தொடர்கள் மொழிபெயர்ப்பு 

தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)

Loading

[On Suicide Bombing என்ற பெயரில் மானுடவியலாளர் தலால் அசத் எழுதிய முக்கியமான புத்தகத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் முன்னுரை உங்கள் பார்வைக்கு.]

செப்டம்பர் 11, 2001 அன்று நகரத்தில் இருந்த பெரும்பாலான நியூயார்க்வாசிகளைப் போலவே நானும் அன்று நடந்த நிகழ்வுகளைப் பெரிதளவு ஊடகத்தின் மூலமாகவும், தீவின் தென் பகுதியில் படர்ந்திருந்த புகை மண்டலம் மற்றும் அன்று அமெரிக்கர்களின் உரையாடல்களிலும் நடவடிக்கைகளிலும் தாக்கம் செலுத்தியிருந்த உணர்வுநிலையைக் கண்ணுற்றதன் மூலமாகவும்தான் தெரிந்து கொண்டேன். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை செப்டம்பர் 11 என்பது அவர்கள் தீவிரவாதத்தோடு —சிலபோது வெளிப்படையாகவும், பல நேரங்களில் உட்கிடையாகவும்— தொடர்புபடுத்தப்படுகிற ஒரு நீண்டகாலப் பதற்றநிலையின் தொடக்கமாகும். ஐக்கிய மாகாணங்கள், மேற்கு ஐரோப்பா மற்றும் இஸ்ரேலிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களில் பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை அத்தற்கொலை மனித வெடிகுண்டு, உடனடியாக இஸ்லாமிய “மரணக் கலாச்சாரத்தின்” குறியீடாக உருவெடுத்தான். இது பெரிதும் மேற்கத்திய ஊடகங்களால் “இஸ்லாமியத் தீவிரவாதம்” எனச் சித்தரிக்கப்பட்ட தற்கால வன்முறைப் பாங்கு (mode of violence) குறித்து என்னைத் தொடர்ந்து சிந்திக்க உந்தியது.

மத உணர்ச்சியால் உந்தப்பட்ட வன்முறை என்று ஏதாவது இருக்கிறதா என என்னையே நான் கேட்டுக்கொண்டேன். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது ஏனைய கொடூரங்களிலிருந்து எவ்வகையில் வேறுபட்டது? வெறுமனே கொல்லும் செயல் போலல்லாது இதன் நோக்கத்தை எது மத வகைப்பட்டதாக ஆக்குகிறது?  வேறு கூட்டு வன்முறைகளுடன் ஒப்பிடுகையில் இது என்ன இடத்தைப் பெறுகிறது? தன்னையும் மற்றவர்களையும் கொல்லும் தற்கொலை வெடிகுண்டின் பிம்பத்தை கிறித்தவரும், பின்னை-கிறித்தவரும் எவ்வாறு அணுகினர்? எனது கேள்விகள் முதன்மையாக அறவியல் கரிசனையில் இருந்தல்ல, மாறாக கருத்தியல் மற்றும் பௌதீக யதார்த்ததுக்கு இடையிலான தொடர்பு பற்றிய ஆர்வத்திலிருந்தே எழுந்தன என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். சர்வசாதாரணமாகவும் அதிர்ச்சியுடனும் எடுத்துக்கொள்ளப்படும் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி சிந்திப்பது, என்னைப் பொறுத்தவரை சாதல் மற்றும் கொல்லுதல் குறித்த சில நவீன முன்னனுமானங்களைத் திறந்து காட்டும் ஒரு வழியாகும். அறவியல் ரீதியில் நல்ல கொலைகள், கெட்ட கொலைகள் என்று பகுக்க நாம் என்னதான் முயன்றாலும், நமது முயற்சிகள் முரண்பாடுகள் நிறைந்தவையாகவே இருக்கின்றன. மேலும் இம்முரண்பாடுகள் நமது நவீனத் தன்னிலையின் பலவீனமான பகுதியாக இருக்கின்றன என்பதே இவ்விஷயத்தில் நான் வந்தடைந்திருக்கும் அடிப்படையான கருத்தாகும்.

இங்கு ஐக்கிய மாகாணங்கள் மற்றும் இஸ்ரேல் மீதுதான் நான் மிகுதியாகக் கவனம் குவித்திருக்கிறேன் என்பது வெளிப்படை. ஏனைய பிரதேசங்களிலும் தீவிரவாதம் இருக்கிறதுதான்: சில நாடுகளின் பெயர்களைச் சொல்ல வேண்டுமென்றால் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் அமெரிக்காவிலும் அதன் உள்நாட்டு, நிறுவனமயப்பட்ட தீவிரவாதம் எப்போதும் இருந்தே வந்துள்ளது, இப்போது தீவிரவாதம் எனும் வார்த்தையை மக்கள் செவியேற்கும்போது இது நினைவு கூறப்படுவதில்லை என்பது தனிக்கதை.  ஆயினும், ‘தீவிரவாதத்திற்கெதிரான போர்’ என்னும் சிந்தனை பிரத்தியேகமான முறையில் வளர்த்தெடுக்கப்பட்டும், வெளிப்படுத்தப்பட்டும் வருவது அமெரிக்கா என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான். மேலும் தீவிரவாதம் (மற்றும் நீதியான போர்) பற்றிய கோட்பாட்டுருவாக்கம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலில்தான் நடக்கிறது. முழு மொத்தத்துவ ஆய்வையெல்லாம் விட்டுவிடுவோம்,  தீவிரவாதத்தை நமது காலத்தின் ஒரு பிரத்தியேகமான நிகழ்வுப்போக்காக அணுகும் பிரதிநிதித்துவ ஆய்விலும் எனக்கு ஆர்வமில்லை. எளிமையாகச் சொல்வதென்றால், நாம் தரித்திருக்கும் இந்த அசமத்துவ உலகில் தீவிரவாதத்தின் உருவாக்கமும் அட்டகாசங்களின் அரங்கேற்றமும், எது கொடூரம் மற்றும் எது அத்தியாவசியமானது என்பவை குறித்த நமது அபிப்பிராயங்களும் (notions), மேலும் குறிப்பிட்ட வகை ‘சாவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை’ (death dealing acts) நாம் எத்தகைய உணர்வுநிலையோடு நியாயப்படுத்துகிறோம் அல்லது கண்டிக்கிறோம் என்பது பற்றியுமே நான் இங்கு விவாதிக்கிறேன்.

இப்புத்தகம் ஒரு எளிய அமைப்பையே கொண்டுள்ளது. முதல் அத்தியாயத்தில்,  “தற்காலத் தீவிரவாதத்தின் சாராம்சம் இஸ்லாமியத் தீவிரவாதமே” என்ற கருத்தை முன்மொழியும் “நாகரிகங்களுக்கிடையிலான மோதல்” கோட்பாட்டை சோதனைக்குட்படுத்துவதிலிருந்து தொடங்குகிறேன். மேலும் தன்னிறைவு பெற்ற, சுயசார்பான மற்றும் என்றும் மாறாத மதிப்பீடுகள் (fixed values) கொண்ட நாகரிகங்கள் என்ற அனுமானம் உள்ளீடாக இருக்கும் ஒரு வகை வரலாற்றையும் மறுத்து வாதிடுகிறேன். பிறகு நீதியான போரிலிருந்து தீவிரவாதத்தைப் பிரித்துக்காட்ட முயன்ற ஒரு மதிப்புமிக்க மெய்யியலாளரின் முயற்சி குறித்துப் பரிசீலிக்கிறேன். மேலும் தீவிரவாதம் குறித்த பொது உரையாடல் (public discourse) பரந்துபட்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கும் காரணங்கள் குறித்தும் அனுமானிக்கிறேன்.

நவீன காலத்தில் தீவிரவாதம் என்பது கோட்பாட்டுருவாக்கத்தையும் (தீவிரவாதம் என்றால் என்ன?), நடைமுறை சார்ந்த  தகவல் சேகரிப்பையும் (தீவிரவாத அபாயத்தை ஒருவர் எவ்வாறு தடுக்க முடியும்?) கோரும் ஒரு அறிவுத்தோற்றவியல் பொருள் (epistomological object) என்று நான் குறிப்பிடுகிறேன். இவ்விரு வேலைகளும் ஒன்றோடொன்று சார்புடையன. ஆனாலும் தீவிரவாதம் என்பது இத்தகைய வேலைகளுக்கான ‘பொருள்’ மட்டுமல்ல. அது சாராம்சத்திலேயே நவீனமல்லாத, தாராண்மையற்ற (non-liberal) கலாச்சாரம் என்று என்னதான் புறமொதுக்கப்பட்டாலும், அது தாராண்மைவாத தன்னிலைகளின் (அரசியல் தீவிரவாதத்தை வீழ்த்த வேண்டும் என்னும் விருப்பம், சமூகம் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறது என்ற அச்சம், மரணம் மற்றும் அழிவு மீதான அதிர்ச்சியும் ஆர்வமும்) பிரிக்கப்படமுடியாத பகுதியாகவும் இருக்கிறது.

இரண்டாவது அத்தியாயத்தில், தற்கொலைத் தீவிரவாதத் தாக்குதல் பற்றி தற்காலத்தில் வழங்கப்படும் ஒரே தரத்திலமைந்த பலவாறான விளக்கங்களை நான் விமர்சனப் பார்வைக்கு உட்படுத்துகிறேன். அத்துடன் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபடுபவனுக்கு (கொல்ல வேண்டும் என்ற வெளிப்படையான நோக்கத்துக்கு மாறாக) பிரத்தியேகமான நோக்கத்தைக் கற்பிப்பதில் இத்தகைய எழுத்தாளர்களிடம் இருக்கும் மனப்போக்கையும், அதில் அவர்கள் மூழ்கியிருப்பதையும் நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன். நான் சொல்வது என்னவென்றால், பொதுவாகவே நோக்கங்கள் என்பவை —பொதுப்புத்தி அது குறித்து கொண்டிருக்கும் கருத்துக்கு மாறாக— புரிந்துகொள்ள மிகவும் சிக்கலானவையாகும். மேலும் ‘அடைந்துவிடக்கூடிய உண்மைகளாக’ அவற்றை அணுகுவது தவறாகும். குறிப்பாக, சரிபார்த்து (verify) அறிய முடியாத தற்கொலை வெடிகுண்டுகளின் நோக்கங்கள் என்பவை நமது எதிர்வினைகளை நியாயப்படுத்தும் புனைவுகளாகவே எப்போதும் இருக்கின்றன.

பிறகு, நான் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் என்னும் நிகழ்வுப்போக்கை அரசியலுடன் தொடர்புபடுத்தி கொல்லுதல் மற்றும் சாதல் குறித்த பெரிய கேள்விகளை எதிர்கொள்ளும் எழுத்தாளர்களிடமிருந்தும் விலகிச் செல்கிறேன். கருத்துகளின் வரலாற்றிலிருந்து பயன்பெறும் நான், தாராண்மைவாத சிந்தனை வன்முறையிலிருந்து அரசியலைப் பிரித்திருந்தாலும், தாராண்மைவாதம் ஒரு அரசியல் உருவாக்கம் (liberalism as a political formation) எனும் அளவில் அதன் பிரிக்க முடியாத பகுதியாக உடல் மீதான வன்முறை இருக்கிறது என்பதை இங்கு நான் வலியுறுத்துகிறேன். நவீன முற்போக்கு (தாராண்மை ஜனநாயக அரசு உட்பட) அரசில் நடக்கும் —அரசால் நடத்தப்படும்— சட்டபூர்வமான வன்முறை தீவிரவாத வன்முறையில் இல்லாத ஒரு பிரத்தியேகமான பண்பைக் கொண்டிருக்கிறது (அத்தகைய பண்பு பின்னதில் இல்லாதிருப்பதற்கான காரணம் அதன் நலவு அல்ல, முன்னது கொண்டிருக்கும் ஆற்றலே): நுட்பத்திறன் பெற்று வளர்ச்சியடைந்த (sophisticated) சமூக நிறுவனங்கள் தன்னகத்தே கொண்டிருப்பதும், ஊட்டம் கொடுத்து வளர்ப்பதுமான ‘கொடூரம் மற்றும் கருணை’ ஆகியவற்றின் கலவைதான் அப்பண்பு.

மூன்றாவதும் இறுதியானதுமான அத்தியாயத்தில் தற்கொலைக்கு —குறிப்பாக தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு— வழக்கமாக வரும் எதிர்வினையான அதிர்ச்சி எனும் கருத்துருவை ஆராய்கிறேன். ஒரு பக்கம் அதிர்ச்சி என்பது சமூக மற்றும் தனிநபர் அடையாளங்கள் தகர்ந்து விழுந்து, உருச்சிதைவுக்கு (dissolution of form) இட்டுச்செல்லும் நிலையோடு தொடர்புடையது என்ற கருத்தை விரித்துரைப்பதற்கு மானுடவியல் எழுத்துக்களை நோக்கிச் செல்கிறேன். இன்னொரு பக்கம் கிறித்தவ இறையியலின் சில அம்சங்களின் மீது நான் கவனம் செலுத்துகிறேன்: வரலாற்றின் மிகப் பிரபலமான தற்கொலை சிலுவைப்பாடு (crucifixion) ஆகும். அதன் அதிர்ச்சி —கொடுமை மற்றும் கருணை இரண்டினதும் கலவையின் வழியே— பிரபஞ்சம் தழுவிய மானுட மீட்சிக்கான செயல்திட்டமாக ஆனது. இதுதான் இப்புத்தகத்தின் ஊகங்கள் நிறைந்த பகுதியாகும். எனினும் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் குறித்து வெளிப்படுத்தப்படும் அதிர்ச்சியின் உள்ளடக்கம் என்ன என்பதாக நான் இறுதியில் முன்வைக்கும் அடுக்குமுறை விவரணைக்கு அது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இந்தப் புத்தகம் தவறான வாசிப்புக்குள்ளாகும் சாத்தியம் இருப்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான எச்சரிக்கை. தீவிரவாதத் தாக்குதல்களை சில வேளைகளில் அறவியல் அடிப்படையில் நியாயப்படுத்த முடியும் என நான் வாதிடவில்லை. என்னை வியப்புக்குட்படுத்தும் உண்மை என்னவென்றால் நவீன அரசுகள் முன்னெப்போதையும் விட எளிமையாகவும், பாரிய அளவிலும் மனிதர்களை அழித்து, சிதறடிக்கும் வலிமையைப் பெற்றிருக்கின்றன என்பதும், இத்தகைய ஆற்றலின் அருகில் கூட தீவிரவாதிகளால் நெருங்க முடியாது என்பதும்தான். நிறைய அரசியல்வாதிகள், பொது அறிவுஜீவிகள், இதழியலாளர்கள் ஆகியோர் மற்ற மனிதர்களைக் கொல்வது, இழித்துரைப்பது போன்றவற்றை மிகுந்த அறிவுக்கூர்மையோடு செய்வதும் என்னைத் துணுக்குறச் செய்கிறது. இவர்களின் பிரச்சினை கொல்வதோ, மனிதாயநீக்கம் செய்வதோ இல்லை, மாறாக எப்படிக் கொல்வது மற்றும் என்ன நோக்கத்துக்காக என்பதுதான் என்றே தோன்றுகிறது.

எல்லாக் காலகட்டத்தையும் சேர்ந்த மனிதர்கள், தங்களது எதிரிகளையும் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள் என்று அவர்கள் கருதிய மற்றவர்களையும் கொல்வதை நியாயப்படுத்தியே வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் இத்தகைய நியாயப்படுத்தல்களில் ஈடுபடும் தற்காலத்தைய தாராண்மைவாதிகள் தங்களை அறவியல் ரீதியில் மேலானவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள். இந்தச் சிந்தனையே சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் இந்தச் சிந்தனை உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. தாராண்மைவாதச் சிந்தனை தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான முற்றுரிமை எல்லோருக்கும் இருக்கிறது என்ற கருதுகோளிலிருந்தே தோற்றம் பெறுகிறது. மேலும் தற்காப்பு எனும் கருத்துரு பலவாறான விரிவுரைகளுக்கு உட்பட்டதே என்பதைக் குறித்தும் அது முழுமையான பிரக்ஞையோடே இருக்கிறது.

அதனால்தான் (உதாராணத்திற்கு) ஈராக்கின் ஒடுக்குமுறையாளனிடமிருந்து விடுதலை பெறுவதென்பது, அமெரிக்க ஆக்கிரமிப்பாளனுக்கும் ஈராக்கிய கிளர்ச்சியாளர்களுக்கும் தற்காப்பின் ஒரு பகுதியாகும். தங்களை மீட்டுக் கொள்வதற்காகவோ, அல்லது தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்ள முடியாதவர்களுக்காகவோ தீமைக்கெதிராகப் போராடுவது மக்களின் மீது கடமையாகும் என்று நிறைய தாராண்மைவாதிகள் நம்புகிறார்கள். தீமை என்னும் கருத்தாக்கம் மெனிக்கிய (Manichaean) அல்லது ஸொராஸ்ட்ரிய அறிவுறுத்தல்களைப் போன்று, உலகின் அடிப்படையான சாராம்சமாக அல்லாது தெய்வீக நாட்டத்தை எதிர்க்கும் செயல்திறன் கொண்ட கூறாகப் பார்க்கப்படுவதால் அது அழித்தொழிக்கப்பட வேண்டியதாகவும் கருதப்படுகிறது. இதனால் இந்த நாட்டத்தை எதிர்ப்பதே தீமை என்றும், இத்தீமையை நன்மையின் கூட்டத்தினர் எல்லோரும் என்ன விலை கொடுத்தேனும் வீழ்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. (கிறித்தவ நம்பிக்கையைப் பொறுத்தவரை, கிறிஸ்து தீமையை வென்றார், சிலுவைப்பாடின் வழி தேவன் பூமியுடனான தனது உறவை மறுசீரமைப்பு செய்துகொண்டார். தீமையுடனான போர் என்பது பழமையான நியாயப்படுத்தல்தான், ஆனால் அது இன்று புதிய உருவாக்கங்களைப் பெறுகிறது. இதன் பொருள், இன்றைய உலகம் என்பது, நிறைய பேர் கருதுவது போன்று வெறுமனே கிறித்தவத்தின் மலர்ச்சி என்று நான் வாதிடுகிறேன் என்பதல்ல. எனது பார்வையில் மதச்சார்பற்ற நவீனத்துக்கும் அதன் கடந்த காலத்துக்கும் இடையில் தொடர்ச்சிகளும், தீவிரமான முறிவுகளும் இருக்கிறது என்பதுதான்.

இறுதியாக, இப்புத்தகம் நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறை குறித்த நமது அறவியல் சிக்கல்களுக்கு தீர்வுகள் வழங்குவதாக பாவனை செய்யவில்லை. இது சில கொடூரங்களுக்கு மாற்றாக வேறு சில கொடூரங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லியும் வாதிடவில்லை. இதன் எதிர்பார்ப்பு என்பது, தீவிரவாதம், போர் மற்றும் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு வழங்கப்பட வேண்டிய அறவியல் எதிர்வினைகளை முற்சாய்வுகளாகப் பொதிகட்டிக்கொண்டு வரும் விமர்சனப்பாங்கற்ற மற்றும் சுயநியாயப்படுத்தல் கொண்ட பொது உரையாடல்களிலிருந்து ஒரு வாசகர் தன்னைத் தூரமாக்கிக்கொள்ளப் போதுமான அளவு அவரை உலுக்குவதே ஆகும்.

பின்வரும் அத்தியாயங்கள் முதலில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் இர்வினில் மே 15-17, 2006 அன்று வெல்லக் நூலகச் சொற்பொழிவாக வழங்கப்பட்டவை. என்னை உரையாற்ற அழைத்ததற்காக இன்ஸ்ட்டிட்யூட் ஃபார் க்ரிட்டிகல் தியரிக்கும், கேள்விகளை முன்வைத்து, கருத்துகளைத் தெரிவித்த பார்வையாளர்களுக்கும், இன்ஸ்ட்டிட்யூட்டின் இயக்குனர் ஜான் எச். ஸ்மித்துக்கும், குறிப்பாக காப்ரியலா ஸ்காப், இந்தர்பால் க்ரெவல் மற்றும் என்னை நல்ல முறையில் வரவேற்ற பில் மாரருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய பணியிட நண்பர்களும், வேறு நண்பர்களும் இதன் பல்வேறு வரைவுகளிலும் அவர்களது மதிப்புமிக்க கருத்துகளின் மூலம் உதவி புரிந்திருக்கிறார்கள்: ஹுசைன் அக்ராமா, பார்த்தா சட்டர்ஜி, வீனா தாஸ், மரியா பியா தியா பெல்லா, அபூ ஃபர்மான், கோல்ட்ஃபார்ப், பாபர் ஜோஹன்சன், மஹ்மூத் மம்தானி, தாமஸ் மஸ்ட்நாக், கெய்த் நீல்ட், கியான் பாண்டே, டேவிட் ஸ்காட், முஹம்மத் தபிஷாத் மற்றும் டேவிட் வால்டன். ஆயினும் நான் இங்கு வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகளுக்கு அவர்கள் யாரும் பொறுப்பாக மாட்டார்கள்.

தமிழில்: ஆஷிர் முஹம்மது

Related posts

Leave a Comment