கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 8

Loading

சலிப்பு என்னும் பெரும் தடை

சலிப்பு ஏற்பட இரண்டு வகையான காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, ஆர்வமில்லாத ஒரு பணியை தொடர்ந்து செய்யும்போது ஏற்படும் சலிப்பு. இரண்டு, நிறைவேற்ற விரும்பும் ஒரு பணியை நிறைவேற்றாமல் இருப்பதால் ஏற்படும் சலிப்பு. கிட்டத்தட்ட இந்த இரண்டும் அல்லது இரண்டில் ஏதாவது ஒன்று பெரும்பாலோரிடம் காணப்படத்தான் செய்கிறது. ஒரு பணியில் நமக்கு ஆர்வம் இருக்கிறது என்ற ஒரு காரணத்தினால் மட்டும் நாம் அதில் ஈடுபடுவதில்லை. அது நமக்கு வருமானமும் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு பணியில் நமக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் நல்ல வருமானம் தரக்கூடியது என்ற பட்சத்தில் நாம் அதில் ஈடுபடுகிறோம். அதற்கான மனநிலையையும் வலிந்து உருவாக்கிக் கொள்கிறோம். பெறுகின்ற சம்பளம் சலிப்பை, விருப்பமின்மையை மறைத்து விடுகிறது. மிகச் சிலரே தமக்கு வருமானம் அதிகம் இல்லாவிட்டாலும் ஆர்வம் இருக்கின்ற பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களிடம் காணப்படும் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பார்வையும் அதற்குக் காரணமாக அமையலாம். பெரும்பாலோர் சமூகத்தில் பரவியிருக்கும் பொது மனப்பான்மையின் அடிப்படையிலேயே தங்களின் பணிகளை அமைத்துக் கொள்கிறார்கள்.

பல தொழில்கள் செய்து தோல்வியடைந்தவர்கள் சமூக சேவைகளில் அல்லது பொதுக் காரியங்களில் வெற்றிகரமாக ஈடுபடுவதை நான் கண்டிருக்கிறேன். அதுதான் அவர்களுக்குரிய களம்போலும். விதி அதனை நோக்கி அவர்களை இழுத்து வந்துவிடுகிறது. அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி அவர்களின் திறமைக்குறைவினால் அல்ல. அவர்கள் வேறு ஒரு தளத்திற்கு உரியவர்கள் என்பதாலும் அதனை நோக்கி அவர்கள் வர வேண்டும் என்பதாலும்தான்.   

ஒருவன் ஒரு துறையில் வெற்றி பெற்றுவிட்டால் அவன் சாதனை புரிந்துவிட்டான் என்பதல்ல. தனக்குரிய துறையை அவன் மிக விரைவிலேயே அடைந்துவிட்டான் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். மதகுருமார்களோ மருத்துவர்களோ அரசியல் தலைவர்களோ கலைஞர்களோ என எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருமே ஒரு வகையில் வணிகர்கள்தாம். ஒவ்வொருவரிடமும் சேவையும் வணிகமும் ஒருசேர கலந்திருக்கிறது. சிலர் அப்பட்டமான வியாபாரிகளாக இருந்தாலும் அவர்களையும் அறியாமல் சேவையிலும் ஈடுபடுகிறார்கள். சிலர் முழுக்க முழுக்க சேவையே எங்கள் நோக்கம் என்று கூறினாலும் இலாபம் அவர்களை உந்து சக்தியாகவும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களின் களங்களை நோக்கி இழுத்து வரப்படுகிறார்கள்.

சலிப்பை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர்கொள்கிறார்கள். சிலர் தங்களுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு சலிப்பைப் போக்க முயற்சிக்கிறார்கள். சிலர் எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். ஏதேனும் ஒன்றால் தங்களை நிரப்பிக்கொள்ள முனைகிறார்கள். அது தங்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியது என்று தெரிந்தாலும் சலிப்பிலிருந்து தற்காலிகமாவது விடுபட்டுவிட வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். சலிப்பிலிருந்து விடுபட அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகளுக்கு நாளடைவில் அடிமையாகியும் விடுகிறார்கள். சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதும் இப்படித்தான்.

ஒவ்வொருவரும் சலிப்பை அவ்வப்போது எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள். அது பல வடிவங்களில் மனிதர்களிடம் வந்துகொண்டேயிருக்கிறது. தனக்கு சலிப்பே ஏற்படாது என்று யாரும் சொல்ல முடியாது. சலிப்பைப் போக்குவதற்கு பெரும்பாலோர் பொழுதுபோக்குகள், கேளிக்கைகளின் பக்கமே திரும்புகிறார்கள். ஒரு மனிதனுக்கு எந்த விசயத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ அந்த விசயத்தில் அவன் ஈடுபடுவதன்மூலமும் அவன் சலிப்பிலிருந்து விடுபடுகிறான்.

சலிப்பு சிலரை பெரும் பெரும் குற்றச்செயல்களின் பக்கமும் தள்ளிவிடுகிறது. ஏதோ ஒரு மாற்றத்தை, எதிர்பாராமையை, விடுபடலை விரும்பியவர்களாக அவர்கள் அசாதரண மனதைரியத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள். சிலர் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்டும் விடுகிறார்கள். 

சலிப்பு சிலரை சமூக சேவையின் பக்கம், ஆன்மிகத்தின் பக்கம் திருப்பவும் செய்கிறது. அவர்கள் அனுபவித்து அனுபவித்து சலிப்படைந்தவர்கள். இன்பத்தின் முடிவில் சலிப்பை உணர்ந்தவர்கள். எந்தவொரு இன்பமும் எல்லைக்குட்பட்டதுதானே. முடிவில் அது சலிப்பை ஏற்படுத்துவம் இயல்புதானே. தொடர் தோல்விகள் சலிப்பை ஏற்படுத்துவதுபோல தொடர் வெற்றிகளும் சலிப்பை ஏற்படுத்தும். தோல்விக்குப் பின்னும் வெற்றிக்குப் பின்னும் எஞ்சியிருக்கும் ஒரே விசயம் சலிப்புதான். 

பணிகளுக்கு மத்தியில் கிடைக்கும் ஓய்வு, களைப்பிற்குப் பிறகு கிடைக்கும் ஓய்வு ஆகியவையே உண்மையான ஓய்வுகள். மனிதனால் வேலையின்றி இருக்க முடியாது. அவன் வருமானத்திற்காக மட்டுமின்றி தன் வெறுமையைப் போக்குவதற்காகவும் களைப்படைவதற்காகவும் ஏதேனும் ஒரு பணியில் ஈடுபட்டே தீர வேண்டும். மகாகலைஞன் வடிவேலு கூறுவதுபோல சும்மா இருப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. அது ஒரு சித்ரவதை.

வேலை செய்யாமல் இருந்தாலும் ஒருவனுக்கு சலிப்பு ஏற்படும். ஒரே வேலையை இடைவிடாமல் செய்து கொண்டிருந்தாலும் அவனுக்குச் சலிப்பு ஏற்படும். வேலை செய்ய வேண்டும். அந்த வேலை தரும் களைப்பில் அவன் ஓய்வெடுக்க வேண்டும். அன்றாட அலுவல்கள் தரும் சலிப்பிலிருந்து விடுபட அவன் பயணம் செய்ய வேண்டும். வாழ்வின் முடிச்சுகளை, இரகசியங்களை அவன் அறிய முற்பட வேண்டும். சக மனிதர்களுடன் சுக, துக்கங்களை அவன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகில் ஒவ்வொன்றும் எதிரெதிர் தன்மைகளையும் பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்று. ஒரு மனிதனின் சலிப்பைப் போக்குவதில் தேடலுக்குப் பெரும் பங்கு உண்டு. தேடல் கொண்டவன், ஏதேனும் ஒன்றில் தீவிர ஈடுபாடு கொண்டவன் எளிதில் சலிப்பிலிருந்து விடுபட்டு விடுகிறான். லௌகீகவாதிகள் எளிதில் சலிப்படைந்து விடுகிறார்கள். லௌகீக வாழ்வு மிகவும் குறுகியதுதான். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் செல்ல என்ன இருக்கிறது என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. ஆகவே அவர்கள் ஊக்கம் குன்றிவிடுகிறார்கள். சிலர் திடீரென அவர்கள் தங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிறுத்திவிடுகிறார்கள்.

வாழ்வின் இரகசியங்கள் என்றும் முடிவடையாதவை. ஆன்மீகத் தேடல் கொண்டவர்கள் எளிதில் சலிப்படைவதில்லை. ஆன்மீக வாழ்வு லௌகீக வாழ்வு போன்று குறுகியதும் அல்ல. அது எல்லையற்ற பெருவெளி. அங்கு அறிதல்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். தகவல்கள் மனிதனை எளிதில் சலிப்பில் ஆழ்த்திவிடுகின்றன. அறிதல்கள் அப்படியல்ல. ஒரு ஆன்மீகவாதியால் இறுதிவரை இயங்கிக் கொண்டேயிருக்க முடிகிறது, அவர் மரணத்தின் வாசனையை அருகாமையில் உணர்ந்தாலும்.

Related posts

Leave a Comment