தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)

[நபிகள் நாயகத்தின் கடிதங்களையும் உடன்படிக்கை ஆவணங்களையும் அரசியல் அதிகார கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்து ஸஃபர் பங்காஷ் எழுதியுள்ள விரிவான புத்தகத்தின் (Power Manifestations of the Sirah) மொழிபெயர்ப்பை மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் இரண்டாவது பகுதி கீழே.]

மதீனா உடன்படிக்கைதான் நபிகளாரின் முதலாவது எழுத்துபூர்வ ஆவணம் என்று பெரும்பாலான நபி வரலாற்றுப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. பிரகடனம்6 என்றும், முதல் எழுத்துபூர்வ அரசியல் சாசனம்7 என்றும் அது அறியப்படுகிறது. நபிகள் நாயகத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் தயாரிக்கப்பட்ட முதலாவது விரிவான ஆவணமாக அதுவே இருந்தாலும், அதற்கு முந்தைய கடிதங்களும் இருக்கின்றன. வரலாற்றுச் சூழமைவை நினைவுபடுத்திக் கொள்வதற்காக நாம் மக்காவில் இஸ்லாத்தின் தோற்றம், அங்கு நபியவர்கள் எதிர்கொண்ட சோதனைகள், அவற்றை அவர்கள் எவ்வாறு வென்று மேலோங்கி மதீனாவில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினார்கள் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். மனித குலத்துடனான இறுதித் தூதுத்துவத் தொடர்பாடல் நிகழ்ந்தேறியபோது, இந்தக் கடிதங்களும் உடன்படிக்கைகளும் முதலில் ஓர் இஸ்லாமிய அரசை நிறுவுவதிலும், பிறகு அதனை வலுப்படுத்துவதிலும் எவ்வாறு உதவிகரமாக அமைந்தன என்பது பற்றி பரிசீலனை செய்வோம்.

விரல்விட்டு எண்ணக்கூடிய பின்பற்றாளர்களைக் கொண்டே மக்காவில் நபிகளார் தனது இலட்சியப் பணியை ஆரம்பித்தார்கள். முதல் பதிமூன்று வருடங்களில் இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சிறியதாகவே நீடித்தது. மக்காவுடைய அதிகாரப் பண்பாட்டின் மையக் கருவாக விளங்கிய குறைஷித் தலைவர்கள், இஸ்லாத்திற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எதிராகச் சளைக்காத பகையுணர்வை வெளிப்படுத்தினார்கள். இந்தப் பகையுணர்வு துவக்கத்தில் ஏளனமாக, பரிகாசமாக வெளிப்பட்டது. பிறகு, முஸ்லிம்களை மிகத் தீவிரமான கொடுமைகளுக்கு உள்ளாக்குவதாக வளர்ச்சி கண்டது. இந்த துன்புறுத்தல்களுக்குப் பின்னாலிருந்த செயல்நோக்கங்களை ஆய்வு செய்வது படிப்பினை தரக்கூடியது.

தங்களுடைய குழுநலன்களுக்கு முஸ்லிம்கள் ஒரு ஸ்தூலமான அச்சுறுத்தலை முன்னிறுத்துவதாக குறைஷித் தலைவர்கள் அப்போது சொல்லியிருக்க முடியாது -குறைந்தபட்சம் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் மட்டுமாவது அதற்கு வாய்ப்பிருக்கவில்லை. அவர்களின் மூர்க்கமான பகைமையை உசுப்பி விடும்படி வேறு ஏதோவொன்று நிச்சயமாக இருந்திருக்கிறது. பலவீனர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் துயருக்குள்ளாக்கும் தம்முடைய சுரண்டல்வாத அமைப்புமுறைக்கு இஸ்லாம் ஒரு அபாயமாக உருவெடுக்கும் என்பதை, அந்தச் சுரண்டாவாத அமைப்பின் முதன்மைப் பயனாளிகளாக இருந்த குறைஷித் தலைவர்கள் சரியாகப் புரிந்து கொண்டார்கள்.

வரலாறு நெடுகிலும் சுரண்டல்காரர்கள் தம்முடைய இருப்பு நிலையைச் சவாலுக்குள்ளாக்குவோரை எப்போதும் குறிவைத்தே வந்திருக்கின்றனர். தாம் அகற்றப்படுவதற்கான சாத்தியம் மிகச் சேய்மையிலிருந்த போதும்; அல்லது, அது எதிர்காலத்தில் வெகு தொலைவிலிருந்த போதும் கூட அவர்கள் எப்போதும் இவ்வாறே நடந்து கொண்டிருக்கின்றனர். மக்காவின் மேல்தட்டினரால் இஸ்லாத்தின் செய்தியில் தவறெதையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. செல்வம் படைத்தவர்களும் அதிகாரம் படைத்தவர்களும் மற்றோரை அச்சமூட்டி கீழடக்கி வைத்திருக்கும் வகையான ஒரு சுரண்டல்வாத அமைப்பை பாதுகாத்துப் பேணிவரும் ஒரு குற்றத்துக்கு தாம் பொறுப்பாளிகளாக இருப்பதை குறைஷித் தலைவர்கள் உணர்ந்தேயிருந்தார்கள். பிறப்பு, குலம், செல்வம் என்று அனைத்திற்கும் அப்பால் அல்லாஹ்வின் பார்வையில் மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்று நபியவர்கள் பிரகடனம் செய்த மறுகணமே, அது குறைஷிப் பிரபுக் குலத்தவர்கள் மத்தியில் பரம்பரைக் குணமான வர்க்கவாதத்தையும் இனவாதத்தையும் கிளறிவிட்டது. இழிபிறவிகளாகக் கருதப்படும் அடிமைகளும், வாங்க-விற்கத்தக்க வியாபாரப் பண்டங்கள் போன்று நடத்தப்பட்ட பெண்களும் தங்களுக்கு எப்படிச் சமமாக முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் காட்டிய பகைமைக்கு ஒரு கருத்தியல் பரிமாணமும் இருந்தது: அல்லாஹ்வின் ஏகத்துவம், அவனது அதிகாரத்தின் ஒருமைத் தன்மை, அவனது சட்டங்கள் மறுக்கப்பட முடியாதவை என்பவற்றை உள்ளடக்கிய செய்தியை இஸ்லாம் பிரகடனம் செய்தது. பல கடவுளர்கள் மீதும், தமது சொந்த மேன்மை மீதும் அவர்கள் கொண்டிருந்த நீண்டகால நம்பிக்கையை அந்தச் செய்தி நேரடியாக கேள்விக்குட்படுத்தியது. மிகவும் முக்கியமாக, கோத்திரக் கடவுள்களைச் சுற்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த அவர்களின் சுரண்டல்வாதப் பொருளாதார அமைப்பினை இஸ்லாம் கேள்விக்குட்படுத்தியது. குறைஷித் தலைவர்கள் இதனைக் கடுகளவும் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. முஸ்லிம்கள் மீதான அவர்களின் ஒடுக்குமுறைக்கு இதுவே பிரதான காரணம்.

ஒடுக்குமுறை மிகத் தீவிரமாக இருந்தது. எந்தளவுக்கெனில், சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய நபியின் மீதும் கொண்டிருந்த புதிய விசுவாசத்தையே கூட ஒளித்து மறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. முஸ்லிம்கள் சுமார் 300 கி.மீ. வடமேற்கிலிருந்த மதீனாவுக்கு (நபியவர்கள் அங்கு புலம்பெயருவதற்கு முன்பு அது யத்ரிப் என்று அறியப்பட்டது) புலம்பெயருவதற்கான ஒரு வாய்ப்பை அல்லாஹ் உருவாக்கித்தரும் வரை, அவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவில்லை. முஸ்லிம்கள் இப்போது மதீனாவில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதொரு சூழலில் இருந்தார்களெனினும், மதீனாவிலும் கூட முஸ்லிம்களின் பிரச்சினைகள் உடனே முற்றாகக் காணமல் போய்விடவில்லை. வளர்ந்துவரும் இஸ்லாத்தின் சக்தியை அழிப்பதையே தெளிவான நோக்கமாகக் கொண்டு, குறைஷிகள் மதீனாவிலிருந்த இளைய முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடுத்தார்கள். போராட்டத்தின் உண்மை இயல்பை இது வெளிப்படுத்தியது: முஸ்லிம்கள் மக்காவை விட்டு வெளியேறிவிட்ட போதும் குறைஷிகள் அவர்களை விடாமல் துரத்திவந்து அமைதியாக வாழவிடாமல் செய்து கொண்டிருந்தார்கள். இது ஏன் என்பதற்கான பதில், அவர்களின் ஜாஹிலிய்ய அமைப்பின் முன்பாக இஸ்லாம் முன்வைத்த கருத்தியல் ரீதியான சவாலிலும் குறைஷி இணைவைப்பாளர்களின் குற்றவுணர்விலுமே பொதிந்திருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, இஸ்லாம் தங்களுக்கு எதிரானவொரு அரசியல் – சமூக – கருத்தியல் அபாயத்தை முன்னிறுத்துகிறது; அது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டால், விரைவிலேயே அது தங்களின் சட்டவிரோத அதிகார இருப்புநிலையை முடமாக்கி, தங்களுடைய பொருளாதர நலன்களின் அடிப்படையையே தகர்த்துவிடும் என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்.

முஸ்லிம்கள் மதீனாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே, குறைஷித் தலைவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சல்லூலுக்கு ஒரு தூது அனுப்பினார்கள். புலம்பெயர்ந்து வந்தவர்களை நகரத்தை விட்டு வெளியேற்றிவிட வேண்டும்; இல்லையென்றால், மிகத் தீவிரமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.8 பிரபல முனாஃபிக்கான அப்துல்லாஹ் இப்னு உபை யத்ரிபின் அரசராகி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவன். முஸ்லிம்களின் புலப்பெயர்வினால் அந்த நம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கிப் போயிருந்தது. குறைஷிகளின் தூதுச்செய்தி பற்றிக் கேள்விப்பட்ட நபியவர்கள், அப்துல்லாஹ் இப்னு உபையை நேரில்சென்று சந்தித்து, முஸ்லிம்களுக்கு எதிராக குறைஷிகளோடு அணிசேர வேண்டாமென அவனோடு பேசி இணங்க வைத்தார்கள். இதனால், மதீனாவில் நேரவிருந்த மிகப் பெரியதொரு நெருக்கடி தவிர்க்கப்பட்டது.

ஒடுக்குமுறையாளர்களின் அந்தஸ்து எத்துணை அநீதியானதாக இருந்தபோதும், தமது தனிச்சலுகைகள் பறிபோவதை அவர்கள் ஒருபோதும் மனவிருப்புடன் அனுமதிக்க மாட்டார்கள். அன்றும் சரி, இன்றும் சரி இதுதான் உண்மை. வரலாறு நெடுக சுரண்டல்காரர்களின் உண்மை இயல்பு எவ்வாறிருக்கிறது என்பதை ஆசியா, முஸ்லிம் கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் இன்ன பிற பல இடங்ளைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக இன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் போர்கள், படுகொலைகள் மற்றும் பேரழிவுகள் பிரதிபலிக்கின்றன. தமது உரிமைகளைப் பாதுகாக்க முயலுகின்ற முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் நச்சுப் பிரச்சார இயக்கம், அவர்கள் வெறுமனே நன்மக்களாக இருந்தால் மட்டும் போதாது என்பதைக் காட்டுகிறது. ஒருவர் தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனில், அதற்கவர் சக்தி படைத்தவராகவும் இருக்க வேண்டியிருக்கிறது. இந்தப் படிப்பினை நபி வரலாற்றில் மிகத் தெளிவாகப் பறைசாற்றப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் அதனை முழுமையாக உள்வாங்கிக் கொண்டாக வேண்டும். சமூகத்தின் அரசியல் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமெனில், அதிகாரத்தை முறையாகக் கட்டியெழுப்பி அதனைப் பிரயோகம் செய்துவருவது மிகவும் இன்றியமையாதது என்பதையே நபியவர்கள் செய்த எண்ணற்ற உடன்படிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

போதுமான ஆயுதங்கள் இல்லாமலிருந்தவொரு நிலையிலும், மிகக் குறைவான ஆள்பலத்தை மட்டுமே பெற்றிருந்த முஸ்லிம்கள் அதிகப் பலம் பொருந்திய மக்காவின் ஆக்கிரமிப்புப் படைகளின் முன்னால் பணிந்துவிடவில்லை. பத்ரில் நடைபெற்ற முதலாவது பெரிய போரில் முஸ்லிம்கள் குறைஷிகளைப் படுதோல்வி அடையச் செய்தார்கள். அதில் மக்காவின் முக்கியத் தலைவர்களைக் கொன்றொழித்ததன் மூலம், முஸ்லிம்கள் குறைஷிகளின் அகம்பாவத்திற்கு பலத்தவொரு அடியைக் கொடுத்தார்கள். இது வரலாற்றின் மற்றொரு படிப்பினை. அதனைத் திருக்குர்ஆன் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பிரயோகித்து பின்வருமாறு உறுதிசெய்கிறது: “மனச்சுத்தியுடன் அல்லாஹ்வின் பாதையில் போரிட்ட அர்ப்பணிப்பு மிகுந்த போராளிகள், எண்ணற்ற சந்தர்ப்பங்களில் எண்ணிக்கையில் குறைந்த நிலையிலும் தம்மைவிட அளவில் பெரிய படைகளை வென்று மேலோங்கி இருக்கிறார்கள்.”9 சிறிய விதிவிலக்குகள் சிலவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அடுத்தடுத்து நடைபெற்ற போர்களிலும் முஸ்லிம்கள் தம்மைக் காட்டிலும் அளவில் பெரிதாக, ஆயுதபலத்தில் விஞ்சியிருந்த இணைவைப்பாளர்களின் படையணிகளுக்கு எதிராகக் கணிசமான வெற்றிகளை நிலையாகச் சாதித்தார்கள்.

ஹிஜ்ரி 6-ல் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படும்வரை பரம்பரை எதிரிகளாக இருந்த மக்காவின் குறைஷித் தலைவர்கள் முஸ்லிம்களுக்குக் கொஞ்சம் கூட ஓய்வு தரவில்லை. அரேபியக் கோத்திரங்கள் மத்தியில் உள்ளதிலேயே அதிக சக்திவாய்ந்த குறைஷிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டி வருமே என்ற அச்சத்தில் அதுநாள்வரை இஸ்லாமிய வலயத்திற்குள் வருவதற்கு விருப்பமின்றி தயங்கிக் கொண்டிருந்த அரேபியத் தீபகற்பவாசிகள் இப்போது இந்த உடன்படிக்கைக்குப் பிறகு பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்களாக மாறினார்கள்.10

மக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.

முதலாவதாக, மக்காவில் ஒருவிதமான மத வைதீகம் நடைமுறையிலிருந்தது. அதன் மையக்கரு என்னவென்றால், மறைவான (கைப்) சக்திகளின் மேலாண்மைையை அது மனிதன் தனது கைகளால் உருவாக்கிய பொருட்களின் கட்டுப்பாட்டில் -அதாவது, விக்கிரகங்களின் கட்டுப்பாட்டில்- வைத்தது. மறைவானவற்றை (கைப்) மனிதனின் மனோ இச்சைகளுக்குள் உள்ளடக்குவதாக குறுக்கப்பட்ட இந்த ஆன்மீக, தார்மீக நிலைப்பாட்டுடன் முற்றிலும் ஒத்திசைந்த விதத்தில், தனிச்சலுகை படைத்தவோர் குறிப்பிட்ட வர்க்கமே அந்தச் சமூகத்தின் அன்றாட சடவாழ்வினை முறைப்படுத்தி, நிருவகித்து, அதிகாரம் செலுத்தி வந்தது. இதனால், இயல்பாகவே வர்க்கப் பிரிவினையோடு இணைந்துவரும் நடைமுறைகளான அடிமைமுறை, வரியென்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளை, தவறான சட்டமுறை மற்றும் மரபினால் பாதுகாக்கப்படும் தனிச்சலுகை, மற்றும் விபச்சாரம், கூடா ஒழுக்கம், சூதாட்டம், குடிப்பழக்கம் போன்ற பாவச் செயல்களும் அங்கு காணப்பட்டன. இத்தகையவொரு சீரழிந்த சமூக ஒழுங்குக்கு எதிராக முஸ்லிம்கள் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கை, கருத்தியல் ரீதியான கடுவெறுப்பு ஆகியவற்றின் காரணமாகவே அவர்களால் அத்தகையவொரு ஒடுக்குமுறைக்கு எதிராகத் தாக்குப்பிடித்து நிற்க முடிந்தது.

நபிகளாரின் வாழ்நாள் நீளப் போராட்டத்தின் தனிச்சிறப்பான ஒரு அம்சம் என்னவென்றால், மகத்தான கஷ்டங்கங்களுக்கும் சவால்களுக்கும் முகம்தந்த சமயங்களிலும் அவர்கள் ஒருபோதும் தம்முடைய நம்பிக்கையை இழந்துவிடவில்லை. மாறாக, எப்போதும் நேர்நிலை நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார்கள். இதற்கிணையான மற்றொரு தனிச்சிறப்பு, மக்காவில் அவர்கள் அதிகாரமற்றவர்களாகக் காட்சிதந்த ஒரு சமயத்தில், தனது சிறிய தந்தை அபூ தாலிபின் பாதுகாப்பின் பால் தேவையுடையவராக இருந்தவொரு காலத்திலும் கூட, அல்லாஹ் வாக்களித்திருந்தபடி இஸ்லாம் அதிகாரத்தையும் மேன்மையையும் வென்றெடுக்கும் என்பதில் அவர்களின் மனம் மிகத் தெளிவாக இருந்தது.

அண்ணல் நபிகளாரின் மக்கா வாழ்க்கையிலிருந்து படிப்பினையூட்டும் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். குறைஷித் தலைவர்கள் நபிகளாரின் சிறிய தந்தை அபூ தாலிபிடம் வந்து, அவருடைய அண்ணன் மகனார் தங்களின் கடவுளர்களை நிராகரிப்பது தொடர்பாக முறையிட்டார்கள். அத்தகைய நடத்தையை விட்டுத் தவிர்ந்து கொள்ளும்படி நபியவர்களிடம் அபூ தாலிப் கேட்டுக்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் விரும்பினார்கள். நபியவர்கள் குறைஷித் தலைவர்களிடம் ஆசையூட்டும் வகையில் இவ்வாறு கேட்டார்கள்: “நான் ஒரு வாக்கியத்தை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா? அதை மட்டும் நீங்கள் மொழிவீர்களாயின், பைஸாந்திய-பாரசீகப் பேரரசுகளை அது உங்கள் காலடியின் கீழ் கொண்டுவந்து சேர்த்துவிடும்.” மிகவும் கவர்ச்சிகரமான இந்த வாக்குறுதியைக் கேட்ட குறைஷித் தலைவர்கள் தூண்டிலைக் கண்டு மயங்கிய இரையாகத் தங்கள் கோரிக்கையையே கூட ஒருகணம் மறந்துவிட்டார்கள். ஏனெனில், எல்லாவற்றையும் உலகாயத மற்றும் வியாபார நோக்கில் பார்க்கும் அவர்களின் கண்ணோட்டத்திற்கு அது அப்படியே இசைவாக இருந்தது.

அதற்கும் மேலாக, அன்றிருந்த இரண்டு வல்லரசுகளின் மீது தாமொரு நாள் மேலாதிக்கம் செலுத்தப் போகிறோம் என்ற வெறும் எண்ணமே கூட அவர்களைத் தன்னிலை இழக்கச் செய்வதாக இருந்தது. எனவே, நபியவர்களின் அந்த வாக்குறுதியை மேலும் விளக்கமாகச் சொல்லும்படி அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபோது, அவர்கள் ஷஹாதாவை -“அல்லாஹ்வைத் தவிர இறைமை அல்லது அதிகாரம் வேறெதுவுமில்லை என்றும், முஹம்மது அவனுடைய தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்” என- பிரகடனம் செய்ய வேண்டும் என்றும்; அவ்வாறு செய்யும் பட்சத்தில், உலகில் அதிகாரம், மேன்மை அனைத்தையும் பெற்றுக் கொள்வார்கள் என்றும்; மேலும், பைஸாந்திய-பாரசீகப் பேரரசுகள் இரண்டும் அவர்களின் காலடியில் வந்து வீழும் என்றும் நபியவர்கள் கூறினார்கள்.11 இதைக் கேட்ட அவர்கள் அப்படியே திகைத்துப் போய் வாயடைத்து நின்றார்கள். நபியவர்கள் தன்னுடைய பின்பற்றாளர்களுக்கே கூட பாதுகாப்பு அளிக்க முடியாதவொரு நிலையில் இருந்த அந்த அவநம்பிக்கை தரும் நாட்களிலேயே, பைஸாந்திய-பாரசீகப் பேரரசுகளை வென்று மேலோங்குவது பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். சக்தியிலும் அதிகாரத்திலும் தாம் குறைந்திருக்கிறோம் என்று எண்ணுகின்ற ஒருவரின் மனத்திலிருந்து இத்தகையவொரு சிந்தனை வெளிப்படுவது சாத்தியமில்லை. தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்த இலட்சியப் பணியில் அல்லாஹ் தனக்கு உதவுவான் என்று அவர்கள் முற்றாக நம்பினார்கள்.

இது அல்லாஹ்வின் புறத்திலிருந்த வந்த ஒரு செய்தியாகவும், திருக்குர்ஆனில் பதிவுசெய்யப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது. நபிகளாரின் தூதுத்துவப் பணியின் ஐந்தாவது ஆண்டில் பாரசீகத்து ஸொராஸ்டிரிய ஆட்சியாளர்கள் ஃபலஸ்தீனத்தில் கிறிஸ்தவ பைஸாந்தியர்களை தோற்கடித்து ஜெருசலேம் நகரை வென்று கைப்பற்றினார்கள். அப்போது மக்காவின் தலைவர்கள் முஸ்லிம்களை பார்த்து வெறுப்பேற்றும் விதத்தில், “வெளிப்படையாகவே இணைவைப்பு நம்பிக்கையிலிருந்த பாரசீகர்களுக்கு எதிராக, வேதம் அருளப்பட்ட மக்களான பைஸாந்தியர்களுக்கு அல்லாஹ் உதவாதது ஏன்?” என்று குத்திக்காட்டிப் பேசினார்கள். இதற்கான மறுமொழி இறைவேத வெளிப்பாட்டின் வடிவத்தில் வந்தது. பைஸாந்தியர்கள் பெறவிருந்த ஒரு வெற்றியை அது முன்னறிவிப்புச் செய்தது மட்டுமின்றி, முஸ்லிம்களைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த இணைவைப்பாளர்கள் மீது முஸ்லிம்கள் பெறவிருந்தவொரு வெற்றியையும் ஒருவிதத்தில் அது முன்னறிவித்தது. அந்த இறை வார்த்தைகள் முனைப்பான நேர்நிலை நம்பிக்கையைப் பிரதிபலிப்பவையாக இருந்தன:

அருகிலுள்ள பூமியில் பைஸாந்தியர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் தமதிந்த தோல்விக்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே வெற்றியாளர்களாக மாறுவார்கள். தீர்மானிக்கும் அதிகாரம் முழுவதும் -முதலும் கடைசியுமாக- அல்லாஹ்விடத்திலேயே இருக்கின்றது. மேலும் அந்த நாளில் உண்மையான பற்றுறுதியுடன் கூடிய விசுவாசம் கொண்டவர்களும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள் (அவ்வாறு மகிழ்வதற்கான காரணம் பிறக்கும்). தான் நாடியவர்களுக்கு அவன் வெற்றியை வழங்குகிறான். அவன் சர்வ வல்லமை படைத்தவன், மகா கிருபையாளன். (இது) அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் தனது வாக்குறுதியில் ஒருபோதும் தவறுவதில்லை. ஆயினும், பெரும்பாலான மக்கள் (இதனை) அறிவதில்லை. (30:2-6)

இதைக் கேட்ட மக்காவின் இணைவைப்பாளர்களுக்கு சிரிப்பே வந்துவிட்டது. ஆரம்பகால முஸ்லிம்களை அவர்கள் மேலுமதிகம் பரிகாசம்செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அந்தச் சமயத்தில் முஸ்லிம்களின் பலவீனத்தையும் கையறு நிலையையும் கருத்தில் கொண்டால், மக்காவாசிகள் இவ்வாறு ஐயமுற்றதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. எனினும், இந்த முன்னறிவிப்பை முஸ்லிம்கள் பரிபூரணமாக ஏற்று நம்பியதை எப்படி விளக்குவது? இந்த ஆயத்துகளில் அடங்கியிருந்த முன்னறிவிப்புகளின் நம்பகத்தன்மை பற்றி ஏதேனுமொரு முஸ்லிம் சந்தேகம் தெரிவித்தததாகவோ (அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக); அது பற்றி நபியவர்களிடம் மேலதிக விளக்கம் கோரியதாகவோ நம்மால் ஒரேயொரு சான்றைக் கூட பார்க்க முடியாது. உண்மையைச் சொல்வதாயின், மக்காவின் இணைவைப்பாளர்களில் ஒருவரான ஜுமா கோத்திரத்தைச் சேர்ந்த உமைய்யா இப்னு கலஃப் என்பவர் அபூ பக்கரை அணுகி, குர்ஆனுடைய இந்த முன்னறிவிப்பின் விசயத்தில் ஒரு பந்தயமே கட்டினார். மூன்று வருடங்களுக்குள் பைஸாந்தியர்கள் வெற்றி பெறுவார்களாயின், தான் அபூ பக்கருக்கு பத்து ஒட்டகங்களைத் தருவதாகவும்; இல்லையென்றால் அவர் தனக்குப் பத்து ஒட்டகஙகளைத் தரவேண்டும் என்றும் அவர் சொன்னார். இதைக் கேள்விப்பட்ட நபியவர்கள், பத்தாண்டுகளுக்குக் குறைவான ஒரு காலஅளவையே இந்தக் குர்ஆன் வசனம் குறிப்பிடுவதால் பந்தயத்தின் காலவரம்பை பத்தாண்டுகளாகவும் பந்தயத் தொகையை நூறு ஒட்டகங்களாகவும் அதிகரிக்கும்படி அபூ பக்கருக்கு ஆலோசனை கூறினார்கள்.12

குறிப்புகளும் மேற்கோள் நூல்களும்

5. டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ், அஹ்தே நபவீ கி மைதானே ஜங் (உருது). (ராவல்பிண்டி, பாகிஸ்தான்: இல்மி மர்கஸ், 1998), பக். 19.

6. ஆர்.ஏ. நிகோல்சன், அரபுகளின் இலக்கிய வரலாறு. (கேம்பிரிட்ஜ், ஐக்கிய ராச்சியம்: கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ், 1962), பக். 173. ஜோசஃப் ஹெல், அரபு நாகரிகம். (லாஹூர், பாகிஸ்தான்: 1943), பக். 25-26; இதில் ‘உரிமைகள் பிரகடனம்’ என்று விவரிக்கப்படுகிறது. ஜே.ஜே. சாண்டர்ஸ், மத்தியகால இஸ்லாத்தின் வரலாறு. (லண்டன், ஐக்கிய ராச்சியம்: ரவ்ட்லட்ஜ் – கெகான் பவுல், 1965), பக். 26; இதில் ‘உடன்படிக்கை’ அல்லது ‘அரசியல் சாசனம்’ என்று விவரிக்கப்படுகிறது.

7. டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ், Le Prophete de l’Islam (பய்கம்பரே இஸ்லாம்: பிரெஞ்சிலிருந்து ஆக்கப்பட்ட உருது மொழிபெயர்ப்பு). (முல்தான், பாகிஸ்தான்: பீகான் ஹவுஸ், 2005), பக். 201-3, 214-19.

டபிள்யூ. மாண்ட்கோமெரி வாட், மதீனாவில் முஹம்மது, நான்காம் பதிப்பு. (கராச்சி, பாகிஸ்தான்: ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 1998), பக். 3

(மேற்குறிப்பிட்ட இரண்டு ஆசிரியர்களுமே அதனை ‘அரசியல் சாசனம்’ என்றே குறிப்பிடுகின்றனர்).

8. அபூ தாவூது சுலைமான் இப்னு அஷ்அத் அல்-ஆஸாதி அல்-சிஜிஸ்தானி, சுனன் அபூ தாவூது, இரண்டாம் தொகுதி, ஃகபர் அல்-நதீர். இது கீழ்க்காணும் நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது:

ஷிப்லி நுஃமானி, சீறத்துந் நபி, முதல் தொகுதி (உருது). (லாஹூர், பாகிஸ்தான், நஷீரனே குர்ஆன் லிமிடட், தேதியிடப்படாத பதிப்பு), பக். 311.

9. குர்ஆன், 2:249, 8:65.

10. அபூ ஜாஃபர் இப்னு ஜரீர் அல்-தபரி, தாரீஃக் அல்-உமம் வ அல்-முலூக் (தாரீஃக் தபரி என்று பிரபலமாக அறியப்படுகிறது), முதல் தொகுதி (உருது). (கராச்சி, பாகிஸ்தான்: நஃபீஸ் அகாடமி, 1987), பக். 92.

அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு சஅது, கிதாப் அல் தபகாத் அல்-குப்ரா, முதல் மற்றும் இரண்டாம் தொகுதிகள், ஆறாம் பதிப்பு (உருது). (கராச்சி, பாகிஸ்தான்: நஃபீஸ் அகாடமி, 1987), பக். 270-71.

11. அபுல் அஃலா மௌதூதி, தஃப்ஹீம் உல்-குர்ஆன், நான்காம் தொகுதி. (லாஹூர், பாகிஸ்தான்: மக்தபாயே தஃமீரே இன்சானியத், 1974), பக். 727.

12. முஸ்லிம்கள் சிலரின் மனங்களில் இது சூதாட்டம் பற்றிய கேள்விகளை எழுப்பிவிடக் கூடாது. ஏனெனில், அது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும். முதலாவதாக, அச்சமயத்தில் தடை அமலுக்கு வந்திருக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். சமூக மற்றும் ஒழுக்க நடத்தை தொடர்பான விதிகளும்; மது உட்கொள்ளல், சூதாட்டம், வட்டி, மற்றும் அவை போன்ற விரும்பத்தகாத நடத்தைகளுக்கான தடைகளும் பிறகுதான் அருளப்பட்டன. அல்லாஹ்வின் ஏகத்துவத்திலும், ஒடுக்குமுறை ஜாஹிலி அமைப்பு முறையை நிராகரிப்பதிலும், துவக்ககால முஸ்லிம்களின் ஈமானை (விசுவாசப் பற்றுறுதி) பலப்படுத்துவதிலுமே மக்காவில் வலியுறுத்தல் அமைந்திருந்தது. முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ததை (புலம்பெயர்ந்த) தொடர்ந்து, ஆட்சிப்பரப்புடன் கூடிய ஒரு இஸ்லாமிய அரசு தோன்றியபோதுதான் பெரும்பாலான சட்ட விதிகள் அருளப்பட்டு அமலாக்கம் செய்யப்பட்டன. இரண்டாவதாக கவனிக்க வேண்டியது அதிர்ஷ்ட விளையாட்டுகள், சூதாட்டம் மற்றும் பந்தய ஆட்டங்களில் நஷ்டத்துக்கான அபாயம் இருப்பது போல், அல்லாஹ்வின் வார்த்தைகளிலோ நபிகளாரின் முன்னறிவிப்புகளிலோ நிச்சயமின்மை எதுவும் இணைந்திருப்பதில்லை. எனவே இவ்வார்த்தைகள் மற்றும் முன்னறிவிப்புகளின் நம்பகத்தன்மை என்பது அறுதியான விசயம். அவை நிகழ்தகவின் எதிர்பாராமைகளுக்கு உட்பட்டவையல்ல.

Related posts

Leave a Comment