நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

மனிதனும் இஸ்லாமும்

Loading

நூல்: மனிதனும் இஸ்லாமும்

ஆசிரியர்: அலீ ஷரீஅத்தி

நூலின் முன்னுரையிலிருந்து…

14332958_1224740330900989_544713408295287909_n

இஸ்லாமிய சித்தாந்தம், கலாச்சாரம் ஆகியவற்றின் உண்மைக் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதில் ஷரீஅத்தியின் ஆக்கங்கள் பாரியதொரு பாத்திரத்தை வகிக்கின்றன. மதங்களின் வரலாற்றை கற்றறிந்த அறிஞர் என்ற வகையிலும், இஸ்லாமிய உலகநோக்கின் பல்வேறு அம்சங்கள் பற்றிய நடைமுறைக் கண்ணோட்டத்தை கொண்டிருந்தவர் என்ற வகையிலும், அவர் இஸ்லாத்தின் மெய்ப்பொருளை துலக்கமாக அறிமுகப்படுத்துகிறார். ஒரு சமூகவியலாளர் என்றளவில் ஷரீஅத்தி மேற்கொண்ட ஆய்வுகள்தான், அதிலும் குறிப்பாக மூன்றாம் உலகின் பிரச்சினைகள் பற்றிய அவரின் பகுப்பாய்வுகள்தான் அந்த நாடுகளில் நிலவிய சமூகப் பிரச்சினைகள் பற்றிய அவரின் புரிதலை நெறிப்படுத்தின.

சமூகப் பிரச்சினைகளை இஸ்லாமிய சித்தாந்தம், கலாச்சாரம் ஆகியவற்றின் கட்டமைப்புக்குள் வைத்து பகுப்பாய்வு செய்வதில் ஷரீஅத்தி வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். இஸ்லாமிய சமூகவியல் பற்றி அவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அது மட்டுமின்றி, இஸ்லாமிய வரலாறு உள்ளிட்ட பலவகை பாடப்பொருள்களையும் அவர் தொட்டிருக்கிறார்; மேலும் பல்வேறு மெய்யியல் ஆக்கங்களை விமர்சன ரீதியில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

மார்க்ஸிய சித்தாந்தத்தை மிகத் தீவிரமாக விமர்சிக்கும் ஒருவராக ஷரீஅத்தி இருந்தார். அவர் தனது பல்வேறு நூல்களின் ஊடாக கம்யூனிச, முதலாளித்துவ சித்தாந்தங்களின் பயனின்மையையும், யதார்த்த உலகில் அவற்றை அமலாக்குவதன் சாத்தியமின்மையையும் நிறுவிக் காட்டியிருக்கிறார்.

ஈரானின் பல்வேறு பல்கலை கழகங்களில் ஷரீஅத்தி நிகழ்த்திய ஒரு தொடரான ஏழு உரைகளை கொண்டதுதான் ‘மனிதனும் இஸ்லாமும்’ என்ற இந்நூல். இத்தொடரில் அவர் மனிதப் படைப்பின் தத்துவம், இஸ்லாமிய உலகநோக்கு, சடவுலகின் வரையறைகள், பிரபஞ்சத்தின் திட்டவமைப்பில் மனிதனுக்குள்ள பொறுப்பு என்பன குறித்து பகுப்பாய்வு செய்கிறார்.

‘மனிதனும் இஸ்லாமும்’ என்ற முதல் உரை, இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டின் அடிப்படையில் மனிதன் படைக்கப்பட்டதை பகுப்பாய்வு செய்கிறது; திருக்குர்ஆனில் வருணிக்கப்பட்டது போல், மனிதன் என்பவன் இப்புவியில் இறைவனின் பிரதிநிதி என்பதாக அது அறிமுகம் செய்கிறது. மனிதன் ஓர் பொறுப்பை சுமந்திருக்கிறான் என்றும்; சாத்தான்-இறைவன் என்ற இரு துருவங்களுக்கு நடுவில் நின்று கொண்டிருக்கிறான் என்றும்; அவனுக்கு சுதந்திர நாட்டமுண்டு என்ற வகையில், இவ்விரு திசைகளுள் ஏதேனும் ஒன்றை தெரிவுசெய்யும் சுதந்திரம் அவனுக்கிருக்கிறது என்றும் ஷரீஅத்தி வருணிக்கிறார்.

இரண்டாவது உரையில் பல்வேறு மதங்களினதும் மெய்யியல்களினதும் வேறுபட்ட உலகநோக்குகள் பற்றி கலந்துரையாடுகிறார். சடவாத மற்றும் மத உலகநோக்குகளை ஒப்பீடு செய்கிறார். ஷரீஅத்தியை பொறுத்தவரை, சடவாதமும் பிற மேற்கத்திய உலகநோக்குகளும் இயற்கையை நோக்கமற்றவோர் உருவாக்கம் என்றும், எவ்வித இலக்கோ அடிப்படைகளோ அதற்கில்லை என்றும் வருணிக்கின்றன என்கிறார். மதம்சார்ந்த உலகநோக்குகள், ஒன்று மனிதர்களின் உண்மை இயல்பை வலுப்படுத்தும் நேர்மறை காரணிகளாகவோ; அல்லது, மனிதன் பெற்றுள்ள சுதந்திர நாட்டத்தை பலவீனப்படுத்தும் எதிர்மறை காரணிகளாகவோ அமையமுடியும் என்று நம்புகிறார்.

வரலாற்று மனிதனை ஷரீஅத்தி இரு குழுக்களுக்கு உள்ளாக வகைப்படுத்துகிறார்:

ஒருபுறம், மனித சமூகத்தினுள் சீர்கேடு, குற்றம், சுரண்டல், இனவெறி, அறியாமை ஆகியவற்றை புகுத்தும் ஒடுக்குமுறையாளர்கள்; மறுபுறம், முற்போக்கான குணநலன்களை கொண்டவர்களாகவும் குற்றங்களுக்கும் சுரண்டலுக்கும் முடிவுகட்ட வேண்டுமென விழைபவர்களாகவும் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள். முதற் குழுவை காயினை (காபில்) கொண்டும், இரண்டாவது குழுவை ஆபிலை கொண்டும் ஷரீஅத்தி பிரதிநிதித்துவம் செய்கிறார். முதற்குழு காயினை போலவே அதிகாரம், செல்வம், ஒடுக்குவதற்கான விருப்பம் ஆகியவற்றை கொண்டிருக்கிறது; இரண்டாவது குழு ஆபிலை போல் எப்போதும் ஒடுக்கப்படுவதாகவும், ஒடுக்குமுறைச் சக்திகளுக்கு எதிராக எழுந்து போராடுவதாகவும் இருக்கிறது என்கிறார்.

‘கலாச்சார வளங்களை அகழ்ந்தெடுத்துப் புதுப்பித்தல்’ பற்றி மூன்றாவது உரை கரிசனை கொள்கிறது. இயற்கை வளங்களை போலவே, இன்றைய தலைமுறைக்கு பயன்படும் பொருட்டு இனம்கண்டு அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய கலாச்சார வளங்களின் ஒரு புதையலை ஷரீஅத்தி இதில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

கிழக்குலகின் மகத்தான மெய்யியல், அறிவியல், ஆன்மிகச் செல்வங்கள் காலனித்துவ நூற்றாண்டுகளின் காலத்தில் பலவந்தமாக ஆழக் குழிதோண்டி புதைக்கப்பட்டன. கிழக்குலகினதும் மேற்குலகினதும் சமூகப் பிரச்சினைகள் பெரிதும் வேறுபட்டவை. ஒன்று பசியாலும், மற்றது உபரியாலும் பீடிக்கப்பட்டுள்ளன. இவ்விரு துருவங்களின் அறிவுஜீவிகளும், விஞ்ஞானிகளும், மெய்யியலாளர்களும் தனித்தனி அணுகுமுறைகளை மேற்கொண்டாக வேண்டியிருக்கிறது. அதேவேளை, தீர்வுகளை தமது சொந்த வரலாற்றுக்குள் தேடுவதற்கான உரிமைக்காக கிழக்குலகு உறுதியுடன் எழுந்துநிற்க வேண்டியிருக்கிறது என்கிறார்.

‘நவீன மனிதனும் அவனது சிறைகளும்’ என்ற நான்காவது ஆக்கத்தில் மனிதன் நான்கு சிறைகளுக்குள் கட்டுண்டிருக்கிறான் என்கிறார் ஷரீஅத்தி. ஒரு மனிதன் இந்த சிறைகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும்போதுதான் உண்மையில் அவன் மனிதனாக மாறமுடியும் என்கிறார்.

மனிதனை பிற படைப்பினங்களிலிருந்து வேறுபடுத்தும் மூன்று தனித்தன்மைகள் உள்ளன என்று ஷரீஅத்தி நம்புகிறார். முதலாவது, தான் பெற்றுள்ள இறையுணர்வை மனிதனால் ஆய்ந்துணர முடியும். இரண்டாவது, அவனால் தீர்மானங்களையும் தெரிவுகளையும் மேற்கொள்ள முடியும். மூன்றாவது வேறுபாடு, அவனால் கருவிகளை உருவாக்கி பயன்படுத்த முடியும்; மனிதன் படைப்பாக்கத் திறன் படைத்தவன். மனிதனை வரைவிலக்கணம் செய்யும் மற்றெல்லா தனித்தன்மைகளும் இம்மூன்றிலிருந்துதான் பெறப்படுகின்றன என்கிறார்.

மனிதன் இம்மூன்று திறன்களை கொண்டிருந்தாலும், அவன் ‘இயற்கை’, ‘வரலாறு’, ‘சமூகம்’, ‘சுயம்’ என்ற நான்கு சிறைகளுக்குள் கட்டுண்டு கிடக்கிறான். இயற்கை விதிகளை புரிந்து கொள்வதன் ஊடாக மனிதன் இயற்கையின் வரம்புகளை விட்டு தன்னை விடுவித்துக் கொள்ளலாம். அவன் வரலாற்று அறிவியல் பற்றிய புரிதலை ஈட்டிக் கொள்ளும்போது, வரலாற்றின் கடிவாளங்களை அவனால் அறுத்தெறிய முடியும். மனிதனை கட்டுப்படுத்துவதற்கு சமூகம் எந்தெந்த சக்திகளை பயன்படுத்துகிறது என்பதை உள்வாங்கி, அதன் கட்டுப்பாட்டை விட்டு மனிதன் சுதந்திரமாக இருக்கும்போது மட்டுமே, சமூகம் தன் மீது விதிக்கும் வரையறைகளை அவனால் மேலோங்க முடியும். எனினும், நான்காவதான “சுயம்” என்பதன் வரம்பினை மனிதன் தனது புலன்களால் அறிந்து, அகற்றுவதுதான் ஆகக் கடினமான ஒன்று. மனிதன் தனது சுயநலத்தை விட்டு சுதந்திரமடையும் வரை, தானே உருவாக்கிக் கொண்ட இச்சிறையிலேயே அவன் சிறைபட்டுக் கிடப்பான் என்று ஷரீஅத்தி வாதிடுகிறார்.

இத்தொடரில் உள்ள ஐந்தாவது உரை ‘அறிவுஜீவிகள்’ சம்பந்தமாக உரையாடுவதுடனும், மூன்று இயல்பினராக அவர்களை வகைப்படுத்துவதுடனும் தொடர்புடையது. முதல் இயல்பினர் மேற்குலகை அப்படியே ஒப்பிப் பின்பற்றுபவர்கள்; ஷரீஅத்தி அவர்களை “அடிமைகள்” என்றழைக்கிறார். இரண்டாவது குழுவினர் மேற்கத்தியமான அனைத்தையும் —நல்லவையோ கெட்டவையோ— மிகத் தீவிரமாக எதிர்ப்பவர்கள்; இவர்கள் முதல் குழுவினருக்கு எதிரானவர்கள். இவ்விரு குழுவினரின் செயல்களுமே சுரண்டல்வாத சக்திகளின் நோக்கத்திற்கே நலன்பயப்பதாக அமைகின்றன என்று ஷரீஅத்தி நம்புகிறார்.

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நடந்ததும் இதுதான். ஷரீஅத்தி மூன்றாவது வகை அறிவுஜீவிகளையே “சுதந்திர சிந்தனையாளர்கள்” என்றழைக்கிறார்; அவர்கள் தமது சொந்த சமூகத்தின் விழுமியங்களிலும் கலாச்சாரத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்; மேற்கத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அறிவியல் சாதனைகளும் மதிக்கப்பட வேண்டுமென்று நம்புகின்றனர். மறுமலர்ச்சி யுகத்தினதும் இன்றைய யுகத்தினதும் சமூகவியல்களை ஷரீஅத்தி இரண்டு பிரமிடுகள் என்று வருணிக்கிறார். மேலும், இவ்விரு காலப்பிரிகளை சேர்ந்த அறிவுஜீவிகள் முன்மொழிந்த விவகாரங்களையும் அவர் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார்.

“கருத்தியல்” என்று தலைப்பிடப்பட்ட அடுத்த உரையில் சித்தாந்தம், மெய்யியல் ஆகியவற்றின் அர்த்தத்தை விளக்குவதுடன், அவை தொடர்பான விவகாரங்களையும் விரித்துரைக்கிறார். மேலும், மதம் குறித்தும் கலந்துரையாடுகிறார். உண்மையில் மதத்தை நடைமுறைப்படுத்துவது சமூகத்திலுள்ள வெகுமக்கள்தான் என்பதை விளக்குகிறார்.

தனது கடைசி உரையில் ஷரீஅத்தி பின்வரும் கேள்வி பற்றி உரையாடுகிறார்: “நாம் உண்மையிலேயே சுதந்திர சிந்தனை கொண்ட அறிவுஜீவிகள் என்றால், சமூகத்துடன் நமக்கிருக்கும் உறவு என்ன? நாம் பின்பற்ற வேண்டிய பாதை எது?” மக்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் விட்டு அவர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வகைசெய்ய வேண்டியதுதான் ஒரு சுதந்திர சிந்தனையாளரின் பொறுப்பு என்று ஷரீஅத்தி வாதிடுகிறார்.

இச்சுருக்கமான ஏழு உரைகளின் வழியாக ஷரீஅத்தி இஸ்லாமிய சித்தாந்தம், அதன் உலகநோக்கு, மனிதனின் சிறைகள், ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதில் சுதந்திர சிந்தனையாளரின் பொறுப்பு ஆகியன பற்றி அறிவொளியூட்டும் மனச்சித்திரமொன்றை உருவாக்கியிருக்கிறார்.

Related posts

Leave a Comment