மோடி அரசின் ‘செல்லாது’ அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்
நவம்பர் 8ஆம் தேதி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று தலைமை அமைச்சர் அறிவித்ததும் பல ஊடகவியலாளர்கள், தொழில் அதிபர்கள், அவரது கட்சியினர், பொதுமக்களில் பலர் என பல தரப்பினரும் அதனை ஏகமாக வரவேற்றனர். சில நாட்களில் நிலைமை சீராகிவிடும் என நம்பினார்கள். தற்கால தொல்லைகள் எல்லாம் நெடுங்கால நலனுக்காக என்று தன்னை சமாதானம் செய்துகொண்டதோடு எல்லோருக்கும் சமாதானம் கூறினார்கள். இது ஒரு செறிவான நடவடிக்கை எனவும் கூறி பெருமைப்பட்டனர். இரண்டு வாரங்கள் கடந்த பின்பும், நிலைமை சீராகிற எந்த அறிகுறியும் காணவில்லை. இனிமேல் பழைய நோட்டுகளை மாற்ற முடியாது என்று அறிவித்து வங்கிகளின் முன் காத்திருந்த கூட்டத்தை குறைத்தது மட்டுமன்றி மக்களின் இன்னல்கள் குறித்தெல்லாம் செவி மடுக்காமல் நாளொரு அறிவிப்பு என்று நாட்கள் நகர்கின்றன.
இவ்வளவு சிரமங்களை மக்களுக்கு கொடுத்து பாஜக-வும், மோடியும் எதனை அடைய விரும்புகிறார்கள்? கருப்புப் பண ஒழிப்பையா? இருக்கவே முடியாது. ஏனெனில் அந்த கட்சி மட்டுமல்ல; எல்லா கட்சிகளும் கருப்புப் பணத்தில்தான் திளைக்கின்றன என்பதுதான் உண்மை. அவர்களிடம் குவிந்திருக்கும் நிதி எங்கிருந்து கிடைத்தது என்பது யாருக்கும் தெரியாமல் இருக்க சட்டத்தில் அடைக்கப்படாமல் வைத்திருக்கும் ஓட்டையை அனைத்து அரசியல்கட்சிகளும் பயன்படுத்துகின்றன. அதாவது ரூ.20,000க்கு கீழ் ஒரு நபரிடமிருந்து அவர் யாரென்றே தெரியாமல் நன்கொடை பெறலாம். இதனை பயன்படுத்தி தாங்கள் வைத்திருக்கும் பல ஆயிரம் கோடிகளை இவ்வாறு கணக்கு காட்டும் கட்சிகள் எவ்வாறு கருப்புப் பணத்தைப் பற்றி வாய் திறக்க முடியும்?
அவர்களுக்கு அதற்கான அறம் எங்கு உள்ளது? அங்கேயே தொடங்குகிறது, அவர்களது பொய்மை. இப்படி எந்த பேதமுமில்லாமல் எல்லா கட்சிகளும் பெரும் நன்கொடைகளை பணமாக பெறுவதுடன் யாரிடம் பெற்றோம் எனவும் தெரியாது என்று கூறுவது என்பது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தவர் அவ்வளவு பணம் யார் கொடுத்தார் என்று தெரியாது. ஆனால், அந்தப் பணத்தை நான் வைத்து கொண்டேன் என்பதன் நீட்சியே. இதுபோன்ற ஒரு வருமான வரிக்கணக்கை தனிநபர் ஒருவர் தாக்கல் செய்தால் வருமான வரித்துறை ஏற்றுக்கொள்ளுமா? அவரை என்ன பாடுபடுத்தும்?ஆனால், வரித்துறையின் ஜம்பம் எல்லாம் அரசியல்கட்சிகளிடமும் செல்லாது. அதிகாரத்தில் இருப்போரிடமும் செல்லாது. ஆக இவர்கள் (தற்போதைய கருப்புப் பண ஆதரவாளர்களாகட்டும் அல்லது ஒழிக்கப் புறப்பட்டுள்ள யுக புருஷர்கள் ஆகட்டும்) யாருக்கும் எந்த அறநிலைப்பாடும் இல்லை என்பது தெளிவு. இது ஒருபுறம் இருக்க, பின்னர் எதற்குதான் இந்த முடிவு? இதனை தெளிவாக புரிந்து கொள்ள நமது பொருளாதாரக் கொள்கைகளை விளங்கிக் கொள்வது அவசியம்.
பாஜக-வும் சரி, காங்கிரஸும் சரி. நவ தாராளமயக் கொள்கைகளை முற்றிலுமாக செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன. நவ தாராளமயக் கொள்கையின் தாரக மந்திரம் சந்தை என்பதாகும். அதுதான் ஒரு சூத்திரக்கயிறு. காத்தாடி பறக்க எப்படி சூத்திரம் இன்றியமையாததோ அதைப்போல்,நவ தாராளமயத்துக்கு சந்தை இன்றியமையாதது. தேவையும், அளிப்பும் மட்டுமே பொருளாதார முடிவுகளை தீர்மானிக்கும். மற்ற அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ஒரு மனிதன் பிழைக்க முடியுமா அல்லது புறம் தள்ளப்படுவானா என்பதைக்கூட சந்தைதான் தீர்மானிக்கும்.
சந்தையில் செயல்பட பணம் வேண்டும். சந்தை பலப்பல வாய்ப்புகளை தேவைப்படுவோருக்கு வழங்கிச் செல்லும். தேவையற்றோர் புறக்கணிக்கப்பட்டு செத்தொழிவர். செத்தொழிவது தனிநபர் சார்ந்த பிரச்னை. அரசைப் பொருத்தவரை அதற்கு அதில் எந்த பொறுப்பும் இல்லை. இப்படி இயங்குவதுதான் செறிவான இயங்கு முறையாகும். இதில் எந்த வீணாக்குதலும் நிகழாது. அனைத்து காரணிகளும் உச்சபட்ச நிலையில் பயன்படுத்தப்பட்டு ஒரு நாட்டின் பொருளாதாரம் உச்ச திறனில் இயங்கும். செல்வம் பெருகும். சுபிட்சம் மலரும். இதுதான் அந்த கொள்கையின் இயங்கு தத்துவம்.
இதில் என்ன தவறு? இந்த தத்துவத்தை இந்தியா போன்ற நாட்டில் செயல்படுத்தும்போது முதலாளித்துவமே அது செயல்படும் விதம் கண்டு வெட்கித்தலை குனியும். ஏனெனில் ‘CRONY CAPITALISM’ என்று சொல்லக்கூடிய ஒரு முதாலாளித்துவம்தான் இங்கு இயங்குகிறது. அரசின் கடைக்கண் பார்வை எந்த முதலாளிகள் மீது படுகிறதோ அவர்கள் செழித்தோங்குவார்கள். மற்றவர்களை ஒழித்தும் விடுவார்கள். இதுதான் நம்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்தை வழி நடத்துவதும் இல்லை. பொருளாதாரமும் செறிவாக இயங்காது. செறிவான இயங்குதலை உறுதி செய்யும் வண்ணம் ஏற்படுத்தப்படும் ஒழுங்குமுறை ஆணையங்கள் அனைத்தும் ‘CRONY CAPITALISM’ என்பதை உறுதி செய்யவே செயல்படும். அதற்கு ஏதுவாக தன்னியல்புடன் தனி அதிகாரத்துடன் செயல்படாமல் ஏற்கனவே அரசு பொறுப்பில் பதவி வகித்து கொள்கைகளைத்தீர்மானித்தவர்களைச் சுழலும் கதவு என்கிற முறையில் ஒழுங்கு முறை ஆணையர்களாகி விடுகிறார்கள். இதுதான் நாம் நவ தாராளமயமாக்கலை செயல்படுத்தும் முறை.
இம்முறையில் என்ன பயன் கிடைக்கும்? யாரெல்லாம் அதிகாரத்தின் மையப்புள்ளியோடு தொடர்பில் இருக்கிறார்களோ அவர்கள் நினைத்ததுதான் கொள்கை, விலை, லாபம் எல்லாம். இதனால் அவர்கள் சந்தையில் போட்டியிட்டு தரமான பொருட்களை நியாயமான விலைக்கு எவ்வாறு கிடைக்கச் செய்ய முடியும். இதன் பலனாக சந்தை பொருளாதாரத்திலும் இல்லாமல் பழைய அரசு கண்காணிப்பில் நடந்த பொருளாதாரத்திலும் இல்லாமல் சில முதலாளிகளின் பெரு லாபத்துக்கு சாமானியன் இரையாக்கப்படுவது இந்தியாவில் தொடர்கிறது.
மேலும், தனி மனித உரிமைகளைப் பற்றியெல்லாம் இந்த ‘CRONY CAPITALISM’ கவலைப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, நமது நெடுஞ்சாலை திட்டத்தை பார்க்கலாம். பெரும்பாலான பெருவழிகள் கட்டணச் சாலைகள் ஏன்? அவையெல்லாம் பெரும் பொருள் செலவில் தனியாரால் கட்டமைக்கப்பட்டவை. அவர்கள் போட்ட முதலையும் அதற்கான வட்டி மற்றும் லாபம் ஆகியவற்றையும் வசூலித்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ளது. எல்லாம் சரி, ஆனால் இந்தியாவுக்கே உரித்தான ‘CRONY CAPITALISM’ எவ்வாறு செயல்படுகிறது? முதலில் அந்த ஒப்பந்தங்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டுமோ அவர்களுக்குத்தான் கிடைக்கும். இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு சாலையை அமைக்க ரூ.100 கோடி செலவு எனக் கொண்டால் அதற்கான மதிப்பீட்டைப் போல மடங்கு உயர்த்திக் கொள்ள நமது அரசு, அதிகாரிகள் என அனைவரும் இசைகின்றனர்.
அந்த உயர்ந்த மதிப்பீட்டை வங்கிகளில் காட்டி அதற்கான கடனை பெறுகின்றனர். இதன் காரணமாக, அந்தச் சாலையை அமைக்கும் செலவு பல மடங்கு உயர்த்திக் காட்டப்படுகிறது. கிடைக்கும் தொகையிலிருந்து அந்த நிறுவனம் செலவிடும் தொகை, லாபம், கொள்ளை ஆகிய அனைத்தும் அந்நிறுவனத்துக்கு கிடைத்துவிடும். அதில் தேவையான கவனிப்புகள் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கில்லாமல் இதனை செய்ய முடியாது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.
இது ஒரு கற்பனைக் கதையல்ல. மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் இதனை வெளிப்படையாகத் தெரிவித்ததுடன் அந்நிறுவனங்கள் பெருமளவு கடனில் இருக்க இதுதான் காரணமென்றும், அதற்கு பொறியாளர்களும், வங்கி அதிகாரிகளும் துணை போகாமல் இதனை செய்திருக்க முடியாது எனவும் கூறினார். இது போதாதென்று நாம் பயணிக்க எந்த மாற்று ஏற்பாட்டையும் அரசு செய்வதில்லை. மேலை நாடுகளில் எங்கெல்லாம் கட்டணச் சாலைகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அதன் அருகிலேயே கட்டணமில்லா சாலைகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதன்பின் அதில் பயணிப்பது என்பது உங்கள் விருப்பம். இதுபோன்ற முற்றுரிமை ஏற்பாடு இந்தியாவில் தழைக்க ‘CRONY CAPITALISM’ தான் காரணம் என்பது புரிகிறதா? இதைத்தான் ரகுராம்ராஜன் “இந்திய முதலாளித்துவத்தை இந்திய முதலாளிகளிடம் இருந்து காக்க வேண்டும்” என்று கூறினார்.
இப்படித்தான் பல துறைகளிலும் நமது பொருளாதாரம் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் 8 – 10 விழுக்காடு வளர்கிறது என்று எல்லோரும் மார்தட்டி பெருமை கொள்கின்றனர். இருந்துவிட்டு போகட்டும். ஆனால், இந்த வளர்ச்சியால் சாமானியனுக்கு என்ன கிடைத்தது? நாட்டின் வளம் நாட்டிலுள்ள மக்களுடையது தானே? அதனைக் கொண்டு அனைவரும் தானே பலன் பெற வேண்டும்? ஆனால், அப்படி இல்லை நடைமுறை. வெகுசிலர் மட்டும் தங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தி பெரும் செல்வத்தை தொடர்ந்து குவித்து வருகிறார்கள்.
இதன் விளைவாக, இந்திய நாட்டின் செல்வத்தில் 58 விழுக்காடு உச்சத்தில் உள்ள ஒரு விழுக்காட்டு மக்களிடம் மட்டும் உள்ளது. மற்றொரு புறம் 50 விழுக்காட்டு மக்களிடம் உள்ள செல்வம் வெறும் 2 விழுக்காடு மட்டுமே. இதுதான் நாம் புதிய பொருளாதாரக் கொள்கையினால் 7 – 10 விழுக்காட்டு வேகத்தில் வளர்வதன் பயன். இப்படிப்பட்ட சமமற்ற வளர்ச்சி மிகவும் கண்கூடாக புலப்படும். இதனால் பயன்பெறாத பெரும்பாலான மக்கள் அதிருப்தி கொள்ளலாம். பின்னர் அநீதியை உணரலாம். பொங்கி எழலாம். இதனை சமாளிப்பதும் திசை திருப்புவதும் ஆள்பவர்களின் தலையாய கடமை. அதனை செய்யத் தவறினால் நிலைமை இதுபோன்றே நீடிக்காது.
இச்சூழலில், அரசு தனது ராஜ தந்திரத்தை இரு வழிகளில் பயன்படுத்தலாம். முதல் வழி என்பது சாமானியனின் கேள்வியை மழுங்கடிக்க ஒரு சிறு தொகையை கஜானாவிலிருந்து செலவிட்டு அவனைப் பற்றி தனக்கு அக்கறை இருக்கிறது என்று காட்டிக் கொள்ள வேண்டும். இரண்டாவது வழி என்பது பண முதலைகளின் செல்வத்தை அபகரிக்க வேண்டும் அல்லது அபகரிப்பது போல் நடிக்க வேண்டும்.
இதில் முதல் பாதையை தேர்ந்தெடுத்தது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. சாமானியன் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை உறுதித் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத் திட்டம் ஆகிய இரு திட்டங்களை செயல்படுத்தியது. அத்திட்டங்களை செயல்படுத்திய அதே நேரத்தில் பல துறைகளுக்கும் வழங்கப்பட்ட மானியங்களை ஈவு இரக்கமற்று குறைத்துக் கொண்டேதான் இத்திட்டங்களை செயல்படுத்தியது. இப்படிப்பட்ட பரவலான திட்டங்கள் செயல்படும்போது, ‘அரசு நமக்கு ஏதோ செய்கிறது’ என சாமானியன் சமாதானம் கொள்கிறான். சமூகத்தில் நடக்கும் பிற அநீதிகளைப் பற்றி அப்போதைக்கு கவலைப்பட மாட்டான். அழும் குழந்தைக்கு மிட்டாய் வாங்கித் தருவது போன்ற நடவடிக்கை இது.
மற்றொரு நடவடிக்கை உணவு பாதுகாப்பு திட்டம். இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே, பெரும் செல்வந்தர்களிடம் சேரும் செல்வத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகவில்லை. ‘JOBLESS GROWTH’ என்ற சொல்லாடலே பிறந்தது. இதனை ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்டு பாஜக-வும், மோடியும் காங்கிரஸை வெளுத்து கட்டினார்கள். மோடி, தான் ஆட்சிக்கு வந்தால் வருடம் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். கருப்புப் பணத்தை கைப்பற்றி பகிர்ந்தளிப்பேன் என வட இந்தியா முழுவதும் பறந்து பறந்து முழங்கினார்.
அந்த ‘நல்ல நாளை’ ஆவலோடு எதிர்பார்த்து உ.பி., பீகார் மாநில பரம ஏழைகள் ஏகமாக வாக்களித்து அவரை அரியாசனத்தில் அமர்த்தினார்கள். இரண்டரை வருடங்களாயின. சாயம் வெளிறியது. கடந்த பத்து ஆண்டுகளிலேயே குறைவான வேலைவாய்ப்பை மட்டுமே மோடியினால் உருவாக்க முடிந்தது. கருப்புப் பணம் இருக்குமிடத்தை நெருங்க மாட்டோம் என்று தெரிந்தும் பேசிவிட்டதை மெய்ப்பிக்க வேண்டாமா? நாட்டின் பெரும் பணக்காரர்கள் சொத்து சேர்க்கும் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. சமமின்மை முன்பைவிட கண்கூடாகத் தெரிகிறது. பாஜக-வின் ஜனார்த்தன் ரெட்டி ரூ.700 கோடிக்கு மகளின் திருமணத்தை நடத்துகிறார். சாலைகள் எங்கும் பென்ஸ், ஆடி கார்கள். மறுபுறம் ரூ.500க்கே வழியில்லாத நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர்.
இப்போதுதான் நாம் விவரித்த இரண்டாவது பாதையை மோடி தேர்ந்தெடுக்கிறார். மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் கோபத்தை தணிப்பது இப்போது நடக்கும் செயல் அல்ல. உ.பி-யில் தேர்தல் வருகிறது. நாம் என்ன வாக்களித்தோமோ அவையெல்லாம் பொய்த்துவிட்ட பின் நாம் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அந்தத்திட்டம் மக்களின் குமுறலை எதிரொலிக்க வேண்டும். அதற்கான ஆயுதம்தான் கருப்புப் பண ஒழிப்பு என்பது. கருப்புப் பணம் பெரும்பாலும் உள்நாட்டில் இருப்பதில்லை. இருந்தாலும் அவை கட்டுகளாக அடுக்கி வைக்கப்படுவதில்லை. இவையெல்லாம் இந்திய அரசியலில் நெடுங்காலமாக புழங்கி வரும் மோடிக்கு தெரியாததல்ல. இதுபோன்ற செயல்களில் விற்பன்னர்களான குஜராத்தின் முதல்வராக இருந்திருக்கிறார் மோடி.
பெரும் குஜராத்தி செல்வந்தர்களுக்கும் உற்ற தோழர். அல்லது பல ஆயிரம் கோடிகளை யாரிடமிருந்து பெற்றோம் என்று தெரியாமல் பெறும் பாஜக-வுக்கும் தெரியாததல்ல. இருந்தாலும் சாமானியன் நம்ப வேண்டும். கை தட்டி வரவேற்க வேண்டும். அதனால்தான் இந்த தமிழ்ப்பட கதாநாயகன் நடவடிக்கை போன்ற ஒரு நடவடிக்கை. இதனால் சாமானியன்தான் பாதிக்கப்படுவான். என்றாலும் அந்த பணக்காரனின் பணம் ஒரே நாளில் செல்லாததாகி விட்டது என நம்ப வைப்பதுதான் மோடி அரசியலின் வெற்றி.
இப்போது நடந்து கொண்டிருக்கும் காட்சிகள் இவை தான். இக்காட்சி இப்படியே தொடரும் வல்லமை பாஜக-வுக்கும், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் உண்டு. இந்த நாடகத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வது யார்? ஊடகமா? அல்லது அரசியல் கட்சியினரா? காலம்தான் இந்த பொய்யை விளக்கும். அதற்குள் வேறு ஒரு திட்டம் தயாரிக்கப்படும் பாஜக-வினரால். இந்த பகடை ஆட்டத்தில் மோடி இழக்க ஏதுமில்லை.
தமிழ் கதாநாயகன் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டை பிடிப்பதை ரசிக்கும் நமது ரசிகர்கள், மோடியின் இந்த சாகசத்தில் மயங்குவது இயற்கைதானே? ஆக, பெருகி வரும் சமமின்மையைக் களைய எதையுமே செய்யத் தயாராக இல்லாத மோடி அரசு, இதன் காரணமாகத் தோன்றும் அதிருப்தியை திசை திருப்பவே பணக்காரர்களின் பணத்தை ஒரே அறிவிப்பால் அழித்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இந்த அறிவிப்பின் நோக்கம். இதற்கான விலையையும் சாமானியன் தலையில் தொடர்ந்து சுமத்துவது மோடியின் தலையாய ராஜ தந்திரம். அதற்காக நாமெல்லாம் அவருக்கு தலை வணங்குவோம்.
கட்டுரையாளர்:
ஜெ.ஜெயரஞ்சன். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும், புத்தகங்களிலும் வெளிவந்துள்ளன.
நன்றி: மின்னம்பலம்