தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)

Loading

[நபிகள் நாயகத்தின் கடிதங்களையும் உடன்படிக்கை ஆவணங்களையும் அரசியல் அதிகார கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்து ஸஃபர் பங்காஷ் எழுதியுள்ள விரிவான புத்தகத்தின் (Power Manifestations of the Sirah) மொழிபெயர்ப்பை மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் மூன்றாவது பகுதி கீழே.]

முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் சகித்துக்கொள்ள முடியாத கட்டத்தை அடைந்தபோது, நபியவர்கள் தன்னுடைய தோழர்களில் சிலருக்கு அபிசீனியாவுக்குப் புலம்பெயர்ந்திட அனுமதி தந்தார்கள். அபிசீனியாவின் கிறிஸ்தவ ஆட்சியாளர் நீதமானவரென்று அறியப்படுபவர் என்று நபிகளார் கூறினார்கள். இரண்டு விசயங்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. அபிசீனியாவின் அரசர் ஒரு கிறிஸ்தவர் என்றும், நீதமானவர் என்றும் நபிகளார் கூறினார்கள். ஒரு இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரை, இறைவன் மீதான பிரக்ஞை மற்றும் பற்றுதல் (தக்வா) அடிப்படையில்தான் மதிப்பும் சிறப்பும். எனவே (குர்ஆனுக்கு) முந்தைய வேதங்களைப் பின்பற்றுபவர்கள் என்ற ரீதியிலேயே கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் ஒரு குறிப்பிட்டளவு சிறப்பு அந்தஸ்தும் மரியாதையும் அளிக்கப்படுகிறது. அவர்கள் அஹ்ல் அல்-கிதாப் (வேதத்தையுடையவர்கள்) என்று முஸ்லிம்களால் அழைக்கப்படுகிறார்கள். அண்ணல் நபியவர்கள் தனது அருள்நிறைந்த வாழ்க்கை நெடுகிலும் இவ்விரு வேதங்களைப் பின்பற்றும் மக்களோடு சுமுகமான உறவுகளை வளர்த்துப் பேணுவதற்கு மகத்தான முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருந்த கோட்பாடுகளின் அடிப்படையில் அவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்தார்கள்.

இறுதித் தூதரின் வருகை பற்றியும்; அவர் எவ்வாறிருப்பார், எந்தக் காலப்பிரிவில் தோன்றுவார் என்பது பற்றியும் தவ்ராத், விவிலியம் என்ற இரண்டு வேதங்களுமே முன்னறிவிப்புச் செய்திருந்தன. இவ்விரண்டு முந்தைய வேதங்களிலும் அடங்கியிருந்த வருணிப்புகள், அல்லாஹ்வின் இறுதி வேதத்திலிருந்து நபியவர்கள் ஓதிக்காட்டியவைகளை உறுதி செய்பவையாகவே இருந்தன. குறிப்பாக யஹூதிகள் இதையறிந்த நிலையிலும் பிடிவாதமாக இஸ்லாத்தை ஏற்க மறுத்தார்கள். அத்துடன் நபிகளாரிடத்தில் மகத்தான பகைமை பாராட்டினார்கள். எனினும் இஸ்லாத்திலுள்ள ஏதோவொன்று அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது அவர்களின் இந்த நிராகரிப்புக்கு அடிப்படைக் காரணமாக இருக்கவில்லை. அவர்களின் குறுகிய சுயநலனும் அகந்தையுமே சத்தியத் தூதை ஏற்பதைவிட்டு அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தன.

எனினும், அவர்களில் அனைவரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் இல்லை. இதில் அபிசீனிய மன்னர் நஜாஷி (நீகஸ்) குறிப்பிடத்தக்க விதிவிலக்காக இருந்தார். அவர் மிகவும் நீதமானவர், நியாயமானவர் என்றொரு நன்மதிப்பை ஈட்டியிருந்தார். எனவே முஸ்லிம்கள் அவருடைய நாட்டிற்கு வந்திறங்கியபோது அவர்களை வரவேற்றுத் தஞ்சமும் பாதுகாப்பும் அளித்தார். முஸ்லிம்களில் சிலர் மக்காவை விட்டுத் தப்பியோடி விட்டார்கள் என்பதை அறியவந்தபோது குறைஷிகள் எச்சரிக்கை அடைந்தார்கள். உடனே அவர்கள் தப்பியோடிய முஸ்லிம்களைக் கண்டுபிடித்துக் கொண்டு வருவதற்கு சன்மானம் அறிவித்து ஆட்களை அனுப்பி வைத்தார்கள். அதில் வெற்றி கிட்டவில்லை. தேடிப் பிடிப்பதற்காகத் துரத்திவந்த மக்காவாசிகள் வந்துசேரும் முன்னரே முஸ்லிம்கள் செங்கடல் துறைமுகமான ஜித்தாவிலிருந்து அபிசீனியா நோக்கிக் கிளம்பிய ஒரு படகிலேறித் தப்பிவிட்டார்கள்.

பிறகு, முஸ்லிம்களை நாடுகடத்தி மக்காவுக்கே திரும்பக் கொண்டு வருவதற்காக, குறைஷிகள் இரண்டு தூதர்களை அபிசீனியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் ஒருவர் அம்ரு இப்னு அல்-ஆஸ். கூர்மதி மிக்கவர். அசாதாரணமான வாதத் திறமை வாய்க்கப் பெற்றவர்.”(முஸ்லிம்களாகிய) இவர்கள் தங்கள் மூதாதையர்களின் பொது நடைமுறைகளையும் சமூக ஒழுங்கையும் கைவிட்டு விட்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாகவும் மாறவில்லை. முற்றிலும் புதியதொரு நம்பிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்று நீகஸிடம் அம்ரு முறையிட்டார். இது மன்னரின் மனதை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் என்றும், அவர்களை நாடுகடத்த வேண்டுமென்ற தனது வேண்டுகோளை மன்னர் எளிதில் ஏற்றுக்கொண்டு விடுவார் என்றும் அம்ரு நம்பினார். நீகஸ் நீதமிக்க ஒரு ஆட்சியாளர் என்பதற்குப் பொருத்தமாக, அம்ரின் வேண்டுகோள் தொடர்பில் எதையும் தீர்மானிப்பதற்கு முன்பு முஸ்லிம்களின் புதிய தீனைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார்.

மன்னர் முன் தமது தரப்பு வாதத்தை முன்வைப்பதற்காக முஸ்லிம்கள் அழைக்கப்பட்டார்கள். முஸ்லிம்கள் தங்கள் தரப்பில் பேசுபவராக நபிகளாரின் சிறிய தந்தை மகன் ஜாஃபரைத் தெரிவு செய்திருந்தார்கள். “என்னுடைய மதத்திலிருந்தும், அறியப்பட்ட மற்றெல்லா மதங்களிலிருந்தும் வேறுபட்ட உங்களின் இந்தப் புதிய மதம் எது?” என்று நீகஸ் அவர்களிடம் கேட்டபோது, ஜாஃபர் இப்படிப் பதிலளித்தார்:

மன்னரே! நாங்கள் அறியாமையிலும் ஒழுக்க மாண்பற்ற ஒரு நிலையிலும் இருந்தோம். விக்கிரகங்களை வழிபடுபவர்களாகவும், இறந்த பிராணிகளின் இறைச்சியை உண்பவர்களாகவும் இருந்தோம். எல்லாவிதமான அநீதங்களையும் செய்து கொண்டிருந்தோம். உறவினர்களை மதிக்காதவர்களாகவும், அண்டையோருக்கு உதவி புரியாதவர்களாகவும் இருந்தோம். எங்களில் பலமிக்கவர்கள் எங்களில் இருந்த பலவீனர்களைச் சுரண்டிக் கொண்டிருந்தோம். பிறகு அல்லாஹ் எங்கள் மக்களின் மத்தியிலிருந்தே ஒரு தூதரை எங்களிடம் அனுப்பினான். அவரின் பரம்பரைச் சிறப்பு, உண்மைத் தன்மை, நேர்மை, தூய்மை அனைத்தும் எங்கள் மத்தியில் நன்கு பிரபலமாக இருந்தன. அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட்டு ஒழுகுமாறும், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் (எங்களைப் பரிபாலனம் செய்பவை என்றும், எங்களுக்கு அருள்செய்பவை என்றும்) மிகவும் உயர்வாக மதித்துப் போற்றிய கற்கள், விக்கிரகங்கள் எல்லாவற்றையும் மறுதலிக்கும் படியும் அவர் எங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

எப்போதும் உண்மையே உரைக்க வேண்டுமென்றும், எங்கள் அமானிதங்களிலும் வாக்குறுதிகளிலும் நாங்கள் எப்போதும் உண்மையாளர்களாக இருக்க வேண்டுமென்றும், உறவினர்களுக்கு உதவ வேண்டுமென்றும், அண்டையோருடன் நல்ல விதமாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், (பிராணிகளின்) இரத்தம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்டவற்றை உண்பதை விட்டுத் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றும், விபச்சாரம் புரிவது மற்றும் பொய் சாட்சியம் அளிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றும் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். அநாதைகளின் செல்வத்தைக் களவாடவோ, கற்பொழுக்கமிக்க பெண்ணின் மீது அபாண்டமாகப் பழிசுமத்தவோ கூடாதென்றும் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட்டு ஒழுகிவர வேண்டுமென்றும், அவனுக்கு எந்தவொரு இணையையும் கற்பிக்கக் கூடாதென்றும், வழமையான தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தை வழங்கிவர வேண்டுமென்றும் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

நாங்கள் அவர் மீதும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து எங்களுக்காக அவர் கொண்டு வந்தவற்றின் மீதும் நம்பிக்கை கொண்டு, அவர் எங்களுக்கு ஏவியவற்றிலும் தடைசெய்தவற்றிலும் நாங்கள் அவரைப் பின்பற்றினோம். ஆயினும், எங்கள் மக்கள் எங்களை எங்களுடைய தீனிலிருந்து (எங்கள் வாழ்வின் புதிய திசைநெறியிலிருந்து) விலகும்படி செய்ய முயற்சித்தார்கள். எங்களைக் கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள். பழைய ஒழுக்கமற்ற நடைமுறைகளுக்கே நாங்கள் திரும்பிவிட வேண்டும் என்பதற்காக, எங்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அவர்கள் எங்களைக் கீழடக்கி, அநியாயமாகப் பழித்ததுடன், மக்காவில் எங்கள் வாழ்க்கையைச் சகிக்க முடியாத ஒன்றாக ஆக்கிவிட்ட காரணத்தினாலேயே, நாங்கள் உங்கள் நாட்டைத் தெரிவுசெய்து, உங்கள் பாதுகாப்பின் கீழ் நீதி மற்றும் அமைதியுடன் வாழும் எண்ணத்தில் இங்கு வந்துள்ளோம்.13

இணைவைப்பாளர்கள் ஆரம்பகால முஸ்லிம்களை தொழுவதை விட்டும் நோன்பு நோற்பதை விட்டும் தடுத்தார்கள் என்று மட்டும் அவர் இங்கு சொல்லவில்லை என்பது தெளிந்துணரும் திறன்படைத்த எவருக்கும் வெளிப்படையாகவே புலப்படும். அண்ணல் நபியவர்கள் தங்களைத் தொழுகையையும் நோன்பையும் நிலைநிறுத்தும்படி ஏவினார்கள் என்று கூறிய அதே சமயம், மக்கா சமூகத்தில் மேலோங்கிக் காணப்பட்ட அநியாயங்கள், அநீதிகள் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் மீதே ஜாஃபரின் வலியுறுத்தல் குவியம் கொண்டிருந்தது. ஜாஃபர் இவ்வாறு வலியுறுத்தியதைக் கவனியுங்கள்:

எங்கள் மக்கள் எங்களை எங்களுடைய தீனிலிருந்து விலகும்படி செய்வதற்கு முயற்சித்தார்கள். எங்களைக் கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள். நாங்கள் எங்களுடைய பழைய ஒழுக்கமற்ற நடைமுறைகளுக்கே திரும்பிவிட வேண்டுமென்பதற்காக, எங்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். அவர்கள் எங்களைக் கீழடக்கி, அநியாயமாகப் பழித்ததோடு, மக்காவில் எங்கள் வாழ்க்கையைச் சகிக்க முடியாததாக ஆக்கிவிட்ட காரணத்தினாலேயே நாங்கள் உங்கள் நாட்டைத் தெரிவுசெய்து, உங்கள் பாதுகாப்பின் கீழ் நீதியுடனும் அமைதியுடனும் வாழுவதற்காக இங்கு வந்தோம்.

இஸ்லாத்தின் செய்தியை இதைவிடத் தெளிவாக வேறெப்படியும் சொல்ல முடியாது. இது மக்காவிலிருந்த ஜாஹிலிய்ய அமைப்பின் முன்பு கருத்தியல் ரீதியானதும், சமூக ரீதியானதுமான ஓர் உடனடிச்  சவாலை முன்வைத்தது. அந்த ஜாஹிலிய்ய அமைப்பு ஓர் இறைவனுக்குக் கட்டுப்பட்டு ஒழுகுவதன் மீதமைந்தவொரு கண்ணோட்டத்தைக் கொஞ்சமும் சகித்துக்கொள்ள விரும்பாத ஒன்றாக இருந்தது. இதற்குக் குறிப்பானதொரு காரணம், அந்தக் கண்ணோட்டம் செல்வமும் சக்தியும் படைத்தவர்களால் பலவீனர்கள் ஒட்டச் சுரண்டப்படுவதை எதிர்த்தமையே. இங்கு விவகாரம் இஸ்லாத்தின் வழிபாட்டுச் சடங்குகளைப் பற்றியதல்ல. பலவீனர்களின் உரிமைகளைச் சுரண்டுதல், அநீதமாகப் பறித்தல் என்பவற்றிலிருந்து பெறப்பட்டிருந்த தங்களின் தனிச்சலுகைகளை அச்சுறுத்தாத பட்சத்தில், மக்காவின் மேட்டுக்குடிகள் வழிபாட்டுச் சடங்குகளைச் சகித்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள்.

இஸ்லாம் இயல்பிலேயே நீதி, அமைதி, நியாயமான கொடுக்கல்-வாங்கல் என்பவற்றுடன் பிணைந்த ஒன்றாக இருக்கின்றது என்பது மிகவும் வெளிப்படை. அந்த ஆரம்ப நாட்களிலும் கூட முஸ்லிம்களுக்கு வாழ்வில் தமது இலட்சியப் பணி பற்றி எந்தவிதமான மயக்கமும் இருக்கவில்லை. அவர்கள் வெறுமனே வழிபாட்டுச் சடங்குகளின் மீது மட்டும் கரிசனை கொண்டவர்களாக இருக்கவில்லை. ஆனால், இன்று முஸ்லிம்கள் பலரும் வழிபாட்டுச் சடங்குகளுக்கே அடிமையாகிப் போயிருக்கிறார்கள். ஆரம்பகால முஸ்லிம்களோ இவற்றைக் காட்டிலும் மிக முக்கிய அம்சங்களான நீதி, நியாயம் என்பவை பற்றியே பெரிதும் கரிசனையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். சில முஸ்லிம்கள் சுத்தம்-அசுத்தம் (தஹாரா-நஜாஷா), தொழுகை முறை போன்ற விசயங்களில் கொண்டுள்ள அதீதப் பித்தின் காரணமாக, நீதி-நியாயம் போன்ற உன்னதக் கோட்பாடுகள் இஸ்லாத்தின் அடிப்படையோடு பிணைந்தவை என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்கவும் கூட முடியாது போயிருக்கிறது.

ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த உலகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.

இந்தத் திசையில் நபிகளார் மேற்கொண்ட மிகத் துவக்க முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது, அபிசீனியாவின் நீகஸுடன் -முஸ்லிம்கள் அங்கு சென்ற பிறகு- நபியவர்கள் உருவாக்கிக் கொண்ட பாதுகாப்பு உறவாகும். மதீனாவுக்கு புலம்பெயர்வதற்கு வெகுமுன்பே நிகழ்ந்த ஒன்று இது. தப்பியோடி வந்துவிட்டவர்களை தம்மிடம் திரும்ப ஒப்படைத்து விடும்படி விடுக்கப்பட்ட மக்காவாசிகளின் வேண்டுகோள்களைத் தொடர்ந்து, நீகஸை விளித்து ஜாஃபர் ஆற்றிய நெஞ்சையுருக்கும் அந்த உரைக்குப் பிறகு முஸ்லிம்கள் நீகஸுடன் மிக இணக்கமான உறவுகளை உருவாக்கிக் கொண்டார்கள். பிற்காலத்தில் நீகஸ் இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாகக் கணிசமான எண்ணிக்கையிலான வரலாற்று அறிஞர்களும் ஹதீஸ் ஆய்வாளர்களும் கருத்துடன்பாடு கொள்கிறார்கள். நபியவர்களின் மற்றொரு கடிதத்துக்கு மன்னர் அனுப்பிய பதில் கடிதத்தில், தாம் ஜாஃபரின் ஊடாக ஷஹாதாவை -அல்லாஹ்வுக்கும் அவனது தூதுருக்கும் தம்முடைய பற்றுறுதியை அறிவிக்கும் பிரகடனத்தை- மொழிந்ததாக எழுதியிருப்பது இதனை உறுதி செய்கிறது. நீகஸுடன் பரிமாறிக் கொள்ளப்பட்ட இந்தக் கடிதங்கள் தவிர, நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றபோது சுரகா இப்னு மாலிக் என்பவருக்கு நபிகளார் அளித்த ‘பாதுகாப்பு உத்தரவாதக் கடிதம்’ பற்றிய சான்றும் இருக்கிறது. முஹம்மதை பிடித்து மக்காவுக்குக் கொண்டுவந்தால் நூறு ஒட்டகங்கள் என்று மக்காவின் பிரபுக்கள் அறிவித்திருந்த சன்மானத்தை வெல்லும் ஆசையில் நபிகளாரைத் துரத்திக் கொண்டு வந்தவொரு நபர்தான் இந்த சுரகா இப்னு மாலிக்.14

நபிகளாரை அரசின் தலைவராக அங்கீகரித்தும், மதீனா நகர அரசில் வாழுவோர் அனைவருக்கும் மத்தியில் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர காப்பு ஒப்பந்தம் இருக்கிறது என்று உறுதிசெய்தும் மதீனா சாசனம் தொகுக்கப்பட்டது. மதீனா சாசனம் வகுத்து முடிக்கப்பட்டதும், நபியவர்கள் தம்முடைய கவனத்தை மதீனாவுக்கும் செங்கடல் துறைமுகமான யன்பூவுக்கும் நடுவே வாழ்ந்துவந்த கோத்திரங்களின் (அதிகார மையங்களின்) பக்கம் திருப்பினார்கள். இந்த அரசியல் முன்னெடுப்பு உத்தி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது: மதீனாவுக்கு மேற்கில் செங்கடல் கரை நெடுகிலும் விரிந்திருந்த இந்தப் பகுதியின் வழியாகவே மக்காவின் வணிகக் கூட்டங்கள் சிரியாவுக்கும் ஃபலஸ்தீனத்துக்கும் கடந்துசெல்ல வேண்டியிருந்தன. அதுவே மக்காவாசிகளின் பொருளாதார உயிர்நாடி. முஸ்லிம்கள் அதனைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பட்சத்தில், அது குறைஷிகளுடனான அரசியல் நடவடிக்கைகளிலும், அவர்களின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதிலும் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய ஊக்க ஆற்றலாக அமையும் என்ற நிலை இருந்தது. இஸ்லாத்திற்கும் நபிகள் நாயகத்திற்கும் பகிரங்கமான எதிரிகள் அல்லவா இந்த குறைஷிகள்! நபிகளார் மக்காவிலிருந்து தப்புவதற்கு முன் அவரைக் கொலைசெய்யவும் திட்டமிட்டவர்கள்.

அண்ணல் நபியவர்கள் இக்கோத்திரங்களில் பலவற்றையும் தாமே நேரில் சென்று சந்தித்துப் பேசி அவர்களுடன் எழுத்துபூர்வ ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். சில கோத்திரங்கள் இஸ்லாத்தைத் தழுவின. மற்றவை அவ்வாறு செய்யவில்லை. எனினும், அவை முஸ்லிம்களாக மாறவேண்டும் என்பது அந்த உடன்படிக்கைகளில் ஒரு முன்னிபந்தனையாக இருக்கவில்லை. அவற்றுள் பெரும்பாலானவை மனவிருப்புடன் நபியவர்களுடன் சமாதானம் செய்துகொண்டு, அவர்களுடன் போர் செய்வதில்லை என ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டன. அது மட்டுமின்றி ஏதேனும் போர் வெடிக்கும் பட்சத்தில், ஒன்று அவை முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் அல்லது நடுநிலை காக்க வேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டது. இந்த முன்னேற்றங்கள் அப்போது வளர்ந்து வந்த முஸ்லிம் அதிகாரத் தளத்திற்கு -முன்மாதிரியான அந்த இஸ்லாமிய இயக்கத்துக்கு- மிக முக்கியமான தாக்கங்களை உருவாக்கின. இவ்வுடன்படிக்கைகள் இஸ்லாமிய அரசின் செல்வாக்கினை விசாலமாக்கின. அதே சமயம் அவை குறைஷிகளுக்குப் பாதகமாக அமைந்தன.

குறைஷிகளும் அந்தப் பிராந்தியத்தின் வழியாகத் தமது வணிகக் கூட்டங்கள் எந்தவிதத் தொந்தரவுமின்றி போய்வர இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கோத்திரங்களுடன் நீண்டகாலமாகவே உடன்பாடுகளைப் பேணிவந்தார்கள். வணிகக் கூட்டங்களைத் தாக்கி அவற்றைக் கொள்ளையடிப்பது அக்கோத்திரங்களின் மத்தியில் பொதுவானவொரு நடைமுறையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, குறைஷிகள் தங்களுடைய வணிகக் கூட்டங்களின் பாதுகாப்பான பயணத்தை உத்தரவாதம் செய்துகொள்ளும் நோக்கில் இவ்வாறான ஒப்பந்தங்களைப் பேணிவந்தார்கள். அக்கோத்திரங்களின் குறிப்பிட்ட பகுதிகள் வழியே பாதுகாப்பாகப் பயணிப்பதற்குப் பகரமாகப் பணம் தருவதாகவே இந்தப் பேரங்கள் அமைந்திருந்தன. ஏறக்குறைய இதே முறையில்தான் இன்றைய ‘அணிசேரா’ உலகில் மேலாதிக்கச் சக்திகள் தம்முடைய கைக்கூலி ஆட்சியாளர்களுக்கு லஞ்சத்தைக் கொடுத்து, அவர்களின் நாடுகளில் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் இயங்கிக் கொள்வதற்கு வகைசெய்கின்றன. இவ்வாறு பரஸ்பர நலன்களுக்காக செய்துகொள்ளப்படும் ஏற்பாடுகளாகவே அவை இருந்தன. பல சமயங்களில் அவை கோத்திரச் சண்டைகளின் போதான இராணுவ ஒத்துழைப்பையும் உள்ளடக்கியிருந்தன.

இக்கோத்திரங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதன் மூலம், தலைமுறை தலைமுறையாத் தொடர்ந்து வந்தவோர் அதிகாரச் சமன்பாட்டை மதீனாவில் புதிதாக உருவெடுத்த இஸ்லாமிய யதார்த்தத்துக்கு ஆதரவாக மாற்றியமைத்தது நபியவர்களின் முன்மாதிரி அரசியல் மதிக்கூர்மை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு உடன்படிக்கைகள் கையெழுத்தானது மேற்கூறிய கோத்திரங்களோடு மட்டுமல்ல. மக்காவுக்கு நெருக்கத்திலிருந்த பிற கோத்திரங்களும் கூட -ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் மக்கா விடுவிடுவிக்கப்படுவதற்கு வெகு முன்னரே- முஸ்லிம்களின் நட்புச் சக்திகளாக மாறிவிட்டன.

மதீனா சாசனம் முக்கியத்துவம் பெறுவது எதனாலெனில், அது இறைவனுக்குக் கட்டுப்பட்டு ஒழுகுகின்றவொரு சமூகத்திற்கான புதிய நடத்தை விதிகளை நிறுவியதுடன், மதீனாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான ஒரு புகலிடத்தையும் வழங்கியது. அதன் பிறகு ஹுதைபிய்யா உடன்படிக்கை குறைந்தது பத்தாண்டுகளுக்காவது முஸ்லிம்கள் தமது பரம்பரை எதிரிகளான மக்காவாசிகள் குறித்த கவலையின்றி இருப்பதற்கு வகைசெய்தது. எனவேதான் திருக்குர்ஆன் அதனை ‘தெள்ளத் தெளிவான வெற்றி’ என்று குறிப்பிடுகிறது.15 முஸ்லிம்கள் குறைஷிகளிடமிருந்து பிரிந்துசென்ற ஒரு உட்பிரிவாக அன்றி, தம்முடைய வரலாற்றில் முதன்முறையாக தனியொரு போட்டி அதிகார மையமாக அங்கீகரிக்கப்பட்டதும் அப்போதுதான். அதே போல், பல்வேறு கோத்திரங்களும் குறைஷிகளின் பழிநடவடிக்கை பற்றிய அச்சமின்றி தாங்கள் விரும்பினால் முஸ்லிம்களோடு நட்பு பாராட்டுவதற்கான கதவையும் அது திறந்து விட்டது. ஹுதைபிய்யா உடன்படிக்கையின் முக்கியத்துவத்தையும் முஸ்லிம்களுக்கு அது திறந்துவிட்ட புதிய வாய்ப்பு வளங்களையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனில், முஸ்லிம்களின் எண்ணிக்கையில் நிகழ்ந்த அபாரமான அதிகரிப்பிலும், அதைத் தொடர்ந்து அவர்கள் ஈட்டிக் கொண்ட அதிகாரத்திலும் ஹுதைபிய்யா உடன்படிக்கை செலுத்திய செல்வாக்கை அலசிப் பார்க்க வேண்டும்.

அதற்கு முன்புவரை இஸ்லாத்தைத் தழுவியிருந்தவர்கள் திடமானவொரு நம்பிக்கையுடனேயே அதனை ஏற்றிருந்தார்கள். ஊறுவிளைவிக்கும் சில விதிவிலக்குகளை -எடுத்துக்காட்டாக முனாஃபிக்குகளை- தவிர்த்துவிட்டுப் பார்த்தால், துவக்ககால முஸ்லிம்கள் இஸ்லாமிய இலட்சியத்தின் மீது மெய்யான பற்றுறுதி கொண்டோராகவும், அதற்காகத் தம்முயிரையும் தியாகம் செய்ய ஆயத்தமானோராகவும் இருந்தார்கள். தன்னோடிணைந்துள்ள தனது பின்பற்றாளர்கள், எதிர்கொள்ளும் சகலவிதச் சவால்களையும் வென்று மேலோங்கவல்லவொரு பரிபூரணமான பற்றுறுதியுடன் கூடிய விசுவாசம் மற்றும் கறைபடாதவொரு திட நம்பிக்கையோடுதான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்கள் என்பதை நபியவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.

முஸ்லிம்கள் தம்முடைய இலட்சியத்தின் மீது அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்த காரணத்தினாலேயே அவர்களால் ஃகைபரின் யஹூதிகளோடு மோதவும், பல்வேறு முடியாட்சிகளின் மன்னர்களை இஸ்லாத்தின்பால் அழைக்கவும், மக்காவின் தலைவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீறியபோது அவர்களை எதிர்த்து நடவடிக்கையில் இறங்கவும் முடிந்தது. மரணத்தைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லை; மாற்றமாக அதனை மனமுவந்து வரவேற்றார்கள். ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் போராடி மரணமடைந்தால் அல்லாஹ் அதற்கு நற்கூலி வழங்குவான் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.

குறிப்புகளும் மேற்கோள் நூல்களும்

13. அபூ பக்கர் முஹம்மது இப்னு இஸ்ஹாக் இப்னு யசார் மற்றும் முஹம்மது அப்த் அல்-மலிக் இப்னு ஹிஷாம், சீறத்துந் நபி, முதல் தொகுதி, (முஹம்மது இப்னு இஸ்ஹாக்குடைய மூல ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது, உருது). (லாஹூர், பாகிஸ்தான்: இதாராயே இஸ்மிய்யத், 1989), பக். 216-17.

முஹம்மது ஹுசைன் ஹைகல் (மொழிபெயர்ப்பு டாக்டர் இஸ்மாயீல் ராஜீ அல்-ஃபாரூக்கீ), முஹம்மதின் வாழ்வு. (கோலாலம்பூர், மலேசியா: இஸ்லாமிக் புக் டிரஸ்டு, 1993), பக். 99.

14. இப்னு இஸ்ஹாக் மற்றும் இப்னு ஹிஷாம், சீறத்துந் நபி, முதல் தொகுதி, பக்,327-28. ஹமீதுல்லாஹ், ஹதீஸ் பாதுகாப்பு பற்றி ஓர் அறிமுகம், பக். 17.

15. குர்ஆன், 48:01.

Related posts

Leave a Comment