தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 4) – சையித் குதுப்

Loading

[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம்.. அதில் பத்தாவது பகுதி கீழே.]

மனிதன் இறைவனிடமிருந்து பெற்ற இஸ்லாமியக் கண்ணோட்டம் தூய அருட்கொடையாகும். அது அறியாமைமிகுந்த, பலவீனமான மனிதனை பலனில்லாமல் வீணாகக் களைப்படைவதிலிருந்து காப்பாற்றி அவனது ஆற்றல்களை அவனுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான பணிகளில் பயன்படச் செய்தது. அந்த அருட்கொடையை மனிதனுக்கு வழங்கிய இறைவன் அதையே அவனுக்கு ஆதாரமாக, அளவுகோலாக ஆக்கியுள்ளான். அது, மனிதன் அதனைப்பெற்று அதனடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன் வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் அதனையே அளவுகோலாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான். ஆனால் மனிதர்கள் இந்த அருட்கொடையை விட்டுவிட்டதனால் வழிகெட்டுத் தடுமாறித் திரிந்தார்கள். சிரிப்பூட்டக்கூடிய, அழுகையை உண்டாக்கக்கூடிய கண்ணோட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்கினார்கள். அவை அவர்களின் வாழ்வை சீர்குலைத்ததோடு பெரும் குழப்பத்திலும் காரிருளிலும் அவர்களைத் தள்ளிவிட்டன.

இதுகுறித்து பேராசிரியர் அபுல் ஹசன் நத்வீ ‘இஸ்லாத்தைப் புறக்கணிப்பதனால் உலகம் இழப்பது என்ன’ என்ற பிரசித்த பெற்ற தம் நூலில் கூறுகிறார்,

“இறைத்தூதர்கள் இறைவனைக்குறித்து, அவனது பண்புகள் செயல்கள்குறித்து, இந்த உலகத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு குறித்து, மரணத்திற்குப்பிறகு மனிதன் சந்திக்க நேரும் விசயம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். இவற்றைப்பற்றியெல்லாம் எவ்விதக் களைப்பும் ஆய்வும் இன்றி மக்கள் எளிதாக அறிந்துகொண்டார்கள். அறியமுடியாத விசயங்களில் அவர்கள் நுழைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் இவற்றைக்குறித்து அறிந்துகொள்வது அவர்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. அவர்கள் இவற்றைக்குறித்து அடிப்படையான தகவல்களைக்கூட அறிந்திருக்கவில்லை.

ஆனால் மனிதர்கள் இந்த அருட்கொடைக்கு நன்றிசெலுத்தவில்லை. மீண்டும் முதலிலிருந்தே தேடத் தொடங்கினார்கள். அறியப்பட முடியாத அந்தப் பகுதிக்குள் அவர்கள் எவ்வித வழிகாட்டியுமின்றி பிரவேசித்தார்கள். வழிகெட்டு, களைப்படைந்து வீணானவற்றால் தங்களை நிரப்பிக் கொண்டார்கள். தங்களால் முடிந்த அளவு தேடிச் சென்றார்கள். ஏற்கனவே இருக்கின்ற விசயங்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு மீண்டும் புதிதாக மலைகளின் உயரத்தை, கடல்களின் ஆழத்தை, பாலைவனங்களின் தூரத்தை அளக்க முயற்சித்தார்கள். இத்தோடு இயலாமையும் குறுகிய வாழ்நாளும், போதுமான உபகரணமின்மையும் அவர்களின் பயணத்திற்கு தடைகளாக அமைந்துவிட்டன. களைப்படைந்து, தோல்வியுற்று சிதறிப்போன அரைகுறையான சில குறிப்புகளோடு அவர்கள் திரும்பிவந்தார்கள்… இப்படித்தான் போதுமான அறிவும் தெளிவான வழிகாட்டலுமின்றி இறையியலைக்குறித்த விவாதங்களில் ஈடுபட்டவர்கள் ஆகிப்போனார்கள். அரைகுறையான தகவல்கள், கோணலான கருத்துக்கள், கோட்பாடுகள் இவைதான் அவர்கள் பெற்ற விளைவுகள். அவர்கள் வழிகெட்டார்கள். மற்றவர்களையும் வழிகெடுத்தார்கள்.”

இறைவன், பிரபஞ்சம் மற்றும் மனிதனின் இயல்பு நிலையைக்குறித்து அவர்களாகவே உருவாக்கிக்கொண்ட கண்ணோட்டங்களும் வழிமுறைகளும் பேராசிரியர் அபுல் ஹசன் நத்வீ சித்தரித்துக் காட்டியதைவிட மோசமான வழிகேட்டையே ஏற்படுத்தின. அவற்றால் மனித வாழ்வு பெரும் துன்பத்திற்கும் நெருக்கடிக்கும் உள்ளானது. இவை எல்லாவற்றையும்விட இறைமார்க்கங்கள் என்று சொல்லப்பட்டவை சிதைவுக்கும் மாற்றத்திற்கும் உள்ளாகின. குறிப்பாக கிருஸ்தவ மதம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. சிதைக்கப்பட்ட இந்தக் கிருஸ்தவத்தின் பெயரால்தான் ஐரோப்பாவில் திருச்சபை ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. தம்முடைய தவறான கண்ணோட்டங்களையும் தகவல்களையும் அதிகாரத்தின் துணைகொண்டு அவர்கள்மீது திணித்தது. தம்முடைய கண்ணோட்டங்களுக்கு எதிராக அமைந்த அறிவியல் ஆய்வுகளுக்கு எதிராக மூர்க்கமான தாக்குதலைத் தொடுத்தது. உண்மையில் மார்க்கம் அவற்றைவிட்டும் தூரமானது.

இவையனைத்தும் இறைமார்க்கமான கிருஸ்தவத்தில் கண்ணோட்டங்கள், விளக்கங்கள் என்ற பெயரில் புகுத்தப்பட்ட மனிதச் சிந்தனைகளால் ஏற்பட்ட விளைவுகளே. இந்த வழிகேடுதான் ஐரோப்பாவில் மதத்திற்கு எதிரான மனநிலையைத் தோற்றுவித்தது. பிழையான இந்த கண்ணோட்டங்களை திருச்சபை அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைநிறுத்த முயன்றதன் விளைவு, ஐரோப்பிய மனநிலையில் மதத்திற்கு எதிரான வெறுப்பு ஆழமாகப் பதிந்தது. நாம் இதனைப் புரிந்துகொண்டால் இன்று மனித சமூகத்தைப் பீடித்துள்ள துன்பங்கள் இறைமார்க்கத்தில் மனிதச் சிந்தனையைப் புகுத்தியதனால் ஏற்பட்ட விளைவுகளே என்பதைப் புரிந்துகொள்ளலாம். மனித சமூகத்திற்கு இதற்கு இணையான துன்பமென்று எதுவும் இல்லை.

இந்த விசயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இறைமார்க்க கண்ணோட்டங்களில் புகுத்தப்பட்ட மனிதச் சிந்தனைகளால் ஐரோப்பிய சிந்தனை அடைந்த மாற்றங்களை இங்கு சுருக்கமாகக் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

சுருக்கமான இந்த வரலாறு மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்படாமல் இஸ்லாமியக் கண்ணோட்டத்தைப் பாதுகாக்கும் அல்லாஹ்வின் நோக்கத்தையும் அக்கறையையும் மார்க்கத்தை மீளாக்கம் செய்தல், வளர்ச்சியடையச் செய்தல் என்ற பெயர்களில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளால் ஏற்படும் ஆபத்தையும் நமக்குத் தெளிவுபடுத்தலாம். இந்தக் கண்ணோட்டம் மட்டுமே மனிதனின் அறியாமையினால் மாசுபடுத்தப்படாத ஒரே கண்ணோட்டம். மனித சமூகம் இதனிடம் மட்டுமே அடைக்கலம் தேட முடியும். அது இதன்பால் திரும்பி வரும் நாளில் நிச்சயம் வழிகாட்டலையும் நிம்மதியையும் அடையும்.

மேற்கத்திய சிந்தனை திருச்சபையோடு மோதல்போக்கை மேற்கொண்ட வரலாற்றை அறிய டாக்டர் முஹம்மது அல்பஹீ எழுதிய ‘நவீன இஸ்லாமியச் சிந்தனையும் மேற்கத்திய காலனியாதிக்கத்துடன் அதன் தொடர்பும்’ என்ற புத்தகத்திலுள்ள ‘மதம் ஒரு போதைப்பொருள்’ என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டவற்றை அப்படியே தருகின்றோம்.

மேற்கத்திய சிந்தனை வரலாற்றில் மதத்திற்கும் அறிவிற்குமிடையே நடந்த போராட்டம்

பதினான்காம் நூற்றாண்டிலிருந்து இப்போதுவரை ஐரோப்பிய சிந்தனை வரலாற்றில் நான்கு கட்டங்கள் உள்ளன. அவற்றில் ஐரோப்பிய அறிவு, சிந்தனை மோதல்களையும் வெவ்வேறுவகையான அறிவுப்பூர்வமான நிலைப்பாடுகளையும் கண்டது. அவை மனித சமூகம் ஆரம்ப காலம்தொட்டே ஏற்றுக்கொண்டிருந்த அறிதலுக்கான மூலங்களில் ஒன்றைத் தூய்மைப்படுத்துவதைச் சுற்றியே சுழன்றன. அவை மதம், அறிவு, உணர்வு, எதார்த்தம் ஆகியவையாகும். இந்த காலகட்டங்கள் ஒவ்வொன்றிலும் மற்ற மூன்றில் ஏதேனும் ஒன்றின் மதிப்புகுறித்து கேள்வி எழுப்பப்பட்டு பின்னர் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பதிலும் அளிக்கப்பட்டன. கேள்வியைச் சுற்றி நடைபெற்ற தர்க்கங்கள், அளிக்கப்பட்ட பதில்கள் ஆகியவை இணைந்தே சோதனை மற்றும் கணிப்பிற்காக உருவாக்கப்பட்ட மூலத்தின் மதிப்பை விளக்கும் மெய்யியல் சிந்தனைப் பள்ளிகளாக ஆயின.

மதம் ஆதிக்கம் செலுத்திய காலகட்டம்

மத்திய காலங்களில் தனி மனித ஒழுக்கம், சமூக சீர்திருத்தம் மற்றும் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றிற்கு மதமே மூலாதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இங்கு மதம் என்பது கத்தோலிக்க கிருஸ்தவத்தையே குறிக்கிறது. கத்தோலிக்கத்தில் போப்பிடமே எல்லா அதிகாரமும் குவிந்துகிடந்தது. வேதத்திற்கு விளக்கம் அளிக்கும் உரிமை போப்பிற்கும் திருச்சபை உறுப்பினர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கத்தோலிக்க திருச்சபை திரித்துவத்தை(Trinity) கிருஸ்தவத்தின் அசலான கொள்கையாக மாற்றியது. அதேபோன்று பாவத்தை ஒத்துக்கொள்ளுதல், பாவமன்னிப்புச்சீட்டு வழங்குதல் ஆகியவையும் கிருஸ்தவ வழிபாட்டுச் சடங்குகளாக மாற்றப்பட்டன.

பதினைந்தாம் நூற்றாண்டில் தொடங்கிய சிலுவைப் போர்கள் ஐரோப்பிய அறிவில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தின. மார்ட்டின் லூதர் (1453-1546) சாத்தானின் போதனைகளுக்கு எதிராக – அவர் இவ்வாறுதான் பெயரிடுகிறார் – கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளுக்கு எதிராக பெரும் போராட்டத்தைத் தொடங்கினார். பாவமன்னிப்புச் சீட்டை எதிர்த்துக் குரல்கொடுத்தார். இது மக்களை அடிமைப்படுத்தும் வழிகளுள் ஒன்று என்றார். திரித்துவத்திற்கு எதிராக, போப்பின் அதிகாரத்திற்கு எதிராக போரை அறிவித்தார். கிருஸ்தவத்தில் இறைவாக்காக புனித வேதத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார். வேதத்தை ஆராயும் சுதந்திரம் வேண்டினார். ஆனாலும் அது ஒட்டுமொத்த சுதந்திரமாக இருக்கவில்லை. வேதம் ஒன்றையே அவர் உண்மையான மூலாதாரமாக ஆக்கினார். அதனைத்தவிர மற்றவற்றை அவர் மூலாதாரமாகக் கருதவில்லை.

மார்ட்டின் லூதருக்குப் பிறகு அவரது வழியைப் பின்பற்றி கால்வின் (1509-1564) வந்தார். பைபிள் மட்டுமே உண்மையான கிருஸ்தவத்திற்கான ஒரே மூலாதாரம் என்பதையும் உண்மையான கிருஸ்தவம் ஒருபோதும் திரித்துவத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதையும் லூதர் நிலைநிறுத்தினார்.

லூதர் மற்றும் கால்வினின் சீர்திருத்தத்திற்குப் பிறகு கிருஸ்தவம் அறிவுப்பூர்வமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அது அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்றாக மாறியது. இவ்வாறு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது லூதர் சீர்திருத்தத்திற்கு எடுத்துக்கொண்ட கத்தோலிக்க கிருஸ்தவமே.

மதத்திற்கு அதிகாரமிருப்பதை நிராகரித்த மெய்யியலாளர்கள் போப்பின் அதிகாரத்தையும் நிராகரித்தனர். மதத்திற்கும் அறிவிற்கும் தொடர்பை ஏற்படுத்தி இரண்டையும் சமமான ஒன்றாக அல்லது எதிரெதிர் பொருள்களாக ஆக்கியவர்கள் கத்தோலிக்கத்திற்கும் பொதுவான மனித அறிவிற்குமிடையே தொடர்பை நிர்ணயம் செய்தார்கள். ஹெகல் போன்ற கிருஸ்தவத்திற்கு ஆதரவாக வாதாடிய மெய்யியலாளர்கள் கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளுக்கு மாற்றாக லூதரின் உண்மையான கிருஸ்தவ போதனைகளுக்கு ஆதரவாக வாதாடினர்.

இவ்வாறு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மதம், மதத்தின் ஒருகுறிப்பிட்ட வகையாகவே இருந்தது. மெய்யியலின் பெயரால் அதிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் அதன் போதனைகளில் ஒரு பிரிவாக இருந்தது. மெய்யியலின் பெயரால் நிராகரிக்கப்பட்டவையும் அதன் போதனைகளில் ஒரு பிரிவாக இருந்தது.

அறிவின் ஆதிக்கம்: இறைமார்க்கத்தின் போதனைகளை நிர்ணயம் செய்வதில் கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை அதுவே அறிதலுக்கான இறுதி மூலமாகக் கருதப்பட்டுக் கொண்டிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி ஐரோப்பிய மெய்யியல் வரலாற்றின் பிரகாசமான காலகட்டமாகும். அது தனக்கு முந்தைய காலகட்டம், அடுத்த வந்த காலகட்டம் இரண்டையும்விட தனித்தன்மைவாய்ந்த ஒன்றாகும்.  அது நீடித்த காலம்வரை அதற்கு ஜெர்மானிய, ஆங்கிலேயே, பிரெஞ்ச் சிந்தனைகள் ஒன்றிணைந்த ஒரு கூட்டான வடிவம் இருந்தது. இந்த மூன்று சிந்தனைகளிலுமுள்ள மெய்யிலாளர்கள் அதன் அறியப்பட்ட சிந்தனையை உருவாக்கினார்கள்.

அதன் சிந்தனை வடிவம்:

மனிதனைப் பீடித்திருந்த அடிமைத்தளையிலிருந்து அவன் விடுபட்ட பிறகு அறிவின் வல்லமையால் மனித சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்ற உணர்வும் தன்னம்பிக்கையும் அதிகரித்தது.

அறிவை சோதிப்பதற்காக எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் அதற்குச் சாதகமாக வளைக்கும் துணிவு காணப்பட்டது. அதேபோன்று தூய்மையான அடித்தளங்களின்மீது ஆட்சி, சமூகம், பொருளாதாரம், சட்டம், மதம், பண்பாடு ஆகியவற்றை புதிதாத கட்டமைப்பதிலும் துணிவு காணப்பட்டது.

வளர்ச்சியடைந்து கொண்டிருந்த அறிவுப்பூர்வமான இந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் மனித சகோதரத்துவத்தின்மீதும் பயன்தரக்கூடிய அனைத்து விசயங்களிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும் என்பதன்மீதும் நம்பிக்கை ஏற்பட்டது.

இதன் பொருள், அறிதலுக்கான மற்ற மூலங்களைவிட அறிவு ஆதிக்கம் பெற்றது. ஆரம்பத்தில் கத்தோலிக்க மதமே இதனோடு முழுமையாக முரண்பட்டது. பின்னர் புரோட்டஸ்டண்டு பிரிவும் அதனுடன் இணைந்துகொண்டது.

அரசியல், சட்டம், மதம் என வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் வழிநடத்துவதில் அறிவிற்கு உரிமை இருக்கிறது. மனிதமையவாதமே சமூக வாழ்க்கையின் நோக்கமாகும். இது ‘பிரகாசமான காலகட்டம்’ என்று அழைக்கப்பட்டதைப்போல ‘மனிதமையவாத காலகட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அதேபோன்று இயற்கை மதத்தின் (Deism) காலகட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது உலகைப் படைக்காத, படைப்புகளுக்கு செய்தியை அறிவிக்காத ஒரு இறைவன் இருக்கிறான் என்று நம்புவது. எனவே ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைகளைக் கொண்டே கருத்தில்கொள்ளப்பட்டன. ‘பிரகாசமான காலகட்டம்’ என்பது மனிதனை வழிநடத்தும் பொறுப்பிலிருந்து மதம் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக ‘அறிவு’க்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது என்பதல்ல. இந்த காலகட்டத்தில் தோன்றிய மனிதமையவாதம் தனிமனித வாழ்வின் நோக்கம்போன்று இறைவனின் நெருக்கத்தைப் பெறுவதற்கு மாற்றாகவே முன்வைக்கப்பட்டது. வாழ்க்கையின் நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகளில் அறிவே ஆதிக்கம் செலுத்தியது.

இது அறிவுக்கும் மதத்திற்கும் மோதல் நிகழ்ந்த காலகட்டமாகும். மதத்தை அறிவிற்கு கீழ்படியச் செய்வதற்கான முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டன. ஆகவே இது அறிவின் ஆதிக்கம் நிலைபெற்ற காலகட்டமாகக் கருதப்படுகிறது.

இதிலிருந்து தெளிவாவது என்னவெனில், மதத்திற்கும் மனித அறிவிற்கும் நடைபெற்ற மோதல் என்பது கிருஸ்தவத்திற்கும் மனித அறிவிற்கும் நடைபெற்ற மோதலையே குறிக்கும். ஐரோப்பிய வாழ்வில் திருச்சபை ஏற்படுத்திய சூழல்களே இதற்குக் காரணமாக அமைந்தன.

Related posts

Leave a Comment