கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் – 2

Loading

நாம் செய்யக்கூடிய பாவங்களுக்கும் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. நம்முடைய பாவங்கள் நம் ஆரோக்கியத்தில் வாழ்வாதாரத்தில் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது ஒரு மனிதன் மற்றொருவனைப் பார்த்து “உன் பாவத்தினால்தான் உனக்கு இப்படியெல்லாம் துன்பங்கள் வருகின்றன” என்று சொல்ல வேண்டிய விசயம் அல்ல. ஒவ்வொருவரும் தமக்குத் தாமே சொல்லிக் கொள்ள வேண்டிய விசயம். அதன்மூலம் தம்மிடம் இருக்கும் தீய பண்புகளைக் களைந்து தம்மை ஒரு சிறந்த மனிதராக அவர் மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.

இமாம் இப்னு கய்யூம் ‘அத்தாவு வத்தவாவு’ – நோயும் நிவாரணமும் என்ற தம்முடைய நூலில் பாவங்களினால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார். அவை பின்வருமாறு: உடலளவிலும் மனதளவிலும் பாவங்களால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அல்லாஹ்வே அவற்றை நன்கறிவான். அவற்றுள் சில:

1. பாவங்கள் கல்வி என்னும் ஒளியை அணைத்துவிடுகிறது. கல்வி என்பது அடியானின் உள்ளத்தில் அல்லாஹ் ஏற்படுத்தும் ஒளியாகும். பாவங்கள் அந்த ஒளியை அணைத்துவிடுகிறது. இமாம் ஷாஃபி இமாம் மாலிக்கின் முன்னால் அமர்ந்து அவரிடம் கல்வி பயின்றபோது அவரது திறமையைக் கண்டு வியந்த இமாம் மாலிக் அவரிடம் கூறினார்: “அல்லாஹ் உமது உள்ளத்தில் கல்வி என்னும் ஒளியை ஏற்படுத்தியிருப்பதைக் காண்கிறேன். எனவே பாவங்கள் என்னும் இருளால் அதனை அணைத்துவிடாதீர்.”கல்வி என்பது அல்லாஹ் வழங்கும் அருளாகும். அது பாவிகளுக்கு வழங்கப்படாது.

2. பாவங்கள் வாழ்வாதாரத்தைத் தடுக்கிறது. ‘அஹ்மது’ என்ற நபிமொழித் தொகுப்பில், “அடியான் செய்யும் பாவங்களினால் அவனது வாழ்வாதாரம் தடுக்கப்படுகிறது” என்ற நபிமொழி இடம்பெற்றுள்ளது.

3. பாவங்கள் அடியானுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே தூரத்தை ஏற்படுத்தி அடியானின் உள்ளத்தில் வெறுமையை ஏற்படுத்துகின்றன. இந்த உலகிலுள்ள எல்லா இன்பங்களும் ஒன்றுசேர்ந்தாலும் அவை இறைநெருக்கத்தினால் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடாகாது. ஈமான்கொண்டவர்களால் மட்டுமே இந்த நெருக்கத்தை உணரமுடியும். பாவங்கள் இதற்குத் தடையாக அமைந்துவிடுகின்றன.

4. பாவங்கள் நல்லவர்களிடமிருந்து தூரமாக்கிவிடுகின்றன. பாவிகளால் நல்லவர்களின் நெருக்கத்தைப் பெறமுடியாது. அவர்களிடமிருந்து பயனடைய முடியாது. இந்த பாவங்கள் மனிதனுக்கும் அவனுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்குமிடையேகூட தூரத்தை உண்டுபண்ணிவிடுகின்றன. ஸலஃபுகளில் – முன்னோர்களில் – ஒருவர் கூறுகிறார்: “நான் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அதன் பாதிப்பை என் மனைவியிடமும் வாகனத்திடமும் காண்கிறேன்.”

5. பாவங்களால் அடியானின் விவகாரங்கள் சிக்கலாகிவிடுகின்றன. அவன் எந்தச் செயலைச் செய்தாலும் அதைக் கடினமாகவே பெறுவான். அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு அவன் இலகுவை ஏற்படுத்துவான். அவன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களுக்கு அவன் கடினத்தை ஏற்படுத்துவான். பாவங்களினால் நன்மையான செயல்களின் வாயில்கள் அவனுக்கு அடைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றும்.

6. பாவக்கறைகளினால் அடியானின் உள்ளம் இருளடைந்துவிடுகிறது. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது ஒளியாகும். பாவங்கள் புரிவது இருளாகும். உள்ளத்தில் ஒளி அணைந்து காரிருள் படர்ந்துவிட்டால் அடியான் அவனே உணராதவாறு வழிகேட்டில் தடுமாறித்திரிகிறான். உள்ளத்தில் படர்ந்துவிடும் இந்த இருளே அவனுடைய முகத்திலும் இருளை ஏற்படுத்துகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்: “நற்செயல்கள் முகத்திலும் உள்ளத்திலும் ஒளியையும் வாழ்வாதாரத்தில் விசாலத்தையும் உடலில் பலத்தையும் மக்களின் உள்ளங்களில் அன்பையும் ஏற்படுத்துகின்றன. தீயசெயல்கள் முகத்தில் கருமையையும் உள்ளத்தில் இருளையும் உடலில் பலவீனத்தையும் வாழ்வாதாரத்தில் குறைவையும் மக்களின் உள்ளங்களில் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.”

7. பாவங்கள் உடலிலும் உள்ளத்திலும் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. அவை உள்ளத்தை பலவீனப்படுத்தி வாழ்க்கையை நாசமாக்கிவிடுகின்றன.நம்பிக்கையாளன் உளரீதியில் பலமானவன். உள்ளம் பலமாகிவிட்டால் உடலும் பலமாகிவிடுகிறது. பாவியோ பலமான உடலைப் பெற்றிருந்தாலும் பலவீனமான உள்ளத்தின் காரணமாக வலுவிழந்துவிடுகிறான். தேவை ஏற்படும்போது உள்ளத்தில் ஏற்படும் பயம் மிகைத்து அவனது உடல்பலத்தை இல்லாமலாக்கிவிடுகிறது.

8. பாவங்களினால் ஆயுள் குறைக்கப்பட்டு பரக்கத் – அபிவிருத்தி – இல்லாமலாகிவிடுகிறது. நற்செயல்கள் வாழ்நாளை அதிகப்படுத்துவதுபோல பாவங்கள் அதனைக் குறைத்துவிடுகின்றன.

9. பாவங்கள் அடியானின் பாவங்களை அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றன. எந்த அளவுக்கெனில் அவற்றிலிருந்து வெளியேறுவதே அவனுக்குக் கடினமாகிவிடும். ஸலஃபுகள் கூறுகிறார்கள்: “தீமை அதற்குப்பின் இன்னொரு தீமைக்குக் காரணமாகிவிடுகிறது. நன்மை அதற்குப்பின் இன்னொரு நன்மைக்குக் காரணமாகிவிடுகிறது.”அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்யும் அடியார்கள் அதற்குப் பழக்கப்பட்டு தொடர்ந்து நற்செயல்களைச் செய்துகொண்டே செல்கிறார்கள். அல்லாஹ் தன் வானவர்களை அவர்களிடம் அனுப்பிவைக்கிறான். வானவர்கள் அவர்களை நற்செயல்களின்பால் உந்தித் தள்ளுகிறார்கள். படுக்கையிலிருந்து அவர்களை எழுப்புகிறார்கள்.அதுபோன்று பாவங்கள் செய்து பழக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பாவங்கள் செய்துகொண்டே செல்கிறார்கள். ஷைத்தான் அவர்களிடம் வந்து தீயசெயல்களின்பால் அவர்களை உந்தித் தள்ளுகிறான்.

10. பாவங்கள் உள்ளத்தை பலவீனப்படுத்திவிடுகின்றன. அவை பாவம்செய்யும் எண்ணத்தை வலுப்படுத்தி பாவமன்னிப்புக் கோரும் எண்ணத்தை கொஞ்சம்கொஞ்சமாக நீக்கிவிடுகிறது. எந்த அளவுக்கெனில் அவை மிகைத்துவிட்டால் பாவமன்னிப்புக் கோருதலும் வெறும் சடங்குத்தனமாகவே இருக்கும். அடியானின் உள்ளம் பாவத்தில் நிலைத்திருக்கும். இதுதான் அவனை அழிவின்பால் இட்டுச் செல்லும் மிகப் பெரிய நோயாகும்.

11. பாவங்கள் இழிவை ஏற்படுத்திவிடுகின்றன. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன்மூலமே கண்ணியம் பெறப்படுகிறது.“யார் கண்ணியத்தை விரும்புகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன்மூலம் அதனைத் தேடிக்கொள்ளட்டும். கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” (திருக்குர்ஆன்) ஸலஃபுகளில் சிலர் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்: “அல்லாஹ்வே உனக்குக் கட்டுப்படுவதன்மூலம் எனக்குக் கண்ணியத்தை அளிப்பாயாக. உன் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதைக் கொண்டு என்னை இழிவுபடுத்திவிடாதே.”அப்துல்லாஹ் இப்னு முபாரக் கூறுகிறார்: “பாவங்கள் உள்ளங்களை மரணிக்கச் செய்துவிடுகின்றன. இழிவையும் போதையையும் ஏற்படுத்திவிடுகின்றன. பாவங்களை விட்டுவிடுவதே உள்ளங்களுக்கு வாழ்வாகும்.

12. பாவங்கள் நீரிலும் நிலத்திலும் குழப்பங்களை ஏற்படுத்திவிடுகின்றன.“மக்கள் செய்த தீவினைகளினால் தரையிலும், கடலிலும் குழப்பம் பரவிவிட்டது. எனவே அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அல்லாஹ் அவர்களதுசில தீயசெயல்களின் விளைவை அவர்கள் சுவைக்கும்படிச் செய்கிறான்.” (30:41)

பின்வரும் கடிதம் ஐந்தாம் கலீஃபா என்றழைக்கப்படும் உமர் இப்னு அப்துல் அஜீஸ் தம்முடைய படைத்தளபதி ஒருவருக்கு எழுதியது:

“எல்லா நிலையிலும் இறையச்சத்தைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில் அதுதான் மிகச்சிறந்த முன்னேற்பாடும் மிகக்கூர்மையான திட்டமும் பெரும் பலமும் ஆகும். நீங்களும் உங்களின் தோழர்களும் எதிரிகளுக்கு அஞ்சுவதைவிட அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதற்கு அதிகம் அஞ்சிக்கொள்ளுங்கள். ஏனெனில் எதிரிகளின் சூழ்ச்சிகளைவிட பாவங்களை எண்ணித்தான் நான் அதிகம் பயப்படுகிறேன். நாம் அவர்களின் பாவங்களின் காரணமாகவே நாம் அவர்களை எதிர்க்கிறோம். அவர்களுக்கு எதிராக உதவி செய்யப்படுகிறோம். இவ்வாறு மட்டும் இல்லையெனில் நம்மிடம் எந்த வலிமையும் இருக்காது. ஏனெனில் நம்முடைய எண்ணிக்கையோ முன்னேற்பாடுகளோ அவர்களின் எண்ணிக்கையையும் முன்னேற்பாடுகளையும் போன்றவை அல்ல. நாமும் அவர்களும் அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் சமமானவர்களாக இருந்தால் பலத்திலும் முன்னேற்பாட்டிலும் அவர்கள் நம்மைவிடச் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஏனெனில் நாம் நம்முடைய பலத்தினால் அவர்களை மிகைக்கவில்லை, அவர்களுக்கு எதிராக உதவி செய்யப்படவில்லை. உங்களின் பாவங்களைவிட யாருடைய எதிர்ப்பையும் குறித்து நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் பாவங்களை விட்டு எந்த அளவு விலகியிருக்கிறீர்களோ அந்த அளவு நீங்கள் வலிமையானவர்களாக ஆக முடியும். அறிந்துகொள்ளுங்கள், உங்களுடன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். நீங்கள் பயணம் செய்யும்போதும் ஊரில் தங்கியிருக்கும்போதும் நீங்கள் செய்யும் எல்லா செயல்களையும் அவர்கள் அறிகிறார்கள். அவர்களின் விசயத்தில் வெட்கப்படுங்கள். அவர்களின் தோழமையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதைக் கொண்டு அவர்களுக்குத் தீங்கிழைக்காதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் இருப்பதாகக் கூறுகிறீர்கள். நம் எதிரிகள் நம்மைவிட மோசமானவர்கள். நாம் பாவம் செய்தால் அல்லாஹ் அவர்களை நம்மீது சாட்ட மாட்டான் என்று கூறாதீர்கள். எத்தனையோ சமூகத்தார் மீது அவர்களின் பாவங்களினால் அவர்களைவிட மோசமானவர்கள் சாட்டப்பட்டுள்ளார்கள். உங்கள் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுவதுபோன்று உங்கள் மனதினால் ஏற்படும் தீங்களுக்கு எதிராகவும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்”.

இந்தக் கடிதத்தில் வெளிப்படும் இஸ்லாமிய உயிரோட்டம்தான் அவர் ஐந்தாம் கலீஃபா என்றழைக்கப்படுவதற்கான காரணம். முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவியும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டுமெனில் அவர்கள் அதற்குத் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதி இறைஉதவிக்குத் தகுதியானவர்களாக தங்கள் எப்படி ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

மனிதனுக்கு ஆரோக்கியம் அளப்பரிய செல்வமாகும். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமானவனாக ஒருவன் ஒரு நாளை அடைவதைவிட பெரும் பேறு எதுவும் இல்லை. எந்தவொன்றும் நம்மை விட்டுச் செல்லும்போதுதான் அதன் அவசியத்தை நன்குணர்கிறோம். மனிதன் இழப்பின்போதுதான் இருப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்கிறான். தினமும் நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் கற்றுத்தரும் பின்வரும் பிரார்த்தனையை சற்று கவனமுடன் வாசித்துப் பாருங்கள். இந்த பிரார்த்தனையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஆஃபியா’ என்ற வார்த்தை முழுமையான ஆரோக்கியத்தைக் குறிக்கும். ‘அல்அஃப்வு’ நம்முடைய பாவங்களை அவன் கண்டுகொள்ளாமல் மன்னித்து விடுவதைக் குறிக்கும். முதலில் அவனிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு பின்னர் ஆரோக்கியத்தைக் கேட்கிறோம். இரண்டையும் ஒருசேர கேட்க வலியுறுத்தப்பட்டிருப்பதற்கான சூட்சுமம் இரண்டிற்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதையே காட்டுகிறது:

“அல்லாஹ்வே! நான் உன்னிடம் இந்த உலகிலும் மறுவுலகிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் வேண்டுகிறேன். அல்லாஹ்வே! என் மார்க்கத்திலும் உலகத்திலும் குடும்பத்திலும் செல்வத்திலும் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன். அல்லாஹ்வே! என் அந்தரங்கத்தை மறைத்துவிடு. என் அச்சங்களிலிருந்து எனக்குப் பாதுகாப்பு வழங்கு. அல்லாஹ்வே! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் என் வலப்பக்கமிருந்தும் இடப்பக்கமிருந்தும் எனக்கு மேலிருந்தும் என்னைப் பாதுகாத்துக் கொள். உன் மகத்துவத்தைக் கொண்டு எனக்குக் கீழிருந்து நான் அழிக்கப்படுவதைவிட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.” (அபூதாவூத்)

Related posts

Leave a Comment