தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 3) – சையித் குதுப்

[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம்.. அதில் ஒன்பதாவது பகுதி கீழே.]

மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனது ஆற்றல்களை அறிந்தவன். மனிதன் தனக்கு வழங்கப்பட்ட ஆற்றல்களுக்கேற்பவே இந்தப் பிரபஞ்சத்திலுள்ளவற்றை, வாழ்க்கையின் இரகசியங்களை, ஆன்மாவும் அறிவும் உருவாக்கப்பட்டதன் இரகசியங்களை அறிய முடியும் என்பதை இறைவன் அறிவான். எந்த அளவுக்கெனில் அவனது அறிவு மற்றும் ஆன்மாவின் இயக்கத்தோடு தொடர்புடைய உடலின் உருவாக்கம் குறித்த பெரும்பாலான விசயங்கள் இன்றளவும் அவனுக்கு மறைவாகவே இருக்கின்றன. இந்த இருபதாம் நூற்றாண்டின் துறைசார்ந்த அறிஞர்களில் ஒருவரான டாக்டர் அலெக்சிஸ் கேரல் (Alexis Carrel) “Man, the Unknown” என்ற தம் நூலில் கூறுகிறார்:

“மனித இனம் தம்மை அறிந்துகொள்வதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. எல்லா காலகட்டங்களிலும் வாழ்ந்த அறிஞர்கள், தத்துவஞானிகள், கவிஞர்கள், ஆத்மஞானிகள் ஆகியவர்களின் ஆய்வுகள், அனுபவங்கள் நம்மிடம் இருந்தபோதிலும் நாம் நம்மைப் பற்றி சில குறிப்பிட்ட விசயங்களை மட்டுமே புரிந்து வைத்திருக்கின்றோம். நம்மால் மனிதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் பல்வேறு கூறுகளால் ஆனவன் என்பதை அறிந்துவைத்துள்ளோம். இந்தக் கூறுகளும் நம்முடைய நவீன கருவிகளால் கண்டுபிடிக்கப்பட்டவைதாம். மறைவானவற்றைக் கொண்டே நாம் ஒவ்வொருவரும் உருவாக்கப்பட்டுள்ளோம். அவற்றிற்கிடையில்தான் அறியப்படாத உண்மை இழையோடிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் நாம் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கின்றோம். மனித சமூகத்தைக்குறித்து எழுப்பப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மிடம் எந்தப் பதில்களும் இல்லை. நம்முடைய அக உலகின் பெரும்பகுதி இன்னும் அறியப்படாமல்தான் இருக்கின்றது. இன்றுவரையிலும் பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மிடம் பதில்கள் இல்லை. எடுத்துக்காட்டாக: வேதிப்பொருட்களின் மூலக்கூறுகள் ஒருங்கிணைந்து செல்லின் சிக்கலான, தற்காலிக உறுப்புகளை எவ்வாறு உருவாக்குகின்றன? கருவுற்ற சினைமுட்டையின் உட்கருவினுள் பொதிந்திருக்கும் மரபணுக்கள், எவ்வாறு அந்தச் சினைமுட்டையிலிருந்து உருவாகும் மனிதனின் குணவியல்புகளைத் தீர்மானிக்கின்றன? செல்கள் எவ்வாறு ஒரு சமூகமாக தம்மைத் தாமே ஒழுங்கு செய்து கொண்டு தசைகளாகவும் உறுப்புகளாகவும் உருவெடுக்கின்றன? சமூக வாழ்வில் தாம் எந்தப் பாத்திரத்தை ஆற்ற வேண்டும் என்ற முன்னறிவை பெற்றிருக்கும் எறும்புகளையும் தேனீக்களையும் போன்றது இது. அவ்வாறு அந்த செல்கள் சிக்கலானதும் எளிமையானதுமான உயிரிகளாக உருவாவதற்கு என்னென்ன மறைவான பொறிமுறைகள் உருவாகின்றன? நம்முடைய அகமும் புறமும் எந்த இயல்பில் படைக்கப்பட்டுள்ளன? தசைகள், உறுப்புகள், மூட்டுகள், உணர்வுகள் ஆகியவற்றால் நாம் ஆக்கப்பட்டுளோம் என்பதை அறிவோம். ஆயினும் மூளைக்கும் உணர்வுக்கும் இடையேயுள்ள தொடர்பு இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கின்றது.  நரம்புச் செல்களின் உடற்கூறியல் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். மனிதனின் நாட்டம் அவனது உடலில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்? உறுப்புகளின் நிலைகளினால் எவ்வாறு அறிவு பாதிப்படைகிறது? மனிதன் மரபுவழியாகப் பெறுகின்ற இயல்பான பண்புகள் அவனது வாழ்க்கை முறை, உணவில் காணப்படும் வேதிப்பொருட்கள், தட்பவெப்பநிலை, ஒழுக்கவிதிகள் ஆகியவற்றால் எந்த வகையில் மாற்றமடைகின்றன?

எலும்புகள், தசைகள், உறுப்புகள் ஆகியவற்றுக்கும் உளம்சார்ந்த, அறிவார்ந்த இயக்கங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை நாம் அறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உடலில் களைப்பையும் நோயையும் எதிர்கொண்டு சமநிலையை உண்டாக்கும் காரணிகளை நாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம். அறவுணர்ச்சி, தீர்மானிக்கும் திறன், துணிவு போன்றவற்றை எவ்வாறு அதிகப்படுத்திக் கொள்வது என்று நமக்குத் தெரியாது. அறிவுசார்ந்த, அறம்சார்ந்த, மதம்சார்ந்த இயக்கங்களின் முக்கியத்துவம் என்ன? உணர்வுகளும் எண்ணங்களும் எந்த வகையில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன? நிம்மதி அல்லது துன்பம், வெற்றி அல்லது தோல்வி ஆகியவற்றை குறிப்பிட்ட உடற்கூறியல்சார்ந்த, அறிவுசார்ந்த காரணிகளே தீர்மானிக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அந்தக் காரணிகள் எவை எவை என்பதை நாம் அறியமாட்டோம். நாம் எவர் ஒருவருக்கும் செயற்கையான முறையில் நிம்மதியை அளித்துவிட முடியாது. நாகரீகமடைந்த, முன்னேற்றமடைந்த மனிதனை உருவாக்குவதற்கு உகந்த சூழல் எது என்பதை நாம் அறிய மாட்டோம். நம்முடைய அகம்சார்ந்த, உடல்சார்ந்த அமைப்பினால் நாம் உணரும் களைப்பை, நம் ஆன்மாவை கட்டுப்படுத்த முடியுமா?

நவீன நாகரீகத்தில் நிகழ்ந்துவரும் மனிதனின் வீழ்ச்சியை எப்படி தடுத்து நிறுத்துவது? இவைபோன்ற பல கேள்விகளை முன்வைக்க முடியும். ஆனால் எதற்குமே நம்மிடம் பதில் இல்லை. இதுவரை மனிதனைக் குறித்து அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளெல்லாம் போதுமானவையாக இல்லை என்பதும் நம்மைக்குறித்த அறிதலில் நாம் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கின்றோம் என்பதும் மிகத் தெளிவானது.”

இதுதான் மனிதனின் உண்மைநிலையைக்குறித்த நம் அறியாமை – இதுதான் மார்க்கம் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளும் அடித்தளங்களில் ஒன்று – மாறாக அதன் வெளிப்படையான, மிகச்சிறிய உண்மையைக்கூட நாம் அறியாமல் இருக்கின்றோம், இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட இவர் கூறுவதைப்போல.

இந்த அறியாமைக்கான காரணிகள் என்று அவர் கூறும் சிலவற்றோடு நாம் உடன்படுகின்றோம். அவர் கூறுகிறார்,

“அதே சமயம் நம்முடைய அறியாமைக்கு நம் முன்னோர்களின் வாழ்க்கை வழிமுறை, சிக்கலான நம் இயல்பு, நம் அறிவு ஆகியவை காரணிகளாகக் கூறப்படுகிறது…”

முதல் இரண்டு காரணிகளைக்குறித்தும் நுணுக்கமான விசயங்களைச் சொல்லிச் செல்கிறார். இங்கு அவற்றைக்குறிப்பிட வேண்டிய தேவையில்லை. மூன்றாவது காரணியைக்குறித்து அவர் கூறுவதை இங்கு குறிப்பிடுகின்றேன்.

அவர் கூறுகிறார்,

“நம்மைக்குறித்த அறியாமைக்கான மற்றுமொரு காரணம், நம்முடைய அறிவு எளிய உண்மைகளை ஆய்வு செய்வதையே விரும்புகிறது. அது சிக்கலான கேள்விகளை எதிர்கொள்ள நேரிட்டால் – உதாரணமாக, பிரபஞ்சம் மற்றும் மனிதனைக் குறித்தான கேள்விகள் – வெறுப்புடன் விலகிச் சென்றுவிடுகிறது.  ஹென்றி பெர்க்ஸன்(Henri Bergson) கூறுவதுபோல  அறிவைக்கொண்டு வாழ்வின் உண்மைநிலையை விளங்கிக்கொள்ள முடிவதில்லை. இதற்கு எதிர்மாறாக மற்ற எல்லா தளங்களிலும் புதியவற்றைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம். அதன் வடிவங்கள் நம் அடிமனதின் ஆழத்தில் காணப்படுகின்றன. நம் கண்டுபிடிப்புகளில், கருவிகளில் காணப்படும் நேர்த்தி நம் அறிவின் அடிப்படையான தன்மையை எடுத்துரைக்கிறது. வடிவியல் (Geometry) என்பது நம் உலகில் காணப்படாத ஒன்று. நாம்தாம் அதனை உருவாக்கினோம். இயற்கையின் சாதனங்கள் மனிதர்களின் சாதனங்களின் அளவுக்குத் துல்லியமானவையாக இருப்பதில்லை. நம்முடைய சிந்தனையின் தெளிவையும் வெளிப்படைத் தன்மையையும் நம்மால் இந்தப் பிரபஞ்சத்தில் காணமுடியவில்லை. எனவே எந்தவொரு சிக்கலான விசயத்திலிருந்தும் சில எளிய ஒழுங்கமைப்புகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். அவற்றின் ஆக்கக்கூறுகள் ஒவ்வொன்றுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை கணிதவியல் ரீதியில் விவரிக்க வசதியாக அமைத்துக் கொள்கிறோம். இவ்வாறு எந்தவொன்றின் சாரம்சத்தையும் வடித்துப் புரிந்துகொள்வதற்கான மனித அறிவின் திறன்தான் இயற்பியல் வேதியியல் துறைகளில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றத்திற்குக் காரணமாக இருக்கின்றது…

“உயிரினங்கள் குறித்த இயற்பியல்-வேதியியல் (Physiochemical) ஆய்வு பெரும் வெற்றிபெற்றுள்ளது. வெகுகாலத்துக்கு முன்பே கிளாட் பெர்னார்டு சிந்தித்தது போல், உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களின் உலகு என்று வரும்போது வேதியியல் மற்றும் இயற்பியல் விதிகள் ஒன்றுபோலவே செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இரத்தம் மற்றும் கடல்நீரின் காரத்தன்மைகள் மாறாதவை என்பதோடு, அவை ஒத்த விதிகளின் அடிப்படையிலேயே இயங்குகின்றன என்பதையும் நவீன உடலியங்கியல் (Physiology) கண்டுபிடித்தது ஏன் என்பதை இந்த உண்மை விளக்குகின்றது. சுருங்குகின்ற தசைகளுக்குத் தேவைப்படும் ஆற்றல் சர்க்கரை நொதிக்கும் செயல்முறையிலிருந்தே உருவாகின்றது என்பது போன்ற விதிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். சடவாத உலகிலுள்ள மற்ற பொருட்களை ஆராய்வதுபோல மனிதர்களின் இயற்பியல்-வேதியியல் அம்சங்களை ஆராய்வதும் எளிதானதே. இதனையே பொது உடலியங்கியல் சாதித்திருக்கிறது.

“உயிர் வஸ்துக்களின் ஒழுங்கிலிருந்து தோன்றும் யதார்த்த உடலியல் நிகழ்வை ஆய்வுசெய்வதில் முக்கியமான பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பகுப்பாய்வு செய்யவேண்டிய பொருட்கள் மிகவும் சிறியதாக இருப்பதால், இயற்பியல்-வேதியியலின் சாதாரண நுட்பங்களைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை. பாலியல் செல்களின் உட்கருவை உருவாக்கும் வேதியியல் ஆக்கஅமைப்பு, அதன் குரோமோசோம்கள், அந்த குரோமோசோம்களில் உள்ளடங்கியுள்ள ஜீன்கள் ஆகியன பற்றியெல்லாம் தெளிவுபடுத்தக்கூடிய ஆய்வுமுறைகள் எவை? எப்படிப் பார்த்தாலும் இந்த நுண்ணிய வேதியியல் கூறுகளின் கூட்டுச்சேர்க்கைதான் பிரதான முக்கியத்துவம் கொண்டது. ஏனென்றால் அவைதான் ஒரு தனிமனிதனாயினும் இனமாயினும் அவற்றின் எதிர்காலத்தை உள்ளடக்கியிருக்கின்றன. சீரியஸ் சப்ஸ்டன்ஸ் போன்ற சில குறிப்பிட்ட திசுக்கள் மிகஎளிதில் சிதைந்துவிடக்கூடிய தன்மை கொண்டிருப்பதால், அவற்றை உயிருள்ள நிலையில் வைத்து ஆய்வுசெய்வதென்பது சாத்தியமற்றதாகிறது.

“மூளையின் புதிர்களுக்குள்ளும், அதன் செல்களின் ஒத்திசைவான ஒழுங்கமைப்பின் புதிர்களுக்குள்ளும் ஊடுருவிப் பார்ப்பதற்கு வகைசெய்யும் எந்தவொரு நுட்பமும் நம் கைவசமில்லை. கணிதச் சூத்திரங்களின் எளிய அழகினை நேசிக்கும் நம்முடைய மனதானது ஒரு மனிதனை உருவாக்குகின்ற செல்களின் பிரம்மாண்டத் திரட்சி, நகைச்சுவையுணர்வு, பிரக்ஞை போன்றவற்றைக் குறித்து சிந்திக்கும்போது தடுமாறிப்போகிறது. எனவே நாம் இயற்பியல், வேதியியல், இயந்திரவியல் போன்றவற்றிலும், மெய்யியல் மற்றும் சமயத் துறைகளிலும் பயனுள்ளவை என்று நிரூபணமான கருதுகோள்களைக் கொண்டுவந்து மேற்கூறிய செல்கள், தொடர்புகள், உணர்வுகள் ஆகியவற்றின் கலவையின் மீதும் பிரயோகிக்க முனைகிறோம். ஆயினும் இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றியைத் தருவதில்லை. ஏனென்றால், வெறுமனே ஒரு இயற்பியல்-வேதியியல் அமைப்பாகவோ, அல்லது அகம்சார்ந்த பொருளாகவோ நம்மை நாம் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. மனிதன் பற்றிய அறிவியலானது மற்ற அறிவியல்களின் கருதுகோள்கள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது தனக்கான சொந்தக் கருதுகோள்களை வளர்த்துருவாக்குவது அவசியம். மூலக்கூறுகள், அணுக்கள், எலக்ட்ரான்கள் என்பவை பற்றிய அறிவியல்கள் போன்றே மனிதனைப் பற்றிய அறிவியலும் மிக அடிப்படையான ஒன்றாகும்.

“சுருக்கமாகச் சொல்வதென்றால், மனிதன் பற்றிய அறிவின் மந்தகதியிலான வளர்ச்சிக்கு, நம் முன்னோர்களுக்கு அதற்குரிய அவகாசம் கிடைக்காததையும், ஆய்வுப்பொருளின் சிக்கல் தன்மையையும், நம் அறிவின் கட்டமைப்பையும் காரணிகளாகக் கூறலாம். விடாமுயற்சியுடன் கூடிய கடுமையான உழைப்பின்மூலமே இந்த அடிப்படையான தடைகளைத் தகர்த்து முன்னேற முடியும். நம்மைக் குறித்த அறிவானது ஒருபோதும் இயற்பியலைப் போன்ற நேர்த்தியான எளிமையையும் சுருக்கத்தையும் அழகையும் அடையப் போவதில்லை. அதன் வளர்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கும் காரணிகள் காற்றில் கரைந்துவிடப் போவதில்லை. மனிதனைப் பற்றிய அறிவியலானது மற்றெல்லாவற்றையும் விடவும் மிகக் கடினமான ஒன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.”

இதுதான் மிகச் சிறந்த மேற்கத்திய அறிஞர்களில் ஒருவரான இவரது பார்வையில்  மனிதனைக்குறித்த உண்மைநிலையை அறியாமைக்கான காரணம். அதன் சிறிய பகுதியைக்கூட மனிதனால் அறிய முடியவில்லை. அவரது பார்வையை முழுமையாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவரது இந்த சாட்சியத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். அவர் அடிப்படையான காரணத்தை கண்டுவிட்டார் என்றே கருதுகிறோம். மனிதன் பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிக்கேற்பவே அவன் படைக்கப்பட்டுள்ளான். (பூமியில் இறைவனின் பிரதிநிதியாகச் செயல்படுவதே அவன் ஆற்ற வேண்டிய பணியாகும்) பொருள்களின் விதிகளை அறிந்து அவற்றை வசப்படுத்துவதில் மனிதன் முன்னேறிச் செல்கிறான். ஆனால் அதேபோன்று அவனால் தன்னைக்குறித்த உண்மைநிலையை அறிந்துகொள்ள முடியவில்லை. மனிதப் படைப்பின் இரகசியங்கள், வாழ்வு மற்றும் மரணம் குறித்த இரகசியங்கள் மறைவாகவே உள்ளன. அவற்றைக்குறித்து சிறிதளவுகூட அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை.

மேற்கூறப்பட்டுள்ள அந்த அறிஞரின் சாட்சியத்திலிருந்து இரண்டு வெளிப்படையான உண்மைகள் தெளிவாகின்றன.

  1. மனிதன்மீது இறைவன் பொழிந்த அருட்கொடை. அவன் மனிதனுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கண்ணோட்டத்தை வழங்காமல் அப்படியே விட்டுவிடவில்லை. அதன்மூலம் அவன் அறியப்படாத மனிதனின் உண்மைநிலையை மட்டும் தெளிவுபடுத்தவில்லை. இறைவனைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் படைப்புகளுக்கிடையேயுள்ள தொடர்புகள்குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளான். மனிதனுக்குத் தேவையான வாழ்க்கை வழிமுறைகளை, அமைப்புகளை, சட்டங்களை அவனே உருவாக்கிக் கொள்ளட்டும் என்று இறைவன் விட்டுவிடவில்லை. (இவையனைத்தும் மனிதனைக்குறித்த உண்மைநிலையை மட்டும் அல்லாமல் மனிதன் வாழும் பிரபஞ்சத்தின் உண்மைநிலை, வாழ்க்கையின் உண்மைநிலை மற்றும் அவனையும் இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அந்தப் பேராற்றலின் உண்மைநிலை என எல்லாவற்றையும் உள்ளடக்கிய பரிபூரணமான ஒரு மார்க்கத்தை வேண்டி நிற்கின்றன.)
  2. “நாங்களும் பிரபஞ்சம், வாழ்க்கை மற்றும் மனிதனின் இயல்பை விளக்கும் கண்ணோட்டத்தையும் எங்களுக்குத் தேவையான வழிமுறைகளையும் அமைத்துவிட்டோம்“ என்று கர்வத்துடன் வீம்பாகப் பேசுவோரின் உண்மைநிலையும் தெளிவாகிறது. இந்த அறியாமையோடு அவர்கள் உருவாக்கிய கண்ணோட்டங்கள், கொள்கைகள், வழிமுறைகள் அவர்களின் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் இன்னும் அதிகரித்தன. ஆழமான இந்த அறியாமையுடன் வீண் பிடிவாதமும் ஒன்றிணைந்ததனால் அவை கசப்பான, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின.

Related posts

Leave a Comment