செக்குலர் இந்தியாவில் முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ள பகுதிகளில் வசித்து வந்த படித்த நடுத்தரவர்க்க முஸ்லிம்கள், பிரிவினைக்காலத்தில் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இதனால், அடித்தட்டு முஸ்லிம்கள் வழிகாட்ட ஆளின்றி தலையற்ற முண்டத்தைப் போலாகினர். எஞ்சிய திரளான முஸ்லிம் சமூகம் இத்தகைய ஒரு பின்னடைவோடுதான் இந்தியாவில் தனது வாழ்வைத் தொடங்கியது. இந்த நிலையில், இந்திய அரசு சொல்லிவருவது போல் முஸ்லிம்களிடம் அது பாரபட்சமின்றி நடந்துகொண்டதா? இல்லை என்பதே வெளிப்படையான உண்மை.
முஸ்லிம்கள் மீதான பாரபட்சம் இந்திய அரசியல் சாசனத்திலிருந்தே தொடங்குகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மக்களவையில் தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டுச் சலுகைகள் கொடுக்கப்பட்டன. இன்னும் இந்துக்களில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களுக்கான இடஒதுக்கீட்டை காலப்போக்கில் பெற்றுக்கொண்டனர். ஆனால், முஸ்லிம்களுக்கு இரண்டும் மறுக்கப்பட்டன. இவற்றில் மதரீதியாக சலுகைகளை வழங்கினால், அது அரசு விவகாரங்களில் மதத்தை நுழைப்பதாக அமைந்து மதச்சார்பின்மைக் கொள்கையை மீறுவதாகிவிடும் என்று இதற்கு வியாக்யானம் வழங்கப்பட்டது. ஒன்றிணைந்து தங்கள் நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டன.
தனிக்கட்சியாக அதிகாரம் செலுத்துவதை விட்டும் காங்கிரஸ் சரிந்ததிலிருந்து, இந்தியாவில் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. அரசியலமைப்பு வழியாக முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தால், இந்தியக் கூட்டணி ஆட்சிச் சூழலில் அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை ஆகியிருக்கும். இது போதாதென்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், தேர்தல்களில் கணிசமான தாக்கம் ஏற்படுத்தக் கூடியளவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் தொகுதிகளெல்லாம் பெரும்பாலும் பிற சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. மேற்சொன்ன வகைகளில், இந்திய மதச்சார்பின்மை என்பது வேறொரு பெயரிலான இந்து மதச்சார்புவாதம் (Confessionalism) தான்.
– பெர்ரி ஆண்டர்சன், The Indian Ideology என்ற தனது நூலில்.
(தமிழில்: ஆரூர் சலீம்)