அருவமாக்கப்படும் முஸ்லிம்கள்
நான்கு நாட்களுக்கு முன்னர் (ஜூலை 13, 2018) முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி அளித்த இஃப்தார் விருந்து இன்றைய சூழலில் மிகவும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஒன்று. தமிழகத்தில் வாழும் நமக்கு ஒருவேளை அது பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் இந்திய அளவில் அது ஒரு முக்கியமான நிகழ்வு. மதவெறிக் கும்பல்களால் முஸ்லிம்கள் கொல்லப்படுவது ஒரு அன்றாட நிகழ்வாக ஆகிப்போன நிலையில், அப்படி முஸ்லிம்கள் கொல்லப்படுவது இன்று ஒரு செய்தியல்ல, தினசரி ஒரு பேப்பர் விநியோகிப்பவன் வீட்டு வாசலில் அன்றைய நாளிதழை வீசிவிட்டு அகல்வது போல அல்லது ஒரு பால்காரர் பால்பாக்கெட்டைப் பெட்டியில் போட்டுவிட்டுப் போவது போல ஒரு அன்றாட நிகழ்வு என்றாகிப் போன நிலையில், யாராவது இதைப் பெரிதாக நினைத்துப் பேசினால் அவரை வினோதமாகப் பார்க்கக் கூடிய சூழல் இன்று உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ராகுலின் இம்முயற்சி வரவேற்கத் தக்கதாக அமைகிறது.
காங்கிரஸ் இப்படி இஃப்தார் விருந்து அளிப்பது அப்படி ஒன்றும் புதிதல்ல. 2015 வரை அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இஃப்தார் விருந்து அளித்துக் கொண்டிருந்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தவரை அவரும் இஃப்தார் விருந்தளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபின் அதை நிறுத்தினார். அது மட்டுமல்ல பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் அளித்து வந்த இஃப்தார் விருந்தை மோடி புறக்கணிக்கவும் செய்தார். ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறியபின் இனி இங்கு இஃப்தார் விருந்தளிப்பது இல்லை என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 2015க்குப் பின் 2016, 2017 ஆண்டுகளில் ஏனோ இஃப்தார் விருந்தளிக்கவில்லை. குஜராத் 2002 படுகொலைகளுக்குப் பின், அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியைத் துக்கம் விசாரிக்க சோனியா காந்தி செல்ல விரும்பியபோது அன்றுள்ள நிலையில் அங்கு சென்றால் பெரும்பான்மை மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என அறிவுறுத்தப்பட்டதை ஒட்டி அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். 2004, 2008 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முஸ்லிம்களின் பிரச்சினையைப் பேசினாலே எதிர்மறையாகப் போகும் எனக் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் மௌனம் காத்தது. சமீபத்திய குஜராத் மாநிலத் தேர்தலின்போது ராகுல் ஒவ்வொரு இந்துக் கோவிலுக்காய்ச் சென்று வழிபட்டதை விளம்பரப்படுத்திக் கொண்டதோடு, தான் ஒரு பூணூல் அணிந்த இந்து என்று வேறு அறிவித்துக் கொண்ட நிலையில், இப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பாக அவர் இஃப்தார் விருந்தளித்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒரு மாற்றம்தான்.
மூத்த பத்திரிகையாளர் சீமா முஸ்தஃபா சரியாகவே சொல்லியுள்ளதுபோல், இன்று இந்திய முஸ்லிம்கள் ஒரு inviscibilisation-க்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதென்ன? முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் யாரும் கண்டுகொள்வதில்லை. தேர்தலில் அவர்களின் வாக்குகளும் யாருக்கும் தேவையில்லை. யாரும் அவர்களுக்கு ரமழான் வாழ்த்துக்களும் சொல்வதில்லை. ஆக இப்படி ஒரு இருபது கோடி மக்கள் இந்தியாவில் உள்ளார்கள் என்பதே “காட்சியிலிருந்து மறைந்துபோன” ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அதைத்தான் inviscibilisation என்கிறார் அவர். அதாவது “அருவமாக்கப்படுதல்” எனலாம். முஸ்லிம்கள் உருமறைக்கப்படுகின்றனர்; அருவமாக்கப்படுகின்றனர்.
இந்தப் பின்னணியில்தான் ராகுல் அளித்த இந்த இஃப்தார் விருந்து முக்கியமாகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ப்ரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, தி.மு.கவின் கனிமொழி எனப் பலரும் கலந்து கொண்ட அந்நிகழ்வில் உடல்நிலை காரணமாக சோனியா அவர்கள் கலந்துகொள்ள இயலவில்லை என அறிகிறோம்.
சமீபத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக ராகுல் மேற்கொண்ட இன்னொரு முயற்சியும் வரவேற்கத்தக்க ஒன்று. சென்ற ஜூலை 11 அன்று டெல்லியில் முஸ்லிம் அறிவுஜீவிகளை ராகுல் சந்தித்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது இன்னொரு முக்கியமான திருப்பம். முஸ்லிம்களை அடையாளப்படுத்துவது என்றாலே முல்லாக்கள், மதத் தலைவர்கள் என ஆகிப்போன நிலையில் இம்முறை முஸ்லிம் அறிவுஜீவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அழைக்கப்பட்டது கவனத்துக்குரியது. முஸ்லிம்கள் மத்தியில் ஒரு அறிவுப் பாரம்பரியம் உண்டு என்பது பெரும்பாலும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
இந்தச் சந்திப்பில் பேரா. இர்ஃபான் ஹபீப், முன்னாள் திட்ட ஆணைய உறுப்பினர் சயீதா ஹமீத், கல்வியாளர் இல்யாஸ் மாலிக், சச்சார் ஆணைய உறுப்பினரும் செயலருமான அபூசாலிஹ் ஷரீஃப் , முன்னாள் துணைவேந்தர் இஸட். கே. ஃபைஸான், முன்னாள் அரசு உயர் அதிகாரி ஏ. எஃப். ஃபரூக்கி முதலான பலர் இதில் பங்குபெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் தவிர மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், பிரியங்கா சதுர்வேதி முதலானோர் கலந்து கொண்டுள்ளனர். முஸ்லிம்கள், தலித்கள் முதலானோர் அச்சுறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ள இன்றைய நிலையில், காங்கிரசும் இந்து வாக்கு வங்கியை நோக்கி ஒரு ‘மென்மையான இந்துத்துவ’ அணுகுமுறையைக் கையாண்டு வரத் தொடங்கிய சூழலில் இந்த நிலையை மாற்ற என்ன செய்யப் போகிறீர்கள் என முஸ்லிம் அறிவுஜீவிகள் தம் கவலையை அங்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் ஏற்பாடு செய்த இந்தச் சந்திப்பும் ஒரு முக்கியமான திருப்பமே. முஸ்லிம்கள் என்றாலே முல்லாக்களும் மதத் தலைவர்களும்தான் என்பதாக மட்டுமே கருதப்பட்டும் அணுகப்பட்டும் வந்ததும் கூட ஒரு வகையில் வரலாற்றுப் பிழைதான். முஸ்லிம்கள் மத்தியிலும் அறிஞர்கள், அறிவுஜீவிகள், புகழ்பெற்ற நடிகர்கள், அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் என எவ்வளவோ பேர் இருக்கையில் பன்முகப் பரிமாணங்கள் உள்ள அம்மதத்தினரை ஒரு இறுக்கமான மதம் சார்ந்த அடையாளத்திற்குள் மட்டுமே சிறைப்படுத்துவதும் பெரும் பிழைதான். முஸ்லிம் இன்டெலெக்சுவல்களை முன்னிலைப்படுத்தவும், அவர்களின் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும் வேண்டிய காலம் இது
பேராசிரியர் ஃபைசல் தேவ்ஜி சொல்வதுபோல், கடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே அரசியலாக்கியதும்தான். அரசியல் கோரிக்கைகளை முஸ்லிம் கட்சிகள் முதன்மைப்படுத்தவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவார். உண்மைதானே. 1990கள் வரை இடஒதுக்கீடு பற்றி முஸ்லிம் கட்சிகள் பேசவில்லையே. இன்றளவும் இந்திய அளவில் அவர்கள் வலுவான அரசியல் கட்சியாக உருப்பெறவில்லையே. பொதுவான அரசியல் பிரச்சினைகளில் அவர்கள் போதுமானளவு கருத்துச் சொல்வது இல்லையே. எடுத்துக்காட்டாக இன்று பாஜக அரசு உயர் கல்வி மீது தொடுக்கும் தாக்குதல் குறித்து முஸ்லிம் கட்சிகளின் கருத்து என்ன?
ஃபைசல் தேவ்ஜி ஒப்பீட்டுக்காக இன்னொன்றையும் சுட்டிக் காட்டுவார். இந்தியாவில் உள்ள இன்னொரு சிறுபான்மையாகிய தலித்களை அம்பேத்கர் அப்படித் திரட்டவில்லை. அவர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை முன்வைத்து அவர்களை அவர் ஒன்றிணைத்தார். ஒரு அரசியல் சக்தியாக அவர்களை உருவாக்குவதற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அப்படியான ஒரு சூழல் இன்று அவசியம் தேவை. அந்த வகையில் முஸ்லிம் அரசியலில் இன்னும் அதிக அளவில் இன்டலக்சுவல்கள், அரசியல் களப் போராளிகள் பங்குபெற வேண்டும். இந்தப் பின்னணியில் ராகுல் அப்படியான முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு சந்திப்பை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்க ஒன்று.
இப்படியாக முஸ்லிம்களை invisibility எனும் நிலையிலிருந்து அவர்களைப் பார்வைப் புலத்திற்குள் கொண்டுவரும் இந்த எளிய முயற்சிகளையும் கூட நரேந்திரமோடி, நிர்மலா சீதாராம் போன்றோரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. அறிவு ஜீவிகளுடனான அந்தச் சந்திப்பில் பேசும்போது ராகுல், “முஸ்லிம்கள் இன்று தலித்களைப்போல பலவீனப்படுத்தப்பட்ட ஒரு சிறுபான்மையாக ஆகியுள்ளனர். காங்கிரஸ் பல்வீனமானவர்களின் நலன்களுக்கான கட்சி என்கிற வகையில் அது முஸ்லிம்களுக்கான கட்சியும் கூட” எனும் பொருளில் பேசியதை அவர்கள் கண்டித்துள்ளனர்.
“காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கான கட்சி மட்டுமா?” என நரேந்திரமோடி கேட்டுள்ளார். அதாவது முத்தலாக் முதலான பிரச்சினைகளில் முஸ்லிம் பெண்களோடு நிற்காமல் முஸ்லிம் ஆண்களோடு மட்டுமே காங்கிரஸ் நிற்கிறதாம்.
என்ன கொடுமை பாருங்கள், முஸ்லிம்கள் X இந்துக்கள் என்கிற எதிர்மையோடு இன்று கூடுதலாக இன்னொரு இருமை முஸ்லிம்களுக்குள்ளேயே கட்டமைக்கப்படுகிறது. முஸ்லிம் ஆண்களும் பெண்களும் ஏதோ சந்திக்கவே இயலாத இரு துருவங்களாக முத்தலாக் பிரச்சினையில் பிரிந்து நிற்பதைப் போல முன்வைத்து முஸ்லிம் ஆண்கள் X முஸ்லிம் பெண்கள் என்கிற ஒரு இருமையை மோடி போன்றோர் மிதக்கவிடுவது ஆபத்தானது. இப்படிப் பேசுவதோடு அவர்கள் நிற்கவில்லை. பாஜக-வில் உள்ள சிறுபான்மைப் பிரிவின் சார்பாக முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கென ஒரு சந்திப்பையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.
இன்னொரு பக்கம் பாஜக-வின் வீரப் பெண்மணி நிர்மலா அம்மையார் ராகுலின் பேச்சைத் திரித்து, “காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி எனச் சொல்லியுள்ளது. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் கொடுஞ்செயல் இது” எனவும், “2019 தேர்தலை முன்வைத்து அது இப்படிச் செய்கிறது எனவும், “இது 1947ல் உருவானதுபோல ஒரு மதப்பிளவுக்கு வழிவகுக்கும்” எனவும் விஷத்தைக் கக்கியுள்ளார். 1947 எனக் குறிப்பிட்டதன் ஊடாக ஒரு மதக் கலவரத்துக்கும் தாங்கள் தயார் என்கிற நிலையை எடுத்து அவர் பேசியுள்ளார். பாஜக தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி, “தேர்தல் வந்தால் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் மீது பரிவு வந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் எப்போதும் invisible ஆகவே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பார்வைப் புலத்திற்குள் அவர்கள் கொண்டுவரப்படக் கூடாது என்பதில் இவர்கள் எத்தனை வெறியாகவும் குறியாகவும் உள்ளார்கள் என்பதற்கு காங்கிரசின் வரவேற்கத்தக்க இம்முயற்சிகளுக்கு இவர்கள் காட்டும் இந்த ஆபத்தான எதிர்வினைகள் ஒரு சான்று.
காங்கிரஸ் கட்சி இப்தார் நிகழ்ச்சி நடத்தியதையே வியந்தோதும் அளவுக்கு அ.மார்கஸ் போன்ற அறிவு ஜீவிகள் இறங்கி வந்திருப்பது வருத்தத்திற்குரியது. இந்துக்களின் ஓட்டுக்காக மென்மை இந்துத்துவா, முஸ்லிம்களுக்காக இப்தார் என்ற அளவில்தான் இதை பார்க்க வேண்டியிருக்கிறது. பிஜேபி,காங்கிரசை புறக்கணித்து விட்டு தமக்கான அரசியல் உரிமைகளை தாங்களே பேச கூடிய அளவுக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் வெகு மக்களை சென்றடைந்திருக்கின்றன. ஊடகங்களும், இந்துத்துவ சக்திகளும் மட்டுமல்ல மதச்சார்பற்ற சக்திகளும் இதை சகிக்கவில்லை என்பதே உண்மை. முஸ்லிம்களின் உரிமை போராட்டங்கள் குறித்த செய்திகளை மட்டுமே அருவமாக்க முடியுமே தவிர முஸ்லிம்களையே அருவமாக்க முடியாது. சமூக ஊடகங்களின் தாக்கம் மிகுந்த இன்றைய சூழலில் அப்படி ஒன்று நடக்கவே வாய்ப்பில்லை என்றே கருத தோன்றுகிறது.
இது இஃப்தார் விருந்து சம்பந்தமான கட்டுரையல்ல. அதுபோக அ.மார்க்ஸ் கூறுவதுபோல் முஸ்லிம்கள் அருவமாக்கப்படும் தற்கால சூழலில் முஸ்லிம் அறிவுஜீவிகளை ஒன்றுகூட்டி இப்படியொரு வித்தியாசமான முயற்சியை காங்கிரஸ் கட்சி மேற்கொள்வது வரவேற்வேற்க்கத்தக்கது. இது தவிர முஸ்லிம் கட்சிகள் மீதான நியாயமான விமர்சனத்தையும் இது முன்வைக்கிறது. அதைப் பற்றி விவாதிப்பது அவசியம்.
உங்கள் கருத்தில் எல்லா மதச்சார்பற்ற கட்சிகளையும் புறக்கணித்துவிட்டு முஸ்லிம்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத, சமயோசிதமற்ற போக்கு. இப்படி உள்ஒடுங்கும் மனப்பான்மை நல்லதல்ல.