கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா

ஜமாத்தே இஸ்லாமி ஏன் இவ்வளவு தீவிரமாக அரசியலில் பங்கேற்கிறது என நான் மௌலானா மௌதூதியிடம் ஒருமுறை கேட்டேன். அதற்கு அவர் துடிப்பான ஒரு இஸ்லாமிய தேசத்தில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படாத வரை அறவுரைகள், பிரசுரங்கள் மற்றும் கல்வியினால் கூட பெரிய அளவில் பயன் ஏதும் இருக்காது எனப் பதிலளித்தார். முஸ்லிம் நாடுகளின் அரசாங்கங்கள் இஸ்லாமிய சக்திகளால் கட்டுப்படுத்தப்படாத போது அவை இஸ்லாத்தின் எதிரிகளின் கையில் சென்றுவிடும் என அவர் தொடர்ந்து விவரித்தார். ஐரோப்பிய வரலாற்றில் காணப்படுவது போல், தேசியவாதம் சார்ந்த தேசப்பற்று இஸ்லாமிய உலகில் இல்லை என்று என்னிடம் கூறினார். மாறாக, தேசியவாதம் முஸ்லிம்கள் மத்தியில் –ஸியோனிச ஆக்கிரமிப்புக்கு எதிராக அரபுலகின் போராட்டத்தில் தெளிவாக காணப்படுவது போல- பிரிவினை, குழப்பம், ஒழுங்கின்மை, தடங்கல்கள் மற்றும் ஒழுக்கச் சிதைவு ஆகியவற்றைத் தவிர வேறெதையும் வளர்க்காது. தேசியவாதத்தை ஒரு முஸ்லிம் நாடு தன் கொள்கையின் அடிப்படையாக ஏற்றுக்கொள்வது தற்கொலையே.

மேற்கத்திய நாடுகளில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது போல செக்யூலரிசம் என்பது அரசாங்கத்தின் தலையீடில்லா சமய விவகாரங்கள் எனப் பொருள்படுவதில்லை. மாறாக அனைத்து சமய நடவடிகைகளையும் அரசு தன் முழுக் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் தன்னால் விலைக்கு வாங்க முடியாத சுதந்திர சிந்தனை கொண்ட உலமாக்களை எவ்வகையிலும் செயல்பட முடியாமல் தடுப்பதே அதன் பொருள் ஆகும். முஸ்லிம் உலகைப் பொறுத்தவரை, செக்யூலரிசம் என்பது மத எதிர்ப்பு மற்றும் அரசு ஆதரவுடன் அனைத்து சமய நிறுவனங்களையும் ஒடுக்குவதே ஆகும். கமாலிஸ்டுகளின் கீழ் துருக்கியில் நடந்தது நம் முன் சாட்சியாக உள்ளது. ஜமாத்தே-இஸ்லாமியின் ஈடுபாடின்றி பாகிஸ்தானின் நிலைமை சீராக அமையும் என்று கருதுவதற்கு எந்த முகாந்தரமும இல்லை என அவர் முடித்தார்.

மௌலானா மௌதூதி அரசியலை தனது முக்கிய செயற்களமாகக் கருதுவது ஏன்?

“நாம் வாழும் சமூக அமைப்பு, நம்மைப் படைத்தவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவதற்கும் நயவஞ்சகத்தை ஒழித்து வாழ்வின் முரண்பாடுகளைக் களைந்து உண்மை முஸ்லிம்கள் ஆவதற்கும் ஒரு புரட்சியை அவசியமாக வேண்டுகிறது. இவ்வமைப்பு குஃப்ரிலும் கடவுள் மறுப்புக் கொள்கையிலும் தவறான கடவுள்களை வணங்குவதிலும், பாவத்திலும், ஒழுக்கக்கேடுகளிலும் அஸ்திவாரம் கொண்டுள்ளது. இவ்வமைப்பை வடிவமைத்த சிந்தனையாளர்களும் அதை நடைமுறைப்படுத்தும் அரசியல் மேதகைகளும் அல்லாஹ்விடமிருந்து விலகி அவனது சட்டங்களை உடைத்துவிட்டவர்கள். தலைமை அவர்கள் கையில் இருக்கும்வரை, அறிவியல், கல்வி, இலக்கியம், கலை, தகவல் பரப்பு, சட்ட ஆக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல், நிதித்துறை, தொழில், வணிகம், நிர்வாகம் மற்றும் சர்வதேச உறவுகள் என அனைத்து துறைகளையும் இத்தகையவர்கள் வழிநடத்தி, கட்டுப்படுத்தி, தலைமை தாங்கும் வரை இவ்வுலகில் முஸ்லிமாக வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும்.

மேலும் நம் வருங்கால சந்ததியருக்கு குறைந்தபட்ச இஸ்லாமிய நம்பிக்கையை விட்டுச் செல்வதும்கூட சாத்தியமற்றதாகிவிடும். ஒழுக்ககேடானவர்கள், அல்லாஹ்வை எதிர்த்துக் கிளர்ச்சி செய்பவர்கள், ஷைத்தானின் சீடர்கள் இவ்வுலகில் தலைவர்களாகவும் வழிநடத்துபவர்களாகவும் இருக்கும்வரை ஒடுக்குமுறையும், ஒழுக்கக்கேடும், தவறான எத்தனங்களும் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை. அவ்வாறு நினைப்பது அறிவிற்கும் இயல்புக்கும் எதிரானது. எனவே நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம் என்ற உண்மையே, இத்தகைய ஏறுமாறான, நெறிபிறழ்ந்தவர்களின் தலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து அவநம்பிக்கை மற்றும் தவறான கடவுள் வணக்கம் ஆகியவற்றின் ஆதிக்கத்தை துடைத்தெறிந்து அவற்றை உண்மை நம்பிக்கையைக் கொண்டு மாற்றுவதைக் கோருகிறது.

இஸ்லாமல்லாத அமைப்புகளின், அரசாங்கங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அவற்றை இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு மாற்றுவதே இஸ்லாமிய ஜிஹாதின் குறிக்கோள். ஒன்று அல்லது ஒரு சில நாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்புரட்சியைக் கொண்டுவர இஸ்லாம் விரும்புகிறது. ஆரம்பத்தில், இஸ்லாமிய இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தான் வாழும் பகுதியில் புரட்சிக்காக உழைப்பதையே கடமையாகக் கொண்டிருந்தாலும், இறுதி நோக்கம் உலகளாவிய புரட்சியைத் தவிர வெறெதுவும் இல்லை. ஒரு தேசம் அல்லது நாடு மட்டுமின்றி முழு மனித இனத்தின் நன்மையையும் தாங்கிநிற்கும் எந்தவொரு புரட்சிகரக் கொள்கையும் தன்னை ஒரு தேசத்தின் அல்லது நாட்டின் எல்லைகளுக்குள் வரைமுறைப்படுத்த முடியாது. இத்தகைய ஒரு கொள்கை அதன் இயல்பிலேயே உலகப்புரட்சியை தன் கொள்கையாக்க வேண்டும். ஒரு மலை அல்லது ஆற்றின் ஒரு பக்கம் எது உண்மையும் சத்தியமுமாக இருக்கிறதோ அதுதான் மறுபக்கமும் உண்மையும் சத்தியமுமாக இருக்கும். மனிதத்தின் எவ்வொரு பகுதியும் அதிலிருந்து துண்டிக்கப்படக் கூடாது (22)

இன்று உலகெங்கும் பொருள் முதல்வாதமும் மேற்கத்தியவாதமும் வெற்றிக்களிப்பில் திழைத்து இஸ்லாத்தின் செல்வாக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டு இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக போராடுபவர்களின் வெற்றிவாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால் பலஹீன மனம் படைத்த முஸ்லிம்கள் மத்தியில் அவநம்பிகையும் மலைப்பும் மிகைத்துக் காணப்படுகிறது. மருத்துவ சிகிச்சைக்காக மௌலானா மௌதூதி லண்டன் சென்ற போது, அவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அவர் இவ்வாறு பதிலளித்தார்:

அவநம்பிக்கையும் ஏமாற்றமும் இஸ்லாமியப் பணியாளர்களை ஆட்கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் தங்கள் முயற்சிகள் தம் கண் முன்னேயே பலனளிக்க வேண்டும் என எதிர்பார்க்கத் துவங்கிவிட்டார்கள் என்பதுதான். நிலைமைகள் மாறும் என நாம் நம்புகிறோம். ஆனால் ஒரு முஸ்லிம் ஒரே ஒரு விஷயத்தைக் கொண்டே உந்தப்படுகிறான் –அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவது. மறுமையில் கிடைக்கப் பெறும் பரிசின் மீதே எமது பார்வை பதிந்துள்ளது. இங்கு ஏற்படும் பலன்கள் அனைத்தும் துணைப்பலன்களே. எமது உண்மையான குறிக்கோள் எம்மைப் படைத்தவனின் நாட்டத்தைப் பூர்த்தி செய்வதே. இங்கு இப்போது தங்கள் முயற்சிகளின் பலன்களை எதிர்பார்ப்பவர்கள் பத்ரிலும் உஹதிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களின் உதாரணங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்பணியைப் பூர்த்தி செய்ய தங்கள் இரத்தத்தை அவர்கள் சிந்தினார்கள். எனினும் தங்கள் தியாகத்தின் பலனை அவர்கள் கண்டார்களா? மறுமையில் வரும் பலன்களையே அவர்கள் கண்டார்கள். இஸ்லாமிய இயக்கத்திற்காக தங்கள் இரத்தத்தை சிந்தி நீர் புகட்டாமலும் தியாகம் செய்யாமலும் அவர்கள் இருந்திருந்தால் வரலாற்றின் பாதையை திருப்பிப்போட்ட மாற்றங்களை வருங்கால சந்ததியினர் கண்டிருக்க முடியாது. ஆனால் அவர்கள் அத்தகைய விளைவுகளைக் காண்பதற்காக பணியாற்றவில்லை. தங்கள் முயற்சியின் கனிகளைக் காண அவர்கள் வாழவில்லை. கடமையை ஆற்றுவதே அவர்களின் இலட்சியமாக இருந்தது. இத்தகைய மனப்பாங்கே இஸ்லாமியப் பணியாளர்களால் வளர்க்கப்பட வேண்டும் (23)

1968 இன் இலையுதிர்-பனிக்காலங்களில், லண்டனில் மௌலானா மௌதூதி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, கிரேட் பிரிட்டனின் ‘முஸ்லிம் மாணவர் சமூகத்தின்’ அரபி மாத இதழான ‘அல் குரபா’ வின் ஆசிரியர் அவரைப் பேட்டி கண்டார். அப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் பகையுணர்வும் கொடுங்கோன்மையும் கொண்ட ஆட்சியின் கீழ் பணியாற்றும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு எத்தகைய பணி முறைகளை யோசனை கூறுவார் என அவரிடம் கேட்கப்பட்டது. மௌதூதி இவ்வாறு பதிலளித்தார்:

தாங்கள் வாழவேண்டியுள்ள சர்வாதிகாரத்தின் இயல்பும் பண்பும் எத்தகையது என்பதை விவேகமாகவும் சரியாகவும் மதிப்பிடுவது ஒரு நாட்டின் இஸ்லாமிய பணியாளர்கள் மற்றும் தலைவர்களின் பொறுப்பு என நான் கருதுகிறேன். இதை மனதில் கொண்டு அவற்றுக்கெதிரான போராட்ட முறைகளைக் கண்டறிந்து இஸ்லாமிய இயக்கங்களுக்கு சேவகம் செய்யும் வாய்ப்புகளை அவர்கள் தேட வேண்டும். பல்வேறு முஸ்லிம் நாடுகளில் உள்ள கொடுங்கோன்மையின் இயல்பும் அளவும் வெவ்வேறு விதங்களில் உள்ளதால், முறையான ஒரு செயல்முறையை யோசனை கூறுவது சாத்தியமாகாது. எனினும் இவையனைத்திலும் தேவை என நான் கருதுவது என்னவெனில் ரகசிய இயக்கங்கள் மற்றும் ரத்தக்களரியான புரட்சிகர முறைகளை தேர்ந்தெடுப்பதற்கான கவர்ச்சித் தூண்டுதலை அவர்கள் எதிர்க்க வேண்டும் என்பதே. துன்பங்களுக்கு உள்ளாக நேர்ந்தாலும் –அது சிறை அல்லது தூக்குமேடையாகவே இருப்பினும்- அவர்கள் வெளிப்படையாகவும் சாத்வீகமாகவும் அல்லாஹ்வின் பாதையில் பணியாற்றத் தயாராக வேண்டும்.

அதேபோல், வல்லரசுகளால் உந்தப்பட்ட பல்வேறு முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய இயக்கங்களை ஒடுப்பதற்காக சமீபத்தில் மேற்கொண்ட முயற்சிகள், ஜமாத்தே இஸ்லாமியின் மத்தியில் பேரச்சத்தை பரப்பி, அதன் உறுப்பினர்களை வெற்றிக்கான சாத்தியத்தின் மீது நம்பிக்கையிழக்கச் செய்துவிட்டதா எனக் கேட்ட இக்வானுல் முஸ்லிமூனின் அரபி மாத இதழான அல் முஸ்லிமூனின் ஆசிரியருக்கு மௌலானா மௌதூதி இவ்வாறு பதிலளித்தார்:

இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால் திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சரிகையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன். *(24)

வாழ்க்கை முழுவதும் தன்னுடைய நலன் மற்றும் பாதுகாப்பு பற்றி எந்த அக்கறையும் கொள்ளாமல், மௌலானா மௌதூதி அச்சமின்றி, அதிகாரத்தில் உள்ளவர்களின் தீய செயல்களை கண்டித்தார். பலமுறை அவர் மீது கொலை முயற்சிகள் நடந்திருப்பினும், பிரத்யேகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு பணியாளர்களை வைத்துக் கொள்வதையும் தேவை என அவர் கருதவில்லை. 1970 இல் பனிக்காலத்தின் தேசிய பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுயநலம் கொண்ட, சந்தர்ப்பவாத, பகட்டான உலமாக்கள் அவருக்கு எதிராக வசைமாரி பொழிந்தனர். ஜும்ஆ குத்பாக்களில் அவரை மட்டுமின்றி அவரது மனைவி, மகன்கள் மற்றும் மகள்களையும் பழித்துரைத்தனர். அவர் மீது நடந்த அதிர்ச்சியூட்டும் கொலை முயற்சிகளுள் ஒன்று லாஹுரின் ‘தி பாகிஸ்தான் டைம்ஸ்’ (1970, செப்டம்பர் 8) இதழில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:

“ஜவுஹராபாதைச் சேர்ந்த பதின் வயதுச் சிறுவனான ஸாஹித் இக்பால் மௌலானா மௌதூதியைக் கொலை செய்யும் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு லாஹுரிலுள்ள ஜமாத்தின் தலைமையகத்தில் ஜமாத் பணியாளர்கள் முன், ஞாயிற்றுக் கிழமை மாலை சரணடைந்தான். 14 வயதான ஸாஹித் இக்பால் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கூறுகையில், ஆகஸ்டில் ஜவுஹராபாதில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஜாமியதுல் உலமாவின் ஹஸார்வி குழுவைச் சார்ந்த மௌலானா ஸியாவுல் காசிம் ஆற்றிய உரையைக் கேட்ட பின்னர், மௌலானா மௌதூதியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறினான். அவனது கூற்றின் படி அக்கூட்டத்தில், மௌதூதி திருத்தூதரை களங்கப்படுத்தினார் என்றும், குர்ஆனின் ஒரு பாதியை மட்டுமே நம்பினார் என்றும் அந்த மௌலானா அவர் மீது குற்றம் சாட்டினார். ஏழாம் வகுப்பு மாணவனான அச்சிறுவன் மேலும் கூறுகையில் “எதிரிகள் தனக்கெதிராக எத்தகைய வசைச்சொற்களைப் பிரயோகிப்பினும் தான் அவர்களுக்கெதிராக அசிங்கமான மொழியையும் பழிப்புரைகளையும் பயன்படுத்தப் போவதில்லை” என அசர் தொழுகைக்குப் பின் கேள்வி கேட்டவர்களிடம் மௌலானா மௌதூதி கூறியதைப் கேட்டு தான் கவரப்பட்டதாகக் கூறினான். மேலும் மௌலானாவின் “ஒளி மிகுந்த” முகத்தைக் கண்டும் “குடிகாரர்கள் இஸ்லாத்தை பாகிஸ்தானில் பரப்ப முடியாது” என்ற அவரது கூற்றைக் கேட்டும் தான் வெகுவாக கவரப்பட்டதாகக் கூறினான்.

போலீசாரிடம் வழக்கு பதியப்பட்டுள்ளதா எனக் கேட்கப்பட்ட போது, ஸாஹித் இக்பால் உண்மையில் கொலை முயற்சி செய்யவில்லை என்றும் அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு “நான் அதை மன்னித்து விட்டேன்” என்ற காரணத்தால் வழக்குப் பதிய தன்னளவில் விரும்பவில்லை என மௌலானா மௌதூதி கூறினார். எனினும் ஜமாத் தலைவரிடம் அச்சிறுவன் ஒப்படைத்த 18 அங்குல நீள கத்தியைக் கருத்தில் கொண்டு அவன் மீது வழக்குப் பதிய வேண்டும் என சில ஜமாத் உறுப்பினர்கள் கருத்து கூறினர். ஸாஹித் இக்பால் அக்கத்தியை ஜவுஹராபாதின் ஒரு இரும்புக் கொல்லனிடமிருந்து திருடியதாகக் கூறினான்.

1970 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மௌதூதியின் பாதுகாப்பிற்கு இருந்த அச்சுறுத்தலைப் பற்றி நான் அவரை எச்சரித்த போது அவர், “எல்லாம்வல்ல அல்லாஹ்வின் மீது நிறைவான நம்பிகை உடையவர்கள் அவனது பாதுகாப்பையும் அருளையும் பெறுவார்கள்”, என அமைதியாக பதிலளித்தார்.

மௌலானா மௌதூதியின் சாதனைகள் தரத்திலும் அளவிலும், அவருக்கு முன் இஸ்லாமிய புத்துயிர்ப்புக்காகப் போராடியவர்களை மிஞ்சிவிட்டது. அவர் இஸ்லாமிய கல்விகளில் பூரண வல்லமை பெற்றது மட்டுமின்றி நவீன மதச்சார்பற்ற உலகக் கல்வியிலும் கூர்மையான அறிவைப் பெற்றுள்ளார். முற்றிலும் ஏறத்தாழ சுய-கல்வியே கற்றிருந்தாலும் அவரது அறிவு ஒரு கலைக்களஞ்சியம். மதம், தத்துவம், கலை, அறிவியல், அரசியல், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் அவரால் சமபுலமையுடன் பேசவும் எழுதவும் முடியும். பிற வாழ்க்கை முறைகளைவிட இஸ்லாமிய ஒழுங்கின் சிறப்பைப் பற்றி எதிரிகளின் சந்தேகங்களைக் களைவதற்காக, நாற்பதாண்டு கால பணிவாழ்வில் தான் திரட்டிய அறிவை அவர் செயல்திறனுடன் பயன்படுத்தியுள்ளார். நவீன கல்வி கற்ற இளைஞர்களின் கவனத்தைக் கவரும்படியான நூற்றுக்கும் அதிகமான நூல்கள் மற்றும் பிரசுரங்களில், இஸ்லாத்தின் எல்லாக் கூறுகளையும் விரிவாக நவீன சடவாதக் கொள்கைகளோடு தொடர்புபடுத்தி, அவரது புலமை துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது. அது மட்டுமின்றி தான் போதித்ததை தன்னுடைய அந்தரங்க மற்றும் பொதுவாழ்வில் எப்படி உண்மையிலேயே நடைமுறைப்படுத்தினார் என்பதையும் பொதுமக்களுக்கு அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் உள்ள எல்லா உண்மையான இஸ்லாமியச் சேவகர்களைப் போல அவரும் முற்றிலும் அர்ப்பணிப்பு மிகுந்த, சுயநலமற்ற, அச்சமில்லாத, களங்கமற்ற ஒழுக்கப் பண்புகள் கொண்டவர். என்றும் பணிவுடன் அடக்கமாகவும் அன்போடும் இருக்கும் அவர், முகஸ்துதியை வெறுப்பவராகவும், பகட்டு, செல்வம் மற்றும் சொகுசுகளை தவிர்ப்பவராகவும் இருக்கிறார்; வீட்டில் தனக்கும் தன் குடும்பத்தார்க்கும் எளிமையையே வலியுறுத்துகிறார்.

மௌலானா மௌதூதி தன்னளவில் அர்ப்பணிப்பு மிக்க முஸ்லிமாக இருந்தது மட்டுமல்லாமல், தன் மனைவி, ஆறு மகன்கள் மற்றும் மூன்று மகள்களையும் அதே திசையில் இயக்குவதிலும் வெற்றி பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக, அவரது துணைவியாரே மேற்குப் பாகிஸ்தானில் ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் பிரிவுத் தலைவியாக உள்ளார். அவர் சிறந்த குடும்பத் தலைவி மட்டுமின்றி, பெரும்பாலான தனது நேரத்தை குர்ஆன்-ஹதீசை கற்பதிலும், வீட்டில் கூடும் எல்லா வயது பெண்களுக்கும் உரை நிகழ்த்துவதிலும் செலவிடுகிறார். அவரது மூத்த மகன் உமர் ஃபாரூக், தர்ஜுமானுல் குர்ஆனை நிர்வகிப்பதிலும் பதிப்பிப்பதிலும், பிற பணிகளிலும் தந்தைக்கு உதவுகிறார். மற்ற பிள்ளைகளும் பெற்றோர்க்கு கீழ்ப்படிபவர்களாக, அவர்களது முயற்சிகளை ஆதரிப்பவர்களாக, தமது நம்பிக்கையை கடைபிடிப்பவர்களாகவும், மதிக்கூர்மையானவர்களாகவும், நவீன மற்றும் இஸ்லாமிய கல்வி கற்றவர்களாகவும் உள்ளனர். தினமும் மதியம், மௌலானா மௌதூதி பொது- மக்களோடு தம் வீட்டின் புல்வெளியில் அமர்ந்து உரையாடுகிறார். எல்லா வயது ஆண்களும், வாழ்வின் எல்லாத் துறைகளைச் சார்ந்தவர்களும் வந்து இஸ்லாம் சம்பந்தமாக தாங்கள் அறிய விரும்புவதையும், தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இஸ்லாத்தின் பொருத்தப்பாடு பற்றியும் அவரோடு கலந்துரையாடுகின்றனர். உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பும் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் எழுதும் கடிதங்களுக்கு பதிலெழுதுவதிலும் கணிசமான நேரத்தை அவர் செலவிடுகிறார்.

மௌலானா மௌதூதி அளவிற்கு எழுத்து, போதனை மற்றும் களப்பணி ஆகியவற்றை ஒன்று சேர்த்து இஸ்லாமிய புத்துயிர்ப்புக்காகப் பணியாற்றியவர்கள் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இருப்பார்களெனில் அவர்கள் மிகக் குறைவே.

(–நிறைவுற்றது–)

குறிப்புகள்

(22) வாருங்கள் இவ்வுலகை மாற்றியமைப்போம், செய்யது அபுல் அஃலா மௌதூதி, கவுகப் சித்தீகியால் தொகுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது, வட அமெரிக்க இஸ்லாமியக் கட்சி, வாஷிங்டன் டி.சி. 1972, பக் 142 143

(23) மௌதூதி பதிலளிக்கிறார், தி முஸ்லிம், லண்டன், மார்ச் 1969, பக் 128

(24) ‘மௌலானா மௌதூதி பதிலளிக்கிறார்’, தி கிரைடீரியன், கராச்சி, ஜனவரி-பிப்ரவரி 1969, பக் 30-31

Related posts

Leave a Comment