psychoanalysis tamilகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நவீன மனநல மருத்துவத்தின் வன்முறை

Loading

நண்பர்களோடு உளநிலை குறித்து உரையாடும்போது “டிப்ரஷனா இருக்கு..” என்பது தவிர்க்க முடியாத வசனமாகிவிட்டது. கவலை, துக்கம் என உளம் சார்ந்த இயல்பான அனைத்து இடர்பாடுகளும் டிப்ரஷனாக மட்டுமே அடையாளம் காணப்படுகிறது. ஏன் தொடர்ந்து அனைவரும் ஒரே விதமாகத் தங்களின் உளநிலையை மொழிப்படுத்துகின்றனர் என்று ஆழ்ந்து பார்த்தால், அதைத்தான் உள மருத்துவர்களும், anti-depressants தயாரிக்கும் நிறுவனங்களும் விரும்புகின்றன என்பது புலப்படும்.

இப்படி மொழி ஒரே விதமாக அமையும்போது உரையாடுவதற்கு வசதியாக அமைந்துவிடுகிறது. உள மருத்துவர்களும் எளிமையாக “உன் செரடோனின் (serotonin) அளவு குறைவாக இருப்பதால்தான் உனக்கு டிப்ரஷன்..” என்று சொல்வதற்கு வசதியாக இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதில் இவர்களுக்கு ஆர்வமில்லை. அதற்கான சட்டகமும் அவர்களிடம் இல்லை. ஒரு பாக்டீரியாவை நீக்குவதுபோல அதை நீக்க முனைகிறார்கள். அவ்வளவுதான். மூளையின் வேதியியல் கூறுகளைக் கொண்டு மட்டுமே மானுட நிலைமையை (human condition) சொல்லிவிட முடியுமா?

நடத்தைகளை நெறிப்படுத்துவதன் மூலம் உளநிலையை சரிசெய்யும் முறையைப் பின்பற்றும் புலனுணர்வு உளவியலுக்கு (Cognitive Psychology) நனவிலி மனது குறித்துக் கடுகளவும் தெரிவதில்லை. நடத்தைகளை நெறிப்படுத்துவது தற்காலிகமாக உதவலாம். ஆனால், உளப் பிரச்னையில் நடத்தை மாற்றம் என்பது மேலோட்டமான வெளிப்பாடு மட்டுமே. அந்த மாற்றத்தைத் தோற்றுவித்த காரணியை அடையாளம் காண புலனுணர்வியல் உளவியலில் இடமில்லை. நவீன அறிவியல்வாதக் கருத்துச் சட்டகங்களைக் கொண்டு மனித மனத்தை நெருங்கவே முடியாது என்பது என் துணிபு.

ஒருவர் இறந்துபோனால் ஏற்படும் துக்கம்கூட டிப்ரஷனாகத்தான் கருதப்படும். இங்குதான் உளப்பகுப்பாய்வின் (Psychoanalysis) கருத்துச் சட்டகங்களும் கருத்தமைவுகளும் நமக்கு உதவியாக இருக்கின்றன. மனிதர்களின் கனவுகளை, இலக்கியங்களை, மொழிதல் பண்புகளை முதன்மைப்படுத்தி மானுட நிலைமையை நோக்கியது உளப்பகுப்பாய்வு. அது உளமருத்துவர் (psychiatrist) போல மாத்திரைகள் பரிந்துரைக்காமல் உளச்சிக்கலுக்கு முகங்கொடுக்க வைக்கிறது. சோகம், பதட்டம், ஏக்கம், சோர்வு, துன்பம், வேதனை இவையெல்லாம் மானுட நிலைமையின் முக்கிய அம்சங்கள். இவற்றை ஒருவர் எதிர்கொள்வதே உளநிலை மற்றும் ஆளுமை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் செயல்.

சமூகப் பதட்டத்தையெல்லாம் (social anxiety) எந்த மாத்திரையும் கொண்டு ‘குணப்படுத்த’ முடியாது என்பதை நவீன மனங்களும் உணர்தல் வேண்டும். நவீன தன்னிலையானது விழுவதற்கும், உடைந்து போவதற்குமே அச்சப்படும் தன்னிலையாக இருக்கிறது. இந்தக் கட்டுரையில் 1917ம் ஆண்டு ஃப்ராய்ட் எழுதிய Mourning and Melancholia கட்டுரையைக் கொண்டு நவீன உளநோக்குச் சிந்தனைகளைக் கேள்விக்குட்படுத்த விழைகிறேன். நம் காலத்தில் ஃப்ராய்டைப் பேசுவது பிற்போக்குத்தனமாகக் கருதப்படலாம். பின்நவீனவாதிகளுக்கு வேறு வேலையே இல்லையென்றால் ஃப்ராய்ட்டை நாலு சாத்து சாத்தி புத்தகம் போட்டுக் கொள்வார்கள். பல பெண்ணியவாதிகளிடமும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

இப்போதுள்ள உளநோக்கு முறைகளான நரம்புளவியல் (Neural Psychology), புலனுணர்வு உளவியல் (Cognitive Psychology), உள மருத்துவம் (Psychiatry) போன்ற அறிவியல் நிர்ணயவாதச் சட்டகங்கள் பல்வேறு உளநிலைகளை ஒருபடித்தானதாக்கி உள்ளது. உளப்பகுப்பாய்வானது சிக்கலான மனித மனத்துடன் உரையாடும் புள்ளிகளை மேற்கூறிய ஃப்ராய்டின் அக்கட்டுரையில் வாசிக்கலாம்.

ஒரு நபரின் இழப்பை ஏற்றுக்கொள்ளும் பாங்கை உருவாக்கித் தரும் செயல்முறையாக இழவு வீட்டில் துக்க அனுசரிப்புச் சடங்குகள் நடைபெறுகின்றன. இறந்த நபரின் நெருங்கிய நண்பர்கள் தம் உளத்தை இறந்தவரோடு ஒன்றித்து நிலைப்படுத்தி (fixated) வைத்திருக்காமல் இருப்பதற்கு இச்சடங்கு முக்கியப் பங்காற்றும். ஒரு நபர் நம்மை விட்டுப் போய்விட்டார் என்பதை சுற்றத்தார் அனைவரும் உறுதிசெய்யும் சடங்கு அது. வரலாறு நெடுக உளநலத்தின் மேம்பாட்டிற்கு துக்க அனுசரிப்பு முக்கியமான செயலாக விளங்கி வந்திருக்கிறது. தனியொரு ஆளாக இச்செயல் மேற்கொள்ளப்படுவதைவிடவும் சமூகத்தோடு சேர்ந்து துக்க அனுசரிப்புச் சடங்குகளைச் செய்யும்போது மேலும் ஆரோக்கியமான உளநிலையை ஏற்படுத்துகிறது. ஆனால், ஃப்ராய்டின் துக்கநிலை சார்ந்த பார்வையில் ‘சமூகம்’ என்ற அலகு (unit) இல்லை. தனிமனிதனின் பிரச்னையாக மட்டுமே அதை அவர் அணுகுகிறார்.

ஒவ்வொரு சமூகத்திலும் பலவகைப்பட்ட இறப்புச் சடங்குகளும், பழக்க வழக்கங்களும் நடைமுறையில் உள்ளன. உதாரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் ஒருவர் இறந்ததிலிருந்து 11ம் நாள் கருமாதிச் சடங்கு, 30ம் நாளில் படையல், ஒரு வருடம் கழித்து ஆண்டுப் படையல் என பலவகைப்பட்ட சடங்கு முறைகளைக் காணலாம். தமிழர்களின் இறப்புச் சடங்கில் பாடப்படும் ஒப்பாரி என்பது ஒப்புச் சொல்லி அழுதல் (ஒப்பு + ஆரி) என்றே பொருள் கொள்ளப்படுகிறது. சுருக்கமாக, ஒரு நபர் அல்லது பொருளின் இழப்பை ஏற்றுக்கொள்வதே துக்கம் அனுசரித்தல் எனலாம். இச்செயல்பாடானது நம் அன்றாட நடத்தையிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும் நாம் இதையொரு நோய்க்கூறாகப் பார்ப்பதில்லை. ஆலோசனைகளுக்காக உள மருத்துவரையும் அணுகுவதில்லை.

அதேசமயம், துக்கநிலையையொத்த (mourning) மெலன்கலியாவை (Melancholia) நோய்க்கூறாகப் பார்க்கிறார் ஃப்ராய்ட். ஃப்ராய்ட்டிய நோக்கில் துக்கநிலை என்பது பொருட்களின் இழப்பு, மனிதர்களின் இறப்பு ஆகியவற்றோடு மட்டும் தொடர்புடையதல்ல. அது இயக்கம், கொள்கை, கருத்தியல் போன்றவற்றுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.

மேலும் இதுகுறித்துப் பேசுவதற்கு முன்னர் மெலன்கலியாவின் வெளிப்பாடுகளென ஃப்ராய்ட் கூறுவனவற்றைப் பார்க்கலாம். அவை பின்வருமாறு: வெளியுலகத்தின் மீதான நாட்டம் இல்லாது போதல், தன் சுய அடையாளத்தையும் சுயமரியாதையையும் மட்டுப்படுத்துவது அல்லது தன்னைத்தானே நொந்துகொள்வது, தன் மீதே பழி சுமத்துவது, இதன் விளைவாகவே தண்டிக்கப்பட வேண்டிய ஆள் என்ற தீவிரமான எண்ணத்தோடு இருப்பது என அனைத்தும் ஒருவரின் இறப்பால் ஏற்படும் துக்கத்தின்போதும் அனுபவமாகக்கூடியவைதாம்.

ஆனால் துக்கநிலையானது, ‘மெலன்கலியா’வைப் போல ஒருவரின் சுய அடையாளத்தையும் சுயமரியாதையையும் குலைத்துவிடுவதில்லை. நமக்கு விருப்பமான ஒருவர் இறந்துபோனாலும் மேற்சொன்னவாறே வெளியுலக நடப்புகளில் நாட்டமில்லாமல் இருப்பதோடு, அந்நபர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே மூழ்கியிருப்போம். ‘ஈகோ’வின் இந்தக் கட்டுப்பாடானது, நாம் அந்நபரின் பிரிவை ஏற்றுக்கொண்டு துக்கநிலையில் ஆழ்ந்து இருப்பதன் வெளிப்பாடாகும். துக்க அனுசரிப்பு முடிந்தால் ஈகோவின் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். இவ்வளவு எளிதாக துக்கநிலையை விளக்க முடியும் என்பதாலேயே இது நோய்க்கூறாகக் கருதப்படுவதில்லை.

நமக்குப் பிடித்தமான பொருள் மறைந்துவிட்டதென்று தெரியவரும்போது அப்பொருளுடன் கொண்டுள்ள லிபிடோ உறவை முறித்துக்கொள்வதன் நடவடிக்கைகளே துக்கம் அனுசரித்தல்களும், குறிப்பிட்ட சடங்குகளும். பொதுவாக யாருமே அவ்வளவு எளிதாக முறித்துக்கொள்ள முடியாது. ஆனால், அதுவே ஒரு எல்லைக்கு மேல் போனால் ஒருவர் யதார்த்த உலகிலிருந்து விலகி, பிரமைகளின் உலகில் அந்தப் பொருளுடனான தொடர்பைத் தக்கவைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார் என்பது ஃப்ராய்ட்டின் வாதம். (லிபிடோ (Libido) என்பதை பாலியல் ஆற்றலாகவும், அதன் பண்புக்கூறுகள் பொருளாதார வகைமாதிரியை ஒத்தவை என்பதாகவும் ஃப்ராய்ட் முன்வைத்தார். லிபிடோவின் ஆற்றல் அளவிடப்படக்கூடியதாகவும், ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளின் மீது நிலைக்கொள்ளும் தன்மையுடையதாகவும், இடப்பெயர்வு செய்யப்படக்கூடியதாகவும் ஃப்ராய்ட் கருதினார். அவ்வாற்றல் பாலியல் நீக்கம் செய்யப்பட்ட தன்மையிலும் இயங்கலாம் அல்லது உயர் வழிப்பட்ட தன்மையிலும் இருக்கலாம்.)

உதாரணத்திற்கு, நானும் என் உற்ற நண்பனும் அடிக்கடி விருப்பப்பட்டுச் செல்லும் இடம் ஒரு குறிப்பிட்ட பேக்கரி என்று வைத்துக்கொள்வோம். நண்பன் திடீரென்று ஒரு நாள் இறந்துவிட்டான் என்றால் அதன் பிறகு அவனின் ஞாபகமாய் அந்த பேக்கரிக்குப் போகும்போது ஒரு இழப்பை (loss) நான் உணர்வேன். இனி அவன் எப்போதும் என்னுடன் இந்த பேக்கரியில் உடன் அமர்ந்து சமோசா சாப்பிட இருக்க மாட்டான். இது அவன் என்னோடு இல்லை என்பதைப் பதிய வைக்கும் உண்மை. இவ்வாறு பலமுறை அவன் இழப்பு குறித்தான உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய பல எதிர்ப்படல்கள் துக்கநிலையிலிருந்து நான் மீள்வதற்கான பாதையை உருவாக்குவன. எவ்வளவு ஆழமாக நாம் இழந்த பொருளை/நபரைக் குறித்த ஞாபகங்களை யோசிக்கிறோமோ அவ்வளவு வீரியத்தோடு அவற்றிலிருந்து லிபிடோவின் பிடிப்பு அகலும்.

நம் விருப்பத்திற்குரிய நபர் இறந்த பிறகு அவருடனான நமது நினைவுகளை அவ்வப்போது மீட்டிக் கொள்வோம். ஒவ்வொரு முறை அவ்வாறு அவருடனான ஞாபகங்களைத் திரும்பிப் பார்க்கும்போதும் அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்கிறோம். ஆனால் ‘துக்கத்திலிருந்து மீள்வதற்கான செயல்பாடுகள் தன்னியல்பாக நடப்பவையல்ல’ என்பார் ஃப்ராய்ட்.

துக்கநிலை என்பது முழுக்க நனவு (conscious) மனத்தோடு தொடர்புடையது. மெலன்கலியாவானது நனவிலி (unconscious) மனத்தோடு தொடர்புடையது. துக்கநிலையில் இருப்பவரால், தான் இன்ன பொருளை இழந்ததால் அல்லது குறிப்பிட்ட ஒருவர் இறந்ததால்தான் துக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லிவிட முடியும். மெலன்கலிக்காக இருப்பவரால் இதுபோல குறிப்பிட்ட எப்பொருளை அல்லது எந்த நபரை இழந்ததால் அவ்வாறு இருக்கிறார் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் யாரை இழந்திருக்கிறார் என்று சொல்ல முடிந்தாலும் அந்நபரிடம் ‘எதை’ இழந்திருக்கிறார் என்பதை அவரால் சொல்ல முடியாது.

பிரகதீஷ் என்பவர் கவின் என்பவரோடு காதல் கொண்டுள்ளதாக வைத்துக்கொள்வோம். ஏதோ காரணங்களுக்காக இருவரும் காதல் உறவை முறித்துக்கொண்டு சண்டையிட்டுப் பிரிகின்றனர். இங்கு இவ்விருவரின் உறவானது பரிமாண (dynamic) ரீதியாக மாற்றமடைந்துள்ளது. இன்ன காரணமென்று தெரியாமல் பிரகதீஷுக்கு ஏதோவொன்றை இழந்ததுபோலவே இருக்கிறது. அது என்னவென்பதையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே, அவன் கவினை இழக்கவில்லை; கவினிடமிருந்து ‘ஏதோவொன்றை’ இழந்திருக்கிறான். பின்னர் தன் ‘ஈகோ’வை கவினைக் கொண்டு நிரப்பிக்கொள்கிறான். கவின் மீதான வெறுப்பை மடைமாற்றி தன் ‘ஈகோ’ மீது வெளிப்படுத்துகிறான். இங்கு உண்மையில் தன் மீது செலுத்தும் சுய-பழி என்பது கவின் மீதானது என்று புரிந்துகொள்ள வேண்டும். இந்நிலையையே மெலன்கலிக்கின் தன்னிலையாக ஃப்ராய்ட் கூறுகிறார்.

லக்கானியப் பார்வையில் மெலன்கலியா இன்மையோடு (lack) தொடர்புடையது. அதாவது, தன்னிடம் இல்லாத ஒன்றை இழந்த ஒன்றாகக் கருதுவது. மெலன்கலிக்கிடம் தான் விரும்பும் பொருள் இல்லை (இன்மை). எனவே, அதை அவர் எவ்வாறு கைக்கொள்வாரெனில், தான் விரும்பிய அப்பொருளை இழந்துவிட்டதாக எண்ணிக்கொள்வார் – அவர் தன்னிடமுள்ள இன்மையை இழப்பாக (loss) மாற்றிக்கொள்கிறார். ஒரு பொருள் நம்மிடம் இருந்தால்தானே அதனைத் தொலைக்கவும் முடியும்! எனவே, இல்லாத பொருளை தொலைத்துவிட்டதாக எண்ணிக்கொள்வதும் ஒருவகையில் அப்பொருளை சொந்தங்கொண்டாடத்தான்.

“துக்கநிலையில் ஒருவருக்கு வெளி உலகம் அர்த்தமற்றதாய் மாறுகிறது. ஆனால் மெலன்கலியாவில் ஒருவருடைய ‘ஈகோ’வே அர்த்தமற்றதாய் மாறுகிறது.” (Mourning and Melancholia) மெலன்கலிக்காக இருப்பவர் தன்னை ஒன்றுக்கும் லாயக்கற்றவராகவும், அறம் குன்றியவராகவும், பிறரிடம் தன் சுயத்தை பழிப்பவராகவும், தன்னை மோசமான ஆளாக கருதிக்கொண்டு அவ்வாறு இருப்பதற்கு தண்டனையை எதிர்ப்பார்ப்பவராகவும் இருக்கிறார். போலவே, தன்னுள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணராமல் வாழ்க்கை முழுக்க அவ்வாறுதான் இருந்ததாகவும் கருதிக்கொள்கிறார். இதன் விளைவாக தூக்க மின்மை, பட்டினிக் கிடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்.

நியூராடிக் (neurotic) தன்னிலைக்கும் மெலன்கலிக் (melancholic) தன்னிலைக்குமான வித்தியாசத்தை எடுத்துரைக்கிறார் உளப்பகுப்பாய்வாளரான டேரியன். லாயக்கற்றவராகவும், அறம் பிறழ்ந்தவர்களாகவும் உணரும் ஒரு நியூராடிக் தன் உடலமைப்பு, சிகை அலங்காரம் முதலான வெளித்தோற்றங்களை அவ்வுணர்வுக்குக் காரணமாக அடையாளப்படுத்துவார். லாயக்கற்றவராக உணரும் ஒரு மெலன்கலிக் தன் ஒட்டுமொத்த இருப்பையே காரணமாகக் கூறுவார். மோசமான ‘எண்ணங்கள்’ வருவது குறித்து ஒரு நியூராடிக் கவலைப்படுவார். ஆனால், தானே ஒரு மோசமான ஆள்தான் என்று மெலன்கலிக் கருதுவார். அவர் லாயக்கற்றவராக உணர்வதோடு மட்டுமல்லாமல், தான் லாயக்கற்றவர் என்பதை அறிந்தவராகவும் எண்ணிக்கொள்வார். தனது அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் வெளி உலகமே என்று ஒரு paranoiac சொல்வதுபோல, தனது அனைத்துப் பிரச்னைகளுக்கும் தானே காரணம் என்று மெலன்கலிக் சொல்வார்.

தன்னையே பழி சொல்லிக்கொண்டிருக்கும் மெலன்கலிக்கிடம், “நீ இதற்கு ஒன்றும் காரணமில்லை” என்று சமகால பாசிட்டிவிட்டி கவுன்சிலிங் மொழியில் சொல்வது எவ்வகையிலும் பயனளிக்காது. ஏனெனில், அது அடிப்படையையே பார்க்கத் தவறுகிறது. ஏன் ஒரு மெலன்கலிக் தன் மீதே பழி சுமத்திக்கொண்டும்
சுயமரியாதையை அழித்துக் கொண்டும் இருக்கிறார் என்றால், தன் காதலரை அல்லது தான் காதலிக்க ஆசைப்படும் நபரை இழந்ததற்குப் பின்னர் அந்நபரை உள்வயப்படுத்திக் கொள்கிறார். அவருடைய ஈகோவை அந்நபரைக் கொண்டு நிரப்புகிறார். அதுபோல அந்நபர் மீதான வெறுப்பையோ கோபத்தையோ மடைமாற்றி தன் ஈகோ மீது காட்டுகிறார். ஆகையால்தான் மெலன்கலிக் வேறொவர் மீதுள்ள வெறுப்பை தன் மீது செலுத்திக்கொண்டிருக்கிறார் என்கிறார் ஃப்ராய்ட். துக்கம் அனுசரித்தல் நனவு மனத்தோடு தொடர்புடையதென்றால், மெலன்கலியா நனவிலி மனத்தோடு தொடர்புடையது.

சமகால உளநோக்குக் கருவிகள் மூலமோ, நடத்தையியல் கோட்பாடுகள் மூலமோ ஒருபோதும் இதை அறிய முடியாது. உளப்பகுப்பாய்வுத் துறையின் (psychoanalysis) நோக்குநிலை இவ்விடத்தில் முக்கியமாகிறது. அறிவியல் ஆய்வுமுறைகளாலும் நிரூபணவாதப் போக்குகளின் தாக்கத்தாலும் உளப்பகுப்பாய்வு அதன் பிரசித்தியை இழந்ததுள்ளது. உளப்பகுப்பாய்வு, நவீன அறிவியலின் மொழியை உட்கிரகித்து கொள்ளாததால் இது அறிவியல் இல்லை என்று வெளித்தள்ளப்பட்டது. உள மருத்துவமும் (psychiatry), நரம்புளவியலும் (neuropsychology) அவ்விடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன.

சமூகத்தையும், புறவயக் காரணிகளையும் பொருட்படுத்தக்கூடிய வெளி உளப்பகுப்பாய்வில் இருக்கிறது. ஆனால், உள மருத்துவம் நோய்களைக் கையேட்டின் வாயிலாக இனம்கண்டு மாத்திரைகளைப் பரிந்துரைக்கும் துறையாகவே இருந்துவந்துள்ளது.

DSM கையேடும் அதன் பின்னணியும்

DSM (Diagnostical and Statistical Manual of Mental Disorders) என்பது உள மருத்துவத்தின் நோய் நிர்ணயக் கையேடு. உள மருத்துவரிடம் நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகளை இக்கையேட்டில் குறிப்பிட்டுள்ள நிர்ணயங்களோடு பொருத்திப் பார்த்து மருத்துவ ஆலோசனை வழங்குவது உள மருத்துவரின் பணி. DSM-ல் இணைக்கப்பட வேண்டிய உள நோய்களையும் கோளாறுகளையும் தீர்மானிக்கவென்று குறுங்குழு உள்ளது. அவர்களுக்குள்ளாக விவாதம் நடத்தி புதிய நோய்களையும் நிர்ணயங்களையும் வெளியிடுவர். அவ்விவாதங்களில் ‘ஏற்பை’ப் பெறும் ‘நோய்கள்’ கையேட்டில் இணைக்கப்படும். எனவே, DSM-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நோய்க்கூறுகள் ஆய்வுகளின் அடிப்படையில் இணைக்கப்படுவதன்று. DSM-ல் இடம்பெற்றிருக்கும் மிகச் சில உளக் கோளாறுகள் மட்டுமே அறிவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

மருத்துவ நிறுவனங்கள் மேற்கொள்ளும் anti-depressant பரிசோதனை முடிவுகள் அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. தேர்வுசெய்யப்பட்ட முடிவுகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. பரிந்துரை செய்யும் மருத்துவர்கள் கூறுவதைப் போலவும் anti-depressant வேலை செய்வதில்லை. பெரும்பாலும் placebo effect-ஆல் அவை செயல்புரிகின்றன. அல்லது, உணர்வுகளை மட்டுப்படுத்தி ஒருவரை மந்தமாக்குவதன் வழியாகவும் செயலாற்றுகிறது. ஒரு மாத்திரையின் வேதியியல் உட்பொருளைக் காட்டிலும் அதன் மேல் ஏற்றப்படும் அர்த்தங்களால்தான் அவை செயல்புரிகின்றன. இந்த அர்த்தமேற்றல் மருந்து நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலம் அல்லது மாத்திரை எடுத்துக்கொள்பவரின் சூழமைவு அல்லது இதைப் போட்டுக்கொண்டால் சரியாகிவிடும் எனும் மனோபாவம் உள்ளிட்ட குறியீட்டு அர்த்தங்கள்தான் (symbolic meaning) பெரும் பங்காற்றுகின்றன. இதை உறுதிப்படுத்தும் வண்ணம் உள மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் தரவுகளும் உள்ளன.

மாத்திரையிலுள்ள வேதியியல் உட்பொருள் என்ன செய்கிறது? உடலியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் வேலையை அல்லது மனநிலையை (state of mind) குறைவான நேரத்திற்கு மாற்றும் செயல் ஒன்றை மட்டும் புரிகின்றன. விளம்பரப்படுத்துதைப் போலவோ அல்லது உள மருத்துவர் அம்மாத்திரைகளைப் பரிந்துரைக்கும் நோக்கத்திலிருந்தும் இது மாறுப்பட்ட விளைவை ஏற்படுத்துகிறது. அனைத்து உள மருத்துவத்தின் ஆய்வுகளும் பெறு நிறுவனங்களால் நிதி அளிக்கப்பட்டு நடைபெறுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கூடவே உள மருத்துவர் ஏன் குறிப்பிட்ட நிறுவனத்தின் anti-depressant-ஐ பரிந்துரைக்கிறார் என்பதும் தவிர்க்க முடியாத கேள்வி.

நவீன உலகின் அதி நவீன கருவியான மருத்துவத் துறைகளுள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அறிவியலின் நிரூபணவாத முறைகளைக் கையகப்படுத்தி உள மருத்துவமும் அறிவியற்பூர்வமான சிகிச்சை என்று பிரகடனப்படுத்திக் கொண்டால் மட்டுமே அறிவியலாதிக்க (scientism) காலத்தில் பிரசித்திபெற்று நிலைத்திருக்க முடியும். “உள மருத்துவம் அறிவியல்பூர்வமான மருத்துவத் துறையாக பிரகடனபடுத்திக் கொள்வது வெறுமனே ஒரு ஜோடனைதான்” என்கிறார் ஜேம்ஸ் டேவிஸ்.

DSM கையேடு 70-களின்போது அறிவியல் ரீதியாக கேள்விக்குட்படுத்தப் பட்டதால் பல மாற்றங்களுக்கு உட்பட்டு திருத்தங்களைக் கண்டது. இறுதியாக 2013ம் ஆண்டில் திருத்தம் கண்டு DSM-5 என்று பிரசுரம் கண்டுள்ளது. வெளியீட்டிற்குப் பிறகு உலகெங்கிலுமுள்ள உள மருத்துமனைகளாலும், ஆராய்ச்சி மாணவர்களாலும் வாங்கப்படும். பெரும்பாலும் திருத்தம் என்பது புதிய நோய்க்கூறுகளையும் அறிகுறிகளையும் இணைப்பதாக மட்டுமே இருக்கும்.

இத்தனை மாற்றங்களுக்கு பின்னரும் உள மருத்துவத்துறை அதன் நிர்ணயக் கோட்பாடுகள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், பொதுப்புத்தியில் உள மருத்துவம் என்பது அறிவியல் ரீதியான ‘சிகிச்சை முறையாகவே’ பதியப்பட்டிருக்கிறது. அந்தத் துறைசார்ந்தோரும் அறிவியல் நிபுணர்களாகவே அடையாளபடுத்தப்பட விரும்புகிறார்கள். தற்காலத்தில் உலகெங்கிலும் anti-depressant மாத்திரைகளின் விற்பனை உயர்ந்திருப்பது இந்தத் துறையினரின் வெற்றிதான்.

எவ்வித அறிவியல்பூர்வமான அடித்தளமும் இல்லாமல் உள மருத்துவத் துறையால் உள நோய்கள், கோளாறுகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு கூட்ட முடிகிறது. அதாவது 1950களில் 106 உளக் கோளாறுகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டு இப்போது அதன் எண்ணிக்கை 374ஆக உயர்ந்திருக்கிறது.

நவீன உள மருத்துவத்துறை இவ்வளவு காலம் aura-வை தக்கவைத்துக் கொண்டு மட்டுமே செல்வாக்குடன் நீடித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குப் பக்கபலமாக இருக்கும் பெருநிறுவனங்கள்தான் முதன்மைக் காரணம். ஏக்கம், கவலை, துக்கம் போன்ற அடிப்படை மனித உணர்வுகளைக்கூட நோய்க்கூறாக அடையாளம் கண்டு மாத்திரைகள் பரிந்துரைப்பது நவீன உள மருத்துவத்தின் வன்முறை. எத்தகைய உள இடர்ப்பாடையும் நோய்க்கூறாகச் சொல்வதன் மூலம், தொடர்ந்து மருந்து வாங்கும் பயனாளர்களை உருவாக்கும் திட்டமிட்டு கணக்கிடப்பட்ட நடவடிக்கைகளே DSM கையேடுகள்.

என் மூளையின் புகைப்படத்தைக் காண்பித்து “இதுதான் நீ” என்றால் “நிச்சயமாக இல்லை” என்பேன். தசைத் தொகுப்புகளோ நரம்புமண்டல தொகுப்புகளோ ‘நான்’ அல்ல. என்னை ஒரு கதையின் கதாப்பாத்திரத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ளுமளவு எனது மூளையின் புகைப்படத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டேன். என்னுடைய ‘நான்’ என்பதை மூளையில் பொருண்மையான சுட்டு (material referent) இல்லை. உள ரீதியான பிரச்னைகளையும் இவ்வாறே பார்க்க வேண்டியுள்ளது.

உளப்பகுப்பாய்வுக்குத் திரும்புதல்

உளப்பகுப்பாய்வாளரான டேரியன் லீடர் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். ஓர் இளைஞர் தன்னால் அதிக நேரம் தூங்க முடிவதில்லை என்று தூக்கம் சார்ந்த நிபுணர்களிடமும், பல்வேறு மருத்துவர்களிடமும் பல்லாண்டுகள் ஆலோசனைகள் கேட்கிறார். கடைசியில் sleep clinic சென்று, அவர் தூங்கும் நேரத்தைக் கணக்கிடும்போது, ஆறு மணி நேரம் அவர் தூங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சராசரியாக ஓர் இளைஞருக்குக் கிடைக்க வேண்டிய தூக்கம்தான் என்றாலும், தன்னளவில் தூக்கம் கிடைக்காததது போல உணர்ந்த அந்த இளைஞர், உளப்பகுப்பாய்வாளர் டேரியன் லீடரிடம் ஆலோசனைக்காக வருகிறார். அதில் தெரியவந்தது என்னவென்றால், குழந்தைப் பருவத்திலிருந்து அந்த இளைஞரை தாய் மட்டுமே வளர்த்து வந்திருக்கிறார். அந்த இளைஞருக்கு பத்து வயதிருக்கும்போது அவரின் தாய் வேறொரு ஆணுடன் காதல் உறவு கொள்கிறார். அவர்கள் இருவரும் உடலுறவு கொள்ளும்போது வரும் சத்தத்தைக் கேட்கக் கூடாது என்ற எண்ணமே அந்த இளைஞரின் தூக்கத்தைக் கெடுத்து விழித்திருக்கும் வழக்கதிற்குள்ளாக்கியிருக்கிறது.

தான் அன்பு செலுத்த வேண்டிய தாய் குறித்தே தப்பெண்ணம் கொள்வதற்காகத் தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கிறார். பிறகு அவர் மேற்படிப்புக்காக வீட்டிலிருந்து வெளியேறியதும் அவருக்கு ‘இன்சோம்னியாவும்’ (தூக்கமின்மை) நீங்கிவிட்டது. வருடங்கள் கழித்து அவர் காதலித்த பெண்ணோடு குடியிருக்கும்போது, அந்தப் பொண்ணின் பழைய காதலனின் பையனும் அவர்களோடு இருக்கிறான். இந்தச் சமயத்தில் அந்த இளைஞருக்கு மீண்டும் இன்சோம்னியா தலையெடுக்கிறது.

காரணம், தன் குழந்தைப் பருவ அனுபவம் திரும்ப வேறொரு குழந்தைக்கு நிகழ்வதாக அவருக்குத் தோன்றியதுதான். ஆக, இங்கு அவருக்கு காலம் என்பது தன்னிலை சார்ந்த விஷயம். ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் என்பதெல்லாம் புறவயமான கால அளவுகள். அவர் தன் மனதை உடைக்கும் சத்தத்திற்காகக் காத்திருக்கும் காலத்தை எந்தக் கருவியாலும் நரம்புளவியல் மருத்துவராலும் அளந்து சொல்ல முடியாது அல்லவா?

உளப்பகுப்பாய்வானது யதார்த்த உலகோடு இவ்வாறு ஒத்து வாழ வேண்டுமென்று கட்டாயப்படுத்தாது. மாறாக, ஒருவரின் ‘யதார்த்தம்’ எவ்வாறு கட்டமைகிறது என்பதை எடுத்துரைக்கும். ஆகையால்தான் ஒருவர் தன் வாழ்க்கையில் வெற்றிபெற வழிசெய்வது உளப்பகுப்பாய்வின் நோக்கமல்ல என்கிறார் லக்கான். உளப்பகுப்பாய்வு என்பது உளச் சிக்கல்களைத் தீர்க்கும் கோட்பாடல்ல. இருத்தலின் அதி தீவிர நிலையை மனிதர்களுக்கு உணர்த்தும் கோட்பாடு!

Related posts

Leave a Comment