நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஒரு கடலோரக் கிராமத்து நினைவுகள்

Loading

தோப்பில் முஹம்மது மீரானின் கதைகள் என்றவுடன் எனக்கு உடன் நினைவுக்கு வருவது, “அபூ, அபூ ஓடி வா. முற்றத்தில் ஷாஃபியோடும் சுப்ஹானோடும் பும்! பும்! என்று கார் விளையாடிக்கொண்டிருந்த அபூவை உம்மா கூப்பிட்டாள்” என்று தொடங்கும் ஒரு சிறுகதைதான். எனக்கு எட்டு வயதிருக்கும். 1981 காலகட்டம். முதன்முதலாக வாசித்த சிறுகதை அதுதான் என்று நினைவு.

நான் பிறந்த ஊரில் இருக்கும் மஸ்ஜிதில் அன்றைய காலத்தில் ‘மறுமலர்ச்சி’, ‘முஸ்லிம் முரசு’, ‘பிறை’, ‘மதிநா’ போன்ற இதழ்கள் வந்துகொண்டிருந்தன. ஊர் மக்கள் அவற்றை ஆவலாய்ப் படிப்பார்கள். அன்று ஒருநாள் என்னுடைய வாப்பா (தந்தை)  தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய சிறுகதை வெளிவந்த மாதஇதழை (முஸ்லிம் முரசு என்று நினைவு) கொண்டுவந்து என்னுடைய உம்மாவிடம் (தாய்) கொடுத்து “உன்னுடைய குடும்பக்காரர் (உறவினர்)  மீரான் அவருடைய தோப்பு குடும்பத்தைப் பற்றி எழுதின கதை வந்திருக்கிறது, படித்துப் பார்” என்று கொடுத்தார்கள். அன்று அந்தச் சிறுகதையை என்னுடைய மூத்த சகோதரி வாசித்தார்;  அனைவரும் கேட்டோம். பின்னர் நான் பலமுறை அதை வீட்டிலிருக்கும்பொழுது திரும்பத்திரும்பப் படித்துள்ளேன்.

அந்தச் சிறுகதை அவருடைய கொல்லகுடி வீட்டில் நடந்த ஒரு நிகழ்வை மையமாகக்கொண்டு எழுதப்பட்டது (முன்னர் இவரது வீட்டுப்பகுதி கொல்லகுடி என்று அழைக்கப்பட்டது. அதுசார்ந்த சுற்றுவட்டாரம் தோப்பு என்பதால் இறுதியில் தோப்பு என்பதே நிலைத்துவிட்டது). அதில் வரும் கதாபாத்திரங்கள் அவருடைய தாயாரும் குடும்பத்தினரும்தான். பெயர்கள் எல்லாமே அப்படியே கொடுக்கப்பட்டிருந்தன. அந்தக் கதையின் துவக்கம்தான் “அபூ, அபூ ஓடி வா…”. அனந்த சயனம் காலனியில் வரும் “உம்மாவின் றூஹு” என்ற கதையும் அவருடைய குடும்பக் கதைதான். இதுபோல் இன்னும் நிறைய.

மேற்கண்ட நிகழ்விற்குப் பிறகு என்னிடத்தில் கதைபடிக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அன்றைய காலகட்டத்தில் ‘செப்பம்’ என்று ஒரு இதழ் வந்துகொண்டிருந்தது. அதில் அல்லது பிறை மாதஇதழில் என்று நினைக்கிறேன், “சுருட்டுப்பா” (சுருட்டு உப்பா. சுருட்டு புகைக்கும் தாத்தா என்று பொருள்) என்று ஒரு கதை வெளிவந்ததை ஆர்வமாய்ப் படித்தது இன்னும் நினைவிலுள்ளது. இதுபோன்று தோப்பில் மீரானின் பல கதைகளை மாதஇதழ்களில் படித்துள்ளேன்.

1988ம் ஆண்டு நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ வெளிவந்தது. அந்த நாவல் அவருடைய ஜலீலா பப்ளிஷர்ஸ் (திருநெல்வேலி) என்ற சொந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. ஜலீலா அவருடைய மனைவியின் பெயர். அப்போது தேங்காய்ப்பட்டணத்தைச் சார்ந்த என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் அந்த நாவலை எங்கள் வீட்டிற்குக் கொண்டுவந்திருந்தார். அந்த நாவல் வெளிவந்தபோது அவ்வூரில் அதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. அதிலுள்ள கதாபாத்திரங்களின் உறவினர்களும் ஊர்மக்களில் சிலரும் ஊரைப் பற்றி மிகைப்படுத்தி எழுதியதாகக் கூறி அதை எதிர்த்தனர். அதனால் அந்த நாவலைப் பலரும் வாங்கிப் படிக்கவில்லை.

எனினும், 1988 காலகட்டத்தில் சீர்திருத்தப் பிரச்சாரம் (தவ்ஹீது இயக்கம்) இவ்வூரில் தீவிரமாக இருந்ததால், அந்தச் சிந்தைனையின்பால் ஈர்க்கப்பட்டவர்களிடம் அதற்கு ஓரளவு ஆதரவு இருந்தது. ஊரில் இருந்த மூடநம்பிக்கைகளையும் சுரண்டல்களையும் இந்த நாவல் அம்பலப்படுத்தியதாக அவர்கள் கூறினர். இந்தக் கண்ணோட்டத்தில்தான் என்னுடைய வீட்டிற்கு அவர் நாங்களும் அதைப் படிக்கவேண்டும் என்று கொண்டுவந்திருந்தார்.

அப்போது எங்கள் வீட்டில் என்னுடைய ‘வலிய மூத்தும்மா’ (என்னுடைய தாயின் மூத்த சகோதரி) ஒருவாரம் தங்கியிருந்தார். அவர் முன்னிலையில் நாவல் படிக்கப்பட்டது. பொதுவாக குமரி மாவட்டக் கடலோர முஸ்லிம்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. முன்னர் தமிழகத்திலும் அந்தப் பழக்கம் இருந்துள்ளதாக அறிகிறேன். சில நேரங்களில் முஸ்லிம்கள் பொழுதுபோக்கிற்காக மாலை வேளையிலும் இஷா தொழுது உணவு உண்டபின்னரும் கிஸ்ஸாக்களையும் நீதிபோதனைகளையும் இஸ்லாமியப் பாடல்களையும் ஒன்றாகக் குழுமியிருந்து ஒருவர் வாசிக்க மற்றவர்கள் கேட்டு மகிழ்வர். அப்படி நானும் கேட்டுள்ளேன்.

அன்றைய காலகட்டத்தில் அரபித் தமிழில் அச்சடிக்கப்பட்ட நூறு மஸ்அலா,  ஸைத்தூன் கிஸ்ஸா, அதபு மாலை, முஹல்லதீவு மாலை, ஏர்வாடி இப்றாஹீம் ஷஹீது போன்றவர்களின் வரலாற்றுப் பாடல்களும் இவைபோன்ற இன்னும் பலவும் அவ்வாறு வாசிக்கப்படும். அதேபோன்று அரபி மலையாளத்தில் அச்சடிக்கப்பட்ட மாப்பிள்ளை இலக்கியங்களான இப்றாஹீம்நபி கிஸ்ஸா, பதர் படப்பாட்டு, பட்சிப் பாட்டு, பதறுல் முனீர் ஹுஸ்னுல் ஜமால் கதைகள், இதுபோன்று மாலப்பாட்டுகளும் இவற்றுள் அடக்கம். சிறுவயதில் இவற்றையே நான் கேட்டு வளர்ந்தேன்.

எனவே, கதைகேட்கும் ஆர்வமும் இயல்பாகவே என்னிடத்தில் இருந்தது. எங்களைத் தூங்கவைக்கும்முன் சில சமயங்களில் என் உம்மா கதைசொல்லித்  தூங்கவைப்பார். அதில் கதைகளும், எங்கள் ஊரில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்வியல் முறைகளும், இஸ்லாமிய வரலாறுகளும் இடம்பெற்றிருக்கும். எங்கள் உறவினர்களில் மூத்த வயதினர் வீட்டுக்கு வந்தால் அவர்களிடமும் நாங்கள் கதைகேட்போம்.

இதுபோன்று ஒருநாள் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலை இரவு உணவிற்குப் பின் (இரவு 8.30)  என்னுடைய சகோதரி வாசிக்க நாங்கள் குழுமியிருந்து கேட்டோம். இரண்டு இரவுகளில் வாசித்து முடித்தோம். அப்போது எனது மூத்தும்மா (பெரியம்மா) அதில் வரும் சம்பவங்களை இடையிடையே நிறுத்தி விளக்கினார். அவருக்கு அப்போது (1988) அறுபத்தைந்து முதல் எழுபது வயதிற்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் இடையிடையே அதில் இடம்பெறும் பல சம்பவங்களையும் அவர்களால் விளக்கமுடிந்தது.  மீண்டும் ஒருமுறை அந்த நாவல் அவ்வாறு படிக்கப்பட்டது. நாவலை முடித்தபோது சில விசயங்கள் கதையில் மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளதாகவும், முக்கால் பங்கு சம்பவங்கள் உண்மை என்றும், சில சம்பவங்கள் அவர்கள் காலத்தில் நடந்ததாகவும், சில அவர்களுக்கு முந்தைய தலைமுறையில் நடந்து கேள்விப்பட்டிருப்பதாகவும் கூறினார். நாவல் என்றால் புனைவுகள் இருக்கும் என்பது பெரியம்மாவிற்குத் தெரியாமல் இருந்தது.

அந்த நாவலில் இடம்பெற்றுள்ள பேச்சுவழக்குகள் எங்களின் தாய்மொழி என்பதாலும், அந்த நிலப்பகுதியும் சூழலும் எங்கள் பகுதி ஆகையாலும், அதில் இடம்பெறும் சம்பவங்களில் சிலவற்றை முன்னரே அறிந்திருந்ததாலும் நாவலை மிகவும் இரசித்துக் கேட்டோம். பின்னர் சில ஆண்டுகள் கழிந்து நான் அதைத் திரும்பப் படித்துள்ளேன். என்னிடம் இருந்த அந்த நாவலை என் நண்பரொருவர் வாங்கிச் சென்றுவிட்டார். திரும்பத் தரவில்லை. நாவல் இப்போது என்னிடம் இல்லை. நாவலை வாசித்துப் பல வருடங்கள் ஓடிவிட்டாலும் அந்தக் கதை எனக்கு நன்கு நினைவில் உள்ளது. அதிலிருந்து சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு தடவை எங்கள் குடும்பத்தில் வயதுமுதிர்ந்த உறவினர் ஒருவரிடம் இந்நாவலின் கதாபாத்திரங்கள் யார் என்று கேட்டபோது அந்தக் குடும்பங்களைப் பெயர்குறிப்பிட்டு விளக்கினார். அப்பெண்மணி குடும்பப் பரம்பரைகளை நன்கு அறிந்தவர், நினைவாற்றல் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதுபோன்று என்னுடைய உம்மாவிடமும் பல விளக்கங்களைப் பெற்றுள்ளேன். இந்நாவலில் வரும் வடக்குவீட்டு அஹமதுகண்ணு முதலாளி கருப்பனை ஏவிவிட்டுக் கொலைசெய்த பெண்பற்றியும், அவள் முதலாளியிடம் பாதுகாப்புக்கருதி கொடுத்திருந்த நகைகளை அபகரித்த சம்பவம்பற்றியும், அந்தப் பெண் கதாபாத்திரத்தின் உண்மைநிலைபற்றியும் இருதினங்களுக்கு முன்பு கேட்டறிந்தேன்.

‘மஞ்சகுளிச்சா’ என்று மக்களால் அழைக்கப்பட்ட அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது தனக்குத் தெரியும் என்றும், சிறுவயதில் அந்த வீட்டிற்குப் பொருட்கள் வாங்குவதற்குச் சில சமயங்களில் சென்றிருந்ததையும் நினைவுகூர்ந்தார். மேலும், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் வாழ்ந்த தோப்பிலின் குட்டியாப்பா (சிறிய தந்தை) மீது வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் (குறிப்பிட்டமுதலாளியால்) கொலைப்பழி சுமத்தப்பட்டு, பின்னர் அவர் நிரபராதி என்று நிரூபணம் ஆனதையும் கூறினார். இந்த நிகழ்வு மீரானின் சிறு பருவத்தில் நடந்த  சம்பவம். அதன் நினைவாகவே வடக்குவீட்டு  அஹ்மது கண்ணு முதலாளி என்ற கதாபாத்திரத்தில் இந்தச் சம்பவத்தை இணைத்திருக்கிறார்.

நாவலாசிரியர் திருநெல்வேலியில் வசித்ததால் அவருடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு எனக்கு அதிகம் அமையவில்லை. நான்கு ஆண்டுகளுக்குமுன் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது நடந்த நீண்ட உரையாடலின்போது அவருடைய பல நாவல்களின் கதாபாத்திரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். குறிப்பாக, சாகித்திய அகாடமி விருதுபெற்ற  ‘சாய்வு நாற்காலி’ நாவலின் முக்கியக் கதாபாத்திரத்தை யார் என்று கூறியபோது அந்நாவலின் மற்ற கதாபாத்திரங்களையும் என்னால் சங்கிலித்தொடர்போல் விளங்கிக்கொள்ள முடிந்தது.

நான் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது மனோன்மணியம் பல்கலைக்கழக மூன்றாம் பருவத்தில் (1991) தமிழ்ப் பாடத்தில் இந்நாவல் இடம்பெற்றிருந்தது. அதுபோன்று கேரள பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றிருந்தது. தோப்பில் முஹம்மது மீரானுடைய வாப்பாவின் காலத்தில் நடந்த பல சம்பவங்களையும், அவருடைய மூதாதையர்களிடமிருந்து கேட்ட பல சம்பவங்களையும், மீரானின் காலத்தில் நடந்த பல சம்பவங்களையும் இணைத்து எழுதப்பட்டதுதான் இந்நாவல்.

தேங்காய்ப்பட்டணம்

இந்த நாவல் இடம்பெறும் தோப்பிலின் சொந்த ஊர் பற்றிய சிறு அறிமுகத்தைத் தரலாமென்று நினைக்கிறேன். தென்பத்தன், தெக்கேபட்டிணம் என்று அறியப்பட்டிருந்த இவ்வூருக்கு தேங்காய்பட்டணம் என்ற பெயர் பிற்காலத்தில் வந்ததாகக் கூறுவர். இந்த ஊரின் இஸ்லாமியப் பாரம்பரியம் சேரமான் பெருமாளுடன் தொடர்புடைய மாலிக் இப்னு தீனாரிலிருந்து தொடங்குகிறது. இக்காலத்தில் கட்டப்பட்டதுதான் ‘வலிய பள்ளி’ என்ற மாலிக் தீனார் பள்ளி. அது கதையிலும் வருகிறது. கடற்கரைப் பட்டண முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறை, மலபாரின் தாக்கம், முன்னர் கொழும்பில் வணிகம்செய்த மக்கள், அங்கு வேலை பார்த்தவர்கள், முன்னர் இலங்கையில் திருமண உறவு இருந்ததால் குடிபெயர்ந்தவர்கள், கடல்சார்ந்த தொழில், கூலிவேலை, தென்னந்தோப்புகளை உடமையாகக் கொண்டிருந்த முதலாளிகள், தேங்காய்சார்ந்த வியாபாரங்கள் போன்றவற்றின் தாக்கம்மிகுந்த அக்கால முஸ்லிம்களின் வாழ்க்கை முறைதான் ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலிலும் எதிரொலிக்கிறது. இன்று அச்சூழல் பெரும்பாலும் இல்லை எனலாம். மக்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.

இந்நாவலில் இடம்பெறும் நிகழ்வுகளை வைத்து இவ்வூர் அன்றும் இன்றும் கதையில் வருவது போன்றுதான் இருந்திருக்கும் என்று விளங்குவது பிழை. இந்நாவலை மேற்கோள்காட்டும் சில முற்போக்கு எழுத்தாளர்கள், இவ்வூர் இப்பொழுதுதான் மடமையிலிருந்து விடுபட்டு வருவதாகக் கூறுவது விந்தையாக உள்ளது. முஸ்லிம்களின் இறுக்கமான நிலையை இந்நாவல் உடைத்துவிட்டதாகவும் பெருமிதம் கொள்கின்றனர். அதற்காகச் சில விசயங்களை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமெனக் கருதுகிறேன்.

முஸ்லிம்கள் அறவே கல்வியறிவு அற்றவர்களாக வாழ்ந்துவந்தனர் என்று பலர் பொங்குவதைக் காணமுடிகிறது. இந்நாவல் கூறும் முதலாம் உலகப்போர் காலகட்டம் என்பது பிரிட்டிஷ் இந்தியக் காலகட்டம். பிரிட்டிஷார் கொண்டுவந்த கலாச்சாரச் சீரழிவை அஞ்சிய முஸ்லிம்கள் அவர்களது கல்விமுறையையும் எதிர்த்ததால் அக்காலகட்டத்தில் ஆங்கிலப் பள்ளிக்கூடம் செல்ல அஞ்சினர். எனவேதான், கதையில் குறிப்பிடுவதுபோன்று ஆரம்பத்தில் பள்ளிக்கூடம் கட்ட எதிர்ப்பு இருந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பள்ளிக்கூடம் உருவாக்கப்படாத காலகட்டத்தில் முஸ்லிம்கள் எழுத்தறிவை பள்ளிவாசல்கள், மதரசாக்கள் வழியாகவே பெற்றுவந்தனர். அக்காலகட்டத்தில் மற்ற சமூகங்களும்கூட பெருமளவில் எழுத்தறிவு பெற்றிருக்கவில்லை என்பதை இவ்விடத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும். பிற்காலத்தில் பள்ளிக்கூடம் வந்தபிறகு ஆங்கிலேய எதிர்ப்பில் மூழ்கியிருந்த முஸ்லிம்கள் மற்ற சமூகங்கள்போல் பள்ளிக்கல்வி கற்காதமையால் பின்தங்க நேரிட்டது. அதை வைத்துகொண்டு, முஸ்லிம்கள் தாங்கள் பின்பற்றும் மதத்தின் காரணமாகவே காலங்காலமாக இப்படி இருந்துவருகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது இந்த முற்போக்காளர்களின் மடமையன்றி வேறில்லை. அதேபோல், தமிழ் இலக்கியத்தின் இருண்ட காலத்தில்கூட முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தமிழ் இலக்கியத்திற்குப் பெருந்தொண்டாற்றியுள்ளதை அவர்கள் வசதியாக மறந்து, மறைத்து விடுகின்றனர்.

இவ்வூரில் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் பல தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். படைப்போர் இலக்கியம் படைத்தவர்களில் ஒருவரான இவ்வூரைச் சேர்ந்த குஞ்ஞு மூஸா கவிராயர் பற்றி நமக்குத் தெரியும். மாப்பிள்ளைப் பாட்டுக்களை எழுதியவர்கள் மலபாரிலிருந்து இவ்வூருக்கு வந்து தமிழ் கற்றதாகவும் மலையாள ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அக்காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் மதரசா, மக்தப்களுக்குச் சென்று மார்க்க அறிவிற்காக அரபி மலையாளத்தையும் அரபித் தமிழையும் கற்றுள்ளனர். இதன்மூலம் மார்க்க விளக்கங்களை அரபி லிபி (எழுத்து வடிவம்) மூலம் படித்துள்ளனர். தமிழ் அல்லது மலையாள லிபி மூலம் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் சொற்பமானவர்களாய் இருந்தாலும், அரபி லிபி பெரும்பாலானவர்களுக்குப் பரிச்சயமாக இருந்துள்ளது. இதன்மூலம் கடிதங்களை எழுதியவர்களும் உண்டு. பெண்கள் அரபி மலையாளம், அரபித் தமிழ் வாசிப்பதில் நன்கு திறன்பெற்று இருந்துள்ளனர். எனவே, முற்போக்காளர்கள் தங்களுடைய விமர்சனத்தில் நேர்மையைக் கைக்கொள்ள முயலவேண்டும்.

இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவ்வூர் மக்களிடம் இருந்த மார்க்கத்தின் பெயரிலான மடமையை நானும் கண்டுள்ளேன், அனுபவித்துள்ளேன். சிறுவயதில் பெரும்பாலும் மொட்டை அடிப்பதுதான் சுன்னத் என்று கருதி மொட்டை அடிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். இதன் காரணமாக பள்ளிக்கூடத்தில் பிற மாணவர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளேன்.

கதையில் வரும் பீர்முஹம்மதுவை மற்ற மாணவர்கள் மொட்டைத் தலையன் என்று கிண்டல் செய்வதைப் படித்தபோது எனக்கு என்னுடைய பழைய ஞாபகம்தான் வந்தது. பீர்முஹம்மது திட்டிய அதே பாணியில் நானும் பண்ணிக்க மக்களா, காஃபிர் கட்டைகளா என்று திட்டியதும் நினைவிற்கு வருகிறது. அக்காலத்தில் பிற சமூகத்தினரை கோபத்தில் நஸறாணி, நரகத்துமுள்ளாணி, காஃபிர் கட்டை, பண்ணிக்க மக்கள், ஹராங்குட்டிகள் என்று திட்டுவதை நினைத்தால் சிரிப்பு வருகிறது, வருத்தமும் தோன்றுகிறது.

ஒருகாலத்தில் இங்கு மார்க்கம் கற்க மலபாரிலிருந்து வருவார்கள் என்று கேள்விப்பட்டது உண்டு. ஆனால், இப்போது எவ்விதத் தடயமும் இல்லை. பிரபல மார்க்க அறிஞர்கள் தங்கியிருந்து இவ்வூருக்கு வெளிச்சம் கொடுத்துள்ளனர். நாகூர் ஷாஹுல் ஹமீது வலீ, கொழும்பு அப்பா, சதக்கத்துல்லா அப்பா, மக்தூம்கள், வெளியங்கோடு உமர் காழி, மம்புறம் செய்யிது அலவி மவ்லதவீலா, கண்ணனூர் புஹாரி தங்ஙள் என்று பட்டியல் நீளும். பின்னர் இத்தொடர்பு ஏன் நின்றுபோனது என்று தெரியவில்லை. முஸ்லிம்களிடம் இதன் பின்னர் சில மடமைகளும் மூடப் பழக்கங்களும் புகுந்திருக்கலாம். இதையே நாவல் சித்தரித்திருக்கிறது.

நாவலின் மொழிநடை

தோப்பிலின் நாவலில் குமரி மாவட்டக் கடலோர முஸ்லிம்களின் மொழிவழக்கு, அதிலும் குறிப்பாகத் தேங்கையின் பேச்சுவழக்கு அப்படியே இருப்பதைக் காணலாம். அதேபோன்று மீனவர்களின் பேச்சுவழக்கு, நாடார் மக்களின் பேச்சுவழக்கு ஆகியவையும் அப்படியே இடம்பெற்றுள்ளன. இவ்வூரில் வாழ்ந்த ஈழவர், தட்டார் (விஸ்வகர்மா-பொற்கொல்லர்) போன்ற பிற சமூகங்களின் பேச்சுவழக்கு வேறாக இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட இந்த மூன்று பேச்சுவழக்குகளை அப்படியே நாவலில் கொடுத்திருப்பது இவர் தனிமுத்திரை பதிக்கக் காரணம் எனலாம். மொழியியல்பற்றியும் வட்டாரப் பேச்சுவழக்குபற்றியும் ஆய்வுசெய்பவர்களுக்கும் இவை மிகவும் உதவிகரமானவை.

நான் என்னுடைய ஊரில் வாழ்ந்தபோது பேசிய எங்கள் மொழியும் மற்ற இரு சமூகங்களும் பேசிய மொழிகளையும் இவரின் நாவல்களின் மூலம் அடிக்கடி நினைவுகூர்வது உண்டு. குமரி மாவட்ட முஸ்லிம்களின் பேச்சுவழக்குகளை ஐந்தாறு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் கடற்கரைவாழ் முஸ்லிம்களின் பேச்சுவழக்கு என்பது முற்றிலும் மாறுபட்டது. அதிலும் தேங்காய்பட்டணத்தின் பேச்சுவழக்கு தனித்தது. இந்த மாவட்டத்தின் கோட்டாறு போன்ற பகுதிகளின் பேச்சுவழக்கு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வூரில் வாழ்ந்த மூத்தவர்களிடம் பழைய தமிழ்ச் சொற்களை நான் கேட்டது உண்டு. இதைக் காயல்பட்டணத்திலும் பார்க்கலாம். இவ்வூரில் ஏற்பட்ட அரபுக் குடியேற்றங்கள், வணிகம், கொழும்புத் தொடர்பு, மலபாரின் தாக்கம், திருவிதாங்கூர் ஆட்சியின் மலையாளம் என எல்லாம் கலந்து பேச்சுவழக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவேதான், மிகுதியான அரபிச் சொற்களும் மலையாளமும் பழைய தமிழ்ச் சொற்களும் கதையில் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. பிற்காலத்தில் வழக்கொழிந்துபோன, கதை நிகழ்ந்த காலகட்டப் பேச்சுவழக்கின் பல வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. இப்போது இவ்வூரின் பேச்சுவழக்கு பெருத்த மாறுபாட்டை அடைந்திருப்பதோடு மிக வேகமாகத் தமிழ் மயமாகி வருகிறது.

ஆதிக்கச் சிந்தனை

இவருடைய நாவலில் வரும் வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளிபோன்ற முதலாளிகள் பலர் வாழ்ந்து மறைந்துள்ளனர். இந்தக் கதாபாத்திரம் எந்தக் குடும்பப் பின்னணி என்ற விளக்கத்தையும் அவரிடமிருந்து பெற்றுள்ளேன். பல முதலாளிமார்கள் புரிந்த அநீதங்களையும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களையும் அஹ்மதுகண்ணு என்ற ஒரு கதாபாத்திரத்தில் புகுத்தியுள்ளதாகக் கூறினார்.

இவர்களின் ஆதிக்கம் முடிவிற்கு வந்த காலகட்டத்தின் கடைசிக் கண்ணியை நான் கண்டுள்ளேன். இன்று எவ்வித ஆதிக்கம் இல்லை. நொடிந்துபோன பலரும் குடிபெயர்ந்து திருவனந்தபுரம், நாகர்கோவில் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இவர்களால் ஒடுக்கப்பட்ட பலரின் சந்ததிகள் வளைகுடா நாடுகளுக்குச் சென்றதன் விளைவாக முன்னேறிவிட்டனர்; ஊரில் செல்வாக்கு பெறத்துவங்கிவிட்டனர்.

பெண்கள்

பொதுவாகத் தமிழகக் கடற்கரை ஊர்களில் பெண்களின் ஆதிக்கம் சற்று மிகைத்திருப்பதை நான் அறிந்துள்ளேன். ஆனால், இங்கு ஒருகாலத்தில் ஆணாதிக்கம் மிகைத்திருந்தது. குறிப்பாக, முதலாளிமார்களின் வீட்டில் சற்று அதிகமாகவே இருந்தது. அதையே மீரான் தெளிவாகப் படம்பிடித்துள்ளார். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. முற்றாக மாறிவிட்டது என்று கூறமுடியாதுதான். ஆணாதிக்கம்போன்று பெண்ணாதிக்கமும் இப்போது உண்டு.

சில குறிப்புகள்

நாவலில் அஹ்மதுகண்ணு முதலாளி பல்லக்கில்வரும்போது அந்தாஹே ! மேனாஹே! என்று பல்லக்குத் தூக்குபவர்கள் கத்துவர். முதலாளிகளைப் பல்லக்கில் சுமந்துசென்ற காலம் இருந்ததாகவும் அதை என் தாயார் சிறுவயதில் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். பல்லக்கை அக்காலத்தில் மஞ்சல் என்றும் மேனா என்றும் கூறுவார்களாம். ஒருகாலத்தில் மதிப்பு மிக்கவர்களும் காழிமார்களும் செய்யிதுமார்களும் மரியாதையின் நிமித்தம் இதுபோன்று மேனாவில் அழைத்து செல்லப்படுவார்களாம். இத்தகவல் கேரள முஸ்லிம் வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற பல்லக்கை ‘யாதும்’ ஆவணப்படத்தில் இடம்பெறும் கோழிக்கோடு குற்றிச்சிற பகுதியிலுள்ள நகூதா மிஸ்கால் பள்ளியில் சென்றால் நினைவுச்சின்னமாகக் காணலாம்.

கதையில் வரும் வடக்குவீட்டு முதலாளியை எதிர்க்கும் மஹ்மூது என்ற கதாபாத்திரத்தில் மீரானின் தந்தை, மீரான், இன்னும் அதுபோன்று முதலாளிமார்களைத் துணிவுடன் எதிர்த்த பலரின் குணாதிசியங்களும் ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க உணர்வை எதிர்த்ததில் மீரானுக்கும் அவருடைய வாப்பாவிற்கும் பங்கு உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். துறைமுகம் நாவலில் வரும் காசீம் என்ற கதாபாத்திரம் மீரானின் பள்ளிப்பருவ நிகழ்வுகளை மையமாக்கொண்டு வடிவமைக்கப் பட்டது போன்றுதான் மஹ்மூது கதாபாத்திரமும். இன்னும் சில கதைகளிலும் இவர் வருகிறார்.

முஹல்ல தீவிலிருந்து (மாலத்தீவு) வரும் செய்யிதினா முஹம்மது முஸ்தஃபா இம்பிச்சிக் கோயா தங்ஙள் என்ற கதாபாத்திரத்தில் அவ்வூரில் வாழ்ந்த தங்ஙள் ஒருவரின் சில செயல்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் யார் என்றும் என்னிடத்தில் மீரான் கூறியுள்ளார். பொதுவாக நீண்ட தொலைவிலிருந்து வரும் மார்க்க அறிஞர்களையும் செய்யிதுமார்களையும் (தங்ஙள்) வீட்டில் தங்கவைத்து விருந்தளிப்பதை முதலாளிமார்கள் கவுரவமாகக் கருதிய காலம் இருந்திருக்கிறது.

இம்பிச்சிக் கோயா தங்ஙள் கூறும்போது ஒரு கெட்ட ஜின் இவ்வூருக்கு வந்துள்ளது; அதைக் கூசில் (கூஜாவில்) அடைக்க இங்கு வந்துள்ளேன் என்று கூறி மக்களை ஏமாற்றுவதுபோன்று வயிறுவளர்க்க முனையும் பலர் அவ்வூருக்கு வந்த சம்பவங்கள் முன்னர் நடந்துள்ளன. “நான் செய்யிது (தங்ஙள்-நபிக்குடும்பம்); வாறது தீவிலிருந்து (அந்த்ரோத், மினிக்காய் போன்ற தீவுகள். முஹல்ல தீவு); அல்லது, மலபாரிலிருந்து” என்று கூறிக்கொண்டு ஏமாற்றும் சிலர் இருந்துள்ளனர். அதையே மீரான் இங்கு சித்தரித்துள்ளார். ஒருகாலத்தில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் முஹல்ல தீவு சென்று கெட்ட ஜின்களை எல்லாம் ஒரே கூசில் அடைத்து அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கியதாகவும் இவ்வூரில் கதைகள் உலாவிவந்தன. நான் முதலில் குறிப்பிட்ட ‘முஹல்லதீவு மாலை’ இதைப் பற்றியதுதான். 

ஒருகாலத்தில் பாங்கு சொல்வதற்காகவும் மார்க்க விளக்கங்களைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் வரவழைக்கப்பட்டு குடியமர்த்தப்பட்ட லெப்பைமார்கள் காலப்போக்கில் முதலாளிமார்களால் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டனர். முன்னர் லெப்பைக் குடும்பத்தினரை பொது மையவாடியில் அடக்கம்செய்யாமல் அவர்களுக்கென்ற தனி இடத்தில் அடக்கம் செய்தனர் என்பதிலிருந்து அவர்களுக்கிருந்த மதிப்பு விளங்கும். ஆனால், இடைப்பட்ட காலகட்டத்தில் இவர்கள் வறுமையிலும் அதிகாரத் திமிர்கொண்டவர்களின் ஒடுக்குமுறையிலும் வாழநேரிட்டது. அதை விளக்கும் கதாபாத்திரமாக அசனார் லெப்பை வருகிறார்.

ஒரு மாணவன் தமிழில் மதறஸா போர்டில் எழுதியதற்காகக் கோபத்தால் அசனார் லெப்பை அவனை அடித்த சம்பவம், குர்ஆன் எழுதும் போர்டில் தமிழ் எழுதினான் என்பதற்காகத்தானே ஒழிய தமிழில் எழுதுவதை யாரும் பாவமாகக் கருதியதில்லை. மதரஸாவின் கரும்பலகையில் அரபி, அரபித் தமிழ், அரபி மலையாளம் ஆகிய மூன்று எழுத்துக்களும்தான் எழுதப்படுமாம். தமிழில் எழுதுவதைச் சிலர் விரும்புவதில்லை. எனவே, தமிழில் எழுதியதால் லெப்பைக்குக் கோபம் வந்ததாம். அம்மாணவன் பள்ளிக்கூடம் சென்றதில்லை, தமிழ் மொழியை யாரிடமும் கற்றிருக்க வாய்ப்பில்லை என்றாலும், தமிழை மதரஸாவின் போர்டில் எழுதுவது தவறாகப் பார்க்கப்பட்டதை உணர்த்துவதற்காக அதை இக்கதையில் இணைத்துக் கூறியிருக்கலாம்.

அக்காலத்தில் முஸ்லிம் பெண்கள் யாரும் சேலை உடுக்கமாட்டார்கள். சேலை உடுக்கும் வழக்கம் என்பது சுடிதார்போன்று வடக்கிலிருந்து பிற்காலத்தில் தமிழகத்திற்கு வந்த நடைமுறை. இவ்வூர் பெண்கள் முழுக் கைலியும் குப்பாயமும் (முழுச்சட்டை) கவணியும்தான் (நீண்டதாவணி) உடுப்பார்கள். சேலை அரைகுறை ஆடை என்று அஞ்சியதால் அது ஹறாம் என்று கற்பிக்கப்பட்டிருந்தது. எனவேதான், அவ்வூருக்கு வந்திருந்த ஆசிரியர் மெஹபூப்கானின் மனைவி சேலை உடுத்தியிருந்ததை பெண்கள் அதிசயமாகப் பார்த்துக் கேள்விகள் கேட்டதாக எழுதியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருகாதுகளிலும் இருபத்தி நான்கு துளைகளுடன் காதுகுத்தி ‘அலுக்கத்து’ என்ற ஆபரணம் அணிவது திருமணமான பெண்களிடம் இருந்தது. இதைக் குறிப்பிட அப்பெண்கள் ஆசிரியர் மனைவியிடம் கேள்விகேட்பதை உணர்த்தியுள்ளார் என்று கருதவேண்டியுள்ளது.

மெஹபூப்கான் அவ்வூர் மக்களைப் படித்தவர்களாக மாற்றுவதற்கு எடுத்த சிரமங்கள் கடந்தகாலத்தில் எங்கள் பகுதி ஆசிரியர்கள் (முஸ்லிம் அல்லாத ஆசிரியர்கள்) முஸ்லிம் ஊர்களில் அக்கரையுடன் முஸ்லிம்களை முன்னேற்ற உழைத்ததை நினைவூட்டுகிறது.

‘மானாபிமானத்திற்காக மாலா மீனை’ வடக்குவீட்டு முதலாளியின் வேலைக்காரன் அவுக்கார் மேற்கு வீட்டின்   வேலைக்காரன் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக ஏலத்தில் அதிக விலைசொல்லி வாங்கியதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளனவாம். முதலாளிமார்கள் வீழ்ச்சியுற்ற தருவாயில்கூட வாய்க்கு ருசியாக உண்பதற்காக வீட்டில் உள்ள விலைமதிப்புமிக்க பொருட்களையும் மரச்சாமான்களையும் விற்றுச் சாப்பிட்டார்கள் என்று அந்த நாவலை வாசிக்கும்போது பெரியம்மா கொடுத்த விளக்கம் நினைவுக்கு வருகிறது. இக்கதையில் வரும் அவுக்கார்போன்ற அடிமைச்சேவகம் செய்வதைப் பெருமையாகக் கருதும் ஆட்கள் அன்று மிகுந்திருந்தனர். இன்றும் சிலரைப் பார்க்கும்போது எனக்கு அவுக்காரின் நினைவுதான் வருகிறது.

வடக்குவீட்டு முதலாளியின் சகோதரி நூஹுபாத்திமா கூறுவதுபோன்று “காக்காவின் (அண்ணன்) முடிவுபோன்று செய்யுங்கள்…” என்ற மனோநிலை முன்னர் இருந்துள்ளது. பொதுவாக தந்தைக்கு அடுத்த அந்தஸ்தில் மூத்த அண்ணனைப் பார்க்கும் வழக்கம் இளையவர்களிடம் இருந்துள்ளது. முதலாளி ஜும்ஆவிற்குச் செல்லவில்லை என்றால்  உத்தரவிற்கு அடையாளமாகத் தன்னுடைய தலைப்பாகையைக் கொடுத்தனுப்புவதை மீரான் நாவலில் குறிப்பிடுகிறார். அவ்வூரின் பெரியவர்களிடம் விசாரித்தபோது யாரும் இப்படி நடந்ததாகத் தெரியவில்லை என்கின்றனர். இடைக்காலங்களில் இப்படி நடந்திருக்கலாம்; அதைச் செவிவழியாக இந்த நாவலின் பெரும்பாலான கதைகளைக் கூறிய இவரது தந்தை மூதாதையர்கள்வழி கேட்டிருக்கலாம்.

தோப்பிலின் நாவலின் தனிச்சிறப்பாக வரலாற்று அம்சங்கள் மிகுந்திருப்பதைக் குறிப்பிடலாம். ஒரு கடலோர கிராமத்தின் கதையிலும் இது மிகுதியாக உள்ளது. என்னுடைய கண்னோட்டத்தில் சாய்வு நாற்காலியைவிட ஒரு கடலோர கிராமத்தின் கதைதான் சாகித்திய அகாடமிக்குப் பொருத்தமானது என்று கருதுகிறேன்.

இந்த நாவலில் சில குறைகளும் உள்ளன. சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. ஊரில் வாழ்ந்த நல்ல மனிதர்கள், ஈகைக்குணம் பெற்றிருந்தவர்கள், மார்க்கம் கற்ற நல்லறிஞர்கள் போன்றவர்களைத் தவிர்த்து கதை எழுதப்பட்டுள்ளது. அவ்வூரைப் பற்றி அறிந்த பலரின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது.

இறுதியாக…

“தோப்பில் மீரானின் கதைகளில் வரும் சம்பவங்கள் முக்கால் பங்கும் உண்மையாகநடந்தவை. இவற்றை மீரான் எங்கிருந்துதான் கேட்டு நினைவில் வைத்தாரோ”  என்று இரு தினங்களுக்கு முன் என் உம்மா கூறியது என்னுள் எதிரொலிக்கிறது.

Related posts

Leave a Comment