bulldozer politics tamilகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் அழகியலும் இந்து தேசியக் களியாட்டமும்

Loading

அதற்கு மறுபடியும் மதம் பிடிக்கிறதா என்பதை உறுதிசெய்துவிட்டு அவ்வாறு நடக்கவில்லையெனில் வீட்டுக்குத் திரும்பச் சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்பொழுதுதான் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மக்களை நான் கண்ணுற்றேன். அதுவொரு பெருங்கொண்ட கூட்டம், குறைந்தது இரண்டாயிரம் பேர் கொண்ட அந்தக் கூட்டம் ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்துகொண்டே இருந்தது. பளப்பான வண்ணங்களைக் கொண்ட உடைகளின் மேலேயிருந்த அவர்களது அந்த மஞ்சள் முகங்களைப் பார்த்தேன். இதை வேடிக்கைப் பார்க்கும் அவர்களது முகங்களெல்லாம் சிரிப்போடும் கிளர்ச்சியோடும் காணப்பட்டன.

ஒரு மாய மந்திரவாதி ஏதோ வித்தை காட்டப்போகிறான் என்பதைப் போல அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஆனால் அந்த மாயாஜாலத் துப்பாக்கி என் கைகளில் இருந்ததால் நான் இப்பொழுது அவர்களுக்கு வேடிக்கை பார்க்கத் தகுந்தவனாக இருந்தேன். அந்தக் கணம் நான் அந்த யானையைச் சுட்டாக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் படர்ந்தது…

– ஜார்ஜ் ஆர்வெல், ’யானையைச் சுடுதல்’

எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலின் இந்தக் கதை நிகழும் இடம் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழிருந்த அன்றைய பர்மா ஆகும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் உள்ளூர் குடிகளுடன் தொடர்பாடல் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற வகையிலான ஒரு நடுத்தர அலுவலராக அவர் பணியாற்றிக்கொண்டிருந்த வேளை நடந்த இந்தச் சம்பவத்தையே மேலே விவரிக்கிறார். இரண்டாயிரம் பேருக்கு மேல் அந்தக் களத்தில் நிரம்பியிருந்தாலும் யாரும் யாரோடும் எதுவுமே பேசிக்கொள்வதில்லை என்பது இந்த விவரணையில் கவனம் செலுத்தவேண்டிய பகுதி.

யானையைக் கொல்ல வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதங்கள் நடைபெறுவதில்லை, செயல்பாட்டாளர்கள் யாரும் அதற்கு ஆதரவாகவோ எதிராகவோ ஒரு பொதுக் கருத்தை உருவாக்கவில்லை, காலனிய அதிகாரி யானையைச் சுட்டு வீழ்த்தியே ஆகவேண்டுமென்று எந்தக் கோரிக்கையையும் உள்நாட்டு குடிகள் வைக்கவில்லை. ஆனாலும் அங்கு அந்த யானையைச் சுட்டு வீழ்த்தியே ஆகவேண்டுமென்று ஒரு பொதுக் கருத்து உருவாகிவிட்டது என்பது ஆசிரியருக்கு மட்டுமல்ல, அவரது விவரணைகளை வாசிக்கும் நமக்குமே மனதில் தெள்ளெனப் புலப்பட்டுவிடுகிறது.

இங்கு சுட்டுவீழ்த்துவதையும் தாண்டி அங்கு சுடுவதற்கான ஏற்பு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதைக் கண்ணுறுவது அவசியம். அதுபோன்று கதைசொல்லியான ஆர்வெல் ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு சக்தியான காலனிய அரசின் ஒரு உறுப்புதான் என்றாலும் யானையைச் சுட்டு வீழ்த்தி சமூக உடலின் (body politic) பாதுகாப்பையும் அதனது பெருக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கான இறையாண்மை அவரது கைகளுக்கு எவ்வாறு மக்கள் பங்கேற்பின் மூலம் கையளிக்கப்படுகிறது என்பதையும் இதில் கண்ணுற முடியும். சமூக உடலின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கும் உடலாக சற்று நேரத்திற்கு முன்பு மதம் பிடித்திருந்த (ஆனால் இப்போது அடங்கிவிட்ட) யானை ஒன்று இலக்கு வைக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலனிய அதிகாரியின் கைகளுக்கு அவ்வதிகாரம் எவ்வாறு வந்தது என்றால் அந்த யானையைக் கொல்லக்கூடிய ஆற்றல்கொண்ட ‘மாயாஜலத்தன்மை’ கொண்ட துப்பாக்கியை அவர் கைவரப்பெற்றிருப்பதன் மூலம்தான். துப்பாக்கியினுடைய ஆற்றல் காலனிய அதிகாரியின் உடலை கவர்திறன் கொண்ட தலைமையின் (charismatic leadership) சொரூபமாக வடித்தெடுக்கிறது.

இதில் கவனிக்கத்தக்க அம்சமே கருத்தியல் பரப்புரையோ, ஊடகமோ, கருத்துப் பரிமாற்றமோ, ஏன் மொழியின் அவசியமேகூட இல்லாமல், பர்மாவில் உள்ள ஒரு கிராமத்தின் ’சமூக உடல்’ அபாயத்திலிருந்து காக்கப்பட்டு மறு-உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது, அதன் பாதுகாப்புக்குத் தடையாக இருந்ததாக ஒத்தக் கருத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டுவிட்ட அந்த ’இடையூறோ’ அழித்தொழிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடையூறின் அழித்தொழிப்புதான் சமூக உடலின் மறு உற்பத்தியும் ஆகும். இதெல்லாம் பரப்புரையின் எந்தவொரு அவசியமும் இல்லாமல் பரவசத்தின் மூலமே நடத்தி முடிக்கப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் பேர் யானையைப் பார்த்தபொழுது அவர்களது உடலில் அப்படி என்ன உசுப்பிவிடப்பட்டது, அவர்களது ஒட்டுமொத்த உடலையும் தகிக்கச் செய்த பரவச வெப்பத்தின் தீ எங்கு மூட்டப்பட்டது?

சோம்ஸ்கி ஊடகங்கள் எவ்வாறு மக்களிடம் ஏற்பை உருவாக்குகின்றன என்று பேசுவார். ஆனால் இந்தக் கதையில் ‘நாம் பர்மியர்’, அந்த யானை ‘சமூக அபாயம்’, அதை அழிக்கும் வல்லமை அந்தக் கிருபை மிக்க துப்பாக்கியிலும் அதைச் சுமந்துகொண்டிருக்கும் அந்தத் கவர்திறத் தலைவனிடமுமே உள்ளன என்றும் அந்த மக்களை யார் நம்பவைத்தார்கள்? அல்லது எந்த தொழில்-அரசியல் கட்டுமானங்கள் ஆளுகைக் கருத்தியல்களை மேலிருந்து அம்மக்களின் மீது சுமத்தினார்கள்? இங்கு நாம் (மக்கள்) X மதம் பிடித்த யானை (இடையூறு) என்ற அரசியல் முரணின் பொருள்வயமாதலே, அந்த யானையையும் அதன் சர்வரோக நிவாரணியான துப்பாக்கியையும் அதைக் கொண்டு செலுத்தும் வல்லமைகொண்ட தலைவனையும் பார்த்த மாத்திரம் உசுப்பிவிடப்பட்ட கூட்டுப்பரவசத்தில் (collective effervescence) நிகழ்ந்ததுதான்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் குழுமங்கள் கூட்டுப்பரவசத்தில் ஆட்படுவதற்கு அவர்களுக்கு இடையூறாக உண்மையான அபாயங்கள்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, இது நமது சமூக உடலைத் தாக்கும் ஆபத்து கொண்டது என்று நாம் வசதியாக நம்பினாலே போதுமானது. அதனால்தான் அந்த மதம் பிடித்த யானை தணிந்துவிட்ட பின்னரும் – அதாவது அதன் ’அபாயகரத்தன்மை’ வரலாறு ஆகிவிட்ட பின்னரும், நிகழ்காலத்தில் அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் – அது இன்னும் நமக்கு அபாயமானதே என்று நம்ப வேண்டிய அவசியம் இருந்தது. ஏனெனில் அந்த யானையை எதிர்கொண்டதால் உசுப்பிவிடப்பட்ட பரவசம் முழுமையாக மலராது பாதியிலேயே தடைபடுவது பெரும் மனச்சோர்வை ஏற்படுத்துவதாகும். பரவசத்தின் உன்மத்த நடனம் அழித்தொழிப்பிலேயே உச்சம்பெறுகிறது. குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு இறுதியாக புதைக்கப்பட்ட முஸ்லிம் சடலங்களையும் தோண்டியெடுத்து பெட்ரோல் ஊற்றி எரியூட்டியதை வெறும் என்று மட்டும் புரிந்துகொள்ள முடியாது. அது ஒரு உன்மத்த நடனம்.

இப்போது நாம் சில விஷயங்களை இங்கு தெளிவுபடுத்திக்கொள்வது நலன் பயக்கும். அதாவது ‘இந்த யானை அபாயகரமானது’ என்ற நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வது கூட்டுப்பரவசத்துக்கு அத்தியவாசியமானதாகும். இதனால்தான் இந்தக் கூட்டுப்பரவசத்தின் அடிப்படையாக நாம் X மற்றமை என்ற இருமையின் தேவை அகிலப்பொதுமையாகத் தென்படுகிறது.

லக்கானிய உளப்பகுப்பாய்வு ஒரு மனிதன் தனது சுயத்தை எவ்வாறு மற்றமையிலிருந்து உருவாக்கிக்கொள்கிறான் என்பது குறித்துப் பேசுகிறது. மேலும் இந்த மற்றமை என்பது சுய உருவாக்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவும் இருக்கிறது. ஒரே நேரத்தில் சுயத்திற்கு வெளியிலும் அதே நேரம் சுயத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாகவும் இருப்பதே இதன் பண்பாகும். இந்த மற்றமை தனது சுயத்தின் முழுமையான மலர்தலைத் தடுப்பதாக இருக்கிறது என்பதால் அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும்போதே இன்பத்துய்ப்பு (Jouissance) சாத்தியப்படுகிறது.

Jouissance என்ற இந்த ஃபிரெஞ்சு சொல் வலியா, இன்பமா என பிரித்தரிய முடியாததொரு உச்சத்தின் மண்டலத்தைக் (orgasmic zone) குறிப்பதாக உள்ளது. எவ்வாறு நுகர்வுக் கலாச்சாரம் பண்டங்களை வாங்க வாங்க இன்பம் என்ற ஆசையை (desire) வியாபாரமாக்குகிறதோ அதுபோன்று தேசியவாதம், இனவாதம், பாலின வெறுப்பு, மதச் சிறுபான்மை வெறுப்பு போன்ற முன்தீர்மான கருத்தியல்கள் மற்றமையின் மீது திசைவழிப்படுத்தப்படும் இந்த இன்பத்துய்ப்பையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது என்கிறார் மானுடவியலாளர் வில்லியம் மாஸரெல்லா. ஆனால் நுகர்வியத்துக்கு மட்டும் பால் உந்துசக்தியை (libido) ஒரு முதன்மையான அலகாக விவாதிப்பவர்கள் அரசியல் என்று வரும்போது அதை வெறும் பரப்புரை-கருத்தியல்-பிறழ்ந்த பிரக்ஞை குறித்த பிரச்னையாக மட்டும் பார்ப்பது, அரசியல் இன்னும் ஒரு சுதந்திர மானுட எத்தனத்துக்கான ஒரு வெளியைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்ற பழைய விருப்பத்தைக் கைவிடாது இருப்பதையே காட்டுகிறது என்கிறார்.

எவ்வாறு நுகர்வியச் சந்தை மக்களின் பங்கேற்போடு உணர்வுப்பூர்வமாக இயங்குகிறதோ அவ்வாறே அரசியலிலும் மக்கள் உணர்வுப்பூர்வமான பங்கேற்பிலேயே தொழிற்படுகிறார்கள். பலநேரங்களில் தாங்கள் எத்தகைய அரசியல் திட்டங்களுக்குத் தங்களை உணர்வுப்பூர்வமாக ஒப்படைக்கிறார்களோ அது அவர்களது பொருளியல் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானதாக இருந்தாலும் அதில் பங்கேற்கிறார்கள். இங்கு யூசான்ஸ் என்னும் இந்த உபரி இன்பத்துயப்பு பொருளியல்/தர்க்க நலன்களுக்கு அப்பாற்பட்டதாகவும் அவற்றுள் அடைபட மறுப்பதாகவும் இருக்கிறது.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், இந்தியாவில் வர்க்க/சாதி சார்ந்த பின்னடைவில் இருக்கும் மக்கள் முற்றிலும் தங்களது சாதி/வர்க்க நலன்களுக்கும் முன்னேற்றத்துக்கும் எதிராக இருக்கும் மேல்சாதி நலன்களுக்கு அரணமைக்கும் இந்து தேசியவாத அரசியலுக்குச் செல்வதை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும். இது மேலாண்மைக் கருத்தியல்கள் உழைக்கும் வெகுமக்களின் மீது மேலிருந்து சுமத்தப்படுகிறது என்ற ‘பிறழ்ந்த பிரக்ஞை’ என்ற கண்ணோட்டத்துக்கு மாற்றமானதாகும். பிறழ்ந்த பிரக்ஞை என்ற கருத்தாக்கம் மக்களின் அசலான பிரக்ஞையை மூடியிருக்கும் ஒரு பனிப்படலமாக ஆளும் வர்க்கக் கருத்தியல்கள் இருப்பதாக அனுமானிக்கிறது.

ஆனால் லக்கானிய அணுகுமுறையோ எந்தவொரு கருத்தியலும் அதனது ஆற்றலையும் விசையையும் பெறுவதற்கு ‘உபரி இன்பத்துய்ப்புக்கான ஒரு சாத்தியவெளியை’ அது கொண்டிருக்க வேண்டும் என்கிறது. அதாவது, எந்தவொரு கருத்தியலுக்குள்ளும் இருக்கும் ‘சுயம்X மற்றமை’ என்ற இருமையையும், அந்த மற்றமையை தனது சுயம் அனுபவிக்க வேண்டிய முழு இன்பத்துய்ப்பையும் அடைவதற்கு இடையூறாக இருக்கிறது என்றும் கற்பிக்கக்கூடிய அந்த இடம்தான் இந்த உபரி இன்பத்துய்ப்புக்கான ஆற்றலைக் கொண்டியங்கும் கொள்கலனாக இருக்கிறது. இந்த இடம்தான் மக்கள் பங்கேற்பை சாத்தியப்படுத்தும் இடமுமாகும்.

எல்லா வணிக சினிமா நாயகர்களும் இவ்வாறே தங்களது கவர்திறன்மிக்க நாயக பிம்பத்தை திரைநிகழ்த்துதலின் வழி வடித்துக்கொள்கிறார்கள். தமது சுயத்துக்கான இடையூறுகளைக் களைந்து தங்களது முழு இன்பத்தைத் தங்களுக்கு பெற்றுத்தரும் நடவடிக்கையில் உற்பத்தி செய்யப்படும் jouissance-ல்தான் நாயக சினிமாக்களின் செயல்திறன் ஒளிந்திருக்கிறது. நாயகன் சமூகத்தின் மற்றமையான வில்லனின் கையில் தண்டிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாவதெல்லாம் இறுதியில் நாயகன் வில்லனை முற்றிலுமாக வீழ்த்தும்போது இந்த jouissance-ஐ ஒட்டுமொத்தமாகத் திறந்துவிடத்தான். நாயகன் அடிவாங்குவது வரை வலியாக சேகரமாகும் உணர்வுகள் இறுதிக் காட்சியில் திருப்பித் தாக்கும்போது வலியா, இன்பமா என்று சொல்ல முடியாத உச்ச உன்மத்தத்துக்குக் கொண்டு செல்கிறது.

வழக்கமான பிற்போக்கு நாயக சினிமாக்களான காவல்துறை, தேசியவாத ஆதரவு படங்கள் ’சமூக ஒழுங்குகளைக்’ காப்பாற்றக்கூடிய நாயகர்களை உருவாக்கினால், முற்போக்கு நாயக சினிமாக்களோ சமூகத்தின் அடிநிலையிலிருந்து வெளிவரக்கூடிய, சமூகத்தின் ஒழுங்குக்குள் தனது சுயம் முழுமையடையாது தடையாக இருக்கக்கூடிய மேட்டுக்குடி சாதி/வர்க்கத்துக்கு எதிராக வினையாற்றுவதில் வெளிப்படும் jouissance-ஐ உற்பத்தி செய்து நிகழ்த்துகிறது. அதாவது முற்போக்கு திரைப்படங்களில் வெளிப்படும் நாயக பிம்பம் சமூக ஒழுங்கை புரட்டுவதில் உருவாகும் இன்பத்துய்ப்பை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. அதில் சிலவேளை நாயகன் தன்னை பிம்ப அழிப்பு செய்துகொண்டு வெகுமக்களையே நாயக பிம்பத்துக்கான சொரூபமாக நிறுவிவிட்டுச் சென்றாலும் இந்த ஆதாரமான உணர்வுச் சட்டக்கத்தில் எந்த மாற்றமும் நேர்வதில்லை.

ஆக, முற்போக்கு அரசியலோ பிற்போக்கு அரசியலோ எல்லா அரசியலுமே இரத்தமும் சதையுமான உணர்வுகளோடு பங்கேற்கக்கூடிய உணர்வுப்பூர்வமான வேலைத்திட்டங்களே என்பதை நாம் இதிலிருந்து உணரலாம். முற்போக்கு அரசியலுக்கும் பிற்போக்கு முன்தீர்மானக் கருத்தியலுக்கும் உள்ள வேறுபாடு முன்னதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அறத்தோடு கூடிய ஜனநாயக மாண்பு இருக்கிறது என்பதும், பின்னதிலோ வெறுமனே ஆபாசமான வன்முறை மட்டுமே இருக்கிறது என்பதும்தான்.

இரண்டாவதாக, முற்போக்கு அரசியல் இந்து தேசியவாத அரசியலோடு சரியாக சமர் செய்ய வேண்டுமானால் அவர்கள் அழகியல்-பண்பாட்டுத் தளத்தில் ஏன் செயல்பட வேண்டும் என்ற அவசியத்தையும் இதுதான் காட்டுகிறது. மக்களின் உயிர்ப்புமிகு ஆற்றல் ஜனநாயக வாய்க்கால்களை நோக்கி செலுத்தப்படவில்லையானால் அது இயல்பாக இந்து தேசியவாதத்துக்கே இட்டுச்செல்லும். ஏனெனில் இருக்கும் அரசியல்களிலேயே கட்டற்ற இன்பத்துய்ப்புக்கான வாய்ப்பு இந்து தேசியவாத அரசியலில்தான் உள்ளது. மேலும் திரையில் ஜொலிக்கும் கதாநாயகர்கள் அரசியலுக்கும் வருவார்கள் என்று எதிர்பார்ப்பது எப்போதுமே நமது பண்பாட்டுச் சூழலில் இருந்துவருகிறது என்பது சமூக ஒழுங்கைக் காப்பாற்றும் இருவகையான கவர்திறன் தலைமைத்துவங்கள் எவ்வாறு நமது உணர்வுத்தளத்தில் ஒன்றோடொன்று ஊடுபாவுகின்றன என்பதையே காட்டுகின்றது.

இப்போது யோகியின் உபிக்கு வருவோம். ஒருபக்கம் இந்துச் சமூக ஒழுங்கையும் மேன்மையையும் மீட்கொணர வேண்டும் என்ற ’வரலாற்றுப் பொறுப்பையும்’, இன்னொரு பக்கம் அதற்குத் தடையாக இருக்கும் முஸ்லிம்களை மிகவும் வன்மையாகக் கையாளும் திறன் படைத்தவர் என்ற பிம்பத்தையும் கொண்டிருக்கும் திரைக்கதையையொத்த சட்டகமே யோகியின் தலைமைக் கவர்ச்சியை உருவாக்கியளிக்கிறது. ஒரு வெள்ளைக்கார அதிகாரியாக இருந்தாலும் தன் கையில் இருந்த ’மாயாஜலத் துப்பாக்கி’ எவ்வாறு பூர்வகுடி மக்களைத் தன் பின்னால் அணிதிரள வைத்தது என்று ஆர்வெல் சொல்கிறாரோ, அதுபோல யோகி ஆதித்யநாத்தின் கையில் இருப்பது மாயாஜால புல்டோஸர். அதனாலேயே அந்த புல்டோசர் அவரின் தேர்தல் குறியீடாக மாறியது. புல்டோசருடன் நெருக்கமான உளரீதியான பிணைப்பை வெளிப்படுத்துவதன் வழியாக மக்கள் அவரின் தலைமைத்துவத்தில் பங்கேற்கக்கூடிய கொண்டாட்டமாக மாறியது. இங்கு ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவம் என்ற இடத்திலிருந்து பங்கேற்பு என்ற இடத்துக்கு சடுதியாக நகர்வதையும் நாம் காண வேண்டும்.

இந்தியாவில் முதன்மையான அரசியல்-அழகியல் என்பது சிறுபான்மையினர் மீதான சொல்லாடல்-குறியீட்டு-பொருளியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதாக ஆகிவிட்டபொழுது அதை வெறுமனே தலைவர்கள் மட்டும் செய்வதில்லை. தொலைக்காட்சி தொகுப்பாளர்களிலிருந்து, புல்டோசர் ரேலி செல்பவர்களிலிருந்து, பள்ளிவாசல்கள் முன்பு நின்றுகொண்டு முஸ்லிம் வெறுப்பு கோஷங்களை வெளியிடுவதிலிருந்து… இங்கு ஆர்வெல்லின் மாயாஜாலத் துப்பாக்கியை அவரவரது ஆற்றலுக்கும் செயல்திறனுக்கும் ஏற்ப அனைவருமே பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த வகையில் இன்பத்துய்ப்பு என்பது வெகுமக்களிடம் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு ஊடகங்கள்-நிகழ்த்துகள் வழியாக அன்றாடம் எண்ணிடற்கறிய துளிகளாக உற்பத்தி செய்யப்படும் இந்த முஸ்லிம் இடையூறைக் களைய முயற்சிப்பதன் மூலம் பெறப்படும் இன்பத்துய்ப்பு எல்லாவற்றையும் பிடித்து ஒரு பெரிய இயந்திரத்துக்குள் அடைத்து, அதை நாடே பார்க்குமாறு முஸ்லிம் குடியிருப்புகள் மீது ஓடவிடுவது உச்சபட்ச இன்பத்தை சமீபகாலங்களில் அரசியல் பெரும்பான்மைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆர்வெலின் கதையில் கண்காட்சி அல்லது வேடிக்கை (spectacle) என்பது முக்கியமான அம்சம். இந்த புல்டோசர் இடிப்புகளின் அரசியல் செயல்திறன் (efficacy) முஸ்லிம்களைக் கடுமையாக தண்டிப்பதில் மட்டுமில்லை – அவ்வாறு கடுமையாக தண்டிப்பதை நாடு முழுக்க இருக்கும் அரசியல் பெரும்பான்மையினரின் இல்லங்களில் ஒளிபரப்பப்படுவதன் மூலம் – அக்கண்காட்சியின் மூலம் அவர்கள் முகத்தில் மலரும் மகிழ்ச்சியிலும் கிளர்ச்சியிலுமே அதன் செயல்திறன் ஒளிந்திருக்கிறது. அது குறித்து மிகுந்த வெற்றிக்களிப்போடு விவாதம் நடத்தும் தேசிய ஊடகங்களின் பெருமிதக் கூச்சல்கள் ஒட்டுமொத்த தேசத்தின் பெரும்பகுதியின் வீடுகளை நிறைப்பதிலும்தான் அது ஒளிந்திருக்கிறது.

இவ்வாறாக, முஸ்லிம்களைத் தாக்குவதைக் கண்காட்சியாக்குவதன் மூலம் ஒரு பெருங்கொண்ட மக்கள்திரள் சத்தும் சாரமுமற்ற வாழ்வில் ஒரு உந்துசக்தியைப் பெறுவதாக உணர்கிறார்கள். அகத்திலும் புறத்திலும் இருக்கும் வாழ்க்கை பாரத்தைத் தாங்க முடியாத மக்களுக்கு அவர்களது வலியை குணப்படுத்துவதற்குப் பதிலாக வலியை மறத்துப்போகச் செய்யும் போதை வஸ்துகளைக் கொடுத்து பிறழ்ச்சியான இன்பத்திளைப்பில் திளைக்கச் செய்வதற்கு எவ்வகையிலும் மாறுபட்டதல்ல இந்து தேசியவாத அரசியல். போதை கிடைத்துக்கொண்டே இருக்க, முஸ்லிம்கள் வதைபட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு முஸ்லிம் வதை என்பது வெகுமக்கள் திரளின் களியாட்டத்துக்கான தியேட்டராகவும், முஸ்லிம்களின் கண்ணீரும் அங்கலாய்ப்பும் ஃபாசிஸ்ட் போர்னோகிராஃபியாகவும் மாறிவிட்டது. இச்சூழலில், பாதிக்கப்படும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, சமீபத்தில் தனது வீட்டை இந்து தேசியவாத கண்காட்சிக்கு இழந்த அஃப்ரீன் ஃபாத்திமா முன்வைக்கும் கருத்து முக்கியமானது.

முஸ்லிம்களை தண்டிப்பதன் மூலம் இன்பத்துய்ப்பில் திளைப்பது என்பது பரந்துபட்டதாக ஆகிவிட்டது… மேலும் அவர்களுக்கு முஸ்லிம் வீடுகளை நொறுக்குவது, முஸ்லிம்கள் சிறைகளுக்குப் போவதை கண்ணுறுவது, முஸ்லிம்களை அரக்கத்தனமானவர்களாகவும் மாந்தநீக்கமும் செய்து ஒவ்வொரு நாளும் அவர்களை தேசிய ஊடகங்களில் சித்தரிப்பது ஆகியவைதாம் மகிழ்ச்சியாக இருப்பது பற்றிய அவர்களது கருத்தாக ஆகிவிட்டது. அது எல்லாவற்றுக்கும் சேர்த்து நாங்கள் அவர்களுக்கு அதைக் கொடுக்கப்போவதில்லை. நாங்கள் ஒரு சொட்டு கண்ணீரும் சிந்தப்போவதில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பொறுத்தவரையில் சமூகம் பலமாக இருப்பதாகவே நான் உணர்கிறேன். எது வந்தாலும் அதிலிருந்து எங்களை நாங்கள் தற்காத்துக்கொள்வோம்.

குறிப்பு: இன்பத்துய்ப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்ட பகுதி மானுடவியலாளர் வில்லியம் மாஸரெல்லாவின் கட்டுரையான Why Trump So Enjoyable? என்ற கட்டுரையையும் Mana of Mass Society என்ற நூலையும் தழுவி எழுதப்பட்டதாகும்.

(நன்றி: நீலம்)

Related posts

Leave a Comment