கட்டுரைகள் 

தூக்கமும் மனம் அடையும் அமைதியும்

இஸ்லாம் தூக்கத்தை சிறு மரணம் என்று வர்ணிக்கிறது. தூக்கத்தில் மனிதனின் ஆன்மா கைப்பற்றப்படுகிறது. பின்னர் அது திருப்பி அனுப்பப்படுகிறது. யாருக்கு இறைவன் மரணத்தை விதித்து விடுகிறானோ அவரது ஆன்மா திருப்பி அனுப்பப்படுவதில்லை. மரணம் என்பது பெரிய தூக்கம். அதில் ஆன்மா நிரந்தரமாக கைப்பற்றப்படுகிறது. தூங்கும்பொழுது நம்பிக்கையாளன் குறிப்பிடும், “அல்லாஹ்வே! உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன்; உயிர்பெறுகிறேன்” என்ற வாசகம் அவனுக்கு வாழ்வின் எதார்த்தத்தை, அவன் அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை, அவனுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு புதிய நாளும் அவனுக்கான அருட்கொடையே என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது.

தூக்கம் என்பது சிறு மரணம். நாம் தூங்குவதுபோல மரணிப்போம். விழித்து எழுவதுபோன்று மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோம். தூங்குவதும் விழித்து எழுவதும் நம் வாழ்வின் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் செயல்பாடுகள்.

தூக்கத்தில் நம் உடல் ஓய்வு கொள்கிறது. அது களைப்பிலிருந்து விடுபட்டு தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. தூக்கம் நம் துக்கத்தை, கவலைகளை மறக்கடிக்கிறது. உடல் சுமைகளை இறக்கிவிட்டு கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறது. தூக்கம்கூட மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள மாபெரும் அருட்கொடைதான். அவனிடமிருந்து அது பறிக்கப்பட்டுவிட்டால் அவனைச் சுற்றிக் காணப்படும் அனைத்தும் அவனுக்குக் கருப்பாகிவிடும். அவனால் எதையும் அனுபவிக்க இயலாமல் போய்விடும். சுமைகளைச் சுமக்க முடியாமல் அவன் வீழ்ந்துவிடுவான். மனப்பிறழ்வு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடும்.

துக்கத்திலிருந்து விடுபடுவதற்கு தூக்கம் மிகச்சிறந்த நிவாரணி. துக்கத்தில் மூழ்கியவர்கள் தூக்கத்தின் பக்கம் அடைக்கலம் தேடுகிறார்கள். இயற்கையாக தூங்க முடியாதவர்கள் மாத்திரைகளின் வழி தூங்க முயற்சிக்கிறார்கள். உங்களால் ஆழ்ந்து உறங்க முடிந்தால் எளிதாக எல்லாவற்றையும் கடந்து விடுவீர்கள். ஆழ்ந்த உறக்கமும் ஒரு அருட்கொடைதான். அது கவலைகளிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கும் அருமருந்து. நினைத்தவுடன் தூங்கக்கூடியவர்கள் பெரும் பாக்கியவான்கள்.

மனிதனால் உறங்காமல் இருக்க முடியாது. தூக்கமின்மை ஒரு பெரும் நோய். அது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நோய்களை உருவாக்கும் நோய். தூக்கம் மனிதனிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டால் ஒட்டுமொத்தமாக அவனிடமிருந்து அனைத்துமே பறிக்கப்பட்டுவிடும். அது அவனுடைய உயிரையும் பறித்துவிடலாம்.

இரவு தூங்குவதற்கானது. இறைவன் இரவை தூக்கத்திற்காகவே அமைத்திருக்கிறான். அது நம்மை மென்மையான முறையில் தழுவிக்கொள்கிறது. ஒரு ஆடைபோல நம்மை மூடிக்கொள்கிறது. விழித்திருக்கும் இரவில் குர்ஆனின் ஒரு வசனம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருவதுண்டு. அது அந்நபஃ என்ற அத்தியாயத்தின் பின்வரும் வசனம்தான்: “நாம் உங்களுக்கு தூக்கத்தை ஓய்வெடுப்பதற்காகவும் இரவை உங்களுக்கு ஆடையாகவும் ஆக்கியுள்ளோம்.” இரவில் கண்விழித்து படிக்க வேண்டும் என்றும் என் பணிகளை இரவில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பல சமயங்களில் எண்ணியதுண்டு. பல ஆளுமைகள் இரவில் கண்விழித்து நீண்ட நேரம்வரை வாசித்திருக்கிறார்கள் என்று நான் வாசித்திருந்ததும் பல சமயங்களில் இரவில் விழித்திருக்க என்னை ஊக்கப்படுத்தியதுண்டு. ஆனால் ஒன்றை மறந்துவிட்டேன், இரவில் விழிப்பவர் பகலில் தூங்கிவிடுவார் என்பதை. மனிதனுக்கு குறிப்பிட்ட நேரம்வரை தூக்கம் அவசியம். இரவில் தூங்காதவர் பகலில் தூங்குவார்.

இரவு மனிதர்கள் என்ற வகையினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் விதிவிலக்கானவர்கள். இரவு எனக்கு வேறொரு அனுபவத்தைத் தருகிறது. அது என்னை வேறொரு மனிதனாக மாற்றிவிடுவதை உணர்கிறேன். பகலில் வெளிப்படும் மனிதன் வேறு, இரவில் வெளிப்படும் மனிதன் வேறு என்று எனக்கு அது கற்றுத் தருகிறது.

இரவில் வெளிப்படும் மனிதன் வேறு. பகலில் வெளிப்படும் மனிதன் வேறு. பகல் அவனை வெட்ட வெளிச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது. அவன் தவறு செய்ய அஞ்சுகிறான், வெட்கப்படுகிறான். இரவு அப்படியல்ல. அது அவனை மூடி மறைக்கிறது. இரவுக்குள் செல்லச் செல்ல அவனது மிருக உணர்ச்சி கூர்மையாகிக் கொண்டே செல்கிறது. அது அவனது அறிவை மழுங்கடிக்கும் எல்லை வரை செல்கிறது. இரவில் விரைவாகத் தூங்கும் மனிதர்கள் பாக்கியவான்கள். தூக்கம் பெரும் திரையாக உருவெடுத்து அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாக மாறிவிடுகிறது.

இரவு ஓய்வுக்கானது, தூக்கத்திற்கானது. அது வேலை செய்வதற்கோ விழித்திருப்பதற்கோ உகந்த நேரம் அல்ல. விழித்திருக்கும் இரவு உங்களை வெகுதூரம்வரை அழைத்துச் செல்லலாம். பெரும்பாலான குற்றங்களுக்கு இரவுதானே புகலிடமாக இருக்கிறது.

மனிதனுக்குத்தான் எத்தனை முகங்கள். சமூகத்தோடு இருக்கும்போது ஒரு முகம். தனிமையில் இருக்கும்போது ஒரு முகம். பகலில் ஒரு முகம். இரவில் ஒரு முகம். இந்த மனிதரா இப்படிச் செய்தார்? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் நாம் எழுப்பிக்கொண்டே இருக்கிறோம். அது நம்முடைய தட்டையான புரிதலின் வெளிப்பாடு என்பதைக்கூட மிக அரிதாகவே நாம் உணர்கிறோம். நாம் மனிதர்களை அவர்கள் வெளிப்படுவதுபோன்றே எண்ணிவிடுகின்றோம். அப்படியே நாமும் எண்ணப்பட வேண்டும் என்றும் நினைக்கிறோம். இது நாம் அறியாமையின் விளைவாக அல்லது நாம் அறிந்து கொண்டே செய்யும் ஒரு வகையான ஏமாற்றாக இருக்கலாம்.

சில சமயங்களில் சிறு தூக்கத்திற்குப் பிறகோ நீண்ட தூக்கத்திற்குப் பிறகோ மனம் அலாதியான அமைதியில் திளைப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கு முன் இருந்த குழப்பங்களும் கவலைகளும் தடம் தெரியாமல் மறைந்து போயிருக்கும். தெளிந்த நீரோடை போன்று மனம் தெளிவாக, சீராக ஓடிக் கொண்டிருக்கும். இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் மனம் அப்படிப்பட்ட தருணங்களையும் கடந்து வந்திருக்கிறது என்பதை உணர்கிறேன். இந்தப் பதிவைக்கூட அப்படியான ஓர் மனநிலையில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

திருக்குர்ஆனில் அல்அன்ஃபால் என்ற அத்தியாயத்தில் பத்ருப்போர் குறித்து இடம்பெறக்கூடிய வர்ணனையில், போர்க்களத்தின் கடுமையான சூழலில் அல்லாஹ் உங்களை சிற்றுறக்கம் கொள்ளச் செய்து உங்களுக்கு மன அமைதியையும் அச்சமின்மையையும் ஏற்படுத்தியதை நினைத்துப் பாருங்கள் என்ற வாசகமும் இடம்பெறுகிறது. அந்தச் சிறிய உறக்கம் கலக்கத்தையும் பயத்தையும் போக்கி மனஅமைதியை ஏற்படுத்தியதாக அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான்.

இந்த வசனத்திற்கு செய்யித் குதுப் அளிக்கும் விளக்கம் என்னைக் கவர்கிறது. இது ஒரு ஆச்சரியமான மனநிலை என்கிறார் அவர். தமக்கு இப்படியொரு அனுபவம் நேர்ந்த பிறகே இந்த வசனத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்ததாக அவர் கூறுகிறார். அவரது சுய அனுபவத்தை இங்கு அப்படியே குறிப்பிடுகின்றேன்: “நான் இந்த வசனங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். சிற்றுறக்கம் குறித்து வந்துள்ள அறிவிப்புகளையும் அலசிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு கடுமையான சூழலில் அகப்பட்டுவிட்டதுபோல உணர்ந்தேன். சூரியன் மறையும் சமயத்தில் கடும் நெருக்கடியும் பதற்றமும் என்னைப் பீடித்துக்கொண்டன. பின்னர் சிற்றுறக்கம் என்னைத் தழுவிக்கொண்டது. சில நிமிடங்கள்கூட அது நீடிக்கவில்லை. பின்னர் மனஅமைதியோடு ஆழமான திருப்தியுணர்வோடு புத்தம்புது மனிதனாக நான் விழித்தெழுந்தேன். இது எப்படி முடிந்தது? இந்த திடீர் மாற்றம் எங்கிருந்து நிகழ்ந்தது? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த அனுபவத்திற்குப் பிறகு பத்ருப்போரின் இந்த சம்பவத்தை நான் முழுமையாகப் புரிந்துகொண்டேன்.”

நிம்மதி என்பது உள்ளம் தொடர்பானது. வெளிப்படையான சாதனங்களைக் கொண்டு அதனை நாம் சம்பாதிக்க முடியாது. அது உள்ளத்திற்கு அருளப்பட வேண்டும். நிச்சயமாக அது பெரும் அருட்கொடைதான். உள்ளம் உணரும் இந்த நிம்மதியே இந்தவுலகில் ஒருவன் அடையும் சுவனம் என்று சொன்னால் அது மிகையாகாது என்று நான் கருதுகிறேன்.

Related posts

Leave a Comment