கட்டுரைகள் 

ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பமும் இஸ்லாமிய இயக்கமும்

Loading

வெகுஜன உணர்வுகளுக்குத் தீனியிடும் அமைப்புகளே மிக விரைவில் வளர்ச்சியடைகின்றன. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக, எந்த நோக்கம் கொண்டவர்களாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு விடுவார்கள். வெகுஜனங்களின் ஆதரவைப் பெற, தங்கள் உறுப்பினர்கள் தங்களைவிட்டும் சென்றுவிடாமல் காக்க பெரும்பாலான அமைப்புகள் இத்தகைய போக்கையே கடைப்பிடித்து வருகின்றன.

சாத்வீகமான, அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் ஆரம்பத்தில் கோமாளிகளாக, கோழைகளாக சித்தரிக்கப்பட்டலாம். ஆனால் பிற்பாடு அவர்கள்தாம் நிலைத்திருப்பார்கள். அறிவுப்பூர்வமான எதுவும் நீண்ட தர்க்கத்திற்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்படும். உணர்ச்சிகளைத் தூண்டுபவர்கள் உடனடி விளைச்சல்களை அறுவடை செய்யலாம். ஆனால் அவர்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது. உணர்ச்சிகள் தற்காலிகமானவை. மக்கள் விழிப்படைந்து விடலாம் அல்லது அவர்களை விட்டும் சலிப்படைந்து விடலாம். அறிவுப்பூர்வமான, நிதானமான செயல்பாடுகளின்மூலம் தங்களின் அமைப்புகளை முன்னெடுப்பவர்கள் அடுத்து வரும் தலைமுறைகளிலும் நீக்கமற நிலைத்திருப்பார்கள். வரலாறு இதைத்தான் நமக்குக் கற்றுத் தருகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நம் கண்முன்னால் இப்படித்தான் வேகமாக வளர்ச்சியடைந்தது. எந்த அறிவுப்பூர்வமான அடித்தளத்தையும் கொண்டிராமல் அது வெறுமனே மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி தமக்குத் தேவையானதை அறுவடை செய்துகொண்டிருந்தது. முஸ்லிம் சமூகத்தில் எங்கு நோக்கினும் அதன் குரல்களே ஓங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு பேட்டை ரவுடியைப் போன்று அது முஸ்லிம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. எந்த அளவு வேகமாக வளர்ச்சியடைந்ததோ அதைவிட பலமடங்கு வேகத்தில் திடீரென பொத்தென விழுந்து சரிந்தது. இன்று அதனை முழுமூச்சாக எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள், அதனை ஒன்றுமில்லாமல் செல்லா காசாக ஆக்கியவர்கள் அதன் முன்னாள் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும்தான்.

ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒரு சமூகத்தைக் கட்டமைப்பது மிகவும் கடினமானது. அது சலிப்பை ஏற்படுத்தாத, உத்வேகம் அளிக்கக்கூடிய தொடர் முயற்சிகளை வேண்டி நிற்கிறது. மனித மனம் எதையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளாது. அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவகாசம் அவசியமாகிறது. மிகக் குறைவானவர்களே அதில் தேர்ச்சி பெறுகிறார்கள். அவர்கள்தாம் தாக்கம் ஏற்படுத்தும், மக்களை வழிநடத்தும் ஆளுமைகளாக பரிணமிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆளுமைகள் குறைவாக இருந்தாலும் அவர்களே அக்கொள்கையின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டே அது நிலைபெறுகிறது.

மக்களில் பெரும்பாலோர் சுயசிந்தனை அற்றவர்கள் அல்லது சுயமாக சிந்திக்க விரும்பாதவர்கள். அவர்கள் யாரேனும் ஒருவரைப் பின்பற்றவே அல்லது ஒரு கூட்டத்தில் கலந்துவிடவே விரும்புவார்கள். ஒரு இயக்கத்திலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டு அதன் பலத்தை அளவிடுவது சரியாகாது. அதன் கொள்கைகளை சரியான முறையில் உள்வாங்கிக் கொண்ட மனிதர்களைக் கொண்டே அதன் பலம் கணிக்கப்பட வேண்டும்.

உண்மையாகவே இஸ்லாத்தை முன்னெடுக்க விரும்பும் இயக்கம் உறுப்பினர்களின் அதிக எண்ணிக்கையைக் கொண்டு பூரிப்படைந்து விடக்கூடாது. அதன் கொள்கையை சரியான முறையில் உள்வாங்கிக் கொண்ட தனிமனிதர்களை உருவாக்குவதில்தான் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

ஓர் இஸ்லாமிய இஸ்லாம் கூறும் போதனைகளையும் சட்டங்களையும் கொண்டே தன் உறுப்பினர்களைப் பண்படுத்த வேண்டும். அவற்றிலிருந்தே அது தனக்கான விதிகளை வகுத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாம் கூறும் அறிவுரைகளும் சட்டங்களும் எல்லா இடங்களுக்கும் காலங்களுக்கும் அனைத்துதரப்பு மக்களுக்கும் ஏற்றவை என்று அது உறுதியாக நம்பும்பட்சத்தில் அவற்றைவிடுத்து தம் உறுப்பினர்களுக்கென புதிய விதிகளை, சட்டங்களை வகுத்துக்கொள்ளாது. அவ்வாறு வகுத்துக் கொள்வது இறைச்சட்டங்களைப் புறக்கணிப்பதும் அவை எங்களின் சூழலுக்கு உகந்தவையல்ல என்று செயலளவில் அறிவிப்பதும் ஆகும்.

பெரும்பாலும் மனிதர்கள் கொள்கை மற்றும் ஒத்த சிந்தனையின் அடிப்படையிலேயே ஒன்றிணைகிறார்கள். தன் நம்பிக்கைகள், சிந்தனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மனிதன் விரும்புகிறான். அவனுடைய நம்பிக்கைகளும் சிந்தனைகளும் நிராகரிக்கப்படுவதை அவன் விரும்புவதில்லை. அதனால்தான் அவன் தன்னை ஒத்தவர்களைத் தேடி அலைகிறான். அப்படிப்பட்டவர்களை எங்கு கண்டாலும் அவர்களோடு ஒன்றிவிடுகிறான். அவர்களோடு தன் நம்பிக்கைளை, சிந்தனைகளைப் பரிமாறி அவற்றை வலுப்படுத்திக் கொள்கிறான்.

ஒத்த சிந்தனைகொண்ட உள்ளங்களே ஒருங்கிணைக்கப்படுகின்றன. மற்றவை எவ்வளவுதான் அருகில் இருந்தாலும் ஒட்ட முடியாமல் விலகியே இருக்கின்றன. பலவாறான காரணங்களைக் கொண்டு அவை தம் நிலைப்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றன. மனிதர்கள் அவர்களையும் அறியாமல் அவர்களுக்கென்று விதிக்கப்பட்டவற்றின் பக்கமே விரைந்தோடுகிறார்கள். அவர்களுக்கென்று இலகுபடுத்தப்பட்ட பணிகளைத்தான் செய்கிறார்கள். அந்தப் பணிகளைத்தான் அவர்களால் செய்ய முடியும். ஆர்வமும் திறமையும் அவற்றில்தான் ஒன்றிணையும்.

ஒரு காலம் இருந்தது. அப்போது டிஎன்டிஜேவின் குரலே தமிழ் முஸ்லிம் சமூகத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. எங்கு திரும்பினும் அவர்களே தென்பட்டார்கள். இஸ்லாமியப் பிரச்சாரம், சமூகப் பணி என அவர்கள் முழுமூச்சாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். மற்ற இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் ஒரு புறமிருந்து அது மட்டும் தனித்து ஒருபுறம் நின்ற போதிலும் அதன்மீது மட்டுமே மக்களின் கவனம் குவிந்திருந்தது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த அது மாபெரும் மக்கள் பேரியக்கமாக விரிந்து நின்றது. திடீரென்று முளைக்கும் காளான்கள்போல ஆங்காங்கே அதன் புதுப்புது கிளைகள் உருவாகிக் கொண்டேயிருந்தன.

ஆனால் அதன் சரிவும் அப்படியே அமைந்ததுதான் பெரும் துயரம். வானுயர நின்ற அதன் கட்டடம் யாருமே எதிர்பாராத விதத்தில் பொத்தென சரிந்து விழுந்தது. அதன் உறுப்பினர்கள் இடையனை இழந்த ஆடுகள்போல செய்வதறியாமல் அங்குமிங்கும் ஓடினார்கள். தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டார்கள். நம் கண் முன்னால் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பேரியக்கம் இன்று தன் இருப்பைக்கூட தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

அதன் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் நமக்கு ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. அதன் வீழ்ச்சி ஏதோ தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல. அது எதிர்பார்க்கப்பட்டதுதான். அதன் வேகமான வளர்ச்சி அழிவின் கூறுகளையும் உள்ளடக்கியிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு இயக்கம் மக்கள் பேரியக்கமாக மாற அதற்கு ஒரு கதாநாயக பிம்பம் அவசியமென கருதப்படுகிறது. அந்த பிம்பத்தைத்தான் இயக்கம் தன் ஆணிவேராக, அடித்தளமாக கொண்டு இயங்கும். அதே சமயம் அதே கதாநாயக பிம்பத்தைக் கொண்டே அதனை எளிதில் வீழ்த்தி விடவும் முடியும். பீஜே என்னும் கதாநாயக பிம்பத்தைக் கொண்டே அந்த இயக்கம் வேகமாக வளர்ச்சியடைந்தது. தனி மனிதர்களை வழிபடக்கூடாது என்று சொல்லிக் கொண்டே அதன் உறுப்பினர்கள் அவரை மனதளவில் அளவுக்கு அதிகமாக வழிபட்டுக் கொண்டிருந்தது வேடிக்கையான நகைமுரண். அந்த கதாநாயக பிம்பம் சிதைக்கப்பட்டதுடன் ஒட்டுமொத்த இயக்கமும் ஆட்டம் காணத் தொடங்கியது.

அதனிடம் காணப்பட்ட மற்றுமொரு அழிவின் கூறாக நான் கருதுவது, ஆன்மீகத்தின் பெயரால் அது வளர்ந்தாலும் பெயரளவில்தான் அதனிடம் ஆன்மீகம் காணப்பட்டது. அங்கு அரசியலே ஆன்மீகச் சாயலில் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஆன்மீகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படும் இறைவனுக்காக செயல்படும் தன்மை, உண்மை, நேர்மை, தூய்மை ஆகிய பண்புகளைக் கொண்டிராமல் வெறும் அடையாளங்களைக் கொண்டு தன்னை அலங்கரித்துக் காட்டிக் கொண்டிருந்தது. உண்மை வெல்லும் என்பது மூடநம்பிக்கையல்ல. அது ஆன்மீகம் கற்றுத்தரும் அடிப்படையான நம்பிக்கை. அனுபவங்கள் மீண்டும் மீண்டும் அதனை மெய்ப்பித்துக் கொண்டேயிருக்கும்.

அகங்காரம் நிச்சயம் அழிவையும் இழிவையும் கொண்டு வரும். ஒரு தனிமனிதனோ ஓர் அமைப்போ தொடர்ந்து அகங்காரத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தால் அது அவனது அல்லது அதனது அழிவு நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறி. கர்வத்தால் உயர்ந்த ஒவ்வொன்றையும் இறைவன் இழிவைக் கொண்டு தாழ்த்தியே தீருவான். இது குர்ஆன் கற்றுத்தரும் மாறா இறைநியதி. சர்வாதிகாரிகளின் சாவு எவ்வளவு இழிவாக அமைந்துவிடுகிறது! அப்படித்தான் அதுவும் ஆனது.

Related posts

Leave a Comment