தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 3) – சையித் குதுப்

[சையித் குதுப் எழுதிய ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (‘கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி’) நூலின் முதல் அத்தியாயத்தின் இறுதிப் பகுதியை இந்தப் பதிவில் தருகிறோம். முந்தைய பகுதிகளைப் பார்க்க: பகுதி1, பகுதி2]

அன்றைய அரேபிய தீபகற்பமும் வழிகேடுகளால், தவறான கொள்கைகளால் நிரம்பி வழிந்தது. அது பாரசீகத்திடமிருந்து பெற்றவை, திரிக்கப்பட்ட யூத மற்றும் கிருஸ்தவர்களின் கண்ணோட்டங்களிலிருந்து ஊடுருவியவை, சிலைவழிபாடு, அத்தோடு இப்ராஹீம் (அலை) கடைப்பிடித்த மார்க்கத்தின் திரிக்கப்பட்ட வடிவம் என பலவகையான கொள்கைகள் ஒன்றிணைந்து காணப்பட்டன. அவர்களிடையே காணப்பட்ட இந்த வழிகேடுகளைக்குறித்து திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவர்கள் பெண் மக்களை வெறுத்துக் கொண்டே வானவர்கள் அல்லாஹ்வின் பெண்மக்கள், அவர்கள் அல்லாஹ்விடம் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்றார்கள்:

“வானவர்கள் அல்லாஹ்வின் மகள்கள்” என்று கூறி இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் சில படைப்புகளை அவனுக்குப் பிறந்தவையாக்கி விட்டனர். இவ்வாறு கூறும் மனிதன் தெளிவான நிராகரிப்பாளனாக இருக்கின்றான். இணைவைப்பாளர்களே! அல்லாஹ் தான் படைத்தவற்றிலிருந்து தனக்காக பெண் மக்களை ஆக்கிக் கொண்டு உங்களுக்காக ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்துள்ளான் என்று கூறுகிறீர்களா? இது எந்த வகையான பங்கீடு?

இவ்வாறு கூறக்கூடிய அவர்களில் யாருக்கேனும் பெண் குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்டால் கடுமையான கவலையான அவனது முகம் கருத்துவிடுகிறது. அவன் கோபத்தால் நிரம்பி வழிகிறான்.  அலங்காரத்தில் வளர்க்கப்பட்டு விவாதத்தில் தெளிவாக எடுத்துரைக்க முடியாத பெண்களையா இவர்கள் தங்கள் இறைவனுடன் இணைத்துக் கூறுகிறார்கள்?

அளவிலாக் கருணையாளனின் அடியார்களான வானவர்களை அவர்கள் பெண்களாக ஆக்கி விட்டார்கள். அல்லாஹ் அந்த வானவர்களைப் படைத்தபோது இவர்கள் அங்கு இருந்தார்களா? வானவர்கள் அவர்களின் இந்த சாட்சியத்தை பதிவுசெய்வார்கள். மறுமைநாளில் அதுகுறித்து அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.  அவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் வானவர்களை வணங்கக் கூடாது என்று அல்லாஹ் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம். அவன் இவ்வாறு நாடியது அவன் விருப்பத்தின் அடையாளமாகும்.” இவ்வாறு கூறும் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் பொய்தான் கூறுகிறார்கள்.” (43:15-20)

“தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வை விடுத்து சிலைகளையும் ஷைத்தான்களையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டவர்கள் கூறுகிறார்கள்: “எங்களை அல்லாஹ்விடம் நெருக்கிவைக்க வேண்டும், எங்களின் தேவைகளை அவனிடம் கொண்டுசெல்ல வேண்டும், அவனிடம் எங்களுக்காக பரிந்துபேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இவர்களை வணங்குகின்றோம்.” நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் முரண்பட்டுள்ள விஷயங்களில் மறுமைநாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டிக் கூறுவோருக்கும் அவனுடைய அருட்கொடைகளை மறுப்போருக்கும் அவன் சத்தியத்தின்பால் வழிகாட்ட மாட்டான்.

இணைவைப்பாளர்கள் கூறுவதுபோல அல்லாஹ் ஒரு மகனை ஏற்படுத்த நாடியிருந்தால் தன் படைப்புகளில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுத்திருப்பான். இணைவைப்பாளர்களின் கூற்றுகளைவிட்டும் அவன் தூய்மையானவன். அவன் தனித்தவன், படைப்புகள் அனைத்தையும் அடக்கியாள்பவன்.” (39:3,4)

“இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து தங்களுக்கு பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியாத பொய்யான கடவுள்களை வணங்குகிறார்கள். அவர்கள் தங்களின் தெய்வங்களைக்குறித்து, “இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக பரிந்துரை செய்யும்” என்று கூறுகிறார்கள். தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: “அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அவனிடம் கூறுகிறீர்களா? வானங்களிலும் பூமியிலும் தனக்கு இணை உண்டு என்பதை அவன் அறியவில்லையா? இணைவைப்பாளர்கள் கூறும் பொய்களையும் புனைவுகளையும்விட்டு அவன் பரிசுத்தமானவன்.” (10:18)

அவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையே உறவுமுறையை ஏற்படுத்தினார்கள். அவன் ஜின்களில் ஒரு பெண்ணை மனைவியாக்கிக் கொண்டு வானவர்களை மகள்களாகப் பெற்றுள்ளான் என்று கூறினார்கள். இந்த கட்டுக் கதையை மறுத்து குர்ஆனில் வந்துள்ள வாசகங்களைப் பாருங்கள்:

“தூதரே! நீர் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நீங்கள் வெறுக்கும் பெண்மக்களை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தி நீங்கள் விரும்பக்கூடிய ஆண்மக்களை உங்களுக்கு ஏற்படுத்திக் கொள்கிறீர்களா?   வானவர்களை பெண்கள் என்று அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்? அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்க்கவில்லையே!  அறிந்துகொள்ளுங்கள், இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் இட்டுக்கட்டி அவன் மகனை ஏற்படுத்திக்கொண்டான் என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களாவார்.

அல்லாஹ் ஆண்மக்களை விட்டுவிட்டு பெண்மக்களை தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்டானா? உங்களுக்கு என்னவாயிற்று? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்? நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? அல்லது உங்களிடம் இதற்கான தெளிவான ஆதாரம் இருக்கின்றதா? உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஆதாரத்தைத் தாங்கியுள்ள வேதத்தைக் கொண்டு வாருங்கள்.

வானவர்கள் அல்லாஹ்வின் மகள்கள். ஜின்கள் அவர்களின் அன்னையர் என்று கூறி இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையே உறவுமுறையை ஏற்படுத்திவிட்டார்கள். ஜின்களையும் அல்லாஹ் விசாரணைக்காக கொண்டுவருவான் என்பதை ஜின்கள் அறிந்தேயிருக்கின்றன. அவனுக்கும் ஜின்களுக்குமிடையே உறவு இருந்திருந்தால் அவர்கள் விசாரணைக்காக கொண்டு வரப்பட மாட்டார்கள். இணைவைப்பாளர்கள் கூறும் பொருத்தமற்ற பண்புகளைவிட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.” (37:149-159)

“தூதரே! அவர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டும் நாளை நினைவுகூர்வீராக. அந்நாளில் வானவர்களிடம் கேட்பான்: “இவர்கள்தாம் உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?” வானவர்கள் கூறுவார்கள்: “நீ பரிசுத்தமானவன். நீயே எங்களின் பாதுகாவலன். அவர்கள் அல்ல. எங்களுக்கும் அவர்களுக்குமிடையே எந்த உறவும் இல்லை. மாறாக இந்த இணைவைப்பாளர்கள் ஷைத்தான்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஷைத்தான்களைத்தான் நம்பிக்கொண்டிருந்தார்கள்.” (34:40,41)

அவர்களிடையே சிலைவழிபாடு பரவியது. வானவர்களையோ மூதாதையர்களையோ அவர்கள் சிலைகளாக வைத்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். ஏக இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட கஅபா என்னும் ஆலயம் சிலைகளால் நிரம்பி வழிந்தது. அதில் கிட்டத்தட்ட 360 சிலைகள் இருந்தன. இதைத்தவிர அவர்கள் பல இடங்களிலும் சிலைகளை வைத்திருந்தார்கள். அவற்றுள் ‘லாத்’ ‘உஸ்ஸா’ ’மனாத்’ ஆகிய சில சிலைகளின் பெயர்கள் திருக்குர்ஆனில் வந்துள்ளது. உஹதுப் போரின் முடிவில் அபூசுஃப்யான் ‘ஹுபல்’ என்னும் சிலையின் பெயரால் சத்தியம் செய்தார்.

“நீங்கள் வணங்குகின்ற சிலைகளான லாத், உஸ்ஸா மற்றும் மூன்றாவது மனாத் ஆகியவற்றைக் குறித்து எனக்கு அறிவியுங்கள், அவை உங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தி பெறுகின்றனவா? இணைவைப்பாளர்களே! உங்களுக்கு ஆண் பிள்கைகள், அவனுக்கு பெண் பிள்ளைகளா? உங்களின் மன இச்சைக்கேற்ப நீங்கள் செய்த இந்த பங்கீடு அநீதியான பங்கீடாயிற்றே!

இந்த சிலைகள் அர்த்தமற்ற வெறும் பெயர்களே அன்றி வேறில்லை. அவை நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களேயாகும். அல்லாஹ் அதற்கு எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லை. இணைவைப்பாளர்கள் யூகங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக்காட்டிய அவர்களின் மன இச்சைகளையுமே பின்பற்றுகிறார்கள். அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்துவிட்டது. அல்லது மனிதனுக்கு தான் விரும்பியதெல்லாம் கிடைத்துவிடுமா? மறுமையும் இம்மையும் அல்லாஹ்வுக்கே உரியது.

வானங்களிலுள்ள எத்தனையோ வானவர்களின் பரிந்துரை அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் யாருக்கேனும் பரிந்துரை செய்ய விரும்பினால் அல்லாஹ் அனுமதிக்குப் பிறகே அதுவும் அவன் நாடியவர்களுக்கே பரிந்துரை செய்ய முடியும். அல்லாஹ் தனக்கு இணைகளை ஏற்படுத்தியவர்களுக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்க மாட்டான். அல்லாஹ்வை விடுத்து மற்றவற்றை வணங்கக்கூடியவர்களுக்காக செய்யப்படும் பரிந்துரையை அவன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

நிச்சயமாக மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பாதவர்கள் வானவர்களுக்கு பெண் பெயர் சூட்டி அவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறும் வார்த்தையைவிட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன்.

அவர்கள் இவ்வாறு வானவர்களுக்கு பெண் பெயர் சூட்டியதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் இந்த விஷயத்தில் யூகத்தையே பின்பற்றுகிறார்கள். யூகம் சத்தியத்திற்கு முன்னால் எந்தப் பயனையும் அளிக்காது… (53:19-29)

சிலைவழிபாடு எந்த அளவுக்கு அவர்களிடையே மலிந்திருந்ததெனில் அவர்கள் கற்களையும் வணங்கிக் கொண்டிருந்தார்கள். அபூ ரஜா அல்அதாரிதீ கூறுகிறார்:

“நாங்கள் கற்களை வணங்கிக் கொண்டிருந்தோம். அதைவிட சிறந்த கல்லை நாங்கள் பெற்றுவிட்டால் அதை தூர எறிந்துவிட்டு புதியதை வைத்துக் கொள்வோம். நாங்கள் கற்களைப் பெறவில்லையெனில் மணலைக் குவித்துவைத்து பின்னர் ஆட்டைக் கொண்டு வந்து அதன் பாலை அதில் ஊற்றி பின்னர் அதைச் சுற்றி வருவோம்.” (புகாரீ)

‘கல்பீ’ என்பவர் சிலைகள் குறித்த தம் நூலில் கூறுகிறார்,

“ஒரு மனிதர் பயணம் செய்து ஓரிடத்தில் தங்கினால் நான்கு கற்களை எடுத்துக் கொள்வார். அவற்றில் சிறந்ததை தம் இறைவனாக ஆக்கிக் கொள்வார். மீதி மூன்று கற்களையும் தம் பானையைத் தாங்குவதற்காக வைத்துவிடுவார். அவர் அந்த இடத்தைவிட்டு சென்றால் அதனை அங்கேயே விட்டுவிடுவார்.”

அவர்கள் நட்சத்திரங்களையும் வணங்கிக் கொண்டிருந்தார்கள். சாயித் கூறுகிறார்,

“ஹுமைர் என்ற குலத்தினர் சூரியனை வணங்கிக் கொண்டிருந்தார்கள். கினானா என்ற குலத்தினர் சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தார்கள். கீஸ் குலத்தினர் ஷிஃரா என்றும் நட்சத்திரத்தை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.”

இதுகுறித்து குர்ஆனில் வந்துள்ள குறிப்புகள்:

“மனிதர்களே! சூரியனுக்கோ சந்திரனுக்கோ சிரம்பணியாதீர்கள். அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கு சிரம்பணியுங்கள், நீங்கள் உண்மையாகவே அவனை வணங்கக்கூடியவர்களாக இருந்தால்.” (41:37)

“அவனே ஷிஃரா என்னும் நட்சத்திரத்தின் இறைவனாவான்.” (53:49)

அவர்களின் வாழ்க்கையில் இணைவைப்புக் கொள்கைகளே வேரூன்றிக் கிடந்தன. அவற்றின் அடிப்படையில்தான் அவர்களின் சடங்கு சம்பிரதாயங்கள் அமைந்தன. இதுகுறித்து திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்புகள் வந்துள்ளன…

அவர்கள் தங்களின் விளைச்சல்கள் மற்றும் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் சில பயன்களை தங்களின் போலிக் கடவுள்களுக்காகவே ஆக்கினார்கள். அதில் அல்லாஹ்வுக்கு எந்தப் பங்கும் இல்லை. சிலவற்றை தங்கள்மீது தடைசெய்து கொண்டார்கள். சிலவற்றை தங்களிலுள்ள ஆண்கள் அல்லாமல் பெண்களுக்கு மட்டும் தடைசெய்தார்கள். சிலவற்றில் சவாரி செய்வதையோ அறுப்பதையோ தடைசெய்தார்கள். அந்த சிலைகளுக்காக சில சமயங்களில் தங்கள் பிள்ளைகளையே பலிகொடுத்தார்கள். தமக்குப் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் தமது பத்தாவது பிள்ளையை அறுத்துப் பலியிடுவதாக அப்துல் முத்தலிப் செய்த நேர்ச்சை வரலாற்றில் காணக்கிடைக்கிறது. பின்னர் அந்த பிள்ளைக்குப் பகரமாக நூறு ஒட்டகங்களைப் பலிகொடுத்தார். இந்த விசயங்களிளெல்லாம் ஜோதிடர்கள் மற்றும் குறிசொல்பவர்களின் பேச்சே ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து குர்ஆனில் வந்துள்ள சில குறிப்புகள்:

“பயிர்களிலும் கால்நடைகளிலும் அல்லாஹ்வுக்கு குறிப்பிட்ட பங்கை ஒதுக்கி, அவை அல்லாஹ்வுக்கு உரியவை என்றும் மற்றவை தங்கள் சிலைகளுக்கு உரியவை என்றும் இணைவைப்பாளர்கள் புதுவழிமுறையை உருவாக்கினார்கள். தங்களின் சிலைகளுக்கு ஒதுக்கியது அல்லாஹ்வைச் சென்றடையதாம். அல்லாஹ்வுக்காக ஒதுக்கியது தங்களின் சிலைகளைச் சென்றடையுமாம். அவர்களின் பங்கீடு எத்துணை மோசமானது!

இவ்வாறே வறுமைக்குப் பயந்து தங்களின் குழந்தைகளைக் கொலைசெய்வதையும் ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான். தங்களின் மார்க்கத்தில் எது அனுமதிக்கப்பட்டது? எது தடைசெய்யப்பட்டது? என்பதை அறியாதவாறு அவர்கள் குழம்பிவிட்டார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவன் ஒரு நோக்கத்திற்காக இவ்வாறு நாடிவிட்டான். தூதரே! இந்த இணைவைப்பாளர்களையும் அல்லாஹ்வின்மீது அவர்கள் இட்டுக்கட்டியதையும் விட்டுவிடுவீராக.

“இந்த கால்நடைகளும் பயிர்களும் தடுக்கப்பட்டவையாகும். நாங்கள் விரும்பியவர்களைத்தவிர வேறு யாரும் இவற்றை உண்ணக்கூடாது; இந்த கால்நடைகளின் முதுகுகள் தடைசெய்யப்பட்டவையாகும். இவற்றின்மீது பயணம்செய்யவோ சுமைகளை ஏற்றவோ கூடாது; இந்த கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறக்கூடாது. சிலைகளின் பெயர்களைத்தான் கூற வேண்டும்” என்று இணைவைப்பாளர்கள் யூகம்செய்து, அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டி கூறுகிறார்கள். அல்லாஹ்வின்மீது அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததன் காரணமாக விரைவில் அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.

“இந்த கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டிகள் உயிரோடு இருந்தால் அவை எங்கள் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். பெண்களுக்குத் தடை செய்யப்பட்டதாகும். அவற்றின் வயிற்றிலுள்ள குட்டிகள் செத்துபிறந்தால் அவை எங்களின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இவ்வாறு கூறியதனால் தகுந்த தண்டனையை அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பான். அவன் ஞானம்மிக்கவன்; நன்கறிந்தவன்.

அறியாமையினால் தங்கள் குழந்தைகளைக் கொலைசெய்தவர்கள் அழிந்துவிட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை அவன்மீதே புனைந்துகூறி தடைசெய்து கொண்டார்கள். அவர்கள் நேரான வழியைவிட்டும் பிறழ்ந்துவிட்டார்கள். அவர்கள் நேர்வழிபெற்றவர்களாவும் இருக்கவில்லை.” (6:136-140)

அவர்கள் ஏகத்துவக் கொள்கையையும் மறுமை சிந்தனையையும் விசித்திரமானவையாகக் கருதினார்கள். அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ள அனைத்தையும் படைத்தான் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டபோதும் அதனடிப்படையில் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதையும் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது என்பதையும் அவனிடமிருந்து மட்டுமே ஹலால், ஹராம் தொடர்பான சட்டங்களைப் பெற வேண்டும், அவனுடைய மார்க்கத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அவர்களின் ஆட்சேபனையை குர்ஆன் எடுத்துரைப்பதைப் பாருங்கள்:

“அவர்களை எச்சரிக்கக்கூடிய தூதர் அவர்களிடமிருந்தே வந்ததற்காக அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அந்த நிராகரிப்பாளர்கள் கூறினார்கள், “இவர் மக்களை சூனியத்திற்கு உள்ளாக்கும் ஒரு சூனியக்காரர், பொய்யர்  இந்த மனிதர் பல கடவுள்களை ஒரே கடவுளாக்கி விட்டாரா? நிச்சயமாக அவர் செய்தது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்.

அவர்களின் தலைவர்கள் தங்களைப் பின்பற்றுவோரிடம் பின்வருமாறு கூறிக்கொண்டே சென்றார்கள்: “உங்களின் மார்க்கத்தில் உறுதியாக இருங்கள். முஹம்மதின் மார்க்கத்தில் நுழைந்துவிடாதீர்கள். உங்கள் தெய்வங்களை வணங்குவதில் நிலைத்திருங்கள். நிச்சயமாக இதில் ஏதோ திட்டம் அடங்கியுள்ளது. அவர் நம்மீது ஆதிக்கம் செலுத்த நாடுகிறார். அவர் கூறுவதுபோல நம்முடைய முன்னோர்களிடமோ வேறு மார்க்கத்திலோ நாம் கேள்விப்பட்டதில்லை. நாம் அவரிடமிருந்து கேள்விப்படுவது பொய்யும் புனைவுமாகும். (38:4-7)

“அல்லாஹ்வை நிராகரிப்பவர்களில் சிலர் தூதர் கொண்டு வந்ததைக் குறித்து பரிகாசமாகக் கூறுகிறார்கள்: “நீங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள் என்று கூறும் ஒரு மனிதரைக்குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” அவர்கள் கூறினார்கள்: “இந்த மனிதர் அல்லாஹ்வின்மீது புனைந்து கூறி நாம் மரணித்தபிறகு மீண்டும் எழுப்பப்படுவோம் என்று கூறுகிறாரா? அல்லது அர்த்தமற்ற விஷயங்களை உளறும் பைத்தியக்காரரா?” அவர்கள் கூறுவது போலல்ல. உண்மையில் மறுமையை நம்பாதவர்கள் மறுமைநாளில் கடுமையான வேதனையிலும் இவ்வுலகில் சத்தியத்தைவிட்டு தூரமான வழிகேட்டிலும் இருப்பார்கள்.  (34:7,8)

இவைதான் அன்றைய அரேபிய தீபகற்பத்தில் பரவியிருந்த கண்ணோட்டங்கள். இவற்றோடு இஸ்லாம் வந்தபோது கிழக்கிலும் மேற்கிலும் பரவியிருந்த திரிக்கப்பட்ட இறைமார்க்கங்களின் மிச்சங்களையும் இணைத்துள்ளோம். அவையனைத்தும் சேர்ந்து பரிபூரண பெருங்குவியலாகக் காணப்பட்டன. அவை எல்லா இடங்களிலும் மனித மனதில் மண்டிக் கிடந்தன. அவர்களின் அமைப்புகள், பழக்கவழக்கங்கள், ஒழுக்கங்கள் அவற்றிடமிருந்தே உருவாகி வந்தன. (இஸ்லாம் வந்த பிறகு அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் உருவான கண்ணோட்டங்கள், சிந்தனைப் பள்ளிகள், தத்துவங்கள் நாம் மேலே குறிப்பிட்ட குவியல்களைவிட ஒன்றும் உயர்ந்தவையாக இருக்கவில்லை. அவற்றைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில்  தனியொரு அத்தியாயத்தில் காண்போம்.

ஆகவேதான் இஸ்லாம் முதலில் இறைவனைக்குறித்தும் அவனுக்கும் படைப்புகளுக்குமான தொடர்பு குறித்தும் சரியான கண்ணோட்டத்தை மனித மனதில் நிலைநிறுத்த முயற்சி செய்தது. அதிலிருந்தே அவர்களின் அமைப்புகள், கலாச்சாரங்கள், சமூக, பொருளாதார,  அரசியல் தொடர்புகள், ஒழுக்க மாண்புகள் ஆகியவை பிறப்பெடுக்கின்றன. இறைவனைக்குறித்த சரியான கொள்கை மனித மனதில் நிலைபெற்று அதன் தனித்தன்மைகள் தெளிவடையாதவரை மேற்குறிப்பிட்ட விசயங்கள் அதில் நிலைபெற முடியாது.

ஆகவேதான் இஸ்லாம் இறைவனின் பண்புகள், அவனது நாட்டம், கண்காணிப்பு ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதற்கும் பின்னர் இறைவனுக்கும் அடியானுக்குமான தொடர்பைத் தெளிவுபடுத்துவதற்கும் பெரும் கவனம் செலுத்தியது. அந்தக் காரிருளில் மண்டிக் கிடந்த பெரும்பாலான குவியல்கள் மனித மனதிலும் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த விசயத்தோடு தொடர்புடையதுதான்.

திரிக்கப்பட்ட மதங்களிலும் காரிருளில் தடுமாறித் திரிந்துகொண்டிருந்த தத்துவங்களிலும் நிகழ்ந்த எல்லா வகையான சீர்கேடுகளையும் சரிசெய்யும் அளவுகோலைக்கொண்டுதான் இஸ்லாம் வந்தது. அவை இஸ்லாம் வருதற்கு முன்னர் இருந்தைவையாக இருந்தாலும் சரி அல்லது இஸ்லாம் வந்தபிறகு தோன்றியவையாக இருந்தாலும் சரி… இந்த ஆச்சரியமான வெளிப்பாடு இந்த மார்க்கத்தின் மூலத்திற்கான சான்றுகளில் ஒன்றாக இருக்கின்றது. அது மனித மனதில் தோன்றிய, தோன்றும் எல்லா வகையான எண்ணங்களையும் ஊசலாட்டங்களையும் அறியும். பின்னர் அவற்றைச் சரிசெய்யக்கூடியதைக் கொண்டு சரிசெய்யும்.

இறைவனைக்குறித்த, அவனது பண்புகளைக்குறித்த, அவன் படைப்புகளோடு கொண்டுள்ள தொடர்பைக்குறித்த சரியான கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதற்காக இஸ்லாம் செய்த நீண்ட முயற்சியை திரும்பிப் பார்ப்பவர்… – அந்த முயற்சியைக் குறித்து குர்ஆனின் வசனங்களே தெளிவுபடுத்துகின்றன, குறிப்பாக மக்காவில் அருளப்பட்ட வசனங்கள் – மனித சமூகத்தை அப்பியிருந்த அந்தக் காரிருளையும் அதனால் அது நேர்வழியைவிட்டு விலகி எப்படியெல்லாம் தடுமாறித் திரிந்து கொண்டிருந்தது என்பதையும் அறியாமல் இஸ்லாம் செய்த அந்த நீண்ட முயற்சியைத் திரும்பிப் பார்ப்பவரால் திருக்குர்ஆனில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்ட விசயங்களின் முக்கியத்துவத்தை உணர முடியாது.

ஆனால் அந்தக் காரிருளை அறிவதன்மூலமே இஸ்லாம் செய்த அந்த நீண்ட முயற்சியின் அவசியமும் அது மனித மனதையும் வாழ்வையும் பீடித்திருந்த தளைகளிலிருந்து விடுவிப்பதற்கு ஆற்றிய பங்களிப்பும் தெளிவாகிறது. குழப்பம், அநியாயம், இழிவு ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி மனித வாழ்வை சீர்படுத்தக்கூடிய சரியான வழிமுறையை அளித்த அதன் மதிப்பையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்த இடத்தில்தான் உமருடைய (ரலி) கூற்றின் முக்கியத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. அவர் கூறினார்,

“யார் ஜாஹிலிய்யாவை அறியாமல் இஸ்லாத்தில் மட்டும் வளர்வாரோ அவர் இஸ்லாத்தின் அடித்தளங்களை தகர்த்துவிடுவார்.”

ஜாஹிலிய்யாவை அறிந்தவரால்தான் இஸ்லாத்தின் அவசியத்தை, சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும். இந்த மார்க்கத்தின் பரிபூரணத் தன்மையையும் ஒத்திசைவையும் அது வெளிப்படுத்தும் உண்மையின் எளிமையையும், அதனைத்தவிர மற்ற கொள்கைகளையும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளையும் அறிந்தவரால்தான் மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். அச்சமயத்தில்தான் இந்த மார்க்கம் உண்மையான அருட்கொடையாகத் தென்படும். அதன் அழகியலும் எளிமையும் தெளிவும் ஒத்திசைவும் நெருக்கமும் மனித அறிவுக்கும் உள்ளத்திற்கும் ஒட்டுமொத்த மனித வாழ்வுக்கும் மிகப் பெரிய அருட்கொடையாகும். அது மனித இயல்போடு முழுவதுமாக ஒன்றிப் போகக்கூடியது.  அல்லாஹ் உண்மையையே கூறினான்,

“முகங்குப்புற நடந்து செல்பவர் நேர்வழி பெற்றவரா? அல்லது நேரான வழியில் சீராகச் செல்பவரா?”

Related posts

Leave a Comment