பெரியார் ஈ.வெ.ராவும் இஸ்லாமும்
இந்துத்துவச் சொல்லாடல்களுக்கும் நடைமுறைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் என பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு இணையாக இந்திய வரலாற்றில் யாரையாவது சொல்ல முடியுமானால் அது புத்தரும் அம்பேத்கரும் மட்டுமே. இவர்களில் புத்தரையும் அம்பேத்கரையும் கூட இன்று இந்துத்துவ சக்திகள் எதையாவது சொல்லி தம்முள் வாங்குவதற்குச் சதி செய்து கொண்டிருக்கும் சூழலில் இறுதிவரை இந்துத்துவ சக்திகளால் தொடமுடியாத நெருப்புத்துண்டமாக விளங்கக்கூடியவராக பெரியார் ஒருவரே உள்ளார். இந்நிலையில் இன்று இந்துத்துவ எதிர்ப்பில் அக்கறையற்ற சக்திகள் இன்னொரு வகையில் பெரியார் மீது பழி தீர்க்க முயற்சிக்கின்றனர். பெரியார் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தார் என்ற பொய்யான அவதூறைக் கட்டவிழ்த்து விடுவதுதான் அது. ஆனால் பெரியாரின் சுமார் ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்வையும் அவரது பேச்சுக்களையும் கூர்ந்து கவனிப்போருக்கு இப்படிச் சொல்வது எத்தனை பெரிய அபத்தம் என்பது விளங்கும். இது தொடர்பான அவரது சில கொள்கைகளையும் செயற்பாடுகளையும் மட்டும் பார்ப்போம்.
பெரியாரது அரசியல் வாழ்வின் தொடக்கப்புள்ளியாக வைக்கம் போராட்டத்தைக் கருதலாம். இது குறித்து பெரியாரே எழுதியுள்ள கட்டுரை அவரது சிந்தனைத் தொகுப்புகளில் உள்ளது. ஈழவர், புலையர் முதலான தீண்டத்தகாத மற்றும் சூத்திர சமூகத்தினர் பொதுச்சாலையில் நடக்கக்கூடாது என்பதை எதிர்த்து அப்போராட்டம் நடைபெற்றது(1925). போராட்டத்தின் உச்சகட்டத்தில் திருவிதாங்கூர் ராணி காந்தியாரோடு பேச்சு நடத்தினார். சாலையை திறந்துவிடத் தயார் எனவும் அதற்காக கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சொல்லக்கூடாது என்றும் ராணி விதித்த நிபந்தனையை காந்தி ஏற்றுக்கொள்ள போராட்டம் முடிவுக்கு வருகிறது. பெரியார் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கோயிலுக்குள் நுழைவது என்கிற பிரச்சாரத்தைத் தொடர்கிறார். பெரியார் சொல்கிறார்,
“அடுத்து எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக சாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்துடன் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. இது செல்வாக்குக்குட்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்வது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி ஐயப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு போய்ச் சேருவது என்பதைத் திருத்திப் போட வேண்டும் என்று சொல்லி ஏக மனதாக நிறைவேற்ற செய்தார். இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஐம்பது பேர்கள் முஸ்லிம்களாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள், இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.”(விடுதலை 9.1.1959)
விசயம் அத்தோடு நிற்கவில்லை. இஸ்லாமாக மாறிய புலையர்களுக்கும் நாயர்களுக்கும் பலமான மோதல் ஏற்பட்டது. ஒருவர் செத்தும் போனார். இன்னும் பலர் இஸ்லாமாவது என்ற நிலை ஏற்பட்டவுடன் அன்றைய திவான் சி.பி.ராமசாமி ஐயரின் ஆலோசனையின்படி கோயில் கதவுகள் திறக்கப்பட்டன.
தீண்டத்தகாதவர்களின் விடுதலைக்கான வழிகளில் முதன்மையானது மதமாற்றமே, அதிலும் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதே என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். எங்காவது தீண்டத்தகாதவர்களுக்கு நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மதமாற்றம் என்கிற அச்சுறுத்தலின் விளைவாகத்தான் நடந்துள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைதான் என்று சொன்னதோடு நிற்காமல்,“இந்த வியாதி மிகப் பெரியது. இது புற்று தொழுநோய் போன்றது. வெகு நாளைய நோய்” என்றும், இந்த நோயிலிருந்து விடுதலை பெற ஒரே வழி இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான் என்றும் திரும்பத் திரும்பச் சொன்னார். வெளியேறுவது என்று சொன்னதோடும் நிறுத்திவிடவில்லை.
“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான்! இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)
தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மத மாற்றத்தை முன் மொழிந்த இன்னொரு பெருந்தலைவரான அம்பேத்கரின் முயற்சிக்கு அகில இந்திய அளவில் பெருந்துணையாக நின்றவரும் பெரியாரே. தொடக்கத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறுவது என்கிற நிலைப்பாட்டையும் அம்பேத்கர் சிந்தித்தார். 1930ல் முஸ்லிமாக மாறுவது என அம்பேத்கர் சொன்னபோது,
“எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதை கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள் அப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், நீங்கள் ஒண்டியாகப் போகக்கூடாது. குறைந்தது ஒரு லட்சம் பேரோடு மதம் மாற வேண்டும். அப்போது தான் முஸ்லிம் மதிப்பான்… ஒரு லட்சம் பேரோடு தாங்கள் அங்கு போகும் போது நானும் ஒரு பத்து இருபதாயிரும் பேர்கள் தருகிறேன் என்பதாகத் தந்தி கொடுத்தேன்.” (ஆனைமுத்து தொகுப்பு, பக். 1033)
இப்படியாக அவரை இஸ்லாமுக்கு மாற ஊக்குவித்தவர் பெரியார். அம்பேத்கர் இறுதியில் பௌத்தத்திற்கு மாறியபோது கூட இஸ்லாமுக்கு மாறுவதே சரியாக இருக்கும் என்ற கருத்து பெரியாருக்கு இருந்தது. இது குறித்து,
“அம்பேத்கர் பௌத்தத்தில் சேருகிறேன் என்று சொன்னவுடன் எப்போதும் போல பலர் எதிர்த்தார்கள். ஆனாலும் இஸ்லாம் ஆவது என்றால் பயப்படுகிற அளவுக்கு பௌத்தர் ஆகிவிடுவது என்று சொல்லுவதற்கு இந்து மதத்தார்கள் (பார்ப்பனர்கள்) பயப்படமாட்டார்கள். ஏனென்றால் பௌத்தத்தை இந்து மதத்தோடு ஏறக்குறைய கலக்க வைத்து விட்டார்கள்.”
என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து (சென்னை சொற்பொழிவு 13.5.1952) இது விளங்கும்.
ஏதோ இஸ்லாமுக்கு மதம் மாறுவது என்கிற அளவோடு பெரியாரின் முஸ்லிம் ஆதரவு நின்று விடவில்லை. முஸ்லிம் அரசியலுக்கும் அவர் ஆதரவாக நின்றார். விடுதலைக்கு முந்தைய முஸ்லிம் அரசியலில் இரண்டு கூறுகள் முக்கியமானவை:
- முஸ்லிம்களுக்கான தனி நாடு – பாகிஸ்தான் பிரிவு
- முஸ்லிம்களுக்கு தனி வகுப்புவாரி ஒதுக்கீடு.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் பெரியார் ஆதரித்தார். முஸ்லிம் இந்தியா என்ற கோரிக்கை பற்றி பேச வருமபோது,
“ஜனாப் ஜின்னா இந்தப் பிரிவினைக்கு கூறும் காரணங்கள் மறுக்க முடியாதன. அவரது கோரிக்கை நியாயமானதே. காந்தியார் சதா காலமும் பச்சையாகவே தாம் விரும்பும் சுயராஜ்ஜியம் ராம ராஜ்ஜியம் தானென்றும், தமது வாழ்க்கையின் இலட்சியமே இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்வது தானென்றும் கூறிக் கொண்டிருக்க, தோழர் சாவர்கார் போன்ற இந்து மகாசபைத் தலைவர்கள் ‘இந்துஸ்தானம் இந்துக்களுக்கே’ என்ற போர் முழக்கம் செய்து கொண்டுமிருக்கக் கண்ட பிறகும் முஸ்லிம்கள் கைகட்டி வாய்பொத்தி இருப்பார்கள் என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்?
இந்து முஸ்லிம் பிரச்சனை தீர்க்கப்பட முடியாதோ என்று திகைக்குமளவில் இருக்கிறது. இதனைத் தீர்த்துக் கொள்ள ஜனாப் ஜின்னாவின் திட்டமே அறிவு ததும்புவது. நான் ஜனாப் ஜின்னாவின் கோரிக்கையை ஆதரிப்பதோடு,மற்றொரு முக்கியமான அம்சத்தையும் வற்புறுத்த விரும்புகிறேன். முஸ்லிம்கள் ‘முஸ்லிம் நாடு’ என இந்தியாவில் தனி நாடு பிரித்துக் கொள்ள முடியும். ஆனால் இந்துக்கள் முடியாது. ஏனெனில் இந்துக்கள் என்று கூறப்படும் தொகுப்பில் பலப்பல வர்க்கத்தார் உள்ளனர்”.
எனப் பெரியார் இக்கோரிக்கையை முழுக்க முழுக்க ஆதரித்தார். (குடியரசு அறிக்கை-31.3.1940).
இந்தியாவுக்கு ‘இந்துஸ்தானம்’ எனப்பெயர் வைப்பதைக் காட்டிலும், ‘திராவிடக் கொள்கையை உடைய பாகிஸ்தான்’ என்று பெயர் வைக்கலாம் எனக் கூட அவர் ஒரு முறை குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கு உரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது இன்றளவும் நியாயமான ஒரு கோரிக்கை. பெரியார் அன்று சொன்னார்:
“இந்திய அரசாங்கத்தில், இந்திய ஜனங்களில் நான்கில் ஒரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய முகம்மதிய சமூகத்தாரர்களுக்குப் பங்கு உண்டா இல்லையா?
அவர்கள் ஏழரைக் கோடிப் பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப்போக முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் இராஜ்ய விஷயத்திலும் மத விஷயத்திலும் நமக்குச் சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும்? வகுப்பு பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்குச் சம உரிமைகிடைத்துவிடுமா?” (குடிஅரசு, தலையங்கம் 14.2.1926)
தேர்தலில் மட்டுமின்றி அரசுப் பணிகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிக்கப்படவேண்டும் என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.
முஸ்லிம்களை ‘அந்நியர்களாக’ முத்திரை குத்தும் சதிக்கு எதிராக அவர்களை திராவிடர்கள் என அணைத்துக் கொள்ளும் போக்கையும் பெரியாரிடம் காணமுடியும். பெரியாரை பொறுத்தமட்டில் பார்ப்பனர்களே அந்நியர்கள் (பார்க்க: ஆனைமுத்து, தொகுப்பு, பக்.32. 55.)
இஸ்லாம் மீது பெரியாருக்கு இருந்த பற்றுக்கான காரணங்களையும் அவர் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். சுருக்கம் கருதி மேற்கோள்களைத் தவிர்த்து அவர் கூறுகிற காரணங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.
- இஸ்லாம் மதத்தில் பல கடவுள் வணக்கம் கிடையாது. மூட நம்பிக்கைகள் கிடையாது. விக்கிர ஆராதனைகள் கிடையாது (ஆனைமுத்து தொகுப்பு பக்.301,302).
- சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த ஒரே மதமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது. தீண்டத்தகாதவர் என்றோ வேதத்தை படிக்கக் கூடாதவர் என்றோ ஆலயத்திற்குள் அல்லது பொது இடங்களுக்குள் நுழைய முடியாதவர் என்றோ இங்கு யாரும் தடுக்கப்படுவது இல்லை (ஆனைமுத்து தொகுப்பு பக்.32.33).
இஸ்லாம் என்றால் ஏதேனும் ‘லுங்கி’ கட்டிக் கொள்வது அல்லது தாடி வைத்துக் கொள்வது என்று நினைக்க வேண்டாம். “இஸ்லாம் என்பது சாந்தி, பணிவு, பக்தி என்ற பொருள்படும் அரபுச் சொல். இஸ்லாம் என்பது சகோதரத்தன்மை என்பது. இவ்வளவு தான்” என்று சொன்னபெரியார்,
“நம்மிலும் பல பெரியார்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது போலெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவைகள் என்றும் ஏட்டளவிலே இருக்கின்றனவே தவிர நடப்பில் இல்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயத்திலே நடப்பிலே ஒரே ஆண்டவன் வழிபாடும் மக்களுக்குள் பிறவியில் பேதமற்ற நிலைமையும் இருந்து வருகின்றன”
என்பதைக் சுட்டிக் காட்டினார்.
நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரே முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல் தலைவர் பெரியார் ஒருவராகத்தான் இருக்கமுடியும். ‘நான்தான் கடைசி நபி’ என நாயகம் சொன்னதை பெரியார் விதந்தோதுகிறார். “இன்றைய வரையிலே அவருக்குப்பின்னால் இந்தத் துறைகளில் அவர் சொன்ன கொள்கை கருத்துக்களை விட மேலானதாகச் சொல்லுவதற்கு எவரும் தோன்றவில்லை” என முத்தாய்ப்பு வைக்கிறார் (சென்னை சொற்பொழிவு, 20.12.1953).
“திரு. முகம்மது நபியைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும், மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் கூடி கருத்தரித்து பிறந்தவர் என்றும் கருதித்தான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அனேகத்தை நான் புகழ்கிறேன். அதற்காகவே அவரையும் நான் பாராட்டுகிறேன்.அப்படிச் சொல்லப் படுபவைகளே அந்த மார்க்கத்திற்கு ஒரு பெருமை என்றும் நினைக்கிறேன்…. ஆனால் மற்ற மதத்துக்காரர்களோ தங்கள் மதத் தலைவரை ஒரு மனிதர் என்றலே கோபித்துக் கொள்கிறார்கள். கழுதை, நாய், குதிரை இவற்றினுடைய வயிற்றிலிருந்து பிறந்தவர் என்றாலும் ஏற்றுக் கொள்கிறார்கள்”
என்றெல்லாம் சொல்லிச் செல்வது குறிப்பிடத்தக்கது (சாத்தான்குளம், 28.7.1931).
அப்படியானால் இஸ்லாமையும் முஸ்லிம் அரசியலையும் பெரியார் எங்குமே விமர்சிக்கவில்லையா? விமர்சிக்கிறார். அந்த விமர்சனங்களின் அடிப்படையில்தான் இன்று சில விஷமிகள் பெரியாரை இஸ்லாமுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர். இந்தியாவிற்கு வந்த இஸ்லாமில் கலந்து போன சில மூட நம்பிக்கைகளை, இந்து பழக்க வழக்கங்களையே அவர் கண்டிக்கிறார்.
“ஆனால் நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமன கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கிறமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள்” (சாத்தான்குளம், 28.7.1931).
என்று சொல்கிற பெரியார் அத்தகைய மூட நம்பிக்கைகளாகச் சமாதி வணக்கங்கள், பஞ்சா அடித்தல், சந்தனக்கூடு, தீமிதி, கூண்டு உற்சவம், கொடிவணக்கம், அல்லாசாமி பண்டிகை முதலியவற்றைப் பட்டியலிடுகிறார். இத்தகைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமியருக்குரியவையல்ல என இன்று பல இஸ்லாமிய மத அறிஞர்களே குறிப்பிடுவது இங்கு சிந்திக்கத்தக்கது. இறுதியாக,
“இவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படிச் சொல்ல இயலும்? கோபிப்பதில் பயனில்லை. மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் மேலானது என்பது என் அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிது கூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் முரண்பட்டவன்” (களக்காடு, 23.12.1950).
என்கிறார். பகுத்தறிவுக்குட்பட்ட நவீன மதமாக இஸ்லாம் திகழ்வதில் தவறேதும் வந்துவிடலாகாது என்கிற அக்கறையோடு இந்த விமர்சனங்கள் அமைந்துள்ளன என்பது முக்கியம்.
அதே போல் முஸ்லிம் அரசியலை பெரியார் விமர்சிப்பது என்பது கூட 1948க்குப் பின்புதான். பிரிவினைக்குப் பிறகு இங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆதரவு நிலை எடுத்த போதும், 1962க்குப் பின்பு ராஜாஜி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த போதும்தான் பெரியார் முஸ்லிம் அரசியலை விமர்சித்தார். பெரியார் வெறும் சமூக சீர்த்திருத்தவாதியல்ல. ஐம்பது ஆண்டு காலம் இந்த மண்ணில் தீவிரமாக அரசியல் போராட்டம் நடத்திய போராளி. பார்ப்பன எதிர்ப்பு என்பது அவரது அரசியலின் ஆணிவேராக இருந்தது. அதற்கு முஸ்லிம் மற்றும் தலித் அரசியல் துணையாக இருக்கும் என நம்பினார். அப்படி இல்லை என அவர் கருதியபோது அவரது அரசியல் நோக்கிலிருந்து அந்தப்போக்குகளை விமர்சித்தார். எனினும் அதற்காக இதுவரை தாம் முன்வைத்த அவரது கருத்துகள் எதையும் அவர் மாற்றிக் கொண்டதில்லை. கடைசி வரை இஸ்லாமிய ஆதரவிலேயே அவர் நின்றார்.
“நாத்திகம் எனது முக்கிய கொள்கை அல்ல. இஸ்லாமியர்கள் சுயமரியாதை இயக்கத்தில் சேருங்கள்” எனப் பெரியார் அறைகூவல் விடுத்ததையும் ஜின்னா அவர்கள் தென்னக முஸ்லிம்கள் சுயமரியாதை இயக்கத்திலேயே இருக்கலாம் எனச் சொன்னதையும் நாம் மறந்து விடலாகாது.
இஸ்லாமையும், முஸ்லிம்களையும், முஸ்லிம் அரசியலையும் இத்தனை அப்பட்டமாக ஆதரித்த ஒரு முஸ்லிம் அல்லாத தலைவரை இந்திய அரசியலில் பார்க்க இயலாது. அதனால்தான் இந்துத்துவம் பெரியாரை மட்டும் அண்ட முடியாமல் விலகி நிற்கிறது.
குறிப்புகள்
1.அப்படியானால் ஏன் பெரியார் மதம் மாறவில்லை எனக்கேள்வி எழுவது இயற்கை. அம்பேத்கரிடம் இதற்கான பதிலைப் பெரியார் கூறியுள்ளார்.
“அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி நாம் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் என்ன பலன் ஏற்பட முடியும்? வாருங்கள். நாம் இரண்டு பேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம் என்றார். நான் சொன்னேன். ’ரொம்ப சரி, இப்போது முதலில் நீங்கள் சேருங்கள், நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றி தீர்மானமாகப் பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்தியக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமர் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் நான் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக் கூடாது’ என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது” (டெல்லி பகார் கஞ்ச், 15.12.1959).
என்று தான் வெளியே நிற்க வேண்டியதன் நியாயத்தைப் பெரியார் விளக்குகிறார்.
தனது சுய மரியாதைக் கொள்கைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக இஸ்லாத்தைப் பெரியார் கருதினார்.
‘இறைத்தூதர்’ என்கிற இஸ்லாமியக் கருத்தாக்கத்தைப் பெரியார் ஏற்றுக்கொண்டது பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன். அதற்கான அவரது விளக்கமும் கூட நடைமுறை சார்ந்ததாகவும் சுயமரியாதைக்குப் பொருத்தமானதாகவுமே இருந்தது.
“மேலும், முகமதிய மதம் மிக்க சுயமரியாதை உணர்ச்சி உடையது என்றும் சொல்லுவோம். எப்படி என்றால், அது இனி உலகத்திற்குக் கடவுள் அவதாரங்களோ, நபிமார்களோ, தீர்க்கதரிசிகளோ வரக்கூடும் என்பதை ஒருக்காலும் ஒப்புக் கொள்வதில்லை. மனிதனை மனிதன் வணங்குவதையோ அவன் காலில் விழுவதையோ அது சிறிதும் சம்மதிப்பதில்லை”(குடி அரசு’ ஆக. 25, 1929).
என இடைத்தரகர்கள், மகான்கள் ஆகியோர் இஸ்லாத்தில் சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டதை அவர் அடையாளம் கண்டார்.
இந்து மதத்தைப் போலன்றி இஸ்லாம் காலச் சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தத்திற்கு சாத்தியமுள்ளது என்றும் பெரியார் நம்பினார். அன்றைய துருக்கி (கமால் பாஷா), ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. (‘குடி அரசு’ ஆக. 23, 1931; ஆக.2, 1931; நவம்பர் 17, 1935).
“இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரீட்சைக்கு விட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? ஏனெனில், திரு. முகம்மது நபி கொள்கைகள் ஆனதனாலும், அநேக விஷயங்களில் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கியதையுடையதாய் இருக்கின்றது” (‘குடி அரசு’ ஆக. 23, 1931).
“அவர் (முகமது நபிகள்) சொன்னவற்றிலேயே இது மிகவும் முக்கியமாய் கவனத்தில் வைக்க வேண்டிய காரியமாகும். என்ன அவர் சொல்லுகிறார்? நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றில் உனக்குச் சம்மதமிருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்’ என்பதாகச் சொல்லியிருக்கிறார்” (டிசம்பர் 20, 1953, சென்னை).
என்பன பெரியாரின் கூற்றுகள். பஞ்சா கொண்டாட்டம், அல்லாசாமி பண்டிகை, சமாதி வணக்கம் முதலான ‘மூடநம்பிக்கைகளை’ அவர் இந்த நோக்கிலேயே வெறுத்தார்.
“ஆகவே முஸ்லிம் பகுத்தறிவுக்கு விரோதமாய் ஏதாவது இருந்தால், அது தங்களது கட்டளை அல்ல என்று தள்ளிவிடவும், அவற்றை நீக்கிவிடவும், பகுத்தறிவுக்காரரையெல்லாம் தங்கள் சகோதரர்கள் என்றும், இஸ்லாம் என்று சொல்லவும் தயாராக இருக்க வேண்டும்… உலகமெல்லாம் ஒரே மார்க்கமாவதற்கு பகுத்தறிவு மார்க்கமாவதற்கு முஸ்லிம்கள் பாடுபடவேண்டும். அவர்களுக்கே அதிக சவுகரியமிருக்கிறது. ஆதலால் அதுவே நபி அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்” (‘குடிஅரசு’, ஆகஸ்டு 23, 1931).
என்பதே அவரது நபிகளின் பிறந்தநாள் செய்தியாக இருந்தது. மதங்கள் பகுத்தறிவுக்கு விரோதமானவையாக இருந்தபோதிலும் மதங்களை ஏதேனும் பகுத்தறிவு மயமாக்க முடியுமெனில் முஸ்லிம்களுக்கே ‘அதிக சவுகரியமிருக்கிறது’ எனவும் அவர் நம்பினார்.
பிரத்யட்சத்தில் முஸ்லிம் மதத்தின் சிறப்புக்கள் என்கிறபோது சாதியையும் தீண்டாமையையும் ஒழித்து சகோதரத்துவத்தை நிலைநாட்டும் அதன் சிறப்பை அவர் பலப்பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். அது சண்டாளர்களையும் ரட்சிக்கும் மதம்; வீரத்தையும் ஆண்மையையும் (ஒடுக்கப்பட்ட மக்களுக்கு-அ.மா) அளிக்கும் மதம் (‘குடிஅரசு’ ஆக.25, 1929). “ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக்கொண்டதாய்ச் சொல்லி, 5,30 மணிக்குத் ‘தீண்டாதவன் என்கின்ற இழிவிலிருந்து மீண்டு, தெருவில் நடக்க உரிமை பெற்று” மனிதனாக முடியும் என (‘குடிஅரசு’, ஆக.2, 1931) ரொம்பவும் romantic ஆகச் சிலாகித்தார். முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்பதே நம்மில் பலருடைய எண்ணம். ஆனால் பெரியாரோ, பெண்களுக்குக் கோஷா அணிவிக்கும் முறையில் தனக்கு உடன்பாடில்லை எனச் சொன்னபோதும்,
“முகமதிய மதத்தில் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. அதாவது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு, விதவை விவாகம் உண்டு, கணவனும் மனைவியும் ஒத்துக் கொள்ளாவிட்டால் விலகிக் கொள்ள சுதந்திரம் உண்டு” (குடிஅரசு, ஆக. 25, 1929)எனச் சுட்டிக்காட்டினார்.
கோஷா முறை பற்றி விமர்சனங்கள் இருந்த போதும் அதுவும் கூட படிப்படியாக விலகி வருவதையும் துருக்கி, ஆப்கானிஸ்தான் நாடுகளில் முஸ்லிம் பெண்கள் வேலைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வதையும், ஹைதராபாத் நிஜாம் தம் புத்ரிகளுடன் தாராளமாய் பொது அரங்கில் உலா வருவதையும் அதே உரையில் அவர் கவனம் ஈர்த்தார்.
வருமானத்தில் ஒரு பகுதியைக் கட்டாயமாக ஏழைகளுக்குச் செலவிடுவது (சக்காத்), விக்ரக ஆராதனையை மறுப்பது, சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுகிற வகையில் மற்ற மதங்களைவிட மிக்க நாகரீகம் கொண்டதாக இருப்பது ஆகியன இஸ்லாத்தில் அவர் வரவேற்ற இதர அம்சங்கள் (பெ.சி.4.196-202,4.3-14).
ஹஜ் யாத்திரையையும் கூட அவர் ஆதரிக்கவே செய்தார். அதற்கான அவரது விளக்கம் பகுத்தறிவு சார்ந்ததாக மட்டுமின்றி அறம் சார்ந்ததாகவும் இருந்தது. இதுகுறித்து.
“மவுல்வி அப்துல் அமீது சாயபு பாகவி அவர்களைக் கேட்டேன். முஸ்லிம்கள் மக்காவுக்குப் போவதில், செல்வத்திலும் சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர, எல்லோரும் போய்த் தீரவேண்டுமென்று இல்லையென்றும், அந்த இடம் முகம்மது நபி அவர்கள் பிரத்தியட்சத்தில் பிறந்த இடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்றும், அறிவு வளர்ச்சிக்கும், மற்ற மக்கள் நடை, உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும்படியான ஒரு யாத்திரை என்றும், கொலை, களவு, கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்துவிடும் என்று சொல்வது தப்பு என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் சொல்வதில்லை என்றும் சொன்னார்” (குடிஅரசு, ஆக. 9, 1931).
என்று விளக்கினார். புனித ஹஜ் என்பது நபிகள் பிறந்த தலத்திற்குச் சென்று வருதல் என்பதிலும் வேறான பல அர்த்தங்களை உடையது என்கிற அளவிற்குப் பெரியார் இஸ்லாம் குறித்து அறிந்திராத போதிலும் ‘பிரத்தியட்சம்’சார்ந்த ஒரு விளக்கத்தை அதற்கு அளித்தார். பிறமதங்களில் யாத்திரை என்பது பாவங்களை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படுவது. எல்லாப் பாவங்களையும் செய்துவிட்டுப் புண்ணிய தீர்த்தமாடினால் பாவங்கள் நீங்கிவிடும் என்பது இந்து மத நம்பிக்கை. ஒழுக்கமான வாழ்வொன்றின் மூலமாகவே நல்ல கதி அடைதல் என்கிற புரிதல் உள்ள இஸ்லாத்தில் யாத்திரைக்கு அந்தப் பொருள் இல்லை என்பதைப் பெரியாரால் அடையாளம் காண முடிந்தது.
இவை யாவும் ஏதோ முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காகச் சொல்லப்பட்டவை அன்று. ஏனெனில் இதே காலகட்டங்களில் முஸ்லிம் சமூகம் மற்றும் இஸ்லாம் குறித்த தனது விமர்சனத்தைப் பெரியார் அவ்வப்போது முன் வைக்காதிருந்ததில்லை. “இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக்கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்துவிடாதீர்கள்” என்கிற எச்சரிக்கையை அவர் செய்யத் தயங்கியதில்லை (குடிஅரசு, ஆக.2, 1931).
மதங்கள் சமூக அமைதியைக் கெடுப்பதைப் பற்றிச் சொல்ல வருகையில், 1926 தொடங்கி 1931வரை ஆண்டு வாரியாக ‘இந்து மூர்க்கர்கள்’ பலாத்காரமாகக் கற்பழித்த பெண்களின் எண்ணிக்கையைச் சொல்லும் அதே நேரத்தில் ‘முஸ்லிம் மூர்க்கர்கள்’ செய்ததையும் அவர் பட்டியலிட்டார் (பகுத்தறிவு, 1934, செப்டம்பர் 9. பார்க்க: ஆனைமுத்து, பக்.1420). கிறித்துவ மதத்தைப் போலவே இஸ்லாமும்கூட நடைமுறையில் ஒரு பார்ப்பனீய மதமாகவே உள்ளது என்றும் ஓரிடத்தில் குறிப்பிட்டார். முல்லாக்கள் புரோகிதர்கள் போலச் செயற்படுவதை அவர் விமர்சித்தார்.
விருதுநகர் மாநாட்டில் மத ஒழிப்புத் தீர்மானத்தை இயற்றியதோடு அதை விளக்கி,
“அன்றியும், இந்த நாட்டின் இன்றைய சுதந்திர ஆட்சிக்கு, சகோதரத்திற்கு சினேக தத்துவத்திற்கு மதங்களே இடையூறாய் இருந்து கொண்டு உட்பகையையும் சாந்தியற்ற தன்மையையும் உண்டாக்கி வருவதை நாம் நேரிலேயே தினமும் பார்த்தும் கேட்டும் வருகின்றதோ மாதலால் விருதுநகர் மாநாட்டில், ‘மக்களுக்குள் எவ்வித மத உணர்ச்சியும் இருக்கக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டியதாயிற்று”
எனத் தலையங்கம் வெளிவந்த (குடிஅரசு அக். 23, 1931) அதே இதழில்தான் கோயமுத்தூரில் நடைபெற்ற மிலாது நபி விழாவில் அவர் ஆற்றிய உரையும் வெளிவந்தது. உலகமெல்லாம் ஒரே மார்க்கமாக வேண்டும் என அங்கு பேசிய பெரியார் மத ஒழிப்பு குறித்த தனது பார்வையை ரத்தினச் சுருக்கமாக,
“’மதங்கள் ஒழிந்த பிறகுதான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும், என்பது அநேக அறிஞர்களது அபிப்ராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போதே ‘உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது.’ சாந்தி ஏற்பட்டு விட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன். ஏனெனில் அத சமூக ஒற்றுமை, சமூக சமத்துவம் ஆகிய காரியங்களில் மற்றெல்லோரைக் காட்டிலும் அதிகமான கவலை எடுத்து வருகின்றது” (குடிஅரசு, ஆக.23,1931).என்றார். ‘மதங்கள் ஒழிய வேண்டும்’ என்பதையும் ‘மதமாற்றம்’ என்பதையும் இணையாகவே அவர் சொல்லி வந்தததன் பொருள் இதுவே.
மதம் பற்றிய சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பற்றிச் சொல்ல வரும்போது அதில் ஆஸ்திகர்களும் இருக்கலாம் என்று சொல்லும் பெரியார், ‘இந்து மதத்தை விட்டுவிடுங்கள். மதமில்லாமலும் நாஸ்திகர்களாகவும் தான் இருக்க வேண்டுமென்பதில்லை என்பார். வேறு ‘சிறிதாவது அதைவிட மேலானதும், சீர்திருத்தமானதும், மூடநம்பிக்கைகள் குறைவானதுமான மதத்தை’ அனுசரிக்கலாம் என்பார் (குடிஅரசு, நவம்பர் 17,1935).
அப்படியான மதமாக அவர் முகமதிய மதத்தையே திரும்பத் திரும்ப அடையாளம் காட்டினார் என்பதில் யாருக்கும் அய்யமிருக்க இயலாது.