தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 4)

Loading

[நபிகள் நாயகத்தின் கடிதங்களையும் உடன்படிக்கை ஆவணங்களையும் அரசியல் அதிகார கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்து ஸஃபர் பங்காஷ் எழுதியுள்ள விரிவான புத்தகத்தின் (Power Manifestations of the Sirah) மொழிபெயர்ப்பை மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் நான்காவது பகுதி கீழே.]

நபிகளாரின் காலத்தில் பாரசீகம், பைஸாந்தியம் என இரண்டு வல்லரசுகள் இருந்தன. அரேபியாவில் மைய அதிகாரம் எதுவும் இல்லாதிருந்த நிலைமையை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அங்கு தமது செல்வாக்கினை அவை பரவச் செய்திருந்தன. ஒமானிலும் பஹ்ரைனிலும் பாரசீகர்கள் தமது ஆளுனர்களை நியமித்திருந்த அதேவேளை, பைஸாந்தியர்கள் வடக்கு அரேபியாவில் ஒரு இடைராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்ததோடு, சிரியாவையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். நபியவர்கள் உலகத் தலைவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்துக் கடிதங்கள் அனுப்பியபோது, பல்வேறு விதமான மறுமொழிகள் அவர்களுக்குக் கிடைத்தன. அபிசீனியாவின் மன்னர், ஒமானின் ஆளுனர் போன்று சிலர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். பாரசீக மன்னர் போன்று சிலர் கோபமாக எதிர்வினையாற்றினார்கள். வேறு சிலரோ இஸ்லாத்தின்பால் அனுதாபம் கொண்டாலும், தமது உள்ளூர்ச் சூழல் பற்றிய பிறழ்வான புரிதலின் காரணத்தால் இஸ்லாத்தை ஏற்பதற்கு மறுத்து விட்டார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக பைஸாந்தியப் பேரரசர் ஹெராக்ளியஸைச் சொல்லலாம். உள்ளடக்கத்தில் ஒன்றையொன்று ஏறத்தாழ ஒத்திருந்த அக்கடிதங்களுக்கு அவர்கள் இவ்வாறு வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றும்படி அவர்களை உந்திய காரணிகள் எவை? எழுச்சியடைந்து கொண்டிருந்த இஸ்லாத்தின் சக்திக்கு முன்னால் அவர்களால் தாக்குப்பிடித்து நிற்க முடிந்ததா? அவர்களின் அறுதி முடிவு என்னவாயிற்று? (நபி வரலாற்றின் அதிகாரப் பரிமாணம் எனும்) புதியவொரு கோணத்தை மனதிலிருத்தி நாம் இந்த அம்சங்கள் பற்றி சற்று விரிவாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

இறுதியாக தனது கடைசி ஹஜ்ஜின் போது நபிகளார் வழங்கிய இறுதிப் பேருரை, நபியவர்கள் இவ்வுலகுக்கு விடைகொடுக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அது சமூகத்தில் நீதமிக்க முறையில் அதிகாரத்தைப் பிரயோகிப்பது தொடர்பாக முக்கியமான உட்கிடைகளை தன்னில் உள்ளடக்கியுள்ளது. அத்தகைய சுருக்காமானவொரு காலத்திற்குள் எவ்வாறு நபிகளார் அதனைச் சாதித்துக் காட்டினார்கள் என்பது பற்றிய புதிய அகப்பார்வைகளைப் பெறவேண்டுமெனில், அவர்களின் வாழ்வில் இடம்பெற்ற இவ்வனைத்து மைல்கற்களையும் பற்றி நாம் கலந்துரையாடுவதும் பகுப்பாய்வு செய்வதும் அவசியம்.
அத்தகைய பகுப்பாய்வு இன்றைய முஸ்லிம்களின் -மட்டுமின்றி சகல ஒடுக்கப்பட்ட மக்களின்- சீரழிந்த அரசியல், பொருளாதார, இராணுவ, சமூகச் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தப்பாடு கொண்டதாகவே இருக்கும்.

உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் சுமார் 200 தேசிய அரசுகளாகத் துண்டாடப்பட்டு, எல்லைப் பிரச்சினைகளையும் இடப்பெயர்வுகளையும் அனுபவித்து இன்னலுற வேண்டியவர்களாக; நிதிநிலை நெருக்கடியினாலும் நல்ல உணவு, சுகாதாரப் பராமரிப்பு, சுத்தமான குடிநீர் ஆகியவற்றின் போதாமையினாலும் அச்சுறுத்தப் படுபவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஏறக்குறைய 250 ஆண்டுகால ஜனநாயகம் மற்றும் சுமார் 60 ஆண்டுகால ‘ஐக்கிய’ நாடுகளுக்குப் பிறகும், பெரும்பான்மை உலக மக்கள் அமைப்பு ரீதியான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாதவொரு நிலையிலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், உலகின் பெரும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் நடுவிலான இடைவெளி தற்போது 100:1 விகிதத்தை எட்டிவிட்டது. உலகின் ஆகப்பெரிய தொழிற்துறைகளாக இருப்பவை ஆயுத வியாபாரமும் (கோக்கெய்ன், ஹெராயின், மற்றும் அவை போன்ற இன்னபிற) போதைப் பொருட்களின் வியாபாரமும்தான்.

இந்தப் புத்தகம் அச்சுக்குப் போகும் சமயத்தில் துனீஷியா, எகிப்து, லிபியா, யமன் மற்றும் பஹ்ரைனில் நடந்து கொண்டுள்ள புரட்சியெண்ணம் கொண்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், மீண்டுமொரு முறை லெபனானில் அரசாங்கம் நிலைகுலைதல், சூடான் துண்டாடப்படுதல், ஃபலஸ்தீனர்கள் மீது தொடரும் இனச் சுத்திகரிப்பு, ஏமனிலும் சோமாலியாவிலும் நடத்தப்பெறும் அறிவிக்கப்படாத போர்கள், ஈராக்கிய-ஆஃப்கானியக் குடிமக்கள் கதிரியக்க வீச்சுக்கு உள்ளாக்கப்படுதல், அர்ஜென்டினா, கிரீஸ், அயர்லாந்து மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பணமதிப்பு வீழ்ச்சி, தாது வளத்துக்காக காங்கோ சூறையாடப்படுதல், ஐவரிகோஸ்டிலும் ஃபலஸ்தீன அதிகார அமைப்பிலும் உலக நாணய நிதியத்தின் (ஐ–ஊ) பணியாளர்கள் பலரும் உயர் செயலாட்சிப் பதவிகளுக்கு ‘தேர்வு செய்யப்படுதல்’, வட அமெரிக்காவின் வீட்டுவசதிச் சந்தையிலும் வேலைவாய்ப்பிலும் ஏற்பட்டுள்ள பாதாளச் சரிவு, இவற்றையொத்த இன்னபிற உலகளாவிய உறுதியின்மைகள் அனைத்தும் உண்மையில் நீதமானவொரு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பதற்கான சான்றுகளாகவே விளங்குகின்றன. அத்தகையவொரு நீதமிகு அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கும்போது மட்டுமே ‘சீர்திருத்தத்தை’ சாதிப்பதற்காக பலாத்கார, இராணுவ வழிமுறைகளை நாடவேண்டிய தேவை எழாமலிருப்பது சாத்தியம்.

பூமியில் மனித விவகாரங்களில் இம்மட்டத்தில் நிலைபெற்றுள்ள சமத்துவமின்மையை சீர்செய்வதற்காகவும், நீதிக்கான நிறுவனப் பொறிமுறைகளை நிலைநாட்டி, பேணி, பயனடைவது எவ்வாறு என்பதை மனிதகுலத்திற்குச் செயல்படுத்திக் காட்டுவதற்காகவுமே அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் அனுப்பப்பட்டார்கள். இந்த யதார்த்தத்தை அல்லாஹ்வின் தெய்வீக வார்த்தைகள் பின்வருமாறு தெளிவுறுத்துகின்றன:

நிச்சயமாக நாம் (இதற்கு முன்காலத்திலும்) நம்முடைய தூதர்களை (சத்தியத்துக்கான) தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். அன்றியும், மனிதர்கள் (மனித சமூகங்கள்) நிறுவன ரீதியில் நீதியின் மீது நிலைபெறுவதற்காக அவர்களோடு வேதத்தையும் (நன்மை, தீமையை நிறுத்துப் பார்ப்பதற்காக) துலாக்கோலையும் இறக்கினோம். இன்னும், இரும்பையும் (அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான திறனையும்) இறக்கினோம். அதில் மகத்தான சக்தியும் மனிதனுக்குப் பல்வேறு பயன்களும் இருக்கின்றன. (இவையெல்லாம் உங்களுக்கு வழங்கப்பட்டதற்குக் காரணம்) யார் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஆதரித்து நிற்கிறார் என்பதை அவன் (சோதித்து) அறிவதற்காகவே. அவன் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் சக்தி வாய்ந்தவனாகவும் (யாவற்றையும்) மிகைத்தவனாகவும் இருக்கிறான்! (57:25)

இந்த ஆயத்தில் இரும்பு பற்றிய குறிப்பு இடம்பெற்றிருப்பது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றல்ல. சீரழிந்த அதிகாரப் பண்பாட்டின் குணாம்சங்களாக இருக்கும் இனவாதம், வர்க்கவாதம், பொருளாதார துருவமயமாக்கம் என்பவற்றை இல்லாமலாக்க சில சந்தர்ப்பங்களில் நபியும் கூட இராணுவ வழிமுறைகளை நாட வேண்டியிருந்தது. நிச்சயமாக முஹம்மது நபியின் காலத்தைய மக்காவும், அரேபியத் தீபகற்பமும், சூழவிருந்த பரந்த உலகமும் இன்றைய உலகிலிருந்து பெரிதும் வேறுபட்டவையாக இருக்கவில்லை. ஆயினும், சிக்கலின் அளவு இன்று மகத்தானதாக இருக்கின்றது. குழுநலன்களைக் கொண்ட எதிர்த்தரப்பின் ஓய்வொழிச்சலற்ற எதிர்ப்பையும் மீறி நீதமானவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான மிகவும் விரிவான, கறைபடாத செய்முறைச் சூத்திரம் குர்ஆனிலும் நபி வரலாற்றிலும் நபிகளாரின் முன்மாதிரியிலுமே அடங்கியிருக்கிறது. இவ்வாறு கூறுவது முந்தைய நபிமார்களின் உழைப்பினை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடும் நோக்கில் அல்ல என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

நம்பிக்கையைக் குலைக்கும் சகலவிதத் தடைக் கற்களையும் தாண்டி, குஃப்ரு மற்றும் நிஃபாக்கின் உலகிலிருந்து வருகின்ற குழப்பத்தில் ஆழ்த்தும் நியாயம் கூறுதல்களையும் மீறி அத்தகையவொரு நீதமிகு சமூகத்தைச் சாதிக்க வேண்டுமாயின், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதில் நபிகளாரின் முறைமையை கைக்கொண்டு அதிலேயே உண்மையாகத் தங்கிநிற்க வேண்டும்.

ஒரு நீதமான செயலாட்சித் தலைமையின் கரங்களில் அதிகாரத்தைத் திரட்டி வலுப்படுத்த வேண்டியது ஏன் அவசியமாகிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். அவற்றுள் மிக முக்கியமான காரணம், வரலாற்று ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, நிரந்தரமாக அச்சத்தில் வைக்கப்பட்டுள்ள பிரிவினரான ஒடுக்கப்பட்ட மக்கள், கீழ்நிலை வர்க்கங்கள், தரித்திரர்கள், உடமைகள் பறிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு அரசியலமைப்பில் ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்குவதேயாகும். இதில் அவப்பேறு என்னவெனில், வரலாற்று ரீதியிலும் பூகோள ரீதியலும் மனிதகுலத்தின் மிகப் பெரும்பகுதி இத்தகையவர்களைக் கொண்டே ஆகியிருக்கின்றது. தம்முடைய மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்புக்காகவும் கொள்கை ரீதியில் போராடும் உதவியாளர் ஒருவருக்காக ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருப்பதே உலகில் அவர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கின்றது.

முஹம்மது அத்தகையவொரு ஏழைப் பங்காளராகவே இருந்தார். அவர் முன்சென்ற நபிமார்கள் அனைவரின் குணாம்சங்கள் அனைத்தினதும் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்தார். அவர் வெறுமனே அன்றாடம் ஐந்து வேளை தொழுது, ரமாழானில் நோன்பு நோற்போரில் ஒருவராக மட்டும் இருக்கவில்லை. கொடுங்கோன்மைக்கு ஆளாக்கப்பட்ட, சமவாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் துன்பங்களைக் களைவதற்கு அத்தகையவர்களின் ஆதரவும் அவருக்குத் தேவையாக இருக்கவில்லை. அவர் முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனச் சகலருக்கும் ஒரு மாபெரும் அருட்கொடையாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர். அவருடைய முன்னுதாரணமே தனிமனித ஆளுமை நிர்மாணத்தை ஒரு சமூகச் சக்தியாக (அல்லதீன ஆமனூ) உயர்த்தியது. அந்தச் சமூகச் சக்தியின் செறிவான தாக்கமே பிறகு பொருளாதார (ஸகாத்), அரசியல் (ஷூறா) இராணுவ (ஜிஹாது) நிறுவனங்களைச் சமனீடாக்கும், விடுலை செய்யும் ஒரு சமூகம் என்ற வடிவத்தை எடுத்தது.

அநீதி இன்று நமது தனிப்பட்ட வாழ்வின் மிக நுண்ணிய அம்சங்கள் முதல் சமூக வாழ்வின் மிகப் பிரம்மாண்டமான அம்சங்கள் வரை அனைத்திலும் நுழைந்திருக்கின்றது. இதற்கு மிகச் சரியான காரணம், அது நிறுவன ரீதியிலமைந்ததாக இருக்கின்றது என்பதாகும். பிறப்பிலிருந்து இறப்பு வரை நிறைந்துள்ள சமூக அநீதிகளை இயல்பானவையென ஏற்கின்ற ஒரு உலக நோக்குக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். போர் அரங்கில் நிகழ்த்தப்படும் உடனழிவு (Collateral Damage), பாலினங்களுக்கு இடையில் சச்சரவு, பொது நிதியாதாரங்களை சுயநலச் சக்திகள் விழுங்கி ஏப்பம் விடுதல், முதலாளித்துவ ஆணையின் பேரில் அரங்கேற்றப்படுகின்ற சூழியல் சீரழிவு போன்றவற்றை இயல்பானவையாக ஏற்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். நிறுவன ரீதியான அநீதியைத் தனிமனிதர்களால் சரிசெய்ய முடியாது. அவர்கள் எத்துணை நல்லவர்களாக, பற்றுறுதி கொண்டவர்களாக, உறுதி படைத்தவர்களாக இருந்த போதிலும் சரியே. அதற்குத் தேவை ஒரு குடிமை அரசாகும். சமூகத்தை அல்லாஹ்வுடனான அடிப்படைப் பிணைப்பிலிருந்து தடுக்கும் சகலமானவற்றின் செல்வாக்குகளையும் சமூகத்திலிருந்து அகற்றி, அதைச் சுதந்திரமான ஒன்றாக ஆக்குவதே அக்குடிமை அரசின் முழுமுதற் குறிக்கோளாக இருக்க வேண்டும். அபூ தர்ருக்கும் நபியவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு உரையாடல் இதனை தெளிவுறுத்துவதாக அமைந்திருக்கிறது:

“அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீமின் ஓலைச் சுருள்களில் (சுஹுஃப் இப்ராஹீம்) என்ன எழுதப்பட்டிருந்தன?” என்று நான் (அபூதர்) கேட்டேன். அதற்குப் பதிலளித்த நபியவர்கள், “அவை அனைத்தும் நீதிபோதனைகளாக இருந்தன” என்றார்கள். மேலும், அவற்றிலிருந்து (அல்லாஹ்வின் வார்த்தைகளில் அமைந்த பின்வரும் நீதிபோதனை ஒன்றை எடுத்துரைத்தார்கள்),”அரசராக பொறுப்பளிக்கப்பட்டவரே! அறிந்து கொள்வீராக. வீண்பகட்டை விட்டொழிப்பீராக. உலகச் செல்வங்களை கட்டம் கட்டமாக திரட்டிக் குவிப்பதற்காக நாம் உம்மை (ஆட்சியாளராக) நியமிக்கவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் முறையீடுகளை எம்மிடமிருந்து விலக்கி அப்புறப்படுத்தவே உம்மை நியமித்துள்ளோம்.”16

ஒரு சமூக ஒழுங்கை, ஒரு மக்கள் திரளை, அல்லது ஒரு தேசத்தை தலைமையேற்று வழிநடத்துவதற்காகத் தெரிவுசெய்யப்படுபவரின் பணித்திட்டம், இலட்சியம் என்னவாக இருக்க வேண்டுமென்பதை மேலே எடுத்துக்காட்டிய கூற்று மிகத் தெளிவாக இனம்காட்டுகிறது. அது மட்டுமின்றி, வழமையாக இப்பதவிகளில் இருப்பவர்களின் பண்புகளையும் அது வருணிக்கிறது. செல்வம் மற்றும் அதிகாரத்தை மென்மேலும் திரட்டிக் குவிக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் தமது ஆட்சியதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

எனவே எந்தவொரு இமாம், கலீஃபா, அல்லது தலைவராயினும் ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பங்களை நீக்குவதே அவரின் முதன்மைப் பொறுப்பாகும். தமது மனசாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக ஏதேனுமொரு துயர்துடைப்பு அமைப்புக்கு ஒரு நாளுக்கு ஒரு டாலர் என நன்கொடை வழங்குவதன் மூலம் ஒருவரால் அதனைச் சாதிக்க முடியாது. ஒருவர் தலைமுறை தலைமுறைக்கும் தொடரவல்ல ஒரு மாற்றத்தைக் கொண்டுவர உண்மையிலேயே விரும்புவாரெனில், அநீதியின் மூலவேர்களை அவர் கண்டடைய வேண்டும். இனவாதம், பிறப்பின் அடிப்படையில் மேன்மை, இறைநிராகரிப்பு என்பவையே அநீதியின் அந்த ஆணிவேர்கள். இவைதாம் முடிவுறாப் போர்கள், அடிமைமுறை, மக்களின் சக்தியைச் சீரழிக்கும் கைக்கூலி அரசுகள், பேராசை பிடித்த தீவினைக்கு அஞ்சாத மேட்டுக்குடிகளின் கைகளில் செல்வம் குவிதல் போன்றவற்றுக்குப் பொறுப்பான காரணிகளாக அமைந்திருக்கின்றன.

இவ்வாறு மானுட உணர்வு சீரழிவுக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சமூகவியல் ஆயுதத்தை அதன் அடிப்படையிலிருந்து செதுக்கி உருவாக்குவதற்கான, சகலருக்கும் சாத்தியமான ஒரு முன்மாதிரியை விட்டுச்சென்றது அண்ணல் முஹம்மதே அன்றி வேறெவரும் இல்லை. அந்த ஆயுதத்தை எந்தவொரு இடத்திலும் எந்தவொரு யுகத்திலும் திடமான அதே மூலப்பொருட்களிலிருந்து உருவாக்கிப் பயன்படுத்த முடியும். உண்மையுள்ளத்தோடு நீதியை வேண்டுபவர்கள் நபியவர்களின் அந்த முன்மாதிரியை நெறிபிறழாமல் பின்பற்றுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதே அதற்குள்ள ஒரே நிபந்தனை.

நபியவர்கள் எவ்வாறு முக்கிய அதிகார மையங்களை குடிமை உடன்பாடுகளின் கீழ் ஒன்றிணைத்தார்கள் என்பதையும்; தாம் செய்வதாக அவை வாக்களித்தவற்றுக்கு எவ்வாறு அவற்றைப் பொறுப்பாக்கினார்கள் என்பதையும் அவதானிப்பதன் மூலம், எல்லாக் காலத்திலும் முஸ்லிம்கள் தமது குடிமைப் பண்பை அநீதிக்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கான ஒரு அடித்தளமாக மாற்றி வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கிக் காட்டுவதே பரந்த நோக்கில் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்பதன் பின்னணியிலுள்ள குறிக்கோள். ஏனையவர்கள் ஏற்கனவே கூறியுள்ளவற்றை மீண்டும் எடுத்துரைப்பதோ; அல்லது நபி வரலாறு பற்றிய ஏனைய முந்தைய ஆய்வு முயற்சிகளில் செய்யப்பட்டுள்ளது போல், கொஞ்சம் மேலதிக விவரங்களுடன் காலக்கிரம ரீதியில் நபி வரலாற்றை எடுத்துரைப்பதோ எமது நோக்கம் அல்ல. மிகச்சிறந்த முன்மாதிரியென அல்லாஹ்வால் வருணிக்கப்பட்ட அண்ணல் நபிகளாரின் வரலாற்றின் ஊடாக, நாம் இங்கு நமது சமகாலப் பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் நோக்கில், விவரிப்பு அணுகுமுறையை விடுத்து பகுப்பாய்வு அணுகுமுறையை நோக்கி நகருவதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.

குறிப்புகளும் மேற்கோள் நூல்களும்

16. அபூதர் அறிவிக்க, அல்-முன்திரீ பதிவுசெய்துள்ளது.

Related posts

Leave a Comment