தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 2) – சையித் குதுப்

Loading

[சையித் குதுப் எழுதிய ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (‘கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி’) நூலின் முதல் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதியை இந்தப் பதிவில் தருகிறோம். முதல் பகுதியைப் பார்க்க: காரிருள் (பகுதி 1)]

யூதர்களைவிட கிருஸ்தவர்களின் நிலைமை ஒன்றும் உயர்ந்திருக்கவில்லை. மாறாக அவர்களின் நிலைமை யூதர்களைவிட மோசமாக இருந்தது. ரோமானியர்களின் ஆட்சியில் கிருஸ்தவம் அதள பாதாளத்தில் விழுந்தது. ரோமில் கிருஸ்தவம்  வேகமாகப் பரவியது. எந்த அளவுக்கெனில் கி.பி. 305-ல் ரோமர்களின் ஆட்சிமதமாக கிருஸ்தவம் மாறியது. ரோமர்கள் கூட்டம்கூட்டமாக கிருஸ்தவத்தில் நுழைந்தனர். அது கிருஸ்தவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அல்ல. மாறாக கிருஸ்தவத்தில் சிலைவணக்கத்தை புகுத்துவதற்காக. அமெரிக்க எழுத்தாளர் டிராபர் ‘மதத்திற்கும் அறிவியலுக்குமான மோதல்’ என்ற தம் நூலில் கூறுகிறார், “ரோம் நாட்டில் உயர் பதவிகளில் இருந்த நயவஞ்சகர்களினால் சிலைவணக்கமும் இறைவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவதும் கிருஸ்தவத்தில் நுழைந்தது. அவர்கள் வெளிப்படையில் கிருஸ்தவர்களாக தம்மை காட்டிக் கொண்டாலும்  கிருஸ்தவ மத விவகாரங்கள் எதையும் அவர்கள் பொருட்படுத்தவுமில்லை, உண்மையான கிருஸ்தவத்தை விரும்பியதுமில்லை. இவ்வாறே கான்ஸ்டாண்டைனும்  இருந்தான். அவன் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை அநியாயம் செய்வதிலேயே கழித்தவன் – இறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் தவிர – மதவிவகாரங்கள் எதையும் பொருட்படுத்தாதவன்.

“கிருஸ்தவர்கள் ரோம அரசாட்சியை வென்றபோதிலும் அவர்களால் சிலைவணக்கத்தை அடியோடு அழிக்க முடிவில்லை. மாறாக சிலைவழிபாடு அவர்களின் மார்க்கத்தோடு ஒன்றுகலந்தது. கிருஸ்தவமும் சிலைவழிபாடும் ஒன்றிணைந்து புதிய மார்க்கமாக தோற்றம் பெற்றது. இந்த இடத்தில்தான் இஸ்லாம் கிருஸ்தவத்தைவிட்டு வேறுபடுகிறது. அது சிலைவழிபாட்டை அடியோடு வீழ்த்தி தன் தூய கொள்கைகளை மக்களிடையே பரப்பியது.”

உலகாதயத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட, இறைமார்க்கத்தை சிறிதும் பொருட்படுத்தாத அரசு, தனிப்பட்ட நலன்களுக்காகவும், இரு பிரிவினரை -கிருஸ்தவர், சிலைவழிபாட்டாளர்- ஒன்றிணைக்கும் நோக்கத்துடனுடம் அவையிரண்டையும் ஒன்றிணைக்க விரும்பியது. தீவிர கிருஸ்தவர்கள்கூட இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை. புதிய மார்க்கம் பழைய சிலைவழிபாட்டு மார்க்கத்தோடு ஒன்றிணையும்போது அது வேகமாக வளர்ச்சியடையும், விரைவில் கிருஸ்தவம் சிலைவழிபாட்டை விட்டுத் தூய்மையடையும் என்று எண்ணினார்கள்போலும்.” (பார்க்க, அறிஞர் அபுல் ஹசன் அலீ நத்வீ எழுதிய ‘முஸ்லிம்களின் வீழ்ச்சியால் உலகம் இழப்பது என்ன?’ என்ற புத்தகம்).

ஆனால் தீவிர கிருஸ்தவர்கள் நம்பிக்கைவைத்தது போன்று புதிய மார்க்கம் சிலைவழிபாட்டின் பாதிப்பைவிட்டும் இட்டுக்கட்டப்பட்ட கண்ணோட்டங்களைவிட்டும் தூய்மையடையவில்லை. அரசியல் பிரச்சனைகள், இட்டுக்கட்டப்பட்ட கதைகள், மெய்யியல் கண்ணோட்டங்கள் என பலவற்றின் பாதிப்பால் அது கடுமையான முரண்பாடுகள் கொண்ட மதமாக மாறிப்போனது.

அவர்களில் ஒரு பிரிவினர், “ஈசா சாதாரண மனிதர்தான்” என்றார்கள். இன்னொரு பிரிவினர், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவையனைத்தும் இறைவன் தன்னை வெளிப்படுத்திய பல்வேறு வடிவங்கள். தந்தையான இறைவன் பரிசுத்த ஆவி வடிவில் மர்யமிடம் மனித வடிவில் வந்தார். அவர் மூலமாக ஈசாவாகப் பிறந்தார்” என்றார்கள். ஒரு பிரிவினர் , “தந்தையைப் போன்று  மகன் நிரந்தரமானவன் அல்ல. மாறாக அவர் உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே படைப்பாக இருக்கின்றார். எனவே மகன் தந்தைக்குக் கட்டுப்பட்டவர்” என்றனர். ஒரு பிரிவினர், பரிசுத்த ஆவி மனிதராக இருக்க முடியாது” என்றனர்.

கி.பி 325-ல் நிகாயாவில் கூடிய சபையும் கி. பி. 381-ல் கான்ஸ்டாண்டைனில் கூடிய சபையும், ‘மகனும் பரிசுத்த ஆவியும் இறைமையில் தந்தைக்குச் சமமானவர்கள் என்றும் தந்தையிடமிருந்து மகன் நிரந்தரத்திலிருந்தே பிறந்துள்ளார் என்றும் பரிசுத்த ஆவி தந்தையிடமிருந்து வெளிப்பட்ட ஒன்றுதான்’ என்று பிரகடனம் செய்தது. கி.பி. 589 -ல் டொலேடாவில் கூடிய சபை, ‘பரிசுத்த ஆவி மகனிடமிருந்தே வெளிப்பட்ட ஒன்றாகும்’ என்று பிரகடனம் செய்தது. இந்த விசயத்தில் கிழக்கிலுள்ள திருச்சபையும் மேற்கிலுள்ள திருச்சபையும் கடுமையாக முரண்பட்டன. அதேபோன்று அவர்களில் ஒரு பிரிவினர் ஈசாவைக் கடவுளாக்கியது போன்று மர்யமையும் கடவுளாக்கினார்கள்.

டாக்டர் ஆல்பர்ட் பட்லர் ‘எகிப்தை வெற்றிகொண்ட அரபுக்கள்’ என்ற தம் நூலில் கூறுகிறார்,

“ஐந்து, ஆறு ஆகிய இரு நூற்றாண்டுகளில் எகிப்தியர்களும் ரோமானியர்களும் தங்களிடையே கடுமையாக முரண்பட்டுக்கொண்டனர், சண்டையிட்டுக் கொண்டனர். இனரீதியான பிரிவும் மத விசயத்தில் தோன்றிய முரண்பாடுகளும் அவர்களிடையே மூண்ட சண்டையை இன்னும் அதிகப்படுத்தின. அதற்கான முக்கிய காரணி ரோம அரசு ஏற்றுக்கொண்ட கிருஸ்தவத்திற்கும் பழமைவாத கிருஸ்தவத்திற்கும் ஏற்பட்ட மோதலேயாகும். ரோம அரசு அங்கீகரித்த கிருஸ்தவத்தையே அங்குள்ளவர்கள் பின்பற்றினார்கள். வைதீக கிருஸ்தவர்களான எகிப்தியர்கள் ரோமர்களின் கொள்கையை தீயதாகக் கருதினார்கள். அதற்கு எதிராக அவர்களுடன் கடுமையான முறையில் யுத்தம் நடத்தினார்கள். அதனை நினைத்துப் பார்ப்பதோ அதன் உண்மை நிலையை அறிவதோ நமக்கு இயலாத ஒன்றாக இருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் பைபிளின்மீது நம்பிக்கைகொண்டிருந்தார்கள்!”

சர் அர்னால்ட் எழுதிய ’இஸ்லாத்தின்பால் அழைப்பு’ என்ற புத்தகத்தில் இந்த முரண்பாடுகளைக் குறித்தும் அவற்றை முடிவுக்குக் கொண்டுவர ஹிர்கல் மேற்கொண்ட முயற்சியைக் குறித்தும் கூறுகிறார்,

“இஸ்லாமிய வெற்றிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜஸ்டீனியன் என்ற அரசர் ரோம அரசில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றிபெற்றார். ஆனால் அவரது மரணத்திற்குப்பின் உடனடியாக அதுவும் சீர்குலைந்தது. ரோம அரசையும் அதன் கீழ் இருக்கின்ற நாடுகளையும் இணைக்கக்கூடிய ஒத்த சிந்தனையை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிவிட்டது. ஹிர்கல் இதற்காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார். ஆயினும் ஷாம் தேசத்தை மைய அரசோடு ஒன்றிணைப்பதில் அவரால் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை. ஆனால் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட வழிமுறைகள் துரதிஷ்டவசமாக முரண்பாடுகளை நீக்குவதற்குப் பதிலாக அவற்றை இன்னும் அதிகப்படுத்திவிட்டன. அங்கு தேசிய உணர்வுக்குப் பதிலாக மதரீதியான உணர்வுகளால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும் என்றிருந்தது. ஆகவே அவர்களைத் திருப்திபடுத்தும்விதமாக முரண்பாடுகொண்டிருந்த மதப் பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முனைந்தார். அரசு அங்கீகரித்த கிருஸ்தவத்திற்கும் வைதீக கிருஸ்தவத்திற்குமிடையே காணப்பட்ட முரண்பாடுகளைக் களைய முயன்றார்.  இந்த நோக்கத்தில் கி.பி. 451-ல் கூடிய சபை ஈசாவுக்கு இரண்டு வகையான இயல்புகள் இருக்கின்றன. அவற்றுக்கிடையே எந்த கலப்பும் மாற்றமும் பிரிவும் இல்லை என்று பிரகடனம் செய்தது. அவையிரண்டும் சேர்ந்து இருப்பதால் அவற்றுக்கிடையேயான கருத்துவேறுபாட்டை மறுக்க முடியாது. மாறாக ஒவ்வொரு  இயல்பும் அதன் தனித்தன்மைகளுடன் பேணப்படுவதும் ஒரே உடலில் இணைந்திருப்பதுமே சிறந்தது, அது தனித்தனியான இரண்டு மனிதர்களைப்போல் அல்ல. மாறாக அவை ஒன்றில் இணைந்திருக்கக்கூடியவை. அதுதான் ஒரே மகன், இறைவன், வார்த்தை ஆகும்.

இந்தப் பிரகடனத்தை யகோபியர் என்ற பிரிவினர் நிராகரித்தனர். அவர்கள் ஈசாவுக்கு ஒரே இயல்புதான் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருந்தனர். ‘அவர் கலவையான இயல்புகளை உடையவர். இறைத்தன்மையையும் மனிதத்தன்மையும் அவர் ஒருசேர பெற்றுள்ளார். ஆனால் இரண்டும் இணைந்து ஒன்றாகிவிட்டது’ என்றனர்.

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் கால அளவு எகிப்திலும் ஷாமிலும் ரோம ஆட்சி இல்லாத நகரங்களிலும் வைதீக கிருஸ்தவர்களுக்கும் யாகோபினருக்குமிடையே தர்க்க வாதங்கள் தொடர்ந்தன. இரு பிரிவுகளுக்குமிடையே நடுநிலையான ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஹிர்கல் முயன்றார். ஈசாவுக்கு ஒரேயொரு இயல்புதான் உள்ளது என்றார்.

அதேநேரத்தில் இந்த அமைப்பு ஈசாவுக்கு இரு இயல்புகள் உள்ளன என்று ஒத்துக்கொள்வதையும் நம்மால் காணமுடிகிறது. மனிதரான ஈசாவின் வாழ்வில் எல்லா தன்மைகளும் ஒன்றிணைந்துள்ளன என்ற கருத்தையும் அது வலுவாக பற்றிப் பிடித்துள்ளது. ஈசா ஒருவர்தான். அவர்தான் இறைவனின் மகன் என்ற கருத்து மனிதத்தன்மையும் இறைத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

ஆனால் இறுதியில் ஹிர்கல் முந்தையவர்கள் பெற்ற அதே விளைவையே பெற்றார். தர்க்கம் முடிவடையாமல் இன்னும் சூடுபிடித்தது. மாறாக ஹிர்கலே, மதத்தின் விரோதி, மதமறுப்பாளன் என்று முத்திரை குத்தப்பட்டார். இரு பிரிவினரின் கோபத்துக்கும் அவர் ஆளானார்.”

திருக்குர்ஆனிலும் இந்த வழிகேடுகளைக்குறித்து குறிப்புகள் வந்துள்ளன. அவை அவர்களின் வழிகேட்டை எடுத்துரைத்து சிதைவுக்கும் மாற்றத்திற்கும் உட்படுத்தப்படுவதற்கு முன்னால் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையான கிருஸ்தவ மார்க்கம் எது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன:

“மர்யமின் மகன் ஈசாதான் அல்லாஹ் என்று கூறிய கிருஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். மாறாக ஈசாவே இஸ்ராயீலின் மக்களிடம் பின்வருமாறுதான் கூறினார்: “இஸ்ராயீலின் மக்களே, அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனே என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். அவனை வணங்குவதில் நாம் அனைவரும் சமமானவர்கள்தாம். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர் சுவனத்தைவிட்டுத் தடுக்கப்படுவார். அவரது தங்குமிடம் நரகமாகும். அவருக்கு அல்லாஹ்விடமிருந்து உதவியாளரோ காத்திருக்கும் வேதனையிலிருந்து காப்பாற்றக்கூடியவரோ யாரும் இருக்க மாட்டார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் – பிதா, மகன், பரிசுத்த ஆவி – ஒன்றிணைந்தவன் என்று கூறிய கிருஸ்தவர்கள் நிராகரித்து விட்டார்கள். அவர்களின் இந்தக் கூற்றைவிட்டும் அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் பலர் அல்ல. அவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அவர்களின் இந்த மோசமான பேச்சிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளவில்லையெனில் வேதனைமிக்க தண்டனை அவர்களை அடைந்தேதீரும்.” (5:72,73)

“யூதர்கள் உசைரை இறைவனின் மகன் என்று கூறி இறைவனுக்கு இணைவைத்துவிட்டார்கள். கிருஸ்தவர்கள் ஈசாவை இறைவனின் மகன் என்றுகூறி இறைவனுக்கு இணைவைத்துவிட்டார்கள். இவர்கள் கூறும் இந்த வார்த்தை ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்டதாகும். இவர்களின் இந்த வார்த்தை இவர்களுக்கு முன்னர் நிராகரிப்பாளர்கள் கூறியதற்கு ஒப்பாக இருக்கின்றது. அவர்கள் கூறினார்கள், “வானவர்கள் அல்லாஹ்வின் மகள்களாவர் என்று.” இதனைவிட்டும் அவன் தூய்மையானவன். மிகப் பெரியவன். அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். தெளிவான சத்தியத்தைவிட்டு அசத்தியத்தை நோக்கி எவ்வாறு அவர்கள் திசைதிருப்பப்படுகிறார்கள்.” (9:30)

“மறுமைநாளில் மர்யமின் மகன் ஈசாவிடம் அல்லாஹ் கூறுவதை நினைத்துப் பார்ப்பீராக: “மர்யமின் மகன் ஈசாவே, “நீர்தான் என்னையையும் என் தாயையும் அல்லாஹ்வைவிடுத்து வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினீரா?” அதற்கு ஈசா தம் இறைவனின் தூய்மையை உறுதிப்படுத்தியவராகக் கூறுவார், “சத்தியத்தைத் தவிர வேறு எதைக் கூறுவதற்கும் எனக்கு உரிமை இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நீ அதனை அறிந்திருப்பாய். ஏனெனில் எதுவும் உன்னைவிட்டு மறைவாக இல்லை. நான் என் மனதில் மறைத்து வைப்பதையும் நீ அறிவாய். உன் மனதில் உள்ளவற்றை நான் அறியமாட்டேன். நீ மட்டுமே வெளிப்படையானதையும் மறைவானதையும் நன்கறிந்தவன்.

ஈசா தம் இறைவனிடம் கூறுவார்: “உன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று நீ எனக்கு கட்டளையிட்டதைத்தான் நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடைய இருந்தவரை அவர்கள் கூறுவதை அறிபவனாக இருந்தேன். நீ என் தவணையை நிறைவுசெய்து என்னை உயிரோடு வானத்தின்பால் உயர்த்தியபின்னர் நீயே அவர்களின் செயல்களை கண்காணிப்பவனாக இருக்கின்றாய். நீ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நான் அவர்களிடம் கூறியது, எனக்குப் பிறகு அவர்கள் கூறியது எதுவும் உன்னைவிட்டு மறைவாக இல்லை.

இறைவா, நீ அவர்களை தண்டித்தால் அவர்கள் உன் அடியார்கள்தாம் அவர்களின் விஷயத்தில் நீ நாடியதைச் செய்கின்றாய். நீ அவர்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது அருள்புரிந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. நீ யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் உன்னை மிகைக்க முடியாது. உன்னுடைய திட்டங்களில் நீ ஞானம் மிக்கவன்.” (5:116-118)

இவ்வாறு வழிகேடுகள் கிருஸ்தவத்தின் அடித்தளங்களையே தகர்த்துவிட்டன. எந்த அளவுக்கெனில் அது சிலைவழிபாட்டு மதமாக உருமாறிப்போனது. அவை பல நூற்றாண்டு காலம் சச்சரவுகளையும் சண்டைகளையும் ஏற்படுத்திவிட்டன.

Related posts

Leave a Comment