இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 5) – சையித் குதுப்
[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம்.. அதில் பதினொன்றாம் பகுதி கீழே.]
அனுபவவாதத்தின் ஆதிக்கம்:
கிட்டத்தட்ட பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியோடு பிரகாசமான காலகட்டமும் முடிந்துவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய சிந்தனையின் மற்றுமொரு காலகட்டம் தொடங்கியது. மோதிக்கொண்டிருந்த மதம், அறிவு ஆகியவற்றோடு விஞ்ஞானமும் சேர்ந்துகொண்டது. ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டு குறிப்பிட்ட வகையான மெய்யியலோடு தனித்துவம் பெறுகிறது. மதத்தையும் அறிவையும் விஞ்ஞானம் மிகைத்தது. இக்காலகட்டம் புலனறிவாத (Positivism) காலகட்டம் என்றழைக்கப்படுகிறது. இது குறிப்பிட்ட சூழலில், தனித்துவமிக்க அடிப்படையில் நிலைபெற்றது.
அதன் குறிப்பிட்ட சூழல், திருச்சபையை எதிர்ப்பதில் சில அறிஞர்கள் மற்றும் மெய்யிலாளர்களை மிகைக்க வேண்டும் என்ற ஆர்வமே. திருச்சபை குறிப்பிட்ட வகையான அறிவைக் கொண்டிருந்தது. தம்மை எதிர்க்கும் அறிஞர்கள், ஆய்வாளர்களுக்கு எதிராக அதனைப் பயன்படுத்தியது. இந்த குறிப்பிட்ட வகையான அறிவு கத்தோலிக்க கிருஸ்தவமாகும். திருச்சபையையும் திருச்சபையின் வசமிருக்கும் குறிப்பிட்ட வகையான அறிவையும் எதிர்க்க வேண்டும் என்ற இந்த தணியாத ஆர்வத்தோடு அறிவு ஆதிக்கம் செலுத்திய பிரகாசமான காலகட்டத்தின் மெய்யியல் மனித வாழ்வின் வழிகாட்டலிருந்து திருச்சபையை ஓரம்கட்டுவதில் வெற்றி பெறவில்லை என்பதும் ஹெகலின் காலகட்டத்தில் அது மதத்திற்கு வலுசேர்க்கும் ஒன்றாக ஆகிவிட்டது என்பதும் சேர்ந்துவிட்டது.
புலனறிவாத சிந்தனைப்பள்ளியின் அடிப்படை நோக்கமே திருச்சபையை எதிர்க்க வேண்டும் அல்லது அறிவியலின் போர்வையில் மறைந்திருக்கும் அதன் அறிவை எதிர்க்க வேண்டும் இன்னும் பௌதீகவாதத்தையும் தர்க்கவாதத்தையும் எதிர்க்க வேண்டும் என்பதுதான். அது கத்தோலிக்கத்தை நிராகரித்ததோடு அதற்கு மாற்றாக மனிதமையவாதத்தை முன்னிறுத்தியது. கிருஸ்தவத்தைப்போல அதற்கும் புனிதங்கள், சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.
புலனறிவாத சிந்தனைப்பள்ளி நிலைபெற்றதற்கான தனித்துவமான அடித்தளம் அது இயற்கைக்கு, உண்மைக்கு, எதார்த்தத்திற்கு மதிப்பளித்தது… இவையனைத்தையும் புலனறிவாத சிந்தனைப் பள்ளியினர் சமமாகவே கருதினர். இயற்கைக்கு மதிப்பளித்தல் அறிதலுக்கான தனித்த மூலமாக கருதப்பட்டதோடு அல்லாமல் அதுதான் உறுதியான அறிதலுக்கான மூலமாகவும் கருதப்பட்டது. இயற்கைக்கு மதிப்பளித்தல் என்பது அதனால் மட்டுமே மனித அறிவில் உண்மையைப் பதிய வைக்க முடியும், அதுதான் மனித அறிவிற்கு உண்மையைத் தெளிவாக உணர்த்தும் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் மனித அறிவு. மனிதன் இயற்கைக்கு அப்பாற்பட்டவற்றிடமிருந்தோ அதற்குப் பின்னாலிருந்தோ எதையும் பெறமுடியாது. அதேபோன்று அவன் தன்னிடமிருந்தும் எதையும் பெற முடியாது. ஆகவே இயற்கைக்கு அப்பாற்பட்டவை யாவும் உண்மைக்கு மாறானவை, ஏமாற்றக்கூடியவை. அறிவு வெளிப்படுத்துவது யூகமும் பொய்த்தோற்றமும்தான். அதுவும் உண்மையாகாது. இதனடிப்படையில் மதத்தை இயற்கைக்கு அப்பாற்பட்டது என வரையறுத்து அதனை ஒரு ஏமாற்று என்றார்கள். அது நிர்ணயிக்க முடியாத இயற்கையின் படைப்புகளில் எதைப்போன்றும் இல்லாத ஒன்றிலிருந்து வெளிப்பட்டது. எனவே இறைமார்க்கம் இயற்கைக்கு அப்பாற்பட்டது. இவ்வாறே பகுத்தறிவுவாதமும் யூகம்தான். அதனைக்கொண்டு இயற்கையின் உண்மைநிலையைக் கண்டறிய முடியாது என்றார்கள். இவையனைத்தும் மனிதன் வாழ்கின்ற, அவனைச் சுற்றியுள்ள இயற்கையை புரிந்துகொள்ளாமல் அவன் வகுத்த கண்ணோட்டங்கள்தாம் என்றார்கள்.
ஆகவே மதத்திலிருந்து அல்லது பகுத்தறிவுவாதத்திலிருந்து பெற்று மனிதன் தன்னைப்பற்றிக் கூறியவை அல்லது அவன் வாழும் இயற்கையைப்பற்றிக் கூறியவை யாவும் உண்மைக்கு மாறானவையே. அவற்றின்மூலம் அவன் மதத்தின் ஏமாற்றுதலுக்கும் அனுமானத்தின் ஆதிக்கத்திற்கும் உள்ளானான்.
மனிதனின் அறிவு இயற்கையின் ஆக்கமாகும். அது பாரம்பரியம், சூழல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வு ஆகியவற்றில் வெளிப்படுகின்றது. அந்த அறிவு படைக்கப்பட்டதுதான். ஆயினும் அதன் படைப்பாளனின் இருப்பு உணரப்படக்கூடியது. அது சிந்திக்கிறது. ஆயினும் அதனைச் சுற்றி இருக்கின்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. அது நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகப்பட்டுள்ளது. அதன் சடவாத வாழ்க்கையே அதனை நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கும் காரணி. அதைத்தவிர முந்தைய அறிவு என்று எதுவும் இல்லை. அதுபோல மனிதனைக்குறித்த முந்தைய அறிதல் என்று எதுவும் இல்லை. மனிதனின் அறிவும் அறிதலும் அவனது இருப்பிற்கு உட்பட்டது. அவையிரண்டும் அவனது சடவாத வாழ்க்கையினால் ஏற்பட்ட விளைவுகளேயாகும்.
இயற்கை தம்மைக்குறித்து பேசுகிறது. மனிதன் அதில் வாழ விரும்பினால் அது கூறுவதையே அவன் நம்ப வேண்டும். ஆத்திகவாதிகள் கூறுவதையோ பகுத்தறிவுவாதிகள் கூறுவதையோ உளவியல் வல்லுனர்கள் கூறுவதையோ அல்ல. மனித வாழ்வில் நேரான பாதையை ஏற்படுத்தியதே அதில் அவனது நோக்கங்களை நிர்ணயம் செய்ய முடியும்.
மனிதன் தன் இயற்கையான வாழ்வை தனியனாகத் தொடங்கி சமூகத்தோடு முடிக்கிறான். ஆகவே தனிமனிதனோ அவன் வாழும் வாழ்க்கையோ அவனது முயற்சிக்கான நோக்கமாகாது. அவனது இறுதியான நோக்கம் சமூகமே. அவன் சமூகத்திற்குக் கட்டுப்பட்டவன். அவனது வாழ்வு முடிவடைந்துவிடலாம். ஆனால் சமூகத்தின் வாழ்வு நிலைத்திருக்கும்.
மார்க்சியம் – பொருள்முதல்வாதம்: மார்க்ஸ் பொருள்முதல்வாதத்தை முன்வைத்தார். புலனறிவாத மெய்யிலாளர்களில் ஒருவரான ஆகஸ்ட் கோம்த்தால் (August Comte) மிகவும் கவரப்பட்டார். அவர் சடவாத சிந்தனைப் பள்ளியினரைப்போன்று ‘மெய்யறிவின் இருப்பையே’ மறுக்கவில்லை. மெய்யறிவுக்கு முன்னரே பருப்பொருள் காணப்படுகிறது என்றும் அவர் கூறவில்லை. மாறாக மெய்யறிவைவிட பருப்பொருளே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். ஆகவே ‘மெய்யறிவு’ பருப்பொருளைச் சார்ந்தது. அதனைவிட்டும் தனித்து மெய்யறிவு காணப்படாது. இதன் விளைவாக, உடலுக்குப் பிறகு அறிவு (அல்லது ஆன்மா) நிலைத்திருக்கும் என்று மதம் கூறுவதைமட்டும் மார்க்ஸ் நிராகரிக்கவில்லை. மதத்தின் அடிப்படைச் சிந்தனையான இறைநம்பிக்கையையே அவர் நிராகரித்தார். மாறாக மார்க்ஸின் பார்வையில் மதங்கள் அனைத்தும் சபிக்கப்பட்டவை. அவை சமூகத்தை மயக்கும் போதைப்பொருள்கள்.
‘மெய்யறிவு’ பருப்பொருளுக்குக் கட்டுப்பட்டது என்பதை மார்க்ஸ் பின்வருமாறு விவரிக்கிறார்: “மெய்யறிவு பருப்பொருளின் பிரதிபலிப்பாகும். ஹெகல் கூறுவதைப்போல பருப்பொருள் மெய்யறிவின் பிரதிபலிப்பல்ல.” மெய்யறிவு சடவாத உலகை பிரதிபலிக்கும் ஒருவகையான கண்ணாடி. மார்க்சீயத்தின் இந்த சடவாத கண்ணோட்டமே அசலானது. இதனடிப்படையில்தான் அவர்கள் இயற்கை நிகழ்வுகளையும் தம்மைச் சுற்றிக் காணப்படும் பல்வேறுவகையான கண்ணோட்டங்களையும் அணுகுகிறார்கள். அரசியல், சமூக, ஒழுக்க நிகழ்வுகள் அனைத்தும் பொருளாதார நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே நிகழ்கின்றன. மார்க்சும் எங்கல்சும் சமூக வாழ்வின் நிகழ்வுகளில் வரலாற்றின் பொருளைப் பெற்றாலும் அதனைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே நோக்கினார்கள். எனவேதான் மனிதகுல வரலாற்றில் சமூக நிகழ்வுகள் மற்றும் மனிதனின் செயல்கள் அனைத்திலும் பொருளாதாரமே முக்கிய காரணியாக செயல்படுகின்றது என்றார்கள்.
பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றமும் வளர்ச்சியும் ஒரு நாட்டின் வாழ்வில், அதன் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோல அறிவு, மதம், கலாச்சாரங்கள் அனைத்தும் பொருளாதார வாழ்க்கையின் ஒரு பிரிவுதான். ஆகவே வரலாறுகள் அனைத்தும் பொருளாதார வரலாறுகளாகவே இருக்க வேண்டும்.” (பார்க்க பக்கம் 283-லிருந்து 317- வரை)
இவ்வாறு திருச்சபையைவிட்டும் அதன் மதரீதியான கண்ணோட்டங்களைவிட்டும் – அது மதத்தின் பெயரால் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதனால் – விலகுவதற்கு செய்யப்பட்ட முயற்சிகள் முதலில் பகுத்தறிவு வாதத்தில் கொண்டு சேர்த்தன. யோஹான் காட்லீப் ஃபீஷ்தே (Johann Gottlieb Fichte) என்பவரின் கருத்துப்படி மதத்திற்கும் அறிவிற்குமான மோதலில் அறிவு ஆதிக்கம் பெற்றது. ஹெகலின் கருத்துப்படி அறிவு மதத்திற்கு வலுசேர்க்கும் ஒன்றாகிப்போனது. பின்னர் கோம்த்தின் (August Comte) முயற்சியால் புலனறிவாதத்தையும் கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸினால் சடவாதத்தையும் சென்றடைந்தன.
இதுதான் மார்க்கக் கண்ணோட்டத்தில் மனிதக் கண்ணோட்டங்கள் புகுத்தப்பட்டதனால் ஐரோப்பிய சிந்தனை அடைந்த மாற்றம். திருச்சபை தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றை நிலைநாட்ட முயன்றதன் விளைவு.
தடுமாற்றமும் குழப்பமும் நிறைந்த இந்த தடங்களைக் காணும் ஆய்வாளர், திருச்சபையின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக இறைவனைவிட்டு வெருண்டோடியவர்கள் எந்தவொரு உறுதியான உண்மையையும் அடையவில்லை என்பதை அறிந்துகொள்வார். ‘இயற்கைக்கு அப்பாலுள்ள புதிர்களைவிட்டு வெருண்டோடவே மனிதன் இவற்றின்பால் அடைக்கலம் தேடினான்’ என்று வேண்டுமானால் கூறுவோர் கூறிக்கொள்ளலாம். தவிர, பகுத்தறிவுவாதம் உறுதியான எந்தவொன்றை அடைந்தது? அறிதலுக்கான விவகாரம் ஒப்படைக்கப்படும் இந்த ‘அறிவு’ என்றால் என்ன? அதன் உண்மைநிலை என்ன? அதன் தனித்தன்மைகள் என்ன? அது செயல்படும்விதம், தாக்கம் ஏற்படுத்தும் விதம், தாக்கத்திற்குள்ளாகும் விதம் என்ன? இந்த அறிவு எங்கே இருக்கிறது? அதன் இயல்பு என்ன? அதன் சட்டம் என்ன? இந்த இருபதாம் நூற்றாண்டுவரை இவை இன்னும் கேள்விகளாவே எஞ்சி நிற்கின்றன.
இந்த மெய்யியல் உருவாக்கிய கூற்றுகளின்படி எல்லா விவகாரங்களும் அமைந்துவிட்டனவா? எதார்த்த வாழ்வோடு அவற்றின் தொடர்பு என்ன? அவை எதார்த்த வாழ்வோடு தொடர்பில்லாத, அதனோடு ஒன்றிப்போகாத வெறும் கூற்றுகளாக மட்டுமே எஞ்சிவிட்டன.
ஃபீஷ்தே (Fichte) முரண்பாட்டுக் கோட்பாட்டை பின்வருமாறு பயன்படுத்துகிறார்:
“தன்னைக்குறித்த மனிதனின் கண்ணோட்டமே தொடக்கப் புள்ளியாகும். அது முடிவுகளை வலியுறுத்தும் முன்னுரைகளைப் போன்றது. அதன்மூலம் மெய்யியலின் நோக்கம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. தன்னைக்குறித்த மனிதனின் கண்ணோட்டம் அதாவது “நான்” சிந்திக்கிறேன் என்பதிருந்தே ”நான்” வெளிப்படுகிறது. “நான்” என்பது ”நான்”தான். “நான்” என்பது “அவன்” அல்ல. இங்கு “நான்” என்பது ”நான் இல்லை” என்பதல்ல. ஆயினும் “நான் இல்லை” என்பது நான் உண்மையாகவே இருக்கின்றேன் என்பதில் அடங்கியுள்ளது. ஆகவே “நான்” என்பது “நான் அவன் இல்லை” என்பதையும் “நான் நான் இல்லை” என்பதையும் உள்ளடக்கியுள்ளது. தன்னைக்குறித்த மனிதனின் கண்ணோட்டம் சிந்தனையில் மூன்று நிலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
தன்னைக்குறித்த மனிதனின் கண்ணோட்டத்தில் “நான்” என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. நம்முடைய சுயத்தில் அடங்காத பொருள்களை – “நான்” என்பதற்குள் அடங்காத பொருள்களை – நாம் நம் சுயத்தின் வழியாகவே அறிந்துகொள்கிறோம். அது “நான் இல்லை” என்பதையும் உள்ளடக்கியுள்ளது. நம் சுயத்திற்கு அப்பாற்பட்ட இந்த பொருட்கள் “நான்” என்பதை மட்டும் உள்ளடக்கியிருக்கவில்லை. மாறாக “நான்” உடைய செயலையும் அதனை விளைவுகளையும் உள்ளடக்கியுள்ளது. (பார்க்க முந்தைய புத்தகம் பக்கம் 289, 290)
எதார்தத்தில் “நான்” மட்டுமே இருப்பதை எது உறுதிப்படுத்துகிறது? இந்தக் கூற்றிற்கும் எதார்த்ததிற்கும் என்ன தொடர்பு? இது எதை நமக்கு உறுதியாகச் சொல்கிறது? எதையும் இல்லை! இது பிஷ்தேவின் சிந்தனைப் பள்ளிக்காகச் செய்யப்பட்ட ஒரு மூளை விளையாட்டுதான். நடைமுறையோடு, மனித வாழ்வோடு இதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. எதார்த்தத்தோடு, மக்களின் நடைமுறை வாழ்வோடு தொடர்பில்லாத இந்த தர்க்கவாதத்தை புலனறிவாதம் எள்ளி நகையாடுவதில் வியப்பேதுமில்லை. ஒருவேளை அது பரிகாசம் செய்யாமல் இருந்திருந்தால் தர்க்கவாதம் இதைவிட சிறந்ததைக் கொண்டுவந்திருக்கும் என்பதெல்லாம் இல்லை. மாறாக இதைவிட சிக்கல்மிகுந்த, தூரமான ஒன்றையே கொண்டுவந்திருக்கும்.
ஃபீஷ்தே எதார்த்த வாழ்வோடு தொடர்பற்ற முந்தைய அடிப்படையிலிருந்து ஒரு வரையறையை உருவாக்குகிறார். அதன்மூலம் அறிவு மட்டுமே எதையும் சாராமல் உண்மையாகவே இருக்கிறது என்று உறுதிப்படுத்துகிறார். இந்த அடிப்படையின்படி, அறிவு மட்டுமே பிறவற்றைவிட்டும் முழுமையாக விலகி தனித்து விளங்குகிறது; தன்னால் உள்ளது. அதன் இருப்பே அதுவாகும், அதைத்தவிர மற்றவற்றின் இருப்பு அல்ல. அறிவின் உண்மைநிலை அறிவிடமிருந்தே தெளிவாகிறது. அதற்கு அப்பாலுள்ள வேறொன்றிடமிருந்து அல்ல. அறிவு அதற்கு வெளியிலுள்ளவற்றின் மீது செயல்படாமல் நின்றுவிட்டால் “நான்” என்பது ஆரம்பப் புள்ளியாகாது. அது மற்றவற்றின்மீது செயல்படும் முன்னர் சுயத்தையே இழந்துவிடும். ஏனெனில் “நான்” என்பதை மறுப்பது அறிவை மறுப்பதாகும். (பார்க்க மேற்குறிப்பிடப்பட்டுள்ள அதே புத்தகம்)
“நான் இல்லை” என்பது “நான்” என்பதன் இருப்பையே எப்படி மறுப்பதாகும்? எது அதனை உறுதிப்படுத்துகிறது? குறிப்பிட்ட சிந்தனைப் பள்ளியின் பிடியிலிருந்து விடுபடும்போது இந்தக் கருத்து அறிவால்கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது.
நிச்சயமாக ”நான்” என்பதன் இருப்பு “நான் இல்லை” என்பதன் இருப்பை ஒருபோதும் நிராகரிக்காது. ஒன்று மற்றொன்றின் இருப்பிற்குத் தடையாகாது.
உண்மையில் அவர்களின் நோக்கம், திருச்சபையின் கடவுளைவிடுத்து திருச்சபையோ போப்போ மதகுருக்களோ அற்ற வேறோரு கடவுளை உருவாக்க வேண்டும் என்பதுதான். ஆகவேதான் அவர்கள் மதகுருக்களின் ஆதிக்கமற்ற ‘அறிவை‘ கடவுளாக ஆக்கினார்கள். இதுதான் அவர்களின் இறுதியான நோக்கம்!
இவ்வாறு ஃபீஷ்தேவின் சொல்லாடல்கள் அல்லாமல் புதிய சொல்லாடல்களுடன் ஹெகலும் முரணியக்கத்தின் அடிப்படையை பயன்படுத்தினார். ஃபீஷ்தே மதம் மற்றும் இயற்கைக்கு மாற்றாக அறிவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு முரணியக்கத்தின் அடிப்படையை பயன்படுத்தினார் என்றால் ஹெகல் அறிவின் மதிப்பை உறுதிப்படுத்துவதற்கு, இறையியலின் சிந்தனை மீண்டும் வலுப்படுத்துவதற்கு, உண்மையை அறிந்துகொள்வதற்கு இறைமார்க்கம் ஒன்றே இறுதியான மூலம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அதே அடிப்படையைப் பயன்படுத்தினார். ஃபீஷ்தே பயன்படுத்திய சொல்லாடல்களுக்குப் பதிலாக ஹெகல் முன்வைத்த சொல்லாடல்கள்: வாதம் (Thesis), எதிர்வாதம் (Anti-thesis), வாதத்தையும் அதன் எதிர்வாதத்தையும் ஒருங்கிணைக்கக்கூடியது (Synthesis).
நிலையான தூய சிந்தனை ஒன்று உள்ளது என்று அவர் எண்ணினார். அதற்கு ‘தூய அறிவு’ என்று பெயரிட்டார். இயற்கை படைக்கப்படுவதற்கு முன்பே அந்த தூய அறிவிற்கு நிரந்தரமான இருப்பு உள்ளது. அந்த தூய அறிவுதான் இறைவன். அவனிடமிருந்தே இயற்கை வெளிப்பட்டது. அது அவனுக்கு மாற்றானது. ஆனால் அது தூரமானதும் வெவ்வேறானதும் ஆகும். ஆனால் ‘தூய அறிவு’ எல்லா வகையான தளையிலிருந்தும் விடுபட்ட ஒன்றாகும்… இயற்கையின் இருப்பினால் சிந்தனை வரம்பற்ற தூய அறிவாக வெளிப்பட்டது அல்லது மாறிவிட்டது. அதன் இருப்பு வரம்புக்குட்பட்டது. ஆகவே இயற்கை என்பது அதன் முதல் வட்டத்திலிருந்த சிந்தனையின் வெளிப்பாடாகும். அதனால், அது தேவையானது, தற்செயலானது. அதில் தெரிவுசெய்யும் உரிமை இல்லை. இதன்மூலம் அது தூய அறிவில் சிந்தனைக்கு மாற்றாகக் கருதப்படுகிறது. ‘தூய அறிவு’ வாதமாக இருந்தால் அப்போது இயற்கை மாற்றுவாதமாக இருக்கும். அதன்மூலம் சிந்தனை வரம்புக்குட்பட்டதாக மாறும் அல்லது மாற்றிலிருந்து அதன் மாற்றாக மாறும். ஆகவே இதுவரை சிந்தனை அதன் சிந்தனையின்படி அதன் மாற்றுடன் சேர்ந்துள்ளது. ஆனால் இயற்கையில் சிந்தனை அதனைப் பெறுவதற்காக முயற்சிக்கிறது. அதுவே வெறும் அறிவாகும். வெறும் அறிவே இயற்கையின் இறுதியும் நோக்கமுமாகும். அது வாதத்தையும் எதிர்வாதத்தையும் ஒன்றிணைக்கக்கூடியதாகிறது.” (பார்க்க மேற்குறிப்பிட்ட புத்தகம் பக்கம் 293 – 295)
இதுதான் ஐரோப்பாவில் பகுத்தறிவுவாதம் நெருக்கடிக்குள்ளானதற்கான உதாரணம். அது நெருக்கடிக்கு உள்ளாக வேண்டியதுதான். இவ்வாறு அது மனிதனின் எதார்த்த வாழ்வோடு தொடர்பற்று வெறும் தர்க்க அறிவாக மட்டுமே எஞ்சிவிட்டது.
அனுபவவாதத்தின் தலைவர்கள் திருச்சபையின் கடவுளையும் பின்னர் அறிவின் கடவுளையும் நிராகரித்தபோது அவையிரண்டையும்விட சிறந்த ஒன்றின்பால் செல்லவில்லை. அவர்கள் இயற்கையை கடவுளாக்கினார்கள்… ஆனால் இந்த இயற்கை என்பது என்ன? அறிவைப் படைத்த இயற்கை என்பது என்ன? அவர்கள் கூறுவதுபோல தூய அறிவில் உண்மை பதியவைக்கப்படுகிறதா? அது வரையறைக்குட்பட்ட ஒன்றா? அல்லது வரையறைக்குட்படாத ஒன்றா? கோள்கள், வடிவங்கள், செயல்பாடுகள் என வெவ்வெறான பொருள்கள் இருக்கின்றனவே அவையா அது? அது மனித அறிவைவிட்டும் தனித்த ஒன்றா? அது புலனுணர்வுகளால் உணரப்படும் பொருள்கள் அல்லாமல் அறிவில் பதியும் வடிவமா? அதற்கென்று தனித்த இயல்பு இருக்கின்றதா? அதிலிருந்து அறிவில் பாதிப்பை ஏற்படுத்துபவை உண்மையோடு ஒத்துப்போகுமா? அல்லது அதனோடு ஒத்துப்போகாதா?
இயற்கைதான் மனித அறிவைப் படைத்ததென்றால் அதற்கு வெறுமையிலிருந்து படைக்கும் திறன் உள்ளதா? ஏன் மனிதனுக்கு மட்டும் இந்த அறிவு வழங்கப்பட்டுள்ளது? ஏன் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இது வழங்கப்படவில்லை? அது தனித்துவமிக்க, சுதந்திரமான நாட்டமுடையதா? இந்த தனித்துவமிக்க வெகுமதியை வழங்குவதற்கு அது படைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்யுமா? அதுகுறித்த உண்மைநிலை மனித அறிவுக்கு மட்டுமே வெளிப்படும் என்றிருந்தால் மனித அறிவின் இருப்பைச் சார்ந்து இந்த உண்மை வெளிப்பட வேண்டாமா? அப்படியெனில் இந்த இயற்கை எவ்வாறு மனித அறிவைப் படைத்ததாகும்? அது மனித அறிவில் மட்டும்தானே வெளிப்படும்?!
பின்னர் இந்தத் தலைவர்கள் இயற்கையைச் சுட்டிக் காட்டிக்கொண்டே நம்மை முடிவற்ற குழப்பங்களில் ஆழ்த்திவிட்டார்கள்!
‘இயற்கை’ என்றால் என்ன? அது இந்த பிரபஞ்சத்தின் பருப்பொருளா? இந்தப் பருப்பொருளின் உண்மைநிலை என்ன? அவர்கள் பருப்பொருள் என்று கூறுவதை நிலையான ஒன்றாக எண்ணினால் அதன் உண்மை நிலையை வரையறுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கும். பருப்பொருள் குறைகிறது, அதிகரிக்கிறது எனில் அதிகரிப்பதுதான் இயற்கையா? அதுதான் பருப்பொருளா? அல்லது இந்த அதிகரிப்பு நிகழும் வடிவம்தான் பருப்பொருளா? இந்தக் கடவுள் ஒரு நிலையில் நிலைத்திருப்பதில்லை! அவர் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறார், முன்னேறுகிறார்! இவற்றில் எந்த நிலையில் அது மனித அறிவைப் படைக்கும் திறனைப் பெறும்? அதுதான் தன் வடிவத்தை என்றும் இயங்கக்கூடியதாகப் படைத்துள்ளதா? கதிர்களிலிருந்து அணுவை நோக்கி, அணுவிலிருந்து பருப்பொருளை நோக்கி… அணுவிலிருந்து கதிர்களை நோக்கி! இந்தக் கடவுள் எப்போது படைக்கும் திறனைப் பெற்றது? எந்த நிலையில்? எவனது அறிவை இயற்கை படைத்ததோ அந்த மனிதனைப் படைத்தது யார்? அந்த இயற்கை ஆரம்பத்திலேயே அதனைப் படைத்ததா? அல்லது அவனது இருப்பிற்குப் பின்னர் அவனது அறிவைப் படைத்ததா?
இயற்கைதான் மனிதனில் உண்மையைப் பதிய வைத்தது எனில் மனித அறிவு எதற்காக? உயிருள்ள ஒவ்வொன்றும் பேசவும் கேட்கவும் செய்கிறதே? கழுதை, கோவேரிக்கழுதை, கிளிகள், குரங்கு ஆகியவற்றின் அறிவுகளில் பதிய வைக்கப்பட்டுள்ள இந்த உண்மைதான் கோம்த், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் அறிவில் பதியவைக்கப்பட்டுள்ளதா?!
இயற்கைதான் இந்த உண்மையை மனித அறிவில் பதிய வைத்தது என்றால் சரியான உண்மை எது? இந்த உண்மையும் அறிவும் பூமிதான் பிரபஞ்சத்தின் தலைமையகம் என்பதை உறுதியாக அறிவிக்கின்றனவா? அல்லது அது சூரியனைச் சுற்றிவரும் சிறிய கோளைத்தவிர வேறொன்றுமில்லை என்பதை உறுதியாக அறிவிக்கின்றனவா? உணரப்படக்கூடிய இந்தப் பொருள்கள்தான் பருப்பொருள் என்று அறிவு உறுதியாகக் கூறுகின்றதா? அல்லது பருப்பொருள் என்பது மாறக்கூடிய வடிவத்தில் ஒன்றிணைந்த சக்தியைத்தவிர வேறொன்றுமில்லை என்பதை உறுதியாக அறிவிக்கின்றதா? அல்லது இயற்கை என்பது அறிவின் செயலேயன்றி வேறொன்றுமில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றதா? அல்லது அது, அறிவு என்பது பருப்பொருளின் பிரதிபலிப்பினால் ஏற்பட்ட ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றதா?
அல்லது அறிவுப்பூர்வமான இந்த நிலைப்பாடுகள்தாம் மனித அறிவில் இயற்கை பதிய வைத்த உண்மையா? பதிய வைப்பதில் தவறு நிகழ்ந்திருக்குமா? அல்லது அறிவு, பதியப்பட்டதை சிதைத்துவிட்டதா? எனில் அதற்கு தனிப்பட்ட வடிவம் ஏதேனும் உண்டா? புலனறிவாத தலைவர்கள் கூறுகிறார்கள், “அது இந்த இயற்கை பதிய வைத்ததைத்தவிர வேறொன்றும் இல்லை” என்று.
நாம் கூறியவாறு வாழ்க்கையையும் அதன் வளர்ச்சியையும் இரகசியங்களையும் இஸ்லாமியக் கண்ணோட்டத்திலும் பிற கண்ணோட்டங்களிலும் இந்த இரகசியத்தை விவாதிக்கும் இடத்தில் விட்டுவிடுவோம். நாம் வாழ்க்கையையும் அதன் இரகசியங்களையும் விட்டுவிடுவோம். இங்கு அதைக்குறித்து விவாதிப்பதில்லை. நாம் கேட்பது இதுதான், இந்த சடவாதத் தலைவர்கள் நமக்குத் தந்த இந்தக் கடவுள் யார்? நிச்சயமாக நமக்கு முன்னால், நம் அறிவில், நம் எதார்த்தத்தில் உறுதியான எந்தவொன்றையும் நாம் பெற முடியாது. நாம் ஏன் அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதனிடம் அடைக்கலம் தேட வேண்டும்? அது நம்மால் தொடவோ பார்க்கவோ முடியாத நம் அறிவு ஏற்றுக்கொள்ளாத வெறுமையாகும். – எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே – நாம் தேவாலயத்தைவிட்டு வெருண்டோடக்கூடியவர்கள் அல்லர்?!
மனித வாழ்வு, அதனை உந்தித் தள்ளும் காரணிகள் மற்றும் அது செயல்படும் தளங்கள் ஆகியவைகுறித்து கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் கண்ணோட்டத்தில் வெறுப்பை ஏற்படுத்திய இந்த உருமாற்றம், முழு மனித வாழ்வையும் பொருளாதாரம் என்ற ஒற்றைப் பார்வையால் அணுகுவது… மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் மகத்துவத்திற்கு முன்னால், அதில் காணப்படும் ஆச்சரியங்களுக்கு முன்னால் நிற்கும்போது அதன் மீதான வெறுப்பு இன்னும் அதிகரிக்கிறது. அவையனைத்தும் மனித வாழ்வுக்கென தனித்துவமான முறையில் தயார்படுத்தப்பட்டுள்ளதைப்போன்று அவனுக்குத் தெரிகிறது. ஆகவே பிரபஞ்சத்தின் மகத்துவத்தை பொருட்படுத்தாத இவ்வகையான சிந்தனையை வெறுப்பதை, இழிவாகக் கருதுவதை அவனால்கூட கட்டுப்படுத்த முடியாது. இந்த மகத்துவத்திற்கு முன்னால் முகம்காட்ட முடியாமல் பொருளதாரப் பொந்தில் மறைந்துகொள்கிறான்.
ஆயினும் இவையனைத்திற்கும் பிறகு இந்தத் துன்பங்கள் அனைத்தும் திருச்சபை இறைமார்க்கத்தைப் புறக்கணித்ததனால் ஏற்பட்ட இயல்பான விளைவுகளே. ஐரோப்பிய சிந்தனை திருச்சபையிடமிருந்தும் அதன் கடவுளிடமிருந்தும் தப்பி ஓட முனைந்தது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அவனிடமிருந்து வந்த இஸ்லாமியக் கண்ணோட்டம் பாதுகாக்கப்பட்டதாக இருக்கின்றது. அதனைப் பாதுகாப்பதற்காக தேவாலயம் எழவில்லை. அதற்கும் மனித அறிவிற்குமிடையே மோதல் நிகழவில்லை. அந்த மோதல்தான் ஐரோப்பிய சிந்தனையை பெரும் குழப்பத்தின்பால் கொண்டு சேர்த்தது.
இஸ்லாமியக் கண்ணோட்டம் மனிதனின் அறிவுக்கும் அறிவியலுக்கும் விசாலமான களத்தை அளிக்கிறது. அது அறிவின் தேடலுக்கு அவனது அறிவியலுக்குத் தடையாக இருப்பதில்லை. மாறாக தேடலின்பால் உந்தித் தள்ளுகிறது. அவன் நிறைவேற்ற வேண்டிய பணியை மனித அறிவிடமும் அறிவியலிடமும் ஒப்படைக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தின்மூலம், இதனைப் பாதுகாத்திருப்பதன்மூலம் அல்லாஹ் நம்மீது பொழிந்த அருட்கொடைகளை நாம் உணர்ந்துகொள்கிறோம்.