சர்வாதிகாரிகளின் மனநிலை: ஜெயாவை முன்வைத்து
ஒரு சாதாரண வியாபார நிறுவனம், சரி நிறுவனம் என்பதுகூட பெரியவார்த்தையெனக் கொள்வோம். ஒரு பெட்டிக்கடை, ஒரு சிற்றுண்டி உணவகம், ஒரு தேநீர்விடுதி வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்கள். அட இதையும்கூட விட்டுவிடுவோம். ஒரு குடும்பம், அதன் தலைவர். இவர்கள் அனைவருக்கும் ஏன் நமக்கும் கூட எப்போதுமே இருக்கும் ஒரு மனநிலை
‘நமக்குப் பின்னரும் குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டும். எச்சூழலிலும் குடும்பம் நிர்கதியாகி விடக்கூடாது. குடும்பத்தினரின் மரியாதை குறைந்துவிடக்கூடாது. ‘ இதன்பொருட்டே நமது செயல்பாடுகள் யாவும். இன்று ஆயுள் காப்பீடு தொடங்கி, நிறுவன காப்பீடு, வாகன காப்பீடு என இத்தனை வகையான முன்னேற்பாடுகளுக்கும் அடிப்படை இந்த மனநிலைதான். எதிர்காலம் குறித்த அச்சம்தான். விபச்சாரத்தை தடுக்கவியலாத அரசுகள் ஆணுறையைப் பரிந்துரைப்பதும் பின்நாளின் விளைவுகள் கருதிதான்.
ஒரு குடும்பத்திற்கே இவ்வளவு ஏற்பாடுகள் தேவைப்படுகிறதெனில், ஒரு சிறுகடையின் முதலாளி தனக்குப்பிறகு கடையை யார் நிர்வகிக்க வேண்டுமென சிந்தித்து செயல்படுகிறார் எனில் ஒன்னறைக்கோடி உறுப்பினர்களைக்கொண்ட ஒரு பேரியக்கத்தின் தலைவி ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என கவித்துமாக தன்னையும் ‘ரத்தத்தின் ரத்தமே’ என குடும்ப உறுப்பினர்களைப் போலவே தனது கட்சித்தொண்டர்களையும் விளித்த மறைந்த ஜெயலலிதா, இராணுவக்கட்டுப்பாடுகொண்ட இயக்கம் என பெருமிதமடைந்த ஜெயலலிதா, ‘தனக்குப் பிறகு’ என்ற நிலைகுறித்து எவ்வளவு யோசனை செய்திருக்க வேண்டும், எப்படியான முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும்?
ஆனால் எதார்த்தம் படு கேவலமாக இருக்கிறது.அவர் தனக்கு நெருக்கமான தோழியாக அடையாளம் காட்டியது நாலுவார்த்தை சுயமாகப் பேசத்தெரியாத சசிகலாவை, தனது அரசின் தலைமைச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது ஊழல் ராம்மோகனராவை, தன்னுடைய இக்கட்டான காலகட்டத்தில் தன்னுடைய பொறுப்புகளை நிர்வாகிக்க அமர்த்தியது முரட்டுஅடிமை பன்னீர் செல்வத்தை. இவையத்தனைகளுக்குப் பின்னாலும் ஜெயலலிதாவிற்கு நேரடியான பொருள் ஆதாயமிருந்ததென்பது இரண்டாவது விசயம்தான், முதலாவது என்னவெனில் தனக்குப்பிறகு இந்த இயக்கம் எக்கேடோ கெட்டொழியட்டும் என்பதுதான் .
ஆம், ஒரு சர்வாதிகாரியின் மனநிலையானது தன்மயமானதாகவே இருக்கும். தங்களைச் சுற்றி ஆயிரம் கோடிப்பேர் இருந்தாலும் அனைவரின் ஒற்றைஇலக்காக தான் மட்டுமே இருக்கவேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருக்கும். தனக்கு நிகராக அல்ல தனக்கு அடுத்ததாகக்கூட எவரும் அடையாளம் காணப்பட்டுவிடக்கூடாது என்பதாகவே இருக்கும். மட்டுமல்ல தன்னுடைய மறைவோடு, தான் சார்ந்த இயக்கம் முற்றுப்பெறவேண்டும், ‘அவர் இருந்தவரை எப்படியிருந்தது’ என்ற வார்த்தை மக்களிடம் நிலைபெறவேண்டுமெனவும் இறப்புக்குப் பிறகும் மக்கள் தன்னைக்கொண்டாடிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற இழிநிலை கொண்ட மனநிலையே இருக்கும்.
அதனால்தான் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் எந்த பொதுஊடகங்களிலும் தலைகாட்டியதில்லை. அவரவரின் துறைசார்ந்த விசயங்களில் கூட அவர்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டதில்லை. காஷ்மீர் பிரச்சினை பற்றி எரிந்தபொழுது ” காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் ” என பாட்டுப்பாடிய நவநீத கிருஷ்ணன் கோமாளியல்ல மாறாக தனது தலைமையின் மனநிலை புரிந்தவர். தனக்கு கீழுள்ளவர்களின் இத்தைகைய செயல்பாடுகளே ஒரு சர்வாதிகாரிக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர தொலைநோக்குடைய செயல்களல்ல.
இன்று ஜெயலலிதா எதிர்பார்த்தபடியே அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ‘அவர் இருந்தவரை’ என மக்கள்பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் . ஆனால் அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருப்பதும் மக்களாகிய நாம்தான். ஒரு வியாபாரி, மிக சிறந்த திறமையாளர், தேர்ந்த நிர்வாகியென ஊர்முழுக்க அறியப்பட்ட ஒருவரின் மறைவுக்குப்பிறகு அந்நிறுவனத்திற்கு உரிமைகோரி சிலர் வருகிறார்கள், தனது குடும்ப உறுப்பினர் எவருக்கும் அவர் தனது கொடுக்கல் வாங்கல் குறித்த விபரங்களை பகிர்ந்துகொண்டதில்லை, வங்கிக்கணக்கு குறித்த விபரங்களைக்கூட தெரியப்படுத்தியதில்லை, இருந்தவரையில் குடும்பத்தை நன்கு கவனித்துக்கொண்டார், இன்று அக்குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. என்ன சொல்லுவீர்கள் அவரை? இப்போதும் திறமையாளர் என்பீர்களா? குடும்பத்தைக் குறித்து சற்றும் கவலை கொள்ளாத முட்டாள் என்பீர்களா? ஒருவேளை தனக்குப்பிறகு தனது குடும்பம் எப்படியும் போகட்டும் எனச் செயல்பட்டிருந்தால், இப்போது அவரை என்ன சொல்வீர்கள்? அதே வார்த்தைதான் ஜெயலலிதாவிற்கும்.
ஆனாலும் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜெ விற்கு பிறகான அதிமுக இன்று இப்படி உடைந்து சிதறுவதும் ஒருவிதத்தில் சமூகத்திற்கு நன்மையான விசயம்தான். மக்கள் நலனைக் குறித்து என்றுமை கவலைப்படாத அதிமுகவின் அடிமைகள் தலைமைப்பொறுப்புக்கு வருவது இச்சமூகத்திற்கு இன்னும் பாரிய தீயவிளைவுகளே ஏற்படுத்தும். எனவே சர்வாதிகார மனநிலையில் தோற்றுவிக்கப்பட்டு, அதே மனநிலைகொண்ட ஓருவாரால் வழிநடத்தப்பட்டதொரு கட்சி காலப்போக்கில் தேய்ந்து முடிவதே மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்.
ஆனால் பெயரளவிலேனும் திராவிடத்தைக் கொண்டிருந்த ஓரியக்கம் இல்லாமலாகும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எச்சித்தாந்தம் என்பது கடும் அச்சுறுத்தலை தரும் கேள்வி. மாற்று கட்சியாக திமுக இருந்தபோதிலும் சமூகநீதியையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தும் அமைப்புகள் அல்லது கட்சிகளே தற்போதைய தேவை. ஆயினும் நிலைமை என்னவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிமுகவுடைய வீழ்ச்சியின் பலனை பாஜக அனுபவிப்பதென்பது மாற்றுஅரசியலை நாடும் அனைத்து அமைப்புகளின் தற்காலிக தோல்வியென்றே கூறலாம். எனினும் நாம் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை. தீயவைகள் தங்களை முற்றாக வெளிப்படுத்தியபிறகு நன்மைக்கான காலம் கனியவே செய்யும் என்பதுதான் மனிதச்செயல்பாடுகளுக்கான ஆதார சிந்தனையாக இருக்கிறது.
Very nice