கட்டுரைகள் 

கடும்போக்குவாதம்

Loading

கடும்போக்கு என்பது ஒருவர் தாம் சரியென நம்பும் கருத்தை மற்றவர்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முற்படுவதும் மற்றவர்களின் கருத்தை மூர்க்கமாக மறுப்பதும் அதற்காக அவர்களுடன் பகைமை பாராட்டுவதும் ஆகும்.

கருத்து வேறுபடுவது மனித இயல்பு. மனிதர்கள் தங்களுடைய விவகாரங்கள் அனைத்திலும் கருத்துவேறுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். மனிதனின் அடிப்படையான இந்த இயல்பைக்கூட புரிந்துகொள்ளாதவர்கள்தாம் கடும்போக்காளர்கள். அவர்கள் மார்க்கத்தின் இயல்பு, அதன் நோக்கங்கள் குறித்து போதிய அறிவு இல்லாதவர்கள். எதையும் மேம்போக்காக அணுகக்கூடியவர்கள்.

பெரும்பாலோர் கடும்போக்காளர்களை தீவிர முஸ்லிம்களாக, கொள்கை உறுதிகொண்டவர்களாகக் கருதுகிறார்கள். இது தவறான பார்வை. அவர்கள் இஸ்லாத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் அல்ல. மாறாக அவ்வாறு தங்களை காட்டிக்கொள்பவர்கள். உண்மையாகவே மார்க்கத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மார்க்கம் கூறும் மென்மை, பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு, ஞானம், அழகிய முறையில் அறிவுரை கூறுதல் ஆகிய பண்புகளால் தங்களை அலங்கரித்திருப்பார்கள்.

இது குறித்த ஷெய்க் முஹம்மது கஸ்ஸாலியின் அனுபவப் பார்வை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவர் கூறுகிறார்: உளப்பூர்வமாக மார்க்கத்தைப் பின்பற்றுவோர் மென்மையான உள்ளம்கொண்டவர்களாகவும் மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக மார்க்கத்தைப் பின்பற்றுவோர் போன்று தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் கடினமான உள்ளம்கொண்டவர்களாகவும் இருப்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

நம்பிக்கையாளர்கள் தங்களின் பாவங்களையே பெரிதாகக் கருதுவார்கள். அவற்றை எண்ணி வருத்தப்படுவார்கள். அவற்றுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவார்கள். அவற்றின் காரணமாக எங்கு தங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருப்பார்கள். அதே சமயம் அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் எண்ணி அவன் தங்களை மன்னித்துவிடுவான் என்று ஆறுதலும் நிம்மதியும் அடைவார்கள். அச்சத்திற்கும் நம்பிக்கைக்கும் மத்தியில் அமைந்த இந்த நிலை அவர்களிடம் காணப்படும் ஈமானின் அடையாளமாகும்.

கடும்போக்காளர்கள் இதற்கு மாறானவர்கள். அவர்களுக்கு தங்களின் பாவங்கள் கண்ணுக்குத் தெரியாது. மற்றவர்களின் தவறுகளோ அவர்களுக்குப் பூதாகரமானவையாகத் தெரியும். எப்போதும் மற்றவர்களைச் சாடுவதையே, குற்றம்கூறுவதையே தொழிலாகக் கொண்டிருப்பார்கள். நேர்மறையான எந்த அணுகுமுறையும் அவர்களிடம் இருக்காது. ஒவ்வொன்றையும் தமக்கு எதிராக கற்பனை செய்து கொண்டு கோபத்திலும் கவலையிலும் விழுந்து கொண்டிருப்பார்கள்.

ஈமான் மென்மையை, பொறுமையை, சகிப்புத்தன்மையை ஏற்படுத்தும். அது உள்ளங்களை வென்றெடுப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளையே பின்பற்றும். அது ஒருபோதும் வெறுப்பூட்டும் பிரச்சாரத்திடம் அடைக்கலம் கோராது. நம்பிக்கையாளர்கள் ஒருபோதும் தங்களின் தனிப்பட்ட காழ்ப்புகளை, வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கு இஸ்லாத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவிட மாட்டார்கள்.

கடும்போக்கு ஈமானின் அடையாளம் அல்ல. அது அவர்களிடம் காணப்படும் அறியாமை மற்றும் பிடிவாதத்தின் விளைவு. தங்களின் தனிப்பட்ட வெறுப்பை, காழ்ப்பை, குரோதத்தை தாங்கள் உணரும் அழுத்தத்தை அவர்கள் இஸ்லாத்தின் பெயரில் வெளிப்படுத்துகிறார்கள். உண்மையில் இவர்கள் தஃவாவின் பாதையில் தடைக்கற்களை ஏற்படுத்துபவர்கள். தங்களின் அறியாமை மற்றும் பிடிவாதத்தின்மூலம் இஸ்லாத்தை வெறுப்புக்குரிய ஒன்றாக ஆக்க முனைபவர்கள்.

நான் அவதானித்தவரை, ஏதோ வகையில் அழுத்தத்திற்கு ஆளானவர்கள், கடுமையான குற்றவுணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு வகையான மனப்பிறழ்வு கொண்டவர்கள், மக்களிடையே ஆதிக்கம் செலுத்த விரும்புவர்கள் ஆகியோரே கடும்போக்காளர்களாக உருவெடுக்கிறார்கள். அவர்கள் உணரும் அழுத்தத்தை அவர்கள் சரியென நம்பும் கொள்கையின் வடிவில் வெளிப்படுத்துகிறார்கள். ஐடி துறையில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர்களில் பெரும்பாலோர் கடும்போக்குவாத ஸலஃபி இயக்கங்களில் தஞ்சமடைவதை நான் தற்செயலான ஒன்றாகக் கருதவில்லை. நான் இதனை அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான விதிமுறையாக முன்வைக்கவில்லை. ஆனால் பெரும்பாலோர் இந்த வரையறைக்குள் வந்து விடுவார்கள் என்று கருதுகிறேன்.

இந்த கடும்போக்காளர்கள் தங்களை சிறந்த முஸ்லிம்களாக காட்டிக் கொள்வதற்கு இஸ்லாத்தின் புறவயமான அடையாளங்களாக கருதப்படும் அனைத்து விஷயங்களையும் ஒன்றுவிடாமல் அப்படியே பின்பற்றுவார்கள். ஆனால் இஸ்லாம் கூறும் நற்பண்புகளால் தங்களை அலங்கரித்துக் கொள்ளவோ அதன் அறிவுரைகளால் தங்களை சீர்படுத்திக் கொள்ளவோ மாட்டார்கள். அவற்றைக் கண்டும் காணாமல் இருப்பார்கள்.

அவர்கள் தங்களைப் பண்படுத்திக் கொள்வதற்கு இஸ்லாத்தைப் பயன்படுத்துவதில்லை. தங்களின் மனஅரிப்புகளையும் காழ்ப்புகளையும் வெளிப்படுத்துவதற்கும் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும்தான் அவர்களுக்கு இஸ்லாம் தேவைப்படுகிறது. இஸ்லாத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் வேறு. கடும்போக்காளர்கள் வேறு. கடும்போக்காளர்களை தீவிர முஸ்லிம்களாகப் புரிந்துகொள்வது இஸ்லாம் குறித்த அறியாமையின் விளைவேயாகும்.

முஸ்லிம்களில் கடும்போக்குவாதிகள் பெரும்பாலும் ஸலஃபிகளிலிருந்தே உருவாகி வருகிறார்கள். இங்கு நான் ஸலஃபிகள் என்று கூறுவது அதன் விரிவான பொருளில் அல்ல. அரச சார்பு நிலைப்பாடு கொண்ட வலதுசாரிகளையும் அரச எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட ஜிஹாதிகளையும் மட்டுமே குறிப்பிடுகிறேன். இவர்கள் முன்வைக்கும் ஸலஃபித்துவம்தான் சமூகத்திற்கு ஆபத்தானது. முதலாமவர்கள் கருத்தியலின் அடிப்படையில் மட்டுமே கடும்போக்குவாதிகளாகக் கருதப்படுகிறார்கள். இரண்டாமவர்கள் கருத்தியல், செயல்பாடு என இருவகையிலும் கடும்போக்குவாதிகளாவர்.

இந்த வகையான ஸலஃபித்துவம் கடும்போக்குவாதமாக உருவாவதற்கான முக்கியமான காரணி, அதன் ஒற்றப்படையான புரிதல்தான். அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை, நபிமொழிகளை அவற்றின் கால, இடச் சூழல்களுக்கு அவை சொல்லப்பட்ட நோக்கங்களுக்கு உட்படுத்திப் பார்க்காமல் அப்படியே புரிந்துகொண்டு தவறான இடங்களில் அவற்றைப் பிரயோகிக்கிறார்கள். தவிர, தங்களின் புரிதல் மட்டுமே சரியானது, அவற்றை வேறு எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாது என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். இதுதான் சிக்கலானது. இங்கிருந்துதான் மாற்றுக் கருத்துகள் எதிர்க்கருத்துகளாக தோற்றம் பெறுகின்றன.

இன்னொருவகையில் இது மனித மனநிலை தொடர்பானதும்கூட. இது ஒருவகையான மனநிலை. இப்படிப்பட்டவர்கள் எல்லா மதங்களிலும் சிந்தனைப் பள்ளிகளிலும் காணப்படத்தான் செய்கிறார்கள். மாற்றுக் கருத்துகளை மூர்க்கமாக எதிர்க்கும் இவர்கள் அவற்றை சகித்துக்கொள்ளவோ எதிர்ப்புகளை தாங்கிக்கொள்ளவோ இயலாதவர்கள். இந்த அடிப்படையில் இவர்களை குறிப்பிட்ட எந்த ஒரு கொள்கையோடும் சிந்தனைப் பள்ளியோடும் இணைத்துக் கூற முடியாது. ஆனால் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இப்படிப்பட்ட இயல்பினர்கள் தங்களின் இயல்புக்கு ஒத்த கடும்போக்குவாத இயக்கங்களில் தஞ்சமடைந்து விடுகிறார்கள்.

கடும்போக்குவாதம் இஸ்லாத்திற்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல. அது ஒரு மனநிலை. எல்லா மதங்களிலும் கொள்கைகளிலும் இப்படிப்பட்ட மனப்போக்கு உடையவர்கள் காணப்படத்தான் செய்கிறார்கள். மாற்றுக் கருத்துகளை சகித்துக் கொள்ளவோ எதிர்ப்புகளை தாங்கிக்கொள்ளவோ சக்தியற்றவர்கள் இவர்கள். பெரும்பாலான வன்முறைகளுக்குப் பின்னால் இத்தகைய கடும்போக்குவாதிகளே இருக்கிறார்கள். எளிதில் பற்றி எரியும் இயல்பினர்கள் இவர்கள்.

கடும்போக்குவாதிகள் மிக விரைவாகவே சலிப்படைந்து விடுவதைக் காண்கிறேன். அவர்களின் கடும்போக்குவாதம் மற்றவர்களைவிட அவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. தங்களைத் தாங்களே அவர்கள் குறுகிய வட்டத்தில் அடைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்களையும் அந்த வட்டத்திற்குள் அடைக்க முயற்சிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அது அவர்களை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. அவர்கள் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் குறுக்கு வழிகளை நாட ஆரம்பிக்கிறார்கள். நெருக்கடியைத் தாங்க முடியாமல் சிலர் மடைதிறந்த வெள்ளம்போல தாம் பயணித்த திசைக்கு முற்றிலும் எதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அறியாமையும் பிடிவாதமும் கடும்போக்குவாதத்தின் மூலகாரணிகள். இரண்டு பண்புகளும் ஒருசேர ஒருவனிடம் காணப்படுவதைவிட பெரும் துரதிஷ்டம் வேறெதுவுமில்லை. அவை சிந்தனை என்னும் வெளிச்சத்தின் மீது பெரும் திரையாக விழுந்துவிடுகின்றன. கடும்போக்குவாதம் ஆரோக்கியமான நிலை அல்ல. அது நோய் அரித்துக் கொண்டிருப்பதன் அடையாளம். நம்பிக்கையாளன் எதையும் சிந்திக்காமல் குருட்டுத்தனமாக பின்பற்றக்கூடியவன் அல்ல. அவனது நம்பிக்கை குருட்டு நம்பிக்கையும் அல்ல. அது சத்தியத்தைக் கண்டடைதலின் வெளிப்பாடு.

இஸ்லாம் கூறும் சமநிலை என்பது சரியானதைப் பின்பற்றுவதாகும். அது இங்குமில்லாமல் அங்குமில்லாமல் தடுமாறித் திரிவதல்ல. அது மனித இயல்போடு முழுமையாக ஒன்றிப் போகக்கூடியதாகும். அது அவனை ஒருபோதும் நெருக்கடிக்கோ மனஅவஸ்தைக்கோ உள்ளாக்கிவிடாது.

Related posts

Leave a Comment