவீயின் ஆதரவாளர்கள் ‘பச்சை’ நிறத்தைப் போராட்டத்தின் அடையாளமாக மாற்றினர். தொடக்கத்தில் ‘வாக்கு எண்ணிக்கைக் கோரிக்கை’யாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், விரைவில் உச்சத் தலைவருக்கு எதிராகவும், ஒட்டுமொத்த ஆட்சியின் சட்டப்பூர்வத் தன்மைக்கு எதிராகவும் மாறியது.

2009 ஜூன் 13இல் ஈரான் தேர்தல் முடிவுகள் வெளியானதுமுதல் ஈரானுக்கு எதிரான பிரச்சாரப் பீரங்கியாக ட்விட்டர் வலைத்தளம் மாற்றப்பட்டிருந்தது. சில ட்விட்டர் கணக்குகள் ஜூன் 13க்குப் பிறகுதான் தொடங்கப்பட்டிருந்தன; அன்று ஒரு நாளில் மட்டும் 30,000 பதிவுகள் ஈரானுக்கு எதிராகப் பதிவிடப்பட்டிருந்தன. ஈரானில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் அமெரிக்கச் சமூக ஊடகமான ட்விட்டர், பராமரிப்புப் பணி காரணமாக இரவு நேரங்களில் செயல்பாட்டை நிறுத்திவைத்திருந்தது. அமெரிக்காவின் இரவு ஈரானின் காலையாக இருப்பதால் போராட்டக்காரர்கள் பேரணிகளை ஏற்பாடு செய்யவும், தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் இயலாது. இதனால் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த ஒபாமாவின் ஊழியர் ஒருவர் ட்விட்டர் நிறுவனத்திடம் சேவையை நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தியிருந்தார்.

அமெரிக்கத் தொலைக்காட்சி வலையமைப்பான ஏபிசியில் பணிபுரியும் நிருபர்கள் பிரையன் ரோஸ், ரிச்சர்டு எஸ்போசிட்டோ இருவரும் 2007 மே 24 அன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதில் ஜனாதிபதி புஷ்ஷின் பிரச்சாரம் பற்றிப் பேசிய அவர்கள், தவறான தகவல்கள் அடங்கிய ஈரான் சீர்குலைவுத் திட்டத்திற்கு, 400 லட்சம் டாலர்களை அங்கீகரிக்கும் நிர்வாக உத்தரவு ஒன்றில் புஷ் கையெழுத்திட்டதை அம்பலப்படுத்தினர்.

1979 இஸ்லாமியப் புரட்சி வெற்றி பெற்ற காலத்திலிருந்து மேற்கத்திய, இஸ்ரேலிய ஊடகங்கள் ஈரானின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கவும், அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் தொடர் பொய்ப் பிரச்சாரங்களை ஈரானுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவருகின்றனர். ஃகாமினயீ இந்தச் சவாலை நேரடியாக எதிர்கொள்ளத் தீர்மானித்தார். 2009 ஜூன் 19 அன்று தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், அஹ்மதி நிஜாத் அரசாங்கத்திற்குத் தனது ஆதரவை அறிவித்தார். போராட்டங்களைத் தொடர்வதால் ஏற்படும் வன்முறைகளுக்குப் பங்கேற்பாளர்களே பொறுப்பு என்றும் எச்சரித்தார்.

1990களிலிருந்து ஈரான் மக்கள் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருந்தனர்: ‘சீர்திருத்தவாதிகள்’; ‘கன்சர்வேடிவ்கள்’. ஃகாமினயீ இரு தரப்பிற்குமிடையே மத்தியஸ்தராக இருந்தார். ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சட்ட வரம்புக்கு உட்பட்டுச் செயல்பட்டதுவரை ஃகாத்தமீ, ஹசன் றூஹானீ போன்ற சீர்திருத்தவாதிகளின் பங்கேற்பை அனுமதித்தார்; ஆனால் அவர்கள் வரம்புகளை மீறுவதாகத் தெரியவந்தால் அந்த முயற்சிகளை உடனடியாக முடக்கினார்.

எந்த ஒரு அமைப்பும் வரம்பற்ற அதிகாரம் பெற்றுவிடாமல் இருக்க, முக்கிய முடிவுகளைத் தனது அலுவலகமும், ‘உச்ச தேசியப் பாதுகாப்புச் சபை’யும் மட்டுமே எடுக்கும்படி அதிகாரத்தைச் சமன்படுத்தினார். எப்போதும் ஃகாமினயீ, மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் ‘கருணைமிக்க ஒரு தந்தை’போலவும், அதேசமயம் தீய சக்திகள் தலைதூக்க முயலும்போது கடுமையான ஆட்சியாளராகவும் மாறிமாறிச் செயல்பட்டார்.

அவர் அமெரிக்காவை அரசியல் எதிரியாக மட்டுமே பார்க்காமல், ‘மாபெரும் சாத்தான்’ (Great Satan) ஆகவும், சர்வதேச சர்வாதிகாரத்தின் குறியீடாகவுமே கருதினார். ‘அமெரிக்காவை ஒருபோதும் நம்ப முடியாது’ என்பதிலும், ‘மிகக் குறுகிய எல்லைக்குள் தந்திரோபாயமாக மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்’ என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். அணுசக்தித் திட்டம் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன் (P5+1) ஈரான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியபோதுகூட, ‘அமெரிக்கர்களின் வாக்குறுதிகளை நம்ப முடியாது’ என்ற தனது புகழ்பெற்ற வாசகத்தை அவர் மீண்டும்மீண்டும் வலியுறுத்தினார். இந்தப் போக்கு, உள்நாட்டில் கணிசமான எண்ணிக்கையினரை வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றிணைத்தாலும், சர்வதேச அளவில் ஈரானைத் தனிமைப்படுத்தியதுடன், அதன் மீது பொருளாதாரப் பாதிப்புகளையும் அதிகரித்தது.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, ஜூலை 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் (JCPOA) கையெழுத்தானது. அதற்கு அப்போதைய அதிபர் ஹசன் றூஹானீ, வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது ஜாவது ஸரீஃப் ஆகியோர் தலைமை தாங்கினர் என்றபோதும் அதன் பின்னணியில் இருந்தவர் ஃகாமினயீ. முடங்கிக் கிடந்த பொருளாதாரத்தைச் சீரமைக்கத் தடைகளை நீக்குவது அவசியம் என்பதால், சில வரம்புகளை நிபந்தனையாக விதித்து இந்த ஒப்பந்தத்திற்கு அவர் பச்சைக்கொடி காட்டினார். ஒப்பந்தத்திற்குப் பிறகும் அமெரிக்கா மீதான அவரது தொனியில் எந்த மாற்றமும் இல்லை. ‘அவர்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தால் நாங்களும் மதிப்போம், ஆனால் அவர்களை நம்ப மாட்டோம்’ என்று அவர் கூறினார்.

2018இல் டொனால்டு ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகி மீண்டும் தடைகளை விதித்தார். அப்போது ஃகாமினயீ தன்னுடைய ஆதரவாளர்களிடம் தனது முன்னாள் எச்சரிக்கையை இப்படிச் சுட்டிக்காட்டினார்: ‘நான் அன்றே சொன்னேன் அல்லவா, அமெரிக்கர்களை நம்ப முடியாது என்று?’ இது, மேற்கு நாடுகளுடன் சுமுக உறவைப் பேணலாம் எனும் சீர்திருத்தவாதிகளின் கருத்தைப் பொய்ப்பிப்பதாக அமைந்தது.

ஜூன் 2025இல் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திய ‘பன்னிரண்டு நாள் யுத்தம்’ நாட்டின் அணுசக்தி, ராணுவ, ஆராய்ச்சித் தளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியிருந்தது. இது ஈரான்-ஈராக் போருக்குப் பிறகு ஈரான் மண்ணில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ராணுவத் தாக்குதலாக அமைந்தது. இக்கட்டான இந்தச் சூழலைத் திறம்படக் கையாண்ட ஃகாமினயீ ‘முன்கூட்டிய புரட்சிப் பாதுகாப்பு’ (Preemptive Defense of Revolution) என்ற கொள்கையில் உறுதியாக நின்றார். ‘எதிரி உங்கள் வீட்டு வாசலை அடையும் முன்பே அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும்’ என்பதை அவர் தனது பொறுப்புக்காலம் முழுவதும் வலியுறுத்தி வந்தார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இறையாண்மைக்கு வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் தீர்க்கமான, உடனடி பதில் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார். இந்தத் தாக்குதல்கள் ஈரான் மக்களின் ஒற்றுமைக்கும், ஈரான் மீதான உலக முஸ்லிம்களின் ஆதரவுக்கும் வித்திட்டன.

அணுசக்தி

1980களில் அதிபராக இருந்த காலம்முதலே, அணுசக்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அவர் பேரார்வம் காட்டினார். சமாதான நோக்கங்களுக்கான அணுசக்தி அறிவு என்பது ஈரானின் இயல்பான உரிமை என்றும், அழுத்தங்களுக்குப் பணிந்து அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். ஆரம்பக்காலம் தொட்டே, ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு அணு ஆயுதமோ, அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பமோ கிடைத்துவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் மும்முரமாக இருந்தனர். இதனால் தொடர்ச்சியாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ஆராய்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரான்மீது பொருளாதாரத் தடை விதிப்பது எனப் பல முயற்சிகளையும் மேற்கொண்டுவந்தனர்.

 2010இல், ‘ஸ்டக்ஸ்நெட்’ (Stuxnet) எனப்படும் கணினி வைரஸ் மூலம், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் இருந்த சுமார் 1,000 மையவிலக்குக் கருவிகளை (Centrifuges) அழித்தன.

ஈரானின் அணுசக்தி அறிவை முடக்க, அதன் முன்னணி விஞ்ஞானிகளை இஸ்ரேலின் மொசாத் குறிவைத்துத் தாக்கியது. 2010முதல் 2020வரை, மசூது அலீ முஹம்மது, மஜீது ஷாரியாரீ, முஸ்தஃபா அஹ்மது ரோஷன், அணுசக்தித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் முஹ்சின் ஃபக்ரிஸாதே ஆகியோர் கொல்லப்பட்டனர். சமீபத்தில், ஜூன் 2025 போரின்போதும் முக்கிய விஞ்ஞானிகள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஜூன் 2025இலும் பிப்ரவரி 2026இலும் அமெரிக்காவின் B-2 ரகப் போர் விமானங்கள் ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) குண்டுகளைப் பயன்படுத்தி, பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த ஃபோர்தோ, நடான்ஸ் நிலையங்களைத் தாக்கின.

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைத் தனியொரு நபரைச் சார்ந்தல்லாமல், பல சிறு குழுக்களாகப் பிரித்துச் செயல்படுத்தியது. முக்கிய விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டால், அவருக்குக் கீழே பணியாற்றிய இரண்டாம் கட்ட விஞ்ஞானிகள் உடனடியாக அந்தப் பொறுப்பை ஏற்கும் வகையில் கட்டமைப்பு இருந்தது.

ஒவ்வொரு முறையும் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும்போது அதைவிட அதிநவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்கியது ஈரான். நடான்ஸ், ஃபோர்தோ போன்ற இடங்கள் தாக்கப்பட்ட பிறகு, ஈரான் தனது பல பணிகளை இன்னும் ஆழமான மலைக்குகைகளுக்கு அடியிலும், சர்வதேசக் கண்காணிப்பிற்குப் புலப்படாத ரகசிய இடங்களுக்கும் (Pickaxe Mountain போன்றவை) மாற்றியது. ஈரானின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அந்நிய சக்திகளின் அச்சுறுத்தலிலிருந்து விடுபடவும் அணுசக்தித் தொழில்நுட்பம் பயன்படும் என ஃகாமினயீ கருதினார்.

குறிப்பாக, முழுமையான அணு எரிபொருள் சுழற்சி, உள்நாட்டு யுரேனியச் செறிவூட்டல், சாதாரணப் போர்க்கருவிகளை – எதிரிகளின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் அணு ஆயுதங்களையும் – சுமந்து செல்லும் திறன் கொண்ட தொலைதூர ஏவுகணைகளை உருவாக்குதல் போன்ற மூலோபாயத் தடுப்புத் திறன்களை (Strategic Deterrent Capabilities) உருவாக்குவதில் அவர் அதிகவனம் செலுத்தினார். ஃகாமினயீயைப் பொறுத்தவரை, அணுசக்தித் திட்டமானது ‘நாட்டின் தன்னிறைவு’ என்ற கருத்தோடு பிணைக்கப்பட்டது. இதன் மூலம் ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகளை ‘வீரத் தியாகிகளாகவும்’, நடான்ஸ், ஃபோர்தோ போன்ற நிலையங்களைத் தேசியப் புனிதத் தலங்களாகவும் மக்களிடையே அவர் சித்தரித்தார்.

2018ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் பண மதிப்பிழப்பு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி என ஈரான் கடும் இன்னல்களுக்கு உள்ளானது. இந்தச் சூழலை அறிவார்ந்த முறையில் சமாளித்த ஃகாமினயீ, ஒருபுறம் வெளிநாட்டு அழுத்தங்களைச் சமாளித்துக்கொண்டு உள்நாட்டு மக்களுக்குத் தற்காலிக நிதியுதவி வழங்கினார். முன்பே அமெரிக்கா தன் வாக்குறுதியை மீறி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் என்பதைக் கணித்திருந்த ஃகாமினயீ, எதிர்ப்புப் பொருளாதாரம் (Resistance Economy) – அதாவது தற்சார்புப் பொருளாதாரம் – என்ற கொள்கையை வகுத்திருந்தார். இது ஈரானை, வெளிநாடுகளைச் சார்ந்திராமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தி, பொருளாதாரத் தடையைத் திறம்படக் கையாளவைத்து வளர்ச்சியை நோக்கி இட்டுச்சென்றது.

ஃகாமினயீ: ஈரான் தலைவரிலிருந்து உம்மத்தின் தலைவர் வரை

இலக்கியங்கள் மீதான ஃகாமினயீயின் ஆர்வம் அவரை ஹஃபிஸ், ரூமி ஆகியோரின் கவிதைகளைத் தனது உரைகளில் அடிக்கடி மேற்கோள் காட்டச்செய்தது. சில நேரங்களில் ஃகாமினயீ தனது சொந்தக் கவிதைகளை எழுதி, கையெழுத்திட்டு வெளியிடுவார். இந்தக் கலாச்சார ஆர்வம், ‘கண்டிப்பான அரசியல்வாதி’ என்ற அவரது பிம்பத்திற்கு ஒரு ‘மனிதநேயத் தன்மையை’ வழங்கியது.

பொறுப்பிற்கு வந்த பிறகும் அவர் வாசிப்பதையும் எழுதுவதையும் தொடர்ந்து ஊக்குவித்தார். ஆண்டுதோறும் பாரசீக, அறபு எழுத்தாளர்கள், கவிஞர்களுடன் சந்திப்புகளை நடத்தி, அவர்களின் கவிதைகளைக் கேட்டறிந்து விவாதிப்பார். ‘அர்ப்பணமிக்க இஸ்லாமியக் கலை’யை (Committed Islamic Art) மீட்டெடுக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.

இமாம் ஃகொமேனீயால் தொடங்கப்பட்ட ‘ஒற்றுமை வாரம்’ என்ற கருத்தாக்கத்தை ஃகாமினயீ மிகவும் வலிமைப்படுத்தினார். முஹம்மது நபி g அவர்களின் பிறந்தநாள் தொடர்பில் நிலவும் சிறு கருத்து வேறுபாட்டை (சன்னீகள் றபீஉல் அவ்வல் 12 என்றும், ஷீஆக்கள் 17 என்றும் கருதுவது) ஒரு பாலமாக மாற்றினார். ஒவ்வொரு ஆண்டும் இந்த வாரத்தில், உலகெங்கிலும் இருந்த சன்னீ, ஷீஆ அறிஞர்களைத் தெஹ்ரானுக்கு அழைத்து மாநாடுகள் நடத்தினார். இதன் மூலம் முஸ்லிம்களிடையே இருந்த சிறுசிறு கருத்து வேறுபாடுகளைக் களைய முயன்றார். ஷீஆ-சன்னீ மோதல்களைக் குறைக்க ஃகாமினயீ எடுத்த மிக முக்கிய நடவடிக்கை இதுவாகும்.

கடும்போக்குவாத ஷீஆக்கள் சிலர், சன்னீ முஸ்லிம்களால் மதிக்கப்படும் இஸ்லாமிய ஆளுமைகளை (குறிப்பாக அன்னை ஆயிஷாவையும் ஃகலீஃபாக்களையும்) இழிவுபடுத்துவதை அவர் ‘ஹறாம்’ (தடுக்கப்பட்ட செயல்) என்று அறிவித்து ஃபத்வா வழங்கினார். இது பல சன்னீ அறிஞர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ‘சன்னீகளின் உணர்வுகளைப் புண்படுத்துபவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு (அமெரிக்கா, இஸ்ரேல்) உதவுகிறார்கள்’ என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

ஃகாமினயீயின் பார்வையில் ‘உம்மத்’: புவியியல் எல்லைகளைக் கடந்த ஒரே குடும்பம்

ஃபலஸ்தீன் போராட்டத்தை அவர் சன்னீ போராட்டமாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த இஸ்லாமிய ‘உம்மத்’தின் கௌரவப் பிரச்சினையாகப் பார்த்தார். இதனால்தான் ஷீஆ நாடான ஈரான், சன்னீ அமைப்புகளான ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாது ஆகியவற்றை முழுப் பலத்துடன் அரண்செய்கிறது.

சவூதி அறபியா போன்ற நாடுகளுடன் அரசியல்ரீதியாகப் போட்டியும் பிணக்குகளும் இருந்தாலும், ஹஜ்ஜிலும் பிற இஸ்லாமிய விழுமியங்களிலும் சன்னீகளுடன் இணைந்து செயல்படுவதையே அவர் விரும்பினார். ‘நாம் பிரிந்திருந்தால், ஏகாதிபத்தியவாதிகள் நம்மை விழுங்கிவிடுவார்கள்’ என்பது அவரது நிரந்தர எச்சரிக்கையாக இருந்தது.

ஃகாமினயீ பலமுறை பாகிஸ்தான், இந்தோனீஷியா, துருக்கி போன்ற பெரிய சன்னீ நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேண முயன்றார். காஷ்மீர்முதல் மியான்மர்வரை எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டார்களோ, அங்கெல்லாம் அவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பாராமல் ஈரான் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

நிறைவாக..

1960களில் மஷ்ஹது நகரின் மார்க்க அறிஞர் ஒருவரின் மகளை அவர் மணந்தார். அவரது குடும்ப வாழ்க்கை மிக ரகசியமாகவும் தனிப்பட்டதாகவும் வைக்கப்பட்டது; அவருடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பொதுவெளியில் தோன்றுவது மிக அரிது. பிப்ரவரி 2026இல் அவரது மரண அறிவிப்புக்குச் சற்றுமுன், அவருடைய மகள், மருமகன், பேத்தி, மருமகள் ஆகியோர் உயிர்த்தியாகிகளாக (ஷஹீதுகள்) மரணித்தனர் எனத் தெஹ்ரான் அறிவித்தது.

விதிவிலக்காக, அவருடைய மகன் மொஜ்தபா பெயர் மட்டும் அவருக்குப் பின் ‘ரஹ்பர்’ ஆகும் வேட்பாளர்களின் பட்டியலில் அடிபட்டது. ஆனால் இதை ஃகாமினயீ எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. மற்ற அதிகாரிகளுடன் ஒப்பிடுகையில் ஃகாமினயீ மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்ததாக ஈரானியர்கள் கூறுகின்றனர். அவரிடம் ஆடம்பர அரண்மனைகள் இல்லை; அவருடைய மகன்களும் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடவில்லை. இது, அவர் உலக இன்பங்களைத் துறந்தவர் என்பதற்கான சான்றாக முன்னிறுத்தப்படுகிறது.

அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!

Related posts

Leave a Comment