உலகை ஆளும் புதிய மதம்!
உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஊடகங்களாலும் கல்வி நிறுவனங்களாலும் தொடர்ச்சியாக ஒரு ‘மதம்’ போதிக்கப்பட்டு வருகிறது. அது கொண்டிருக்கும் 7 சித்தாந்த அடிப்படைகளை ஒவ்வொன்றாகவும் ரத்தினச் சுருக்கமாகவும் இங்கு பார்க்கலாம்.
1. இயற்கைவாதம்: எல்லாமே பொருளாயத அடிப்படையிலானவை. சத்தியம், உண்மை என்பனவற்றை மனிதன் தன் ஐம்புலங்களின் ஆற்றலைக் கொண்டு அறிய முடியவேண்டும்; ஆய்வு முறையியல் ரீதியாக அவை திரும்பத் திரும்ப நிரூபணமாகவும் வேண்டும். அத்தோடு, ஏதாவதொரு மதச்சார்பற்ற மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் இருந்து அவை ஆய்வு முடிவாக வெளியாகியிருக்க வேண்டியதும் அவசியம்!
இந்த அணுகுமுறை ஆன்மிகம், அறம், பெளதீக அதீதம் முதலானவற்றை முக்கியத்துவமற்றதாகவும் மூட நம்பிக்கையாகவும் கற்பனையாகவும் அறிவுக்கு ஒவ்வாததாகவும் ஆக்குகிறது. இயற்கை விஞ்ஞானத்தால் நிறுவ இயலாத அனைத்தையும் வெறும் கண்ணோட்டங்களாகவும் வெற்றுக் கருத்துகளாகவும் சுருக்குவதோடு, அவை அனைத்துக்கும் ஒரே மதிப்பைக் கொடுக்கிறது.
2. அதிகாரமும் வாய்ப்புமே உலகைக் கட்டுப்படுத்துகின்றன. இங்கு அத்தாட்சிகள், திருவாக்குகள், இயற்கையை விஞ்சிய சக்தி என எதுவும் இல்லை. மனிதனுக்கு நேரும் துன்பங்கள் அனைத்தும் பொருளற்றவை; அவை தனியொரு நபரில் இருந்தோ சமூக நிறுவனங்களில் இருந்தோ அல்லது இயற்கையில் இருந்தோ தான் வருகின்றன. அவை மனிதனுக்கு இறைவன் தரும் சோதனை அல்ல. அதுபோலவே மனிதனுக்குப் பாடம் கற்பிப்பதற்காகவோ, இயற்கையை விஞ்சிய சக்தியின் தண்டனையாகவோ அவை வரவில்லை.
3. தனிமனிதவாதம்: ஒவ்வொரு நபரும் தங்களின் சொந்த உலகாயத நலனை அடைவதற்கான தொடர் போட்டியில் இருப்பவர்கள். தன் சுய லட்சியத்தையும் இலக்கையும் கொண்ட தனிநபர்களின் தொகுப்புதான் சமூகம் என்பது. ’உம்மா’, ‘திருச்சபை’ என்பனவற்றையோ அல்லது குடும்பம், கோத்திரம் என்ற அமைப்பையோ நீங்கள் மறந்துவிட வேண்டும். பொருளாதார வளத்தைப் பெருக்கிக்கொள்வதே குடும்பம், சமுதாயம் என்பனவற்றையெல்லாம் விட முதன்மையானது.
நீங்கள் திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று கொள்வோம். அது உங்களின் சுயநலன்களுக்குத் தோதாக இருக்கிறதென்றால், நீங்கள் ‘பொருளாதார சுதந்திரமும்’ பெற்றிருந்தால் தாராளமாக மணம் செய்துகொள்ளலாம். மற்றபடி, அல்லாஹ் உங்களை இளமையாக இருக்கும்போதே திருமணம் செய்ய வலியுறுத்தியிருந்தாலும் சரி, உங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு அவன் பொறுப்பேற்றிருந்தாலும் சரி, அவற்றை நீங்கள் பொருட்படுத்தக்கூடாது.
4. வரலாற்றை சமூக-பொருளாதார கண்ணாடி வழியே தான் அணுக வேண்டும். முஹம்மது நபியவர்கள் (ஸல்) உங்களுக்கு ‘சமூக சீர்திருத்தவாதியாகவோ’ போர்ப்படைத் தலைவராகவோ ஓர் உலக மதத்தைத் தோற்றுவித்தவராகவோ இருக்கலாம். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதற்கு மேல் எதுவும் கிடையாது. நீங்கள் அவரை இறைத்தூதர் என்றெல்லாம் வாதிட்டால் அது உங்களின் தனிப்பட்ட நம்பிக்கை மட்டுமே, பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டது அந்தக் கண்ணோட்டம்.
5. அடிப்படையில் மதம் பகுத்தறிவற்றது, மேலும் அது உங்களின் தனிப்பட்ட விவகாரம்; அதை உங்கள் வீடுகளிலோ வழிபாட்டுத் தலங்களிலோ கடைபிடித்துக்கொள்ளுங்கள். அனைத்து பொது விவகாரங்களில் இருந்தும் முழுமையாக அதை விலக்கிக்கொள்ளுங்கள்.
அரசியல் என்பதை அறத்திலிருந்து பிரிக்க முடியாத போதிலும், அறத்தை மதத்திலிருந்து பிரிக்க முடியாத போதிலும் அது பொது விஷயங்களில் தலையிடக் கூடாது. மதம் என்றாலே பழங்கதைகளோடு தொடர்புடையது, அதற்கும் கதை சொல்லலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
6. தனிமனிதனின் செயற்சுதந்திரம் முடிந்தளவு விரிவாக்கப்பட வேண்டும். உங்கள் அடையாளம் என்பது நீங்கள் தனிப்பட்ட முறையில் உணர்வது எதுவோ அதுதான். உங்களைச் சுற்றியுள்ளோர் யாராலும் அதை மறுக்கவோ நிர்ணயம் செய்யவோ முடியாது. அதனால் நீங்களே உங்கள் அடையாளத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். அது பிறரை எவ்வகையிலும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதே அதற்கு ஒரே நிபந்தனை. இந்தப் பின்னணியில்தான் தமது ’பாலியல் சாய்வின்’ (Sexual Orientation) அடிப்படையில் லெஸ்பியன், Gay என்றெல்லாம் பலர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதையும், அது அவர்களது அடையாளத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாக ஆக்கப்படுவதையும் காண்கிறோம்.
7. உங்கள் பாலினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியம், அது உங்கள் மத அடையாளத்துக்கு நிகரானது அல்லது அதை விட முக்கியமானது.
மேற்கூறிய 7 மதிப்பீடுகளும் அன்றாடம் நம்மிடம் திணிக்கப்பட்டு, அவை நம் சிந்தனையிலும் ஆழ்மனத்திலும் பதிந்திருப்பதோடு, நம் செயல்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஆதாரமாகவும் ஆகியிருக்கின்றன. இந்த வலைப்பின்னலில் இருந்து நாம் மீண்டெழுவது உள்ளபடியே மிகச் சிரமமானது.
நம் காதுகளைத் துளைக்கும் இந்தக் கூச்சல் சத்தங்களுக்கு மத்தியில் நமது சமூகத்து இளம் தலைமுறையினர் எப்படி இஸ்லாமிய உலக நோக்கைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதே இங்கு எழும் கேள்வி. அவர்கள் தம் பெற்றோரை சமூகத்துக்குப் பொருத்தமற்றவர்களாகவோ பழமைவாதிகளாகவோ பார்க்கும் சூழல் இன்று உருவாக்கப்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அமெரிக்காவில் வளரும் முஸ்லிம் சிறுவர்களுள் 77 சதவீதத்தினர் வளர்ந்த பிறகும் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என Pew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின் நிலையென்ன, 77 சதவீதம் இருப்பவர்களுள் எத்தனை பேர் இஸ்லாமிய உலக நோக்குடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் இஸ்லாத்தை முறையாகக் கடைபிடிக்கிறார்கள், சில தலைமுறைகள் கடந்த பின்னர் நிலைமை என்னவாக இருக்கும் முதலானவை விடை காண வேண்டிய வினாக்களாய் நம்முன் உள்ளன.
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே விடை என்னவென்றால் இஸ்லாம் குறித்து மக்களுக்கு மறு கல்வியூட்டுவதுதான் (re-education). காத்திரமற்றமுறையில் வெறும் எதிர்வினையாகக் கற்பது அல்ல நான் இங்கு கூற முயல்வது. நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் உருவாக்கும் பிரச்னைகள் குறித்து அறிவுப்புலத்தில் மறுமதிப்பீடு செய்வதும், அறிவார்ந்த முறையில் இஸ்லாமியக் கல்வியை ஆழ்ந்து கற்பதும், ஆன்மிக மறுவாழ்வுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதுமே இன்று நாம் முன்னெடுக்க வேண்டிய முதன்மைப் பணிகள்.
(Mr. பிலால் முஹம்மதின் ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது)