கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக? – மௌலானா மௌதூதி

Loading

[‘ஷஹாதத்தே இமாம் ஹுசைன்’ என்ற தலைப்பில் மௌலானா அபுல் அஃலா மௌதூதி எழுதிய உருது கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே தந்துள்ளோம். இது ஜமாத்தே இஸ்லாமி (தமிழ்நாடு) வெளியிட்டு வரும் ‘சமரசம்’ பத்திரிகையில் ஹிஜ்ரி 1420 துல்ஹஜ், 1421 முஹர்ரம்-சஃபர் மாதங்களில் (2000 ம் ஆண்டு 04, 05, 06 மாதங்களில்) நான்கு பகுதிகளாக வெளிவந்தது.]

முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து தினங்களை உலகெங்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் துக்க தினங்களாக அனுஷ்டிக்கிறார்கள். பல்வேறு வழிகளில் தங்களது துயரத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். 1300 வருடங்களுக்கு முன்பு ஈராக் தேசத்து கர்பலா மைதானத்தில் நபிகளாரின் பேரர் ஹுசைன் தனது இன்னுயிரை இஸ்லாத்திற்காக ஈந்ததை நினைவூட்டும் சடங்காக இந்த துக்க தின அனுஷ்டித்தல்கள் அமைந்துவிட்டன. ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலோருக்கு ஹுசைனின் உயிர்த் தியாகத்தின் தாத்பர்யமே தெரியாததுதான் விந்தை.

ஹுசைன் ஏன் உயிரைக் கொடுத்தார்? தனது வாழ்வை மட்டுமல்ல, தனது இதயத்துக்கினிய குடும்பத்தவர்களின் வாழ்வையும் எந்த நோக்கத்திற்காக அவர் அர்ப்பணித்தார்? துக்கம் அனுஷ்டிக்கும் மக்களிடம் விசாரியுங்கள். எவருக்குமே தெரியாது. ஹுசைனின் உன்னத நோக்கத்தை அறியாமலேயே… ஒருவரின் உயிர்த் தியாகம் குறித்து அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் துக்கப்படுவது இயல்பானது தான். இதில் விசேசமாக ஒன்றுமில்லை. அன்பால் நனைந்த இதயங்கள் இழப்பின் சுமையைத் தாங்காமல் பொழியும் கண்ணீர்த் துளிகள் அவை.

ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1300 வருடங்கள் உருண்டோடிவிட்ட பிறகும் ஒரு இறைநேசரின் இழப்பு ஏன் உணரப்படுகிறது என்பதே. அந்த உயிர்த் தியாகம் மிக உயர்ந்த இலட்சியங்களுக்காக செய்யப்பட்டது தான் காரணமாகும். தனிப்பட்ட அன்பினால் மட்டுமே உந்தப்பட்டு பல நூற்றாண்டுகளாக அந்த மனித துயரம் நினைவுகூறப்படுகிறது எனக் கூறுவது அர்த்தமற்றது.

ஏன், இன்னும் சொல்லப் போனால் ஹுசைன் கூட இத்தகைய கண்மூடித்தனமான தனிநபர் பற்றை அங்கீகரிப்பாரா என்பது சந்தேகமே. அவருக்கு சித்தாந்தத்தை விடவும், உயர் நோக்கத்தை விடவும் தனது தனிப்பட்ட வாழ்வுதான் முக்கியமானதாக இருந்ததெனில் அந்த வாழ்வை ஏன் அர்ப்பணித்தார்? அவரது உயிர்த்தியாகமே அந்த உயர் நோக்கத்தை அவர் தமது உயிரைவிட மேலாக மதித்தார் என்பதற்குச் சான்றாகும். அந்த உயர் நோக்கம்தான் என்ன? கலீஃபா ஆகி இஸ்லாமிய அரசை நிர்வகிக்க வேண்டும் என ஹுசைன் ஆசைப்பட்டாரா? அந்த இலட்சியத்தை அடைவதற்காக தனது உயிரையே பணயம் வைத்துப் போராடினாரா?

இல்லை. நிச்சயமாக இல்லை. அவர் பிறந்த வீடு, அவர் வளர்ந்த குடும்பச் சூழ்நிலை அறிந்தவர்கள் எவருமே இந்த விபரீத நோக்கம் அவருக்கு இருந்தது என யோசிக்கவும் துணிய மாட்டார்கள். அத்தகைய உன்னத குடும்பத்தில் பிறந்த ஒருவர் அரசியல் அதிகாரம் பெறுவதற்காக முஸ்லிம்களிடையே இரத்தம் சிந்தச் செய்தார் என்பது எண்ணிப் பார்க்கவும் முடியாத ஒன்றாகும்.

பிறகு என்னதான் நோக்கம்? ஹுசைன் கூரிய பார்வை கொண்டவர். இஸ்லாத்தின் ஆணிவேரையும் அடிநாதத்தையும் அறிந்தவர். அப்போதைய இஸ்லாமிய அமைப்பின் அடித்தளத்தில் விழுந்த கீறலை அவர் கவனித்து விட்டார். தீயசக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவே ஆசைப்பட்டார். நிலைமை கட்டுக்கு மீறிப்போய் போர் புரிய வேண்டிய நிலை வந்தால் அதற்காக போர் புரிவது கூட தம் மீதான கடமை என அவர் உணர்ந்தார்.

ஹுசைன் கவனித்துவிட்ட அந்த மாற்றம்தான் என்ன? மக்கள் மார்க்கத்தை விட்டு விலகிச் சென்று விடவில்லை. ஆட்சியாளர்களும் சரி, பாமர மக்களும் சரி- இறைவன் மீதும், இறைத்தூதர் மீதும், இறைமறை மீதும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதில் எள்ளளவும் குறைவு ஏற்பட்டுவிடவில்லை. அரசு சட்டங்களிலும் கூட எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. உமைய்யா அரசுகளின் கீழ் இயங்கும் நீதிமன்றங்கள் குர்ஆன், நபிவழியின் அடிப்படையிலேயே வழக்குகளுக்குத் தீர்ப்பளித்து வந்தன. இன்னும் சொல்லப் போனால், 19 ஆம் நூற்றாண்டு வரை உலகில் எந்தவொரு முஸ்லிம் நாட்டிலும் எந்தவகையான சட்ட திருத்தமும் கொண்டு வரப்படவில்லை என்பதுதான் உண்மை.

சிலர் யஸீதின் தனிப்பட்ட ஆளுமையை மோசமாக சித்தரிக்க முற்படுகிறார்கள். இதனால் யஸீத் என்கிற மோசமான நபரை இஸ்லாமிய அரசுத்  தலைவராக நீடிக்கவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஹுசைன் எழுந்தார் என்ற பொதுப்படையான ஊகம் வேரூன்றி விட்டது. யஸீதின் குறைபாடுகளை ஒப்புக்கொண்டாலும் கூட, அது ஒன்றே ஹுசைன் அவர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததற்குக் காரணமாக அமைந்தது என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அந்தச் சமயம் அரசு நிர்வாகமும் செம்மையாகவே நடந்து கொண்டிருந்தது.

வரலாற்றை ஆய்ந்து படித்துப் பார்க்கும்போது ஓர் உண்மை புரியும். தனது தந்தையின் வாரிசாக யஸீத் அறிவிக்கப்பட்டதும், பிறகு மன்னராக முடிசூட்டிக் கொண்டதும் உண்மையில் இஸ்லாமிய அரசியல் சட்டத்தின் நோக்கம், நடைமுறை ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்வதாக அமைந்தன. எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இஸ்லாத்தில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. யஸீத் ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டபோது எவரும் அதன் தீய விளைவுகளை எண்ணிப் பார்க்கவில்லை. தொலைநோக்கும் ஆழமான மார்க்க ஞானமும் இறைப்பற்றும் நிரம்பிய ஹுசைன் இந்த வித்தியாசத்தையும் விலகலையும் மிகச் சரியாக கணித்துவிட்டார். இதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகளையும் அவர் உணர்ந்து கொண்டார். இஸ்லாமிய அரசுக்கு ஏற்படவிருக்கும் பேரழிவை அவர் முன்கூட்டியே கணித்துவிட்டார். இதனால் அதனைத் தடுக்கவும், இஸ்லாமிய அமைப்பை பாதுகாக்கவும் தனது உயிரையே கொடுக்கத் துணிந்துவிட்டார் அவர்.

இந்தக் குறிப்பிட்ட நிலையை முழுமையாக புரிந்து கொள்வதற்கு நாம் இஸ்லாம் வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்துவ தன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும். இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின்  கீழ்தான் நபிகளாரின், நேர்வழிநின்ற கலீஃபாக்களின் தலைமையில் அரசு நிர்வாகம் நடந்தது. அதைப்போலவே யஸீதின் நியமனத்துக்குப் பிறகு உமைய்யா, அப்பாஸிய்யா மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்வந்த ஆட்சியாளர்களின் காலத்திலும் உருவான புதிய முஸ்லிம் அரசின் நிர்வாக அமைப்புச் சட்டத்தின் முக்கியத் தன்மைகள் என்னவென்பதையும் பார்க்க வேண்டும்.

இவ்வாறு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முதன் முதலில் உருவான இஸ்லாமிய அரசின் அடிப்படைத் தன்மைகளுக்கும் யஸீதின் நியமனத்துக்குப் பிறகு காலப்போக்கில் உருவான முஸ்லிம் அரசுகளின் முக்கியத் தன்மைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் புலப்பட்டுவிடும். எந்தப் புள்ளியில் அவற்றுக்கு இடையேயான வித்தியாசம் துவங்குகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளங்கும். இந்த ஆய்வு மூலம் ஹுசைன் கிளர்ந்தெழுந்தது ஏன் என்பதையும் எளிதாகக் கணித்து விடலாம். நபிகள் நாயகம் (ஸல்), அலீ (றழி), ஃபாத்திமா (றழி) ஆகியோரால் வளர்த்து ஆளாக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு, அண்ணலாரின் அருமைத் தோழர்களின் அரவணைப்பில், அந்த அழகிய சமூகச் சூழலில் குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயது வரை கழித்த ஹுசைன், யஸீதின் நியமனம் என்கிற ரூபத்தில் மாற்றத்துக்கான பாதை வகுக்கப்பட்ட போது அதன் விளைவுகள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல் முழு மூச்சுடன் எதிர்த்தார்.

வெறுமனே பின்வரும் உண்மைகளை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது:

1. இஸ்லாமிய அரசில் அரசாண்மை முழுவதும் இறைவனுக்கே உரித்தானதாகும்.

2. குடிமக்கள் அனைவரும் இறைவனின் அடிமைகளே.

3. ஆட்சியாளர்கள் இறைவனுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

அரசும் குடிமகனும் இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

இஸ்லாமிய அரசின் தனித்தன்மையே இறைநம்பிக்கைதான். அப்பழுக்கில்லாத, எந்தவித குறையும் இல்லாத, உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், குடிமக்கள் மீது அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது என்பதையும், குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் கூட முதலில் தாம் இறைவனின் அடிமைகள் என்கிற உணர்வுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அடுத்து தமது நாட்டு குடிமகன் மீது இறைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

தந்தை முஆவியாவுக்கு அடுத்த படியாக மகன் யஸீத் ‘கலீஃபாவாக’ நியமிக்கப்பட்ட போது இவை எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ‘இறைவனுக்கே அரசாண்மை அனைத்தும்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டாலே போதும் என்ற நிலை உருவானது. இதற்கு முந்தைய முடி மன்னர்களைப் போலவே முஸ்லிம் ஆட்சியாளர்களும் ஏதோ அரசாண்மைக்குத் தாமே ஏகபோக சொந்தக்காரர்களைப் போல நடந்து கொண்டார்கள். அரசாண்மை தனது குலச்சொத்து, தனக்குப் பிறகு தனது மகன்தான் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாரம்பரிய மன்னர்களைப் போல நடந்து கொண்டார்கள். குடிமக்களின் வாழ்வு, சொத்து, கண்ணியம் என எல்லாவற்றுக்கும் ஏகபோக எஜமான் தான் ஆட்சியாளன் என்கிற நிலைமைக்கு இது வித்திட்டது. அந்த ஆட்சியாளனின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் இறைச் சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டால் அவை பொதுமக்களுக்கு மட்டுமே என்று கருதப்படும். இந்த மன்னர்களே கூட இறைச் சட்டத்தின் பல்வேறு விதிகளை எவ்விதக் குற்றவுணர்வும் இல்லாமல் மூர்க்கமாக மீறினார்கள். அந்த மன்னர்களின் அடியொற்றி மேல்தட்டு மக்களும் செயல்படத் தலைப்பட்டார்கள்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் தார்மீகக் கடமையை மறந்தனர்

இஸ்லாமிய அரசின் முக்கிய நோக்கமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட நன்மைகளை நிலைநிறுத்தி வளர்ப்பதும், இறைவனால் வெறுக்கப்பட்ட தீமைகளைத் தடுத்து அழிப்பதும்தான். ஆனால் முடிமன்னர்களின் நோக்கமோ நிலத்தை அபகரிப்பதும், ஆடம்பர சுகவாழ்வும், பதவி பட்டங்களைச் சேகரிப்பதும், சிற்றின்ப சுகங்களை நாடுவதும் தான். முடிமன்னர்கள் அபூர்வமாகத்தான் உண்மை, நீதி ஆகியவற்றுக்காக பாடுபட்டிருக்கிறார்கள். மன்னர்களும் மேல்தட்டு மக்களும் அரசு அதிகாரிகளும் நன்மைகளை விட தீமைகளைப் பரப்புவதில் தான் முன்னணியில் இருந்தனர்.

மக்களிடையே நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுத்து, இஸ்லாத்தை எடுத்துரைத்து, மார்க்க நூல்களை தொகுத்தளிப்பது, இஸ்லாமிய ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்வது போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்ட இறைநேசர்களுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு கிஞ்சிற்றும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்கள் இத்தகைய இறைநேசர்களுடன் அதிருப்தியுடன்தான் இருந்தனர். அத்தகைய இக்கட்டான சூழல்களிலும் அந்த இறைநேசர்கள் அரசாங்கம் தருகின்ற இடையூறுக்கிடையே தமது உன்னதப் பணியை தொடர்ந்து செய்தனர்.

இந்த அறிஞர்கள், இறைநேசர்களின் முயற்சிகள் தொடர்ந்து தங்களுடைய பணிகளைச் செய்து வந்தனர். இந்த இறைநேசர்களும் அறிஞர்களும் தொடர்ந்து முயற்சித்த போதிலும், ஆட்சியாளர்களின் வாழ்க்கை முறையும், நடத்தையும் முஸ்லிம் சமூகத்தை சீரழிவுக்கு இட்டுச் சென்றது. தங்களது சுயநலத்திற்காக இஸ்லாமியப் பிரச்சாரத்தை தடைசெய்யும் அளவுக்கு அவர்கள் போய்விட்டனர். உமைய்யாக்களின் காலகட்டத்தில் புதியதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் மீதும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது, இவ்வகையில் மோசமான எடுத்துக்காட்டு ஆகும்.

ஒரு முஸ்லிம் நன்மையின் மொத்த வடிவமாகவும், இறையச்சத்தின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொண்டவனாகவும் திகழ்வான். இஸ்லாம் மனிதனுக்குள் ஏற்படுத்துகின்ற மகத்தான பண்புநலன்களாக இவை திகழ்கின்றன. இந்த மகத்தான பண்புநலன்கள் இஸ்லாமிய அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஆட்சியாளர்களிடம் குறைவற இருக்க வேண்டும். ஆட்சியாளர்களின் நடத்தை இறையச்சத்தாலும் நற்செயல்களாலும் மிளிரும்போது அது மற்ற அரசு அதிகாரிகள் மத்தியிலும் பிரதிபலிக்கும். அவர்களும் இத்தகைய உணர்வுகளால் தமது ஆளுமையை வார்த்தெடுப்பார்கள். இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஆழமான தாக்கங்களை உண்டுபண்ணும். முழு சமூகமே இறையச்சம் கொண்டதாய், நற்செயல்கள் புரிவதில் பேரார்வம் கொண்டதாய் மிளிரும். முஸ்லிம் ஆட்சியாளர்களும் அரசாங்கமும் சீசர் பாணியிலான ஆடம்பரத்தையும் சுகபோக வழிமுறைகளையும் மேற்கொண்டபோது முழுப் பரிமாணமுமே மாற்றம் கண்டது. நீதியின் இடத்தை அநீதியும், அக்கிரமமும், தான்தோன்றித்தனமும் கவ்விப் பிடித்துக் கொண்டன. ஆடம்பரமும், டாம்பீகமும், உல்லாசக் கேளிக்கைகளும் அன்றாட வாழ்வின் வழக்கமாயின. எது சட்ட ரீதியானது, எது சட்ட விரோதமானது என்று பிரித்துப் பார்க்கவும் ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். ஒழுக்க நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அரசியல் நெறிகள் வலுவிழந்தன. அதிகாரிகள் தங்களுக்குள் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக மக்கள் மீது அதிகாரத்தைப் பிரயோகிப்பவர்களாக மாறிவிட்டனர். எளிய மக்களை அடக்கித் தமது கட்டுக்குள் வைக்க முற்பட்டனர். மக்களோ அதிகாரிகளின் மனசாட்சியினை விழித்தெழச் செய்வதற்குப் பதிலாக லஞ்சம், ஆசையூட்டல் போன்றவற்றின் மூலம் காரியம் சாதிக்க முற்பட்டனர்.

இந்த மாற்றம் தான் நிகழ்ந்தது. இத்தகைய சீரழிவு ஏற்படும் என்பதைத் தான் இமாம் ஹுசைன் அன்றே சரியாகக் கணித்து விட்டார். முஸ்லிம் ஆட்சியாளர்களின் உணர்வு, நோக்கம், நடத்தை ஆகியவற்றில் எத்தகைய மோசமான மாற்றம் நிகழும் என்பதை இமாம் ஹுசைன் தொலைநோக்குடன் ஊகித்து விட்டிருந்தார். அதனால் தான் அந்த ‘மாற்றத்தை’ முழுமூச்சுடன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் எதிர்க்க முற்பட்டார்.

அது மட்டுமல்ல. அந்த மாற்றத்தின் காரணமாக இஸ்லாமிய அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தன. தலைகீழ் மாற்றத்துக்கு உள்ளான இஸ்லாமிய அமைப்புச் சட்டத்தின் ஏழு அடிப்படைப் பண்புகளின் விவரம் வருமாறு:

1. சுதந்திரமான தேர்தல்

இஸ்லாமிய அமைப்புச் சட்டத்தின் அடிப்படையே மக்களின் சுதந்திரமான கருத்துக்களின் அடிப்படையில் அரசு அமைக்கப்படுவது தான். தமக்கு வேண்டிய அரசை அமைத்துக் கொள்வதில் மக்களுக்கு முழுச் சுதந்திரம் இருந்தது. எவருமே குறுக்கு வழியிலோ, செல்வாக்கு, அதிகாரம், செல்வத்தைப் பயன்படுத்தியோ, அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியாது. மக்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து தமக்குள் எவர் சிறந்தவராக இருக்கின்றாரோ அவருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

ஆட்சிக் கட்டிலில் ஏறியமர்ந்து கொண்டு பிறகு மக்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்யும்படி கேட்கக் கூடாது; மாறாக, மக்களின் விசுவாசப் பிரமாணத்தின் மூலமாகவே ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும். ஒருவருக்கு விசுவாசப் பிரமாணத்தை பெற்றுத் தருவதற்காக தந்திர நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்வது கூடாது.  விசுவாசப் பிரமாணம் செய்வதற்கும், செய்ய மறுப்பதற்கும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். விசுவாசப் பிரமாணமின்றி எவரும் ஆட்சியை அபகரித்துக் கொள்ளுதல் தகாது. அதே போல், ஒருவர் மீதான நம்பிக்கை இல்லாமலாகி விட்ட நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கவும் கூடாது.

நபிகளாருக்குப் பிந்தைய கலீஃபாக்கள் அனைவரும் இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சிக்கு வந்தனர். கிலாஃபத்தின் மீது உரிமை கோரிய அமீர் முஆவியாவின் நிலை சர்ச்சைக்கு உரியது. இந்தக் காரணத்தினாலேயே அவர் நபித்தோழர்களில் ஒருவராகக் கருதப்பட்டாலும், நேர்வழி நின்ற கலீஃபாக்களில் ஒருவராக மதிக்கப்படுவதில்லை.

எனினும், யஸீதின் நியமனம் தான் அந்தக் கோட்பாட்டுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாக ஆகிவிட்டது. அது சங்கிலித் தொடர் போல் அடுத்தடுத்து வந்த வாரிசு அடிப்படையிலான மன்னராட்சியின் தோற்றத்துக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது. அதன் பிறகு இன்றுவரை முஸ்லிம்களால் சுதந்திரமான தேர்தலின் மூலம் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கும் கோட்பாட்டுக்கு மீளவே முடியவில்லை.

இப்போது பொதுமக்களின் சுதந்திரமான தெரிவு, ஆலோசனை என்பவற்றின் அடிப்படையில் அல்லாமல், தமக்கிருக்கும் செல்வாக்கு பலத்தின் மூலமே நபர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். விசுவாசப் பிரமாணத்தின் மூலம் அதிகாரத்திற்கு வருவதற்குப் பதிலாக, அதிகாரத்தைக் கொண்டு விசுவாசப் பிரமாணத்தை வலிந்து பெறுகிறார்கள். விசுவாசப் பிரமாணத்தை வழங்குவதற்கோ, வழங்க மறுப்பதற்கோ மக்களுக்குச் சுதந்திரமிருப்பதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு விசுவாசப் பிரமாணம் பெறவேண்டியது முன்நிபந்தனை என்கிற நிலைமையும் இனி இல்லை.

எல்லாவற்றுக்கும் முதலாக, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய மறுப்பது என்ற பேச்சுக்கே இடமிருப்பதில்லை. அப்படியே, மக்கள் விசுவாசப் பிரமாணம் செய்ய மறுத்தாலும் கூட, ஆட்சியாளர் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கப் போவதில்லை. இமாம் மாலிக் அப்பாசிய மன்னர் மன்சூரிடம், இப்படி பலாத்காரமாக விசுவாசப் பிரமாணம் பெறுவதை விட்டுத் தவிர்ந்து கொள்ளும்படி அறிவுரை கூறிய குற்றத்திற்காக, கைகள் பிய்த்துக் கொண்டு வருமளவு சாட்டை கொண்டு விளாசப்பட்டார்.

2. ஆலோசித்து செயல்படுதல்

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடுத்த முக்கியமான அம்சம் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் அரசாங்கத்தை செயல்படுத்துவது ஆகும். மார்க்க அறிவு பெற்ற, இறையச்சம் மிகுந்த, கருத்துச் சீர்மையும், விவரங்களைப் புரிந்து கொண்டு முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்ட நபர்களின் ஆலோசனை பெறப்பட வேண்டும். இவ்வாறு ஒரு ஆலோசனைக் குழு அரசுத் தலைவருக்கு உதவும். முதல் நான்கு கலீஃபாக்கள் காலத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு மக்கள் ஆதரவும், வாக்கு அளிப்பதற்கான மக்களது அங்கீகாரமும் நிரம்ப இருந்தது. இந்த நபர் நமக்கு ஆதரவான நிலையை எடுப்பார் என்கிற எண்ணத்தில் கலீஃபா அவர்களை ஆலோசனைக் குழுவில் சேர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சமூகத்திலேயே மிகவும் சிறந்த நபர்களை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி வாய்மையுடன் தேர்ந்தெடுத்தனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உண்மையே பேசுபவர்களாகவும், தமது மனசாட்சியுடன், நாணயத்துடன் சிறந்த ஆலோசனைகளை கூறுபவர்களாகவும் இருந்தனர். அவர்கள் கலீஃபாவுக்கு தவறான ஆலோசனை கொடுத்து வழிகேட்டின் பக்கம் தள்ளி விடுவார்களோ என்ற ஐயம் துளிகூட இருக்கவில்லை. இப்போது தேர்தல்கள் நடத்தப்படுவதைப் போல அந்தக் காலத்தில் தேர்தல் நடந்திருந்தாலும் எவ்விதப் பிரச்சாரமும் இன்றி அவர்களே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் அவர்கள் குறித்து நல்ல கருத்து இருந்தது.

ஆனால் மன்னராட்சி வந்ததும் பெருத்த அடி வாங்கியது இந்த ஆலோசனைக் குழு வழிமுறைதான். மன்னராட்சி நிர்வாகம் சர்வாதிகார, கொடுங்கோலர் நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களது ஆலோசனைக் குழுவிலே இளவரசர்கள், பசப்பு வார்த்தை பேசி காரியம் சாதிக்கும் ஜால்ராக்கள், இராணுவத் தளபதிகள், வட்டார ஆளுநர்கள் போன்றோரின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இன்றைய பாணியில் தேர்தல் நடத்தப்பட்டால் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தவர்களாக, மக்களின் விரோதத்தையும் வெறுப்பையும் அள்ளிக்கொட்டிக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர்.

இதற்கு மாறாக, இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற, வாய்மை வாய்ந்த, மார்க்க அறிவும் தெளிவும் நிரம்பிய, மக்கள் இதயங்களில் இடம்பிடித்துக் கொண்ட அறிஞர்களுக்கோ அந்த ஆலோசனைக் குழுக்களில் எவ்வித மதிப்போ, இடமோ இல்லாமல் போனது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மன்னர்களின் கோபத்திற்கும் அக்கிரமத்திற்கும் இலக்காயினர். ஆட்சியாளர்கள் அத்தகைய அறிஞர்களை என்றுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தனர்.

3. கருத்துச் சுதந்திரம்

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு கருத்துச் சுதந்திரம் ஆகும். இஸ்லாத்தின் பார்வையில் நன்மைகளை ஏவுவதும் தீமைகளைத் தடுப்பதும் முஸ்லிம்களின் உரிமை மட்டுமல்ல; முக்கியக் கடமையாகவும் இருக்கிறது. கருத்துச் சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் இஸ்லாமிய சமுதாயத்தின் அச்சாணியாக இருக்கிறது. இதனால் அரசாங்க நிர்வாகம் சரியான திசையில் நடைபோடும். இஸ்லாமிய சமூகத்தில் ஒருவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் சரி, அவர் நெறி தவறிப் போகும்போது அதனைத் தட்டிக் கேட்கவும் விமர்சிக்கவும் பாமர குடிமகனுக்கு முழு உரிமை உண்டு. முதல் நான்கு கலீஃபாக்களின் காலத்தில் மக்களின் உரிமைகள் விஷயத்தில் எவ்வித குந்தகமும் ஏற்படவில்லை. குடிமக்களின் உரிமைகள் பாதிக்கப்படாதபடி பார்த்துக் கொள்வதை கலீஃபாக்கள் தமது முக்கியக் கடமையாக கொண்டிருந்தனர். அந்தக் கடமையை சரிவர நிறைவேற்ற உதவும்படி அவர்கள் மக்களை ஊக்குவித்தனர். பேச்சு சுதந்திரமும் கலீஃபாவுக்கு எச்சரிக்கை விடுத்து, செயல்விளக்கம் கேட்கும் உரிமையும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே இருக்கவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த உரிமையும் சுதந்திரமும் இருந்தது. இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவர்களால் கலீஃபாவையே மடக்கி கேள்வி கேட்க முடிந்தது. எவரும் அவர்களது துணிச்சலைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களது இந்தச் செயல் எல்லோராலும் பாராட்டப்பெற்றது.

இந்த பேச்சு சுதந்திரமும் உரிமையும் ஏதோ கலீஃபாவே விரும்பி அவர்களுக்கு அளித்த ஒன்றல்ல. மாறாக அது இஸ்லாத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான உரிமை ஆகும். இந்த உரிமையைப் பயன்படுத்தி சத்தியத்தை நிலைநாட்டுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இறைவனும் இறைத்தூதரும் விதித்துள்ள கடமையாகும். இந்த அடிப்படைக் கடமையை எவ்வித தடங்களும் இன்றி நிறைவேற்றும் வகையில் சாதகமான சமூகச் சூழலை உருவாக்கிப் பராமரிப்பது கலீஃபாக்களின் முக்கியப் பணியாகும்.

மன்னர்களின் ஆதிக்கம் வளர்ந்ததும் மனசாட்சியின் குரல்வளை நெரிக்கப்பட்டது. கருத்துச் சுதந்திரமோ முழுமையாக மறுக்கப்பட்டது. எவராவது மன்னர் முன்பு எதையாவது சொல்ல விரும்பினால் அது மன்னரைப் புகழ்ந்து பேசுவதாகவே இருத்தல் வேண்டும். அல்லது ஆட்சியை வானளாவ உயர்த்திப் பேச வேண்டும். இவ்வாறு புகழ்ந்து பேச மனம்வராத அளவுக்கு மனசாட்சியின் குரல் ஓங்கிவிட்டால், அவர்கள் மன்னர் முன்னால் எதனையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. அதையும் மீறிப் பேசிவிட்டாலோ அவர் சிறையிலடைக்கப்படுவார் அல்லது கொல்லப்பட்டு விடுவார். இத்தகைய மூச்சடைக்கும் சூழல் பொதுமக்களின் உத்வேகத்தை முடக்கிவிட்டது. முஸ்லிம்கள் ஆர்வம் இழந்தனர். கோழைகள் ஆயினர். சந்தர்ப்பவாதிகளாக மாறினார். உயிரையும் பொருட்படுத்தாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் சத்திய சீலர்களின் எண்ணிக்கை அருகிக் கொண்டே போனது. போலிப் புகழ்ச்சிகளும் பசப்பு வார்த்தைகளும் பேசி ஜால்ரா அடிப்பவர்கள் சமூகத்தில் பெருகினர். வாய்மை வாய்ந்த மக்களுக்கு எந்த மதிப்பும் எஞ்சி இருக்கவில்லை. மிகவும் தகுதி வாய்ந்த, நேர்மையான மக்களும் தனிப்பட்ட கருத்து கொண்டவர்களும் அரசாங்கத்துடன் தமது தொடர்பை துண்டித்துக் கொண்டனர்.

ஆட்சித் தலைவர் குறித்தும் அரசு குறித்தும் மக்கள் மனங்களில் வெறுப்பு மண்டிக் கிடந்தது. ஆட்சிக் கவிழ்ப்பும் ஆட்சி மாற்றமும் நிகழும்போது பழைய ஆட்சியாளர்கள் மீது மக்களின் அனுதாபம் துளி கூட இருக்கவில்லை. புதிய ஆட்சியாளர்கள் மீதும் எவ்விதப் பற்றும் இல்லாதவர்களாக இருந்தனர். அரசுகள் வந்தன. அரசுகள் கவிழ்ந்தன. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக ஆட்சி மாற்றங்கள் தொடர்ந்து நடந்தாலும் மக்கள் இவை எவற்றிலும் ஆர்வம் காட்டாமல் தனிப்பட்ட பார்வையாளர்களைப் போல கவனித்தனர்.

4. படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்புணர்வு

இஸ்லாமிய அரசுத் தலைவரான கலீஃபாவும் அவரது நிர்வாகமும் தமது செயல்பாடுகள் குறித்து இறைவனிடம் பதில் அளிக்க வேண்டியவர்களாக இருந்தனர். இந்தப் பொறுப்புணர்வு வாட்டியெடுத்ததால் முதல் நான்கு கலீஃபாக்கள் இந்தக் கவலையில் உழன்றனர். இரவும் பகலும் அவர்களது இதயங்களை இதே சிந்தனை ஆக்கிரமித்திருக்க, எந்நேரமும் இறைவனுக்கு பதில் அளிக்கும் பொறுப்பு குறித்து கவலையுடன் இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் தமது ஒவ்வொரு செயல் குறித்தும் இறைவனுக்கும் மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்கிற உணர்வு நிரம்பப் பெற்றவர்களாக இருந்தனர்.

மக்களவை கூட்டப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுத் தான் பிரச்சினைகள் குறித்து ஆட்சித் தலைவரிடம் கேட்க வேண்டும் என்கிற நிலை இருக்கவில்லை. கலீஃபாக்கள் நாள்தோறும் ஐவேளைத் தொழுகைகளின் போது மக்களை சந்தித்தனர். வெள்ளிக் கிழமை தோறும் மக்களுக்கு அரசுத் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அறிவித்து சொற்பொழிவு நிகழ்த்தினர். இத்தகைய தருணங்களில் அவர்களிடம் கேள்வி கேட்கவும், புகார் கொடுக்கவும், நீதி கேட்கவும் பாமர மக்களுக்கு முழு உரிமை இருந்தது.

அது மட்டுமல்ல, கறுப்பு பூனைக் காவற்படையினர் வட்ட வடிவில் வியூகம் அமைத்துப் பாதுகாக்க, உள்ளே இருப்பவர் யாரெனத் தெரியாத வகையில் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட குண்டு துளைக்காத வண்டிகளில், பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகளில் அவர்கள் உலா வருவதில்லை. அவர்கள் எந்தவிதப் பந்தாவும் இன்றி சந்தையை சுற்றி வந்தனர். செல்லும் வழிகளிலெல்லாம் மக்களின் குறைகளைக் கேட்டனர். மெய்க்காப்பாளர்கள் எவருமின்றி அவர்கள் மக்களோடு இயல்பாக சங்கமித்தனர்.

அவர்கள் மாடமாளிகைகளில் தங்களை அடைத்துக் கொள்ளவில்லை. எளிமையான இல்லங்களில் வசித்தனர். அங்கு எவ்வித பாதுகாப்புக் கெடுபிடிகளும் இருக்கவில்லை. எந்நேரமும் ஆட்சித்தலைவரை இயல்பாக சந்தித்துப் பேச முடிந்தது. பார்வையாளராக எவரும் எந்நேரமும் சென்றுவர முடிந்தது. தமது குறையைச் சொல்லி கலீஃபாவிடம் தீர்வு கேட்க முடிந்தது. கலீஃபாக்களோ எந்நேரமும் எவருக்கும் பதில் அளிக்க வேண்டியவர்களாக இருந்தனர். பிரதிநிதிகள் மூலம்தான் கலீஃபாவை அணுகமுடியும் என்ற நிலை இருக்கவில்லை. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அந்த உரிமை இருந்தது.

மக்களின் ஆதரவு பெற்றே அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். ஒரு கலீஃபாவை நீக்கி இன்னொருவரை தேர்ந்தெடுக்கும் முழுமுதல் அதிகாரம் மக்களிடமே இருந்தது. இதனால் மக்களைச் சந்திப்பதில் கலீஃபாவுக்கு எவ்வித ஆபத்தும் இருக்கவில்லை. தாம் பதவியை விட்டு நீக்கப்படுவோம் என்கிற கிலியும் அவர்களுக்கு இருக்கவில்லை.

ஏகாதிபத்திய, சர்வாதிகார மன்னர்களின் ஆட்சிமுறையிலோ இத்தகைய பொறுப்புணர்வு எதுவுமே எஞ்சி இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இறைவனுக்கு பதிலளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு வாயளவில் இருந்தது. மக்களுக்குப் பதிலளிப்பதா? கேட்கவே வேண்டாம். எவருக்குமே அவர்களை எதிர்த்து எதையும் சொல்லத் துணிவு இருக்கவில்லை. அவர்கள் மக்கள் மீது முழுமையான அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர்.

அந்த ஏகாதிபத்திய, சர்வாதிகார மன்னர்கள் ஆயுத, ஆள்பலத்தின் அடிப்படையில் ஆட்சியை கைப்பற்றியிருந்தனர். பலத்தின் அடிப்படையில் எவராவது எமது ஆட்சியை பிடிக்க முடியுமா என அவர்கள் சவால் விடுத்தனர். இத்தகைய நபர்களால் பொதுமக்களுடன் எப்படி இரண்டறக் கலக்க முடியும்? பொதுமக்கள்தான் அவர்களை எளிதில் அணுகிவிட முடியுமா? ஏன், அவர்கள் பள்ளிவாசலுக்கு தொழ வரும்போது கூட பலத்த பாதுகாப்புடன் குறிப்பிட்ட சில பள்ளிவாசல்களிலேயே தொழுதார்கள். திறந்தவெளியில் தொழ நேரிடும்போது அவர்களைச் சுற்றிலும் நெருங்கிய அதிகாரிகள் நின்று கொள்வார்கள். அவர்கள் வாகனங்களில் எங்காவது சென்றாலும் கூட அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் காவல் வாகனங்கள் அணிவகுத்தன. அவர்களுக்கான பாதையை க்ளியர் செய்வது அந்த பாதுகாப்பு படையினரின் கூடுதல் பணியாக இருந்தது. மக்களோடு மக்களாக கலந்து மக்களின் பிரச்சினைகளை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவே இல்லை.

5. பைத்துல்மால் – அரசுக் கருவூலம் ஒரு அமானிதம்

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடுத்த முக்கிய அம்சம் பைத்துல்மால் என்கிற அரசுக் கருவூலத்தின் அந்தஸ்து ஆகும். பைத்துல்மால் – அரசுக் கருவூலம் முழுவதும் இறைவனுக்கே சொந்தமானது. அது முஸ்லிம்களின் அமானிதப் பொருளாகும் என இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக விளக்குகிறது. சட்டபூர்வமான வழிமுறைகள் மூலமே அதன் வருமானம் சேகரிக்கப்படும். சட்டத்துக்கு விரோதமான வழியில் ஒரு துரும்பு கூட பைத்துல்மாலில் சேர்க்கப்படாது. பைத்துல்மாலின் பொருள் சட்டபூர்வமான வழிமுறைகளிலேயே செலவழிக்கப்படும். பருவ வயதை எட்டியிராத ஒரு அனாதையின் செல்வத்தின் மீது அவரது தாளாளருக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அந்த அளவுக்கே கலீஃபா-ஆட்சித் தலைவருக்கும் பைத்துல்மால் மீது உரிமை இருக்கிறது.

அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அனாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். (திருக்குர்ஆன் 4:6)

பைத்துல்மாலின் வரவு செலவுக் கணக்கை காட்ட வேண்டிய பொறுப்பு கலீஃபாவுக்கு உண்டு. பைத்துல்மாலின் முழுமையான வரவு செலவுக் கணக்கு விபரத்தை கேட்கும் முழு உரிமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.

நேர்வழி நின்ற கலீஃபாக்கள் இந்தக் கொள்கையை வாய்மையுடன் பின்பற்றினார்கள். பைத்துல்மாலின் எந்தவொரு பொருளும் இஸ்லாமிய விதிமுறைகளுக்கு உட்பட்டே சேர்க்கப்பட்டது. செலவுகளும் சரியான விதத்திலேயே செய்யப்பட்டன. அவர்களில் வசதி வாய்ப்பை பெற்றவர்கள் பைத்துல்மாலில் இருந்து ஒரு சல்லிக்காசைக் கூட தமக்கென எடுத்துக் கொண்டதில்லை. ஊதியம் எதுவும் எடுத்துக் கொள்ளாமலேயே சேவையாற்றினார்கள். இன்னும் சொல்லப்போனால் தமது சொந்தப் பணத்திலிருந்து மக்கள் நலன்களுக்காக செலவழிக்கவும் அவர்கள் தயங்கியது கிடையாது. ஊதியம் வாங்காமல் சேவையாற்றக் கூடிய வசதிவாய்ப்பு பெறாதவர்கள் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையே எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட ஊதியம் மிகக் குறைவானது என்பதை எவரும் ஒப்புக் கொள்வார்கள். துவேஷம் கொண்ட விமர்சகர்களும் இதனை மறுக்க மாட்டார்கள்.

பொதுமக்களின் பைத்துல்மால்-கருவூலத்தின் வரவு செலவு கணக்கு விவரத்தை கேட்கும் உரிமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருந்தது. கலீஃபாக்களும் அந்த விவரங்களை அளிக்கவும் விளக்கவும் எப்போதும் தயாராக இருந்தார்கள். ஒரு சாதாரணக் குடிமகன் கலீஃபாவைப் பார்த்து “யமனிலிருந்து வந்த துணி சரிசமமாக எல்லோருக்கும் பங்கிடப்பட்டிருக்க, கலீஃபாவால் மட்டும் எவ்வாறு அந்த துணி அளவை விட இரு மடங்கு நீளமான அங்கியை தைத்துக்கொள்ள முடிந்தது?” என்று பொதுமக்கள் முன்னிலையில் எதிர்த்துக் கேள்வி கேட்கும் சுதந்திரமான நிலை இருந்தது.

கலீஃபா மன்னராக மாறியபோது பைத்துல்மால் கூட பொதுமக்களின் கருவூலம் என்கிற அந்தஸ்தை இழந்து, தனிப்பட்ட நபரின் சொத்தாக மாறியது. சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் அனைத்து வழிமுறைகள் மூலமும் பைத்துல்மாலில் பணம் சேர்க்கப்பட்டது. பைத்துல்மால் பணம் தான்தோன்றித் தனமாகவும் சட்ட விரோத வழிகளிலும் செலவழிக்கப்பட்டது. எவருக்கும் இதனைத் தட்டிக் கேட்கவோ தடுக்கவோ துணிவு இருக்கவில்லை. வரவு செலவுக் கணக்கு காட்ட வேண்டிய பொறுப்புணர்வையும் ஆட்சியாளர்கள் இழந்துவிட்டிருந்தார்கள்.

அரசு வருமானம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. அரசு எந்திரத்தில் பணியாற்றிய சாதாரண ஊழியர் முதல் மாநில நிர்வாகி வரை தத்தமது அதிகாரத்துக்கு ஏற்ப தம்மால் முடிந்தளவுக்கு அரசுப் பணத்தை சூறையாடினார்கள். பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கான உரிமமாக அவர்கள் தமது நிர்வாகப் பொறுப்பை நினைத்துக் கொண்டார்கள். இது தவறானது என்கிற உறுத்தல் கூட அவர்களிடம் இருக்கவில்லை. ‘நம்மால் முடிந்தவரை மக்கள் பணத்தை சூறையாடத்தான் செய்வோம். எவருக்குமே எதிர்த்துக் கேட்க துணிவு இருக்காது’ என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.

6. சட்டத்தின் ஆட்சி

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆறாவது அம்சம் சட்டத்தின் ஆட்சி நிலைபெறுவதாகும். இறைச்சட்டங்களை இத்தரணியில் நிலைநிறுத்துவதே இஸ்லாமிய அரசின் நோக்கமாகும். இறையரசை நிர்மாணிப்பதையே இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம். சட்டத்திற்கு அப்பாற்பட்டோ, சட்டத்திற்கு மேலாகவோ எவருமே இல்லை. சட்டம் விதிக்கின்ற வரம்புகளை மீறுவதற்கு எவருக்குமே உரிமை இல்லை. சாதாரண குடிமகன் முதல் அரசுத் தலைவர் வரை எல்லோருக்குமே ஒரே சட்டம்தான். இந்தச் சட்டங்கள் எந்தவித விதிவிலக்கோ பாரபட்சமோ இல்லாமல் எல்லோர் மீதும் அமல்படுத்தப்பட வேண்டும். நீதிக்கும் நியாயத்திற்கும் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பாரபட்சமாக நடந்து கொள்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை. நீதிமன்றங்கள் வெளிப்புற திணிப்புகள், வற்புறுத்தல்கள், நிர்பந்தங்களுக்கு ஆளாகாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். நேர்வழி நின்ற கலீஃபாக்கள் சட்டம் சம்பந்தப்பட்ட இந்தப் பொதுவான கோட்பாடுகளிலிருந்து கிஞ்சிற்றும் வழுவாமல் ஆட்சி புரிந்தார்கள். பெரும் பேரரசர்களை விட அதிகமாக அதிகாரத்தைப் பெற்றிருந்த நிலையிலும் அந்த கலீஃபாக்கள் இறைச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள்.

விதிகள், சட்டங்கள், வரம்புகளைப் பேணி நடப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் நட்போ, பந்த பாசமோ குறுக்கிட அவர்கள் என்றுமே இடம் அளித்தது கிடையாது. தங்களது விருப்பு வெறுப்புகளால் இஸ்லாமிய சட்ட விதிகளுக்கு பாதிப்பு வராதவாறும் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். தங்களது சொந்த உரிமைகள் மீறப்படும்போது கூட அவர்கள் சாதாரண குடிமக்களைப் போலவே விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்கள்.

எவராவது அவர்களுக்கெதிராக புகார் கொடுத்தால் அவை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இதைப் போலவே படைத் தளபதிகளும் ஆளுநர்களும் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய வழக்குகளில் சிக்கிய எவருமே தமது செல்வாக்கால் நீதிபதியை தமக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கும்படி நிர்பந்திக்கத் துணியவில்லை. சட்டத்தை மீறி எவர் நடந்து கொண்டாலும் அவர் சட்ட விளைவுகளிலிருந்து தப்பவே முடியாத நிலைமை இருந்தது.

கலீஃபா ஆட்சி முறையை அகற்றி மன்னராட்சி வந்ததும் இந்த இஸ்லாமியக் கோட்பாடுகளும் நடைமுறைகளும் காணாமல் போயின. அரசர்கள் என்ன, இளவரசர்கள் என்ன, அதிகாரிகள் என்ன, படைத் தளபதிகள் என்ன, மேலிடத்து சம்பந்தம் கொண்ட வேலைக்காரர்களும், மன்னர்களின் ஜால்ராக்களும் கூட நீதிபதிகளை மிரட்டிப் பணிய வைத்தனர். தாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற சிந்தனை இந்த அதிகார வர்க்கத்தில் வேரூன்றியதால் பெரும் குழப்பங்கள் அரங்கேறின. இதன் காரணமாக பொது மக்கள் அதிகாரிகளின் இரும்புப் பிடியில் சிக்கி அவதியுற்றார்கள்.

‘ஏழைக்கு ஒரு நீதி, செல்வந்தனுக்கு ஒரு நீதி’ என்கிற இழிநிலைக்கு நாடு தள்ளப்பட்டது. அந்த நிலையிலும் இறையச்சம் மேலிட, நீதி வழுவாமல் தீர்ப்பளித்த நீதிபதிகள் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்கள். இறையச்சம் மிக்க நீதிபதிகள் சிறைவாசத்தையும் சித்ரவதையையும் ஏற்றுக் கொண்டார்களே தவிர அநீதிக்கும் அராஜகத்துக்கும் துணைநின்று இறைகோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை.

7. சம அந்தஸ்து, சம உரிமை

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏழாவது அம்சம் சம அந்தஸ்தும், சம உரிமையும் ஆகும். இஸ்லாமிய அரசின் துவக்க காலத்தில் சம உரிமையும் சம அந்தஸ்தும் சிறப்பாக நிலைநாட்டப்பட்டது. இன, மொழி, பிறந்த வட்டாரம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படவில்லை. இனம், குலம், குடும்பம் ஆகியவற்றின் அடிப்படையில் எவருமே உயர்வாக போற்றப்படவில்லை. எல்லோருமே சமம். எல்லோருமே ஒரே இறைவனை வழிபடுபவர்களே. எல்லோருமே இறுதி இறைத்தூதரை ஏற்றுக் கொள்பவர்களே என்கிற அடிப்படையில் நடத்தை, திறமை, ஒழுக்கம், சேவை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் முன்னுரிமை வழங்கப்பட்டனர்.

கலீஃபா ஆட்சி அகற்றப்பட்டு ஏகாதிபத்திய மன்னராட்சி புகுத்தப்பட்டபோது எல்லாவிதமான துவேச பூதங்களும், மாச்சரிய சாத்தான்களும் சமூகத்தில் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டன. மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள்,  மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் அந்தஸ்து கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. அரச குடும்பத்தை சேர்ந்த கோத்திரத்தினர் மற்ற கோத்திரத்தினரை விட சிறப்பிடம் பெற்றார்கள். அரபுக்களுக்கும் அரபு அல்லாதவர்களுக்கும் இடையேயான பாகுபாடுகள் கூர்மை பெற்றன. அதிகார மோகமும், பதவி வேட்கையும் அரபுக் குலங்களுக்கு இடையே இருந்த உறவுகளில் நஞ்சை பாய்ச்சின. இந்த உட்பூசல்களாலும் சண்டைகளாலும் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு வரலாறே சான்று பகர்கிறது.

இமாம் ஹுசைனின் தொலைநோக்கு

இஸ்லாமிய கிலாஃபத் ஆட்சிமுறையை மாற்றி ஏகாதிபத்திய மன்னராட்சியை நடைமுறைக்கு கொண்டுவந்ததால் ஏற்பட்ட விளைவுகள் இவை. முஆவியா தனது வாரிசாக தனது மகன் யஸீதை நியமித்தது தான் இந்த மாற்றங்கள் அனைத்துக்கும் துவக்கமாக அமைந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. யஸீதின் நியமனத்துக்குப் பிறகு குறுகிய காலத்தில் எல்லா தீய நடைமுறைகளும் அமலில் வந்தன என்பதை மறுக்க முடியாது. இந்த அதிரடி மாற்றம் (யஸீதின் நியமனம்) நிகழ்ந்தபோது இப்படிப்பட்ட தீய விளைவுகள் ஏற்படும் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இருக்கவில்லை. ஆனால் தொலைநோக்கும் இஸ்லாமியத் தெளிவும் கொண்ட எவரும் இந்த அதிரடி மாற்றத்தால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை கணித்துவிட முடியும்.

அரசு நிர்வாகத்திலும், அரசியல் விவகாரங்களில் இஸ்லாம் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் எல்லாமே இந்த அதிரடி மாற்றத்தால் சீர்குலைந்து போகும்; ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்பதையும் அவர்கள் கணித்து விடுவார்கள். இந்தக் காரணத்தினால் தான் இமாம் ஹுசைனால் இந்த அதிரடி மாற்றத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு, மெளனமாக இருக்க முடியவில்லை. தொலைநோக்குடன் எதிர்கால விளைவுகளை துல்லியமாகக் கணித்து விட்டதால் அதனை தடுத்து நிறுத்த வீறுகொண்டு எழுந்தார். விளைவுகள் குறித்து கவலைப்படாமல் அரசுக்கு எதிராக எழுந்து நின்றார். இமாம் ஹுசைன் எடுத்த தீர்க்கமான, உறுதியான நிலை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

ஆனால் இமாம் ஹுசைனைப் பொறுத்தவரை இஸ்லாமிய அரசின் அடிப்படைக் கோட்பாடுகள் மிக மிக விலை மதிப்புமிக்க சொத்தாக இருந்ததது. அதற்காக எந்தவித ஆபத்தையும் எதிர்கொள்வதற்கு அவர் தயாராக இருந்தார். இந்த மகத்தான விழுமங்கள் மிக மிக உயர்வானவை; விலைமதிப்பு மிக்கவை; உயிர், உடமை எல்லாவற்றையும் விட மேன்மையானவை. தமது உயிரையும் தமது இதயத்துக்கினியவர்களின் நலனையும் பொருட்படுத்தாமல் யஸீதின் நியமனத்தை எதிர்த்து களத்தில் குதித்த இமாம் ஹுசைன் இதனைத்தான் வலியுறுத்த விரும்பினார். இந்த மகத்தான விழுமங்களை பாதுகாப்பதற்காக உயிரைக் கொடுப்பதும், குடும்பத்தவர்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்குவதும் மிகப் பெரிய விலை கிடையாது என்பதை இமாம் ஹுசைன் உணர்ந்தார். மகத்தான உயரிய கோட்பாடுகளுக்கு முன்னால் உயிர் எம்மாத்திரம் என அவர் நினைத்தார்.

இஸ்லாமிய மார்க்கமும் அது கொண்டுவரும் புரட்சிகரமான அரசியல் நடைமுறைகளும் ஆபத்துக்குள்ளாகி நிற்கும்போது ஒரு இறைநம்பிக்கையாளர் கைகட்டி வாய்மூடி மெளனமாக இருக்க முடியாது. தம்மிடம் இருக்கிற அனைத்தையும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்காக அர்ப்பணித்துவிட முன்வர வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கே உலைவைக்கக் கூடிய மாற்றங்களை தடுத்துநிறுத்த தம்மிடம் இருக்கின்ற அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதற்கு இறைநம்பிக்கையாளர் முன்வரவேண்டும் என்றே இமாம் ஹுசைன் (ரழி) விரும்பினார்.

இமாம் ஹுசைனின் கிளர்ச்சியை, ஆட்சியை பிடிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக துவேஷத்துடன் முத்திரைகுத்தி ஒதுக்கிவிட ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் இமாம் ஹுசைன் இப்னு அலீக்கோ அது அடிப்படையில் ஒரு மார்க்கக் கடமையாக இருந்தது. அதனால் அவர் அந்த நோக்கத்திற்காக உயிரையே கொடுத்தார். ஷஹீத் என்கிற உயர்ந்த அந்தஸ்தை ஈட்டினார்.

Related posts

Leave a Comment