ஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் (பகுதி 1) – ஜோனத்தன் பிரௌன்
[ஜோனத்தன் A.C. பிரௌன் எழுதியிருக்கும் Hadith Muhammad’s Legacy in the Medieval and Modern World என்ற புத்தகத்தை மொழிபெயர்த்து மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் நான்காவது பகுதி இது.]
அறிமுகம்
ஹதீஸ் மரபின் இயல்பினை புரிந்து கொள்வது சிக்கலானது போல் தோன்றினாலும், இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் தோன்றிய தேவைகளை தீர்ப்பதற்கான ஒரு நடைமுறைத் தீர்வாகவே அது தோற்றம் பெற்றது. புதிதாகப் பிறந்திருந்த முஸ்லிம் சமுதாயம் நபிகளாரின் மரணத்தை தொடர்ந்து, அவரில்லாத நிலையில் இறைவனின் நாட்டத்திற்கு இசைவாக வாழ்வது எப்படி என்பதை தீர்மானித்திட போராடிக் கொண்டிருந்தவொரு சூழ்நிலையில், நபிகளாரின் போதனைகளே வழிகாட்டுதலுக்கான தெளிவான மூலஊற்றாகத் திகழ்ந்தன. இந்த வகையில், நபிகளாரின் அதிகாரபூர்வ கூற்றுகளையும் அவருடைய செயல்களென்று கூறப்பட்டவற்றையும் ஒன்றுதிரட்டி, ஒழுங்குசெய்து, சலித்து எடுப்பதற்கானவொரு நடைமுறை முயற்சியாகவே ‘ஹதீஸ் ஆய்வு’ துவங்கியது. தொடர்ந்துவந்த நூற்றாண்டுகளில் புதிது புதிதாக தோற்றம்பெற்ற தேவைகளையும் பூர்த்திசெய்வதாக ஹதீஸ் மரபு பரிணாம வளர்ச்சி கண்டது. பத்தாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் ஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் புதியதொரு பரிமாணத்தை பெற்றன. அதாவது ஹதீஸ்களின் உள்ளடக்கத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மக்களை நபிகளாருடன் இணைக்குமொரு ஊடகமாக ஹதீஸ் அறிவிப்புகளும் இஸ்னாதுகளும் உருவாகின. அவை முஸ்லிம் சமூகத்திற்குள்ளாக ஒருவகை அதிகாரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் வழங்கின. இவ்வாறு, ஹதீஸ் இலக்கியம் பொதுவாக இரண்டு பாத்திரங்களை ஆற்றி வந்துள்ளது தெளிவாகிறது. முதலாவது, இஸ்லாமிய சட்டத்தையும் கோட்பாட்டையும் விரித்துரைப்பதற்கான அதிகாரபூர்வ மூதுரைகள் என்ற பாத்திரம். அடுத்தது, நபிகளாரின் வசீகரமிக்க மரபுடன் ஒரு வகையில் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும் பாத்திரம்.
இஸ்லாத்தின் துவக்ககாலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை பரிணமித்து வந்துள்ள சுன்னி ஹதீஸ் மரபின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் தடத்தை இவ்வத்தியாயம் ஆய்வு செய்கிறது. ‘ஆதாரபூர்வ தன்மை’ அல்லது ‘ஆதாரபூர்வமானது’ (சஹீஹ்) என்பதாக இவ்வத்தியாயத்தில் குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் எல்லாம், அது ஹதீஸ்களின் நம்பகத் தன்மை பற்றிய சுன்னி முஸ்லிம் அளவுகோளின் அடிப்படையிலும், சுன்னி ஹதீஸ் விமர்சன முறையியலின் அடிப்படையிலுமே குறிக்கப்படுகிறது என்பதை நினைவிற் கொள்க. அதன் பொறிமுறை பற்றி அடுத்த அத்தியாயத்தில் முழுமையாகக் கலந்துரையாடுவோம். ‘அதிகார பூர்வமானது’ அல்லது ‘புனைந்துரைக்கப்பட்டது’ என்று இங்கு குறிப்பிடுவதால், உண்மையிலேயே அது முஹம்மது நபியவர்களால் சொல்லப்பட்டதா இல்லையா என்ற தீர்மானத்திற்கு வருவதுடன் அதற்கு ஒட்டுறவு இருக்க வேண்டுமென்கிற அவசியம் எதுவுமில்லை. ஹதீஸ்களின் வரலாற்றில் ‘நடந்தது என்ன?’ என்பது தொடர்பிலான விவாதங்களை நாம் எட்டாம் அத்தியாயத்தில் விரிவாக அலசுவோம்.
நபிகளாரின் அதிகாரத்தை மரபுரிமையாகப் பெறுதல்
இஸ்லாத்தில் ‘அதிகாரம்’ என்பது இறைவனிடமிருந்து அவனுடைய தூதரின் வழியாக ஊற்றெடுக்கிறது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் அதிகாரபூர்வமாக பேசுவதற்கான உரிமையை இறைவன் மற்றும் அவனது தூதருடனான இணைப்பின் ஊடாகவே பெறமுடியும். அது நேரடியாக நபிகளாரின் போதனைகளை மேற்கோள் காட்டுவதாகவோ, அல்லது சன்மார்க்க சட்டப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைகளை நபிகளாரிடமிருந்து மரபுரிமையாகப் பெற்று பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இஸ்லாம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த காலப்பிரிவில், முஸ்லிம்கள் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபின் பக்கமே மீண்டும் மீண்டும் திரும்புபவர்களாக இருந்தார்கள். நபிகளாரின் அதிகாரபூர்வ மரபானது சமுதாயத்தில் இறையச்சம் மிக்கவர்களால் வழிவழியாக பரப்பப்பட்டும் பொருள்கொள்ளப்பட்டும் வந்ததன் ஊடாகவே வெளிநோக்கிப் பரவியது. நபிமொழி அறிவிப்புகள், சட்ட நியாயவியல் முறைகள் எனும் வடிவங்களின் ஊடாகத்தான் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபு வழிவழியாகக் கடத்தப்பட்டது. ஆரம்ப இஸ்லாமிய காலப்பிரிவில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளும் ஹதீஸ் மரபும் தோன்றுவதற்கு அவையே வழிவகுத்தன.
இஸ்லாத்தின் உருவாக்க காலப்பிரிவைச் சேர்ந்த முதல் தலைமுறை முஸ்லிம்கள் மரணமடைந்த பிறகு, நபிகளாரின் அடைக்கல நகரான மதீனாவில் இஸ்லாத்தின் முதலாம் ஃகலீஃபாவின் பேரரான அல்-காசிம் இப்னு முஹம்மது இப்னு அபீ பக்ரு (இ. 108/7267) அவர்களும், நபிகளாரின் ஹதீஸ்களை பொறுத்தவரை மற்றெவரைக் காட்டிலும் மிக அதிகமான எண்ணிக்கையில் அறிவித்த மாணவராகத் திகழ்ந்த அபூ ஹுறைறாவின் மருமகனார் சஈது இப்னு முசய்யப் (இ. 94/713) அவர்களும் மார்க்கத்தின் முன்னணி வியாக்கியானிகளாக உருவெடுத்தனர்.
திருக்குர்ஆன், நபிகளாரின் மரபு, இரண்டாம் ஃகலீஃபா உமர் உள்ளிட்ட இஸ்லாத்தின் ஸ்தாபக உறுப்பினர்களின் அபிப்பிராயங்கள் ஆகியன பற்றிய மேற்கூறிய இருவரின் பொருள்கோடல்களையும் மதீனாவின் பிரபல சட்டவியல் அறிஞர் மாலிக் இப்னு அனஸ் (இ. 179/796) ஒன்றுதிரட்டி தொகுத்து வழங்கினார். கூஃபாவில் நபித்தோழரும் ஆரம்பகால முஸ்லிம் சமுதாயத்தின் தூண்களில் ஒருவருமான அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (இ. 32/6523) அவர்கள் கிறிஸ்தவ, யூத, ஸொராஸ்டிரிய அண்டை அயலார்கள் சூழ்ந்தவொரு நிலையில் ஈராக்கில் புதிதாக நிலைபெற்ற முஸ்லிம் சமுதாயத்திற்கு இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகள் பற்றியும் நடைமுறை பற்றியும் போதனை செய்துவந்தார்கள். இப்போதனைகளை அவரின் மாணவர் அல்காமா இப்னு கைஸ் (இ. 62/681) நம்பிக்கைக்குரிய இளையவரான இப்றாஹீம் அந்-நஃகாயீ (இ. 95/714) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இப்றாஹீம் தனது அணுகுமுறைகளையும் சட்ட நியாயவியல் முறைகளையும் ஹம்மாது இப்னு அபீ சுலைமான் (இ. 120/738) அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். பதினெட்டாண்டுகள் அவருடைய மாணவராக இருந்த அபூ ஹனீஃபா (இ. 150/767) அவர்கள் ஈராக்கில் சட்டவியல் ஆய்வில் ஓர் மைல்கல்லாகவும், ஹனஃபி சட்டவியல் சிந்தனைப் பள்ளியின் பெயருக்கான காரண கர்த்தாவாகவும் மாறினார்.
முஸ்லிம் சமுதாயத்தின் தொட்டிலாக இருந்த மதீனாவில் முஹம்மது நபியின் மரபானது ஒரு உயிர்வாழும் சமுாயத நடைமுறையின் வடிவில் வளர்ந்து விருத்தியுற்றது. ஆனால், கூஃபாவின் நிலைமை இதற்கு மாற்றமானது. ஆரம்பகால முஸ்லிம் சமுதாயத்திற்கு அன்னியமான பண்டைய நம்பிக்கைக் கோட்பாடுகளும் நடைமுறைகளும் இணைந்தவொரு பல்லினச் சூழல் அங்கு நிலவியது. அத்தகைய கருத்தாக்கங்கள் பலவும் நபிகளாரின் மீது பிழையாக சார்த்திக் கூறப்பட்ட போலி ஹதீஸ்களின் வடிவில் சட்ட ஏற்பினை பெற்றிருந்தன. எனவே, அபூ ஹனீஃபா இத்தகைய மோசடியான ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு தமது செயல்பாட்டினை அமைத்துக் கொள்ளும் அபாயத்தில் விழுவதைக் காட்டிலும், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் திருக்குர்ஆனையும், நன்கு நிலைபெற்ற ஹதீஸ்களையும், தனது ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட சட்ட நியாயவியல் முறைகளையும் மட்டுமே சார்ந்து நிற்பதை தெரிவு செய்தார்.
புதிதாக வெற்றிகொள்ளப்பட்ட நாடுகளில் எட்டாம் நூற்றாண்டின் மத்திய காலப்பிரிவில், இஸ்லாத்திற்குப் பொருள்கொள்வதிலும் அதனை அமலாக்கம் செய்வதிலும் இரண்டு பொதுப் போக்குகள் தோற்றம் பெற்றன. அவ்விரு போக்குகளைப் பொறுத்த வரையிலுமே திருக்குர்ஆனும், அதன் செய்தியின் விசயத்தில் நபியவர்கள் மேற்கொண்ட அமலாக்கமும் மட்டுமே முஸ்லிம்களைப் பொறுத்தவரை அதிகாரபூர்வ அமைப்பு நிர்ணய மூலங்களாக விளங்கின.
மார்க்கத்தை நிலைநாட்டுவதில் பங்கேற்று, நபிகளாரின் அதிகாரத்தை மரபுரிமையாகப் பெற்றிருந்த ஆரம்பகால சமுதாயத்தின் நடைமுறைகள், சட்டத் தீர்ப்புகள் எனும் கண்ணாடி வில்லைகளின் வழியாகவே அபூ ஹனீஃபா, மாலிக் போன்ற அறிஞர்கள் அவ்விரு மூலங்களையும் புரிந்துகொள்ள முற்பட்டனர். எனவேதான் பெய்ரூத்தைச் சேர்ந்த மற்றொரு அறிஞரான அப்துர் றஹ்மான் அல்-அவ்ஸாயீ (இ. 157/7734) ‘நபித்தோழர்களிடமிருந்து நம்மிடம் வந்து சேர்ந்ததற்கு பெயர்தான் மார்க்க அறிவு (இல்ம்); அவர்களிடமிருந்து வராத எதனையும் மார்க்க அறிவு என்று கருதமுடியாது’1 என்று குறிப்பிட்டார். சுன்னி இஸ்லாத்தை பொறுத்தவரை, முஸ்லிமான நிலையில் நபிகளாரை நேரில் கண்டிருந்து, முஸ்லிமான நிலையிலேயே மரணமடைந்த எவரொருவரும் நபித்தோழர் என்றே கருதப்படுகிறார். திருக்குர்ஆனிலும், நபிகளார் மற்றும் நபித்தோழர்களின் பிரபலமான போதனைகளிலும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப் பெறாத சூழ்நிலைகள் தொடர்பான கேள்விகள் எழும்போது, அபூ ஹனீஃபா போன்ற அறிஞர்கள் மேற்கூறிய மூலாதாரங்கள் பற்றிய தம்முடைய சொந்தப் பொருள்கோடல்களின் மீதே சார்ந்து நின்றனர். இத்தகைய அறிஞர்கள் ‘அஹ்லுர் றஃயீ’ அல்லது ‘அபிப்பிராய வாதிகள்’ என்று அறியப்பட்டனர்.
இறையச்சமிக்க சமுதாய உறுப்பினர்களில் வேறு சிலரோ, சட்டவியல் என்பது இறைவனுடையதும் இறைத்தூதருடையதும் பிரத்யேக ஆளுகைப் பகுதி என்று நம்பியதால், இவ்வாறான சூழ்நிலைகளில் அவர்கள் ஆரம்பகால முஸ்லிம் தலைமுறையினரின் அபிப்பிராயங்களோடும், நபிமொழி குறித்த ஐயத்திற்கிடமான அறிவிப்புகளாக இருப்பினும் அவற்றோடுமே தம்மை போதுமாக்கிக் கொண்டார்கள். பாக்தாதைச் சேர்ந்த மாபெரும் அறிஞர் அஹ்மது இப்னு ஹன்பல் (இ. 241/855) பின்வரும் தனது கூற்றின் மூலம் சட்டத்தையும் நம்பிக்கையையும் புரிந்து கொள்ளும் விசயத்தில் கைக்கொள்ளப்படும் ‘அறிவிப்பு அடிப்படையிலான’ இவ்வணுகுமுறையை இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்: உள்ளத்தில் ஆழமானதொரு கசப்புணர்வு இல்லாத எந்தவொரு மனிதரும் மார்க்கம் அல்லது சட்டம் சம்பந்தமான ஏதேனுமொரு விசயத்தில் பகுத்தறிவை பிரயோகிப்பதை பார்ப்பது அரிது. பகுத்தறிவை பிரயோகிப்பதைக் காட்டிலும் பலவீனமானதொரு நபிமொழி அறிவிப்பே என் மனதிற்கு நெருக்கமாகவுள்ளது.”2 ‘அறிவிப்பு அடிப்படையில்’ விவகாரங்களை அணுகும் இத்தகைய அறிஞர்கள் ‘அஹ்லுல் ஹதீஸ்’ அல்லது ‘ஹதீஸ் வாதிகள்’ என்று அறியப்பட்டனர். இவர்கள் தமது சொந்த அபிப்பிராயங்களைக் காட்டிலும் ஆரம்பகால இஸ்லாமிய சமூகத்தின் அபிப்பிராயங்களுக்கே முன்னுரிமை வழங்கினார்கள். முஸ்லிம்கள் அண்மைய கிழக்குலகின் பல்லினச் சூழலை எதிர்கொள்வதென்பது இஸ்லாத்தின் கலப்பற்ற தூய்மையை அச்சுறுத்துகிறது என்பதாக அவர்கள் பார்த்தார்கள். சுயஆராதனை எனுமளவு பகுத்தறிவின் பிரயோகத்தினுள் மூழ்குகையில், அது மதப் பிறழ்வையும் இறைவனால் அருளப்பட்ட பாதையிலிருந்து பிறழ்ந்து செல்வதற்கானவொரு தூண்டலையும் ஊக்கமூட்டுவதாக அமைந்துவிடும்; எனவே நபிகளாரின் வழிமுறைகளையும், அவருக்குப் பின்வந்த நேர்வழி நின்றவர்களின் வழிமுறைகளையும் மிக இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே தம்மால் மார்க்கத்தின் அசல்தன்மையை பாதுகாக்க முடியுமென்று அவர்கள் நம்பினார்கள்.
நபிகளார் வரை பின்னோக்கிச் செல்லும் அறிவிப்புகள், நபிகளாரின் பெயரைத் தாங்கியவையாகவும் அவரின் அதிகாரத்தை எடுத்துரைப்பவையாகவும் இருக்கின்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே கூட நம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவையாகும் என்பதே அஹ்லுல் ஹதீஸ்களின் கருத்து. ஒரு ஹதீஸ் நம்பத்தகுந்ததுதானா இல்லையா என்பது பற்றி ஒரு அறிஞர் சந்தேகம் கொண்டிருந்தாலும் கூட, “அல்லாஹ்வின் இறைத்தூதர் கூறினார்கள்…” என்ற வாக்கியமானது மாபெருமொரு அதிகாரத்தை தன்னில் சுமந்திருக்கிறது. இவ்வகையில் திருக்குர்ஆன் வசனங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொள்வதிலும், நபியவர்களின் படையெழுச்சி நிகழ்வுகளை மீட்டுருவாக்கம் செய்வதிலும், நபித் தோழர்களின் மாண்புகளை ஆவணப்படுத்துவதிலும், முஸ்லிம்களை பயபக்தியின் பால் ஆர்வமூட்டுவதற்கான உபதேசங்களிலும் நம்பகத்தன்மையற்ற பல்வேறு ஹதீஸ்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அஹ்லுல் ஹதீஸ் அறிஞர்கள் சில சந்தர்ப்பங்களில் சட்ட விவகாரங்களிலும் கூட நம்பிக்கைக்கு உரியதல்லாத ஹதீஸ்களை சார்ந்து நின்றுள்ளனர். இத்தனைக்கும், இப்னு ஹன்பல் போன்ற அறிஞர்கள் ஹதீஸ்களின் ஆதாரபூர்வ தன்மையை உறுதி செய்வதில் மிகவும் கறாறான போக்கினை கைக்கொள்வோராக இருந்திருக்கிறார்கள். இவ்வாறு, ‘அஹ்லுல் ஹதீஸ்’ மற்றும் ‘அஹ்லுர் றஃயி’ சிந்தனைப் பள்ளிகளுக்கு நடுவிலான போட்டியின் மத்தியிலேயே சுன்னி ஹதீஸ் மரபு தோன்றி வளர்ந்துள்ளது.
துவக்ககால ஹதீஸ் திரட்டும் எழுத்தாக்கங்களும்
இஸ்லாத்தின் ஆரம்பகாலம் முதலே, முஹம்மது நபியின் பின்பற்றாளர்கள் அவரின் வாக்குகள் மீதும் செயல்கள் மீதும் அளவுகடந்த பற்றார்வம் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். இஸ்லாத்தில் இறைநம்பிக்கைக்கும் இறையச்சத்துக்கும் ஒப்பற்றவோர் முன்மாதிரியாக மட்டுமின்றி, இறைவனுக்கும் லௌகிக உலகுக்கும் இடையிலானவோர் இணைப்புப் பாலமாகவும் நபியவர்கள் விளங்கினார்கள். நபிகளாரின் அன்றாட போதனைகள் யாவும் அப்போதைக்கு அப்போதே எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டனவா இல்லையா என்பது தொடர்பாக நிலவும் சர்ச்சை பற்றி நாம் பிறகு பார்க்கவிருக்கிறோம். எனினும், எழுதப் படிக்கத் தெரிந்த நபித்தோழர்கள் அவருடைய விசேஷமான கூற்றுகளையும் செயல்களையும் மட்டுமாகிலும் எழுத்தில் பதிவுசெய்ய முனைந்திருப்பார்கள் என்பது ஆச்சர்யம் தருவதாக இல்லை. அன்றைய காலப்பிரிவில் காகிதம் என்பது மத்திய கிழக்குப் பகுதியில் அறியப்பட்ட ஒன்றாக இருக்கவில்லையாதலால், அவர்கள் எழுதித் தொகுத்த சஹீஃபா எனப்படும் சிற்றேடுகள் யாவும் பாபிரஸ், பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோல் துண்டுகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை கொண்டோ; அல்லது பனையோலை போன்ற எளிய பொருட்களை கொண்டோ ஆக்கப்பட்டிருந்தன. வரிவிதிப்பு தொடர்பான தனது ஆணைகளை எழுதித் தொகுக்கும்படி நபிகளார் கட்டளையிட்டிருந்தார்கள் என்றாலும், பொதுவாக இந்த சஹீஃபாக்கள் அரசாங்க ஆவணங்களாக இருக்கவில்லை; மாறாக, சில நபித்தோழர்களின் தனிப்பட்ட குறிப்பேடுகளாக மட்டுமே அவை இருந்தன.3 இவ்வாறு சஹீஃபாக்களை வைத்திருந்தோர் என்று அறியப்பட்டிருக்கும் நபித்தோழர்களுக்கு உதாரணமாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ், அலீ இப்னு அபீ தாலிப், அபூ ஹுறைறா, அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு அல்-ஆஸ் போன்றோரை குறிப்பிடலாம்.
சில நபித்தோழர்கள் ஹதீஸ்களை சேகரிப்பதிலும், மனனம் செய்வதிலும், எழுதிக் கொள்வதிலும் மற்ற நபித்தோழர்களை காட்டிலும் செயற்துடிப்பானவர்களாக இருந்திருக்கின்றனர். தாம் அவ்வளவாக அறிந்திராத தாத்தா-பாட்டி பற்றிய கதைகளையும் நினைவுக்குறிப்புகளையும் மிகுந்த ஆர்வத்துடன் திரட்டும் பேரப்பிள்ளைகளை போல், இளவயது நபித்தோழர்கள்தான் பெரும்பாலும் ஏராளமான ஹதீஸ்களின் சேகரிப்பாளர்களாகவும் அறிவிப்பாளர்களாகவும் உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது. நபிகளாரை மூன்று ஆண்டுகள் மட்டுமே அறிந்திருந்த அபூ ஹுறைறா (இ. 58/678) தான், ஹதீஸ்களின் ஆகப்பெரிய மூலமாக விளங்குகிறார். பிற்கால ஹதீஸ் கிரந்தங்களில் அவரது சுமார் 5300 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.4 அவர் தனது வாழ்வின் ஆரம்ப பகுதியில் ஹதீஸ்களை எழுதுபவராக இருக்கவில்லை என்றாலும், அவர் மரணித்தபோது அவரிடம் பெட்டி பெட்டியாக அவர் எழுதித் தொகுத்த சஹீஃபாக்கள் (ஏடுகள்) இருந்தன.5 நபியவர்கள் இறந்தபோது, உமர் இப்னுல் ஃகத்தாபின் மகன் அப்துல்லாஹ் இப்னு உமருக்கு வயது வெறும் இருபத்தி மூன்றுதான். ஹதீஸ்களின் இரண்டாவது பெரிய மூலம் அவர். பிற்கால திரட்டுகளில் அவருடைய சுமார் 2600 அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நபிகளார் மரணித்தபோது இப்னு அப்பாஸுக்கு (இ. 68/6868) வயது வெறும் பதினான்குதான் (சில ஆதாரங்களின் படி ஒன்பதுதான்). அவர் சுமார் 1700 ஹதீஸ்களை அறிவித்திருப்பதன் மூலம் ஐந்தாவது பெரிய ஹதீஸ் மூலமாகத் திகழ்கிறார்.6
இப்னு அப்பாஸ், அபூ ஹுறைறா போன்ற நபித்தோழர்கள் மிகக் குறைந்தளவு காலம் மட்டுமே நபிகளாரை அறிந்தோராக இருந்த காரணத்தால், அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான தமது ஹதீஸ்களை மூத்த நபித்தோழர்களை நாடி அவர்களிடமிருந்தே திரட்டியிருந்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் கூறியதை நான் செவியுற்றேன்…” என்று அபூ ஹுறைறா கூறியதாக வெகு அரிதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவர் நபியவர்கள் கூறினார்கள்…” என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். நேரடியாக கேட்டிராத நிலையிலும் பலரின் கூற்றுகளை நாம் மேற்கோள் காட்டுவதைப் போலவே, நபித்தோழர்களின் மத்தியிலும் இதுவொரு பொதுவான நடைமுறையாக இருந்திருக்க வேண்டும். இடையில் எவருமின்றி நேரடி வாய்மொழி அறிவிப்பின் மீது அளவுக்கு மிஞ்சி ஆர்வம்காட்டும் போக்கு, இஸ்லாத்தின் முதல் தலைமுறையினரிடத்தில் காணப்படவில்லை. பிற்கால ஹதீஸ் புலமைத்துவத்தில் அதுவொரு தீர்மானகரமான பண்பாக விளங்கியது பற்றி மூன்றாம் அத்தியாயத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நபியவர்களிடமிருந்து சுமார் நாற்பது ஹதீஸ்களை மட்டுமே இப்னு அப்பாஸ் நேரடியாகச் செவியுற்றுள்ளார்கள். எஞ்சிய ஹதீஸ்கள் அனைத்தையும் ஒன்றில் அவர் அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்…” என்று கூறியே அறிவித்திருக்கிறார்கள். அல்லது ஒன்று, இரண்டு அல்லது சில சமயங்களில் மூன்று மூத்த நபித்தோழர்களை உள்ளடக்கிய அறிவிப்பாளர் தொடர்களின் வழியாக அவற்றை அறிவித்திருக்கிறார்கள்.7
நபிகளாருடன் அதிகமானளவு காலத்தை செலவிட்டுள்ள ஏனைய நபித்தோழர்களும் முக்கிய ஹதீஸ் மூலங்களாக திகழ்ந்திருப்பது ஆச்சர்யம் தருமொரு விசயமல்ல. நபியின் இல்லத்திற்குள் ஒரு பணியாளராக தனது பத்தாம் வயதில் நுழைந்த அனஸ் இப்னு மாலிக்கும், நபிகளாரின் அன்பிற்கினிய மனைவியார் ஆயிஷாவும் அறிவித்துள்ளதாக முறையே சுமார் 2300 மற்றும் 2200 ஹதீஸ்கள் பிற்கால கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக அவர்கள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது பெரிய ஹதீஸ் மூலங்களாக கணிக்கப்படுகிறார்கள்.8 நபிகளாருடன் பொது வாழ்வில் அதிகமானவு காலத்தை செலவிட்ட நபித்தோழர்களே, எண்ணிக்கையில் மிகவும் குறைந்த ஹதீஸ்களை அறிவித்தவர்களாக இருப்பதைக் காணும்போது சுவாரஸ்யமாக இருக்கிறது. நபியின் நெருங்கிய நண்பர் அபூ பக்ரு, மருமகனார் அலீ இப்னு அபீ தாலிப், நெருங்கிய ஆலோசகர் உமர் ஆகியோர் முறையே 142, 536 மற்றும் 537 ஹதீஸ்களை மட்டுமே அறிவித்துள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இவ்வாரம்பகால முஸ்லிம்களே நபிகளாரின் மரணத்திற்குப் பிறகு முடிவெடுப்பதற்கும் மார்க்க சட்டத் தீர்ப்புகளுக்கும் பொறுப்பானவர்களாகவும் தலைவர்களாகவும் பார்க்கப்பட்டனர். அவர்கள் நேரடியாக நபியின் ஹதீஸ்களை மேற்கோள் காட்டுவதை விட, தமது செயல்கள் மற்றும் சட்டவியல் முறைகளின் வழியாகவே நபிகளாருடைய போதனைகளின் ஆன்மாவைப் பாதுகாத்தார்கள்.
ஹதீஸ் கிரந்தங்களை வாசிக்கும்போது, எந்தவொரு ஹதீஸையும் எந்த நபித்தோழர் அறிவித்திருப்பார் என்பதை ஊகிப்பது சாத்தியமற்றவொரு காரியமாகவே தோன்றுகிறது. எனினும், குறிப்பிட்ட சில நபித்தோழர்கள் குறிப்பிட்ட சில பாடப்பொருள்கள் மீது தனியான ஆர்வத்தையும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தி இருப்பது புலப்படுகிறது. பொதுவாக நபியின் மனைவிமார்கள் -குறிப்பாக ஆயிஷா அவர்கள்- நபியவர்களின் தனிப்பட்ட சுகாதாரம், வீட்டில் அவர்களின் நடத்தை, தாம்பத்ய வாழ்க்கை போன்றவை தொடர்பான ஹதீஸ்களின் மூலங்களாக விளங்குவது ஆச்சர்யமளிக்கவில்லை. விலங்குகளின் எச்சில் சடங்காச்சார ரீதியில் அசுத்தமானது என்பதே பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில், நாய்களை வேட்டைக்காக பயன்படுத்தும் வேளைகளில் தமது பின்பற்றாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் பற்றி நபிகளார் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டல்களை தாங்கிவரும் பெரும்பான்மை ஹதீஸ்களுக்கும் நபித்தேழர் அதீ இப்னு ஹாத்திம் அவர்களே மூலமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அவர் இப்பாடப்பொருளின் மீது நுண்ணார்வம் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பது தெளிவு.
நபிகளாரின் மரணத்திற்குப் பிறகு சமுதாயத்தின் சமய, அரசியல் தலைமைத்துவம் முழுவதையும் நபித்தோழர்கள் ஏற்றுக் கொண்டார்கள் எனும் உண்மையே மறந்து போகுமளவு, இஸ்லாத்தின் உருவாக்க காலப்பிரிவு நெடுக முஹம்மது நபியின் பிரசன்னம் வலுவாக இருந்திருக்கிறது. நபிகளாரை ஒருபோதும் அறிந்திராத புதிய தலைமுறை முஸ்லிம்களுக்கும் புதிதாக மார்க்கத்தை தழுவியிருந்தவர்களுக்கும் இஸ்லாத்தை போதிக்கும் பொறுப்பினை மக்காவில் இப்னு அப்பாஸ், கூஃபாவில் இப்னு மஸ்ஊது, இஸ்ஃபஹானில் சல்மான் அல்-ஃபாரிஸீ போன்ற நபித்தோழர்கள் ஏற்றிருந்தார்கள். நபித்தோழர்களிடமிருந்து இஸ்லாத்தைக் கற்று, அதன் மூலம் நபிகளாரின் அதிகாரம் எனும் மேலாடையை மரபுரிமையாகப் பெற்ற தலைமுறையினர் ‘பின்வந்தோர்’ (அத்-தாபிஊன்) என்று அறியப்பட்டார்கள். நபித்தோழர்களை போலவே இவர்களும் நபிகளாரின் வார்த்தைகள், செயல்கள், மற்றும் சட்டத் தீர்ப்புகள் குறித்து தமது ஆசிரியர்கள் தம்மிடம் பகிர்ந்த நினைவுகூரல்களை எழுத்தில் பதிவுசெய்து கொண்டார்கள். தாபியீன்கள் நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை பெற்று சுயமாக சஹீஃபாக்களை தொகுத்தது மட்டுமின்றி, நபித்தோழர்களின் சஹீஃபாக்களையும் அடுத்த தலைமுறையிடம் கையளித்தார்கள்.
ஹதீஸ் திரட்டுகளில் காணப்படும் சில ஆரம்பகால இஸ்னாதுகள், ஆசிரியரிடமிருந்து மாணவருக்கோ அல்லது தந்தையிடமிருந்து மகனுக்கோ கையளிக்கப்பட்ட சஹீஃபாக்களில் இருந்து பதிவாகியுள்ளது தெரிகிறது. இவ்வாறு நாம் அபூ ஹுறைறாவிடமிருந்து அப்துர் றஹ்மானுக்கும், அவரிடமிருந்து அவருடைய மகன் அல்-அஃலாவுக்கும் செல்லும் ‘சஹீஃபா-இஸ்னாதுகளை’ நிறைய காண முடிகின்றது. இவ்வகையில், தாபியீ அபூ அல்-ஸுபைர் அல்-மக்கீ அவர்கள் நபித்தோழர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்விடமிருந்து ஓர் சஹீஃபாவையும், மிகப் பிரபலமான தாபியீ அல்-ஹசன் அல்-பஸரீ (இ. 110/728) அவர்கள் நபித்தோழர் சமுறா இப்னு ஜுன்துபிடமிருந்து ஓர் சஹீஃபாவையும் பெற்றுள்ளார்கள். இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருமொரு சஹீஃபாவுக்கு உதாரணமாக, தாபியீ ஹம்மாம் இப்னு முனப்பிஹின் சஹீஃபாவைச் சொல்லலாம். அது அபூ ஹுறைறாவின் வழியாக அறிவிக்கப்படும் 138 நபிமொழிகளைக் கொண்டுள்ளது.9
எனினும், தாபியீன்கள் நபித்தோழர்களிடமிருந்து செவியேற்ற மிகப் பெரும்பான்மை ஹதீஸ்கள் எழுத்து வடிவில் இருக்கவில்லை. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டு அறபுச் சமூகம் மிகவும் வளர்ச்சி பெற்றவொரு வாய்மொழிக் கவிதை மரபினை தன்னில் கொண்டிருந்தது என்பதுடன், நபித்தோழர்கள் பெரும்பாலும் நபியுடனான தமது நினைவுகளை வாய்மொழி வடிவிலேயே நினைவுகூர்ந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் எழுதிவைத்துக் கொள்வதற்கு பழக்கப்பட்டுள்ள இன்றைய நவீன வாசகர்களாலும் கூட இதனை ஓரளவு புரிந்துகொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். நம்முடைய ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் பற்றி நாம் நினைவுகூர்கிறோம். அந்நினைவுகளை நாம் வெகு அரிதாக மட்டுமே எழுத்தில் பதிவு செய்கிறோம், அல்லவா?! அதே போன்றுதான், தம்முடன் வாழ்ந்து தம்முடைய நினைவுகளில் பசுமையாகப் பதிந்து போயிருந்த நபிகளாரின் வாக்குகளையும் செயல்களையும் நபித்தோழர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
நபியவர்கள் சராசரியானவொரு மனிதரில்லை என்பதிலும், அவரது வாழ்நாளிலேயே பல நபித்தோழர்கள் அவரின் மரபினை எழுத்தில் பதிவுசெய்ய முயன்றுள்ளார்கள் என்பதிலும் ஐயமில்லை. எனினும், திருக்குர்ஆனில் அருளப்பட்ட இறைவனின் வார்த்தைகளோடு குழப்பிக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று அஞ்சி, தனது வார்த்தைகளை பதிவுசெய்ய வேண்டாமென்று நபியவர்கள் தனது பின்பற்றாளர்களை தடுத்திருந்ததாக ஏராளமான ஹதீஸ்கள் வந்திருக்கின்றன. எண்ணற்ற எழுத்தர்களை கொண்டு திருக்குர்ஆனை எழுத்து வடிவில் பதிவுசெய்யும் செயல்முறை நபிகளாரின் காலம் முழுக்க நடந்து கொண்டிருந்தது. எனவே தனிப்பட்ட குறிப்பேடுகள், திரட்டுகள் எனும் வடிவங்களில் நபிகளாரின் போதனைகள் பதிவு செய்யப்படும் பட்சத்தில், எளிதாக அவை இறைவேதத்துடன் கலந்துவிடுவதற்கு வாய்ப்பிருந்தது. இவ்வகையில், நபித்தோழர் அபூ சஈது அல்-ஃகுத்ரீ இவ்வாறு கூறுவதாக பிரபல ஹதீஸ் ஒன்றில் காண்கிறோம்: தொழுகையில் கூறப்படும் ஏகத்துவ பிரகடனத்தையும் (அத்-தஷஹ்ஹுத்) திருக்குர்ஆனையும் தவிர நாங்கள் வேறெதையும் எழுதிக் கொள்வோராக இருக்கவில்லை.” தன்னுடைய வார்த்தைகள் எதையும் எழுத்து வடிவில் பதிவுசெய்வதை நபிகளார் தடை செய்திருந்ததாக நபித்தோழர் ஸைது இப்னு தாபித் அவர்கள் மற்றொரு ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.10
எனினும், சட்டம் வகுப்பவராகவும் அரசியல் தலைவராகவும் இருந்த நபியவர்களைப் போன்ற ஒருவர் எழுத்துபூர்வ ஆவணம் எதையும் அனுமதிக்காமல் இருந்திருப்பார் என்று எண்ணுவது முற்றிலும் யதார்த்தத்திற்கு முரணானது. முஸ்லிம்கள் நபிகளாரிடமிருந்து செவியுற்ற போதனைகளை ஏதோவொரு வகையில் எழுதி வைக்காமல், துல்லியமான முறையில் அவற்றை பாதுகாத்திருக்க முடிந்திருக்காது என்பதும் தெளிவு. ஹதீஸ்களை எழுதிக் கொள்வதை தடைசெய்யும் அறிவிப்புகளுக்கு இணையாக, அவ்வாறு செய்வதை ஆர்வமூட்டும் அறிவிப்புகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் பின்வருமாறு கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது: எழுதி வைத்துக் கொள்ளாத எவருடைய அறிவையும் நாங்கள் அறிவு என்றே கருதவில்லை.”11 மேலும், தானொரு சொற்பொழிவில் போதித்தவற்றை வெளியூரிலிருந்து மதீனாவுக்கு வந்திருந்த புதிய முஸ்லிம்கள் எழுதிக் கொள்வதை நபிகளார் அனுமதித்ததாகவும் நாம் ஹதீஸ்களில் காண்கிறோம்.12
ஹதீஸ்களை எழுதுவது தொடர்பாக வந்துள்ள முரண்பட்ட சான்றாதாரங்கள், முஸ்லிம் அறிஞர்களுக்கும் மேற்குலக அறிஞர்களுக்கும் மிகப்பெரிய சிக்கலாக இருந்து வந்துள்ளது. ஹதீஸ்களை எழுதிக் கொள்வதை கண்டிக்கும் விதமாக வந்துள்ள அறிவிப்புகள் யாவற்றையும் நபித்துவத்தின் ஆரம்ப காலப்பிரிவிலிருந்து வந்தவை என்று எடுத்துக் கொள்வதன் மூலம், சான்றுகளுக்கு நடுவே இணக்கம் காண்பதற்கு சில முஸ்லிம் அறிஞர்கள் முயன்றுள்ளனர். உதாரணத்திற்கு, டமஸ்கஸை சேர்ந்த அந்-நவவி (இ. 676/1277) போன்றோரை குறிப்பிடலாம். அந்த ஆரம்ப காலப்பிரிவில், திருக்குர்ஆனுடைய வார்த்தைகளோடு தன்னுடைய வார்த்தைகள் தவறுதலாக குழப்பிக் கொள்ளப்படக் கூடும் என்று நபிகளார் அஞ்சியிருக்கலாம். முஸ்லிம்களின் மனங்களில் திருக்குர்ஆன் நன்கு நிலைபெற்றுவிட்ட பிறகு, நபிகளாரின் போதனைகளை எழுதிக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் வாதம். மேலும், ஒரு அரசின் தலைவர் என்றளவில் நபிகளார் ஆற்றிய பாத்திரமும் சில எழுத்துபூர்வ ஆவணங்களை அவசியத் தேவையாக்கியது.
மறுபுறம், ஹதீஸ்களை எழுதுவதற்கும் அதனை தடை செய்துள்ளதற்கும் நடுவே காணப்படும் முரண்பாடானது இஸ்லாமிய ஹதீஸ் மரபுக்கு உள்ளாக இடம்பெற்றிருக்கும் ஒன்றோடொன்று மோதும் இரு விழுமியங்களை பிரதிநிதித்துவம் செய்வதாக மேற்கத்தேய அறிஞர்கள் பார்க்கின்றனர். இஸ்லாத்தைப் பொறுத்தவரை, சமய ஞானம் என்பது அடிப்படையில் வாய்மொழி இயல்பு கொண்டது; எழுத்து வடிவ நூல் என்பது அதன் உள்ளடக்கத்தை வாய்மொழியில் ஓதுவதற்கான ஒரு கையேடு மட்டுமே. கருத்துரு அளவில் சொல்வதென்றால், நூலின் எழுத்து வடிவ பக்கங்கள் செத்த சடலங்களாக இருக்கின்றன; சத்தமான குரலெடுத்து ஓதும்போதே அவை உயிர் பெற்றெழுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எழுத்து வடிவ ஹதீஸ் திரட்டுகள் பிரபலமடைந்து சுமார் இரு நூற்றாண்டுகள் கடந்துவிட்டிருந்த கி.பி. 1000-ம் ஆண்டு வாக்கில் கூட, ஒருவர் ஹதீஸ்களை எழுதலாமா கூடாதா என்பது தொடர்பாக காலாவதியாகி இருக்க வேண்டிய ஒரு சர்ச்சையை உயிருடன் வைத்திருந்ததற்கான முழுப் பெருமையும் ‘வாய்மொழி அறிவின் முக்கியத்துவத்தையே’ சாரும்!
எனினும் ஆரம்ப இஸ்லாமிய காலப்பிரிவைப் பொறுத்தவரை, வாய்மொழிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வெகு இயல்பானது. அறபு அரிச்சுவடி அப்போது பூர்விகநிலையிலேயே இருந்தது. பல எழுத்துகள் ஒன்றுபோல எழுதப்பட்டன. இடப்பொருத்தத்தை கொண்டு மட்டுமே ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்தி அறிய முடியுமாக இருந்தது. இன்றும்கூட அறபு எழுத்துமுறை ஒலிக்குறிகளைச் சுட்டுவதில்லை. மெய்யெழுத்துகளைக் கொண்டு மட்டும் (வெகுசில உயிரெழுத்துகளுடன்) எழுதப்படும் ஒரு ஆங்கில வாசகத்தை கற்பனை செய்துகொள்வோம்: ‘I wnt t ht the bll’. இப்போது அந்த வாசகம் ‘I want to hit the ball’, ‘I want to hit the bell’, ‘I went to hit the ball’, etc. போன்றவற்றுள் எதனைக் குறிக்கிறது? வாசகத்தின் கருத்துச் சூழல் நமக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே நம்மால் அதனைச் சரியாக வாசிக்க முடியும். அதே போன்றுதான் அறபு எழுத்துமுறையைப் பொறுத்தவரை, எழுதப்பட்டிருக்கும் பிரதியை சரியாகப் புரிந்துகொள்வதற்கு அதன் கருத்துச் சூழலும், அதன் மூலம் மனம்கொள்ளப்பட்ட பொருளும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நபித்தோழர்கள் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த தலைமுறையினரின் சஹீஃபாக்கள் நினைவகத் துணைக்கருவிகளாக (memory-aids) செயல்படுகின்றன. எழுத்தில் பதிவுசெய்த ஹதீஸ் சுவடிகளை வாசிக்கும்போது எழுதியவருக்கு அது தனது நினைவோடையின் வழியாக ஒரு மெல்லோட்டம் செல்வது போல் அமைகிறது.
இந்த சஹீஃபாக்களை அப்படியே கையிலெடுத்து வாசித்துவிட முடியாது. நபிகளாரின் வார்த்தைகளை மிகத் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டுமெனில், சஹீஃபாவை அறிவிப்பவர் அதனை வாசிக்கும் நிலையில் அதனைச் செவிமடுக்க வேண்டும். குறித்தவொரு அறிவிப்பாளர் ஹதீஸ்களை ஒரு ஆசிரியர் வாசிக்கச் செவியுறவில்லை என்று சந்தேகிப்பதற்கு காரணமேதும் இருந்தால், அந்தச் செய்திகளின் நம்பகத்தன்மையில் தீவிரக் குறைபாடு இருப்பதாகவே ஹதீஸ் அறிவிப்பாளர்கள் கருதினார்கள். அபூ அஸ்-ஸுபைர் அல்-மக்கீ அவர்கள் நபித்தோழர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்வின் சஹீஃபாவை ஜாபிர் வாசிக்க பகுதியளவு மட்டுமே செவியுற்றிருந்தார். இது சில முஸ்லிம் ஹதீஸ் விமர்சகர்களின் பார்வையில் அவருடைய அறிவிப்புகளின் நம்பகத்தன்மையை குறைத்திருக்கிறது. அதா இப்னு முஸ்லிம் அல்-கஃப்பாஃப் போன்ற சில ஆரம்பகால ஹதீஸ் அறிவிப்பாளர்கள் தம்முடைய மரணத்திற்குப் பிறகு தமது ஹதீஸ் நூல்கள் வாசிக்கப்பட்டு பிழையாகப் புரிந்துகொள்ளப்படக் கூடும் என்பதையிட்டு கவலைக்குள்ளாகி அவற்றை எரிக்கவோ புதைக்கவோ செய்துவிட்டார்கள்.14
நடைமுறையிலும் கலாச்சாரம் சார்ந்தும் இவ்வாறு வாய்வழிப் பரவலானது அதிக முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தது என்பதற்காக, எழுத்துபூர்வ ஆவணங்களின் நம்பகத்தன்மையை முஸ்லிம்கள் உதாசீனம் செய்தனர் என்று பொருளில்லை என்பது மட்டும் நிச்சயம். ஒரு அறிஞர் ஹதீஸை வாய்மொழியாக பரப்பும் போதும் கூட தன்னுடைய புத்தகத்திலிருந்து அதனை வாசிப்பதே சிறப்பு. இதன் காரணமாகவே பிரபல ஹதீஸ் அறிஞர் இப்னு மஈன் (இ. 233/848) துல்லியமான ஞாபக சக்திகொண்ட ஒரு அறிவிப்பாளரை விட துல்லியமாக எழுதித் தொகுக்கப்பட்ட புத்தகத்தைக் கொண்ட ஒரு அறிவிப்பாளருக்கு முன்னுரிமை கொடுக்கிறார்.15 கி.பி. எழுநூறுகளிலெல்லாம் ஹதீஸ்களை எழுத்தில் பதிவது மிகவும் வழமையாகிவிட்டது. வீரியமான ஹதீஸ் அறிவிப்பாளரும் ‘பின்வந்த தலைமுறையினருள்’ ஒருவருமான முஹம்மது இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி, ஹதீஸ்களைத் துல்லியமாக எடுத்துரைப்பதற்கு அவற்றை எழுத்தில் பதிவது அவசியம் என்று கருதினார்.
கி.பி. 661-ல் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய உமையா வம்சத்தினர் அஸ்-ஸுஹ்ரி போன்ற ஹதீஸ் சேகரிப்பாளர்களை ஹதீஸ்களைத் திரட்டித் தொகுக்கும்படி ஆர்வமூட்டினார்கள். உமையா ஆளுநர் அப்துல் அஸீஸ் இப்னு மர்வான், ‘பின்வந்த தலைமுறையைச் சேர்ந்த’ கதீர் இப்னு முர்ராவிடம் நபித்தோழர்களிடமிருந்து அவர் செவியுற்றிருந்த ஹதீஸ்கள் அனைத்தின் ஆவணங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டார்.16 அப்துல் அஸீஸின் மகனாரும் உமையா கலீஃபாவுமான உமர் இப்னு அப்துல் அஸீஸ், நிர்வாகம் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான ஹதீஸ்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும்படி மதீனாவின் ஆளுநருக்கு ஆணையிட்டார்.17
ஆரம்பகாலத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டு திரட்டப்பட்ட சமயத்தில் மற்றொரு முக்கியமான கேள்வி எழுந்தது. ஒருவர் ஹதீஸை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஒப்பிக்க வேண்டுமா, அல்லது அதனுடைய பொதுவான அர்த்தத்தை தெரிவித்தால் போதுமா என்பதே அக்கேள்வி. ஹதீஸ்களின் வார்த்தைகளை கொஞ்சமும் பிசகாமல் அப்படியே ஆவணப்படுத்துவது சாத்தியமில்லை என்பதையும், அவற்றின் பொதுவான அர்த்தத்தை அறிவிப்பதென்பது (அர்-ரிவாயா பில் மஅனா) தவிர்க்க முடியாதவொரு யதார்த்தம் என்பதையும் ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் புரிந்து வைத்திருந்தனர். மிகப் பரவலாக அறியப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்த திருக்குர்ஆன் வசனங்களின் மிகச் சரியான வார்த்தைகள் விசயத்திலேயே கூட சிலபோது ஆரம்பகால முஸ்லிம்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று நபித்தோழர் வாதிலா இப்னு அஸ்கா ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியென்றால் நபியவர்கள் ஒரேயொருமுறை கூறிய ஒரு கூற்றின் விசயத்தில் மட்டும் அவ்வாறு நடக்காது என எப்படி ஒருவர் எதிர்பார்க்க முடியும் என்று அவர் வினவுகிறார். ‘வார்த்தைக்கு வார்த்தை பிசகாமல் அறிவிக்க முடிந்த ஹதீஸ்களை மட்டுமே நாங்கள் உங்களுக்கு அறிவிப்பதென்றால் வெறும் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே அறிவித்திருக்க முடியும். மாறாக, ஒரு ஹதீஸ் எதனை அனுமதிக்கிறது அல்லது தடைசெய்கிறது என்பதை எங்களுடைய அறிவிப்பு பொதுவான வகையில் தெரிவிக்கின்றது என்றாலே அதில் பிரச்சினையொன்றும் இல்லை’ என்று அல்-ஹசன் அல்-பசரீ சொன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தாம் எவ்வாறு ஹதீஸ்களை செவியுற்றார்களோ அவற்றை வார்த்தை பிசகாமல் அப்படியே அறிவிக்க வேண்டுமென சில ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் வலியுறுத்தினார்கள். தான் செவியுற்ற ஹதீஸ்களில் இடம்பெற்றிருந்த இலக்கணப் பிழைகளைக் கூட இப்னு சீரீன் (இ. 110/728) அப்படியே ஒப்பித்தார்.18 இறுதியாக, ஒரு ஹதீஸின் அர்த்தத்தை முறையாகப் புரிந்து கொள்ளுமளவிற்கு ஒருவர் கற்றவராக இருக்கும் பட்சத்தில் அவர் அதன் சாராம்சத்தை எடுத்துரைக்கலாம் என்பதாக முஸ்லிம் அறிஞர்கள் ஒரு சமாதானத்திற்கு வந்துசேர்ந்தனர்.19