கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இறைவனைப் படைத்தது யார்?

Loading

பன்னெடுங்காலமாக விவாதிக்கப்பட்டுவரும் ஓர் அம்சம், இறைவனைப் படைத்தது யார் என்பது. பெரும்பாலும் இக்கேள்வி தனித்து எழுவதில்லை. இப்பிரபஞ்சத்தை இறைவன் படைத்தான் என்று இறைநம்பிக்கையாளர்கள் கூறும்போதோ அல்லது தர்க்கரீதியான ஒரு குறிப்பிட்ட வாதத்தின் மூலம் இறைவனின் இருப்பை நிரூபிக்க முயலும்போதோ இக்கேள்வி எழுகிறது.

எம்முடைய வாதம்

  • இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உண்டு. (உதாரணத்திற்கு, ஒரு கைப்பேசி இல்லாமல் இருந்தது. பிறகு அதை உருவாக்கினார்கள். அது இருப்பதற்கு ஒரு காரணி அல்லது படைப்பாளன் உண்டு)
  • இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஒரு காரணி உள்ளது.
  • அந்தக் காரணிதான் இறைவன்.

உடனே இங்கொரு கேள்வி எழும், “எல்லாவற்றிற்கும் ஒரு காரணி தேவை எனும்போது இந்த முதல் காரணிக்கு மட்டும் ஏன் ஒரு காரணி இருக்கக்கூடாது, இதன் காரணி எது/யார்?”

இக்கேள்விக்கு பல விதத்தில் நாம் பதிலளிக்கலாம்.

1. இருப்பில் உள்ள அனைத்திற்கும் காரணி தேவையில்லை

இல்லாமை நிலையிலிருந்து இருப்பிற்கு வருபவைக்கு மட்டுமே காரணி தேவைப்படுகிறது. இறைவன் எப்போதும் இருப்பவன் என்பதால் இறைவனுக்கு காரணியே தேவையில்லை. எப்போதும் இருப்பவன் என்பதே இறைவனின் சாரம்சமும் வரைவிலக்கணமும்.

2. முடிவின்றி வெவ்வேறு நிலைக்குச் சென்று கொண்டே இருத்தல் (Infinite regress)

முடிவிலி (Infinity) என்பது ஒரு கணித கருத்துகோள். இது கணிதவுலகில் மட்டுமே சாத்தியமே தவிர நிஜ உலகில் இயற்பியல் ரீதியாக சாத்தியமில்லை.

ஒரு வேளை, இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த காரணிக்கும் ஒரு காரணி இருந்தால், அப்போது அதற்கான காரணி எது எனும் கேள்வி முடிவே இல்லாமல் நீளும். பிரபஞ்சத்தை உருவாக்கிய காரணியைத் தோற்றுவிக்கவே முடிவிலி நேரம் தேவைப்படும் (Infinite time). அதன் விளைவாக பிரபஞ்சமே தோன்றியிருக்காது. ஆனால், பிரபஞ்சம் உள்ளது எனும்போது ஒரு முதல் காரணியும் உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

ஏன் நிஜ உலகில் முடிவிலி சாத்தியமில்லை என்பதற்கு ஓர் உதாரணம்:

ஒரு தீவிரவாதியைக் கொல்ல ஓர் அதிகாரி அவரது மேலதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த மேலதிகாரி அவரின் மேலதிகாரியிடம் ஒப்புதல் வாங்கவேண்டும். பிறகு, அவரும் அவருடைய மேலதிகாரியிடம் ஒப்புதல் பெறவேண்டும். இவ்வாறு இது சென்று கொண்டே இருக்கும். ஏதோ ஒரு கட்டத்தில் நிற்காமல், இது சென்று கொண்டே இருந்தால் அந்த முதல் அதிகாரி ஒப்புதல் பெற்று தீவிரவாதியைக் கொல்லவே இயலாமல் போகும்.

3. இறைவனின் வரைவிலக்கணம்

இறைவனின் வரைவிலக்கணமே அவன் தொடக்கமற்றவன், நிலையானவன், காலத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதே. அவ்வாறிருக்கையில், தொடக்கமற்றவனை யார் படைத்தது (அதாவது தொடங்கச் செய்தது) என்று கேட்பது முரண்பாடான கேள்வி. இது முக்கோணத்திற்கு ஏன் நான்கு கோணங்கள் இல்லை எனக் கேட்பது போலாகும். முக்கோணத்தின் வரைவிலக்கணமே அது மூன்று கோணங்களுடையது என்பதுதானே!

மேலும், இறைவனை யாராவது, ஏதாவது படைத்திருந்தால் அது ஏதோ ஒரு வகையில் இறைவனைவிடவும் முக்கியமானதாக, உயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், இறைவனைவிட எதுவும் உயர்ந்ததாக இருக்க முடியாது. ஏனெனில், அதுவும் இறைவனின் வரைவிலக்கணமே. அவ்வாறிருந்திருந்தால் நாம் அதையே இறைவன் என்போம். மீண்டும் அதே கேள்விகள் எழும், மீண்டும் அதே பதில் வரும். இது முடிவிலியாகச் செல்லும்.

ஒருவேளை, இறைவனுக்கு ஒரு படைப்பாளனோ காரணியோ இருந்தால், அதற்கான படைப்பாளனும், காரணியும் யார் என்ற கேள்வி வரும். பின்பு, அதற்கான காரணி யார் என்று கேள்வி முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். மேலே குறிப்பிட்ட தீவிரவாதி – மேலதிகாரி உதாரணத்தைப் போல. அதன் விளைவாக எதுவுமே இருந்திருக்காது. ஆனால், நாம் அனைவரும் இருக்கிறோம் அல்லவா? இதுவே காரணிகள் முடிவில்லாமல் செல்ல இயலாது என்பதற்கான சான்றாகும்.

இறைவனைப் படைத்தது யார் எனும் இந்தக் கேள்வியை மற்றொரு கோணத்தில் அணுகலாம்.

ஏன் வெறுமை நிலையின்றி ஏதோ ஒன்று உள்ளது?

இருப்பில் உள்ள அனைத்துப் பொருள்களையும் நாம் அதன் இருத்தல் நிலை மற்றும் சாரம்சத்தை (வரைவிலக்கணம்) வைத்து மூன்று சாத்தியங்களாகப் பிரிக்கலாம்.

  1. தற்செயலான உள்ளமை (Contingent being)
  2. சாத்தியமற்ற உள்ளமை (Impossible being)
  3. இன்றிமையாத உள்ளமை (Necessary being)
1. தற்செயலான உள்ளமை

தற்செயலான உள்ளமை யாதெனில் அது நிச்சயமாக இருந்தே ஆகவேண்டும் என்றோ அல்லது இவ்வாறுதான் இருந்திருக்க வேண்டும் என்றோ எந்தவொரு தேவையுமில்லை.

கிட்டத்தட்ட நாம் அன்றாடம் காணும் பொருள்கள் அனைத்தும் இதற்கு உதாரணங்கள். ஒரு நாற்காலி உங்கள் முன்னே உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அது நாற்காலியாக இல்லாமல் வேறு ஒரு பொருளாகவும் இருந்திருக்க இயலும். அல்லது, அந்த நாற்காலி எந்த மரத்திலிருந்து உருவாக்கப்பட்டதோ அம்மரத்தை வெட்டாமல் இருந்திருந்தால் அது இன்னும் மரமாகவே இருந்திருக்கும். அதுபோலவே அம்மரம் எந்த விதையிலிருந்து வந்ததோ அவ்விதையைப் புதைக்காமல் இருந்திருந்தால் அம்மரம் இருந்திருக்காது. இவையெல்லாம் இவ்வாறு இருத்தல் நிலையிலிருக்க வேண்டும் என்று எந்தவொரு தேவையுமில்லை.

அது போலவே இவையெல்லாம் மற்றொன்றின் மீது சார்ந்து இருக்கிறது. சூரியன் இல்லையென்றால் மரம் இருந்திருக்காது. மரம் இல்லையென்றால் நாற்காலி இருந்திருக்காது. சூரியனிலுள்ள மின்னணுக்கள் இல்லையென்றால் சூரியனே இருந்திருக்காது.

ஆக, தற்செயலான இருத்தல் நிலையைக் கொண்ட அனைத்தும் வேறு ஒரு பொருளாக இருந்திருக்க முடியும். மட்டுமின்றி, அது எப்போதும் மற்றொன்றின் மீது சார்ந்தே இருக்கும்.

2. சாத்தியமற்ற உள்ளமைநிலை பொருள்கள்

எல்லாப் பொருள்களுக்கும் ஒரு வரைவிலக்கணம் அல்லது சாரம்சம் இருக்கும். அந்த சாரம்சம்தான் ஒரு பொருளை மற்றொன்றிலிருந்து பிரித்துக்காட்டும்.

ஒரு நாற்காலியின் சாரம்சம், அது அமர்வதற்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும். அதற்கு நான்கு கால்கள் உள்ளனவா, மூன்று கால்கள் உள்ளனவா என்பது தேவையற்றது. அது எவ்வண்ணத்தில் உள்ளது என்பதும் தேவையற்றது. ஏனெனில், அமர ஏற்றாற்போல் உள்ள தன்மையே அதன் சாரம்சம்.

சாத்தியமற்ற உள்ளமைநிலை பொருள்கள் எவையெனில், அதன் இருத்தல் நிலையும் சாரம்சமும் முரண்படும். ஒரே நேரத்தில் ஒரு நாற்காலி முழுவதும் கறுப்பு நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் இருக்க முடியாது. அதுபோலவே, ஒரு முக்கோணத்திற்கு நான்கு கோணங்கள் இருக்க முடியாது. இவற்றையே சாத்தியமற்ற உள்ளமை பொருள்கள் என்கிறோம்.

3. இன்றியமையாத உள்ளமைநிலை

ஏன் வெறுமை நிலையின்றி ஏதோ ஒன்று இவ்வுலகில் உள்ளது என்பது தத்துவவியலின் மிக முக்கியமானதொரு கேள்வி.

பதில், இன்றியமையாத உள்ளமை.

அதன் சாரம்சமே அதன் உள்ளமைநிலைதான். வேறு விதமாகச் சொல்ல வேண்டுமானால், அது இல்லாமல் இருக்க இயலாது. எப்படி ஒரு முக்கோணத்தின் சாரம்சம் அதன் மூன்று கோணங்களோ அதேபோன்று இந்த இன்றியமையாத இருப்பின் மெய்மையின் சாரம்சம் இருத்தல் நிலை ஆகும்.

இந்த இன்றியமையாத உள்ளமை இரண்டாகவோ மூன்றாகவோ இருக்க இயலாது. அது தர்க்க ரீதியாக சாத்தியமற்றது.

உதாரணத்திற்கு, இரண்டு இன்றியமையாத உள்ளமை இருப்பதாகக் கொள்வோம். ஒரு இன்றியமையாத உள்ளமையிலிருந்து இன்னொன்றை எவ்வாறு வேறுபடுத்த இயலும்! ஏனெனில், அவை இரண்டும் ஒரே வகையான இயல்புகளுடையன. அவற்றை வேறுபடுத்த ஒன்றிடம் இல்லாத ஏதோ ஒரு பகுதி அல்லது அம்சம் மற்றொன்றிடம் இருக்க வேண்டும். ஆனால், இன்றியமையாத உள்ளமைக்கு பகுதிகள் இருந்தால் அது தானாகவே இருத்தல் நிலையில் உள்ளது என்றல்லாமல், அந்தப் பகுதியைச் சார்ந்து உள்ளது என்றாகிவிடும். எனவே, அது தற்செயலான சார்ந்து உள்ள உள்ளமை ஆகிவிடும். எனவேதான், இன்றியமையாத உள்ளமை இரண்டாகவோ அதிகமாகவோ இருக்க முடியாது.

ஆக, இறைவனின் இருப்பை இப்படியான தத்துவ விசாரணைகளும் நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இவற்றில் மூலம், யார் இறைவனைப் படைத்தது என்பது அடிப்படையற்ற கேள்வி என்பதும் நிறுவப்படுகிறது.

Related posts

Leave a Comment