கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்

Loading

ஹாதியா வழக்கு தொடர்பான தலையங்கத்தை முன்வைத்து ஒரு விசாரணை

சிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம்.

ஹாதியா வழக்கு தொடர்பான தலையங்கம் அது. “லவ் ஜிகாத்தும் கர் வாபஸியும்” என்கிற தலைப்பில் அது எழுதப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வாக்கியத்தை இங்கே சுட்டிக்காட்ட நினைக்கிறேன். “‘லவ் ஜிஹாத்’ ஒரு குற்றமாகச் சொல்லப்பட்டால், அதற்குச் சற்றும் குறையாதது ‘கர் வாபஸி.'” இங்கே லவ் ஜிஹாத் எப்படி மோசமானதோ அதேபோல்தான் கர் வாபஸியும் என்று குறிப்பிடப்படுகிறது. இது எந்த அளவுக்கு அபத்தமான கூற்று என்று நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.

‘லவ் ஜிஹாத்’ என்பதை முஸ்லிம்கள் மறுக்கிறார்கள். எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் தாங்கள் லவ் ஜிஹாத் செய்வதாகச் சொன்னதில்லை. அது ஒரு பொய்ப் பிரச்சாரம் என்றுதான் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றன. நடப்பில் இல்லாத ஒரு விஷயத்தைக்கூட, இல்லை என்று நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது அப்படி நடப்பதாக அவதூறு செய்பவர்களும்கூட இதுவரை அதை நிரூபித்ததும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ‘கர்வாபஸி’ என்பதை இந்துத்துவவாதிகள் பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள். அதைத் தங்களின் கொள்கையாகப் பிரகடனப்படுத்துகிறார்கள். பொது நிகழ்ச்சிகளை நடத்தி அதற்கு சமூக ஏற்பைக் கோரி அதில் வெற்றியும் அடைகிறார்கள். காலச்சுவடு இந்த வேறுபாட்டை மிக நுணுக்கமாக அழிப்பதை நாம் கவனிக்க வேண்டும். இங்குதான் பார்ப்பன அறிவுஜீவிகளின் வில்லங்கம் ஒளிந்திருக்கிறது.

‘லவ் ஜிஹாத்’ எனும் போலியான சொல்லை ‘கர்வாபஸி’ என்னும் உண்மையான நடவடிக்கையுடன் சமப்படுத்தி முன் வைப்பதன் மூலம் காலச்சுவடின் தலையங்கம் ‘லவ் ஜிகாத்’ என்ற சொற்பிரயோகத்துக்கு  ஏற்பு வழங்கிவிடுகிறது. அதை ‘மதச்சார்பற்ற’ மொழியிலும் வாசகர்களுக்கு முன்வைக்கிறது.

காலச்சுவடின் தலையங்கத்தில் ஹாதியாவோடு இன்னொரு பெண்ணின் விவகாரத்தையும் ஒப்பிட்டுள்ளனர். கேரளாவைச் சார்ந்த ஆதிரா என்பவர் முஸ்லிமாகி, பிறகு மீண்டும் இந்துவாக மாறிய சம்பவத்தைக் குறிப்பிடுகின்றனர். அத்தோடு, “இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் ‘மார்க்கத்துக்குத் துரோகமிழைத்த குற்றத்துக்காக’ ஆதிராவைத் தண்டிக்கக் காத்திருகின்றன” என்றொரு அபாய மணியும் அடித்துள்ளனர். ‘கர் வாபஸி’ மையத்தின் மூலமாக ஆதிரா மதம் மாற்றப்பட்டுள்ள நிகழ்வும் அதில் கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ‘கர் வாபஸி’ என்பது உண்மையாக நடத்தப்படும் ஒரு நிகழ்வு என்பது கேள்விக்கு இடமில்லாமல் உறுதியாகிவிடுகிறது. இங்கே நாம், ‘கர் வாபஸி’ என்பதை உண்மையா அல்லது பொய்யா என கேள்விக்கு உட்படுத்தவேண்டிய தேவையே இல்லாமல் போய்விடுகிறது.

இந்தத் தலையங்கத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். தனிமனித உரிமையை வலியுறுத்தும் பாணியில் அந்த தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அதே வேளை மத மாற்றத்துக்கு எதிரான கருத்தும் அங்கே முன்வைக்கப்படுகிறது. ஆம், இரண்டும் ஒருசேர அரங்கேறுகிறது! அதிலும் குறிப்பாக, பெண்கள் மதம் மாறினால் அது அவர்கள் மீதான அடக்குமுறையாம். நீதிமன்றம் அதை ஆதரித்தால், அது அவர்களை சட்ட ரீதியில் ஒடுக்குவதாம். ஒருபக்கம், தனிமனித உரிமை கோரல், மறுபக்கம் அதற்கு முற்றிலும் எதிரான கருத்து. ரொம்பவும் தந்திரமாகவும் நுட்பமாகவும் இந்தத் தலையங்கத்தை எழுதியிருக்கிறார்கள்.

இதில் மற்றொரு அம்சமும் உள்ளது. ஹாதியா விவகாரத்திலுள்ள சிக்கல் வெறும் தனிமனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல. இச்சமூக அமைப்பில் நிலவி வரும் பார்ப்பனிய ஆணாதிக்கமும், இஸ்லாமிய வெறுப்பும் (Islamophobia) எப்படி நிறுவனமயப்பட்டு இயங்குகின்றன என்பதையும் நாம் இதன் மூலம் விளங்கிக்கொள்ள வேண்டும். உண்மையில், இப்பிரச்னையின் அடிநாதமும் இவைதாம்.

பிளவுவாத சக்திகள் உற்பத்தி செய்த இஸ்லாமிய வெறுப்புச் சொல்லான லவ் ஜிஹாத் இன்று பொதுச் சொல்லாக மாற்றப்பட்டிருக்கிறது. இதை நீதிமன்றம், ஊடகம், உளவுத்துறை முதலான அனைத்து நிறுவனங்களும் முன்வைக்கின்றன. இதன் மூலம் எப்படி எல்லா நிறுவனங்களிலும் இஸ்லாமிய வெறுப்பு வேரூன்றி இருக்கிறது என்பது தெரிகிறது. அத்தோடு குடும்ப அமைப்பு குறித்து இந்த சமூக நிறுவனங்கள் யாவும் பார்ப்பனிய மதிப்பீட்டைதான் கொண்டுள்ளன என்பதும் தெளிவாகிறது. ஹாதியாவின் தேர்வு சுதந்திரம் பறிக்கப்படுவதை இந்தப் பின்னணியில் இருந்தே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஹாதியா பிரச்சினையில் மற்றுமொரு கவனிக்கத்தக்க அம்சமும் உள்ளது. சஃபீன் ஜகானின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது பற்றியோ அவரின் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றியோ இங்கு போதிய அளவு பேசப்படவில்லை. ஹாதியாவும் தனிமனித சுதந்திரமும் என்கிற மையத்தைச் சுற்றியே எல்லா விவாதங்களும் நடந்தன.

இந்தச் சிக்கல்களையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ஹாதியாவுக்கு ஆதரவாகப் பேசும் தொனியில் இந்துத்துவவாதிகளின் கருத்துகளை அப்படியே கக்கியிருக்கிறது காலச்சுவடின் தலையங்கம்.

இறுதியாக ஒன்று. ஹாதியா முஸ்லிமாக இருந்து இந்துவாக மாறி, வேறு மத ஆணைத் திருமணம் புரிந்தால், அதை முஸ்லிம் சமூகம் தடுக்காதா என்று சிலர் கேட்கின்றனர். சாமானிய மனிதர்களுக்கு இந்தக் கேள்வி எழுவது இயல்பானது. இப்படியான திருமணங்களெல்லாம் இங்கே நடந்துகொண்டுதான் உள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அதுபோக, அப்படி ஒரு முஸ்லிம் பெண் தீர்மானித்து, அவள் தடுக்கப்படுகிறாள் என்றே வைத்துக்கொள்வோம். யாரால் அவளின் தேர்வு சுதந்திரம் பறிக்கப்படும்? அவளின் குடும்பம், அதற்கு அப்பால் அவளின் உறவினர்கள். மிஞ்சிப் போனால் ஊர் ஜமாஅத்கள். ஆனால் ஹாதியா விஷயத்தில் என்ன நடந்தது? ஹாதியாவின் குடும்பம் என்பதைத் தாண்டி, இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய இடமான நீதிமன்றம், உளவுத்துறை, ஊடகங்கள் என அனைத்தும் கங்கணம் கட்டிக்கொண்டு ஹாதியாவின் உரிமையைப் பறிக்கின்றன. இப்படியொரு அவலமான நிலைமை சிறுபான்மைச் சமூகத்தினரால் எப்போதுமே இந்தியாவுக்கு ஏற்பட்டதில்லை. ஏற்படப் போவதுமில்லை.

Related posts

Leave a Comment