முஃதஸிலா சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்
[இஸ்லாமியச் சிந்தனை வரலாற்றில் பகுத்தறிவுவாதம் பேசிய முஃதஸிலாக்கள் குறித்த நிதானமான அணுகுமுறையை இக்கட்டுரை வழங்குகிறது. குர்ஆன் படைக்கப்பட்டதா, படைக்கப்படாததா?, அல்லாஹ்வின் பண்புகள் போன்றவற்றில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளின் நியாயங்களை திரிக்காமல் முன்வைக்கிறது. ஒட்டுமொத்தமாக இக்கட்டுரை, வரலாற்றை முன்முடிவுகளுடன் கறுப்பு-வெள்ளையாக அணுகாமல் நிகழ்வுகளின் சூழமைவுகளைப் புரிந்துகொள்வதனுடாக முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.]
இஸ்லாத்தில் கருத்தியல், தத்துவக் கோட்பாடுகள் தோன்றி வளர்ந்ததற்கு சிறந்த சான்றாக முஃதஸிலா சிந்தனைப் பள்ளியைக் கூறலாம். உமையா ஆட்சிக் காலத்தில் தோன்றிய இச்சிந்தனைப் பள்ளியானது, அப்பாசிய்யா காலத்தில் செழித்தோங்கி அதிவேக வளர்ச்சி கண்டது. பகுதாதை ஆட்சி செய்த அப்பாசிய்யா மன்னர்களான மஃமூன், முஃதஸிம், வாஸிக் ஆகியோரின் காலம் முஃதஸிலாக்களின் பொற்காலமாகத் திகழ்ந்தது. (நான் இவர்களை மன்னர்கள் என்றே குறிப்பிடுகிறேன். ஃகலீஃபாக்கள் என்று அழைக்கப்படுவதற்கு இவர்கள் தகுதியற்றவர்கள்.) சுமார் இருநூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திய முஃதஸிலாக்களின் காலத்தில் பல்வேறு வாதங்களும் விவாதங்களும் நடைபெற்றன. இந்தப் பகுத்தறிவுவாத சிந்தனைப் பள்ளியின் காரணமாக முஸ்லிம்களிடையே சிந்தனைரீதியான பிரிவினைகள் ஊடுருவின.
தோற்றம்
முஃதஸிலாவின் தோற்றம்குறித்து மூன்று வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இமாம் ஹசன் ஆட்சியைத் துறந்து முஆவியாவிடம் அதிகாரத்தை ஒப்படைத்த சூழலில் முஃதஸிலா தோன்றியதாக ஒரு கருத்து நிலவுகிறது. அந்த காலகட்டத்தில்தான் அரசியல் நடவடிக்கைகளைத் துறந்து தத்துவம், கொள்கை, கோட்பாடுகள் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்தும் அறிவுசார்போக்கு உருவானது. அன்று அம்மக்கள் அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டிருக்கக் கூடும். இத்தகைய சூழலில் முஃதஸிலா சிந்தனைப் பள்ளி தோன்றியது என்று சிலர் கூறுகின்றனர்.
இன்னும் சிலர், முர்ஜிஆ சிந்தனை தோன்றிய அதே சூழலில் முஃதஸிலாவும் தோன்றியது என்று கூறுகின்றனர். அதாவது, உஸ்மான் ஆட்சி காலத்தில் சஅது இப்னு அபீ வக்காஸ், அப்துர் றஹ்மான் இப்னு அபீபக்ரு, அப்துல்லாஹ் இப்னு உமர் போன்றோர் வெளிப்படுத்திய ‘அரசியல் சார்பின்மை’ என்ற பின்னணியில் முஃதஸிலா சிந்தனை தோன்றியதாகக் கூறுகின்றனர்.
மூன்றாவதாக, வாஸில் இப்னு அதா எனும் அறிஞரின் காலத்தில் இந்த இஸ்லாமிய அறிவுசார் சிந்தனைப் பள்ளி தோன்றியது என்ற கருத்தும் நிலவுகிறது. தெற்கு ஈராக்கின் பஸ்றா நகரில் வாழ்ந்த ஹசனுல் பஸ்ரியின் மாணவரான வாஸில் இப்னு அதா, முதல் முஃதஸிலாவாக கருதப்படுகிறார். அங்குள்ள ஒரு பள்ளிவாசலில் ஹசனுல் பஸரீ வகுப்பு (ஹலகா) நடத்திக்கொண்டிருந்தார். அன்றைய சூழலில் பள்ளிவாசல்கள்தாம் பள்ளிக்கூடங்களாகவும் கல்வி நிறுவனங்களாகவும் திகழ்ந்தன. கல்வி கற்க விரும்பும் மக்கள் பள்ளிவாசலுக்குச் சென்று, அங்கு அறிஞர்கள் நடத்தும் வகுப்புகளில் தம்மை இணைத்துக்கொள்வர். இவ்வாறாக ஹசனுல் பஸரீ பிரபலமான அறிஞராகவும் வாஸில் இப்னு அதா அவருடைய பிரபலமான மாணவராகவும் இருந்தார்.
அப்போது — மீண்டும் — பெரும்பாவங்கள் செய்த முஸ்லிம்களை (முர்தகிபுல் கபீறா) எப்படி வகைப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது. ‘இவர்களை நிராகரிப்பாளர்கள் என்று அழைக்க முடியாது; அதே சமயம் இவர்கள் நம்பிக்கையாளர்களும் கிடையாது’ என்று வாஸில் இப்னு அதா கூறினார். இவ்வாறு, இவர்கள் விஷயத்தில் தன் ஆசிரியரோடு கருத்துவேறுபாடு கொண்டு அவரிடமிருந்து பிரிந்து தனியாக வகுப்புகளை நடத்தத் தொடங்கினார். (இதிலிருந்து, அன்று பல கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும் பள்ளிவாசல்களில் கருத்துச் சுதந்திரம் இருந்ததை அறிய முடிகிறது.)
“பெரும்பாவங்களைச் செய்யும் முஸ்லிம், நம்பிக்கையாளருக்கும் (முஃமின்) நிராகரிப்பாளருக்கும் (காஃபிர்) இடைப்பட்டவர் ஆவார்” என்று வாஸில் இப்னு அதா கூறினார். இஃதிஸால் என்றால் ‘விலகிச் செல்லுதல்’ என்று பொருள். ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த வகுப்பிலிருந்து விலகிச்சென்று தனியாக வகுப்பு நடத்தியதால், இவரைப் பின்பற்றியவர்கள் ‘முஃதஸிலா’ என்று அழைக்கப்பட்டனர்.
முஃதஸிலா கோட்பாடு பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருந்தது: ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்), நீதி (அத்ல்), சுவனம்குறித்த இறைவாக்கு மற்றும் நரகம்குறித்த அவனது எச்சரிக்கை (அல்வஅது வ அல்வஈது), பெரும்பாவம் செய்த முஸ்லிம்குறித்த இடைப்பட்டநிலை (மன்ஸில பைனல் மன்ஸிலதைன்) மற்றும் நன்மையை ஏவி தீமையை தடுப்பது (அம்ரு பில் மஃரூஃப் வ நஹிய அனில் முன்கர்).
கோட்பாடு
முஃதஸிலாக்கள் ஈராக்கில் அதிகமாக இருந்தனர். அவர்களுள் பலர் பாரசீகப் பின்னணி கொண்டவர்களாகவும் இருந்தனர். எனவே, அறபுகள் போலன்றி அறிவுசார் செயல்பாடுகளில் ஏற்கனவே ஈடுபட்டிருந்ததோடு அவர்கள் யூத, கிறிஸ்துவர்களோடும் தொடர்பில் இருந்தனர். பிற்காலத்தில் அவர்கள் தங்கள் சிந்தனைப் பள்ளியைத் தோற்றுவித்து தத்துவ விவாதங்களில் ஈடுபட்டபோது அவர்களின் இந்தப் பின்னணி அவர்களுடைய இஸ்லாமியத் தத்துவ வியாக்கியானங்களில் செல்வாக்குச் செலுத்தியது.
முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய பல்வேறு கோட்பாட்டுரீதியான வித்தியாசங்களுள் ஒன்று ‘அல்லாஹ்வை பார்க்க முடியுமா?’ என்ற கேள்வி தொடர்பானது. அறபியில் இது ‘ருஃயதுல்லாஹ்’ என்று சொல்லப்பட்டது. இன்று ஒருசில இடங்களில் இதுகுறித்து பேசப்படுகிறது என்றாலும் முஸ்லிம்களை பிளவுபடுத்தும் அளவுக்கு இது வளரவில்லை. இதற்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம். ஆனால், அன்று இது தொடர்பாக முஸ்லிம்கள் மத்தியில் தீவிர வாதப் பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. முஃதஸிலாக்கள், ‘அல்லாஹ்வைப் பார்க்க முடியாது’ என்றனர். மேலும், அல்லாஹ்வின் பண்புகள் அவனுடைய சாராம்சத்திலிருந்து தனித்து நிற்பதில்லை என்றனர். அதாவது, ‘அவை இரண்டும் ஒன்றுதாம்; வெவ்வேறானவை அல்ல’ என்றனர்.
மேலும், அவர்கள் ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்றனர். கிட்டத்தட்ட கிறிஸ்தவத்தின் திரித்துவக் கொள்கையால் ஏற்பட்ட பிரச்சினைகள்போல இதுவும் பிற்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. கிறிஸ்தவர்கள், ‘கடவுள் ஒருவர், ஒன்றில் மூவர் அல்லது மூன்றில் ஒருவர்’ என்று நிகழ்த்திய விவாதங்கள் அவர்களை பல பிரிவுகளாகக் கூறுபோட்டது. அதுபோலவே முஸ்லிம்களும் ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்றும் ‘படைக்கப்படாதது’ என்றும் நிகழ்த்திய விவாதங்கள் அவர்களை பிளவுபடுத்தும் அளவு தீவிரத்தன்மை கொண்டிருந்தது. எனினும், அது அந்த அளவுக்கு வளர்ந்து செல்லவில்லை. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! எப்படியாயினும் — தங்கள் கருத்துகளால் மக்கள் மத்தியில் சிலசமயம் செல்வாக்கோடும் சிலசமயம் செல்வாக்கு இழந்தும் காணப்பட்ட — முஃதஸிலாக்கள், ‘குர்ஆன் படைக்கப்பட்டது — அல்குர்ஆனு மஃக்லூக்’ என்றனர்.
சட்டவியல் அறிஞர்கள், நபிமொழி வல்லுநர்களுடன் முரண்பட்ட முஃதஸிலாக்கள்
முஃதஸிலாக்களுக்கும் — அபூ ஹனீஃபா, ஷாஃபிஈ போன்ற — சட்டவியல் அறிஞர்கள் (ஃபுகஹா) மற்றும் நபிமொழி வல்லுநர்களுக்கும் (முஹத்திஸீன்) இடையே ஒருவிதப் போட்டி நிலவியது. அவர்களுக்கிடையே சொற்போரே நிகழ்ந்தது எனலாம். சட்டவியல் அறிஞர்களும் நபிமொழி வல்லுநர்களும் முஃதஸிலாக்களை ‘இஸ்லாத்துக்கு முந்தைய தத்துவங்கள், யூத- கிறிஸ்தவ இறையியல் கொள்கைகள் ஆகியவற்றின் தாக்கத்துக்கு அளவுக்கதிகமாக ஆட்பட்டவர்களென’க் கருதினர். எனவே, இந்த இருதரப்பினருக்கும் இடையே ஒருவித இறுக்கம் இருந்துகொண்டே இருந்தது.
மறுபுறம், இஸ்லாத்தின் மையநீரோட்ட அறிஞர்கள் இஸ்லாத்தைப் புரிந்து, அதற்கு விளக்கம் அளித்த விதத்தில் முஃதஸிலாக்கள் பிரச்சினை கண்டனர். குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் ஆய்வுசெய்வதில் சிந்திக்கும் ஆற்றலுக்கு சட்டவியல் அறிஞர்களும் நபிமொழி வல்லுனர்களும் அளித்த முக்கியத்துவத்தைவிட முஃதஸிலாக்கள் அதிக முக்கியத்துவம் அளித்தனர்.
முஃதஸிலாக்கள் குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் பகுத்தறிவு அடிப்படையில் விளக்கம் அளித்ததால், சிலவேளை முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லிம் எதிர்ப்பாளர்களும்கூட, முஸ்லிம்களாகத் தோன்றி முஃதஸிலாக்களின் போர்வையில் வாதங்களை முன்வைத்து இஸ்லாத்தைக் கீழறுக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட நிகழ்வுகளையும் வரலாற்றில் காண முடிகிறது. எனவே சில சட்ட அறிஞர்கள், ‘முஃதஸிலாக்கள் நம்பகமற்றவர்கள்’ என்றும் ‘வழக்குகளில் அவர்களின் சாட்சியத்தை ஏற்கக் கூடாது’ என்றும் கூறினர். இன்னும் சிலர், ‘முஃதஸிலா தலைவரை (இமாம்) பின்பற்றி நடைபெற்ற தொழுகை செல்லுபடியாகாது. அவர் பின்னால் நின்று தொழுதவர்கள் மீண்டும் தொழுக வேண்டும்’ என்றனர். இன்னும் சிலரோ அவர்களை ‘ஸனாதிகா’ என்றனர். ‘ஸனாதிகா’ என்பது மத நிந்தனையாளர்களைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். ஆக, முஃதஸிலாக்கள் மத நிந்தனையாளர்களாகக் கருதப்பட்டனர்.
முஃதஸிலாக்களும் ஷீஆக்களும்
சில இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள், முஃதஸிலாக்களை ஷீஆக்கள் என்றும் கருதுவதில்லை; சுன்னீகள் என்றும் கருதுவதில்லை. அவர்கள் முஃதஸிலாவை சுயாதீனக் கொள்கைகொண்ட தனி சிந்தனைப் பள்ளியாகப் பார்க்கின்றனர். இன்னும் சிலர், முஃதஸிலாக்களை ஷீஆக்கள் என்றும், ஆனால் அவர்கள் தங்களை அப்படி வெளிக்காட்டிக்கொள்வதில்லை என்றும் கூறுகின்றனர். வாஸில் இப்னு அதாவும் இமாம் ஸைதும் — கிட்டத்தட்ட சொந்த சகோதரர்கள்போல — நெருக்கமாக இருந்தனர். இதைக் காரணம் காட்டி, ஆதிக்க வர்க்கம் முஃதஸிலாக்களை ‘ரகசிய ஷீஆக்கள்’ என்று குற்றம் சாட்டியது.
மேலும், ஷீஆ சிந்தனை தன்னுள்ளேயே தேறிய மெய்யியல் போக்கைக் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்றைக் கவனிக்கும்போது அதற்கான காரணம் விளங்குகிறது. முஆவியா அறபு தேசியவாதத்தைத் தூண்டி அறபிய்யாவில் வாழ்ந்தவர்களைக் கிளறினார். இமாம் அலீ நடத்திய அரசியல் எதிர்ப்பியக்கத்தின் ஆதரவாளர்கள், பெரும்பாலும் அறபிய்யாவுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவரும் புதிதாக இஸ்லாமிய வட்டத்துக்குள் வந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தலைமுறைகளாகத் தங்களுக்கென கொள்கை, கோட்பாடுகளை வகுத்திருந்த இவர்கள், முஸ்லிம்களாக மாறியவுடன் ஒரே நாளில் அக்கருத்துகள் அவர்களை விட்டும் அகன்றுவிடாது. அவர்களின் சிந்தனை, எழுப்பும் கேள்விகள் என எல்லாவற்றிலும் அதன் தாக்கம் இருக்கவே செய்யும். எனவே, சுன்னீ சிந்தனையை விட ஷீஆ சிந்தனையில், இன்று ‘மெய்யியல்’ என்று அறியப்படும் அறிவியல் ஆழமாக வேரூன்றி உள்ளது.
கண்மூடிப் பின்பற்றல்
முஃதஸிலாக்களை பிற முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது எது? அவர்கள், கண்மூடிப் பின்பற்றும் கொள்கையான ‘தக்லீது’ கொள்கையை ஆதரிக்கவில்லை. தக்லீது என்பது பெரும்பான்மை மக்களான சராசரி முஸ்லிம்கள் குர்ஆன், நபிமொழி, இமாம்களின் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைக் கற்று, அவற்றிலிருந்து தம் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள்குறித்த சட்டதிட்டங்களைப் பெறமுடியாதவர்களாக இருப்பின், அவர்கள் ஏதாவது ஒரு அறிஞரைப் பின்பற்றி அவர் சொல்வதைக் கேட்டு நடக்கும் முறை ஆகும். இந்த அணுகுமுறை முஸ்லிம்களின் சிந்தனைத் திறனை மட்டுப்படுத்தும் என்று கூறி முஃதஸிலாக்கள் இதை ஆதரிக்கவில்லை.
முஃதஸிலாக்கள் கூறியவற்றின் சாராம்சத்தை உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். சராசரி முஸ்லிம்களிடம் ‘நீங்கள் முடிவெடுப்பதற்கு வேறு ஒருவரைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினால் அது அவர்களை மனதளவில் சோம்பலாக்கிவிடும். முஸ்லிம்கள் சோம்பேறிகளாக இருக்க முடியாது. சிந்திப்பது நம் கடமை. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களின் பகுத்தறிவுக் கூறுகளுக்கும் முக்கியத்துவம் அளித்த முஃதஸிலாக்கள் கண்மூடிப் பின்பற்றுவதை எதிர்த்தனர்.
எனினும், சில சூழ்நிலைகளில் சில முஸ்லிம்கள் பல்வேறு காரணங்களால் போதுமான புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாகவோ, பகுத்தறிய இயலாதவர்களாகவோ, ஆய்வுகள் மேற்கொள்ள முடியாதவர்களாகவோ இருப்பின், அத்தகைய சூழல்களில் மட்டும் விதிவிலக்காக கண்மூடிப் பின்பற்றுவது அனுமதிக்கப்பட்டது என்றனர். எனினும், இது தினசரி இஸ்லாமியச் சமூக வாழ்வின் மையநீரோட்டத்தின் அங்கமாகிவிட முடியாது என்று தெளிவாகக் கூறினர்.
வளர்ச்சிப் பின்னணி
முஃதஸிலா என்பது முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய முதல் பெரும் அறிவுசார் செயல்பாட்டின் தொடக்கம் என்பதை நினைவில் கொள்க. இந்த இஸ்லாமிய அறிஞர்களும் மேதைகளும் மேதாவிகளும் இன்றைய ஈராக்கின் தெற்குப் பகுதியிலுள்ள பஸ்றா, கூஃபா, பகுதாது நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கு அவர்களுக்கு பல்வேறு மெய்யியல் கொள்கைகள்), மதங்கள், சித்தாந்தங்கள் ஆகியவற்றைன் அறிமுகம் கிடைத்தது. இந்த மதங்களும், சித்தாந்தங்களும், கொள்கைகளும் பிரத்தியேகமாக தமக்கே உரிய பகுத்தறிவுக் கோட்பாடுகளைப் பெற்றிருந்தன. இவர்களின் வாதங்களுக்கு முஸ்லிம்கள் எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.
அல்லாஹ்விடமிருந்து வந்த நேர்வழியையும், தூதரையும், வேதத்தையும் பெற்றுள்ள முஸ்லிம்கள், அப்பகுதியில் வாழும் ஸொரொஸ்ட்ரிய (Zoroastrianism) சமயத்தவரையோ, (ஸொரொஸ்ட்ரியமும் கிறிஸ்தவமும் கலந்த சமயமான) மானி சமயத்தவரையோ (Manichean), கிறிஸ்துவர் அல்லது யூதரையோ சந்திக்க நேர்ந்தால் அவர்களோடு தங்கள் கொள்கைகளை விவாதிக்க வேண்டும் என முஃதஸிலாக்கள் விரும்பினர். பிற கொள்கைகளைச் சார்ந்தவர்களிடம் வெறுமனே ஒருசில குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டிவிட்டு கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், அவர்கள் எப்படி அறிவைப் பயன்படுத்தி தங்கள் கொள்கை, கோட்பாடுகளை முன்வைக்கிறார்களோ அதேபோல முஸ்லிம்களும் அறிவைப் பயன்படுத்தி தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்வைப்பதுதான் பொறுப்பான செயல் எனக் கருதினர். ஆக, இந்தச் சுயாதீன பகுத்தறிவுச் சிந்தனைப் பள்ளியை வார்த்தெடுத்ததில் அதன் புவியியல் அமைவிடமும் காரணமாக இருந்தது.
அறிஞர்கள்
கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் முஸ்லிம் பொதுப்புத்தியை ஆக்கிரமித்திருந்த காலத்தில் முஃதஸிலாக்கள் அல்லது இஃதிஸாலீ சிந்தனைப் பள்ளியோடு பல அறிஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டனர். இப்போது அத்தகைய அறிஞர்கள் சிலரின் பெயர்களை அறிந்துகொள்வோம். முதலில் இச்சிந்தனைப் பள்ளியை தோற்றுவித்த வாஸில் இப்னு அதா பஸ்றாவில் வாழ்ந்த மிக முக்கிய அறிஞராகக் கருதப்படுகிறார். இவருடைய பிரபலமான நூல்களில் ஒன்று ‘ஓராயிரம் கேள்விகள்’ (அல்ஃப் மஸ்அலா). அதில் அவர் பல கேள்விகளுக்கு — குறிப்பாக ‘மானிய’ சமயக் கொள்கைகள்பற்றிய கேள்விகளுக்கு — தனக்கே உரிய விதத்தில் பதிலளித்திருப்பார்.
அடுத்து, பகுதாதில் வாழ்ந்த அறிஞரும் மேதையுமான இப்றாஹீம் இப்னு சய்யார் அந்நழ்ழாமீ. இவர் தன்னைச் சுற்றி நிகழ்ந்த வாழ்வின் எதார்த்தங்களை பகுத்தறிவுரீதியாக அணுகுவதற்கு ஏற்ப கோட்பாடுகளை உருவாக்கினார். மற்றொருவர் பிரபல எழுத்தாளரான அல்ஜாஹிஸ் என்று அழைக்கப்படும் அபூ உஸ்மான் அம்ருல் ஜாஹிஸ். ஜாஹிஸ் என்றால் ‘துருத்திக்கொண்டிருக்கும் கண் உடையவர்’ என்று பொருள். அவருக்கு அத்தகைய கண்கள் இருந்ததால் அவர் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கக் கூடும். புலமை வாய்ந்த முஃதஸிலா மேதைகளுள் மற்றொருவர் அபுல் ஹுதைலுல் அல்லாஃப். எதிர்க் கருத்துகளை முறியடிப்பதிலும் தன் கருத்தை முன்வைப்பதிலும் அவர் திறமையுடன் செயல்பட்டார் என்றும், அவரின் உரைகளைக் கேட்டு மட்டுமே (அவருடைய வாழ்நாளில்) 3000 பேர் முஸ்லிம்களாக மாறினர் என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
குர்ஆனும் நபிமொழியும்
இஸ்லாத்தை விளங்குவதற்கும் விளக்குவதற்கும் மெய்யியல் கண்ணோட்டத்தோடு செயல்பட்ட பகுத்தறிவுவாத முஸ்லிம்கள்தாம் முஃதஸிலாக்கள். இதை வேறு வார்த்தைகளில் ‘அவர்கள் இஸ்லாத்தை சிந்தனைமயப்படுத்தினார்கள்’ என்றும் சொல்லலாம். அவர்கள் குர்ஆனியக் கருத்துகளின் அர்த்தங்களையும், அவற்றோடு தொடர்புள்ள மற்றவற்றையும் மிகக் கறாராக பகுத்தறிவின் அடிப்படையில் அணுகினர்.
கோட்பாட்டு அளவில் பார்த்தாலும், அவர்கள் இஸ்லாமியக் கோட்பாடுகளை சிந்தனை மற்றும் பகுத்தறிவுரீதியாகவே அணுகினர். எனினும், சந்தேகமின்றி அவர்கள் குர்ஆனையே அடிப்படையாகக் கொண்டனர். திருக்குர்ஆன்தான் அவர்களின் முதன்மை ஆதாரமாக இருந்தது. அதேசமயம் நபிமொழிகளுக்கு அவர்கள் குர்ஆன் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் தெரிகிறது.
அதாவது, அவர்கள் சில ஹதீஸ்களில் பிரச்சினை இருப்பதாகக் கருதினர். குர்ஆனைச் சிந்தித்து அதன் அடிப்படையில் பகுத்தறிவு அடிப்படையிலான ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருந்த முஃதஸிலாக்கள், சில ஹதீஸ்கள் அதனுடன் பொருந்தாததைக் கண்டனர். எனவே, அவற்றை ஒதுக்கி வைத்தனர். பகுத்தறிவால் உந்தப்பட்ட சில முஸ்லிம்கள் இன்றும்கூட இந்த அணுகுமுறையை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். எனினும், இதன் பொருள் அவர்கள் நபிமொழிகளுக்கு எதிரானவர்கள் என்பதல்ல.
தயவுசெய்து இவர்களை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். அவர்கள் நபிமொழிகளை ஏற்றுக்கொண்டவர்களே. ஆனால், பிரச்சினையானது நபிமொழி இலக்கியத்திலேயே இருக்கிறது. அவற்றில் சில நபிமொழிகள் அசலாகவும், உண்மையாகவும், நம்பகமான ஆதாரங்களிலிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவையல்லாத வேறுசில நபிமொழிகளும் அவற்றில் உள்ளன. அவை அசல்தன்மை குறைவான, உண்மையற்ற, நம்பத்தகாதவர்களிடமிருந்தும் சந்தேகத்துக்குரிய நபர்களிடமிருந்தும் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே அவர்கள் சில ஹதீஸ்களை எச்சரிக்கையுடன் அணுகினர்.
முஃதஸிலாக்களின் எதிரணியினர்
நாம் ஏற்கனவே கூறியதுபோல, அவர்களில் ஏராளமானோர் எழுத்தாளர்களாகவும், அறிஞர்களாகவும், தத்துவ மேதைகளாகவும் இருந்தனர். வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில் நிலவிய இஸ்லாமிய அறிவுசார் கட்டமைப்பை பார்க்கும்பொழுது ஒரு பக்கம் முஃதஸிலாக்களும், மறுபக்கம் சட்டவியல் அறிஞர்களும் நபிமொழி வல்லுநர்களும் இருப்பதைப் பார்க்கிறோம். இவர்களுள் முஃதஸிலாக்களின் கை மேலோங்கி இருந்தது. அவர்கள் தம் கருத்துகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் கலைச்சொற்களையும் சிந்தனையையும் வளர்த்து வைத்திருந்தனர். இதன் காரணமாக பிற அறிஞர்களைவிட முஃதஸிலாக்கள் தம் கருத்துகளை வெளிப்படையாகவும் ஆணித்தரமாகவும் முன்வைப்பவர்களாக இருந்தனர்.
முஸ்லிம் அல்லாதவர்கள், வெளிநாட்டவர்கள், முஸ்லிம்களாக தங்களை அழைத்துக்கொண்டவர்கள், இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் போன்றவர்களை கையாளும்போது அவர்களுக்கு நிகராக வாதிக்கும் திறமை தேவைப்பட்டது. அதை முஃதஸிலாக்கள் சிறப்பாக வெளிப்படுத்தினர். அவர்களை எதிர்த்தவர்கள்கூட அவர்களின் பேச்சுத் திறமையை மெச்சினர்.
இவ்வாறாக, முஃதஸிலா அறிஞர்கள் அப்பகுதியில் வாழ்ந்த ஸொரொஸ்ட்ரிய, மானி சமயத்தவரை எதிர்கொண்டனர். மேலும், இஸ்லாத்துக்குள் இருந்த சிந்திக்க விரும்பாத, நேரடி அர்த்தங்களை மட்டுமே நம்பிய முஸ்லிம் வகையினரையும் அவர்கள் எதிர்கொண்டனர். இவர்களோடு சேர்த்து அங்கு எஞ்சியிருந்த கிறிஸ்துவ, யூத, பாரசீக, ஹிந்து, கிரேக்க மெய்யியல் கோட்பாடுகளை மட்டுமின்றி இஸ்லாமியச் சட்டவியல் அறிஞர்களையும் ஹதீஸ் துறை வல்லுநர்களையும், அறியாமையில் உழன்ற முஸ்லிம்களையும் — பிற சமயங்களிலிருந்து அவர்கள் கொண்டுவந்த கொள்கைகளையும் — முஃதஸிலாக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரோடும் முஃதஸிலாக்கள் ஒருவித சிந்தனைப் போர் நிகழ்த்தினர் என்று சொல்லலாம்.
மேலும், இன்றைய அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்துக்கு முன்னோடியாக இருந்த அஷாயிறா, மாதுரீதிய்யா சிந்தனைகளையும் அவர்கள் எதிர்த்தனர். அஷாயிறாக்கள் ஹன்பலீ சிந்தனையால் கவரப்பட்டவர்கள். அதேபோல மாதுரீதிய்யாக்கள் ஹனஃபீ சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர்கள். அஷ்அரீ பஸ்றாவைச் சேர்ந்தவர். முஹம்மது இப்னு முஹம்மதுல் மஹ்மூதுல் மாதுரீதி — இன்று மத்திய ஆசியா என்று அழைக்கப்படும் — சமர்கந்தைச் சேர்ந்தவர். முஃதஸிலாக்கள் எந்த அளவுக்கு வாக்குவாதங்களில் ஈடுபட்டனர் என்பதை இது காட்டுகிறது.
இறைவனின் பண்புகள்
முஃதஸிலாக்களை பிற முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிய மற்றொரு அம்சம், இறைவனின் பண்புகள் (ஸிஃபத்) பற்றி அவர்கள் கொண்டிருந்த கொள்கை ஆகும். இதிலுள்ள தத்துவார்த்த கேள்வி இதுதான்: ‘இறைவனின் சாராம்சத்திலிருந்து அவனுடைய பண்புகள் தனித்து நிற்கின்றனவா, அல்லது அவை அவனது சாராம்சத்தின் அங்கங்கள்தாமா?’
பிற முஸ்லிம்கள் ‘ஸிஃபத் மஆனி’ என்று அழைக்கும் இறைப் பண்புகளை முஃதஸிலாக்கள் நிராகரித்தனர். உதாரணத்திற்கு, ‘அல்லாஹ் சக்தியும் சித்தமும் உடையவன், கேட்கின்றவன், பார்க்கின்றவன், பேசுகின்றவன்’ என்று கூறுகிறோம் எனில், இப்பண்புகள் அவனிடமிருந்து தனித்து நிற்கின்றனவா அல்லது அவனோடு ஒன்றி இருக்கின்றனவா என்பதுதான் அது. நாளடைவில் இக்கேள்விகள் முஸ்லிம்களை பிளவுபடுத்தும் அளவுக்கு முற்றி நின்றன. அல்லாஹ்வின் இந்த விவரணங்கள் அனைத்தும் அவனது சாரத்தின் அங்கம் என முஃதஸிலாக்கள் கூறினர்.
எனினும் நம்மைப் பொறுத்தவரை — இக்கேள்விக்கு எப்படி பதிலளித்தாலும் — இது ஒரு கோட்பாட்டளவிலான பிரச்சினைதான் என்றும், முஸ்லிம்களை பிளவுபடுத்தும் அளவுக்கு இது பெரிய பிரச்சினை அல்ல என்றும் கூறுகின்ற அறிவு முதிர்ச்சியைப் பெற்றுள்ளோம் என்றே நினைக்கிறேன். இந்தக் கேள்விகளில் ஒருசார்பு நிலை எடுப்பதற்கு நாம் யார்? உண்மையில், இந்தப் பிரச்சினைகளில் நான் கவனம் செலுத்துவதே இல்லை. நாம் மேலும் முன்னேறிச் செல்லும்முன் இதை தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம்.
அவர்கள் இதற்குச் சான்றாக, அல்லாஹ் தன் தூதர் மூசாவோடு உரையாடிய நிகழ்வைக் கூறினர். ‘மூசாவோடு அல்லாஹ் உரையாடினான் — வ கல்லமல்லாஹு மூசா தக்லீமா’ (4:164) என்று குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அல்லாஹ் தன் வசனங்களை அருளியுள்ளான். நம்மைப் போல அன்றைய மக்களும் இவ்வசனங்களைப் புரிந்துகொள்ள முயன்றனர். ஆக, ‘மூசாவோடு அல்லாஹ் உரையாடினான்’ என்பதை எப்படி புரிந்துகொள்வது?
ஏற்கனவே சிந்தனைவயப்பட்ட முஃதஸிலாக்கள், இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்களின் விளக்கம் இவ்வாறு இருந்தது: ‘அல்லாஹ் தன் சொற்களை ஒரு புதரின் மீது வைத்தான். பின்னர் இயற்கையின் ஏதோ ஒருவகை இயங்கியல்மூலம் அச்சொற்கள் அந்தப் புதரிலிருந்த வெளிப்பட்டன. ஆனால், அல்லாஹ் நேரடியாகப் பேசவில்லை.’ இங்கு புதர் என்று சொல்லும்போது இது பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குர்ஆன் படைக்கப்பட்டதா?
இதன் அடுத்த கட்டமாக, ‘குர்ஆன் படைக்கப்பட்டதா இல்லையா’ என்ற கேள்வி எழுந்தது. அல்லாஹ்தான் சொற்களைப் படைத்து, ஏதோ ஒரு வகையில் புதரில் வைத்து, அதிலிருந்து அவை வெளிப்பட்டன என்பதால் குர்ஆனும் படைக்கப்பட்டதுதான் என்று முஃதஸிலாக்கள் கூறினர். ஆரம்பத்தில் இக்கருத்து மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஒருசில முஸ்லிம்கள் — குறிப்பாக சிந்தனைக்கு முக்கியத்துவம் அளித்த முஸ்லிம்கள் — இதைக் கவனித்தார்கள் என்றாலும் இக்கருத்து பிரபலமடையவில்லை.
ஹிஜ்ரீ 212ஆம் ஆண்டு அப்பாசிய்யா மன்னர் மஃமூன் முஃதஸிலா கொள்கையை ஏற்றுக்கொண்டார். அதுவரையில் ஆதரவற்றிருந்த — அதனால் மக்களின் பரிவைச் சம்பாதித்திருந்த —முஃதஸிலா கொள்கை, அரசாங்கத்தின் உச்சபட்ச அதிகாரியே அதை ஏற்றுக்கொண்ட பிறகு, இஸ்லாமிய அரசின் அதிகாரபூர்வக் கொள்கையாக மாறியது. அதன் பிறகு அப்பாசிய்யா அரசாங்கம் அறிஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து முஸ்லிம்கள் மத்தியிலும் பாகுபாடு காட்டத் தொடங்கியது. அதிகாபூர்வக் கொள்கையான முஃதஸிலா கொள்கையை ஏற்காதவர்களை பணி நீக்கம் செய்தது. அத்தகையவர்களின் சாட்சியங்கள் நீதிமன்றங்களில் செல்லுபடியாகாது என அறிவித்தது. இப்படியாக முஃதஸிலா சிந்தனையை ஏற்காத முஸ்லிம்கள்மீது அதிகாரபூர்வமாகவே பாகுபாடு காட்டப்பட்டது.
இது இத்தோடு நிற்கவில்லை. முஃதஸிலாக்களை கடுமையாக எதிர்த்தவர்கள் மிரட்டலுக்கு உள்ளாயினர். அவர்கள் கொலைகூட செய்யப்படலாம் என்ற அளவிற்கு இது சென்றது. இதற்கு மத்தியில், முஃதஸிலாக்களின் முக்கிய எதிர்ப்பாளராக அஹ்மது இப்னு ஹன்பல் இருந்தார். உண்மையில் அன்று பல எதிர்ப்பாளர்கள் இருந்தபோதிலும் இவர்தான் முஃதஸிலாக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு எதிர்ப்பையும் மீறி பிழைத்திருந்தார்.
முஃதஸிலாக்களை எதிர்ப்பதன் மூலம் இமாம் ஹன்பல் அரசாங்கத்தை எதிர்ப்பவர் ஆனார். இதன் காரணமாக 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார். இரும்பு சீப்பால் தோல் கிழியும் அளவுக்கு சீவப்பட்டார். எனினும், தான் கொண்ட கொள்கையை அவர் கைவிடவில்லை. மக்கள்மீது திணிக்கப்பட்ட அதிகாரபூர்வ கருத்தை எதிர்த்து நின்ற காரணத்தால் அவர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பின்னர் குற்றவாளிகள் நாடு கடத்தப்படுவதுபோல் அவரும் ஒதுக்கி வைக்கப்பட்டார். தன் இறுதிக் காலங்களில் கூட்டுத் தொழுகைகளில்கூட கலந்துகொள்ளாமல் மக்களிடமிருந்து விலகியே இருந்தார். இந்நிலை அவர் இறக்கும்வரை நீடித்தது. முஃதஸிலாக்களுக்கும் சட்டவியலாளர்கள் மற்றும் நபிமொழி வல்லுநர்களுக்கும் இடையே நிலவிய தீவிர வேறுபாடுகளை இது காட்டுகிறது.
‘குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல’ என்று அஹ்மது இப்னு ஹன்பல் தெள்ளத்தெளிவாகக் கூறினார். இது முஃதஸிலாக்களின் கருத்துக்கு நேர் எதிரானது. ஆகவே, இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக நின்றனர். முஃதஸிலாக்களின் கொள்கைப்படி குர்ஆன் படைக்கப்பட்டது; அது ஒரு நிகழ்வு. எனவே, அது — அல்லாஹ்வைப் போலன்றி — தொடக்கமற்ற தொன்மையிலிருந்து (கதீம்) வந்ததல்ல. அல்லாஹ்வுக்கு தொடக்கம் இல்லை. ஆகவே, குர்ஆனுக்கு தொடக்கம் இருக்கிறது என்பது முஃதஸிலாக்களின் கொள்கை.
இவை தத்துவவாதிகள் மற்றும் கோட்பாட்டுவாதிகளுக்கு மத்தியில் மட்டுமே நிகழ்ந்த விவாதங்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பொதுமக்கள் மத்தியிலும் இவற்றின் தாக்கம் இருந்தது. ஒரு சராசரி முஸ்லிமும் கிறிஸ்தவரும் சந்தித்துக்கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த முஸ்லிமைப் பார்த்து “மர்யமின் குமாரர் ஈசாவைப் பற்றி உம் கருத்து என்ன?” என்று கிறிஸ்தவர் கேட்டால் அந்த முஸ்லிமின் பதில் என்னவாக இருக்கும்? ஈசாவைப் பற்றி அல்லாஹ் கூறியதை தன் பதிலாக அவர் சொல்லியிருப்பார். அதாவது
اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ
“நிச்சயமாக மர்யமின் குமாரர் ஈசா மசீஹ் தூதராகவும் அல்லாஹ்வின் வாக்காகவும் இருந்தார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்” (4:171) என்ற வசனத்தின்படி பதிலளித்திருப்பார்.
இப்போது அஹ்மது இப்னு ஹன்பல் சொல்வதுபோல குர்ஆன் (அல்லாஹ்வின் வாக்கு) படைக்கப்பட்டது அல்ல என்று வைத்துக் கொண்டால், ஈசாவும் (அல்லாஹ்வின் வாக்கு) படைக்கப்பட்டவர் அல்ல என்றாகிவிடுகிறது. ஆக, ஹன்பல் தன்னை அறியாமலேயே கிறிஸ்தவர்களின் வாதத்துக்கு வலுச் சேர்ப்பவராகிவிடுகிறார். கிறிஸ்தவர்களின் வாதங்களை நன்கு அறிந்திருந்த முஃதஸிலாக்கள், அவர்கள் குழப்பம் ஏற்படுத்தாமல் தடுக்கும் பொருட்டு, குர்ஆன் படைக்கப்பட்டது என்றனர். இதன்மூலம் அவர்கள் இஸ்லாத்தை தற்காத்தனர். அஹ்மது இப்னு ஹன்பலும் தன் பாணியில் இஸ்லாத்தை தற்காத்தார்.
ஆக, முஃதஸிலாக்களை அசல் ‘மெய்யியல் முஸ்லிம்கள்’ (philosophical muslims) என்று சொல்லலாம். சில அறிஞர்கள் சொல்வதுபோல, அவர்கள் வரம்பு மீறியவர்கள் அல்லர். அவர்கள் எல்லை மீறிச் செல்லவில்லை. அன்றைய சூழல், அன்று எழுந்த கேள்விகள், சந்தேகங்கள், நிலவிய சூழ்ச்சிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிந்தித்துச் செயல்பட்ட முஸ்லிம்கள்தாம் முஃதஸிலாக்கள். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் தமக்கே உரிய பாணியில் அவர்கள் சேவை செய்தனர்.
எனினும், எப்போது அவர்கள் அரசாங்கத்தோடு கைகோர்த்தார்களோ அப்போது பிரச்சினை தொடங்கியது. அதுதான் அநேகமாக அவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. எப்போது அவர்கள் அப்பாசிய்யா அரசாங்கத்தோடு கைகோர்த்தார்களோ அன்றிலிருந்து காற்று அவர்களுக்கு எதிராக வீசத் தொடங்கியது. எல்லா அறிவுஜீவிகள் விஷயத்திலும் நீங்கள் இதைப் பார்க்க முடியும். சில நேரங்களில் அவர்களும் தவறிழைத்து விடுகின்றனர். நாம் எல்லோரும் மனிதர்கள்தாமே! மனிதர்கள் அனைவரும் தவறிழைப்பவர்கள்தாமே!
அஷாயிறா
அடுத்து, அபுல் ஹசனுல் அஷ்அரீ பற்றி பார்ப்போம். இவரை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பஸ்றாவைச் சேர்ந்த இவர் ஹி.260முதல் ஹி.330வரை வாழ்ந்தார். அவரது புகழ்பெற்ற புத்தகத்தின் பெயர் ‘விளக்கம்’ (அல்இபானாஹ்). வாஸில் இப்னு அதாவின் மாணவராக இருந்த அவர், குறிப்பிட்ட காலம்வரை தன் ஆசிரியரோடு இணக்கமாக இருந்தார்; அவரிடமே கல்வி கற்றார். ஆனால், சிறிது காலத்திற்குப் பின் கருத்து வேறுபட்டு சுயமாக ஒரு நிலையை எடுத்தார். தான் பயின்ற பள்ளிக்கும், தன் ஆசிரியர்களுக்கும் எதிராகத் திரும்பினார்.
‘முஃதஸிலாக்கள் இணைவைப்பாளர்களைப் போன்றவர்கள்’ என அஷ்அரீ கூறினார். இறைத்தூதர் காலத்தில், அல்லாஹ்விடமிருந்து வந்த வேதவெளிப்பாட்டை ‘இது வெறும் மனிதச் சொல்லன்றி வேறில்லை’ என்று இணைவைப்பாளர்கள் கூறினர். ஆகவே இப்போது, ‘குர்ஆன் அல்லாஹ்வின் படைக்கப்பட்ட வார்த்தைகளே’ என்று முஃதஸிலாக்கள் சொன்னபோது அவர்களும் மக்காவின் இணைவைப்பாளர்களைப் போன்றவர்களே என அபுல் ஹசனுல் அஷ்அரீ கூறினார்.
அடுத்து, அல்லாஹ்வின் நாட்டம் (மசீயா) குறித்த விவாதங்களிலும் இவர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. குர்ஆனில் ‘அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் நாடமாட்டீர்கள்’ (81:29) என்று ஒரு வசனம் உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல்களை கட்டுப்படுத்தக்கூடியவன் என்றும் அவனே அதற்கு பொறுப்பாளன் என்றும் முஃதஸிலாக்கள் தெளிவாகக் கூறினர். ஆனால் அஷ்அரீயோ, “இல்லை. அல்லாஹ்தான் மனிதனின் செயல்களையும் செய்கிறான்” என்றார். “நாம் ஒரு காரியத்தைச் செய்யும் வாய்ப்பும் சக்தியும் பெற்றிருந்தால் அதை நோக்கித் தள்ளப்படுவோம். எனினும், அச்செயல் செய்து முடிக்கப்பட்ட பின், அல்லாஹ்வும் அதில் ஒன்றியுள்ளான்” என்று அஷாயிறாக்கள் கூறினர். இது நுணுக்கமான தத்துவ விவாதமாக அன்று அரங்கேறியது.
மனிதனின் நாட்டத்தில் அல்லாஹ்வின் நாட்டம் இணைந்துள்ளதா, அல்லது அவை இரண்டும் தனித்தனியே இயங்குகின்றனவா என்பதே இங்குள்ள கேள்வி. இதை பின்வரும் உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம்: ஒரு முஸ்லிம் ஒரு பொருளைத் திருடிவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இதுபற்றி முஃதஸிலாக்கள் அஷாயிறாக்களிடம், “மனிதச் செயல்களில் அல்லாஹ் ஒன்றியுள்ளான் என்று கூறுகிறீர்களே. எனில் அல்லாஹ்வும் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளானா? இதற்கு உங்கள் பதில் என்ன?” என்று கேட்பர். அஷாயிறாக்கள் “இல்லை. இச்செயலுக்கு அல்லாஹ் பொறுப்பாக மாட்டான். மனிதன்தான் இதற்குப் பொறுப்பானவன். ஆனால், அல்லாஹ் அச்செயலை சாத்தியமாக்குகிறான். மனிதன் தானாக அச்செயலை சாத்தியமாக்க முடியாது. அக்காரியத்தைச் செய்யும் வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துகிறான், அல்லது அதை அனுமதிக்கிறான் எனில் அல்லாஹ் அதைச் செய்கிறான் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது” என்று கேட்டனர். இப்படியாக இந்த விவாதம் நீண்டுகொண்டே சென்றது.
‘கீழ்ப்படியாத நம்பிக்கையாளர்கள் நரகத்துக்குச் செல்வர்’ என்றும், ‘அவர்கள் அங்கே நிரந்தரமாகத் தங்குவர்’ என்றும் முஃதஸிலாக்கள் கூறினர். இதற்கு பதிலளித்த அஷ்அரீ, “அப்படியெனில், ‘இணைவைப்பல்லாத மற்ற பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவான்’ (4:116) என்ற வசனத்தை எப்படி விளக்குவீர்கள்?” என்று கேட்டார். “மன்னித்துவிடுவதாக அல்லாஹ் கூறிய பிறகும், பாவம்செய்த ஒரு முஸ்லிமை நீங்கள் எப்படி நரகத்துக்கு அனுப்ப முடியும்?” என்று அஷ்அரீ கேட்டார்.
‘அல்லாஹ்வுக்கு கை, கண், முகம் போன்ற உறுப்புகள் இல்லை’ என்று முஃதஸிலாக்கள் கூறினர். அஷ்அரீயோ ‘இல்லை! அல்லாஹ்வுக்கு இவையனைத்தும் உண்டு’ என்றார். இதற்கு ஆதாரமாக குர்ஆனின் பின்வரும் வசனங்களை முன்வைத்தார். ‘மிக்க வல்லமையும் கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும் (55:27)’, ‘இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு சிரம் பணிவதைவிட்டும் உன்னைத் தடுத்தது எது? (38:75)’, ‘நம் கண் முன்னிலையில் மிதந்து சென்றுகொண்டிருந்தது (54:14)’.
இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் நிறுவனப்பட்ட கொள்கையாக அஷ்அரிய்யா மாறிவிட்டது. அஷ்அரிய்யா பற்றிப் பேசும்போது அது அபுல் ஹசன் அஷ்அரியால் தொடங்கப்பட்டது என்பதும், அச்சமயத்தில் இது அஷ்அரிய்யா என்று அழைக்கப்பட்டது என்பதும் உண்மைதாம் என்றாலும் நாம் முன்னர் சொன்ன விஷயங்களில் அன்றிலிருந்து இன்றுவரை அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் அபிப்பிராயங்களையே இது பிரதிபலிக்கிறது. ஆகவே, இப்போது — 1400 வருடங்களுக்குப் பிறகு — இந்த வேறுபாடுகளை முஃதஸிலாக்களுக்கும் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்றே சொல்லலாம்.
அல்லாஹ், தான் அரியணையில் அமைந்தான் என்று கூறுகிறான். இதை நேர்பொருளில் புரிந்துகொள்ளக் கூடாது என்று முஃதஸிலாக்கள் கூறினர். ஆனால் அஷாயிறாக்களோ, விளக்க முடியாததாக இருப்பினும் இதை நேர்பொருளில்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். மேலும், அவர்கள் அல்லாஹ்வின் சக்தி, அவனது ஞானம் போன்றவற்றை அவற்றின் நேர்பொருளில்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்றனர். (இவர்களுடைய கொள்கையின் சாரத்தை உங்களுக்குச் சொல்ல முற்படுகிறேன்).
மேலும், அஷாயிறாக்கள் ‘கிப்லாவைச் சேர்ந்த யாரையும் நிராகரிப்பாளர்கள் என்று நாங்கள் சொல்ல மாட்டோம்’ என்றனர். அதாவது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒருவர் விபச்சாரம், திருட்டு, மது அருந்துதல் போன்ற எதைச் செய்தாலும் அவர்களை நிராகரிப்பாளர்கள் என்று சொல்ல முடியாது என்றனர். இதுவும் முஃதஸிலா கொள்கைக்கு மாற்றமாக இருந்தது. இன்றைய முஸ்லிம் உலகையும் அஷ்அரீ சிந்தனையையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும், அபுல் ஹசன் அஷ்அரீ கூறியதாவது: “இறைத்தூதரின் பரிந்துரையின் (ஷஃபாஅத்) பேரில் அல்லாஹ் மனிதர்களை நரக நெருப்பிலிருந்து மீட்டெடுப்பான் — இன்னல்லாஹ யுஃக்ரிஜு மினன்னாரி கவ்மன் ஃபீ ஷஃபஅதி முஹம்மது (ஸல்).” இவை அவருடைய வார்த்தைகள். மேலும், மண்ணறையின் வேதனையை தான் நம்புவதாகக் கூறினார் (வ நுஃமினு பி அதாபில் கப்ரு). தொடர்ந்து, நம்பிக்கை (ஈமான்) என்பது சொல்லும் (கவ்ல்) செயலும் (அமல்) பிணைந்தது என்றும், அது அதிகரிக்கவும் குறையவும் கூடியது என்றும் கூறினார்.
மேலும் அபூபக்ரு உமர், உஸ்மான், அலீ ஆகியோர் இறைத்தூதருக்குப் பிறகு வந்த தலைவர்கள் என்றார். (இங்கு தலைவர் என்பதற்கு இமாம் என்ற பதத்தை அவர் பயன்படுத்துகிறார்). ஹி.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாகில்லானீ மற்றும் ஹி.6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கஸ்ஸாலி ஆகியோர் பிரபல அஷ்அரீ அறிஞர்கள் ஆவர்.
இமாம் ஸாதிக்கின் நிலைப்பாடு
முஃதஸிலா, அஷ்அரிய்யா, நாம் முன்பே பார்த்த ஜபரிய்யா, கதரிய்யா என்ற இவை அனைத்திலும் இமாம் ஸாதிக்கின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கலாம்: இமாம் ஸாதிக்கும் வாஸில் இப்னு அதாவும் சம காலத்தோர். அவர்கள் இருவருமே ஹி.80இல் பிறந்தவர்கள். ஆனால், வாஸில் இப்னு அதாவின் ஆயுள்காலம் குறைவாக இருந்தது. இமாம் ஸாதிக்கைவிட 16 ஆண்டுகள் முன்னர் அவர் இறப்பை எய்தினார்.
இமாம் ஸாதிக் பற்றியும் முஃதஸிலா சிந்தனைப் பள்ளிகள் பற்றியும் — அன்றும் இன்றும் — ஆய்வுசெய்த பல இஸ்லாமிய அறிஞர்கள் அவை இரண்டிலும் ஒற்றுமையைக் காண்கின்றனர். அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் கோட்பாடுகளை அஷ்அரிய்யா பிரதிநிதித்துவம் செய்கிறது என்று ஏற்கனவே கூறினோம். அதேபோல — குறிப்பான சில விஷயங்களில் வேறுபட்டாலும் — பொதுவாகப் பார்த்தால், இமாம் ஸாதிக்கையும் பன்னிருவர் (இஸ்னா அஷரிய்யா) சிந்தனைப் பள்ளியையும் முஃதஸிலா பிரதிநிதித்துவம் செய்கிறது என்று கூறலாம். எனினும் பன்னிருவரின் கோணத்திலிருந்து பார்த்தால், தாங்கள் முஃதஸிலாக்களைப் பின்பற்றுபவர்கள் அல்லர் என்றும், முஃதஸிலாக்களே இமாம்களின் செல்வாக்குக்கு உள்ளானவர்கள் என்றும், அதன் அடிப்படையிலேயே முஃதஸிலாக்கள் தங்கள் கொள்கைகளை வகுத்துக்கொண்டனர் என்றும் கூறுகின்றனர்.
எனவே, குர்ஆன் படைக்கப்பட்டது-படைக்கப்படாதது, சாராம்சமான பண்புகள், வினைப் பண்புகள் போன்றவற்றைப் பற்றி பேசுகையில் இமாம் ஸாதிக்கின் கருத்து கிட்டத்தட்ட முஃதஸிலாக்களுடையது போனறதே என்று சொல்லலாம்.
முஃதஸிலாக்களும் கிரேக்க மெய்யியலும்
சிலர் முஃதஸிலா இயக்கம் கிரேக்க மெய்யியல் கோட்பாடுகளில் இருந்து தோன்றியது என்றும் பிளேட்டோ, சாக்ரடீஸ் போன்ற அறிஞர்களின் படைப்புகள் அறபியில் மொழிபெயர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இது வளர்ந்தது என்றும் கூறுகின்றனர். மேலும், இஸ்லாத்துக்கு வெளியிலிருந்து இவர்கள் தோன்றினர் என்றும், இது இஸ்லாத்தின் உள்ளார்ந்த கோட்பாடு அல்ல என்றும் கூறுகின்றனர். இது உண்மையல்ல.
இது கீழைத்தேயவாதிகளின் வரலாற்றுக் கண்ணோட்டம் ஆகும். அன்று இஸ்லாம் சந்தித்த சவால்களுக்கு உள்ளார்ந்த பதிலாக தோன்றியதுதான் முஃதஸிலா கொள்கைகள். முஸ்லிம்களின் முன்னால் பல்வேறு சமய, மெய்யியல் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் அவற்றுக்கு பகுத்தறிவுரீதியில் பதிலளிக்க வேண்டிய தேவை இருந்தது. அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் மேன்மையான செய்திகளைப் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு அவ்வாறு பதிலளிப்பது சாத்தியமானதே. ஆகவே, அங்கு இருந்த கிரேக்க, ரோம, பாரசீக, ஹிந்து, எகிப்தியக் கொள்கைகளோடு தொடர்பிலிருந்த முஸ்லிம்கள் மற்றவர்களின் சமய, மெய்யியல், அரசியல் கேள்விகளுக்கு தகுந்த பதிலை கொடுக்க வேண்டியிருந்தது.
இவர்கள் அனைவரும் தங்கள் அறிவு மேன்மையை முஸ்லிம்கள் மீது நிலைநாட்ட முயன்றனர். ஆரம்ப காலங்களில் அறபிய்ய தீபகற்பத்திலிருந்து வந்த முஸ்லிம்களிடம் மெய்யியல் கோட்பாடுகளோ, இறையியல் கொள்கைகளோ இருக்கவில்லை. அவர்களிடம் இருந்ததெல்லாம் ஒன்றுதான்: தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே இருந்த எளிய உறவு. அதை அப்படியே புரிந்துகொண்டு அதே அளவில் செயல்படுத்தவும் தொடங்கினர்.
எனவே, காலங்காலமாக விவாதங்களையும் பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு விரிவான கோட்பாடுகளை உருவாக்கி வைத்திருந்த மக்களோடு முஸ்லிம்களுக்கு தொடர்பு ஏற்பட்டபோது, அவர்களும் —இஸ்லாமிய வட்டத்துக்குள் இருந்துகொண்டே — பகுத்தறிவுரீதியான விளக்கங்களை முன்வைக்கத் தொடங்கியது இயல்பானதே. இதைத்தான் முஃதஸிலாக்கள் நேர்மையோடும் நல்லெண்ணத்தோடும் செய்தனர்.
மேலும், அன்று முஸ்லிம்களாக மாறியவர்கள் கிறிஸ்தவ, யூத, கிரேக்க, பாரசீக, எகிப்தியப் பின்னணி கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஏற்ப இஸ்லாத்தை வளைத்துக்கொள்ளும் அபாயம் இருந்தது. இவ்வாறு நிகழ்வதை முஃதஸிலாக்கள் தடுத்தனர். அம்மக்களின் பழைய கொள்கைகளில் இஸ்லாம் தொலைந்துவிடாமல் பாதுகாத்தனர். முஃதஸிலாக்கள் மற்றெல்லாரையும் விட அதிகமாக பாரசீகர்களோடு வாக்குவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். எப்படிப் பார்த்தாலும், முஃதஸிலா என்பது எந்த வகையிலும் பிற கோட்பாடுகளின் நீட்சி அல்ல.
முஸ்லிம்களில் இருந்த கீழ்ப்படியாதவர்கள் நிரந்தரமாக நரகத்தில் இருப்பர் என்று முஃதஸிலாக்கள் கூறினர். ஃகவாரிஜ்களும் இதைத்தானே சொன்னார்கள். இது விஷயத்தில் இருவருக்கும் ஒற்றுமை இருக்கிறதே. ஆம். இந்த ஒரு விஷயத்தில் இருவருக்கும் ஒற்றுமை இருப்பது உண்மைதான். எனினும், முஃதஸிலாக்கள் ஃகவாரிஜ்களைப் போன்றவர்கள் அல்லர். ஃகவாரிஜ்கள் இஸ்லாமியச் சிந்தனையை விரிவாக்கம் செய்யாமல், எல்லாவற்றிலும் ஒரு தீவிரப் போக்கையே கையாண்டனர். ஆனால், முஃதஸிலாக்கள் அவ்வாறில்லை.
***********
உரைக்குப் பின் இமாம் முஹம்மது அல்ஆஸியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும்
கிறிஸ்தவர்களோடு முஃதஸிலாக்கள் நடத்திய விவாதங்களில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்கனவே பார்த்தோம். இதுதவிர அவர்களுடைய பிற கொள்கைகள் நடைமுறையில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தின?
குர்ஆனில் அல்லாஹ் தன்னைப் பற்றி சொல்கிறான். எடுத்துக்காட்டாக, ‘அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது —யதுல்லாஹி ஃபவ்க ஐதீஹிம்’ (48:10). இதை இயல்பாகப் புரிந்துகொண்டால், அல்லாஹ்வுக்கு கை உள்ளது என்று பொருள்படும். ஆனால், முஃதஸிலாக்கள் இதை நேர்பொருளில் அர்த்தம் கொள்ளக் கூடாது என்றனர். பேச்சு வழக்கில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்றும் இதன் பொருள் ‘அல்லாஹ்வின் ஆற்றல் அவர்களுடைய ஆற்றலைவிட மேலோங்கியிருக்கிறது’ என்றும் இதற்கு விளக்கம் அளித்தனர்.
மற்றொரு வசனம் ‘அன்றைய தினம் இறைவனைப் பார்த்த முகங்கள் பொலிவுற்று இருக்கும் — உஜூஹு யவ்மயிதின் நாளிறா இலா றப்பிஹா நாளிறா’ (75: 22, 23) என்கிறது. ஒரு சராசரி முஸ்லிமின் புரிதல் ‘அல்லாஹ்வை நாம் பார்ப்போம்’ என்றுதான் இருக்கும். அஷாயிறாக்களும் இவ்வாறே கூறினர். இப்போது இருப்பதைவிட பல மடங்கு சக்தி கொண்ட கண்களை நாம் பெற்றிருப்போம் போலும்!
எப்படி இருப்பினும், அஷாயிறாக்கள் ‘ஆம், அல்லாஹ்வைப் பார்க்க முடியும்’ என்றனர். இதை அவர்கள் குர்ஆனின் மற்றொரு வசனத்தோடு ஒப்பிட்டுக் கூறினர். ‘இல்லை! நிச்சயமாக அந்நாளில் அவர்கள் தம் இறைவனிடமிருந்து திரையிடப்படுவார்கள் — கல்லா இன்னஹும் அர்றப்பிஹிம் யவ்மயிதில் மஹ்ஜூபூன்’ (83:15). ‘மஹ்ஜூபூன்’ என்பது பார்வையை மறைக்கும் திரையைக் குறிக்கிறது. இதனைக் கொண்டு, நிராகரிப்பாளர்கள் இறைவனைப் பார்க்க முடியாது என்றும், நம்பிக்கையாளர்கள் அவனைப் பார்க்க முடியும் என்றும் அஷாயிறாக்கள் கூறினர்.
முஃதஸிலாக்கள், இதை அப்படி புரிந்துகொள்ளக் கூடாது என்றனர். அல்லாஹ்வை அவ்வாறு புரிந்துகொள்வதே அவனை மனித அளவுகோல்களுக்குள் அடக்கியதாகிவிடும். ‘அன்று நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நோக்கியவர்களாக இருப்பர். எனினும் காட்சிகள், நாம் உலகில் காணும் காட்சிகள்போல இருக்காது’ என்றனர். அவனை அப்படி கற்பனை செய்வதே அவனுடையதல்லாத பண்புகளை அவனுக்குச் சூட்டுவதாகிவிடும் என்றனர். இப்படியாக அன்று பல விவாதங்கள் நடந்தேறின. காலாகாலத்துக்கும் இந்தப் பிரச்சினைகள் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கத்தான் போகின்றன.
அதேபோல, முதஷாபிஹாத் வகை வசனங்களையும் கூறலாம். அவை பல அர்த்தங்களை வெளிப்படுத்துபவை. இதுகுறித்து விவாதங்களை வளர்த்து சங்கடம் ஏற்படுத்தாமல் ஆக்கபூர்வமான பணிகளை நாம் செய்ய வேண்டும்.
மஃமூனும் பிற அப்பாசிய்யா ஆட்சியாளர்களும் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதற்கு உள்நோக்கம் ஏதும் இருந்ததா? முஃதஸிலாக்களால் அப்பாசிய்யாக்களுக்கு எவ்வித அரசியல் எதிர்ப்பும் — அதனால் அச்சுறுத்தலும் —இருக்கவில்லை என்பது காரணமா?
முஃதஸிலாக்கள், மஃமூனுக்கு முன்னிருந்த அப்பாசிய்யா அரசாங்கத்தை எதிர்க்கத்தான் செய்தனர். எனினும், அது போர்க்குணமிக்க எதிர்ப்பாக இல்லாமல் தத்துவார்த்த எதிர்ப்பாக இருந்தது. மஃமூன் ஆட்சிக்கு வந்ததும், முஃதஸிலாக்களை ஆதரித்தது மட்டுமின்றி, அதையே அரசின் அதிகாரபூர்வ கொள்கையாகவும் அறிவித்தார். அவரே ஒரு முஃதஸிலாவாக மாறினார் என்றும் சிலர் கூறுகின்றனர். அக்கொள்கைகளால் அவர் அந்த அளவுக்கு மனநிறைவு அடைந்திருந்தார். தனக்குப் பிறகு வரவிருந்த ஆட்சியாளருக்கு (முஃதஸிம்) எழுதிய கடிதத்தில் கூட — மரண சாசனத்தைப் போல —அரசாங்கக் கொள்கையாக முஃதஸிலா கொள்கையையே தொடருமாறு உற்சாகமூட்டினார்.
மஃமூன், ஹாரூன் அர்றஷீதின் மகனாவார். ஹாரூன் அர்றஷீதுக்கு ஒரு அறபு மனைவியும் ஒரு பாரசீக மனைவியும் இருந்தனர். மஃமூனின் சகோதரரான அமீன், அறபு மனைவிக்குப் பிறந்தவர். மஃமூன் பாரசீக மனைவிக்குப் பிறந்தவர். இந்தப் பின்னணியில் இதை நாம் அந்தக் காலத்துக்கே சென்று புரிந்துகொள்ள முயல்வோம்.
அன்று முஸ்லிம்களுக்குள்ளாகவும், பாரசீகர்கள் போன்ற பிறரோடும் பல விவாதங்கள் நடைபெற்றன என்று முன்பே பார்த்தோம். முஃதஸிலாக்கள் அத்தகையவர்களிடம் இஸ்லாத்தை விளக்கி, விரிவான புரிதலை ஏற்படுத்தி அதை தற்காத்து நின்றனர். இவை அனைத்திலும், முஃதஸிலாக்களின் சிறப்பான செயல்பாட்டை, பாரசீகப் பின்னணியிலிருந்து வந்த மஃமூன் புரிந்துகொண்டார். அவர்கள் இஸ்லாத்துக்கு ஆற்றிய இந்தப் பங்களிப்பால் தனிப்பட்ட அளவில் கவரப்பட்டார். எனவே, அவர்களை ஆதரிக்க விரும்பினார்.
எனினும், முஃதஸிலாக்கள் அப்பாசிய்யா அரசாங்கத்துடன் கைகோர்த்த போது, அவர்கள் வீழ்ச்சியடையத் தொடங்கினர்.
இறுதியாக
நாம் ஏற்கனவே அரசியல் சிந்தனைப் பள்ளிகளைப் பற்றி பார்த்தோம். அதன் நீட்சியாக மற்றொரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நான் பேசப் போகும் விஷயம்பற்றி யாரும் இன்று விவாதிப்பதில்லை. இதுபற்றி பேசும்போது நம்மிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும் நான் கவனிக்கிறேன். அரசியல் சிந்தனையின் எந்த அணியைச் சார்ந்தவர்களாக இருப்பினும் நாம் முக்கியமாக எழுப்ப வேண்டிய கேள்வி இதுதான்: ‘தனக்கு முன் இருந்த மூன்று ஃகலீஃபாக்களையும் இமாம் அலீ ஏற்றுக்கொண்டாரா இல்லையா?’ இதற்கு பதில் ‘ஆம்’ என்றால், அதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? மாறாக, இதற்கு பதில் ‘இல்லை’ என்றால், அதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?
மக்கள் ஒருசார்புநிலை எடுக்க உந்தப்படுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்களின் பிறப்பே அந்தச் சார்புநிலையில்தான் நிகழ்கிறது. அதை மட்டுமே அறிந்து வைத்துள்ள அவர்கள், தாம் நேர்வழியில் இருப்பதாக நம்புகிறார்கள். அதைத் தாண்டி மற்ற முஸ்லிம்களின் கருத்து என்ன என்று தெரிந்துகொள்ள அவர்கள் முயற்சி எடுப்பதில்லை. இரு அணிகளிலும் நல்ல கூறுகளும் உள்ளன; இரு அணிகளிலும் தவறுகளும் உள்ளன. இவை இரண்டும் ஒன்றுசேர்ந்துதான் இன்றைய முஸ்லிம்களாக நாம் உருவாகியுள்ளோம்.
அடுத்து உமரின் ஒரு கூற்றின் பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன். எல்லா வரலாற்று நூல்களிலும், எல்லா ஹதீஸ் நூல்களிலும் இது காணக் கிடைக்கிறது. எனினும், முஸ்லிம்கள் இதை வெளிப்படையாகப் பேசுவதில்லை. அவர் கூறியதாவது, “அபூபக்ருக்கு அளிக்கப்பட்ட விசுவாசப் பிரமாணம் (பைஅத்) ஒரு தனித்துவமான நிகழ்வு. அதன் பாதக விளைவுகளிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாத்தான். இன்று ஒருவர் அதுபோன்ற ஒன்றைச் செய்ய முற்பட்டால் அவரை தடுத்து நிறுத்துங்கள் — இன்ன பைஅத அபூபக்ரின் கானத் ஃபல்தா வகல்லாஹு ஷர்றஹா ஃபமன் ஆத இலா மிஸ்லிஹா ஃபக்துலூ”.
தயவுசெய்து உங்கள் நிலைப்பாட்டை இறுக்கமாக்கிக்கொள்ள முயலாதீர்கள். மற்ற முஸ்லிம்கள் — உங்களோடு கருத்து வேறுபடும் முஸ்லிம்கள் — இதுபற்றி எப்படி சிந்திப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம், ஒட்டகப் போரின் போது யார் தொழுகையை முன்நின்று நடத்துவது என்பதுகுறித்து தல்ஹாவுக்கும் ஸுபைருக்கும் இடையே ஏற்பட்ட போட்டி. அப்போரில் மர்வான் இப்னு ஹகம் தல்ஹாவை கொன்று பழி தீர்த்ததாக நம்பகமான அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இச்செய்தியில் சதித்திட்டம் கலந்துள்ளது என்று சிலர் நினைக்கின்றனர். எனினும், இந்த வரலாற்று நிகழ்வுகள்குறித்து சிந்திக்க வேண்டுகிறேன். உங்களுக்காக நான் சிந்திக்கப் போவதில்லை.
மற்றொரு நிகழ்வின்போது ஒருவர் இமாம் அலீயிடம் “நீங்கள் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு ஏன் அனைவரும் பிரிந்து கிடக்கிறார்கள். அபூபக்ரும் உமரும் இருந்தபோது இவ்வாறு நிகழவில்லையே?” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த அலீ, “ஏனெனில் அபூபக்ரும் உமரும் என்னைப் போன்ற முஸ்லிம்களை வழிநடத்தினர். நானோ உங்களைப் போன்றவர்களை வழிநடத்துகிறேன்” என்றார்.
எனினும், சில முஸ்லிம்கள் பிற முஸ்லிம்களோடு இணங்கிப்போகும் அளவுக்கு தாராள மனம் படைத்தவர்கள் அல்லர் என்பதை நான் அறிவேன். ஆனால், இந்தச் சொற்பொழிவுகளின் முடிவில், இங்கிருந்து கலைந்து செல்லும் நீங்கள், எந்த இஸ்லாமியக் கோட்பாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பினும், பிற முஸ்லிம்களை ஒழித்துக்கட்டும் எண்ணம் கொண்டவர்களாக அன்றி அவர்களை உறுதிப்படுத்துபவர்களாக, ஒருவருக்கொருவர் பலம் சேர்ப்பவர்களாக மாறுவீர்கள் என நம்புகிறேன்.
நம்மிடையே வாழும் சந்தேகப் பிராணிகளுக்காக பின்வரும் செய்தியை வாசித்துக் காட்டுகிறேன்: றவ் அஷ் ஷைஃகுல் முஃபீத் அனில் இமாம் அஸ்ஸாதிக் (அலை), அன்னஹு பலஃகா றசூலல்லாஹ், அன் கவ்மின் மின் குறைஷ் அன்னஹும் காலூ அய்யறா முஹம்மதுன் அன்னஹு அஹ்கமல் அமற ஃபீ அஹ்லி பைதி வலா இன் மதா லனஸிலன்னஹ அன்ஹும் வலி நஜல்ஹ ஃபீ ஸிவாஹும்.
இமாம் ஸதிக் கூறியதாக ஷைஃகு முஃபீத் அறிவிப்பதாவது, “குறைஷிகள் பின்வருமாறு கூறியதாக இறைத்தூதருக்கு ஒரு செய்தி வந்தது: “ஆட்சி அதிகாரத்தை தன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டதாக முஹம்மது நினைக்கிறாரா? அவர் இறந்தவுடன் நாங்கள் அதைக் கைப்பற்றி அவரல்லாத பிறரிடம் ஒப்படைப்போம்”. ஆதார நூல்: அல்அமாலீ, பக்கம்: 113.
இங்கு நான் குறிப்பிட விரும்பும் மற்றொரு அரசியல் செய்தி என்னவெனில், சிலர் நினைப்பதுபோல முஆவியாவுக்கு எதிரான அரசியல் இயக்கம் ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டதாக இருக்கவில்லை. அவருக்கான எதிர்ப்பு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் றஹ்மான் இப்னு அபீபக்ரு, ஆயிஷா, சஅது இப்னு அபீ வக்காஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், கைஸ் இப்னு சஅது இப்னு உபாதா, அலீயின் நேசர்கள் என பல திசைகளிலிருந்து வந்தது.
வெள்ளிக்கிழமைப் பிரசங்கங்களில் இமாம் அலீயை சபித்து நிந்தனை செய்ய வேண்டும் என முஆவியா அதிகாரபூர்வமாகவே கட்டளையிட்டார். பிரபல இஸ்லாமிய வரலாற்று நூல்களில் கூட இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும், முஸ்லிம்கள் இதன் பின்னணியைப் புரியாதவர்களாகவே உள்ளனர். பெருநாள் தொழுகையின் போது வழக்கமாக தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்தப்படும். அப்படிச் செய்தால் சில மக்கள் இமாம் அலீ சபிக்கப்படுவதை கேட்காமல் கலைந்து சென்றுவிடுவார்கள் என்று அஞ்சி, வழக்கத்தை மாற்றி முதலில் உரை நிகழ்த்த வேண்டும், அதற்குப் பிறகுதான் தொழுகை நடத்த வேண்டும் என்றும் உமையா அரசாங்கம் அறிவித்தது. இத்தனைக்குப் பிறகும் முஆவியாவை ஃகலீஃபா என்று அழைப்பது தகுமா?
தமிழில்: ஜுந்துப்
(நன்றி: மெல்லினம்)
ஆங்கிலத்தில்: Islamic History Al Mu’tazilah