கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

போபால் ‘மோதல் கொலைகள்’: போலீஸின் திரைக்கதையை கிழித்தெறியும் ராகேஷ் ஷர்மா

[போபால் ‘மோதல் கொலைகள்’ பற்றி மத்திய பிரதேச அரசும் போலீஸும் சொல்லி வரும் கதைகளை பிரபல ஆவணப்பட இயக்குனர் ராகேஷ் ஷர்மா ஒரு திரைப்பட இயக்குனரின் பார்வையிலிருந்து உடற்கூராய்ச்சிக்கு உட்படுத்தி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனை தமிழாக்கம் செய்து கீழே தந்திருக்கிறேன். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி ‘Final Solution‘ என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் இவர்.]

இந்தக் கதை பற்றிய ‘உண்மைகள்’ மளமளவென வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் போலீஸும், மத்தியப் பிரதேச முதலமைச்சரும், பா.ஜ.க. தொலைகாட்சி பேச்சாளர்களும் மிகவும் ருசிகரமான கதை-திரைக்கதை-வசனங்களை உதிர்த்து வருகிறார்கள்.  திரைப்பட இயக்குனரான என்னால் அவற்றை பகுப்பாய்வுக்கு உட்படுத்தாமலிருக்க முடியவில்லை.

முதலில் நான் உங்களுக்கு ஒரு அடிப்படையை அறிமுகம் செய்கிறேன்: “சுயமாக முன்வந்து நம்பிக்கையின்மையை கைவிடுதல்” (willing suspension of disbelief) என்ற அடிப்படையின் மீதே சினிமா இயங்குகிறது. அதாவது, தம்முடைய ஆதர்ச சினிமா நட்சத்திரம் ஒரே சமயத்தில் ஐம்பது பேரை அடித்து துவம்சம் செய்வதும், சீறிப் பாய்ந்து வரும் தோட்டாவை அவர் தனது பற்களால் கவ்விப் பிடிப்பதும் சாத்தியம் என்பதை பார்வையாளர்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவர் ஒட்டுமீசை வைத்துக் கொள்ளும்போது, அவரின் தாயினால் கூட அவரை அடையாளம் காண முடியாமல் போகும். இது தான், “சுயமாக முன்வந்து நம்பிக்கையின்மையை கைவிடுதல்” என்பது.

எனதன்பிற்கினிய பா.ஜ.க. நண்பர்களே, மத்தியப் பிரதேச போலீஸ் கனவான்களே, அளவுக்குமீறி பாலிவுட் மயமாக்கப்பட்டிருக்கும் நம் நாட்டிலேயே கூட, உங்களின் கதை-திரைக்கதை-வசனங்களை கேட்கச் சகிக்கவில்லை! யதார்த்த வாழ்வில் மக்கள் சுயமாக முன்வந்து நம்பிக்கையின்மையை ஆரத்தழுவுவதில்லை – அவர்கள் உங்களின் அணியினராகவும், பக்தர்களாகவும் இருந்தாலேயொழிய.

குடிமக்கள் (அல்லது அமர்த்தியா சென்னின் வார்த்தைகளில் சொன்னால், ‘வாதிக்கும் இந்தியர்கள்’) உங்களை கேள்வி கேட்பார்கள்; உங்களின் கூற்றுக்களை குறுக்கு விசாரணை செய்வார்கள்; நீங்கள் கூறும் ‘கதைகளை’ ஏற்க மறுப்பார்கள். ஏன், உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பல அடிப்படை உரிமைகளை அனுபவிப்பது மட்டுமின்றி, தமது அடிப்படைக் கடமைகளையும் அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். அதுதான் ஜனநாயகத்தின் இயல்பு. ஆனால், மாண்புமிகு உள்துறை அமைச்சருக்கு மட்டும் ஏனோ இந்த உண்மை சுத்தமாகத் தெரியவில்லை. போலி தேசியவாதம் பேசும் அவருடைய கட்சிக்காரர்களின் நிலைமையும் அதேதான். அரசாங்கத்தை கேள்வி கேட்பது, ‘நாட்டுப் பற்றுக்கு எதிரான செயல்’ என்கிறார்கள் அவர்கள். எதிர்க்கட்சியாக இருந்த காலமெல்லாம் அவர்கள் இதை மட்டும்தான் கச்சிதமாக செய்து வந்தார்கள் என்பது தனிக் கதை.

போபால் ‘மோதல் கொலைகளை’ கட்டுடைத்தல்: ஒரு திரைப்பட இயக்குனரின் கோணம்

‘மோதல் கொலைகள்’ என்று சொல்லப்படும் இந்தச் சம்பவம் திட்டமிட்டதொரு படுகொலை என்பதைக் காட்டும் பல்வேறு காணொளிக் காட்சிகள் ஏற்கனவே வெளிவந்ததை தொடர்ந்து, இப்போது அதனை உறுதிப்படுத்தும் சில நிழற்படங்களும் வெளிவருகின்றன (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்).

bhopal encounter shoes photo

கொன்றவரும் கொலை செய்யப்பட்டவரும் ஒரே உருவாக்கத்தில், ஒரே நிறத்திலான விளையாட்டுக் காலணிகளை அணிந்திருப்பது நிச்சயம் வெறுமனேயொரு தற்செயல்தான். அதில் மர்மமொன்றும் இருக்க முடியாது, இல்லையா?!

ஆனாலும் இதிலுள்ளவொரு பெரிய கேள்வி என்னவென்றால்:

சிறைகளில் இடுப்பு வார்கள், காலணிகள், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை எனும்போது, சிமி உறுப்பினர்களுக்கு மட்டும் அவை எங்கிருந்து கிடைத்தன? ஒருவேளை வனப்பகுதியில் நடந்து செல்லும்போது கண்டெடுத்து இருப்பார்களோ? அல்லது, தப்பிச் செல்லுகையில் அவர்கள் தாண்டிச் செல்லவேண்டியிருந்த மூன்று அதிஉயர் பாதுகாப்புடன் கூடிய வாசற்கதவுகளுக்கு அருகிலிருந்த காலணி அலமாரிகளில் இருந்து களவாடிச் சென்றிருப்பார்களோ? அல்லது, சிறைச்சாலை கண்காணிப்பு கோபுரத்தின் மேலிருந்த காலணி அலமாரியிலிருந்து எடுத்திருப்பார்களோ? அல்லது, சிறையிலிருந்து முதலில் ATS அலுவலகத்துக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த காலணிகளை திருடி அணிந்துகொண்டு, சத்தமில்லாமல் வனத்திற்குள் நுழைந்து, மலையுச்சியை அடைந்து, ஒரேயிடத்தில் கூடி கொல்லப்படுவதற்காக காத்திருந்திருப்பார்களோ?

சரி, வேறு கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம். அந்த எட்டுப் பேரில் இருவரிடம் நாட்டுத் துப்பாக்கிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறதே, அவற்றையும் கத்திகளையும் அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? கெட்ட சிறை ஊழியர் எவரிடமிருந்தேனும் பெற்றிருப்பார்களோ? அல்லது நடந்து சென்ற சாலையில் அவை விழுந்து கிடந்திருக்குமோ? அல்லது, அவர்களுக்கென வெளியில் காத்துக் கொண்டிருந்த கூட்டாளி மூலமாக அவை கிடைத்திருக்குமோ? அப்படியென்றால், ஏன் அந்த புத்திகெட்ட கூட்டாளி ஏதேனுமொரு SUV-ஐயோ வேனையோ கொண்டுவந்து இரவுக்குள் அவர்களை பலநூறு மைல்களுக்கு அப்பால் கொண்டுசென்று விடவில்லை? அவ்வாறு செய்திருந்தால் அவர் அவர்களை மாநிலத்திற்கு வெளியே கொண்டு சென்று விட்டிருக்கலாம் அல்லவா? அல்லது, ஏதேனும் இரயில் நிலையத்தில் இறக்கி விட்டிருந்தால் அவர்கள் தனித்தனியாக தொலைதூர இரயில்களில் ஏறி கண்காணாத இடங்களுக்கு  மறைந்தோடியிருக்கலாமே?

ஊடகங்கள் மற்றும் போலீஸ் அறிக்கைகளின்படி, தப்பியவர்கள் இரண்டு ரவுண்டுகள் சுட்டனர்; போலீஸ் 47 ரவுண்டுகள் சுட்டது. தப்பிச் சென்றவர்களிடம் இருந்தது இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் என்பதால், தலா ஒன்று வீதம் அவர்கள் சுட்டது மொத்தம் இரண்டு தோட்டாக்கள் என்றாகிறது. எத்துனை பெரிய முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள் அவர்கள்?!

அவர்களில் ஒருவரின் இடுப்புப் பட்டையிலிருந்து வெட்டுக் கத்தியொன்றை போலீஸ் எடுப்பதாக ஒரு காணொளி காட்டுகிறது. பளபளக்கும், நல்ல அகலமான, ஐந்து அல்லது ஆறு அங்குல நீளக் கத்தி அது. தனது (புதிய) ஜீன்ஸ் பேண்டிற்குள் அந்தக் கத்தியை சொருகி வைத்துக் கொண்டு, அது அவரின் இடுப்பையோ தொடையையோ குத்திக் கிழிக்காமல், எவ்வாறு அவர் நடந்து வந்திருக்க முடியும்? எச்சரிக்கை: யாரும் இதனை வீட்டில் முயற்சித்துப் பார்க்க வேண்டாம். எனினும், நடக்க முயற்சிக்காமல் வெறுமனே ஒரு பெரிய சமையலறைக் கத்தியை உங்களின் இடுப்புப் பட்டைக்குள் சொருகிப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.

இந்தச் சிறையுடைப்பு சம்பவமே ஒரு புராணக்கதை போலிருக்கிறது. ஷோலே படத்தில் ஜெய்யும் வீருவும் ‘வெள்ளைக்காரன் காலத்து சிறைக்காவலரிடமிருந்து’ (‘angrezon ke zamaaney ke jailer’) தப்புவதைப் போல்.

சரி, நாம் இத்திரைக்கதையை ஒவ்வொரு காட்சியாக பரிசோதனை செய்வோம்:

காட்சி 1

விசாரணைக் கைதிகளாக இருந்த சிமி உறுப்பினர்களில் ஒருவரோ அல்லது பலர் சேர்ந்தோ சிறையில் கண்காணிப்புப் பணியிலிருந்த ராம்ஷங்கர் யாதவை தாக்கியிருக்கிறார்கள். கூர்மையாக்கப்பட்ட உணவுத்தட்டைக் கொண்டு அவரின் கழுத்தை அறுத்திருக்கிறார்கள். இதனை நேரில் கண்ட அவரின் சக பணியாளரான சாந்தன் அஹிர்வாரை கொல்லாமல், சிறையறைக்குள் போட்டு பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள்.

எத்தனை சிமி உறுப்பினர்கள் சேர்ந்து, எப்படி திரு. யாதவை தாக்கினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த எட்டு பேரும் ஒரே அறையில் -ஏன், ஒரே தொகுதியில் கூட- அடைக்கப்பட்டிருக்கவில்லை என்றும்; போபால் மத்திய சிறையின் வெவ்வேறு பகுதிகளில் அவர்கள் பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்றும் சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எட்டுப் பேரில் மூவர் ஒரு பிரிவில் ஒன்றாகவும், அடுத்த மூவர் வேறு தொகுதியிலும், கடைசி இருவர் சிறையின் மூன்றாவது பிரிவிலும் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. எனவே, மூன்று பேரைக் கொண்டவொரு குழு திரு. யாதவை தாக்கியதாக வைத்துக் கொள்வோம்.

அடுத்த கேள்வி, எப்படித் தாக்கினார்கள்? அது பற்றிய விரிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை; சிறைத்துறை அதிகாரிகளும் அது பற்றி இதுவரை வாய்திறக்கவில்லை. சுற்றிலுமிருந்த அறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் எவரும் இதனை நேரில் பார்த்ததாக தகவல் இல்லை. இத்தனைக்கும் அவர்களின் பார்வைக்கு எட்டும் தூரத்தில்தான் இது நடந்திருக்க வேண்டும்.

என்றாலும், மத்தியப் பிரதேச போலீஸ் சொல்லும் காட்சி 1-ஐ, அதாவது தப்ப முயன்ற கைதிகள் சிறைக்காவலரை தாக்கினார்கள் என்ற கதையை மேலும் துருவி ஆராயாமல் ஏற்றுக் கொள்வோம். தம்முடைய நண்பர்களை விடுவிப்பதற்காக அவர்கள் அவரிடமிருந்து மற்ற அறைகளுக்கான சாவிகளையும் திருடியுள்ளார்கள். ஆனால் பாவம், பக்கத்திலுள்ள அறையில் அடைக்கப்பட்டிருந்த தங்களின் தலைவர் ‘டாக்டர்’ என்றழைக்கப்படும் அபு ஃபைசலை விடுவிக்க மறந்துவிட்டார்கள். எத்துணை அபத்தம், முட்டாள்தனம்?! எனினும், அவர்கள் மிகவும் அவசரத்தில் இருந்தார்கள் என்று சமாதானம் சொல்லிக் கொள்வோம்.

எட்டுப் பேரும் ஒரே தொகுதியில் அடைக்கப்படவில்லை எனும்போது, கதை மிகவும் ருசிகரமாகிறது. முதலில் தப்பியவர்கள் வெவ்வேறு தொகுதிகளில் அடைக்கப்பட்டிருந்த மற்றவர்களை எப்படி விடுவித்தார்கள்? சிறைக் காவலர்கள் அல்லது ஊழியர்கள் எவர் கண்ணிலும் படாமல் சிறைச்சாலையின் முழு நீளத்திற்கும் சாவகாசமாக அவர்களால் சென்றுவர முடிந்தது எப்படி? மற்ற தொகுதிகள் மற்றும் அறைகளின் சாவிகளை அவர்கள் எங்கிருந்து, எப்படிப் பெற்றார்கள்? யாரிடமிருந்து பெற்றார்கள்?

காட்சி 2

அவர்கள் எப்படி மற்ற தொகுதிகளுக்குச் செல்ல முடிந்தது? ஒரு தொகுதிக்குள் இருக்கும் ஊழியரிடம் சிறைச்சாலை முழுவதின் சாவிகளும் -அதன் நுழைவாசல்கள், தலைவாசல்கள், இடையிடையே இருக்கும் பாதுகாப்புக் கதவுகள் என அனைத்தின் சாவிகளும்- இருப்பதற்குச் சாத்தியமில்லை. அவரவருடைய பிளாக்குகளின் சாவிகள் மட்டுமே அவர்களிடம் இருக்கும். சினிமா பார்க்கும் எல்லோருக்கும் இது தெரியும்.

எனில், முதலில் தப்பியவர்கள் எப்படி முதலாம், இரண்டாம், மூன்றாம் வாசல்களைக் கடந்து செல்ல முடிந்தது? அந்த வாசற்கதவுகளின் அருகே பாதுகாப்பு வீரர்களோ ஆயுதம் தாங்கிய காவலர்களோ ஒருவர் கூட இல்லையா? மரத்தினாலும் உலோகத்தினாலும் ஆன ஸ்பூன்களைக் கொண்டு கைதிகள் போலிச் சாவிகளை உருவாக்கியதாக போலீஸின் திரைக்கதை சொல்கிறது. எப்போது உருவாக்கினார்கள்? அந்த இரவிலேயா? அல்லது வெகு முன்பேவா? இரண்டில் எதுவாக இருப்பினும், அவர்கள் முதல் வாசலுக்கு அருகில் மணிக்கணக்காக நின்று ஸ்பூனை தேய்த்து செதுக்கி திரும்பத் திரும்ப பூட்டுக்குள் போட்டுப் பார்த்து இறுதியில் வெற்றிகரமாக போலிச் சாவியை செய்துமுடித்திருக்கிறார்கள். பிறகு, அதையே இரண்டாவது, மூன்றாவது வாசல்களிலும் செய்திருக்கிறார்கள். பணியிலிருந்த சிறைத்துறை ஊழியர்களும் ஆயுதம் தாங்கிய காவலர்களும் அவர்கள் இதனைச் செய்துமுடிக்கும் வரை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்களா? சிறையிலிருந்து தப்புவதாக வரும் எந்தவொரு சினிமாவிலும் கூட இப்படியொரு காட்சியை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

காட்சி 3

வாசற்கதவுகளை கடந்த பிறகு அவர்கள் ‘பெட்ஷீட்களைக் கொண்டு உருவாக்கிய ஏணிகளின்’ உதவியுடன் 32 அடி உயர வெளிச்சுவரின் மீது ஏறி, அதன் கைப்பிடிச் சுவரைத் தாண்டிக் குதித்ததாக திரைக்கதை கூறுகிறது. கற்பனை செய்து பாருங்கள்: ஒருவர் பெட்ஷீட்களை திரித்து உருவாக்கிய கயிறைப் பிடித்து ஏறி முதற்சுவரின் உச்சியை அடைகிறார். பிறகு என்ன? 32 அடி உயரத்திலிருந்து அப்படியே தாவிக் குதித்து தனது  புத்தம் புதிய விளையாட்டுக் காலணியை போட்டுக் கொள்கிறார். அல்லது, கையோடு மேலே எடுத்துச்சென்ற மற்றொரு பெட்ஷீட் கயிறைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்குகிறார். அடுத்து 2, 3, 4, 5, 6, 7, 8 என்று ஒவ்வொருவராக முறைவைத்து மலையேறுவதை ஒத்த இந்தச் சாகசத்தை நிகழ்த்துகிறார்கள்.

இதைச் செய்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட அந்த நீண்ட நேரத்தில், போலீஸோ சிறை ஊழியர்களோ அவர்களைப் பார்த்துவிடவில்லையா? கண்காணிப்புக் கோபுரத்திலிருந்த எவரின் கண்களிலும் படவில்லையா? ஆயுதம் தாங்கிய காவலர்களும் கவனிக்கவில்லையா? இந்த ஒலிம்பிக் சாதனை எந்தவொரு CCTV கேமராவிலும் பதிவாகவில்லையா?

Firstpost செய்தியறிக்கையின் படி பார்த்தோமெனில், “அந்தக் கைப்பிடிச் சுவர் நெடுக உயர்மின்சாரக் கம்பியொன்று செல்கிறது. எட்டுப் பேரில் எவரும் தவறுதலாகக் கூட அம்மின்சாரக் கம்பியை தொட்டுவிடாமல் 32 அடி உயர சுவரில் ஏறித் தப்ப முடிந்தது எப்படி?” ஒருவேளை அவர்கள் தமது புதிய ஜீன்ஸ் மற்றும் சட்டைகளுக்கு உள்ளே ஹேவல்ஸின் ஷாக் லக-லகா ரப்பர் சூட்டுகளை அணிந்திருப்பார்களோ?

இதுவொரு பாலிவுட் திரைப்படமாக இருந்திருந்தால் “கியா பக்வாஸ் ஹேய்?” (என்ன மடத்தனம் இது?) என்று சொல்லி எழுந்து வெளியே சென்றிருப்போம். இருந்தாலும் கூட அஜய் தேவ்கன், ரவீனா டாண்டன், அனுபம் கேர், பரேஷ் ராவல் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் இக்கதையுடன் உடன்படுகிறார்கள். திரைக்கதை மேலும் தொடர்கிறது.

காட்சி 4

உயர்பாதுகாப்புக்கென ISO சான்றிதழ் பெற்ற போபால் மத்திய சிறையிலிருந்து தப்பி வெளியில் வந்ததையடுத்து அவர்கள் என்ன செய்தார்கள்? மிகவும் நிதானமாக நடைப்பயணம் நடந்து அந்த 7-8 மணி நேரத்தில், மணிக்கு ஒன்றரை கிலோ மீட்டர் வேகத்தில் சொற்ப தொலைவை மட்டுமே கடந்திருக்கிறார்கள். தப்பிச் செல்வதில் எந்தவொரு அவசரமும் காட்டாமல் மிகவும் சாவகாசமாக. அது மட்டுமின்றி, எட்டுப் பேரும் பிரியாமல் ஒன்றாகவே இருக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். நான்கு நான்கு பேராகப் பிரிந்து இரண்டு அணிகளாகவோ, இரண்டிரண்டு பேராகப் பிரிந்து நான்கு அணிகளாகவோ போலீஸிடம் எளிதில் சிக்காத வகையில் ஆளாளுக்கு வெவ்வேறு திசைகளில் தப்பிப்போக முயற்சிக்கவில்லை. அவர்கள் ஒருவேளை அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை கொண்டவர்களோ? அல்லது, இந்தக் குறைந்தபட்ச முயற்சிகளையேனும் செய்ய வேண்டுமென யோசிக்க முடியாதளவு அடிமுட்டாள்களோ? அப்படியென்றால், அவர்கள் “மிகவும் அபாயகரமான பயங்கரவாதிகளாகவோ”, ஏதேனுமொரு வகை “சூத்திரதாரிகளாகவோ” இருப்பதற்கு லாயக்கற்றவர்கள் என்றாகின்றதே?

அவர்கள் தொலைக்காட்சியோ, அல்லது சாஷான்க் ரிடம்ப்ஷன், எஸ்கேப் டு விக்டரி போன்ற திரைப்படங்களில் சீன் கொனரே, டிம் ராப்பின்ஸ், ஜான் ட்ரோவால்டா போன்றோர் சிறையிலிருந்து தப்புவதையோ பார்த்ததில்லை போலும். சரி போகட்டும். கடந்த அறுபது ஆண்டுகளாக நம்முடைய அமித்ஜி, சத்ருகன் சின்ஹா போன்றோரும் வகைவகையான அடைமொழிப் பெயர்கள் கொண்ட வில்லன்களும் பாலிவுட் சிறைகளிலிருந்து தப்புவதையும் கூட அவர்கள் பார்த்தது இல்லையா? சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது!

காட்சி 5

அன்றிரவு அவர்களுக்கு எப்படியோ ஆயுதங்கள் கிடைத்திருக்கின்றன என்று ‘போலீஸின் திரைக்கதை’ இப்போது சொல்கிறது. சிறையிலிருந்து தப்பியவர்களிடம் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளோடு சேர்த்து சில கத்திகளும் இருந்திருக்கின்றன என்பது சுவாரஸ்யமானது. எதற்கு அவை? கனரக ஆயுதங்கள் சுமந்த ATS போலீசாருடன் கைச்சண்டையிட நேரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருப்பார்களோ? இந்தச் சம்பவத்தில் காவல்துறையை சேர்ந்த சிலர் காயமடைந்திருப்பதாக காவல்துறைத் தலைவர் சௌத்ரி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். கைதிகள் சுட்டதாகக் கூறப்படும் இரண்டு தோட்டாக்களால் அவர்கள் காயமடையவில்லை என்றால், அவை என்ன கத்திக்குத்து காயங்களா? அது எப்படி நேர்ந்தது? ஒருவேளை இப்படி நடந்திருக்குமோ? அதாவது, கைதிகள் சுட்டுக் கொலைசெய்யப்பட பிறகு, ATS போலீஸார் அவர்களை சோதனையிடுவதற்காக அருகில் சென்றபோது, அந்தப் பிணங்களின் கைகள் தம்மையறியாமலேயே உயர்ந்து வீசி, உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களை மட்டும் துல்லியமாக ஏற்படுத்தியிருக்குமோ? செத்தபிறகும் கூட அவர்கள் இரத்த நாளங்களையோ நரம்புகளையோ அறுத்துவிடாதவாறு மிகவும் சூதானமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். எத்துணை கருணை மிகைத்த இதயங்கொண்ட பயங்கரவாதிகள் இவர்கள்?!

வெற்றிக் களிப்புடன் காவல்துறை தலைவர் யோகேஷ் சௌத்ரியும் வீரமிக்க போலீஸாரும் கேமரா முன்பு தோன்றி, தாங்கள் எப்படி கைதிகளை துணிச்சலோடு எதிர்கொண்டு முறியடித்தோம் என பெருமிதம் பொங்கப் பேசுகிறார்கள். தொலைகாட்சி அறிவிப்பாளர்களோ பரபரப்புடன் கவச உடைகள் அணிந்தவர்களாக நின்றுகொண்டு, எட்டு பயங்கரவாதிகளும் “தீர்த்துக் கட்டப்பட்டதாக” நமக்கு அறிவிக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் வெறும் விசாரணைக் கைதிகள்தாம்; அவர்கள் எந்தவொரு நீதிமன்றத்தாலும் -பயங்கரவாதம் என்றல்ல-எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டனை வழங்கப்பட்டவர்கள் இல்லை என்பதை நாம் கண்டுகொள்ளக் கூடாது.

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் வாய்தவறி, ‘பயங்கரவாதிகளிடம்’ துப்பாக்கிகள் எதுவும் இருக்கவில்லை, சில சமையலறைக் கலன்களை கூர்தீட்டி அவர்கள் செய்துவைத்திருந்த கத்திகள் மட்டுமே இருந்தன என்று ஒப்புக்கொண்டார்.  “எதிரிகள் துப்பாக்கிகளால் சுட்டதால் துணிச்சல்மிக்க போலீஸார் வேறு வழியின்றி திருப்பிச் சுட்டு அவர்களை கொலைசெய்ய நேர்ந்தது” எனும் கதையை அவர் இதன் மூலம் பாழ்படுத்திவிட்டார்.

இந்த நாடகம் நடந்துகொண்டிருக்கும்போதே மத்தியப் பிரதேச போலீஸுக்கு மோசமானதொரு துரதிர்ஷ்டம் நேர்ந்தது. அதாவது, கிராமக் காவல் அதிகாரியொருவர் (சர்பன்ச்) பதிவுசெய்த காணொளிக் காட்சியொன்று பொதுமக்கள் மத்தியில் பரவத் துவங்கியது. அதில் சீருடையணியாத ஒரு போலீஸ்  ஒரு சடலத்தின் இடுப்புப் பட்டையிலிருந்து வெட்டுக் கத்தியொன்றை எடுப்பதும்; இன்னொரு வீரமிக்க போலீஸ் தரையில் கிடக்கும் ஒரு உருவத்தை நோக்கி குறிவைத்து ஈவிரக்கமின்றி சுடுவதும்; திரையில் தெரியாத சிலரின் குரல்கள் சில வசவுச் சொற்களை உமிழ்வதும்; யாரோ ஒருவர் அனைத்தையும் காணொளியில் பதிவு செய்யும்படி கூறுவதும் காட்டப்படுகிறது. “அவனை நெஞ்சில் சுடுங்கள்” என்றொரு குரலையும் நம்மால் கேட்க முடிகிறது.

அடுத்து இரண்டாவது காணொளி வெளியாகிறது.

அடுத்து மூன்றாவது.

அடுத்து நான்காவது.

அவையனைத்தையும் எவரும் YouTube-ல் பார்க்க முடியும்.

கீழுள்ள வீடியோவில் ஐந்து பேர் பாறையுச்சியில் நின்று கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. அவர்களிடம் துப்பாக்கிகளோ வேறு ஆயுதங்களோ இருப்பதாகத் தெரியவில்லை.

இதனை நேரில் பார்த்த சாட்சியொருவர் முதலமைச்சர் சௌஹானுக்கு இப்படிக் கடிதம் எழுதுகிறார்:

அவர்கள் தப்பிச் செல்வதற்கு எந்தவொரு மார்க்கமும் இருக்கவில்லை. அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார்கள். மறுபுறமோ சிலநூறு அடிகள் ஆழம் கொண்ட செங்குத்தான பள்ளம். அவர்கள் சரணடையவே விரும்பினார்கள். ஆனால், ஈவிரக்கிமின்றி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.

இறுதியாக…

எனதருமை மத்தியப் பிரதேச அரசே, ATS மற்றும் போலீஸ் கனவான்களே,

நீங்கள் இன்னும் திறமையான திரைக்கதை ஆசிரியர்களை வாடகைக்கு அமர்த்த வேண்டும். இந்தக் கதையில் மிகவும் கேவலமான, பெரிய பெரிய ஓட்டைகள் மட்டுமே நிறைந்துள்ளன. குஜராத் மாதிரியிலிருந்து பாடம் படியுங்கள். 20-30 ‘மோதல் கொலைகள்’, கனகச்சிதமான கதைக்கரு, சாமர்த்தியமான திருப்பங்கள் என்று அது அசத்துகிறது. அத்தோடு சுதந்திர இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் போலீஸாரையும் கைது செய்தும் சிறையிலடைத்தும் வரலாறு படைத்திருக்கிறது. அதே போல், உங்கள் உள்துறை அமைச்சர் இந்த மோதல் கொலைகளை நேரடியாக மேற்பார்வை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு அவர் சிறைக்குச் செல்லும்படி நேரிடலாம்.

பின்கதைச் சுருக்கம்

ATS தலைமை அதிகாரி சஞ்சீவ் ஷாமியும் கூட, தப்பியோடிய கைதிகளிடத்தில் துப்பாக்கிகள் எதுவுமிருக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார். (NDTV-ன் ஸ்ரீனிவாசனிடம் பேசுகையில் அவர் மீண்டும் இதனை வலியுறுத்தி இருக்கிறார்). NDTV இப்படிச் சொல்கிறது, “கொல்லப்பட்டவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை என்பதை இரண்டு நாட்களுக்கு முன் தாம் அறிவித்த போதே, மற்ற போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளின் கூற்றுக்களுடன் அது முரண்படுகிறது என்பது தனக்குத் தெரியும் என்பதாகவும், தன்னுடைய நிலைப்பாட்டிலேயே தாம் நிலைத்து நிற்பதாகவும் திரு. ஷாமி கூறுகிறார்.”

“மிகவும் அபாயகரமான குற்றவாளிகள்” என்பதால் ஆயுதம் எதுவுமில்லாத நிலையிலும் அவர்களைக் கொலை செய்தது முற்றிலும் சரிதான் என்று திரு. ஷாமி கருத்துரைக்கிறார். முதலமைச்சர் சௌஹான், காவல்துறைத் தலைவர் சௌத்ரி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு பா.ஜ.க. தலைவர்கள் என அனைவரும் இதே தர்க்கத்தையே சிறுசிறு வேறுபாடுகளுடன் கூறி, போலீஸ் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். பக்தர்களின் ஆன்லைன் படையணிகளும் கூட தமதிந்த ‘கட்சி’ நிலைப்பாட்டை பெருமளவில் பரப்புவதன் மூலம் ட்விட்டர் அகிலத்தை வெள்ளமென நிறைத்திருக்கிறார்கள். ‘மோதல் கொலைகளை’ கேள்வி கேட்கும் அனைவர் மீதும் கும்பலாகப் பாய்ந்து பிடுங்குகிறார்கள். அமைச்சர் வெங்கையா நாயுடு, இவ்வாறு கேள்வி கேட்பது நாட்டுப்பற்றற்ற செயல் என்று கூறியதுடன், இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாமென்றும் மக்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். முதலமைச்சர் சௌஹானே கூட, கொல்லப்பட்ட சிறைக்காவலர் ராம்ஷங்கரின் இறுதிச் சடங்கினை ஒரு அரசியல் நாடகக் காட்சியாக ஆக்கியது தனிக்கதை.

போலி மோதல் கொலை தொடர்பான வழக்குகளில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த முக்கியத் தீர்ப்புகள் எதையும் தலைமைக் காவலர்களோ அரசியல் தலைவர்களோ இந்த விவகாரத்தில் பொருட்படுத்தவே இல்லை என்று தெரிகிறது.

“கொல்லப்பட்டவர் ஒரு பொதுமகனா, ஆயுதப் போராளியா, பயங்கரவாதியா என்பதோ; அதே போல் கொலை செய்தவர் ஒரு பொதுமகனா அரசா என்பதோ இங்கு பொருட்டல்ல. சட்டம் இருவருக்கும் ஒன்றுதான். இருவர் மீதும் அது சமமாகவே பிரயோகிக்கப்பட வேண்டும்… ஜனநாயகம் இதனைத் தான் நிர்பந்தமாகக் கோருகிறது.”

மணிப்பூரில் இராணுவமும் போலீஸும் சம்பந்தப்பட்ட 1,528 போலி மோதல் கொலைகள் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் 2016 ஜூலை மாதத்தில் வழங்கிய தீர்ப்பின் வாசகங்கள் இவை.

அதிலொரு தீர்ப்பு, ‘கொலை செய்வதில் மகிழ்ச்சி காணும்’ (trigger-happy) போலீஸாருக்கு மரண தண்டனையை பரிந்துரைத்ததுடன், நியூரம்பர்க் விசாரணை மன்றங்களில் தம் உயரதிகாரிகளை காரணம் காட்டி தம்முடைய குற்றங்களை மறுக்க முயன்ற நாஸி போர்க் குற்றவாளிகளோடு அவர்களை ஒப்பிட்டுக் கூறியது.

“போலி மோதல் கொலை தொடர்பான வழக்கு விசாரணையில் போலீஸாருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவற்றை அரிதினும் அரிதான வழக்குகளாக மதிப்பிட்டு, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதே பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே அரங்கேற்றும் ஈவிரக்கமற்ற, பச்சைக் கொலைகள் தான் போலி மோதல் கொலைகளாகும்”

பிரகாஷ் கதாம் vs. ராம்பிரசாத் விஸ்வநாத் குப்தா வழக்கில் உச்சநீதிமன்றம் மே 11, 2011 அன்று இவ்வாறு தெரிவித்திருக்கிறது.

2011- ல் இத்தீர்ப்பை எழுதிய நீதிபதி திரு. கட்ஜூ அவர்கள் இப்போது தொலைக்காட்சியில் தோன்றிப் பேசுகையில்,  போபால் சம்பவத்தை ஓர் போலி மோதல் கொலை என்றும், அதில் குற்றமிழைத்தவர்கள் தூக்கில் போடப்பட வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார்.

இக்கதை முடிவதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகம், நீதித்துறை, NHRC போன்ற நிறுவன ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை இதில் சோதனைக்கு ஆளாகியிருக்கின்றன. அறுதியாக, இந்திய மக்களாகிய நாம்தான் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கிறோம்.

2006 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான போலி வழக்குகளில் மகாராஷ்டிரா ATS மற்றும் காவல்துறையால் வஞ்சகமாக சிக்கவைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களிடம் நான் தனிப்பட்ட முறையில் மிக விரிவாகப் பேசியிருக்கிறேன். அவர்கள் தமது ஐந்தரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார்கள். சித்தரவதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நார்கோ அனாலிசிஸ் சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 2008-ல் ஹேமந்த் கர்கரே எனும் நேர்மையான அதிகாரியொருவர் ATS தலைமைப் பொறுப்பை ஏற்று, மாலிகான் சம்பவத்துக்குப் பின்னாலிருந்த சதியை அம்பலப்படுத்தி, அதில் சம்பந்தப்பட்டிருந்த சாத்வி பிரக்யா, அசீமானந்தா, கர்னல் புரோகித் உள்ளிட்ட இந்துத்துவ வெறியர்களை கைதுசெய்த பிறகே, அந்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஏதேனுமொரு ‘மோதல் கொலையில்’ வைத்துக் கொல்லப்படுவதிலிருந்தும், தூக்குமேடைக்கு அனுப்பப்படுவதிலிருந்தும் தப்ப முடிந்தது. அதன் பிறகும் கூட அந்த  மாலிகான் முஸ்லிம்கள் தொடர்ந்தும் சிறையிலேயே வாட நேர்ந்தது. கடைசியாக 2011-ன் இறுதியில் தான் அவர்களால் பிணையில் வெளிவர முடிந்தது. அன்றிலிருந்து நீதித்துறைச் சக்கரங்களின் கீழ் சிக்கவைத்து அலைக்கழிக்கப்பட்ட அவர்கள், இறுதியில் இந்த மே மாதத்தில்தான் (2016)  சிறப்பு MCOCA நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர்.

போபாலுக்கும் மாலிகானுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். இரு மாநில போலீஸும் தம்மால் கைது செய்யப்பட்டவர்களுக்கு சிமியுடன் தொடர்பிருப்பதாகவே கூறின. அவர்களின் அகராதியில் ‘சிமி’ என்பதற்கு ‘பயங்கரவாதிகள்’ என்று பொருள் போலும். இவ்வாறிருக்க, பா.ஜ.க.வினர் பலரும் கூட இவ்விரு வார்த்தைகளையும் ஒன்றின் இடத்தில் மற்றதை பரிமாற்ற ரீதியில் பாவிப்பதில் ஆச்சர்யமில்லை தானே!

Related posts

Leave a Comment