கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 9) – மரியம் ஜமீலா

1971, ஏப்ரல் 1 இல் மௌலானா மௌதூதி, உலக முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு பின்வருமாறு தந்தி அனுப்பினார்:

“பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் இந்தியா வெளிப்படையாகவே தலையிடுகிறது; மேலும் கிழக்குப் பாகிஸ்தானில் குழப்பங்களை ஆக்ரோஷமாக தோற்றுவிக்கிறது. இவ்விகாரத்தில் அதற்கு ஆதரவளிக்கும் ஒரே நாடு, இஸ்ரேல். உலகெங்கும் உள்ள முஸ்லிம் விவகாரங்களை என்றும் ஆதரித்துவந்த பெரும் முஸ்லிம் நாடான பாகிஸ்தானை துண்டு துண்டாக்குவதற்கான இந்திய-ஸியோனிச சதித்திட்டத்தின் தெளிவான ஆதாரமே இது. இத்தகைய முற்றிலும் நேர்மையற்ற, சர்வதேசச் சட்டங்களையும், நாகரிக நடத்தையையும் வெளிப்படையாகவே மீறும் செயலை தீவிர கவனத்தில் கொண்டு அதற்கெதிராக தங்கள் அதிகபட்ச செல்வாக்கை செலுத்துமாறு தங்கள் அரசாங்கத்தையும் மேதகையீர் தங்களையும் கேட்டுக் கொள்கிறேன்”

1971, ஜுன் 5 இல் கிழக்குப் பாகிஸ்தானில் நிலைமை இக்கட்டாக மாறவே, மௌலானா மௌதூதி பின்வரும் பொது அறிக்கையை முஸ்லிம் நாட்டுத் தலைவர்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிய பத்திரிகைகளுக்கும் வெளியிட்டார்.

  1. கிழக்குப் பாகிஸ்தானின் முஸ்லிம் மக்கள் தொகை, பிரிவினையை வேண்டியதே இல்லை என்பதை நாம் முதலில் தெள்ளத் தெளிவாக்க வேண்டும். அவர்கள் பிரிவினை நிமித்தமாக ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு வாக்களிக்கவில்லை; 1971 மார்ச் 1 முதல் நடந்த கலகங்களிலும் பங்கேற்கவில்லை. உண்மையில் இப்பிரிவினை இயக்கம் இஸ்லாமிய போதனைகளற்ற, பெரும்பாலும் ஹிந்து பேராசிரியர்கள் கற்பித்த கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும் கல்வி கற்ற ஒரு பிரிவு வங்காள தேசியவாதிகளால் துவக்கப்பட்டது. இச்சமூகப்பிரிவு, ஹிந்து எழுத்தாளர்கள் எழுதிய வங்காள எழுத்தாக்கங்களிலிருந்து அகத்தூண்டுதலைப் பெறுகிறது. அவர்கள் இஸ்லாத்திலிருந்து அந்நியப்பட்டிருந்தனர்; கடவுள் மறுப்புக் கொள்கையும், ஒழுக்கக் கேடுகளும் மிகப் பெரும் அளவில் அவர்களிடையே பரவியிருந்தது. முஸ்லிம் சமூகத்தின் இப்பிரிவை, எண்பது இலட்சத்திலிருந்து ஒரு கோடிவரை உள்ள (புதிய மக்கள் தொகை கணக்கீடு எடுக்கப்படாததால் தற்போதைய எண்ணிக்கை தெரியவில்லை) வங்காள ஹிந்துக்கள் ஆதரித்தனர். இத்தகைய ஹிந்துக்களும், வங்காள தேசியவாதிகளும் சோஷலிஸ்டுகளும் ஒன்றுசேர்ந்து, வங்காளியரல்லாத எல்லா முஸ்லிம்களையும் -அவர்கள் மேற்குப் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாயினும், இந்தியப் பிரிவினைக்குப் பின் அங்கிருத்து கிழக்குப் பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்ந்தவர்களாயினும்- அவர்கள் உருது பேசுபவர்கள் என்பதாலும் வங்காளிகளல்லாதோர் என்பதாலும் தங்கள் எதிரிகளாகவே கருதினர்; அவர்களுக்கெதிராக ஒரு வெறுப்புப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. இது பாகிஸ்தான் தோன்றிய சில ஆண்டுகளில் துவங்கி இன்றுவரை நீடிக்கிறது. வங்காள தேசியவாதம் எனும் முற்சாய்வின் கீழ் அவர்களின் இரத்தம் சிந்தப்பட்டு, தீ வைப்பிற்கும், கற்பழிப்புக்கும் அவர்கள் இலக்காகினர். சமீபத்திய பொதுத் தேர்தல்களில் இக்கூட்டம் பெற்ற வெற்றி, கிழக்குப் பாகிஸ்தானின் முஸ்லிம் பொதுஜனம் அவர்களோடு இருக்கிறார்கள் என்ற தவறான பிம்பத்தை உருவாக்க நாம் அனுமதிக்கக்கூடாது. இதைத் தெளிவாக்க, இவ்வெற்றியின் காரணங்களை பின்வரும் பக்கங்களில் நாம் விளக்குவோம்.
  2. அய்யூப் ஆட்சியின் இறுதிக் காலங்களில், பாகிஸ்தான் துண்டு துண்டாக உடையும் நிலையை உருவாக்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததைத் தெளிவாக உணர முடிந்தது. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்குமெதிரான வெறுப்புணர்விலும் பகைமையிலும் யூதர்களுக்கு இணையானவர்கள், இந்தியாவின் ஹிந்துக்கள்; பாகிஸ்தானின் இருப்பு அவர்களுக்கு ஒரு சாபமாக உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்த வரை, ஸியோனிஸ்டுகளுக்கு அங்கே ஒரு பிடிப்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இஸ்ரேலுகெதிரான அரேபிய முயற்சிகளுக்கு, பாகிஸ்தான் ஆரம்பம் முதல் திடமான ஆதரவு அளித்ததால் அவர்களுக்கு பாகிஸ்தான் மீது காழ்ப்பு இருந்தது. அரேபிய முயற்சிகளுக்கு இத்தகைய ஒரு உறுதியான ஆதரவை, எந்தவொரு அரபு-அல்லாத முஸ்லிம் நாடும் அளிக்கவில்லை. இக்காரணத்தால், சர்வதேச ஸியோனிசம், பாகிஸ்தானின் பலத்தை உடைக்க, தனது வளங்கள் அனைத்தையும் செயல்படுத்தியது. பிரிட்டனும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான வேராழ்ந்த பகைமையைக் கொண்டுள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. அது நிர்பந்தம் காரணமாகவே பாகிஸ்தான் உருவாவதை ஆதரித்தது; பின்னர் முடிந்த அளவு பலவீனமான நிலையில் அதை விட்டுவிட்டது; கஷ்மீர் பிரச்னைக்கும் பிரிட்டனே பொறுப்பாகும். மேற்குப் பாகிஸ்தான் உருவானது முதல் பிரிட்டன் அதனோடு பரிவுணர்வோடு இருந்ததேயில்லை.
  3. அய்யூப் ஆட்சி முடிவுற்று, ஜெனரல் யஹ்யா கானின் புதிய ஆட்சிக்காலம் துவங்கியபோது, பாகிஸ்தானை சிதைப்பதற்கான இடதுசாரி கட்சிகளின் சதித்திட்டம் முழுமையாக அம்பலமானது. பிராந்திய மற்றும் மொழி அடிப்படையிலான தேசியவாத சார்புணர்வுகளை உருவாக்கியும் தூண்டியும் இக்கட்சிகள் நாட்டை பிரித்துவிட தங்களால் இயன்ற அளவு முயன்றன. அவர்களின் பிரச்சாரத்தின் முக்கிய இலக்கு, கிழக்குப் பாகிஸ்தான். இதுகாலம் முழுவதும் ரஷ்யா இச்சக்திகளை ஆதரித்து வந்தது.
  4. சமீபத்திய பொதுத்தேர்தல்களின் போது ஹிந்துக்கள், ஸியோனிஸ்டுகளும் அமெரிக்காவை உள்ளடக்கிய இந்த அந்நிய சக்திகளும் முழுக்க முழுக்க பிராந்திய அடிப்படை கொண்ட இரு கட்சிகளுக்கு பெருமளவில் நிதியுதவி அளித்தன. ஒன்று மேற்குப் பாகிஸ்தானில் எந்தச் செல்வாக்கும் பெறாத ஷேக் முஜிபுர்ரஹ்மானின் கட்சி, மற்றொன்று கிழக்குப் பாகிஸ்தானில் பின்பற்றாளர்களே இல்லாத திரு ஸ.அ. பூட்டோவின் கட்சி. இவ்விரு பிராந்திய கட்சிகளும் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் தானாகவே உடைந்துவிடும் என்பதை நம் எதிரிகள் தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். மேலே கூறப்பட்டது போல எண்பது இலட்சத்திலிருந்து ஒரு கோடிவரையுள்ள ஹிந்துக்கள் கிழக்குப் பாகிஸ்தானில் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் முழு ஆதரவையும் ஷேக் முஜிபுர்ரஹ்மானுக்கு அளித்தனர். கூட்டுத் தொகுதி முறையில், ஒரு கட்சி சார்பாக இத்தகைய பெருந்திரளான மக்கள் கொடுக்கும் ஆதரவு தேர்தலை வெகுவாக பாதிக்கும். உண்மையில் அது அவ்வாறே பாதித்தது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் ஒரு ஹிந்து வேட்பாளர் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட முனைந்தாலும், பிற ஹிந்துக்கள் ஷேக் முஜிபுர்ரஹ்மானின் வேட்பாளர்களையே ஆதரித்து தங்கள் மதத்தவரை நிராகரித்தனர்.

மேற்குப் பாகிஸ்தானில் பெரும் அரசியல் செல்வாக்கும் பொருட் செல்வாக்கும் பெற்றுள்ள காதியானிகள் (இந்தியாவின் காதியான் நகரின் குலாம் அஹ்மதின் நபித்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்) தங்கள் முழு பலத்தையும் திரு ஸ.அ. பூட்டோவுக்கு ஆதரவாக பிரயோகித்தனர். முதலாவதாக, மேற்குப் பாகிஸ்தானின் காதியானிகள் ஒரு இஸ்லாமிய அரசை தங்கள் நலன்களுக்கு மிகவும் அபாயகரமானதாகக் கருதினர். அவர்களுக்கு இஸ்லாமல்லாத அரசுதான் –அது கம்யூனிச அரசாக இருப்பினும்- பயனுள்ளதாக இருந்தது. இரண்டாவதாக, கிழக்குப் பாகிஸ்தானில் அவர்களுக்கு செல்வாக்கே இல்லாமல் அவர்களது பலம் முழுவதும் மேற்குப் பாகிஸ்தானிலேயே உள்ளதால், சதித்திட்டம் மூலம் கிழக்குப் பாகிஸ்தானை துண்டித்து திரு பூட்டோவுடன் கூட்டு சேர்ந்து மேற்குப் பகுதியை ஒரு ‘காதியானி அரசாக’ மாற்றுவதிலேயே அவர்களது முழுமுதல் அவாவும் முயற்சியும் குவிந்திருந்தது.

  1. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆரம்பம் முதல் தேர்தல் நாள் வரை கிழக்குப் பாகிஸ்தானில் ஷேக் முஜிபின் கட்சியும் மேற்குப் பாகிஸ்தானில் திரு பூட்டோவின் கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தொடர்ச்சியாக வன்முறையிலும் ரவுடித்தனத்திலும் ஈடுபட்டன. இவ்வாறு, அளவற்ற பொருள் வளத்தின் உதவியோடும், பரவலான ரவுடித்தனம் மற்றும் வன்முறையோடும் –குறிப்பாக கிழக்குப் பகுதியில்- தங்களோடிருந்த அரசு அதிகாரிகளின் செல்வாக்கு மற்றும் ஆதரவோடும் தேர்தல் முடிவுகள், பாகிஸ்தானின் எதிரிகள் அசலாக விரும்பியது போன்றே இருந்தன. அதாவது கிழக்குப் பாகிஸ்தானில் ஒரு பிராந்தியக் கடிசியும் மேற்குப் பாகிஸ்தானில் மற்றொரு பிராந்தியக் கட்சியும் மிகப் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
  2. தேர்தலின் பின்னர் நடந்த சம்பவங்களின் சுருக்கமான வரலாறு இதோ: ஷேக் முஜிபுர்ரஹ்மான் தன் ஆறு புள்ளி கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்த ஆரம்பித்தார். உண்மையில் அது பிரிவினைக்கான திட்டமாகவே இருந்தது. அவற்றை மேலோட்டமாக பார்த்தாலே, பாகிஸ்தானை பல்வேறு சுதந்திர தேசங்களாக பிரிக்கும் திட்டம்தான் அது என்பது தெளிவாகும். ஷேக் முஜிப், தன் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் இக்கோரிக்கைகளிலிருந்து சிறிதும் விலகக்கூடாது என இருவேறு பொதுக் கூட்டங்களில் இரண்டு முறை உறுதிப் பிரமாணம் பெற்றார். இத்தோடு, யாராவது அவற்றிலிருந்து மாறுபட்டால் அவர்கள் “உயிரோடு புதைக்கப்படுவார்கள்” எனவும் மக்களை பலவந்தமாக எச்சரித்தார்.

திரு ஸ.அ. பூட்டோ, ஷேக் முஜிபுர்ரஹ்மானோடு அதிகாரப் பங்கீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர்களால் ஒரு ஒப்பந்தத்திற்கு வர முடியவில்லை. ஷேக் முஜிபுர்ரஹ்மான் பேரவையை உடனே கூட்டுமாறு வேண்டினார். இதன் மூலம் தனது பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு தன் ஆறு அம்ச கோரிக்கைகள் அடிப்படையில் ஒரு அரசியல் சாசனத்தை வரைய எத்தனித்தார். மறுபுறம் திரு ஸ.அ. பூட்டோவின் முயற்சியெல்லாம் அதிகாரத்தில் தன் பங்கை உறுதி செய்யும் முன் சபை கூடுவதை தடுப்பதிலேயே குவிந்திருந்தது.

இக்குழப்பங்களுக்கு மத்தியில் பேரவை மார்ச் 3ஆம் தேதி கூடும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பிப்ரவரி 28ஆம் தேதி லாஹுரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் திரு பூட்டோ, “தனது கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் யாராவது பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள டாக்கா சென்றால் அவரது கால்கள் முறிக்கப்படும்” என்றும் “பிற கட்சி உறுப்பினர்கள் போக விரும்பினால், அவர்கள் திரும்பி வருவதற்கான பயணச்சீட்டுகளை வாங்க வேண்டாம்,” என்றும் பிரகடன் செய்தார். இத்தகைய சூழ்நிலையில் அதிபர் ஜெனரல் ஏ.எம்.யஹ்யா கான் அவைக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று.

அவைக் கூட்டத்தை ஒத்திவைக்கும் அறிவிப்பு மார்ச் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கிழக்குப் பாகிஸ்தானில் கலகம் ஏற்பட்டது. அதன் விளைவாக ஷேக் முஜிபும் அவரது கட்சியும் செயலளவில் சிவில் நிர்வாகத்தை தன் கையில் எடுத்துக் கொண்டது. அவரது உத்தரவின் பேரில் நீதிமன்றங்களும் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. போலீஸ் மற்றும் பிற வங்காள அரசுப்பணியாளர்களும் அவர்களோடு கூட்டு சேர்ந்தனர். பாகிஸ்தானின் தேசியக் கொடி தீவைக்கப்பட்டது. தாகூரின் –ஒரு ஹிந்துக் கவிஞர்- ஒரு கவிதை தேசிய கீதமாக்கப்பட்டது (இக் கவிதை தாகூரால் 1905 இல் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தின் பிரிவினையைத் தடுத்து அதன் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் எழுதப்பட்டது. ஷேக் முஜிபின் கட்சி இக்கவிதையை தேசிய கீதமாக எடுத்துக் கொண்டதன்டிப்படையில் அதுஹிந்து மனநிலைகளால் நிரம்பியுள்ளது என்பது தெளிவாகிறது). கிழக்குப் பாகிஸ்தான், “பங்களா தேஷ்” எனப் பெயரிடப்பட்டு சுதந்திர “பங்களா தேஷின்” தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வங்காளிகளல்லாத முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. அவ்வாறான ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர், அவர்களது கண்ணியம் மற்றும் உடமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர், கற்பழிக்கப்பட்டனர்; குழந்தைகள் கொல்லப்பட்டனர். மனிதர்களை உயிரோடு எரிக்கும் சம்பவங்கள் பெருமளவில் நிகழ்ந்தன. இக்கொடுமைகள் அனைத்தும் ஆதரவற்ற முஸ்லிம்கள் மீது, அவர்கள் வங்காளிகள் அல்லாதவர்கள் என்பதாலும் வங்காளத்திற்குப் பதிலாக உருது பேசுபவர்கள் என்ற காரணத்தால் மட்டுமே நிகழ்த்தப்பட்டது.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல இவ்வொடுக்கப்பட்ட மக்களுள் மேற்குப் பாகிஸ்தானின் முஸ்லிம்கள் மட்டுமின்றி, பிரிவினையின் போது, இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து செல்வதற்கு வேறு இடமில்லாமல் கிழக்குப் பாகிஸ்தானில் குடியேறிய பல இலட்சக்கணக்கான முஸ்லிம்களும் அடங்குவர். இவ்வாறு வங்காள தேசியவாதிகளும் சோஷலிஸ்டகளும் (முஸ்லிம் பெயர் கொண்டவர்கள்) ஹிந்துக்களுடன் கூட்டு சேர்ந்து வங்காளிகளல்லாத முஸ்லிம்களை கூட்டுக் கொலை செய்ததும், பெண்களைக் கற்பழித்ததும, சிறுமைப்படுத்தி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததும் ஒரு நகை முரணாகவே பட்டது. இறைநம்பிகையற்றவர்களோடு கூட்டு சேர்ந்து முஸ்லிம்கள் தங்கள் சகோதர முஸ்லிம்களைக் கொல்வதும், தங்கள் பெண்களை கற்பழிப்பதுமான கொடூர சம்பவங்கள் வரலாற்றில் அரிதாகவே காணக் கிடைக்கின்றன. எனினும் இத்தகைய ஒரு வக்கரிப்பு முஸ்லிம்களைப் போல் பெயர் கொண்ட வங்காள தேசியவாதிகளாலும் சோஷலிஸ்டுகளாலும் நிகழ்த்தப்பட்டது. உள்ளத்தில் இஸ்லாத்தின் மீது சிறிதளவாவது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதரையும் நான் கேட்கிறேன், “இத்தகைய முஸ்லிம்கள், முஸ்லிம்களாக கருதப்பட வேண்டுமா? அத்தகைய ‘முஸ்லிம்களுக்கு’ தகுந்த தண்டனை வழங்கப்பட்டால், இஸ்லாத்தின் புனிதப் பெயரை அவர்களுக்கு ஆதரவாக ஒருவர் பயன்படுத்த முடியுமா? முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் என்று யாராவது குற்றம்சாட்டி அதனடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா?”

  1. பாகிஸ்தான் உடைந்துவிடாதபடி, ஷேக் முஜிபுர் ரஹ்மானுடன் எப்படியாவது ஒரு உடன்படிக்கையை எட்டிவிடலாம் என்று அதிபர் ஜெனரல் ஏ.எம். யஹ்யா கான், மார்ச் 15 முதல் 25 வரை இயன்றளவு முயற்சித்தார். எனினும் பலனேதுமில்லை. மேலும் அதிபரின் டாக்கா பயணத்தின் போது, பல சந்தர்ப்பங்களில் வங்காளிகளால் ஆயுதப்படைகள் சிறுமைப்படுத்தப்பட்டன; அவர்களது பயணங்களில் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுடைய தேவைப்பொருள்களும் துண்டிக்கப்பட்டன. ஏதாவது ஒரு ஊரைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவர்கள் பழித்துரைக்கப்பட்டனர். அதிபர் யஹ்யா கானைக் கைது செய்திடவும் திட்டம் தீட்டப்பட்டது.

மார்ச் 25 க்கும் 26 க்கும் இடைப்பட்ட இரவில், வங்காள தேசியவாதிகள் “பங்களா தேஷை” சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப் போகின்றனர் என்ற அச்சம் நிலவிய ஒரு சூழலில் இராணுவம் தன் நடவடிக்கையை துவக்கியது. “பங்களா தேஷின்” சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டால், இந்தியா உடனே அதை அங்கீகரித்துவிடும். பின்னர் இந்தியாவிடம் இராணுவ உதவி கோர ஷேக் முஜிபுர்ரஹ்மானுக்கு எந்தவொரு தடையும் இருக்காது. இந்தியாவும் காஷ்மீரில் நடந்தது போல, தன் இராணுவத்தை கிழக்குப் பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்கும்.

இத்தகையதொரு சூழலில்தான் இராணுவம் தலையிட முடிவு செய்தது. இந்நடவடிக்கை நியாயமற்றது என யாராவது சொல்ல முடியுமா? ஒரு நாட்டின் அங்கமாக விளங்கும் ஒரு பகுதி அந்நிய சக்திகளின் முனைப்பான உதவியோடு பிரிந்து செல்ல முயற்சிக்கும் போது அதைத் தடுக்காமல் அதன் போக்கிலேயே விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு நாட்டை யாராவது காட்டுங்கள் பார்ப்போம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருபெரும் மக்களாட்சி நாடுகள் பிரிவினைவாத இயக்கங்களை சந்திக்க நேர்ந்தது. அவை இரண்டும் அவற்றை ஆயுத பலத்தைக் கொண்டே அடக்கின. 1874 இல் சுவிட்சர்லாந்தின் ஏழு ரோமானிய கத்தோலிக்க மாநிலங்கள் அந்த ஐக்கியத்திலிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தன். ஆனால் பிற மாநிலங்கள் அவற்றுக்கெதிராக போர் தொடுத்து வலுக்கட்டாயமாக ஐக்கியத்தில் மீண்டும் அவற்றை இணைத்தன. அதே போல் 1860 இல் ஐக்கிய அமெரிக்காவின் தெற்கத்திய மாநிலங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தன. ஆனால் இரத்தக்களரியான ஒரு போரின் பின்னர் அவை மீண்டும் ஐக்கிய அமெரிக்காவோடு இணைய நிர்பந்திக்கப்பட்டன. சமீபத்தில், 1960 இல் காங்கோவிலிருந்து கடாங்காவின் பிரிவினைக்கான இயக்கம் துவக்கப்பட்டபோது, அதை அடக்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து இருபதாயிரம் துருப்புகள் அனுப்பப்பட்டன. நைஜீரியா, இன்னும் புதிய உதாரணம். பையாஃப்ராவின் பிரிவினைவாதத்துக்கு எதிராக ஆயுதமேந்தும் நைஜீரியாவின் உரிமையை அனைத்து நாடுகளும் அங்கீகரித்தன. பையாஃப்ராவிற்கு ஆதரவாக மேற்கத்திய ஊடகங்கள் அனைத்தும், போப்பும் கூட தனது செல்வாக்கை பயன்படுத்திய நிலையில் தன் எல்லைக்குட்பட்ட ஒரு பகுதி ஆயுதமேந்தி கிளர்ச்சி செய்யும் போது, அதை அமைதியாக சகித்துக்கொள்ள வேண்டும் என்றும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்றும் சொல்ல எந்த நாடும் துணியவில்லை.

தங்கள் நாடுகளின் அங்கமான பகுதிகளின் பிரிவினைவாத திட்டங்களை பலத்தைக்கொண்டு சீர்குலைத்த நிகழ்வுகள் இவை. மிகச் சமீபத்தில் ரஷ்யா, கம்யூனிச கூட்டணியின் சுதந்திர, தன்னாட்சி கொண்ட நாடுகளுக்கெதிராக பலத்தைப் பிரயோகித்தது; அவற்றை அக்கூட்டணியிலேயே நீடிக்க நிர்பந்தித்துள்ளது. இத்தனைக்குப் பிறகும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு யார் ஆட்சேபனை தெரிவிக்க முடியும்? தங்கள் நாட்டின் எல்லைக்குள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி இயக்கத்தை சகித்துக் கொண்டு அதன் விளைவான பிரிவினையை அங்கீகரிக்கும் நாடு எதுவும் இருக்கிறதா? இந்தியா அவ்வாறு சகித்துக் கொள்ளுமா? பிரிட்டன் இதை ஏற்றுக் கொள்ளுமா? அமெரிக்கா, ஃபிரான்சு, ரஷ்யா அல்லது வேறு ஏதாவது நாடு தன் எல்லைக்குள் இதை அனுமதிக்குமா? கூபெக் இயக்கத்தின் பிரிவினை இயக்கத்தை கனடா சகித்துக் கொள்ளத் தயாரா?

1972, பிப்ரவரி 6 அன்று ஐக்கிய நாடுகள் சபை, மக்காவின் ராபிதா அல் ஆலம் அல் இஸ்லாமியா மற்றும் பிற முஸ்லிம் நாட்டுத் தலைவர்களுக்கு மௌலானா மௌதூதி பின்வரும் தந்தியை அனுப்பினார்.

“கிழக்குப் பாகிஸ்தானில் இஸ்லாத்திற்கும் ஐக்கிய பாகிஸ்தானிற்கும் விசுவாசமான பல இலட்சக்கணக்கான முஸ்லிம் வங்காளிகளும் வங்காளியல்லாதோரும் இந்திய இராணுவம் மற்றும் முக்தி பாஹினியின் கூட்டுக் கொலைகள், கூட்டுக் கைதுகள் மற்றும் பரவலான இரையாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு கொடூர ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். ராக்கெட் மற்றும் குண்டுகளால் தாக்கப்படும் வங்காளியல்லாத முஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதிகள் நிர்மூலமாக்கப்படும் அபாயத்தில் உள்ளன. டாக்காவில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வங்காளியல்லாத முஸ்லிம்கள் துடைத்தழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். மத மற்றும் கல்வி நிறுவனங்கள் அழிக்கப்பட்டு மூடப்படுகின்றன. வங்காள முஸ்லிம் உலமாக்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது கைது செய்யப்படுகிறார்கள். பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகள் நடைபெறுவது சிரமமாகிவிட்டது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஒடுக்குமுறை என்ற கட்டுக்கதைகளை ஒலித்துக் கொண்டிருந்த வல்லரசுகளும் பிற நாடுகளும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் என்று கூறப்படுவதன் ஆக்கிரமிப்புப் படைகள் செய்யும் அடக்குமுறைகள் மட்டும் அடக்குமுறைகளே இல்லை என்பது போலும் அவை நன்மையானவை என்பது போலும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. தயவு செய்து இந்த இரத்தக் களரியையும் ஒடுக்குமுறையையும் நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுங்கள்!”

1972 அக்டோபர் 12 இல் மௌலானா மௌதூதி பின்வரும் கடிதத்தை முன்னணி வழக்கறிஞர்களுக்கும் இஸ்லாமிய மையங்களுக்கும், முஸ்லிம் நிறுவனங்களுக்கும், இஸ்லாமிய இயக்கத் தலைவர்களுக்கும், முஸ்லிம் யுவ மற்றும் மாணவர் அமைப்புகளுக்கும், பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஃபிரான்சு, ஆசியா மற்றும் அரபு நாடுகளிலுள்ள முக்கியப் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களுக்கும், ஒலிபரப்பு கம்பெனிகளுக்கும் அனுப்பினார். மேலும் அதன் பல நகல்கள் முஃப்திகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், இஸ்லாமிய அரசவை, ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் பிற முஸ்லிம் நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

1971, டிசம்பர் 16 இல் டாக்கா வீழ்ச்சியடைந்த போது, பாகிஸ்தான் இராணுவம் மட்டுமின்றி அங்கு பணியமர்த்தப்பட்ட மேற்குப் பாகிஸ்தானின் சிவில் பணியாளர்களும், வியாபாரம் தொடர்பாக அங்கே இருந்த வணிகர்களும் அவர்களது குடும்பங்களும் கைதிகளாக்கப்பட்டு இந்திய போர்க் கைதி முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏறத்தாழ ஓராண்டு காலமாக, இந்தியா அவர்களை கைதிகளாகவே வைத்துக் கொண்டு பல்வேறு சாக்குப்போக்குகளை கூறிக்கொண்டிருக்கிறது; இன்னும் அவர்களை விடுவிக்க மனமில்லாமல் அவர்களைப் பணயமாக வைத்து ஆதாயங்கள் தேட முயற்சிக்கிறது. பொதுமக்களைப் பொறுத்தவரை, அவர்களைக் கைதிகளாக வைப்பதற்கு எவ்வித சட்ட முகாந்தரமும் இல்லை; இராணுவப் பணியாளர்களைப் பொறுத்தவரை போர் முடிந்தவுடன் தாமதமின்றி அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஜெனிவா விதிகள் தெளிவாகவே கூறுகின்றன.

பாகிஸ்தான் இராணுவம் இந்திய இராணுவத்திடம் மட்டுமின்றி வங்காள இராணுவத்திடமும்தான் சரணடைந்தது என இந்தியா சாக்குப்போக்கு சொல்கிறது. இக்காரணம் கைதிகளாக்கப்பட்ட பொது மக்களுக்கு பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் அவர்கள் போரில் பங்குபெறவும் இல்லை; யார் முன்னாலும் ஆயுதங்களை சமர்ப்பிக்கவும் இல்லை. இராணுவத்தைப் பொறுத்தவரை பாகிஸ்தான் இராணுவத்தின் கமாண்டர், தாம் ஒரு கூட்டுப் படையின் அதிகாரத்தின் முன்னே சரணடைந்ததாகக் கூறும் ஆவணத்தில் கையெழுத்திட்டதாக இந்தியா கூறுகிறது. ஆனால் சரணடைந்து கைதிகளாக்கப்பட்ட பின் அந்த ஆவணம் எழுதப்பட்டிருப்பின் அதற்கும் எந்த முகாந்தரமும் இல்லை. உண்மை என்னவெனில், டிசம்பர் 16 அன்று வங்காள தேச அரசு என்று ஒன்று இருக்கவில்லை. மேலும் அதன் முன் சரணடைவதற்கு நிலையான சட்டப்பூர்வ ஒரு இராணவமும் இல்லாதிருந்தது. இந்திய இராணுவத்திடம்தான் சரணடைவது நிகழ்ந்தது.

இப்போது, பங்களா தேஷ் அரசு என்றழைக்கப்படும் அரசாங்கம், கிழக்குப் பாகிஸ்தானைக் காப்பாற்றுவதற்காக பாகிஸ்தான் அரசோடு கூட்டு சேர்ந்த வங்காளிகளையும் வங்காளியல்லாதோரையும் போர்க் குற்றவாளிகள் என்ற அடிப்படையில் விசாரணை செய்யும் என்று மேலும் தொல்லை தருகிறது. எனினும் அவர்கள் யாருடன் சேர்ந்தார்களோ அதுவே அதிகாரப்பூர்வ அரசாங்கமாகவும் நாட்டைக் காப்பாற்ற யாரை எதிர்த்துப் போர் செய்தார்களோ அவர்கள்தான் நயவஞ்சகர்களாகவும், நாட்டை ஆக்கிரமிக்க அந்நிய எதிரிக்கு உதவியவர்களாகவும் திகழ்கிறார்கள். இப்போது இந்நயவஞ்சகர்கள் ஆட்சியாளர்களாக மாறி சட்டப்பூர்வ, அரசியல் சாசன அடிப்படையிலான அரசாங்கத்தோடு கூட்டுச் சேர்ந்தவர்களை போர்க்குற்றவாளிகளாக விசாரணை செய்கிறார்கள். பெயரளவிலான பங்களா தேஷ் அரசாங்கம், ஏறத்தாழ ஆயிரம் பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகளை விசாரிக்க திட்டமிடுகிறது. அவர்கள் இந்தியாவில் கைதிகளாக உள்ளனர். எனவே வங்க தேசத்தில் இந்தியாவின் சூழ்ச்சியின்றி அவர்களை கிழக்குப் பாகிஸ்தானிற்கு அனுப்பவோ, விசாரணை செய்யவோ முடியாது.

இப்போது கேள்வி என்னவெனில் சட்டப்பூர்வ, அரசியல் சாசனத்திற்குற்பட்ட அரசாங்கத்தை எதிர்த்து நடக்கும் கிளர்ச்சியை அடக்க இராணுவம் பயன்படுத்தப்படும் பொழுது, கிளர்ச்சியாளர்கள் தங்கள் வெற்றிக்குப்பின் அத்தகைய இராணுவத்தை விசாரணைக்கு உட்படுத்துவது சட்டப்பூர்வமானதா? என்பதே. இதன் பொருள் என்னவெனில் ஒரு நாட்டில் உள்நாட்டுச் சண்டை நடக்கும் சமயம் பிரிவினைவாதிகளின் கிளர்ச்சியை அடக்க இராணுவத்தை பயன்படுத்துவது சட்டப்பூர்வமற்றது என்பதும் கிளர்ச்சி வெற்றி பெற்றால் இராணுவத்தினர் போர்க்குற்றவாளிகளாக விசாரிக்கப் படுவார்கள் என்பதுமே. இத்தகைய ஒரு சூழலையே நாம் எதிர்கொண்டுள்ளோம். இப்பிரச்சனை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவின் முன்னும் சர்வதேச பத்திரிக்கைகள் முன்னும் வைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. உலகம் முழுவதுமுள்ள பத்திரிக்கைகளில் இப்பிரச்சனை விரிவாக விளக்கப்பட வேண்டும்.

1972 அடோபர் 29 இல் மௌலானா மௌதூதி, இரு தினங்களுக்கு முன் லயால்பூரில் அதிபர் பூட்டோ ஆற்றிய உரையில் பங்களா தேஷ் என்னும் “உண்மையை” பாகிஸ்தான் அங்கீகரிக்க வேண்டும் எனக் கூறியதை வன்மையாகக் கண்டித்தார்.

“தான் பதவியேற்றது முதல் கிழக்குப் பாகிஸ்தானின் நட்புமுறிவை, அதிபர் பூட்டோ அங்கீரிக்கவே விரும்பினார். அப்போதுதான் மேற்குப் பகுதியின் அதிகாரத்தை தான் கையிலெடுத்ததை அவரால் நியாயப்படுத்த முடியும். இந்நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதம் அதிபர் மேற்கொண்ட வழிமுறைகள் அவருடைய நிலையை மட்டுமின்றி, இந்நாட்டையும் வெகுவாக பாதித்தது. பங்களா தேஷை அங்கீகரித்த சிறு நாடுகளோடு தூதரக உறவை முறித்துவிட்டு வல்லரசு நாடுகளை எதுவும் செய்யாமல், பின்னர் மீண்டும் அச்சிறு நாடுகளோடு உறவை புதுப்பித்த நிகழ்வு உலக அரங்கில் பாகிஸ்தானை பழிப்புப் பொருளாக்கியது. ஆகஸ்டு 14 இல் பேரவையில் அதிபர் ஆற்றிய உரை வரலாற்றைத் திரிப்பதற்காகவே திட்டமிடப்பட்டது மட்டுமின்றி அவரது முந்தைய அவதானங்களையும் முரணுக்கு உட்படுத்தியது. பின்னர் அவர் ஷிம்லாவிற்கு புறப்படும் முன், பங்களாதேஷ் பற்றி இந்தியாவோடு எதுவும் பேசப்போவதில்லை என்று வாக்குறுதி அளித்தார்; அங்கிருந்து திரும்பி வந்தபின் ஷிம்லா உடன்பாட்டில் எழுதப்பட்டிருந்ததை தவிர இரகசியமாக வேறு எந்த உடன்படிகையும் தாம் செய்யவில்லை என்று தெளிவாக அறிக்கை வெளியிட்டார். ஆனால் பங்களா தேஷை அங்கீகரிக்க அதிபர் ஒப்புக் கொண்டார் என்று பின்னர் இந்தியா கூறிய போது அவரது வாக்குறுதிகள் ஏற்றுக்கொள்ள முடியாததாகின.

“பங்களா தேஷ்” என்னும் உண்மையை என்றென்றும் அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் நாம் அதை அங்கீகரிக்கத்தான் வேண்டும் என்றும் அவர் கூறினார். அதே சமயம், இவ்விஷயத்தில் ஒரு முடிவெடுக்கும் முன் மக்களின் ஒப்புதல் பெறப்படும் என உறுதியளித்தார். மக்களின் ஒப்புதலையும் எதிர்ப்பையும் எவ்வாறு உறுதி செய்வது? ஷேக் முஜிபுர்ரஹ்மானை விடுவிப்பது தொடர்பாக கராச்சியில் ஒரு பொதுக் கூட்டத்தில் கேட்டது போல் ஷிம்லாவிற்கு செல்லும் முன்னரும் இது குறித்து லாஹுரில் மக்களின் கருத்தைக் கேட்டார். ஆனால் மக்கள் பங்களா தேஷை அங்கீகரிப்பதை நிராகரித்தனர். இவ்விவகாரம் குறித்து பொதுக்கூட்டங்களில் மக்களின் கருத்தை எத்தனை முறைதான் கேட்பது? இவ்விஷயத்திற்கு ஆதரவாக மேற்குப் பாகிஸ்தானிய மக்கள், ஒரு ஆயிரம் கூட்டங்களில் கையை உயர்த்தினார்கள் என்று வைத்துக் கொண்டால், இதனடிப்படையிலேயே கிழக்குப் பாகிஸ்தானின் விதியை தீர்மானிப்பது சரியாகுமா?

ஆரம்பம் முதல், பாகிஸ்தான் இரு பகுதிகள் கொண்ட ஓர் உடலாகவே தோன்றியது என்று அவர் கூறுகிறார். ஒரு பகுதி மக்கள் மற்றொரு பகுதியை துண்டிக்க விரும்புகிறார்கள் என வாதத்திற்காக வைத்துகொண்டால், இதனடிப்படையிலேயே அதை நியாயப்படுத்த முடியுமா? பங்களா தேஷை அங்கீகரிப்பதற்கு ஆதரவாக பொதுக் கருத்தைத் திரட்டுவதற்கு ஒரு இயக்கத்தைத் துவக்க அதிபர் பூட்டோ நாடினார். ஆனால் லயால்பூரில் துவக்கப்பட்ட இப்பிரச்சாரத்தின் வாதங்கள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமின்றி, அவை பாகிஸ்தானை விட இந்தியாவின் வழக்கை ஆதரிப்பது போன்ற தோற்றத்தையே கொடுத்தது.  கிழக்குப் பாகிஸ்தானின் பிரிவினை, இந்திய ஆக்கிரமிப்பினால் அன்றி அம்மக்கள் ஆயுதமேந்தி கிளர்ச்சி செய்ததாலும் பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்க்க முக்தி பாஹினியை நிறுவியதாலுமே நடந்தது என்றும், இந்தியா அவர்களை ஆதரிக்கவே தன் இராணவத்தை அனுப்பியது என்று கூறப்பட்டது. இது, இந்தியா எத்தகைய ஆக்கிரமிப்பையும் நிகழ்த்தவில்லை என்றும் கிழக்குப் பாகிஸ்தானின் விடுதலை விரும்பிகளை ஆதரிக்கும் “புனிதப் பணியை” மேற்கொள்ளும் நிர்பந்தத்திற்கு அது உள்ளாகியது என்பதையே மறைகுறித்தது.

இது, தன்னறிவில்லாமல் பாகிஸ்தான் இராணுவத்தையே ஆக்கிரமிப்பாளர்களாகச் சித்தரிக்கும் முயற்சியாகும். ஏனெனில் அவர்கள்தான் அடுத்து பதவிக்கு வருபவர்கள் பாகிஸ்தானிலிருந்தே இருக்க வேண்டும் என்பதற்காக பயனற்ற முயற்சி செய்தனர். கிழக்குப் பாகிஸ்தானின் மக்கள் பிரிவினையை வேண்டினார்கள் என்பதை நம்பினால், அதன் தர்க்கரீதியான முடிவு, சில நூறு மட்டுமின்றி முழு பாகிஸ்தான் இராணுவமும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய ஆக்கிரமிப்பாளர்கள் என்றாகிறது. மேலும் அவர்களை ஆதரித்த ஆயிரக்கணக்கான தேசப்பற்று மிக்க வங்காளிகள் அனைவரும் நயவஞ்சகர்கள் என்றாகிறது. தன் நாட்டுக்கு எதிராக ஒரு தேசத்தலைவர் இதைவிட பயங்கரமான ஒரு அறிக்கையை வெளியிட முடியுமா? கிழக்குப் பாகிஸ்தானின் மக்கள் அனைவரும் பிரிவினையை வேண்டினார்கள் எனக் கூறுவது நியாயமா? 1970 தேர்தல்களில் அம்மக்கள் பிரிவினைக்காகவா வாக்களித்தார்கள்? 1971 மார்ச் 3 இல் கூடுவதற்கு அட்டவணையிடப்பட்ட பேரவை பிரிவினையை விவாதிப்பதற்காகவா கூட்டப்பட்டது? இப்பிரிவினை இயக்கம் முஸ்லிம் பொதுமக்களிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்பையும் பெறவில்லை என்பதும் இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்டு ஆயுதம்கொடுக்கப்பட்ட முக்தி பாஹினி, பாகிஸ்தான் இராணுவத்தால் திறமையற்றதாகவும் பயனற்றதாகவும் ஆக்கப்பட்டது என்பதும் உண்மையில்லையா? இந்தியாவின் தாக்குதல் மட்டும் நடைபெற்றிருக்காவிட்டால், கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்திருக்காது என்பதை மறுக்க முடியுமா?

இவையனைத்தும் மறுதலிக்க முடியாத உண்மைகள் என மௌலானா மௌதூதி கூறினார்.

ஆனால் இவ்வுண்மைகளை தவறான நோக்கில் முற்படுத்துவதன் மூலம் இந்தியாவின் முகக்கரியைத் துடைக்க தேசத் தலைவர் விரும்புவது துரதிர்ஷ்டவசமானது. சில தவறான புரிதல்களால் பிரிவினைவாதிகளாக மாறியவர்கள், பாகிஸ்தான் உடைந்ததற்காக இப்போது வருந்துகின்றனர். இந்தியாவின் கைகளில் சொல்லொனாத் துன்பங்களும் துயரங்களும் அனுபவித்த பின் இத்தருணத்தில் பிரிவினைக்கு அங்கீகாரம் வழங்குவது அவர்களின் நம்பிக்கைகளுக்கு பேரிடியாகும். (21)

குறிப்புகள்

(21) பங்களாதேஷ் பற்றி பூட்டோவின் கருத்துக்களை மௌதூதி கண்டிக்கிறார், டான், கராச்சி, அக்டோபர் 30, 1972

Related posts

Leave a Comment