ஹிஜாப் விவகாரம்: பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவிகள் சொல்வதென்ன? (நேரடி ரிப்போர்ட்)
கர்நாடகாவில் நடந்துவரும் ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்ட அஃப்ரா அபூபக்கர் அதுகுறித்து ஓர் இணையவழிக் கூட்டத்தில் பகிர்ந்த விஷயங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள ஒரு பெண்களுக்கான அரசுப் பள்ளியில்தான் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை எழுந்தது. வழக்கமாக அங்கு மாணவிகள் தம் வீட்டிலிருந்து பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வருவார்கள்; வகுப்பறையில் அதை அணியமாட்டார்கள். இப்போது சில மாணவிகள் வகுப்பறைக்குள்ளும் ஹிஜாப் எனும் தலைத்துணியை அணிந்தது பிரச்னையாக்கப்பட்டுள்ளது. அதைக் கழற்றுமாறு மாணவிகளிடம் ஆசிரியர்கள் சொல்லும்போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கையில், ஆசிரியர்களுக்குக் கட்டுப்பட மறுக்கிறார்கள் என்கிற ரீதியில் ஒருவகையான ஒழுக்கம் சார்ந்த விவகாரமாகவே இது தொடங்கியிருக்கிறது.
பொதுவாக ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் மறுத்தால் என்ன நடக்கும்? தலைமையாசிரியரைச் சந்திக்கச் சொல்வார்கள். அங்கு சம்பந்தப்பட்டவர்களைக் கண்டிப்பார்கள். இங்கும் அப்படித்தான் ஆரம்பித்துள்ளது. தலைத்துணியைக் கழற்ற மறுத்த மாணவிகளை தலைமை ஆசிரியரின் அலுவலகம் முன் நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது, மாணவிகள் ஒழுங்கீனமாக இருக்கிறார்கள் என்ற தொனியில் கடுமையாகவும் சற்று இஸ்லாமோ ஃபோபிக்காகவும் பேசுவது முதலானவை நடந்துள்ளன. பிறகு மாணவிகள் சில இடங்களில் அவர்களுடன் வாதம் புரியவே பெற்றோர்களை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்கள். பெற்றோர்களை வரச் சொன்னது, தலைமை ஆசிரியர் அறையின் வெளியே அவர்களையும் காக்கவைத்தது, கடுமையாகப் பேசியது போன்றவை அவர்களுக்குச் சங்கடமளித்திருக்கின்றன.
ஆசிரியர்களுக்கு மாணவிகள் மதிப்பளிக்க வேண்டாமா என்று கேட்கப்படுகிறது. ஆனால் இவ்விவகாரத்தில் சிறுபான்மையின மாணவிகளுக்கு, அவர்களின் பெற்றோருக்கு, சமூகத்தினருக்கு ஆசிரியர்களும் அந்தக் கல்வி நிறுவனமும் தந்த மரியாதைதான் என்ன? அவர்கள் எல்லாச் சமூத்தினரையும் ஒன்றுபோல சமமாக அணுகாமல் இருப்பதை அவர்களிடம் வெளிப்படையாக முன்வைக்கவும் முடிவதில்லை, சொன்னாலும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ளவும் மாட்டார்கள்.
தொடக்கநிலையில் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே சில பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அதில் ஹிஜாப் அணியக் கூடாது, கல்வி வளாகத்துக்குள் முஸ்லிம் மாணவர்களின் பேச்சில் உருது, ப்யாரி (கர்நாடக முஸ்லிம்களால் பேசப்படும் மொழி), அறபி வெளிப்படக் கூடாது முதலான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக கர்நாடகாவில் பல மொழிகள் பேசுகிறார்கள். உடுப்பியிலேயே கன்னடம், துளு, கொங்கனி, ப்யாரி, உருது, இந்தி, நைவாத்தி பேசுவோர் உண்டு. இது ஆங்கிலவழிப் பள்ளிக்கூடம்தான் என்றாலும் சில ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களுக்குள் துளுவில் பேசிக்கொள்கிறார்கள். அந்த மாநிலத்தின் பிரதான மொழியான கன்னடத்திலும் பேசுகிறார்கள். ஆனால் இந்த முஸ்லிம் மாணவிகள் தங்களுக்குள் உருது, ப்யாரியில் பேசக் கூடாதாம். வளாகத்தில் சில மொழிகள் அனுமதிக்கப்படுவதும், சில அனுமதிக்கப்படாததும் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?
பள்ளிக்கூடத்துக்குப் புத்தகப் பையுடன் வரும்போதே உங்கள் சொந்தக் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் கழட்டி வைத்துவிட்டு வருமாறு சில குறிப்பிட்ட சமூக மாணவர்களிடம் மட்டுமே கோரப்படுகிறது. எல்லா மாணவர்களிடமும் அவ்வாறு சொல்லப்படுவதில்லை. தன் சொந்தச் சமூகத்திலிருந்து விலகி பொதுவாகவும் பெரும்பான்மையாகவும் கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் சிறுபான்மையினர் மீதுதான் சுமத்தப்படுகிறது.
அரசுப் பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப்படுவது, ஒதுக்கி வைக்கப்படுவது புதிய நடைமுறையல்ல. நிறுவன ரீதியிலான சிக்கல் நெடுங்காலமாக இங்கு தொடர்கிறது. 2010ல் மத்தியப் பிரதேசத்திலும், 2015ல் ஹரியானாவிலும் பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று சொன்னபோது, முஸ்லிம் குடும்பங்களைச் சார்ந்தோர் தம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் ஏற்பட்டது. பள்ளிகளில் சூர்ய நமஸ்காரம் செய்யச் சொல்வது, மதிய உணவு உண்பதற்கு முன் போஜன மந்திரம் சொல்லச் சொல்வது, சரஸ்வதி மந்திரம் சொல்லச் சொல்வது முதலானவை மதச்சார்பற்ற கல்விக்கூடங்களிலிருந்து முஸ்லிம் மாணவர்களை அந்நியப்படுத்துவதாக அமைகின்றன.
இந்த உடுப்பி அரசுப் பள்ளியில் மாணவிகள் தம் மொழிகளைப் பேசுவது, தலைத்துணி அணிவது தொடர்பாகக் கேட்டபோது ஆசிரியர்கள், ‘இது ஆங்கிலவழிப் பள்ளிக்கூடம், இங்கு ஆங்கிலம்தான் கல்வி மொழி. இங்கே சில ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்’ என்ற ரீதியில் பதிலளித்திருக்கிறார்கள். இப்படி Uniform, Discipline என்ற மொழியில்தான் பிரச்னை கையாளப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இது ஒரு கட்டத்தில் தலைமையாசிரியரையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் தாண்டி, கல்லூரி மேம்பாட்டு கமிட்டியின் தலைவரும், உடுப்பி தொகுதி பாஜக எம்எல்ஏவுமான ரகுபதி பாட் இதில் தலையிடும்போது பிரச்னை வேறொரு பரிமாணமெடுத்துள்ளது. முழுமையாக இதுவொரு இந்து – முஸ்லிம் பிரச்னையாக உருமாற்றப்பட்டது அப்போதுதான். அவர் பெற்றோர்கள் சந்திப்பில் சொன்னது, உங்கள் பிள்ளைகள் ஹிஜாப் அணிவது உரிமை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் நாளை இந்து மாணவர்கள் காவி சால்வை போட அனுமதி கேட்டால் கொடுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அதை ஊடகங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலிருந்தே பிரச்னை அவர் சொன்னதுபோலத்தான் திசை மாறியது.
நிறைய இடங்களில் காவி சால்வையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எப்படி இவ்வளவு காவி சால்வைகளும் தலைப்பாகைகளும் பள்ளிக்குள் வந்தன என்பது கேள்விக்குறியாக இருந்தது. அதுகுறித்து நியூஸ் மினிட் போன்ற ஊடகங்கள் புலனாய்வு செய்து சில உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன. காவி சால்வையுடன் அங்கே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று என்பது வாட்ஸ்அப் தகவல்கள், காணொளி ஆதாரங்கள் போன்றவை வழியாக அம்பலமாகியுள்ளது. இதற்குப் பின்னால் இந்து ஜனஜக்ரிதி வேதி போன்ற இந்து அமைப்புகள் இருப்பதும் தெரியவந்தது.
மறுபக்கம், வலதுசாரி சார்பு ஊடகங்கள் ‘புலனாய்வு’ செய்து, முஸ்லிம் மாணவிகள் சாதாரணமானவர்கள் அல்ல, அவர்களுக்கு அமைப்புப் பின்புலம் இருக்கிறது என்று செய்தி வெளியிட்டு வருகின்றன. உண்மை என்னவென்றால், உடுப்பி பள்ளியில் மொத்தம் 90 முஸ்லிம் மாணவிகள் படிக்கிறார்கள்; 8 பேர் மட்டுமே ஹிஜாபைக் கழற்ற மறுத்து, வகுப்பறைக்கு வெளியே அமரவைக்கப்பட்டவர்கள். அவர்களில் இருவர் பள்ளி நிர்வாகத்துடன் போராட முடியாமல் விலகிவிட்டனர். மேலும் இருவர் கேம்பஸ் ஃபிரன்ட் அமைப்புடன் தொடர்புடையவர்கள். மற்ற 6 பேருக்கும் எந்த அமைப்புத் தொடர்புகளும் கிடையாது.
இவ்விவகாரத்தை நான் எப்படி புரிந்துகொள்கிறேன் என்றால், காலங்காலமாக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் மீது ஒருவித ஒவ்வாமை இருக்கிறது. தீவிர இந்துவாக இருப்போர் ஹிஜாப், தொப்பி, தாடி உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் பண்பாட்டு வெளிப்பாடுகளையும் ஒழிப்பதைத் தமது கொள்கையாகவே கொள்கிறார்கள். பொதுவெளியில் இவை வெளிப்படும்போது, தனிப்பட்ட முறையிலும் உங்கள் வழிபாட்டுத்தலங்களிலும் இவற்றை வைத்துக்கொள்ளுங்கள் என்பார்கள். தம் அடையாளத்தையும் பண்பாட்டையும் பொதுவில் வெளிப்படுத்தும் முஸ்லிம்களை தீவிரவாதம், நாகரிகமின்மை என்பனவற்றுடன் தொடர்புபடுத்துவார்கள். இதற்கு ஒருபடி மேலே சென்று முஸ்லிம்களை நேரடியாகத் தாக்குவது இந்தத் தீவிரவயப்பட்ட இந்துக்கள்தாம்.
ஹிஜாப் ஓர் அடக்குமுறை, ஆணாதிக்க வழக்கம் என்றெல்லாம் பேசும் சில முற்போக்காளர்களோ மற்றவர்களோ முஸ்லிம்களை இப்படித் தாக்குவதில்லை. பொதுப்புத்தியிலிருந்து பேசுவோர் சிலபோது ஹிஜாப் அணிந்தோரைக் கிண்டல் செய்வார்கள். பள்ளிக்கூடங்களில் இது அதிகமாக நடக்கும். ’இந்தப் பெண்களுக்கெல்லாம் 12ம் வகுப்பு முடித்ததும் கல்யாணம்தான்’, ’இவர்கள் மேற்படிப்பு செல்ல வாய்ப்பே இல்லை’ என அவர்களைச் சீண்டுவார்கள். இது வெறுமனே கிண்டல் என்று கடந்துபோய்விட முடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் முன்தீர்மானமும் காழ்ப்பும் இப்படியாகப் பல விதங்களில் வெளிப்படுவதுண்டு. ஒரு சமூகத்தின் பின்னடைவை அதன் பொருளாதார அடிப்படையிலான பின்னடைவைக் கருத்தில் கொண்டே புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அப்படியான புரிதல் கல்வி நிறுவனங்களில் இருப்பதில்லை.
சாதி மத ரீதியாக ஒடுக்கப்பட்ட எல்லா சமூக மாணவர்களின் மீதும் இப்படியான ஒரு பொத்தாம் பொதுவான பார்வையே அங்கு இருக்கும். ஆனால் அதுவே ஓர் அரசியலாக்கப்படுவதைத்தான் நாம் இப்போது உடுப்பியில் காண்கிறோம். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களெல்லாம் முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாத்தையும் முஸ்லிம் மாணவர்களையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது ஒருபக்கம் இருந்தாலும், பாஜக எம்எல்ஏ அந்த விவகாரத்தில் நுழைந்ததும் அது அரசியல் சார்ந்ததாக, வெறுப்புப் பிரச்சாரத்துக்கானதாக உருமாற்றப்பட்டிருக்கிறது.
பாப்புலர் ஃபிரண்ட் (PFI), கேம்பஸ் ஃபிரண்ட் (CFI) ஆகிய அமைப்புகள் இப்பிரச்னைக்குத் தூண்டுகோளாக இருப்பதாக வலதுசாரி சார்பு ஊடகங்கள் சொல்கின்றன. நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தவறு நடக்கும்போது அதை அமைப்புசார்ந்த மாணவர்களால்தான் தட்டிக்கேட்க முடியும். இங்கு பாதிப்பை ஏற்படுத்துவது தனிநபர் அல்ல, ஒரு நிறுவனம். நிறுவனமயப்பட்ட தாக்குதலை அமைப்புசார்ந்த மாணவர்களால்தானே எதிர்கொள்ள முடியும். இன்னொரு விஷயம், அந்த மாணவிகள் CFI அமைப்பைத் தொடர்புகொண்டதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினர். அதற்குக் காரணம், மற்ற முஸ்லிம் அமைப்புகள் போன்று CFI பார்க்கப்படுவதில்லை என்பதுதான்.
PFI, SDPI, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், முஸ்லிம் லீக் உள்ளிட்டவையெல்லாம் முஸ்லிம் அமைப்புகள்தாம். ஆனால் ஒவ்வொன்றும் எந்த மாதிரியான அமைப்புகள் என்பதை நாம் புரிந்துகொள்வது கிடையாது. வெறுமனே லிபரல்கள் அல்லது தீவிரமானவர்கள் என்று மட்டும் எளிமைப்படுத்திப் புரிந்துகொள்கிறோம். முஸ்லிம் லீக், ஜமாஅத்தே இஸ்லாமி முதலானவை முஸ்லிம் சமூகத்துக்குள் அதிக செல்வாக்கு பெற்ற அமைப்புகள். அவற்றை முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருக்கும் உயர்குடிகள் வழிநடத்துவர். சமூகத்தில் அவர்களுக்கென்று அங்கீகாரமும் அந்தஸ்தும் இருக்கும். ஆனால் PFIக்கு அப்படிக் கிடையாது. குந்தப்புரா, உடுப்பி முதலான பகுதிகளுக்குச் சென்று முஸ்லிம் மாணவிகளையும் அவர்களின் குடும்பங்களையும் பார்த்தேன். அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். வீட்டின் முன் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்திருப்பது, தையல் தொழில் செய்வது உள்ளிட்ட சாதாரண வேலைகளையே செய்துவருகிறார்கள்.
ஜமாஅத்தே இஸ்லாமி, முஸ்லிம் ஒக்கூட்ட (கூட்டமைப்பு), மணிப்பால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என சிலரைச் சந்தித்து இந்தப் பிரச்னை குறித்த கருத்தைக் கேட்டேன். அவர்கள் எல்லாரும் சொன்னது, இதை இவ்வளவு பெரிய பிரச்னையாக ஆக்கியிருக்கக் கூடாது, முன்பே இவற்றை சரி செய்திருக்கலாம், பேசித் தீர்த்திருக்கலாம் என்பதுதான். இந்து – முஸ்லிம் எனத் துருவப்படுத்தப்படுவது, வெறுப்புக் குற்றங்கள் பெருகுவது போன்ற சூழலில் நாம் பிரச்னையைத் தவிர்க்கலாம் என்று அவர்கள் நினைக்கலாம். உண்மையில் ஹிஜாப் விவகாரத்தை தனித்ததொரு நிகழ்வாக அணுகினால்தான் அவ்வாறு தோன்றும்.
இப்படியான பிரச்னைகளைப் பிணைக்கும் பொதுவான அம்சத்தை கவனிக்க வேண்டியுள்ளது. டெல்லிக்கு அருகமையிலுள்ள குர்காவுனில் கடந்த சில மாதங்களாக நிலவிய பிரச்னையைப் பாருங்கள். குர்காவுன் நிறைய கட்டுமானத் தொழில்கள் நடைபெறும் நகரம். புலம்பெயர்ந்து வந்து வேலை செய்பவர்கள் அங்கே அதிகம். ஆனால் பள்ளிவாசல்கள் அங்கு மிகக் குறைவு என்பதால் வெள்ளிக்கிழமைகளில் அந்தத் தொழிலாளிகள் பொது இடங்களில் தொழுதார்கள். அது இந்துத்துவர்களால் சர்ச்சையாக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பொது இடங்களில் மதத்தைக் கொண்டுவரக் கூடாது என்றிருக்கிறார்கள். இதையே அவர்கள் பிற மதத்தினரிடமும் சொல்வார்களா? எத்தனையோ மத ஊர்வலங்கள், இந்துத்துவப் பேரணிகள் பொதுவெளியில் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் வாரத்தில் ஒரே ஒரு நாள் பொது இடத்தில் மதக் கடமையான வெள்ளிக்கிழமைத் தொழுகையை நடத்துவது பொது அமைதியைச் சீர்குலைக்கும் என்று எதிர்க்கிறார்கள்!
குர்காவுனில் மொத்தம் 37 இடங்களில் தொழுகை நடந்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அதை வெறும் 6ஆகச் சுருக்கிவிட்டன. முன்பு தொழுகை நடத்திய இடங்களில் ஏன் இப்போது தொழக் கூடாது என்று கேட்டால், மதம் சார்ந்து பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ள பகுதிகள் அவை என்றும், அங்கே தொழுகை நடத்தினால் சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் உருவாகும் என்றும் கூறுகின்றன. முஸ்லிம் சமூகத்தின் மீது மட்டும்தான் சமூக அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு, மதச்சார்பின்மையைக் காக்கும் பொறுப்பெல்லாம் சுமத்தப்படுகின்றன.
கேரளாவில் நவம்பர் மாதம் ஒரு சம்பவம் நடந்தது. பள்ளிகளில் செயல்படும் என்.சி.சி போன்று SPC (Student Police Cadet) என்ற மாணவர் அமைப்பு கேரளாவில் உண்டு. அதில் பங்கேற்ற முஸ்லிம் மாணவி ஒருவர் SPC கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு முழுநீளப் புகைப்படம் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் SPC சீருடையுடன் ஹிஜாப் அணித்திருந்ததைப் பார்த்து ஆசிரியர்கள், இது சீருடையல்ல, பொது ஒழுங்கும் இயல்பும் இதில் மீறப்படுகிறது என்ற தொனியில் (உடுப்பி பள்ளி நிர்வாகம் பேசிய அதே மொழியில்) பேசியிருக்கிறார்கள். அந்த மாணவி சமரசம் செய்துகொள்ளாமல் நீதிமன்றத்தை நாடினார். அங்கு சொல்லப்பட்டது என்னவென்றால், பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி உண்டு. ஆனால் SPC சீருடையுடன் அதை அணியக் கூடாது. அதில் இணைய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பிற மாணவர்கள் போல் அதில் இருக்க முடியாது என்றால் நீங்கள் அதில் சேர வேண்டாம், யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை என்றது நீதிமன்றம். காவல்துறையானது மதச்சார்பற்ற ஒன்று; அதில் எந்த மத நம்பிக்கைகளையும் அடையாளங்களையும் கொண்டுவரக் கூடாது என்றது கேரள அரசாங்கம்.
உண்மையைச் சொன்னால் இவையெல்லாம் வெறும் பேச்சுதான். நடைமுறையில் காவல்துறை எந்தவொரு சாதி மதத் தொடர்பும் இல்லாமல்தான் செயல்படுகிறதா? காவல்துறை அதிகாரிகளின் பெயர்களிலேயே சாதிப் பெயர் இருக்கிறதே அது தவறில்லையா? குறிப்பிட்ட சாதிகளையும் மதத்தையும் சார்ந்தோர் சிறையில் அதிகமாக இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?
முஸ்லிம் visibility சர்ச்சையாக்கப்படுவது தொடர்பான இன்னொரு சமீபத்திய நிகழ்வையும் இங்கு சுட்டிக்காட்ட நினைக்கிறேன். மேற்கு வங்கத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது முஸ்லிம் பெண்கள் ஹிஜாபுடன் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை இணைத்திருந்தார்கள். இதன் காரணமாக சுமார் 300 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அந்தப் பெண்கள் தேர்வுக்குப் படித்தது, விண்ணப்பித்தது உள்ளிட்ட அனைத்தும் மதிப்பிழந்து போயின. நீதிமன்றத்துக்கு இவர்கள் சென்றபோது, புகைப்படத்தில் முகம் அடையாளம் காணும் வகையில் தெளிவாகத் தெரிய வேண்டும் என்று ப்ராஸ்பெக்டஸில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இவர்கள் தலைத்துணிதான் அணிந்தார்களே அன்றி முகத்தை மறைக்கவில்லை.
செக்யூலர், பொது ஒழுங்கு, சட்ட ஒழுங்கு போன்றவற்றைச் சொல்லித்தான் முஸ்லிம்களை கல்வி நிறுவனங்கள் தொட்டு நீதிமன்றம், காவல்துறை என எல்லா நிறுவனங்களும் ஓரங்கட்டுகின்றன. ஒரு சமூகத்தை ஒதுக்கி வைக்க இவர்கள் கையாளும் மொழியின் அரசியலை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. உடுப்பி கல்லூரியில் ஆசிரியர்கள் கையாண்ட மொழியும் இதுதான். அங்கே இன்னொரு வகையிலும் பிரச்னை அணுகப்பட்டது. அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகளிடம், ஏன் ஹிஜாப் அணிகிறீர்கள்? உங்கள் விருப்பத்தின்படியா அணிகிறீர்கள்? வீட்டிலுள்ளவர்கள் அழுத்தம் கொடுப்பதால்தானே அணிகிறீர்கள்? இப்படிக் கேள்விகள் கேட்பதன் வழியாக மாணவிகளின் குடும்பத்தினரையே அவர்களுக்கு எதிரானவர்களாக, வில்லன்களாக முன்னிறுத்த முயல்கிறார்கள். நீங்கள் படிக்க, வேலைக்குப் போக நாங்கள் தடையாக இல்லை, உங்களின் குடும்பமும் சமூகமும்தான் எனச் சொல்லி பாதிக்கப்படும் மாணவிகளையே மேலும் குற்றப்படுத்துவது, அவர்களைக் கூனிக்குறுகி நிற்க வைக்க நினைப்பது ஒரு பெரிய வன்முறை.
உடுப்பியிலிருந்து சுமார் 40 கி.மீ. தாண்டி இருக்கும் குந்தப்புரா மாவட்டத்தில் ஹிஜாப் பிரச்னை படுமோசமாக வெளிப்பட்டது. அது உடுப்பி அளவுக்கு வளர்ச்சியடையாத பகுதி. மணிப்பால் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், நிறைய வங்கிகள் எல்லாம் இருக்கும் ஒரு மேம்பட்ட நகரம் உடுப்பி. டிசம்பர் தொடக்கத்திலிருந்து அந்த மாத இறுதிவரை உடுப்பி அரசுப் பள்ளிக்குள் மட்டும் ஹிஜாப் ஒரு சர்ச்சையாக இருந்தது. ஜனவரி தொடக்கம் முதலே அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. பிப்ரவரி 4, 5 ஆகிய தேதிகளில் குந்தப்புராவில் இப்பிரச்னை சூடுபிடித்தது. அங்கே நான்கு கல்வி நிறுவனங்கள் அருகருகே இருக்கின்றன. ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் ஹிஜாப் அணிந்த மாணவிகளை உள்ளே அனுமதிக்க மறுத்து நுழைவாயில் கதவுகளை இழுத்து மூடும் அந்த வைரல் வீடியோ குந்தப்புராவில் நடந்ததுதான்.
அந்த குந்தப்புரா பள்ளி மாணவிகளிடம் நான் பேசினேன். அன்றைய தினம் அவர்கள் காலையிலிருந்து மாலை 4 மணிவரை சாலையிலேயே அமர்ந்திருந்ததாகக் கூறினார்கள். கதவுகளை அடைத்துவிட்டார்களே எப்படிக் கடும் வெயிலில் அமர்ந்திருந்தீர்கள், எங்கே சாப்பிட்டீர்கள், எந்தக் கழிவறையைப் பயன்படுத்தினீர்கள் என்றெல்லாம் கேட்டேன். அவர்கள் தங்களை ஆசிரியர்கள் கடைசிவரை உள்ளே அனுமதிக்கவே இல்லை என்றார்கள். அவர்கள் மேலும் கூறியது: “மூன்று பெண் ஆசிரியைகள் வந்தார்கள். அவர்களிடம் பள்ளிக் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கோரினோம். அப்போதுகூட ஹிஜாபைக் கழட்டிவிட்டு வாருங்கள் என்றார்கள். இந்து மாணவர்கள் காவித் துண்டைக் கழட்டிவிட்டதால்தான் அவர்களை உள்ளே அனுமதித்தோம், நீங்களும் ஹிஜாபை வெளியே கழட்டிவிட்டு வந்தால் உள்ளே விடுவோம் என்றார்கள்… நீங்கள் எதற்காக ஹிஜாப் அணிகிறீர்கள், உங்களுக்கு இதையெல்லாம் நிஜமாகவே போட விருப்பமா, உங்கள் குடும்பத்தின் அழுத்தத்தால்தானே அணிகிறீர்கள் என்றும் கேட்டார்கள்.”
மொத்தத்தில், மாணவிகளின் அடிப்படைத் தேவையான கழிவறையைப் பயன்படுத்துவதற்கு எதிராக இருப்பதுகூட தாங்கள் அல்ல மாணவிகளின் குடும்பங்களும், அவர்களின் சமூகம், மதம், பண்பாடு ஆகியவைதாம் என ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்!
அன்று அந்த மாணவிகள் அருகமையிலிருந்த ஒரு மருத்துவமனைக் கழிவறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மறுநாள் மாணவிகளின் உறவினர்களுடைய கடைகளிலுள்ள கழிவறைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். பிப்ரவரி 3, 4 ஆகிய இரண்டு நாள்கள் அவர்கள் பள்ளிக்கு வெளியிலேயே அமர்ந்திருக்கிறார்கள். தெஹ்ரீன் பேகம் என்ற மாணவி சொன்னார், “உணவு இடைவேளையின்போது நிறைய மாணவர்கள் எங்களை ரோட்டில் உக்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் என்றார்கள். இவர்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கலாம் என்று ஆபாசமான முறையில் பேசினார்கள்”. மற்றொரு கல்லூரியான ஆர்.என்.ஷெட்டியில் படிக்கும் ஒரு மாணவியிடம் கேட்டேன், கல்லூரிக்குள் உங்களை அனுமதித்தார்களா, கதவுகளை அடைத்தார்களா என்று. அங்கே கதவுகளே இல்லை, இருந்திருந்தால் சாத்தியிருப்பார்கள் என்றார் அவர். கர்நாடக அரசு வெளியிட்ட ஆணை (G.O.) தான் இப்படியான சீர்கேட்டுக்குக் காரணம்.
என்னை மிகவும் கஷ்டப்படுத்திய விஷயம் என்னவென்றால், உடுப்பி பள்ளியில் 90 முஸ்லிம் மாணவிகள் படிக்கிறார்கள். அதில் பலர் அருகிலிருக்கும் ஊர்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து குடியமர்ந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள். இப்படியான ஒரு குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களுக்குப் புத்தகங்கள், சீருடைகள் முதலான தேவைகளுக்கு பள்ளி நிர்வாகம் உதவியிருக்கிறது. இப்போது இதையெல்லாம் சொல்லிக்காட்டி அது பீற்றிக்கொள்கிறது. இதைவிட மோசமாக அது செய்த காரியம் என்னவென்றால், அந்த 6 முஸ்லிம் மாணவிகளின் முகவரி, பெற்றோர் பெயர்கள், அவர்களின் மதிப்பெண்கள், வருகைப் பதிவு விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளைப் பொதுவில் கசியவிட்டதுதான். ஒரு கல்வி நிறுவனத்தை நம்பி மாணவிகள் கொடுத்த தகவல்களை அவர்களுக்கு எதிராகவே அது பயன்படுத்துகிறது; ஒரு நிர்வாகம் எப்படியெல்லாம் இந்துத்துவ வெறுப்புப் பிரச்சாரத்துக்கு உதவி செய்கிறது என்று பாருங்கள்.
பள்ளி நிர்வாகம்தான் இப்படியென்றால், அந்த மாணவிகளின் நட்பு வட்டத்திலும் இப்படியான விஷயங்கள் நடந்திருக்கின்றன. குந்தப்புராவைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தன் சமூக வலைத்தளக் கணக்கை private-ல் வைத்துப் பயன்படுத்தியிருக்கிறார். அதில் அவர் ஹிஜாப் இல்லாமல் பதிவேற்றியிருந்த சில புகைப்படங்களை அவரின் தோழிகளே (?) கசியவிட்டு, ஹிஜாப் போடாத இவர் இப்போது பள்ளியில் ஹிஜாப் வேண்டும் என்று குரல் கொடுக்கிறார், இவரிடம் உண்மையில்லை என்கிற ரீதியில் பரப்பியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் என்னிடம் பேச மறுத்துவிட்டார். இதேபோல் இன்னொரு முஸ்லிம் பெண் தன் சமூக வலைத்தளத்தை public-ல் வைத்துப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரின் ஹிஜாப் அணியாத புகைப்படங்களையும் பரப்பி, மிக மோசமான வார்த்தைகளால் சாடியிருக்கிறார்கள் சங் பரிவாரத்தினர். அப்பெண்ணின் குடும்பத்தார் அவரைக் கண்டித்ததால் மிகவும் உடைந்து போயிருப்பதுடன், மற்றவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் தன் சமூக ஊடகக் கணக்குகளை அழித்துவிட்டு ஃபோனையும் அணைத்து வைத்திருக்கிறார். இப்படி வகுப்பறையிலிருந்து மட்டுமின்றி சமூக ஊடகத்திலிருந்தும் மாணவிகள் வெளித்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக பள்ளி நிர்வாகம், ஊடகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளை மேன்மேலும் தொந்தரவுக்கு உள்ளாக்குவதைப் பார்க்க முடிகிறது. ஹிஜாபுக்காகப் பேசும் மாணவிகள் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கும் அளவுக்குத் திறமைவாய்ந்தவர்கள் அல்ல, அவர்கள் எப்போதும் அதை அணிந்திருந்தவர்களும் அல்ல என்றெல்லாம் ஆசிரியர்களே அவர்களைச் சாடுவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையே பழிக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவது தொடர்கிறது. மாணவிகள் இதற்கு உரிய வகையில் பதிலடி தரவும் செய்கிறார்கள். கல்வியிலும் அதற்கு அப்பாலும் தாங்கள் எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறோம் என்பதைச் சொல்லிக் காட்டுகிறார்கள். ஊடகங்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளையே குறிவைத்துத் தாக்குகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சில தொலைக்காட்சி சேனல்கள் ஆலியா என்ற ஒரு மாணவியைக் இலக்காக்கின. அவர் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஹிஜாபுடன் பங்கேற்றவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அவரிடம், எப்போது ஹிஜாப் போட ஆரம்பித்தீர்கள், நீங்கள் ஹிஜாபைக் கழட்டியதே கிடையாதா, எத்தனை ஆண்டுகளாக இதைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்றெல்லாம் ஊடகங்கள் கூச்சலிட்டன.
சமூகச் செயல்பாட்டாளர் சஃபூரா ஸர்கார், “முன்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்தார்களா, இல்லையா என்பது இங்கு பொருட்டல்ல. எனது அடிப்படை உரிமையை நான் எடுத்துக்கொள்வதற்கு எந்தக் கால வரையறையும் கிடையாது” என்கிறார். ஹிஜாப் அணிவதைத் தெரிவு செய்யும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் இங்கு மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
பாதிக்கப்படும் மாணவிகள் எல்லாம் மிகவும் இளம் வயதினர். அவர்கள் எந்த அளவுக்கு நிறுவன ரீதியாகவே தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். நான் ஆயிஷா இம்தியாஸ் என்ற மாணவியுடன் பேசினேன். “பள்ளி நுழைவாயிலில் என் ஹிஜாபைக் கழட்ட முடியாது” என்று சொல்லும் அவர், இண்டர்னல் தேர்வு நடந்துவரும் சூழலில் இறுதியாண்டு வகுப்புகளைத் தவறவிடுவதை எண்ணி வருத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது: “நான் ஆசிரியர்களிடம் சென்று இதுகுறித்துப் பேசிப் பார்க்கலாம், அவர்கள் அனுமதிக்கவில்லை என்றால் போராடிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் ஹிஜாபை அணிந்துகொண்டு கல்லூரி முன் செல்ல ஐயம்… காவல்துறையினர் என்னைக் கைது செய்யவோ என் மீது தடியடி நடத்தவோ கூடும் அல்லவா?”
ஹிஜாப் (தலையை மறைத்தல்) போராட்ட செய்திகள் வெளியிடும் போது நிகாப் முகத்திரை அணியும் பெண் படத்தை போடாமல் ஹிஜாப் அணிந்த பெண்கள் படத்தை போடலாமே அண்ணா