கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

திராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள் – நிகழ்ச்சித் தொகுப்புரை

Loading

இரண்டு மாதங்களுக்கு முன் (29 & 30.09.2018) ரோஜா முத்தையா ஆய்வு நூலக அரங்கில் நடத்தப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ‘திராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள்’ எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் சுபகுணராஜன், ராஜன்குறை, ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். ‘Dravidianism, Nationalism, Federalism: A Critical Assessment of 100 years of Dravidian Movement‘ என்பதாக இவ்வாண்டின் தொடக்கத்தில் டெல்லியில் ஆங்கிலத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட ஓர் நிகழ்வுதான், ஓரிரு விதிவிலக்குகள் தவிர்த்து அநேகமாக அதே ஆய்வாளர்களைக் கொண்டு சென்னையில் இப்போது தமிழில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

நாடெங்கும் வளர்ந்துவரும் இந்துத்துவப் பேயைத் தடுக்கும் வழி தெரியாமல் மற்ற மாநிலங்களெல்லாம் திகைத்து நிற்க, இந்துத்துவத்தையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவையும் கேலிக்கு உரித்தாக்கி விரட்டியடிக்கும் பொது மனப்பான்மை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு, இங்கு செல்வாக்குடன் திகழும் ‘திராவிட / தமிழ்க் கருத்தியலே’ முக்கியக் காரணம் என்ற கூற்றுடன் வெகுசிலரே முரண்படுவர்.

அக்கருத்தியலின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ (non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கடந்த நிலையில்; திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திமுக 1967ல் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஐம்பதாண்டுகள் கடந்த நிலையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு பல வகையிலும் முக்கியமானது, பயன்மிகுந்தது.

கருத்தரங்க அமர்வுகளுக்கெனத் தேர்வுசெய்யப்பட்டிருந்த தலைப்புகளே எதிர்பார்ப்பை எகிற வைத்தன. பார்ப்பன மேலாதிக்க சமூக அமைப்பின் மீதான விமர்சனத்தை திராவிட இயக்கம் எம்முறையில் மக்கள் மயப்படுத்தியது என்பதில் தொடங்கி; சமூக உருவாக்கத்தின் முக்கிய வெளிகளான கல்வி மற்றும் அரசியலில் அது எப்படித் தலையிட்டது; தீண்டாமை எனும் சமூக இழிவை ஒழிக்கும் முயற்சியில் அது என்ன பங்களித்தது; பொதுவுடைமைவாதிகள் மற்றும் முஸ்லிம்களுடன் அதன் உறவு எப்படியிருந்தது; பெண்களின் சமூகப் பாத்திரத்தை எப்படி அது மாற்றி வரையறுத்தது என்பதையும்; வெகுமக்கள் வாழ்வின் பொருளாதாரப் பரிமாணத்தின் அடிப்படை அம்சமான நிலவுடைமை விசயத்திலும், சமூக நலத்திட்டங்கள் விசயத்திலும் அதன் செயல்பாடு எப்படி இருந்தது; பொருளாதாரக் கட்டமைப்பு எனும் நிலையில் அது கொண்டுவந்த மாற்றங்கள் எத்தன்மையிலானவை என்பது பற்றியும்; பல தேசிய இனங்கள் வாழும் ஓர் நாட்டில் மொழி அடையாளம், இறையாண்மை, சுயாட்சி போன்ற முக்கிய விவகாரங்களில் அதன் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது பற்றியும் ஆறு அமர்வுகளில் அமைந்த பதினெட்டு உரைகள், ஒவ்வொரு உரைக்குப் பின்னும் கேள்வி-பதில்கள், கருத்தரங்கின் கருப்பொருளோடு தொடர்புடைய ஒரு புதிய நூல் வெளியீடு என நேர்த்தியாகத் திட்டமிட்டிருந்தார்கள்.

நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு உரையிலும் சாராம்சம் என நான் புரிந்துகொண்ட விசயங்களை என் நினைவிலிருந்து மிகச் சுருக்கமாக சொல்லிச் செல்ல முயல்கிறேன். நிகழ்வின் போதாமைகள் என நான் கவனித்தவற்றையும், அவை தொடர்பான எனது எளிய ஆலோசனைகளையும் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடுகிறேன்.

முதல் அமர்வு

முதல் அமர்வின் கருப்பொருள், ‘பொதுமன்றமும் மாறும் சமூக அடையாளங்களும்’ என்பதாக இருந்தது. இந்த அமர்வில் முதலாவதாக, ‘பெரியார்: ஜாதிச் சங்கங்களும் ஜாதி ஒழிப்பும்’ என்ற தலைப்பில் சுபகுணராஜன் பேசினார். சாதிச் சங்க மேடைகளில் பெரியார் ஆற்றிய உரைகளைத் தொகுத்து சமீபத்தில் நூலாகவும் வெளியிட்டுள்ளார் (‘நமக்கு ஏன் இந்த இழிநிலை? ஜாதி மகாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மகாநாடுகளிலும் பெரியார்‘, 2018, கயல் கவின்). சாதிச் சங்கங்களின் மேடைகளில் வைத்தே சாதியைத் தகர்க்கும் வழி பற்றி பெரியார் பேசிய பாங்கு பற்றி குறிப்பிட்டு உரையாற்றினார். தம்மை ‘சத்திரியர்’ என்று பெருமை பாராட்டிக் கொண்ட சாதியினர் மத்தியில், “பார்ப்பான் பார்வையில் உங்கள் சாதிகள் அனைத்தும் சூத்திர சாதிகளே” எனச் சிறிதும் தயக்கமின்றிக் குறிப்பிட்ட பெரியாரின் வழிமுறை ஒரே சமயத்தில் உயர்த்துவதாகவும் (empowering), கவிழ்ப்பதாகவும் (subverting) இருப்பதாகச் சொன்னார். அதாவது, ‘உன்னை விட உயர்ந்த சாதி எதுவுமில்லை’ எனச் சொல்லும்போது உன்னை விட உயர்ந்தவையாகச் சொல்லிக் கொள்ளும் சாதிகளுக்கு இணையாக உன்னை உயர்த்தும் அதே வேளை, ‘உனக்குக் கீழ் எந்தச் சாதியும் இல்லை’ எனக் கூறி உனக்குக் கீழானதாக நீ கருதும் சாதிகளின் மட்டத்துக்கு உன்னைக் கீழிறக்கவும் செய்வதே பெரியாரின் சுயமரியாதைச் செய்தி. தாழ்த்தப்பட்ட மக்கள் தம்முடைய சமூக இழிவு நீங்குவதற்கு இஸ்லாத்திற்கு மதம் மாறலாம் என்று பெரியார் பரிந்துரைத்ததையும் சுபகுணராஜன் குறிப்பிட்டார்.

சில குறிப்பிட்ட தலித், தமிழ்த் தேசியவாத வட்டங்களில் பெரியார் விமர்சிக்கப்படுவது பற்றியும், சமூக இழிவுநீங்க அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நிலையில் பெரியாரோ இஸ்லாத்தைப் பரிந்துரைத்தது ஏன் என்றும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுபகுணராஜன் அளித்த பதில்கள் என்னைப் பொறுத்த வரை அத்துணை திருப்திகரமானவை அல்ல என்பதுடன், இஸ்லாத்தைப் பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில் மிகவும் apologetic தனமாக இருந்தது என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இரண்டாவதாக, ‘சூத்திரத்தன்மையிலிருந்து சுயமரியாதைக்கு’ எனும் தலைப்பில் ஞான. அலூசியஸ் உரை நிகழ்த்தினார். தலித் சிந்தனையாளரும் பௌத்த மறுமலர்ச்சியாளருமான அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய விழிப்புணர்வு மீண்டும் தமிழ்நாட்டில் தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்த ‘அயோத்திதாசர் சிந்தனைகள்‘ என்ற மூன்று தொகுதிகளாலான நூலை வெளியிட்டவர் இவர் என்பது இவ்விடத்தில் நினைவுகூறத் தக்கது. Modernity என்பது என்ன என்ற விளக்கத்துடன் தொடங்கி, பெரியாரின் சமூகச் செயற்பாட்டை அக்காலத்தில் சர்வதேச அளவில் வலுப்பெற்றுவந்த இணையான நவீன அறிவியக்கங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். மேலை நாடுகளில் பொருளாதார அடிப்படையில் நிலவிய சமூகப் படிநிலைகளை இங்கு நிலவிய சாதிய சமூக அமைப்புடன் ஒப்பிட்டுக் காட்டினார். எடுத்துக்காட்டாக, பிரெஞ்சுப் புரட்சிக்கு சற்று முன்னர் வெளியிடப்பட்ட ‘What is the Third Estate‘ என்ற முக்கியமான சிற்றேடு பற்றிக் குறிப்பிட்டார். எந்த அடிப்படையில் அலூசியஸ் அப்படி ஒப்பிடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது என்றாலும், பிறப்பின் அடிப்படையிலான சாதி அமைப்பையும் அதன் இயங்கு முறையையும் மற்ற நாடுகளில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளுடன் சரிசமமாக வைத்துப் பார்க்க முடியுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. விரிவான விவாதத்திற்குரிய ஒன்று அது.

முதல் அமர்வின் இறுதியாக, ‘தமிழகத்தில் பொதுமன்ற உருவாக்கமும் திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் சுந்தர் காளி உரையாற்றினார். பொதுமன்றம் (Public Sphere) என்றால் என்ன என்ற ஜெர்மன் சமூகவியலாளர் ஹேபர்மாஸின் வரையறையோடு தொடங்கிய சுந்தர் காளி, தமிழகத்தின் பொதுமன்றத்தை திராவிட இயக்கம் எவ்வாறு படிப்படியாக உருவாக்கியது என்பதை விளக்கிப் பேசினார். மத அறிவுஜீவிகளோடு மட்டுமே மட்டுப்பட்டிருந்த ‘விவாதப் பண்பாடு’ எப்படி வெகுமக்கள் தளத்திற்கு நகர்த்தப்பட்டது என்ற பரிணாமவியல் வரலாற்றை உரையின் போக்கில் கண்முன்னே சித்தரித்துக் காட்டினார். இந்துமதத் தொன்மங்களையும் புராணங்களையும் கட்டுடைத்து விமர்சிக்கும் இம்மரபின் முக்கியக் கட்டங்களாக கால்டுவெல்லின் ‘பரதகண்ட புராதனம்‘ நூல், 1860 முதல் 1888 வரை மும்முரமாகச் செயல்பட்ட ‘மெட்ராஸ் லௌகீக சங்க’த்தின் பணிகள், அயோத்தி தாசரின் பெரிய புராண ஆய்வு போன்றவற்றைக் குறிப்பிட்ட சுந்தர் காளி, பெரியாரின் வருகையால் இப்போக்கு சூடுபிடித்ததையும் விவரித்தார். இதில் பெரியாரோடு இணையாகப் பங்களித்தவர்களென ஈழத்து அடிகள், சாத்தான்குளம் ராகவன், ஈ.வெ.ரா. மணியம்மை, சுவாமி கைவல்யம், சுவாமி சிவானந்த சரஸ்வதி, மயிலை சீனி. வேங்கடசாமி, சாமி. சிதம்பரனார், குத்தூசி குருசாமி போன்றோரையும் அவர்களின் பங்களிப்புகளையும் குறிப்பிட்டு, பார்ப்பன இந்துமதத்தை விளிம்புக்குத் தள்ளிய பகுத்தறிவுவாதப் பொதுமன்றத்தின் உருவாக்கத்தை எளிமையாகப் படம்பிடித்துக் காட்டினார்.

இரண்டாம் அமர்வு

‘கல்வியும் அரசியல் வெளியும்’ என்பதே இரண்டாம் அமர்வின் கருப்பொருள். அமர்வின் முதல் இரண்டு உரைகள் கல்வி பற்றியும், மூன்றாவது உரை அரசியல் பற்றியும் பேசின. முதலாவதாகப் பேசிய பழ. அதியமான், தன்னுடைய ஆய்வு நூலான ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்‘ என்பதன் உள்ளடக்கத்தை தனது உரையில் சுருக்கமாக முன்வைத்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற வ.வே.சு. ஐயர் புரவலர்கள் சிலரின் உதவியோடு தொடங்கி நடத்திய குருகுலத்தில் மாணவர்கள் மத்தியில் சாதி ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னணியை விளக்கியதுடன், வெகு சாதாரணமாகத் தோற்றம் தரும் அப்பிரச்சினையில் பெரியாரும் திராவிட இயக்கமும் சரியான நேரத்தில் தலையிட்டு எவ்வாறு அதை ஒரு வீரியமான சாதி எதிர்ப்புப் போராட்டமாக மாற்றினார்கள் என்பதை விவரித்தார். சாதி ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதை ஐயர் தனிப்பட்டளவில் விரும்பாதவராக இருந்தாலும், நடைமுறையில் பெரியார் மற்றும் திராவிட இயக்கம் கொடுத்த அழுத்தத்துக்கு இறுதிவரை பணியவும் நிலைமையை சீர்செய்யவும் மறுத்துவிட்டார் என்பதைக் கூறி அதியமான் தனது உரையை முடித்தார்.

‘உங்கள் உரை வ.வே.சு. ஐயரை ஒரு விதத்தில் நியாயப்படுத்துவது போல இருக்கிறதே’ எனக் கேட்போர் மத்தியிலிருந்து எழுந்த ஒரு கேள்விக்கு, அமர்வின் மற்றொரு பேச்சாளராக மேடையில் அமர்ந்திருந்த ஆ. இரா. வேங்கடாச்சலபதி, “விரிவான ஆய்வு செய்து ஒரு நூலை எழுதியுள்ளார்; வெறும் கால்மணிநேர உரையைக் கேட்டுவிட்டு முடிவுசெய்யாமல், போய் நூலைப் படியுங்கள்” என்ற தொனியில் குறுக்கிட்டுக் கூறியது ‘மேட்டிமைத்தனமான ஒரு எதிர்வினையாகவே’ எனக்குத் தோன்றியது. உரையில் இருந்து கேள்வி கேட்பது மிக இயல்பான ஒன்றுதான். ஒன்று அதற்கு முறையாகப் பதில் சொல்லலாம். அல்லது விரிவாகப் பதில் சொல்லும் சந்தர்ப்பம் இல்லையென்றால், நூலில் இடம்பெற்றுள்ள விரிவான தகவல்களில் உங்கள் கேள்விக்கு பதிலுண்டு என்று வினயமாகச் சொல்லலாம். ஆனால் சலபதியின் தொனி நிச்சயம் அப்படி ஒலிக்கவில்லை என்பதே எனக்கு ஏற்பட்ட மனப் பதிவு.

அடுத்ததாக எஸ். ஆனந்தி, ‘கல்வியும் சமூக நீதியும்: குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டங்கள்’ என்ற தலைப்பில் பேசினார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் உக்கிரமான நீட் தேர்வு எதிர்ப்பு, அதிகபட்ச இடஒதுக்கீடு என தமிழ்நாடு தனித்து விளங்குவதற்கு கல்வியை சமத்துவத்துக்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்கும் ‘திராவிட இயல்பறிவு’ (Dravidian common sense) இங்கு நிலைபெற்றுள்ளதே காரணம் எனக் குறிப்பிட்டு ஆனந்தி தன் உரையைத் தொடங்கினார். அவர் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை எடுத்துக்கொண்டு அந்த ‘திராவிட இயல்பறிவு’ உருவான விதத்தை விளக்கினார். காந்தி முன்வைத்த வார்தா திட்டத்தின் பின்புலத்தில் ராஜாஜி துவக்கநிலைப் பள்ளி நேரத்தை ஐந்திலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைத்ததுடன், எஞ்சிய நேரத்தில் மாணவர்கள் தங்கள் வீடுகளில் கைவினைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் உடல் உழைப்பு  வேலைகளைக் கற்றுக் கொள்ளவும் வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டார்கள். பார்ப்பனர் அல்லாதோரின் கல்வி வாய்ப்பை பறித்து, வர்ணாசிரம முறைக்கு புத்துயிரூட்டும் முயற்சி இது எனச் சரியாகப் புரிந்துகொண்டு பல்வேறு அமைப்புகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. அண்ணாத்துரை தலைமையிலான திமுக இப்போராட்டத்தில் ஆற்றிய முக்கிய பங்கை விவரித்த ஆனந்தி, இதன் வேர்கள் திராவிட இயக்கத்தில் இருந்ததைச் சுட்டிக் காட்டி பேசினார். இவ்விசயத்தில் பெரியார் முன்வைத்த நுட்பமான விமர்சனங்களைச் சற்று விரிவாக விளக்கி உரையை நிறைவு செய்தார் .

தாய்மொழி (தமிழ்) வழிக் கல்வியை முன்னிறுத்தாமல் பெரியார் ஏன் ஆங்கிலக் கல்வியை ஆதரித்தார் என உரைக்குப் பிறகு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆனந்தி அளித்த பதில் சரியாக நினைவில் இல்லை. எனினும், அவருடைய கட்டுரையின் ஆங்கில வடிவத்தை செமினார் இதழின் ஆகஸ்டு பதிப்பில் படித்தபோது, எனக்குப் புலப்பட்டது இதுதான்: எம்மொழி வழி கற்கிறோம் என்பது முக்கியம் இல்லை. நமது நடப்பு சமூக அமைப்பை விமர்சிக்கும் தெளிவை, துணிவை நம்முடைய கல்வி நமக்குத் தருவதுடன் அதிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கும் அது உதவ வேண்டும் என்பதே முக்கியம் என பெரியார் கருதியிருக்கிறார். அதற்கு எம்மொழி வழிக் கல்வி உகந்ததோ அதை ஆதரிப்பதில் அவருக்கு எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை. மற்றபடி, அவர் கண்ணை மூடிக்கொண்டு ஆங்கிலத்தைக் கொண்டாடியவர் அல்லர்.

இந்த அமர்வின் இறுதி உரையாக ஆ. இரா. வேங்கடாசலபதி, ‘திக – திமுக: இரட்டைக் குழல் துப்பாக்கி’ என்ற தலைப்பில் சுவாரஸ்யமாக உரையாற்றினார். 1935ல் இளைஞராக இருந்த அண்ணாத்துரை பெரியாரை சந்தித்து, விரைவிலேயே அவருடைய தனிப்பெரும் தளபதிகளில் ஒருவராக உருவெடுத்து, சில விசயங்களில் முரண்பட்டு, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, 1949ல் திமுக (திராவிட முன்னேற்ற கழகம்) என்ற தனிக்கட்சி தொடங்கி, 1956ல் தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த கதையைச் சுருக்கமாகக் கூறி உரையைத் தொடங்கிய சலபதி, பெரியார்-மணியம்மை திருமணத்திற்கும் இயக்கம் பிளவுபட்டதற்கும் சம்பந்தமில்லை எனத் தெளிவுபடுத்தினார். திமுக உருவான நாள்தொட்டு பெரியார் அதன் மீது தொடுத்த வலிமையான தாக்குதல்களையும், பதிலுக்கு பெரியார் மீது நேரடியாகத் தாக்குதல் தொடுக்காமலேயே அண்ணா சூழ்நிலையைச் சமயோசிதமாகக் கையாண்ட விதம் பற்றியும் சுவையான எடுகோள்களை முன்வைத்துப் பேசினார். காங்கிரசுடன் கடுமையான கருத்து முரண்களைக் கொண்ட பெரியார் திமுகவுக்கு எதிராக காமராஜரை ஆதரித்து நின்றது எப்படி காங்கிரசை வலுப்படுத்துவதற்குப் பதில் பலவீனப்படுத்தியது என்பதை எடுத்துக் காட்டினார். இந்த வகையில் திக-திமுக முரணானது, உண்மையில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் திராவிட மேலாண்மை நிறுவப்படும் நிலைக்கே இட்டுச் சென்றது என்பதைக் குறிப்பிட்டு முடித்தார்.

மூன்றாம் அமர்வு

இந்த அமர்வின் முதல் உரையாக கார்த்திக் ‘பார்ப்பனர் மீதான விமர்சனம்’ என்ற தலைப்பில் தனது ஆங்கிலக் கட்டுரையை வாசித்தார். மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய ‘Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present‘ என்ற நூலுக்கான திறனாய்வே அக்கட்டுரை. பார்ப்பனர் மீதான பெரியாரின் விமர்சனம் எப்படி பார்ப்பன அதிகாரத்தின் பல்வேறு பரிமாணங்களின் மீதான ஒரு கூர்மையான விமர்சனமாக அமைந்தது என கார்த்திக் தனது உரையில் வெளிப்படுத்தினார். சாதி, பாலினம், பிராந்தியம், மொழி எனும் அடையாளங்கள் மீது நிலைகொண்டிருந்த பார்ப்பன அதிகாரத்தால் ‘பாதிக்கப்பட்டவர்களை’ பார்ப்பனர் அல்லாதோர் என்று வகைப்படுத்தி ஒரு எதிர்ப்பு அணியைக் கட்டுவதைச் சூழ்ந்தே அவருடைய அரசியல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அதே போல் இந்திய தேசம் எனும் கருத்தாக்கம், இந்திய தேசியவாதம், அதன் குறியீடுகள் யாவும் திராவிடர்கள் மீது தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பார்ப்பனர்கள் பிரயோகிக்கும் கருத்தியல் ஆயுதம் என்பதாகவே பெரியார் பார்த்தார். எனவே, பெரியாரைப் பொறுத்த வரை காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை, சுயாட்சி போன்றவற்றுக்கு முன்பாக நாம் அடைய வேண்டியது சுயமரியாதையைத்தான்.

கார்த்திக் தனது உரையில் பெரியாரை ‘கலகக்காரர்’ என்று குறிப்பிட்டதன் பின்னணியில், அவர் ஒரு ‘மெய்யியலாளர்’ இல்லையா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கார்த்திக், “ஆம், பெரியார் ஒரு மெய்யியலாளர் இல்லை” என்று பதிலளித்ததைத் தொடர்ந்து சுபாகுணராஜன், ராஜன் குறை, சுந்தர் காளி போன்றவர்கள் அதை மறுத்து தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். அவை பெரும்பாலும் பின்வரும் வகையில் அமைந்திருந்தன: ‘மெய்யியல் என்றால் என்ன என்று வரையறுக்காமல் இவ்வாறு பெரியாரை ஒரு மெய்யியலாளர் இல்லை எனச் சொல்வது பிழையான முடிவுகளுக்கு இட்டுச் செல்லக் கூடியது; மெட்றாஸ் லௌகிக சங்கம் போன்றவற்றின் தொடர்ச்சியில் வந்தவர்தான் பெரியார்; இன்னின்ன மெய்யியலாளர்கள் பெரியாருடன் தொடர்பில் இருந்தார்கள்; ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ என்று பெரியார் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இன்னும் சில. பெரியார் ஒரு ‘மெய்யியலாளர்’ என்பதை உறுதியாக நிறுவ இவை எதுவும் போதுமானதாகத் தெரியவில்லை என்பதே என் கருத்து. “பெரியாரை, அவரின் பங்களிப்பை சிறுமைப்படுத்தும் அர்த்தத்தில் அவர் ஒரு மெய்யியலார் இல்லை என்று நான் சொல்லவில்லை; பெரியார்  எப்படி ஒரு சமூகவியலாளர் இல்லையோ, மானுடவியலாளர் இல்லையோ அதே அர்த்தத்தில்தான் அவர் மெய்யியலாளர் இல்லை என்கிறேன்” என்று கார்த்திக் இறுதிவரை தன் கருத்தில் உறுதியாக நின்றார்.

இதற்கடுத்தது திருநீலகண்டன் ‘நீடாமங்கலம் ஜாதிக் கொடுமையும் சமூக உருவாக்கமும்’ என்ற தலைப்பில் பேசினார். நீடாமங்கலம் வன்கொடுமைச் சம்பவம் பற்றி ஆய்வு செய்து ‘நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்‘ என்ற தலைப்பில் ஒரு நூலை சென்ற ஆண்டு வெளியிட்டுள்ளார். நூலின் சுருக்கத்தையே தனது உரையாக அமைத்துக் கொண்டார். நீடாமங்கலம் கிராமத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டமொன்றில் உணவுப் பந்தியில் கலந்து கொண்ட தலித்துகள் எவ்வாறு அடித்து உதைத்து அவமானப்படுத்தப்பட்டனர் என்பதையும், பிறகு சாணிப்பால் குடிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர் என்பதை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்று சாதித்த அன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் திராவிட இயக்க இதழ்கள் அந்த வன்கொடுமையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த விதம் பற்றியும், பாதிக்கப்பட்டவர்களில் முதன்மையானவர்களை ஊர் ஊராக அழைத்துச் சென்று மேடையேற்றிப் பேசவைத்தது பற்றியும் விளக்கிப் பேசினார்.

‘தொலைந்த நம்பிக்கை: தாழ்த்தப்பட்டோரும் திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் மூன்றாவதாக உரையாற்றவிருந்த இரா. பாவேந்தன் தவிர்க்கமுடியாத காரணங்களால் வரமுடியவில்லை என்பதால் உரை இடம்பெறவில்லை.

நூல் வெளியீடு

அடுத்து, சுபாகுணராஜன் எழுதி கயல் கவின் வெளியீடாக வரும் ‘சாதியும்… நிலமும் காலனியமும் மூலதனமும்’ என்ற நூல் வெளியீட்டு சிறப்பு அமர்வு நடைபெற்றது. ஒரு வேலை நிமித்தமாக நான் கிளம்பிச்செல்ல வேண்டி வந்தமையால், ஜெயரஞ்சன் ஆற்றிய கருத்துரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நூலுக்கு தான் வழங்கிய முன்னுரையையே ஜெயரஞ்சன் தனது உரையாக வாசித்தார் என்று ஒரு நண்பர் கூறினார். இவ்வுரையோடு முதல் நாள் நிகழ்வு நிறைவுற்றது.

நான்காம் அமர்வு

நான்காம் அமர்வின் கருப்பொருள் ‘திராவிட இயக்கத்தின் வீச்சும் தடங்களும்’. முதலாவது உரை பிரண்ட்லைன் ஆசிரியர் விஜய்சங்கர் ராமச்சந்திரனுடையது. ‘சுயமரியாதை, சமதர்மம்’ என்பதே தலைப்பு. இடதுசாரிப் பின்புறத்திலிருந்து நான் பெரியாரின் சுயமரியாதையையும் சமதர்மக் கொள்கையையும் பார்ப்பதாகக் கூறி தொடங்கினார். பெரியாரின் சோவியத் பயணம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதலாவது தமிழ் மொழிபெயர்ப்பை பெரியார் பிரசுரித்தது போன்றவற்றைக் குறிப்பிட்டு பேசினார். தொடக்கத்தில் பெரியார் சாதியின் பொருளாதார அடித்தளம் பற்றி கவனம் செலுத்தினாலும் பிறகு அவருடைய கவனம் அதில் குவியவில்லை என்று குறிப்பிட்டார். பெரியார் கம்யூனிஸ்டுகளை மிகக் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தது பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டார். பெரியார் மீதான பி.ராமமூர்த்தி போன்றோரின் விமர்சனங்கள் பற்றி பொதுவுடைமை இயக்கத்தினர் மத்தியில் தற்போது மீள்பரிசீலனை நடக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட விஜயசங்கர், திராவிட இயக்கமும் இடதுசாரிகளும் புரிந்துணர்வோடு செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தனது உரையை நிறைவுசெய்தார்.

அடுத்ததாக கோம்பை அன்வர் ‘திராவிட இயக்கமும் இஸ்லாமியரும்’ என்ற தலைப்பில் பேசினார். தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு பற்றிய சிறு அறிமுகத்துடன் தொடங்கிய அன்வர், எவ்வாறு திராவிட இயக்கம் ‘யார் திராவிடர்’ என்ற வரையறுக்கும் போது முஸ்லிம்களை உள்ளடக்கி வரையறுத்தது என்பதை விளக்கினார். மீலாது விழா மேடைகளில் பேசிய பெரியார் இஸ்லாத்தை விமர்சனத்துடன் கூடிய நேர்மறை அணுகுமுறையுடன் பார்த்தது பற்றி குறிப்பிட்டார். காங்கிரஸ் காலத்தில் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் சில உரிமைகளை திமுக ஆட்சி எவ்வாறு இயன்றவரை சரிசெய்தது என்பது பற்றியும் சில உதாரணங்களைக் குறிப்பிட்டு முடித்தார்.

இந்த அமர்வின் இறுதியாக ‘பெண்களும் திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சரஸ்வதி பேசினார். பெண்களுக்கு மிகவும் அடிப்படையான உரிமைகளே கூட மறுக்கப்பட்டுவந்த ஒரு சூழலில் பெரியார் தனது இயக்கத்தை முன்னெடுத்தார் என்று குறிப்பிட்டு தொடங்கிய பேரா. சரஸ்வதி கற்பு, சொத்துரிமை, மறுமணம் செய்துகொள்வதற்கான உரிமை போன்ற பிரச்சினைகளில் பெரியார் எப்படி பெண்களின் உரிமைகளை ஆதரித்து வாதிட்டார் என்று விளக்கிப் பேசினார். அடுத்ததாக, தேவதாசி முறை அல்லது பொட்டுக் கட்டும் முறையை ஒழித்ததில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை பற்றி பேசினார். அடுத்ததாக, சாதி மறுப்புத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்டபூர்வ அந்தஸ்து பெற்றுத் தந்தது பற்றி குறிப்பிட்டார். பெரியார் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தியமைக்கும் மற்ற சீர்திருத்தவாதிகள் அவ்வுரிமைகளை வலியுறுத்தியமைக்கும் நடுவில் அடிப்படையில் ஓர் வேறுபாடு இருந்தது எனக் குறிப்பிட்ட சரஸ்வதி, ஆணாதிக்கத்தை தகர்ப்பதா அல்லது அதைத் தக்கவைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்வதா என்பதுதான் அவ்வேறுபாடு என்று விளக்கினார்.

(எஞ்சிய இரு அமர்வுகள் பற்றிய தொகுப்புரை பிறகு சேர்க்கப்படும்)

Related posts

Leave a Comment