கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விழித்தெழுமா மக்கள் மனசாட்சி?

Loading

[இந்நாட்டில் சிறுபான்மையினர் — குறிப்பாக முஸ்லிம்கள் — மீதான வன்முறையும் அவர்கள் கொல்லப்படுவதும் தினசரி செய்திகள். ஆம், அவை எவரும் கேட்டுவிட்டு கடந்துவிடும் செய்திகள், அவ்வளவுதான். இப்போது, இங்கு அரசு இயந்திரமும் அதில் கூட்டு சேர்ந்து கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கும் இடையில் மௌனமாக நாம் இருந்தோமெனில், அவனைத் தாக்கியது குச்சியோ துப்பாக்கியோ அல்ல; அது நாம்தான். ஏனென்றால், முதல் தாக்குதலிலேயே நாம் அதை தடுத்திருந்தால் இரண்டாவது தாக்குதல் நிகழ்ந்திருக்காது அல்லவா? இந்திய வரலாற்றில் மரங்களைக் காப்பதற்குத் தோன்றிய மக்கள் இயக்கமான சிப்கோ (Chipko) போல, முஸ்லிம்களைக் காப்பதற்கு தன்னெழுச்சியான ஒரு மக்கள் இயக்கம் தோற்றம் பெறுமா எனும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறது இக்கட்டுரை.]

ஆகஸ்ட் 20 அன்று மும்பையில் மரணமடைந்த 90 வயது முதியவர் குல்ஸார் ஆஸ்மியின் ஜனாஸா தொழுகையில் (மரணமடைந்தவர்களுக்கு நிறைவேற்றப்படும் தொழுகை) நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு விடுதலை அடைந்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும், தற்போது சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினரும் ஆவர். இவர்களின் விடுதலையிலும் வழக்கு விசாரணையிலும் ஆஸ்மியின் பங்களிப்பு இருந்ததே அவர்களை அவரின் இறுதித் தொழுகைக்கு கொண்டு வந்திருந்தது.

ஜம்மியத்தே உலமாயே ஹிந்த் அமைப்பில் பல்லாண்டுகள் பணியாற்றிவந்த ஆஸ்மி, சமூக — மத அமைப்பாக அடையாளம் காணப்பட்ட அவ்வியக்கத்தை சட்டரீதியாகப் போராடும் அமைப்பாக மாற்றியமைத்ததில் முக்கியப் பங்காற்றியவர். 2006இல் மூன்று வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 30க்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் தங்களின் நிலைகுறித்தும் தாங்கள் வழக்குகளில் தவறாக கைது செய்யப்பட்டது குறித்தும் ஜம்மியத் அமைப்பிற்கு கடிதம் எழுதினர். பயங்கரவாத வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்வதற்கான குல்ஸார் ஆஸ்மியின் பயணம் அப்போதுதான் தொடங்கியது. நீதிக்கான இந்த பயணத்தைத் தொடங்கியபோது அவரின் வயது 74!

மரணிக்கும் சமயத்தில் ஜம்மியத்தின் சட்டக்குழுவுடன் இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 75 நபர்களினதும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 125 நபர்களினதும் வழக்குகளை ஆஸ்மி நடத்தி வந்தார். கீழே விழுந்து தலையில் அடிபட்ட காயத்தின் காரணமாகவே அவரின் மரணம் நிகழ்ந்தது. கீழே விழுவதற்கு முந்தைய தினம்வரை ஜம்மியத் அலுவலகத்தில் அப்பாவிகளின் விடுதலைக்காக அவர் பணியாற்றி வந்ததாக உடன் இருந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அநீதியும் அக்கிரமமும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் குல்ஸார் ஆஸ்மி போன்ற சில நபர்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கைக் கீற்றுகளாகத் தென்படுகின்றனர். குல்ஸார் குறித்துப் பேசும்போது மற்றுமொரு ஆஸ்மியை குறித்தும் நாம் கட்டாயம் பேசியாக வேண்டும். அவர்தான் வழக்குரைஞர் ஷாஹித் ஆஸ்மி. மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு, அவுரங்காபாத் ஆயுத வழக்கு, 2006 மாலேகான் வழக்கு, கட்கோபர் குண்டுவெடிப்பு வழக்கு எனப் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு, அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவிகளுக்காக வாதாடியவர். இவர்களைப் போன்று நீதிக்காக குரல் எழுப்பும் போராளிகளை அக்கிரம சக்திகள் அவ்வளவு எளிதாக விட்டுவிடுவதில்லை.

ஆம், பிப்ரவரி 11, 2010 அன்று தனது அலுவலகத்தில் இருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டார் ஷாஹித் அஸ்மி. சோட்டா ராஜனின் ஆட்களால் இவர் கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்பாவிகளுக்கான சட்டப் போராட்டத்தை குல்ஸார் ஆஸ்மி தொடங்கிய ஆரம்ப நாள்களில் அவருக்கு உறுதுணையாக இருந்த நபர்களில் முக்கியமானவர் தான் ஷாஹித் ஆஸ்மி.

‘தன்னலம் பாராமல் உழைப்பவர்கள்’ என இத்தகையவர்களை உலகம் விவரிப்பது வழக்கம். ஆனால், ‘தன்னலம் பாராமல்’ என்ற இந்த அடையாளத்திற்குள், தனது உயிரையும் உடமையையும் உடலையும் பாராமல் அவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதை நாம் ஏனோ விளங்கிக்கொள்வதில்லை. பாதிக்கப்பட்டவர்கள்மீதான கரிசனை என்று இவர்களின் சேவையைச் சுருக்கி விட முடியாது. வெறும் அனுதாபம் மட்டும் இருந்திருந்தால் அக்கிரமங்களை கண்டும்காணாமல் செல்லும் ஆயிரக்கணக்கானவர்கள்போல் இவர்களும் சென்றிருப்பார்கள். அக்கிரமமும் அநியாயமும் வீதியில் ஆட்டம் போடும்போது வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு இவர்களும் அமைதியாக அனுதாபம் தெரிவித்துவிட்டு அமைதியாகி இருந்திருப்பார்கள்.

அனுதாபத்தையும் கடந்து நீதியின் மீதான தேட்டமே இவர்களை இந்த பாதைக்குக் கொண்டுவந்தது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். குல்ஸார் ஆஸ்மி, ஷாஹித் ஆஸ்மி போல் நீதிக்கான களத்தில் இன்னும் ஏராளமான நபர்கள் பயணித்தனர், பயணித்துக் கொண்டிருக்கின்றனர். வஞ்சிக்கப்படும் தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடுபவர்கள், சுரண்டப்படும் பழங்குடியின மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள், கருப்புச் சட்டங்களை எதிர்த்து களம் காண்பவர்கள், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக எப்போதும் சிந்தித்துச் செயலாற்றுபவர்கள், மனித உரிமைகளுக்காக மல்லுக்கட்டுபவர்கள் எனப் பலரையும் இதில் குறிப்பிடலாம்.

இவர்களில் சிலர் குல்ஸார் ஆஸ்மிபோல் இயற்கை மரணத்தைச் சந்திக்கின்றனர்; சிலரோ ஷாஹித் ஆஸ்மி போல் அமைதியாக்கப்படுகின்றனர். சிலர் ஸ்டேன் சுவாமி போல் சிறையிலேயே மரணிக்கின்றனர்; பலரோ பல்லாண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கின்றனர். ஆனால், எந்த மக்களின் நலனுக்காக இவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்தார்களோ அந்த மக்களே இவர்களின் சிறைவாசம்குறித்தோ, மரணம்குறித்தோ அறியாமல் இருப்பது ஒரு விதத்தில் கொடுமைதான். இருந்தும் நீதிக்கான பயணத்தில் இணைபவர்கள் தொடரத்தான் செய்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்வதற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அத்துடன் சுரண்டல்களும் தொடங்கின. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் சுற்றுச்சூழல் சூறையாடப்பட்டது. பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காக காட்டில் வளர்ந்த மரங்களை வெட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியபோது, அம்மரங்களை காப்பதற்காகத் தொடங்கப்பட்ட மக்கள் இயக்கமே சிப்கோ இயக்கம் (Chipko movement).

கங்கை நதியின் தோற்றுவாயில் அமைந்துள்ள மண்டல் என்ற கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் அமைந்துள்ள பேட்மிட்டன் ரேக்கட் தயார் செய்யும் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஏலத்தில் வழங்கியது. பண்ணை அமலாக்கத்திற்காக அந்த மரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அம்மக்களின் கோரிக்கையாக இருந்தது. உள்ளூர் வெகுஜன மக்களின் தேவைக்காக காடுகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த அரசாங்கம், தெலைதூரத்தில் உள்ள பெருநிறுவனத்தின் வணிக நோக்கத்திற்காக ஏலத்தில் கொடுத்தது. அரசாங்கத்தின் இந்த அநீதியான போக்கே அம்மக்களின் எதிர்ப்பிற்குப் பின்னணியாக அமைந்தது.

அரசுக்கெதிரான இப்போராட்டங்களில், வெட்டவிடாமல் மரங்களைக் கட்டியணைத்துக் கொண்டனர் அம்மக்கள். எனவே, மரங்களை வெட்டவந்தவர்கள் வேறுவழியின்றித் திரும்பிச் சென்றனர். இதற்கு முன்னரும் பலவகையான போராட்டங்கள் அதற்கெதிராக நடத்தப்பட்டாலும் 1973 மார்ச் மாதம் நடத்தப்பட்ட இவ்வகையான போராட்டமே சிப்கோ இயக்கமாக வலுப்பெற்றது.

நம் நாட்டில் செயல்படும் சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கு உந்துசக்தியாக சிப்கோ இயக்கம் விளங்கியது. காடுகளைக் காப்பதற்கு ஏனைய பகுதிகளிலும் மக்கள் இதே வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இப்போது நம் நாட்டில் சிப்கோ இயக்கம் போல இன்னுமொரு புதிய இயக்கம் தோற்றம்பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு மாட்டிறைச்சியை வைத்திருந்தான் என்று கூறி வீடு புகுந்து ஒருவனை அடித்துக் கொல்ல முடிகிறது, இஸ்லாமிய அடையாளங்களும் பெயர்களும் ஒருவனை கொலை செய்ய போதுமானதாக இருக்கிறது, மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை நெடுஞ்சாலைகளில் மறித்து ஓட்டுநர்களை அடித்து நொறுக்க முடிகிறது, சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பள்ளிச் சிறுவனை கோரமாக வெட்ட முடிகிறது, சாதிப் பெருமையை பறைசாற்ற சக மனிதனின் வாயில் மலத்தை திணிக்க முடிகிறது. இப்பட்டியலைத் தொடர்ந்தால் பக்கங்கள் போதாது.

ஆனால் அதைவிடவும் கவனத்திற்குரியது, இந்த அக்கிரமங்கள் அனைத்தும் நிகழும்போது சுற்றி இருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான். அன்று மரங்களைக் காப்பதற்காக அம்மக்கள் அவற்றைக் கட்டியணைத்து காப்பாற்றியதைப் போல் இன்று சக மனிதனைக் காப்பதற்கு மக்கள் முன்வருவார்களா? குல்ஸார்கள் மற்றும் ஷாஹித் ஆஸ்மிகளின் எண்ணிக்கை பெருக வேண்டிய அவசியம் முன்னெப்போதை விடவும் இப்பொழுது அதிகமுள்ளதே. அநீதி இழைக்கப்படுபவனை கட்டியணைப்பதுடன் அநீதி இழைப்பவனின் கரங்களை தடுத்துநிறுத்தும் கடமையும் தமக்கு உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.

ஆனால், இவை அனைத்தும் நேர்மையாக நீதியை நிலைநாட்டும் விதத்தில் இருக்க வேண்டுமே அல்லாது நிழற்படங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதற்காக இருக்கக் கூடாது. சமீபத்தில் முஸஃப்பர் நகர் பள்ளிக்கூடமொன்றில் ஒரு முஸ்லிம் மாணவனை சக மாணவர்களை வைத்து அடிக்கச் செய்த ஆசிரியை ஒருவரின் செயலை அனைவரும் கண்டோம். முஸ்லிம்கள் மீதான வெறுப்பை அந்த ஆசிரியை மறைக்கவில்லை. மேலும், தனது செயலுக்காக வெட்கப்படவில்லை என்றும் வெளிப்படையாகவே கூறினார். சம்பவம் நடைபெற்று சில நாள்கள் கழித்து அடிபட்ட மாணவனையும் அடித்த மாணவனையும் கட்டியணைக்கச்செய்து ‘எல்லாம் நன்றாகவே இருக்கிறது’ என்று நிரூபிக்க சிலர் முயன்றனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சட்டரீதியாக நீதியைப் பெற்றுக் கொடுக்காதவரை இங்கே ‘எதுவும் நன்றாக இல்லை’ என்பதை நாம் உணர வேண்டும். ‘என்மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தச் சமூகம் என்ன செய்தது?’ என்ற கேள்வி அம்மாணவனிடம் நிச்சயம் இருந்துகொண்டே இருக்கும். இதற்கும் இது போன்ற எண்ணற்ற பிற கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் கடமை சமூகத்திற்கு இருக்கிறது.

துணைநின்றவை:

  1. How Gulzar Azmi Helped Wrongly Implicated Terror-Accused Fight for Justice Across India, Sukanya Shantha, The Wire, 22 August 2023.
  2. நுகர்வெனும் பெரும் பசி, ராமச்சந்திர குஹா, தமிழில்: போப்பு, 2012, எதிர் வெளியீடு.

Related posts

Leave a Comment