நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

திராவிட அரசியலும் முஸ்லிம்களும்

Loading

[‘திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும்’ என்ற ஆங்கில நூலுக்கு, மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் Economic & Political Weekly பத்திரிகையில் எழுதிய புத்தகத் திறனாய்வுக் கட்டுரையை கீழே மொழிபெயர்த்துத் தந்திருக்கிறோம். நூலின் மொழிபெயர்ப்புப் பணி நடந்துகொண்டுள்ளது. மெய்ப்பொருளின் வெளியீடாக வெளிவரும், இன்ஷா அல்லாஹ்.]

உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் வெறியர்களாகவும், நம் காலத்தின் நவீனம் என்று அழைக்கப்படும் ஒன்றுக்கு முற்றிலும் பொருந்தாத வேறு காலப்பரிமாணத்திற்குள் சிக்கிக்கொண்டிருப்பவர்களாகவும் ஓர் சித்தரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் முஸ்லிமாக இருப்பதற்கு ஏராளமான வழிகள் இருந்திருக்கின்றன, இப்போதும் இருக்கின்றன என்று நிறுவுவது மிகவும் அவசியமான ஓர் அரசியல் மற்றும் அறிவுச் செயல்பாடு ஆகும். இது முஸ்லிம்கள் குறித்த உண்மை மட்டுமல்ல, மாறாக ஏனைய நம்பிக்கைகளைச் சார்ந்தவர்கள் விஷயத்திலும் இதுதான் உண்மை. விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் ‘சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது’? (பக்.14)

சுயமரியாதை இயக்கம்

இப்புத்தகத்தில் ஆராயப்பட்டிருக்கும் வரலாற்றுக்காலம், தமிழ்நாட்டில் பெரியாரின் தலைமையில் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கத்தின் (அல்லது திராவிட இயக்கத்தின்) எழுச்சி மற்றும் திடப்படுதலைக் குறித்து நிற்கிறது. விரிவான ஆவணக் காப்பக ஆய்வின் அடிப்படையில் ஆக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம், தமிழ் பேசும் முஸ்லிம்களை பார்ப்பனல்லாதார் மற்றும் தமிழ் அடையாளத்துக்குள் உள்ளடக்கும் முகமாக, சுயமரியாதை இயக்கம் இஸ்லாம் குறித்து எடுத்த நிலைப்பாடு பயணித்த தூரம் நீண்ட நெடியது என வாதிடுகிறது. பெரியார் தமிழ் முஸ்லிம்களை இந்து மதத்தின் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்க இஸ்லாத்தை ஏற்ற முன்னாள் தலித்களாக எடுத்துக்கொண்டார். தலித்துகள் தீண்டாமையை வெற்றிகொள்வதற்கான வழிவகையாக அவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாறலாம் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார். ஒரு பகுத்தறிவாளராக அவர் இஸ்லாமிய நடைமுறைகளான பர்தா வழக்கம், முஸ்லிம் மதகுருத்துவம், புனித யாத்திரை செல்வது ஆகியவற்றை விமர்சித்தார். மறுபுறம், “தமிழ் முஸ்லிம்களின் மத்தியில் பகுத்தறிவின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அறிவைத் தேடுவது மற்றும் பகுத்தறிவின் பயன்பாடு ஆகியவை பற்றிய… இறைத்தூதரின் கூற்றுகளை அவர் அடிக்கடி மேற்கோள் காட்டினார்.” (பக்.54)

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் இஸ்லாத்தை சாதிய இந்து மதத்தை விட மேலான ஒன்றாகக் கண்டார்கள். தீண்டாமை மற்றும் சிலை வணக்கம் இல்லாமை, சமத்துவக் கருத்தியல், ஓரிறை வழிபாடு, விவாகரத்து மற்றும் விதவை மறுமணம் ஆகியவை இந்து மதத்தை விட இஸ்லாம் மேலானது என்பதற்கான சான்றுகளாகத் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டன.

தமிழ் முஸ்லிம் கருத்தியலாளர்கள்

இதன் மறுமொழியாக, தமிழ் முஸ்லிம் கருத்தியலாளர்கள் —அவர்களுக்குச் சுயமரியாதை இயக்கத்தின் நாத்திகத்திலும் சோஷலிஸத்திலும் மனவேறுபாடு இருந்தாலும்— இஸ்லாத்தை “இயற்கை” மதமாக முன்வைத்ததனூடே இஸ்லாத்தைப் பற்றிய திராவிட வாசிப்புடன் ஒரு பரந்த உறவை ஏற்படுத்தினார்கள். இதைத் தெளிவுபடுத்தும் வகையில் அப்போதைய தமிழ் பிரதேசத்திலிருந்த பலவாறான இஸ்லாமிய அறிஞர்களின் எழுத்துகள் இப்புத்தகத்தில் விரிவாக அலசப்படுகின்றன. இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பு அ. கா. அப்துல் ஹமீது பாகவி எழுதிப் பின்னர் உருதுவிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட ‘இயற்கை மதம்’ எனும் நூலாகும். இதன் ஆங்கிலப் பதிப்பை முஹம்மத் அலி ஜின்னாவே வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். 1930இல் பதிப்பிக்கப்பட்ட இப்புத்தகம்,

எவ்வாறு இஸ்லாம் இலட்சிய சமூக அமைப்பு, பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் அரசியல் அமைப்புக்கான அடிப்படையான வழிகாட்டுதல்களைக் கொண்டு விளங்குகிறது என்று நிறுவியது. மேலும், ஏனைய மதங்கள் மற்றும் சோஷலிசம் போன்றவற்றின் நல்ல தன்மைகளைப் பெற்றதாகவும் அது இருக்கிறது என்றும் காட்டியது. (பக்.56)

இஸ்லாத்தின் மீதான திராவிட வாசிப்பை அடியொற்றி ‘இயற்கை மதம்’ எனும் அந்த நூல், “இந்து” என்ற திணையை தீவிரமான பிளவுகளைக் கொண்டதாகவும் குழப்பமிக்கதாகவும் அணுகியது. சுயமரியாதை இயக்கத்தைப் போன்றே இதுவும் தலித்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொள்ளும் வரை தங்களுக்கான சுதந்திரத்தைப் பெறமாட்டார்கள் என்றும், ஆகையால் அவர்கள் இஸ்லாத்தில் இணையவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தது.

‘தாருல் இஸ்லாம்’ பத்திரிக்கையின் பா. தாவூத்ஷா போன்ற முஸ்லிம் கருத்தியலாளர்களோ தங்களை இன்னும் தீவிரமாகத் திராவிட இயக்கத்தின் கருத்தியலோடு அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.

அவர் கீழ்க்கண்ட ஆறு செயல்திட்டங்களைக் கொண்டவராக இருந்தார்: புரோகித ஆளுகையின் முடிவு; அவர்களது மதமான இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதற்கான ஊடகமாகத் தமிழைப் பயன்படுத்துதல்; முஸ்லிம்கள் அனைவரையும் தமிழ்மொழியில் பயிற்றுவித்தல்; முஸ்லிம் பெண்கள் அனைவரும் அவர்களது உரிமைகளைப்பெறும் பொருட்டு அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழைக் கற்பித்தல்; மற்றும் ‘தேசிய’ விவகாரங்களில் பிராமணீய நிலைப்பாடுகளைத் தவிர்த்தல். (பக்.70)

இதற்கும் மேலாக, இப்புத்தகம் விவரிப்பதன் படி, முஸ்லிம்களும் தாங்கள் திராவிட இயக்கத்தால் ஓர்மையுடன் உள்ளடக்கப்படுவதற்குத் தங்களது தமிழ்த்தன்மையை ஏற்பதன் வழி நேர்மறையாகப் பதிலுறுத்தார்கள். தாவூத்ஷா ‘தமிழை முஸ்லிம்களின் சமயப் பயன்பாட்டுக்கான மொழியாக ஆக்க உழைத்தபோது, பி. கலிஃபுல்லா 1930 “இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விசுவாசமிக்க முன்னணிப் படைவீரனாகத்” திகழ்ந்தார். தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் இன்றும் கூட, ‘இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்ற முழக்கம் பயன்பாட்டில் இருக்கிறது.

எதிர்ப்பும் மற்றமையாக்கமும்

உள்ளடக்கு தமிழ் அடையாளத்துக்குள் (inclusive Tamil identity) முஸ்லிம்களையும் உட்கவர்ந்துகொண்டது எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் நடந்துவிடவில்லை. பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதரவைப் பெற்ற ஆர்ய சமாஜம், இந்து மகாசபை மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் ஆகியவை இப்பகுதியில் முஸ்லிம்களை மற்றமையாக்குவதன் மூலமாக ஒற்றை இந்து அடையாளத்தைக் கட்டுவதற்குப் பெருமுயற்சியில் ஈடுபட்டன. அதுபோன்றே, ஜமாஅத்தே அஹ்மதியா, தப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகளும் உள்ளூர் முஸ்லிம்களை அவர்களது மொழி மற்றும் பிரதேசம் சார்ந்த தொடர்புகளிலிருந்து பிரித்து சர்வதேச இஸ்லாமிய அடையாளத்துக்குள் ஒன்றிணைய அவர்களை அறிவுறுத்தின.

ஆனாலும், இப்பிரதேசத்தில் இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இப்புத்தகம் குறிப்பிடுவதுபோல் அதற்கு அடிப்படையான காரணம் திராவிட அரசியலின் தாக்கம்தான்:

தமிழ்நாட்டின் சாதி ரீதியான அணிதிரளலின் அரசியல் ‘இந்து’ மற்றும் ‘முஸ்லிம்’ என்ற திணைகளில் பிளவுகளை ஏற்படுத்தியது. பார்ப்பனரல்லாதார் மற்றும் திராவிட இயக்க அரசியலின் காரணமாக ஒற்றை ‘இந்து’ சமூகத்தைக் கட்டியமைப்பதற்கு மிகக்குறைவான வாய்ப்புகளே இருந்தன. மேலும், வட இந்திய மீட்டுருவாக்க அமைப்புகளின் முயற்சிகளும் அத்திசையில் பெரிதாக எந்த வெற்றியையும் காணவில்லை. அதுபோன்றே, 1938இன் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் ஆர்ய சமாஜத்துக்கு முஸ்லிம்களிடம் இருந்துவந்த பலவகைப்பட்ட எதிர்வினைகளும் தமிழ் முஸ்லிம்களும் தக்ணி முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து ஒற்றை முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதில் உள்ள அகமுரண்பாடுகளையும் வரம்புகளையும் (limitations) துலக்கமுறச் செய்தன. (பக்.15)

பிரிவினையின் களங்கம்

தமிழ்ப் பிரதேசமாகட்டும் இந்தியாவின் பிறபகுதிகளாகட்டும், சுதந்திரத்துக்குச் சற்றுப் பிந்தைய காலகட்டமானது முஸ்லிம்களின் விஷயத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்:

முஸ்லிம்கள் தாங்கள் முஸ்லிம்கள் எனும் அளவில் ஏதேனும் அரசியல் கோரிக்கை ஒன்றை முன்வைத்தால், ‘வகுப்புவாதக்’ கோரிக்கைகளுக்கு சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் இடம் கிடையாது என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. காங்கிரஸின் இத்தகைய அணுகுமுறையானது முஸ்லிம்களின் எந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் போவதற்கும், அவை ஒரு பொருட்டாக மதிக்கப்படாது போவதற்கும் வழிவகுத்தது. (பக்.168)

இருந்தாலும், தமிழ்ப்பிரதேச அரசியலின் குறிப்பான தன்மை முஸ்லிம்களுக்கு ஒப்பீட்டளவில் வட இந்தியாவைவிட கொஞ்சம் கூடுதலான அரசியல்வெளியை ஏற்படுத்திக் கொடுத்தது—பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்கள் தேசியவாதிகளாலும் இந்து வலதுசாரிகளாலும் குற்றப்படுத்தப்பட்ட (stigmatised) பின்னரும் கூட. வகுப்புவாத அமைப்பாக தொடர்ச்சியாக முத்திரை குத்தப்பட்டு வட இந்தியாவில் கலைக்கப்பட்டுவிட்ட முஸ்லிம் லீக், எம். முஹம்மத் இஸ்மாயில் அவர்களுடைய (காயிதே மில்லத்) தலைமையின் கீழ் மெட்ராஸில் ஒரு புகலிடத்தைக் கண்டது. மௌண்ட் பேட்டன் 1948ஆம் ஆண்டு லீக்கை கலைத்துவிடச் சொல்லி இஸ்மாயிலை அறிவுறுத்தினாலும், நேரு தனது மெட்ராஸ் பயணத்தின்போது ‘சட்டத்தில் இடமிருந்தாலும் இல்லாவிட்டாலும் லீக்கை அழித்துவிடுவேன்’ என்று மிரட்டியிருந்தாலும், இஸ்மாயில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு அமைப்பை வளர்த்தார்.

பிரிவினைக் களங்கத்தின் (stigma of partition) காரணமாக, முஸ்லிம் லீக் தன்னைத் திராவிடர் கழகத்தோடும் (இது சுயமரியாதை இயக்கத்தின் புதிய பெயர்) திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் (இது திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்த அமைப்பு) அடையாளப்படுத்திக் கொள்ள இயலவில்லை. இவ்விரு அமைப்புகளுமே இந்திய யூனியனிலிருந்து பிரியவேண்டும் என்று கோரி வந்தார்கள். இத்தகைய நிர்பந்தங்களால், முஸ்லிம் லீக் காங்கிரஸின் மேலாதிக்கம் மிகுந்த அதன் கூட்டணியில் 1950கள் முழுக்கத் தொடர்ந்தது. 1960களில் திமுக தனது பிரிவினைவாதத்தைக் கைவிட்டபொழுதுதான், முஸ்லிம் லீக் அதை நோக்கித் திரும்பியது. எவ்வாறிருப்பினும், முஸ்லிம் லீக்தான் திமுக விடமிருந்து தள்ளி நின்றதே தவிர, 1950களிலேயே கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் திமுகவில் இணைந்ததுடன் அக்கட்சியின் பொறுப்புகளிலும் அங்கத்துவம் வகித்தார்கள். இப்புதிய கூட்டணியில், “முஸ்லிம்கள் தங்களது சார்பாகப் பேச முடிந்தது; மேலும் அவர்களது அரசியல் நலன்களுக்கு, தமிழ் நாட்டின் இதர சாதிகள் எத்தகைய இடத்தைப் பெற்றிருந்தார்களோ அத்தகைய இடம் கிடைத்தது.” (பக்.169)

இப்பிரதேச அரசியலின் ஒரு துண்டு எனும் வகையில் இப்புத்தகம், சமூக அறிவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் பெரிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத பொருளான, தமிழ்ப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களின் அரசியலை மிகுந்த ஆர்வமூட்டும் வகையில் பதிவு செய்திருக்கிறது. ஆனால், இப்புத்தகத்தின் முக்கியத்துவம் ஒரு பிரதேச வரலாறு என்பதையும் தாண்டிச் செல்கிறது. இது அடையாள உருவாக்கங்கள் என்பவை மாற்றத்துக்கும் நிகழ்வுப்போக்குகளுக்கும் உட்பட்டவை எனும் உண்மையை மிகத்தெளிவாகப் படம் பிடித்துக்காட்டியுள்ளது. அடையாள அரசியல் வன்முறையில் முடியாமலிருக்க அவை அவ்வாறுதான் அணுகப்பட வேண்டும்.

தமிழில்: ஆஷிர் முஹம்மது

மூலம்: Dravidian Politics and Muslims

Related posts

Leave a Comment