கட்டுரைகள் 

சர்ச்சையாக்கப்படும் ஹலால் உணவு!

Zomatoவில் ஆர்டர் செய்த உணவைத் தனக்கு ஒரு முஸ்லிம் எடுத்துவரக் கூடாது என்று அமித் ஷுக்லா என்பவர் களேபரம் செய்தது ஒரு மாதத்துக்கு முன்னர் பெரியளவுக்குப் பேசப்பட்டது. அந்தச் சமயத்தில் சொமேட்டோ நிறுவனர், “உணவுக்கு மதமில்லை; உணவே மதம்தான்” என்று கூறியவுடன் சமூக ஊடகங்களில் ஹலால் உணவு சார்ந்த விவாதத்தை இந்து நாஜிகள் ஆரம்பித்திருந்தனர். இப்போது சொமேட்டோவைத் தொடர்ந்து மெக்டொனால்ட் சர்ச்சை உருவாகியிருக்கிறது. தங்களிடம் ஹலால் உணவு வழங்கப்படுவதாக மெக்டொனால்ட் நிறுவனம் கூறியதைப் பிரச்னையாக்கியிருக்கிறார்கள்.

இப்படியான பிரச்னைகள் பொதுவெளியில் உருவெடுப்பதே முதலில் சிக்கலுக்குரிய ஒன்று. பொதுமனம் கடுமையாக மாசுபடிந்திருப்பதையே இது நமக்குக் காட்டுகிறது. சொமேட்டோ சர்ச்சையில் அமித் ஷுக்லாவின் படுமோசமான அந்தச் செயல்பாடு மட்டும்தான் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கவேண்டும். ஆனால், தீய நோக்கு கொண்டோரால் அது ஹலால் சார்ந்த விவாதமாய் திசை மாற்றப்பட்டது. மேற்கூறிய இரு சர்ச்சைகளும் வெறும் உணவு சம்பந்தப்பட்ட விஷயமோ தனியொரு நபர் சார்ந்த விஷயமோ அல்ல. கார் வாடகைக்கு எடுத்து, முஸ்லிம் ஓட்டுநர் வந்ததற்காக அதை கேன்சல் செய்த சம்பவமெல்லாம் இதற்கு முன்னர் நடந்திருக்கின்றன. முஸ்லிம்கள் மீதான காழ்ப்பும் குரோத மனப்பான்மையும் சமூகத்தைப் பீடித்திருக்கின்றன என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இந்த மனோபாவம் குடிமக்களிடம் எப்படி உருவாகிறது என்பதுதான் இங்கு முக்கியமான வினா.

அடுத்தது, ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) உணவை மட்டும் சாப்பிடுவதாக முஸ்லிம்கள் சொல்வது இந்துக்கள் மீதான பகையுணர்வாகுமா என்பது.

இந்து–முஸ்லிம் சமூக உறவுகளைக் குலைக்கும் விதமாக வலதுசாரி இந்துத்துவ இயக்கங்கள் நெடுங்காலமாகச் செய்துவரும் விஷமத்தனமான வெறுப்புப் பிரச்சாரத்தின் அறுவடையாக இந்த சொமேட்டோ, மெக்டொனால்ட் விவகாரங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. டெலிவரி பாயாகக்கூட எவ்வொரு முஸ்லிமும் தன்னிடம் வரக்கூடாது என நினைக்கும் ஒருவன், தன்னுடைய வாழ்நாளில் தான் எதிர்கொள்ளும் முஸ்லிம்களை எப்படி அணுகுவான் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு அமித் ஷுக்லா மட்டுமல்ல, இவரைப் போல பலரும் இப்படி மதவெறிக்குப் பலியாகி தம் மனிதத்தன்மையை இழந்து வருகிறார்கள். ஆம், இந்த வகையினர் நம்மிடையே ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, போலீஸ்காரர்களாக, அரசு ஊழியர்களாக, வியாபாரிகளாக வலம் வருகிறார்கள். இது பல்வேறு மோசமான சிக்கல்களை மக்களிடையே உண்டாக்கவும் செய்கிறது. இப்படிச் சொல்வதன் பொருள், குடிமக்களான இந்துக்கள் எல்லோரும் மோசமாகிவிட்டார்கள் என்பதல்ல. ஏராளமான நல்லுங்களை நாம் தினந்தினம் சந்திக்கவே செய்கிறோம். அதேசமயம், பொதுபுத்தியில் மதவெறி, இஸ்லாம்-வெறுப்பு ஆழமாகக் குடிகொண்டுள்ளதை நாம் கவனிக்கத் தவறிவிடலாகாது. இந்தச் சமூகத்தில் சாதி எப்படி நிறுவனமயப்பட்டிருகிறதோ அதுபோல இஸ்லாமோ ஃபோபியாவும் நிறுவனமயப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்க ஒன்று.

தீய அரசியல் நோக்கத்துடன் சர்ச்சையாக்கப்படும் ஹலால் உணவு பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். ஹலால் குறித்த மக்களின் அறியாமையை தங்களுக்குச் சாதகமாக மதவெறிச் சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்துக்கள் சமைக்கும் உணவுப் பொருட்களை (அது அசைவமாக இருந்தாலும்) சாப்பிட மாட்டேன் என்று முஸ்லிம்கள் ஒருபோதும் சொல்வதில்லை. ‘ஆச்சாரம்’ பார்த்து ஒதுக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடம் கிடையாது. அதிகபட்சம், சாமிக்குப் படைத்ததை அவர்கள் சாப்பிட மறுக்கலாம் அல்லது இஸ்லாமிய வழிமுறையில் அறுக்கப்படாத மாசிச வகைகளைத் தவிர்க்கலாம். அதற்கான காரணம் நிச்சயமாக சாதிப் புனிதம் காப்பதோ பகையுணர்வோ அல்ல. ஆனால், இங்கிருக்கும் சில விஷஜந்துக்கள் இவற்றைப் பூதாகரப்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களை எதிர்நிலையில் நிறுத்துகின்றன.

ஹலால் என்பது உணவு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. அந்த அறபிச் சொல்லுக்கு ‘அனுமதிக்கப்பட்டது’ என்று பொருள். வாழ்வில் எவற்றையெல்லாம் இறைவன் மனிதனுக்கு அனுமதித்துள்ளான் எனும் விரிந்த பொருளில் முஸ்லிம்கள் அதைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு நேரெதிராக ஹறாம் என்பதை ‘தடுக்கப்பட்டது’ எனும் அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர்.

உணவிலும் இஸ்லாமிய வரம்புகள் உண்டு என்பதால் இன்னின்ன உணவு வகைகள் அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏனையவை விலக்கப்பட்டவை என்றும் கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு, காய்கறிகள், கோழி, ஆடு, மீன் போன்றவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல கோரைப்பற்கள் உள்ள விலங்குகள், மது உள்ளிட்ட போதை வஸ்துகள் இஸ்லாமில் அனுமதிக்கப்படுவதில்லை. தடுக்கப்பட்ட உணவினுடைய கலப்பு குடிக்கும் பானங்களிலோ சாப்பிடும் பிஸ்கட் போன்றவற்றிலோ இருந்தால் அதையும் முஸ்லிம்கள் உட்கொள்வதில்லை. இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் இருக்கிறதா என்று சாப்பிடும் பொருள்களில் பார்ப்பார்கள்.

இதுபோக, சாப்பிடத் தகுந்த உயிரினங்களை எப்படி அறுப்பதற்கு முன்னும் பின்னும் அணுக வேண்டும் என்பதற்கும் நெறிமுறைகள் இருக்கின்றன. மேலும், அது இறைவனின் பெயர் கூறி அறுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. சுத்தமான, ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்காத பொருள்களை மட்டுமே உட்கொள்ளும்படி இஸ்லாம் கோருகிறது. அதற்குத்தக வழிகாட்டுதல்களும் வழங்குகிறது.

உணவுக்காக ஒரு கோழியை அறுக்கிறோம் என்றால் அது ஆரோக்கியமான நிலையில் இருக்கிறதா என்பதில் தொடங்கி, அதற்கு முன்னர் அது முறையாக நடத்தப்படுவது, அதை அறுக்கும்போது மற்ற பறவைகள்/ விலங்குகள் பார்க்காதபடி வைத்துக்கொள்வது, கூரிய கத்தியைப் பயன்படுத்தி அறுப்பது, ரத்தத்தை உடலில் உறைய விடாமல் வெளியேற்றுவது என்பன வரை சில ஒழுங்குகள் பேணப்பட வேண்டும். உண்மையில், இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படும் விலங்குக்கோ, பறவைக்கோ அதிக வலியும் கஷ்டமும் இருக்காது என்பது அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட ஒன்று.

சமைப்பவரோ, உணவைக் கொண்டு வந்து தருபவரோ, அதைப் பரிமாறுபவரோ இந்துக்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ இருப்பதை முஸ்லிம்கள் கேள்வி எழுப்புவதே இல்லை. பிற சமூக மக்களுக்கு உணவு சமைத்துத் தந்தும், அவர்களிடமிருந்து பெற்றுச் சாப்பிட்டும் இத்தனை ஆண்டுகள் சுமூகாக முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கு சொமேட்டோ, மெக்டொனால்ட் சர்ச்சைகள் மாதிரியான விநோதப் பிரச்னைகள் மேலெழுவது அபாயகரமானதே.

தற்காலத்தில் முஸ்லிம் பண்பாடுகளும் அடையாளங்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதோடு, அவை சமூகத்துக்கு ஓர் அச்சுறுத்தல்போல் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு பன்மைச் சமூகத்தில் ஒருவரின் நம்பிக்கையை, பழக்க வழக்கங்களை இன்னொருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ள முயற்சிப்பதே சுமூகமான, இணக்கமான வாழ்வுக்கு வழிகோலும். நாம் வாழும் காலத்தில் அதற்கான தேவை அதிகமாகவே இருக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கது.

(நன்றி: சமூகநீதி முரசு)

Related posts

Leave a Comment