நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

பற்றியெரியும் பாலைவனம்

Loading

14322328_1224663504242005_7369249892185395928_n

நூல்: பற்றியெரியும் பாலைவனம்

ஆசிரியர்: நுத் ஹோம்போ

நூலின் முன்னுரையிலிருந்து…

‘பற்றியெரியும் பாலைவனம்’ – இது வழமையான சாகசப் பயண நூல் அல்ல. இந்நூலை வாசிக்கையில் எனது இதயத்திற்கு மனத்திற்குள் சத்தியம், வீரம், ஆண்மை ஆகிய உணர்வுகள் உக்கிரமாக ஊடுருவிப் பாய்ந்ததாக உணர்ந்தேன். இந்நூலை வாசித்த நானறிந்த பலரும் இதே விதமான கிளர்ச்சியூட்டும் உணர்வை அனுபவித்ததாகச் சொன்னார்கள். வாசிக்கவாசிக்க அவரை மென்மேலும் நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஒவ்வொரு புதிய பக்கத்தைத் திருப்புவதற்கு முன்னும் இவ்வுணர்வு அதிகரித்துச் செல்வதை உணர்வீர்கள்.

இந்நூலை எழுதிய நுத் ஹோம்போ 1902 ஏப்ரல் 2 அன்று பிறந்தார். டென்மார்க்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான அவர் தனது இருபதுகளில் இஸ்லாத்தைத் தழுவினார். கருத்துச் சுதந்திரத்தின் இரத்த சாட்சியமாக மரணத்தைத் தழுவினார். எதனை அவசியமானதென்றும் சரியானதென்றும் எண்ணினாரோ, அதனைச் செய்வதற்கு அவர் ஒரு கணமேனும் அஞ்சவில்லை. சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகக் கூடிய அபாயம் இருந்தபோதும் அதனை அவர் துணிந்து செய்தார். அவரிடமிருந்த ஆழமான நீதவுணர்வு, அவரை எப்போதும் பலவீனர்களின் பக்கமும் ஒடுக்கப்பட்டோரின் பக்கமுமே சார்பு நிலைப்பாடு எடுக்கவைத்தது. அதற்காகவே அவர் மரணத்தையும் சந்தித்தார்.

சாகச அனுபவத்தைத் தரக்கூடிய எந்தவொரு துணிகர முயற்சியையும் அவர் உவந்து வரவேற்றார். அதேபோல், நகர்ப்புற நாகரிகத்தின் சலிப்பூட்டும் ஒருபடித்தான வழமையை விட்டுத் தப்புவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அவர் வரவேற்றார் (அது எத்துணை அபாயகரமானதாக இருப்பினும் சரியே). ஹார்சன்ஸில் இருந்த டானிஷ் தொழிற்துறை உற்பத்தியாளர் ஒருவரின் மகனாகப் பிறந்த போதும், நன்கு நிலைபெற்ற வணிகம் தரும் சுவாரஸ்யமற்ற பாதுகாப்பை அவர் விரும்பி நிராகரித்தார். அதிலிருந்து தப்புவதற்கு அவருக்கு வழியேற்படுத்தித் தந்தது இதழியல். இயற்கையிலேயே பெற்றிருந்த எழுத்தின் மீதான இயல்பூக்கத்தின் காரணமாக பயண இதழியலாளராக மாறித் தனது முதல் பயணக் கட்டுரையை எழுதினார். தனது பத்தொன்பதாம் வயதில் கவிதைத் தொகுப்பொன்றை எழுதியிருந்தார் என்றாலும், அவ்வயதிற்கு வழமையல்லாத விவேக உணர்வுடன் அவற்றைப் பிரசுரிக்காது தவிர்ந்துகொண்டார்.

கோபன்ஹேகனில் இருந்த ‘டாஜென்ஸ் நைஹெதேர்’ எனும் செய்தி நிறுவனம்தான் முதலாவது பயண இதழியல் பணியை அவருக்கு வழங்கியது. கொலெனின் குறுக்காகக் கடந்து நார்வேயின் மிகத் தொலைதூர விளிம்புக்கு மேற்கொள்ளப்பட்ட பயணம் பற்றிய அவரின் வருணனைகளை அது பிரசுரம் செய்தது. இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1924ல் அவர் முதன்முறையாக மொரோக்கோவுக்குப் பயணம் செய்து, ‘சாத்தானுக்கும் ஆழ்கடலுக்கும் இடையே’ எனுமொரு சிறு நூலை எழுதினார்.

பிரெஞ்சுத் துறவு மடமொன்றில் தியானத்தில் ஈடுபட்டு இவ்வுலகுடனான அமைதியையும் ஒத்திசைவையும் தேடினார் ஹோம்போ. எனினும், அவர் எதனைத் தேடினாரோ அதனைப் பெற்றுத்தர ஒரு விதத்தில் கிறிஸ்தவம் தவறிவிட்டது. இது அவரை இஸ்லாத்தின் பக்கம் செலுத்தியது. இஸ்லாம் எனும் நம்பிக்கையில் மட்டுமே அவரால் திருப்தியையும் அமைதியையும் கண்டுகொள்ள முடிந்தது. நூலில் அவர் தனது மதநம்பிக்கைபற்றி எழுதியுள்ள விதத்தில் இந்த மனவோட்டம் பிரதிபலிக்கிறது. மேலும், இஸ்லாமிய மெய்யியலுக்கு உள்ளாக அவர் மேற்கொண்ட சுற்றுலாக்கள்தான் இந்நூலின் பெறுமதிமிக்க பகுதிகளுள் சிலவாகும். கிறிஸ்தவம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினாரோ, அவ்வாறு இஸ்லாம் இருப்பதைக் கண்டார் என்று நம்மால் நம்பிக்கையுடன் சொல்லமுடியும். நூலின் ஏழாவது அத்தியாயத்தில் அவர் பின்வருமாறு கூறுகையில் இது அவரது சொந்த வார்த்தைகளிலேயே தெளிவாகிறது: “உண்மைக் கிறிஸ்தவம் என்பது இஸ்லாம் என்பதாகவே நான் நம்புகிறேன்.”

இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியின் ஃபாசிச ஆக்கிரமிப்புப் படைகள் கட்டவிழ்த்துவிட்டிருந்த கொடூரங்களையும் ஒடுக்குமுறைகளையும் நுத் தனது பேனாவினாலும் சிறிய கேமராவினாலும் பதிவுசெய்திருக்கிறார். அவர் இத்தாலியப் படைகளுடனும் தொடர்பாடினார்; உமர் முக்தார் தலைமையின் கீழான முஸ்லிம் புரட்சியாளர்களுடனும் தொடர்பாடினார். எனினும், ஒடுக்கப்பட்டு அநீதமாக நடத்தப்பட்ட மக்களின் பக்கமே அனுதாபம் கொண்டார். இத்தாலிய அதிகாரியொருவர் அந்த மக்களை ‘முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள்’ என்று விளித்தபோது நுத் அதனைப் பின்வருமாறு திருத்திக் கூறினார்: “ஆனால், உண்மையில் இந்த மக்கள் கிளர்ச்சியாளர்கள் அல்லவே. தங்களின் சொந்த நாட்டைத்தானே அவர்கள் தற்காத்துப் போராடுகிறார்கள்!” அத்தோடு நில்லாமல், அவர் புரட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பும் நல்கினார்; அவர்களின் சார்பாக அவர்களின் தலைவர் இத்ரீஸ் சனூசிக்குத் தூது சுமந்தும் சென்றார்.

‘பற்றியெரியும் பாலைவனம்.’ இது தனிச்சிறப்பானவோர் சாகசப் பயண நூல். நூலில் அரங்கேறும் நாடகம் உண்மையில் வாசகரின் நெஞ்சைத் தொடுகிறது. நூலை வாசிக்கையில் பலவிடங்களில் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அறபுப் புரட்சியாளர்கள்பற்றி இந்த டானிஷ் பத்திரிக்கையாளரின் வார்த்தைகளை வாசிக்கும்போது, அவரின் களங்கமற்ற தூய இயல்பினை எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது:

“அவர்கள் கரடுமுரடானவர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், இப்போது உறங்கிக் கொண்டிருக்கும்போதுகூட  அனைவரின் முகங்களிலும் இனம்புரியாதவொரு சாந்தமான, தீர்க்கமான தோற்றம் குடிகொண்டிருக்கிறது. இந்த நபர்களால் கண்ணிமைகளைக்கூட அசைக்காமல் எவ்வாறு சாக முடிகிறது என்பது எனக்கு இப்போது புரியவாரம்பித்து விட்டது. அவர்களோடு நான் செலவிட்ட அந்த ஒரு நாளில் நான் அவதானித்த வரை அவர்கள் தங்கள் மதத்தைச் சிறிதும் வழுவாமல் கடைபிடித்து ஒழுகுகிறார்கள். என்ன நேரிட்டாலும், அதற்காக இறைவனைக் குறைகாணுவது பற்றி அவர்கள் நினைத்தும் பார்ப்பதில்லை. தூக்குமேடையில் நிற்கும்போதுகூட, தாம் வாழ்ந்த வாழ்வுக்காக அவர்கள் இறைவனுக்கு நன்றி பகர்கிறார்கள். எந்தவொரு துன்பத்தையும் மிக அமைதியோடு சகித்துக்கொள்கிறார்கள். எனக்கு முன்பாக உறங்கிக் கொண்டிருக்கும் இம்மனிதர்கள் ஏழைகளாகவும் பாமரர்களாகவும், வாசிக்கத் தெரியாதவர்களாகவும் தமது பெயர்களை கூட எழுத்துக்கூட்டத் தெரியாதவர்களாகவும் இருக்கலாம். ஆனால், நான் இதுவரை சந்தித்த மனிதர்களிலேயே உன்னதமான மேன்மக்கள் இவர்கள்தாம்.”

எனக்கு வாசிக்கக் கிடைத்த எழுத்தாளர்களில், நான் சந்திக்க முடியவில்லையே என்று வருந்திய வெகு சிலருள் நுத்தும் ஒருவர். உலகில் இன்று அவசியமாகவுள்ள நம்பிக்கையின் முழு உருவமாக அவர் திகழ்ந்திருக்கிறார்:

“படகு வடக்கு நோக்கி நகர்ந்தது, நாகரிகம் உருவாக்கிய ஆடம்பரத்தையும் வசதியையும் நோக்கி… ஆனால், பார்வையிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்த ஆப்பிரிக்கக் கடற்கரையை நான் பார்த்தபோது, நான் அறிந்துகொண்ட அந்த திடவுறுதி படைத்த ஏழை மக்களையும் அவநம்பிக்கை தரும் அவர்களின் போராட்டத்தையும் எண்ணி எனது இதயம் வலித்தது. நீதி என்றாவது ஒருநாள் வெற்றிபெறக் கூடும்… அந்த நீதி அதிகாரத்திற்காக மட்டும் பேராசையுடன் வாய்பிளக்கும் ஒன்றாக இருக்காது. மாறாக, இந்த முழுப் பூமியிலும் அழகானவை அனைத்தையும் உள்ளடக்குவதற்கான வேட்கையை உமிழும் ஒன்றாக அது இருக்கும்.”

“மக்களே, உங்கள் இறைவன் ஒருவனே; மேலும் உங்கள் தந்தையும் (ஆதம்) ஒருவரே” என்ற நபிமொழியால் உணர்வூக்கம் பெற்று, நுத் தனது நூலைப் பின்வரும் வார்த்தைகளை கொண்டு நிறைவுசெய்கிறார்:

“தமது இயல்பின் அடியாழத்தில், கிழக்குலக மக்களும் மேற்குலக மக்களும் ஒரே போன்றவர்கள்தாம். அவர்கள் ஓர் மரத்தின் இரு கிளைகள். ஒரு மனிதன், அவன் எங்கிருந்து வந்த போதிலும் சரியே, தனது இதயத்தின் அடியாழத்தில் தேடும்போது அம்மரத்தின் வேர் நோக்கிய ஒரு நாட்டத்தையே அதில் உணர்வான்.”

இறைத்தூதர் முஹம்மதின் பின்வரும் நபிமொழியாலும் நுத் உணர்வூக்கம் பெற்றார்:

“ஒரு கொடுங்கோலனின் முகத்திற்கு நேரே சத்தியத்தை உரைத்ததற்காகவும் அவனை விமர்சித்ததற்காகவும் (அதாவது, கருத்துச் சுதந்திரத்தை செயற்படுத்தியதற்காக) கொல்லப்படுபவர்தான் உயிர்த் தியாகிகளிலெல்லாம் மிகச் சிறந்தவர்.”

இதனை உரைத்த பெருமானார், கருத்துச் சுதந்திரத்திற்கு வரம்புகள் எதுவும் இல்லை என்ற போதிலும் அதற்கொரு திசைநெறி இருக்கிறது என்பதை மனங்கொண்டிருப்பார்கள் என்பதை நுத் புரிந்திருந்தார். அதாவது, பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்களும் தமது கருத்துச் சுதந்திரத்தை கொடுங்கோலர்களுக்கு எதிராக, மக்களைக் காப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். அதனை எதிர்த் திசையில் பயன்படுத்தலாகாது. சரியான திசையில் அமைந்திருக்கும் வரை அது வரம்பற்ற ஒன்றாக இருக்கும். நுத் போன்றவொரு பத்திரிக்கையாளரைப் பொறுத்த வரை, தன் மீது எத்துணை அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலும், கொலை மிரட்டல்களே விடுக்கப்பட்டாலும், தான் பிரசுரித்த எதற்காகவும் மன்னிப்பு கேட்பதன் மூலமோ திரும்பப் பெறுவதன் மூலமோ அவர் கொடுங்கோலனுக்கு பணிந்துவிடக் கூடாது. ஏனெனில், மரணம் என்பது ஒரேயொரு முறைதான். அதுவும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. எனில், அடிமையாக இறப்பதைக் காட்டிலும் கண்ணியத்தோடு இறப்பது மேலானது அல்லவா?

மரண தண்டனை விதிக்கப்பட்டு சைரனைகாவில் தன்னோடிருந்த சக கைதிகள் அறுவரைப் பற்றி நுத் கூறுவதை வாசியுங்கள்:

“மரணத்தின் விளிம்பில் நிற்கும் கைதிகள் என்பதை காட்டும் ஒரேயொரு அறிகுறியையேனும் அவர்களின் முகங்களில் காண முடியவில்லை. மலைப் பிரதேசங்களைச் சேர்ந்த இந்த மனிதர்கள் ஒருபோதும் தளர்ந்துவிடுவதில்லை, பணிந்து போவதுமில்லை. அடிமைத்துவத்திற்குப் பதிலாக அவர்கள் மரணத்தையே தெரிவுசெய்கிறார்கள். இதைக் காணுகையில் அவர்கள்மீது எனக்குப் பெருமதிப்பு ஏற்படுகிறது.”

ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஐரோப்பியர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்வதே பத்திரிக்கையாளர் என்றளவில் தனது பணி என்பதை நுத் உணர்ந்திருந்தார்:

“சைரனைகாவில் இரத்தவெறி பிடித்த அறபுகளால் அப்பாவி இத்தாலியர்கள் தாக்கப்படுகின்றனர் என்றுதான் ஐரோப்பாவில் ஒருவருக்குச் சொல்லப்படுகிறது. அதை நேரில் கண்ட எனக்குதான், உண்மையில் யார் காட்டுமிராண்டிகள் என்பது தெரியும்.”

இவர்தான் கருத்துச் சுதந்திரத்தின் இரத்த சாட்சியமான நுத் ஹோம்போ. அவரின் ஆன்மா சாந்தியில் துயிலட்டுமாக!

தமிழில்: உவைஸ் அஹமது

இந்த நூலை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Related posts

2 Thoughts to “பற்றியெரியும் பாலைவனம்”

  1. Dr.W.M.Younus

    send mea copy of PDF

  2. சாளை பஷீர்

    அல்லாஹு அக்பர்

Leave a Comment