குறும்பதிவுகள் 

ஃபிரான்ஸ் ஃபனானும் இஸ்லாமும்

பிரெஞ்சுக் காலனித்துவக்கு எதிரான அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டாக்கம் செய்ததில் முதன்மையானவர் ஃபிரான்ஸ் ஃபனான்.

அந்த வகையில் The Wretched of the Earth எனும் அவரின் நூல் பிரதானமானது. அது “ஒடுக்கப்பட்டவர்கள்: விடுதலையின் வடிவங்கள்” என்ற தலைப்பில் விடியல் பதிப்பக வெளியீடாக தமிழிலும் வந்துள்ளது. தற்போது கிடைப்பதில்லை.

நவீன யுகத்தின் அதிஉக்கிரமான விடுதலைப் போராட்டங்களில் ஒன்றான அல்ஜீரியப் போர் பற்றியும் அதற்குக் காரணமாக அமைந்த காரணிகள் பற்றியும் மிக விரிவாக அவர் இதில் உரையாடியிருக்கிறார்.

“தன்னெழுச்சி”, “அமைப்பாதல்” என்ற இரண்டினை அவர் முதன்மைக் காரணிகள் என முன்வைக்கிறார். அல்ஜீரியாவின் கிராமப்புற விவசாயக் குடிகள்தான் அவர் சொல்லும் “தன்னெழுச்சியின்” மூலஊற்று. அல்ஜீரியாவின் கம்யூனிஸ்ட் கட்சியே கூட, “சோசலிச பிரான்சின் ஒரு மாகாணமாக இருப்பதே அல்ஜீரியாவின் எதிர்காலத்துக்கு நல்லது” என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில், வைதீக மார்க்சியக் கோட்பாட்டுக்கு முரணாக, விவசாயிகள் அந்தப் புரட்சியில் வெகுவாகப் பங்கெடுத்துக் கொண்டனர்.

புரட்சியை ஆரத் தழுவிக்கொள்ளும்படி அல்ஜீரிய விவசாயப் பெருங்குடிகளை உந்திய காரணி எது? அதுபற்றி ஃபனான் மூச்சுக்கூட விடவில்லை. அது “தன்னெழுச்சி” என்று எளிதாகக் கடந்து செல்கிறார். உண்மை என்னவென்றால், அல்ஜீரியாவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்லாமிய அறிஞர்களின் தலைமையிலான வீரஞ்செறிந்த காலனித்துவ எதிர்ப்புப் போராட்ட மரபுதான் ஃபனான் குறிப்பிடும் அந்தத் “தன்னெழுச்சி”. பத்தொன்பதாம் நூற்றாண்டு நெடுகிலும், ஏன் 1940-50கள்வரை கூட உயிர்ப்போடு இருந்த ஓர் போராட்டம் அது.

இப்படியிருக்க, “இஸ்லாம்” என்ற வார்த்தையை மறந்தும்கூட ஃபனான் குறிப்பிடாததை எப்படி விளக்குவது? இதனை ஆங்கிலத்தில் “Elephant in the room” என்பார்கள். தமிழில் சொல்வதென்றால் “முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது” எனலாம்.

காலனியக் கதையாடலை மட்டுமல்ல, காலனிய நீக்கக் கதையாடலையும் கூட நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

அதுபற்றிய ஒரு விரிவான கட்டுரையை இங்கு வாசிக்கலாம்.

Related posts

Leave a Comment