கட்டுரைகள் 

எது இஸ்லாமிய இயக்கம்?

மிகப் பலரும் நம்பிவருவது போல் இஸ்லாமியக் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய இயக்கங்கள் எதையும் நாம் முழுமையான பொருளில் ‘இஸ்லாமிய இயக்கம்’ என்று கருத முடியாது.
 
ஒரு கட்சி எனும்போது அது தனக்கேயுரிய அங்கத்துவம், கட்சி அறிக்கை, உறுப்பினர் கட்டணம், இன்ன பிற நிறுவன உறுப்புகள் போன்றவற்றை கொண்ட தனித்துவ அமைப்பாக இயங்குகிறது. உதாரணமாக, கட்சி அறிக்கைக்கு இணங்காத எவரும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார். அத்தகையோரின் அபிப்பிராயங்கள் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் அவற்றுக்கு கட்சிக்குள் எந்தப் பெறுமதியும் இருக்காது. எந்தவொரு கட்சிக்கும் இது சற்றேறக்குறைய பொருந்தும்.
 
இத்தகைய இஸ்லாமியக் கட்சிகளை நாம் ‘பகுதியளவு இஸ்லாமிய இயக்கங்கள்’ அல்லது ‘இஸ்லாமிய இயக்கத்தின் பகுதிகள்’ என்று வேண்டுமானால் சொல்லலாம். சரியான, விரிவான பொருளில் இஸ்லாமிய இயக்கம் என்பது ஓர் திறந்த அமைப்பாகும். முஸ்லிம்கள் அனைவரும் அதன் உறுப்பினர்களே. அதற்கென்று உறுப்பினர் படிவம், கட்டணமெல்லாம் இல்லை. அதன் நியமங்கள் முற்றிலும் வேறானவை.
 
இது ஏக காலத்தில் ஒருவித அனுகூலமாகவும் ஒருவிதச் சிக்கலாகவும் இருக்கிறது. நாம் இங்கு வெறுமனே ‘கட்சி’, ‘இயக்கம்’ எனும் வார்த்தைகளுக்கு இடையே உள்ள நுணுக்கமான மொழிப்பொருள் வேறுபாடுகளை விளக்க முயலவில்லை. சற்று ஆழமாகச் சிந்தித்தால், நாம் விளக்கவரும் முக்கியப் பண்புசார் வேறுபாடுகள் நன்கு புலப்படும்.
 
இதிலுள்ள முதன்மை அனுகூலம் என்னவெனில், இஸ்லாமிய இயக்கத்தின் பலமென்பது முழு உம்மத்தின் பலமுமாகும். அடுத்தது, ஒரு இஸ்லாமியக் கட்சியை தடைசெய்ய முடிவது போல் எவரும் இஸ்லாமிய இயக்கத்தை தடைசெய்துவிடவோ முற்றாக அழித்துவிடவோ முடியாது. கட்சித் தலைமையகம் அல்லது உத்தியோகபூர்வ கட்டமைப்பு என்றெல்லாம் இருக்கும்போது மட்டுமே அதைத் தடைசெய்வது சாத்தியம். ஆனால் நாம் மேலே விளக்கிய பொருளிலான இஸ்லாமிய இயக்கத்தை அவ்வாறு முடக்க முடியாது. இஸ்லாமிய வரலாற்றின் மீது ஒரு முழுமைத்துவப் பார்வை செலுத்தி பார்ப்பீர்களாயின் இக்கருத்து தெளிவுபட விளங்கும்.
 
இதில் இருப்பது போல் தெரியும் ஒரு சிக்கல் என்னவென்றால், மக்கள் ஒரு கட்சியுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது போல், மிக எளிமையாக இஸ்லாமிய இயக்கத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் காண முடியாது. காரணம், அதற்கென்று ஒரு உத்தியோகபூர்வ கட்டமைப்பு இருப்பதில்லை. கட்சிகள் என்றால் மக்கள் அதன் அலுவலகத்திற்கு சென்று வருவார்கள்; அதற்கென்று ஒரு அதிகாரப் படிநிலை அமைப்பு இருக்கும். ஆனால், இஸ்லாமிய இயக்கத்தில் அப்படியொன்று இல்லை. உண்மையைச் சொல்வதென்றால் இஸ்லாமிய இயக்கம் சமூகத்தில் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்; அதேவேளை அதை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அது ‘எங்கும் இல்லை’ என்று கூடச் சிலர் சொல்லலாம்.
 
இவ்வாறு அரூபமான கருத்துக்களாகப் பேசுகையில் தெளிவாகப் புரிந்துகொள்ள கடினமானதாகத் தோன்றலாம். ஆனால், வரலாற்றிலும் சமகாலத்திலும் நாம் காணும் கட்சிகளையும் இயக்கங்களையும் மேலே முன்வைக்கப்பட்ட அடிப்படைச் சட்டகத்திற்குள் வைத்துப் பார்க்க முயன்றால், நாம் விளக்கவரும் முழுக் கருத்தும் மெல்ல புரிபடத் துவங்கும். இறைத்தூதர்கள், முஜத்திதுகள், முஜாஹிதுகள் எனச் சகலரது போராட்ட வரலாறுகளும் இதற்கு சான்று பகர்வதை புரிந்து கொள்ள முடியும்.
 
இஸ்லாமிய இயக்கம் என்பது இஸ்லாத்தின் சமூக-அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக உம்மத்திற்குள் செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு அல்லது பல ‘அரசியல் கட்சி’ அல்ல என்பதே நாம் கூற வரும் அடிப்படையான செய்தி. மாறாக, அந்த குறிக்கோள்களுக்காக முழு உம்மத்தையும், அதன் ஒட்டுமொத்த வளங்களையும் அணிதிரட்டுவதையே இஸ்லாமிய இயக்கம் அதன் அசல் பொருளில் பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த நோக்குநிலையிலிருந்து பார்த்தால், முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி, தலைமை தாங்கி இயக்கியது வேறு யாருமல்ல, அண்ணல் நபிகள் அவர்கள்தான்.
 
ஆனால், அரசியல் குறிக்கோள்களுக்காக ‘அரசியல் கட்சி’ பாணி குழுக்களை உருவாக்கும் இன்றைய அணுகுமுறையின் வேர்களை, நீங்கள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய ஐரோப்பாவின் சூழமைவில் காணலாம். கம்யூனிச, ஃபாசிச-நாஜி கட்சிகளே இந்த அணுகுமுறையின் முன்னோடிகள். இதை வெறும் எதிர்மறைப் பொருளில் மட்டும் சொல்லவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
 
அல்லாஹ்வின் நாட்டத்தை இந்த உலகில் நிலைநாட்டுவதற்காகவும், நீதியின் மீதமைந்த சமூக அமைப்பை நிறுவுவதற்காகவும், நன்மையை ஏவித் தீமையைத் தடை செய்தல் உள்ளிட்ட இஸ்லாத்தின் ‘அரசியல்’ குறிக்கோள்களை மெய்ப்படுத்திக் காண்பதற்காகவும் ஒட்டுமொத்த உம்மத்தையும் அதன் முழு வலிமையோடு எழுச்சிபெறச் செய்து, அல்லாஹ்வின் பாதையில் முன்னேறச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் கூட்டு உழைப்பே, சரியான பொருளில் இஸ்லாமிய இயக்கமாகும். எல்லாவற்றிலும் போல் இதிலும் நபிகளாரே நமக்கு முன்மாதிரி.
 
நபிக்குப் பிந்தைய புத்தாக்க (தஜ்தீத்) முயற்சிகளும் கூட நாம் கூறவரும் கோணத்தை உறுதிசெய்பவையாகவே இருப்பதைக் காணலாம். அதேவேளை, மேலே குறிப்பிடப்பட்ட இஸ்லாத்தின் குறிக்கோள்களை அவற்றின் முழுமையான பரிமாணத்தில் சாதிப்பதற்கு இன்றைய அரசியல் கட்சி அணுகுமுறை அவ்வளவு பொருத்தமானது இல்லை என்பதை அல்ஜீரியா, எகிப்து, துருக்கி என உலகின் பல்வேறு பகுதிகளிலும் ‘இஸ்லாமியக் கட்சிகளுக்கு’ கிடைத்துள்ள கடந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவம் தெளிவாகக் காட்டுகிறது.
 
இஸ்லாமியக் கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலமோ, அல்லது வேறு சிலர் கனவு காண்பது போல் இராணுவக் கலகங்களை நிகழ்த்தியோ ஒருபோதும் இஸ்லாத்தின் குறிக்கோள்களை முழுமையாகச் சாதிக்க முடியாது. இவை போன்ற பிழையான கற்பிதங்கள், ஒரு விதத்தில் இஸ்லாமிய இயக்கத்தை இனக்குறைப்பு செய்வதாகவே அமைகின்றன.
 
இஸ்லாமிய அரசியல் கட்சிகள், சமய மறுமலர்ச்சி இயக்கங்கள், சேவை நிறுவனங்கள், சிறு குழு அல்லது தனிமனித முயற்சிகள் அனைத்தும் இஸ்லாத்தின் குறிப்பான நோக்கங்களைச் சாதிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் உருவாக்கி வளர்த்தெடுக்கப்படும் ஒட்டுமொத்த இஸ்லாமிய இயக்கத்தின் ‘பகுதிகள்’. அவற்றின் பங்கு, பாத்திரம் இன்றியமையாதது. எனினும், அவற்றை அவற்றுக்குரிய இடத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். மிகைப்படுத்தவும் கூடாது, குறைக்கவும் கூடாது.
 
இஸ்லாமிய இயக்கம் எடுக்க வேண்டிய வடிவங்களும் வியூகங்களும், இஸ்லாத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு இசைந்து செல்லும் வகையில், இஸ்லாத்தினால் ஆகுமாக்கப்பட்ட பரந்த ஒரு எல்லைக்குள்ளாக பற்றுறுதி மிக்க முஸ்லிம்களின் தெரிவுக்கே விடப்பட்டுள்ளன. கட்டுரை கவனப்படுத்த விரும்புவது இந்த யதார்த்தத்தை மட்டுமே.
 
இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களை தோற்றுவித்தவர்கள் யாரும் தம்முடையது மட்டும்தான் இஸ்லாத்தின் பரிபூரண அமலாக்கத்திற்கான ஒரே இயக்கம் என்று உரிமை கோரவில்லை என்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உண்மைதான். எனினும், அது எல்லா நேரங்களிலும் அவ்வாறு சரியாகவே புரிந்து கொள்ளப்படுகிறது என எவரும் வாதிட முடியுமா? அத்தகைய சரியான புரிதல் இல்லாத காரணத்தால், முன்பும் இப்போதும் நாம் எவ்விதமான பிரச்சினைகளையும் சந்திக்க நேரவில்லை எனக் கூறத்தான் முடியுமா? பல சமயங்களில் ‘பெரிய சித்திரம்’ மறந்தே போய் விடுகிறது அல்லவா! அதை நினைவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமும்.
 
அடுத்தது, ‘இஸ்லாமிய இயக்கம்’ என்பதே கூட ஒரு நவீன காலத் தோற்றப்பாடுதானே எனும் வகையில் கேள்வி எழுப்பப்படுகிறது. ஒருவகையில் அது சரிதான் என்றாலும், கட்டுரையை ஊன்றிக் கவனித்தீர்களேயானால், அது ‘இஸ்லாமிய இயக்கம்’ எனும் குறிப்பான பதத்தை நோக்கி தனது கவனத்தைக் குவிக்காமல், அதன் மூலம் நாடப்படும் மெய்ப்பொருளை நோக்கி உரையாடியிருப்பதைக் கண்டுகொள்ள முடியும். எனவேதான், முதலாவது இஸ்லாமிய இயக்கம் என்பதாக அண்ணல் நபிகளாரின் ‘இஸ்லாமிய இயக்கத்தை’ குறிப்பிடுகிறது. சொற்பிரயோகம் நவீன காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் ஆன்மா நபிமார்களின் —குறிப்பாக அண்ணலாரின்— இஸ்லாமிய இயக்கத்தில் வேர்கொண்டுள்ளது என்பது நன்கு புலப்படும்.
 
அதேபோல், கட்டுரை கூறவரும் மற்றொரு முக்கியமான செய்தியும் இருக்கிறது. அதாவது, மேற்குறிப்பிட்ட வடிவங்களையும் வியூகங்களையும் தெரிவு செய்வோருக்கு, அவற்றின் அனுகூலங்கள் மற்றும் போதாமைகள் குறித்த விழிப்பும் புரிதலும் அவசியம் இருக்க வேண்டும். அவற்றை ‘மாறாதவை’ போல் எடுத்துக் கொண்டு விடக் கூடாது.
 
தமது நீண்ட காலச் செயற்பாடுகளை விமர்சன நோக்கில் அணுகி மீளாய்வு செய்யும் போது, தமது செயற்பாடுகளையும் வியூகங்களையும் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல், தமது ‘இயக்கத்தின்’ வடிவங்களை குறித்தும் ஒரு கறாரான மீள்பார்வை செலுத்த வேண்டும். இஸ்லாமிய இயக்கத்தின் மற்ற ‘பகுதிகளின்’ அனுபவங்களில் இருந்து பாடம் படித்துக் கொள்ள முயல வேண்டும். இல்லாவிடில், அந்த மற்ற ‘பகுதிகள்’ செய்த அதேவிதமான தவறுகளை நாமும் இழைக்க வேண்டிவரும். ‘ஒரு முஸ்லிம் ஒரே துளையில் இருமுறை கடி வாங்க மாட்டான்’ அல்லவா!
 
இவை அனைத்தையும் செய்ய வேண்டுமானால். தாம் உண்மையில் உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் ஒரு ‘பகுதி’ என்ற தன்னுணர்வு அவசியம். அந்த தன்னுணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் எளிய நோக்கம்.
 
இறைவனே நன்கறிந்தவன்!

Related posts

Leave a Comment