கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளவுபட்டதில்லை முஸ்லிம் சமூகம்” - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலோ, அ.கலையரசன்

Loading

சில மாதங்களுக்கு முன்பு போபாலில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக செயல்வீரர்களிடம் நிகழ்த்திய ஓர் உரையில், “பிற்படுத்தப்பட்ட பஸ்மந்தா முஸ்லிம்கள் உயர்சாதி முஸ்லிம்களாலும் ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் கட்சிகளாலும் தீவிரமாகச் சுரண்டப்படுகிற சூழலை, அந்த ஏழை முஸ்லிம்களைக் கவருவதற்கு பாஜக பயன்படுத்திக்கொள்ள முடியும்” என்று கூறியிருந்தார். இந்த உரையும், பஸ்மந்தா முஸ்லிம்களை பாஜகவுக்குள் உள்ளடக்குவதற்கான சமீபத்திய முயற்சிகளும் இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தினுள் செயல்படும் சாதிகுறித்த விவாதத்திற்கு புத்துயிரூட்டியுள்ளன. இந்திய முஸ்லிம்களுக்குள் சாதி இன்னும் நிலைத்திருப்பதை மறுக்கவோ புறந்தள்ளவோ முடியாது என்றபோதிலும், சமூக-பொருளாதார அசமத்துவம் என்ற அளவில் அது இந்துக்களோடு ஒப்பிடும்போது குறைவான அளவிலேயே உள்ளது.

முஸ்லிம் சாதிகளை அஷ்றஃப், அஜ்லாஃப், அர்ஸால் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை முறையே உயர்சாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), தலித்கள் என தோராயமாக ஒப்பிடத் தகுந்தவையாக உள்ளன. ஆயினும், தாங்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுவோராக இல்லை எனும் காரணத்தால் கணக்கெடுப்புத் தரவுகளில் ‘தலித் முஸ்லிம்கள்’ (அர்ஸால்) தங்களை பட்டியலினச் சாதியினராக அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. பொதுவாக, OBC பிரிவில்தான் அவர்களது சாதிகள் பட்டியலிடப்படுகின்றன. இந்திய முஸ்லிம்களில் 60% OBCயினராகவும், 38% உயர்சாதியினராகவும், இன்னும் 2% பட்டியல் சாதி/பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தோராகவும் உள்ளனர். ஆயினும், இக்குழுக்கள் புவியியல்ரீதியாக சீரற்றுப் பரவி உள்ளன. உதாரணத்திற்கு OBC, தலித்களை உள்ளடக்கிய பஸ்மந்தாக்கள் உத்திரப் பிரதேசம், பிகாரைச் சேர்ந்த முஸ்லிம்களுள் 76%ஆக இருக்கின்றனர்.

அனைத்திந்திய கடன் மற்றும் முதலீட்டுக் கணக்கெடுப்பு (All India Debt and Investment Survey),  குறிப்பிட்ட காலத்திய தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) ஆகியவற்றின் சமீபத்தியக் கணக்கெடுப்புத் தரவுகள்மூலம் வள நுகர்வு, வேலைகளை அணுகிப்பெற இயல்தல், கல்வி பெறுதல் உள்ளிட்ட பன்முகப்பட்ட பரிமாணங்களிலான வகைமாறிகளின் (variables) அடிப்படையில் இந்திய முஸ்லிம்களுக்கு இடையிலான சமூக அசமத்துவத்தை அளவீடு செய்யவும், அதை இந்துக்களுக்கு இடையில் நிலவும் நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் நாங்கள் முனைகிறோம்.

2019இல் இந்து உயர்சாதியினருக்கான சராசரி நிகர தனிநபர் சொத்து மதிப்பு ரூபாய் 8,64,984 ஆகும். அதுவே OBC சராசரி தனிநபர் சொத்து மதிப்பு ரூபாய் 4,27,149ஆகவும், தலித்களுடையது ரூபாய் 2,28,437ஆகவும் இருந்தது. இது OBC முஸ்லிம்களுக்கு 3,43,014 ரூபாயாகவும் தலித் முஸ்லிம்களுக்கு 3,10,092 ரூபாயாகவும் இருந்தது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்து உயர்சாதியினரின் சொத்து மதிப்பு சராசரியாக தலித்களுடையதைவிட மும்முடங்கு அதிகமானதாகவும், OBCஐவிட இருமடங்கு அதிகமானதாகவும் இருக்கும்பொழுது, முஸ்லிம்களுக்கு இடையே இது வெறும் 10% உள்ளது. பஸ்மந்தா முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழக்கூடிய பிகாரில் முஸ்லிம்களுக்கு இடையிலான வள அசமத்துவம் மிகவும் சொற்பமாக 2% என்ற அளவில் மட்டுமே உள்ளது. மத்தியப் பிரதேசத்திலோ வளச் சேகரிப்பில் பஸ்மந்தா முஸ்லிம்கள் 14% கூடுதல் புள்ளிகளோடு அஷ்றஃப்களை மிகைத்தவர்களாக இருக்கின்றனர். இதற்கு மாறாக, முஸ்லிம் நிலஉடைமை சார்ந்த மேட்டுக்குடி எச்சங்கள் இன்னும் இருக்கக்கூடிய உத்திரப் பிரதேசத்தில் அவர்களுக்கிடையிலான இடைவெளி 43%ஆக உள்ளது. ஆனால், அதே உத்திரப் பிரதேசத்தில் உள்ள இந்து உயர்சாதியினரை எடுத்துக்கொண்டால் அவர்கள் சராசரியாக பிற்படுத்தப்பட்டோரைவிட இருமடங்கு வளம்பெற்றவர்களாகவும் தலித்களைவிட மும்மடங்கு அதிகமாக வளம்பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

நுகர்விலும்கூட இதையொத்ததொரு போக்கைக் காணமுடியும். 2021-22இல், முஸ்லிம் உயர்சாதியினரின் தனிநபர் மாதச் செலவு என்பது ரூபாய் 2,180ஆக இருக்கும்போது பஸ்மந்தாக்களின் தனிநபர் மாதச் செலவோ ரூபாய் 2,151ஆக இருந்தது. அதாவது, இவற்றுக்கு இடையிலான வித்தியாச வரம்பு என்பது வெறும் 1.4% மட்டுமே ஆகும். ஆனால், அதுவே இந்துக்கள் தொடர்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பின்வரும் புள்ளிவிபரம் முற்றிலும் வித்தியாசமான வேறொரு சித்திரத்தை அளிக்கின்றது. உயர்சாதியினர், சராசரியாக ரூபாய் 3,321க்கான மதிப்பில் நுகர்பவர்களாக இருக்கிறார்கள். இது பிற்படுத்தப்பட்டோரைவிட (ரூபாய் 2,180) 40% அதிகமானதாகவும் தலித்களைவிட (ரூபாய் 2,122) 57% அதிகமானதாகவும் உள்ளது. உத்திரப் பிரதேசத்திலும் பிகாரிலும் முஸ்லிம்களுக்கிடையிலான இடைவெளி முறையே 6.2%, 10%  என மிகக் குறைவானதாக உள்ளது. அதுவே உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்சாதி இந்துக்கள் பிற்படுத்தப்பட்டோரைவிட 48% அதிகமாக நுகர்பவர்களாகவும் தலித்களைவிட 60% அதிகமாக நுகர்பவர்களாகவும் இருக்கின்றனர். பிகாரில் இது முறையே 27%ஆகவும் 48%ஆகவும் உள்ளது.

கல்வி பெறுவதிலும் அஷ்றஃப்களுக்கும் பஸ்மந்தாக்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. 2021-22இல், உயர்கல்வி நிலையங்களுக்குச் செல்லும் (18முதல் 23வரையான வயது கொண்ட) உயர்சாதி முஸ்லிம் இளைஞர்களின் சதவீதம் 19.8 என்ற நிலையில் பஸ்மந்தாக்களுக்கு இணையானதாகவே இருந்தது. இதற்கு மாறாக, உயர்கல்வி பெறும் உயர்சாதி இந்து இளைஞர்களின் சதவீதம் 46.5ஆக இருந்தநிலையில், பிற்படுத்தப்பட்டோரது சதவீதம் 36ஆகவும் தலித்களின் சதவீதம் 26ஆகவும் இருந்தது. சுவாரசியமான வகையில், உத்திரப் பிரதேசத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் பஸ்மந்தாக்கள் தங்களது சமூகத்தின் உயர்சாதியினரைவிட முன்னேறியே இருந்தார்கள். உண்மையில், உத்திரப் பிரதேசத்தில் முஸ்லிம் உயர்சாதியினர் கல்வி நிலைய வருகையில் எதிர்மறை வளர்ச்சியை சந்தித்துவருகின்றனர். இதன் விளைவாக, 2011-12இல் 14%ஆக இருந்த அவர்களது சேர்க்கை, 2021-22இல் 12%ஆகக் குறைந்தது. இது இந்திய வரலாற்றில் இதற்கு முன்னர் சந்தித்திராத ஒரு போக்கு ஆகும். ஏனெனில், இதுவரை நமக்குத் தெரிந்தவகையில், எந்தவொரு சமூகக் குழுவுமே உயர்கல்வி பெறுதலில் வளர்ச்சியையே கண்டுவந்திருக்கின்றனர்.

கல்வியை அடைவதில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள சரிவு, மாத ஊதியம் பெறும் வழமையான வேலைகளைப் பெறுவதிலும் பிரதிபலிக்கின்றது. முஸ்லிம்களிடையே மாத ஊதியம் பெறும் ஊழியர்களின் சதவீதம் 19.3ஆக இருக்கிறது, ஆனால், இதுவே இந்துக்களிடம் 21.5 சதவீதமாக உள்ளது. இதிலும்கூட, முஸ்லிம் உயர்சாதியினருக்கும் பஸ்மந்தாக்களுக்கும் இடையே வித்தியாசங்கள் ஏதும் இல்லை. ஆனால், அதுவே இந்து உயர்சாதியினரில் மாத ஊதியம் பெறுவோரது சதவீதம் 33ஆக இருக்கையில், பிற்படுத்தப்பட்டோருடையதோ 19.9 சதவீதமாகவும் தலித்களுடையது 21.5 சதவீதமாகவும் உள்ளது. உத்திரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பஸ்மந்தாக்கள் தங்களது உயர்சாதி சகாக்களைவிட முன்னேறி விளங்குகின்றனர். ஆனால், இந்துக்களில் போட்டி நிறைந்த வேலைகளை உயர்சாதியினரே இன்னும் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

மொத்தத்தில், முஸ்லிம்கள் சாதி, வர்க்க அடிப்படையில் இந்துக்களைவிடவும் குறைவாகவே பிளவுபட்டிருக்கின்றனர். மிகவும் அசமத்துவமான ஒரு சமூகத்தைக் கொண்டுள்ள இந்துக்களில், உயர்சாதியினர் யாராலும் அசைக்க முடியாத நிகர லாபமீட்டுபவர்களாக இருக்கின்றனர். ஆனால், முஸ்லிம்களோ கூட்டாக பொருளாதார நலக்குன்றலை அனுபவிக்கின்றனர். இவ்வாறிருப்பினும்கூட, பாஜக தலைவர்கள் எவ்வாறு ஷீஆக்களையும் போராக்களையும் தன்னகப்படுத்தி ‘பிரித்தாளுகையில்’ ஈடுபட்டார்களோ, அதேபோன்று அவர்கள் பஸ்மந்தாக்களையும்கூட தன்னகப்படுத்தக் கூடும். மேலும், இந்துக்களோடு ஒப்பிடும்போது முஸ்லிம்களிடம் வர்க்கரீதியான பிரிவினை குறைவாகவே தென்பட்டாலும் அந்தஸ்துரீதியான பிளவு இன்னும் பலமாகவே உள்ளது. அதையும்கூட அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். உத்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 395 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி அவர்களில் 61 பேர் வென்றனர். போட்டியிட்ட 395 பேரில் நான்கில் மூன்று பேர் பஸ்மந்தா முஸ்லிம்களாக இருந்தனர். இதற்கு மாறாக, முந்தைய தேர்தல்களில் அக்கட்சி வெறும் 180 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது, அவர்களில் ஒருவர் மட்டுமே வென்றார்.

(நன்றி: The Indian EXPRESS)

தமிழில்: ஆஷிர் முஹம்மது

Related posts

Leave a Comment