கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது?

Loading

(இரண்டு பகுதிகளாக அமைந்த கட்டுரையின் முதற் பகுதி இது. அடுத்த பகுதியை இங்கு வாசிக்கலாம்)

உலக வர்த்தக மையமும் பெண்டகனும் தாக்கப்பட்ட மாலை அமெரிக்க அதிபர் புஷ் அத்தாக்குதலை தங்கள் நாட்டின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்துக்கெதிரான போர் என்று அறிவித்தார். அதாவது ‘சுதந்திரம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய நவீனத்துவ மதிப்பீடுகளைக் கொண்டு விளங்கும் அமெரிக்காவின் மீது இத்தகைய நவீனத்துவ மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளாத மத அடிப்படைவாதிகள் கோபம் கொள்வதும் தாக்குதல் நடத்துவதும் புரிந்துகொள்ளக் கூடியதுதான்; அவர்கள் அமெரிக்கர்கள் அமெரிக்கர்களாக இருப்பதனாலேயே அவர்களை வெறுக்கிறார்கள்; அவர்களின் நம்பிக்கைச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம், பாலியல் தேர்வு, இன்பத்துய்ப்பு ஆகியவற்றையெல்லாம் வெறுக்கிறார்கள். ஆக, 9/11 என்பது அமெரிக்காவில் இதற்கு முன்பு நடந்ததுபோன்ற மற்ற குற்றநடவடிக்கைகள் போன்ற ஒன்று கிடையாது. இது அமெரிக்க வாழ்க்கை முறையின் மீதான மதத்தீவிரவாதிகளின் போர்’ என்பதே அவருடைய அந்த அறிவிப்பின் சாரம்.

ஆக, அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தாவது அவர்களைத் தடுக்கவேண்டும். ஏனெனில், ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதிகள் அமெரிக்கா என்ற ஒற்றைத்தேசத்தின் அரசியல்ரீதியான எதிரிகள் மட்டுமல்ல. சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை நோக்கி வரலாறு எனும் முன்னேற்றகரமான இராஜபாட்டையில் உலகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கும் அமெரிக்காவின் எதிரிகள், எனவே அவர்கள் உலகமக்களின் எதிரிகள், வரலாற்று ரீதியான முன்னேற்றத்தின் எதிரிகள். அதனால் அவர்கள் பிரயோகித்ததை விடக் கடுமையான வன்முறையைப் பிரயோகித்தாவது அவர்களைத் தடுக்கவேண்டும். கம்யூனிசம் வீழ்ச்சியடைந்ததும் ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமா என்ற அமெரிக்க அரசசார்புத் தத்துவவாதி, வரலாறு தனது இலக்கான லிபரல் ஜனநாயக அமைப்பை அடைந்துவிட்டதென்றும் இது வரலாற்றின் முடிவென்றும் வரலாற்றுக்கு இறுதியுரை எழுதினார். இவ்வாறுதான் அமெரிக்க கருத்தியல் இயங்குகிறது. வரலாறு எனும் நேர்கோட்டுச்சாலையில் எல்லாத் தேசங்களுக்கும் முன்னதாக அமெரிக்கா பயணித்துக்கொண்டிருக்கிறது, வளரும் அல்லது பின்தங்கிய தேசங்கள் என்று அழைக்கப்படும் தேசங்கள் (பூகோளத் தெற்குத் தேசங்கள்) எல்லாம் அமெரிக்காவின் பாதையைப் பின்பற்றி நேராகப் பயணித்தால் வரலாற்றின் வெற்றிக்கோடான சுதந்திரம், ஜனநாயகம், சுதந்திரச்சந்தை ஆகிய மதிப்பீடுகள் முழுமைபெற்ற நிலையை அடைந்துவிடலாம். ஆனால் இத்தகைய (ஈராக், ஆஃப்கானிஸ்தான், ஆஃப்ரிக்க நாடுகள் போன்ற) பூகோளத் தெற்கு நாடுகளின் முன்னேற்றத்திற்கு அந்தந்த நாடுகளில் உள்ள வரலாற்றுவிரோதச் சக்திகள் குறுக்கே நிற்கிறார்கள். முன்னர் இவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தார்கள், இப்போது இவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் தற்கால அமெரிக்கக் கருத்தியலாக இருக்கிறது.

ஆனால், இதில் கம்யூனிஸ்டுகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. முன்னையோராவது செக்குலர் வரலாற்றுப் பார்வை மற்றும் நவீனத்துவ மதிப்பீடுகளுக்கு உள்ளே வருபவர்கள்தான். அதிகபட்சமாகச் சொல்வதென்றால், இவர்கள் செக்குலர் அறிவொளி மரபின் உலகப்பார்வைக்குள்ளிருந்து தோன்றிய கடும்போக்காளர்கள் (extremists) மட்டும்தான். ஆனால் தற்போதைய எதிரிகளோ மேற்கத்திய உலகம் தலைமைதாங்கும் உலகளாவிய மதச்சார்பற்ற, நவீனத்துவ மதிப்பீடுகளுக்கே எதிரானவர்கள். முந்தைய நூற்றாண்டின் போர் வெவ்வேறு மதச்சார்பற்ற சித்தாந்தங்களை முன்னிறுத்திய இரண்டு முகாம்களின் போர் என்றால், தற்போதைய நூற்றாண்டின் போர் ‘நாகரிகங்களுக்கு இடையிலான போர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாகரிகத்திற்கும் வரலாற்று மாற்றத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மாறாநிலை சாராம்சம் வழங்கபட்டிருக்கிறது. அந்த சாராம்சம்தான் அந்தக் குறிப்பிட்ட நாகரிகத்தின் வரலாற்றுப்பாதையைத் தீர்மானிக்கும்.

இவ்வாறு மேற்கத்திய நாகரிகத்தை பண்டைய கிரேக்கத்தின் நகர நாகரிகம் மற்றும் அதன் குடியரசு அமைப்பு ஆகியவற்றிலிருந்து தொடங்கியதாகக் காண்கிறார்கள் மேற்கத்தியர்கள். இடைக்காலத்தின் கிறித்தவமும் மேற்கத்திய நாகரிகத்தின் தர்க்கங்களுக்குள் இயங்கியதாகவே காண்கிறார்கள். மேலும், என்னதான் இடைக்காலத்தில் மதச்சபைகளின் கைகள் இகவுலகத்தின் மீதான தனது பிடியை இறுக்கிக்கொண்டிருந்தாலும் வேதாகமம் தெளிவாக ‘தேவனுக்கானதை தேவனுக்கும், ராயனுக்கானதை ராயனுக்கும்’ கொடுக்கவேண்டும் என்று உலக நடவடிக்கைகளையும் புனித வெளியையும் பிரித்திருக்கிறது. அதனால்தான் கிறித்தவ உலகத்தில் மதச்சீர்திருத்தம் நடைபெற முடிந்து மதச்சார்பற்ற, தேசிய அரசுகள் தோன்றவும் வாய்ப்பு ஏற்பட்டது. மேலும் அறிவொளி, விஞ்ஞான வளர்ச்சி ஆகியனவும் கூட ‘சத்தியம் உன்னை விடுவிக்கும்’ என்று போதிக்கும் விவிலிய மரபிலிருந்து தோன்றியதுதான். ஆக, இங்கே கிறித்தவத்துக்கு முந்தைய கிரேக்கப் பண்பாடு, இடைக்காலக் கிறித்தவம், நவீனகால மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு ஆகியவை மூன்றும் ஒரே நாகரிகச் சாராம்சத்தைக் கொண்ட தர்க்கப்பூர்வ வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய கதையாடலை போப்பிலிருந்து பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் வரை, டெலி இவாஞ்சலிஸ்டுகளிலிருந்து நவ நாத்திகர்கள் வரை முன்னெடுக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் தங்களை ஐரோப்பிய நாகரிகத்தைக் குறித்த மேலாண்மைக் கருத்தியலை உள்வாங்கிக்கொண்டவர்களாக தங்களது கதையாடல்களைக் கட்டுகிறார்கள்.

இதற்கு எதிர்நிலையில் இஸ்லாம் ‘அடிபணிதல், சர்வாதிகாரம், மாற்றமின்மை, மதச்சகிப்பின்மை, அறிவு மறுப்பு, படையெடுப்பு, நாடு பிடித்தல் மற்றும் மதப்பரப்பல்’ ஆகிய சாராம்சத்தைக் கொண்ட நாகரிகமாகச் சித்தரிக்கப்படுகிறது. முஸ்லிம் அறேபியர்கள் கிரேக்கம், பாரசீகம், இந்திய இலக்கியங்கள் ஆகியவற்றையெல்லாம் அரபுமொழியில் மொழிபெயர்த்துத் தங்களது விஞ்ஞானத்தை வளர்த்ததெல்லாம் விதிவிலக்கானதாகப் பார்க்கப்படுகிறது. பெர்ட்ரண்ட் ரஸல் போன்ற தத்துவவியலாளர்கள் எல்லாம் கூட இந்நிகழ்வுப்போக்கை வெறுமனே பாதுகாத்துக் கைமாற்றியதாக மட்டுமே குறிப்பிடுகிறார்கள். அதாவது, மேற்கத்திய நாகரிகத்திற்குச் சொந்தமான இத்தகைய அறிவு முதுசங்கள் இடைக்காலத்தில் மேற்கத்தியர்களின் வீழ்ச்சியால் கவனிக்காது விடப்பட்டபோது அதைக் காப்பாற்றித்தந்த வேலையைச் செய்தது மட்டுமே அறேபியர்கள். அது தவிர்த்து அவர்கள் அதைக்கொண்டு பயனடையவோ, அல்லது அதை வளர்க்கவோ இல்லை. இறுதியில் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் இத்தகைய அறிவு முதுசங்கள் சொந்தக்காரர்களிடமே திரும்பி வந்தபோதுதான் அது மீண்டும் துளிர்த்து, மலர்ந்து, படர ஆரம்பித்து நவீன மேற்கத்திய நாகரிகத்தை உருவாக்குகிறது என் வாதிக்கிறார்கள்.

இந்நிலையில், 9/11 க்கு பிறகு இஸ்லாமிய நாகரிகம் மற்றும் மேற்கத்திய கிறித்தவ/மதச்சார்பற்ற நாகரிகம் குறித்த இந்த மேற்கத்தியக் கண்ணோட்டத்தில் துரித வளர்ச்சிகள் சில ஏற்படுகின்றன. முதலில் 9/11 மாதிரி ஒன்றைத் தீவிரவாதிகள் ஏன் நடத்தவேண்டும் என்ற கேள்வியே மேல்நோக்கி நின்றது. ‘அவர்கள் ஏன் நம்மை வெறுக்கிறார்கள்’ என்று ஒவ்வொரு அமெரிக்கனும் கேட்டான். அதற்குப் பதிலாகத்தான் ‘அவர்கள் நம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் வெறுக்கிறார்கள்’ என்ற கலாச்சாரப் பதில் ஒன்று வழங்கப்பட்டது. இங்கிருந்துதான் இஸ்லாம் மற்றும் மேற்கு குறித்த ‘கலாச்சார விவாதம்’ தொடங்குகிறது. மஹ்மூத் மம்தானி தனது ‘நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்’ என்ற புத்தகத்தில் இந்தக் கலாச்சார விவாதத்தைக் குறித்துதான் விவாதிக்கிறார். 9/11, அதற்குப் பின்னான ‘தீவிரவாதத்திற்கெதிரான போர்’ ஆகியவை நவீனத்துவ விழுமியங்களைத் தூக்கிப்பிடிக்கும் மேற்குக்கும் அவற்றை எதிர்க்கும் இஸ்லாமிய உலகுக்குமான மோதல் என்று சித்தரிக்கப்படும்பொழுது, ஒரு மதச்சார்பற்ற தன்னிலை இயல்பாகவே முன்னதுக்கு ஆதரவாகவும் பின்னதுக்கு எதிராகவும் நிலைப்பாடு எடுக்க நேரிடும். இவ்வாறுதான், அமெரிக்கா தனது ‘தீவிரவாதத்திற்கெதிரான போருக்கு’ ஏற்பை உற்பத்திசெய்து கொண்டது.

இப்போது இந்தியக் கருத்தியலைப் பொறுத்தவரை, அது இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து உருவாவதாக பெர்ரி ஆண்டர்சன் தனது ‘இந்தியக் கருத்தியல்’ (Indian Ideology) நூலில் கூறுகிறார். ஒவ்வொரு தேசிய அரசும் தேசமும் தன்னைப் பற்றிய உன்னதமான கடந்த காலத்தைக் கற்பனை செய்து கொள்ளும். அந்தத் தேசம் அனாதி காலத்திலிருந்து ஒரு பிரத்யேகமான கலாச்சாரத்தைப் பெற்றிருப்பதாகவும் பலநூறு ஆண்டுகள் உருண்டோடினாலும் அந்தக் குறிப்பிட்ட கலாச்சாரத்தின் சாராம்சம் உயிர்ப்போடு தொடர்வதாகவும் கற்பனை செய்துகொள்ளும். இத்தகைய கற்பனை மதவகைப்பட்டதாகவோ மதச்சார்பற்றதாகவோ இருக்கலாம். ‘இந்தியா சமாதானத்தில் நம்பிக்கை கொண்ட நாடு, பல்வேறு மதங்களையும் ஏற்றுக்கொண்டு சகித்துக்கொண்ட நாடு, பல்வேறு மொழி, கலாச்சாரம், நம்பிக்கைகளைக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, ஐரோப்பா போன்றல்லாது பல்கலாச்சாரச் சமூகமாக பன்னெடுங்காலமாகத் திகழ்ந்த நாடு, இப்பல்வேறு வேறுபாடுகளுக்கு நடுவிலும் இந்தியக் கலாச்சாரம் என்ற ஒற்றைச் சாராம்சத்தை துணைக்கண்டம் முழுக்கப் பகிர்ந்துகொண்டிருக்கும் நாடு’ என்பதுதான் இந்தியாவைக் குறித்த இந்தியக் கருத்தியல் ஆகும். இந்தக் கருத்தியலைப் பகிர்ந்துகொள்பவர்கள் ஒன்று மதவாதிகளாகவோ அல்லது மதச்சார்பற்றவர்களாகவோ இருக்கலாம், ஆனால் இந்தியத் தேசியவாதக் கருத்தியலிடமிருந்து தீவிரமாக முறித்துக்கொள்ளாதவர்களால் இக்கருத்தியலின் மேலாண்மையிலிருந்து முழுவதுமாக விடுபட முடிவதில்லை.

உலக சமயங்களின் மாநாட்டுக்கு இந்துச் சமயத்தின் சார்பாக உரையாற்றச் சென்றிருந்த விவேகானந்தர் தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டார் என்பதை இங்கு கூர்ந்து நோக்குவது நமக்கு உதவியாக இருக்கும். “நான் இவ்வுலகுக்குச் சகிப்புத்தன்மையையும் பிரபஞ்ச ஒப்புறவையும் கற்றுத்தந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் பிரபஞ்ச சகிப்புத்தன்மையில் மட்டும் நம்பிக்கை வைக்கவில்லை, எல்லா மதங்களையும் நாங்கள் உண்மை என ஏற்றுக்கொள்கிறோம். உலகின் எல்லா மதங்கள் மற்றும் தேசங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட அகதிகளுக்கும் அடைக்கலம் தந்த தேசத்திலிருந்து வந்திருக்கிறேன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ரோம சர்வாதிகாரம் எந்த ஆண்டு யூதர்களின் கோயிலைத் தூள்தூளாக உடைத்ததோ அந்த ஆண்டிலேயே தென்னிந்தியப் பகுதிக்கு வந்து அடைக்கலம் பெற்ற யூத இனத்தினரின் தூய்மையான மிச்சத்தை நாங்கள் எங்களது இதயப்பகுதியில் சேமித்திருக்கிறோம் என்பதையும் சொல்லிக்கொள்வதில் நான் பெருமடைகிறேன்.”

இங்கு விவேகானந்தர் அவர் எங்கிருந்து வந்தாரோ அந்தத் தேசத்தையும் அவரது மதத்தை ஒன்றுக்கு மற்றொன்று மாற்றீடாகப் பயன்படுத்தத்தக்கச் சொற்களாக அணுகுகிறார். தேசம் என்பது இந்திய தேசமாகவும், அதனது மதம் என்பது இந்திய அளவில் பரவியிருந்த, பல்வேறு வேறுபாடுகளுக்கு நடுவிலும் ஒரே சாராம்சத்தைக் கொண்டிருந்த இந்து மதமாகவும் கூறுகிறார். புவியியல் அடிப்படையில் இந்த ஒரே கலாச்சார சாராம்சத்தைக் கொண்டிருந்த தேசத்துக்குள் தென்னகத்தையும் கொண்டுவருகிறார். மேலும் ‘நாங்கள் பிரபஞ்ச சகிப்புத்தன்மையை மட்டும் நம்பவில்லை, மாறாக எல்லா மதங்களையும் உண்மை என்றும் நம்புகிறோம்’ என்று சொல்வதின் மூலம் ஏனைய மதங்களுக்கும், குறிப்பாக செமிட்டிக் மதங்களுக்கும் இந்து மதத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் இந்து மதத்தின் சிறப்பையும் சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறு மதச்சகிப்புத்தன்மை மற்றும் ஏற்பு என்னும் விஷயத்தில் ஏனைய மதங்களை விட இந்து மதமும், ஏனைய கலாச்சாரங்களை விட இந்துக் கலாச்சாரமும், ஏனைய தேசங்களை விட இந்தியத் தேசமும் சிறந்ததாக இருக்கிறது என்று வாதிடுகிறார்.

“ஒரு கலாச்சாரம் அல்லது நாகரிகம் ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்திருக்கிறது; அதுவும், தேங்கியோ மாற்றமடையவோ இல்லாமல் இந்தியா எல்லாக் காலத்திலுமே மாறிக்கொண்டும் முன்னேறிக்கொண்டும் இருந்திருக்கிறது. துணைக்கண்டத்தின் பண்டைய காலங்களில் ஏதோ தனித்தன்மை இருந்திருக்கவேண்டும், ஏனெனில் அதுதான் இவ்வளவு காலங்களாக இங்கு வாழ்பவர்கள் எல்லோரையும் தனித்த வகையில் இந்தியர்களாக, ஒரே தேசியப் பாரம்பரியத்தையும் ஒரே வகை அற மற்றும் சிந்தனைமுறையையும் கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது” என்று புளகாங்கிதமடைந்தார் எதிர்காலத்தில் இந்தியாவின் ஆட்சியாளராகவிருந்த ஜவஹர்லால் நேரு. நேருவின் இந்தக் கூற்றில் இந்தியாவின் மண்ணின் மதமாக அவர் எதையும் முன்வைக்கவில்லை என்றாலும் விவேகானந்தரின் கூற்றுக்கும் இதற்கும் சாராம்சத்தில் அதிக வித்தியாசமில்லை. இதன்பொருள் நேரு, விவேகானந்தர், சாவர்க்கர், கோட்சே ஆகியோருக்கு நடுவில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதல்ல, மாறாக ஒரு தேசத்தின் மேலாண்மைக் கருத்தியல் இயங்கும் தன்மையைப் புரிந்துகொள்வதே. ஆக, நேருவின் தேசியக் கற்பனையில் மதம் இடம்பெறவில்லை, ஆனால் அதைக் குறிக்க அறவியல், சிந்தனா முறைமை, கலாச்சாரம் மற்றும் நாகரிகம் என்ற வேறு மதச்சார்பற்ற சொற்கள் வழங்கப்படுகின்றன.

இங்கு இந்த மதம் மற்றும் மதச்சார்பின்மை என்பதைத் தாண்டி நாம் கவனிக்கவேண்டியது இவை ஒன்றோடொன்று ஒத்துப்போகும் இடங்களைத்தான். காலனியவாதிகளின் புறப்பாட்டுக்குப் பின்னும் தொடர இருக்கும் ஒரு தேசிய அரசின் கருத்தியலை இவ்வாறு வடிவமைக்கிறார் நேரு. இந்தியா என்பது காலனித்துவ, முதலாளித்துவ நவீனம் மிக அண்மைக்காலத்தில் உருவாக்கிய ஒரு தேசிய அரசு அல்ல, மாறாக அது பல்லாயிரமாண்டு காலங்களாகவே தனக்கென தனித்த மதம் அல்லது கலாச்சாரம் மற்றும் அது சார்ந்த அடையாளத்தைக் கொண்டிருந்த ஒரு தேசம் என்பதாகும் அது. பிரிட்டிஷ் காலனித்துவக் கருத்தியல் இந்தியாவை மாற்றமில்லாத, தேங்கிப்போய்விட்ட ஒரு பிற்போக்குத் தேசமாகவும் அதை முன்னேற்ற காலனிய ஆட்சி இந்தியர்களுக்கு அவசியம் எனவும் கட்டமைத்திருந்த காலகட்டத்தில், அதை மறுக்கும் விதமாவே நேரு இந்தியாவின் பழமை, தொடர்ச்சி, அதிலும் மாற்றம் மற்றும் முன்னேற்றம் ஆகிய மாற்றுக் கட்டமைப்புகளை முன்வைத்தார். ஆனால் பெர்ரி ஆண்டர்சன் குறிப்பிடுவதுபோல, இந்தியா இன்னும் காலனிய ஆட்சிக்குக் கீழிருக்கும் தேசமல்ல, மாறாக அது ஒரு தோற்றநிலை-ஏகாதிபத்தியமாக (proto-imperialism) வளர்ந்திருக்கும் ஒரு பின்-காலனிய அரசு. ஆக, இத்தகைய பொருண்மையான புறமெய்மையின் அடிப்படையில்தான் இத்தகைய கருத்தியலின் தற்கால நிலையை அறிந்துகொள்ள முடியும்.

இந்தியக் கருத்தியலின் அடிப்படைக் கூறுகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார் பெர்ரி ஆண்டர்சன்: பழமை-தொடர்ச்சி; வேறுபாடு-ஒருமை; பெருங்கொண்ட மக்கள்தொகை-ஜனநாயகம்; பல்சமயச் சமூகம்-மதச்சார்பின்மை. ராமச்சந்திரா குஹா போன்ற அறிஞர்களிலிருந்து பள்ளிக்கூடத்தில் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றும் தலைமையாசிரியர் வரை இந்தியாவின் தனித்தன்மையாகவும், பெருமையாகவும் கூறிக்கொள்வது இவற்றைத்தான். ஆயிரமாயிரம் ஆண்டுகால முதிர்ச்சி இருந்தாலும் இன்னும் இறவாமல் தொடரும் இந்தியப் பண்பாடு, இன-மத-மொழி அடிப்படையில் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களைப் பிணைக்கும் இந்தியக் கலாச்சாரம், உலகிலேயே நூறுகோடிக்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் இந்தியாவினால் ஜனநாயக அரசாக நீடிக்கமுடிவது மற்றும் ஏராளமான மதங்கள் இருந்தாலும் இந்தியா மதச்சார்பற்ற தேசமாக நீடிப்பது ஆகியவையே அவை. இதில் பல்சமய அங்கீகாரம், மதச்சார்பின்மை ஆகியவை எல்லாம் வருவதால் இது ஏதோ இந்துத்துவக் கருத்தியலோடு பண்பளவிலேயே முரண்படுதல் என்பதாகப் பார்க்கக் கூடாது. ஏனெனில் இந்துத்துவர்கள் தங்களை நிறைய செக்குலரைஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். பசுவின் பெயரால் கொலை செய்கிறவர்கள் அத்தகைய மொழியைப் பாவிக்க இயலாதவர்களாக இருக்கலாம், ஆனால் இந்துத்துவப் பொதுவிவாத முறைமை செக்குலரைஸ் ஆகியிருக்கிறது என்பதை நாம் கவனிக்காமல் விடமுடியாது.

உதாரணத்திற்கு, பிரகாஷ் ராஜ் மாளவிகா என்ற கன்னடத் திரைப்பட நடிகரோடு கர்னாடகத் தேர்தல் நேரத்தில் கலந்துகொண்ட நிகழ்வைக் குறிப்பிடலாம். அதில் செக்குலரிசத்தை வலியுறுத்திப் பிரகாஷ் ராஜ் பேசியபொழுது மாளவிகா “இந்துக்கள் எல்லோரும் இயல்பிலேயே மதச்சார்பற்றவர்கள்தான். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்கள் பல சமயங்களையும் ஏற்றுக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள். இந்துக்களைப் பற்றிப் பேசும் நீங்கள் ஏன் கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற முஸ்லிம் அமைப்புகள் நடத்தும் மதமாற்றத் தொழிற்சாலை பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்புகிறார். இங்கு மறுபடியும் எந்தக் கடவுள் கோட்பாட்டுடனும் கூர்மையான முரண்பாடுகளைக் கொண்டிராத, பரப்புரையில் ஈடுபடும் மதமாக இல்லாத (non-missionary religion) இந்து மதம்/இந்தியக் கலாச்சாரம் மற்றும் அது உருவாக்கும் இந்து/இந்தியத் தன்னிலைகள் ஆகியவை இயல்பிலேயே மதச்சார்பற்றவையாகச் சொல்லப்படுகின்றன. இங்கு மதச்சார்பின்மை அல்ல இந்துத்துவர்களின் பிரச்சினை, மாறாக பிற மதங்களையும் கடவுள்களையும் அங்கீகரிக்காத, பொய்ப்படுத்துகிற மற்றும் பரப்புரையில் ஈடுபடுகிற மதங்களே மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கின்றன. அவர்களால்தான் இந்துக்களின் தரப்பிலிருந்து சில விரும்பத்தகாத செயல்கள் நடக்கின்றன. முஸ்லிம், கிறித்தவ அடையாளத் தொகுதிகளை அங்கீகரித்து அவற்றை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக்கொள்ளும் போலி மதச்சார்பின்மைக் கட்சிகள்தான் அவற்றுக்குக் காரணம் என்று வாதிடுகிறார்கள். ஆக, இந்துத்துவர்கள் மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் அல்ல, மாறாக மதச்சிறுபான்மையினருக்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கும் வாக்கு வங்கிப் போலி மதச்சார்பின்மையே எங்களுக்குப் பிரச்சினை என்கிறார்கள்.

உலக நாடுகளில் இல்லாத மேற்சொன்ன (வேற்றுமையில் ஒற்றுமை, பல்வேறு மதங்களுடன் மதச்சார்பின்மை பேணல், ஜனநாயகம் ஆகிய) அதிசயங்கள் இந்தியாவில் சாத்தியப்பட்டதற்கான காரணத்தை மதச்சார்பற்றவர்கள் பொற்காலம் என்று சொல்லத்தக்க இந்தியாவின் கடந்த காலத்தில் தேடுவதில்தான் இந்துத்துவ வாதங்களுக்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இந்து/இந்திய மதம் அல்லது கலாச்சாரம் செமிட்டிக் மதங்கள் போன்று பிற மதங்களையும் கடவுள்களையும் மறுப்பவையல்ல, மாறாக எல்லாவற்றையும் இரு கைகளையும் விரித்து ஏற்றுக்கொள்பவை. அதனால்தான் இந்தியா பல்கலாச்சாரச் சமூகமாகவும், மதச்சார்பற்றதாகவும் விளங்குகிறது. மேலும், இதுவே இந்தியாவின் ஆன்ம பலம். அதனால்தான் இந்தியா பாகிஸ்தான் போன்று இல்லை என்பதாக விரிகின்றன அவை.

பௌத்தம் இந்தியாவில் தோன்றியிருந்தாலும் அது சர்வதேச மதமாகிவிட்டது என்பதாலும், இஸ்லாம் மற்றும் கிறித்தவம் தனது தோற்றத்தையே வெளி நிலங்களில் கொண்டிருப்பதாலும் அவை இந்தியாவின் தனித்தன்மையைக் குறிப்பதாக இல்லை. அத்தகைய பண்பு இந்து மதத்தில்தான் இருக்கிறது. மேலும் இந்து மதம்தான் ஒரே நேரத்தில் மதமாகவும், பிற மதங்களையும் தன்னுள் கவர்ந்துகொள்ளும் மதங்களின் கூட்டமைப்பாகவும் (அல்லது விவேகானந்தரின் வார்த்தைகளில் மதங்களின் தாயாகவும்) இருக்கிறது. அதுதான் இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளமாகவும் அதன் சரியான பிரதிநிதியாகவும் இருக்கும். இவ்வாறு இந்து/இந்திய மையவாதச் சொல்லாடல் விரிந்துகொண்டே செல்கிறது. இந்துத்துவர்களை விவாதத்தில் வெல்ல நினைப்பவர்கள் இந்த இந்துத்துவச் சொல்லாடல்களின் ஒத்திசைவை இனங்காண்பது நல்லது. இந்துத்துவம் நிறைய discursive இந்துக்களை உருவாக்கியிருக்கிறது என்பதையும், அது நிறைய மத்தியதர வர்க்க இந்துக்களைச் சென்றடைகிறது என்பதையும் நாம் அங்கீகரிக்காமல் இந்துத்துவத்துடனான கருத்தியல் போராட்டத்தில் நாம் வெல்ல முடியாது.

மேலும் இச்சொல்லாடல்களில் மையமாக இருக்கும் இஸ்லாமோ ஃபோபியாவையும் ஆழ்ந்து சிந்திப்பது அவசியமாகும். இந்தியச் சகிப்புத்தன்மை பற்றிப் பேசும்போது எவ்வாறு முக்கியமான அறிவுஜீவிகளும் இந்த இந்து மையவாதப் பிரச்சினையில் அவதிப்படுகிறார்கள் என்பதை அறிஞர் ஷுப் மாத்தூர் தனது ‘இந்து தேசியத்தின் அன்றாட வாழ்க்கை’ (The Everyday Life of Hindu Nationalism) என்ற நூலில் மிக அழகாகப் படம்பிடித்துக்காட்டுகிறார்.

ஆஷிஸ் நந்தி மற்றும் பார்த்தா சட்டர்ஜி போன்ற எழுத்தாளர்கள் “பாரம்பரிய” இந்தியச் சகிப்புத்தன்மையை எந்தக் கேள்வியுமின்றி இந்து கடந்தகாலத்தில் தேடுகிறார்கள், அதனது வேர்கள் இஸ்லாத்திலும் இன்னும் இதர இந்திய மரபுகளிலும் எவ்வாறு இருந்தன என்பது பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்தியா பற்றிய வரலாற்றிலும் மானுடவியல் ஆய்வுகளிலும் முஸ்லிம்கள் எந்தளவு இந்து (அல்லது உள்ளூர்) நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளுக்குத் தங்களை assimilate செய்து கொண்டார்களோ அந்தளவே இஸ்லாம் இந்தியாவினுடையதாக ஏற்கப்பட்டிருக்கிறது: அது, இந்து நிறுவனங்கள் மற்றும் வழக்கங்களான சாதி, வரதட்சணை, புனிதர்-வழிபாடு போன்றவற்றுடன் சமரசம் செய்துகொண்ட அளவு மட்டுமே அது இந்தியத்தைச் சேர்ந்தது. இந்து நம்பிக்கைகள் மற்றும் வழக்கங்களோடு சமரசம் செய்துகொண்ட அளவு மட்டுமே இஸ்லாம் இந்தியத்தைச் சேர்ந்தது எனக் கருதுவது லிபரல் உத்தியாக இருக்கிறது; இஸ்லாம் எந்தளவு இந்து மாதிரியோடு (Hindu Model) தன்னை assimilate செய்துகொண்டதோ அந்த அளவே அது இந்தியாவைச் சேர்ந்ததாகவும், இன்னும் சொல்லப்போனால் ‘சகிப்புத்தன்மை’ கொண்டதாகவும் கருதப்படுகிறது, இதில் சாதி மற்றும் தீண்டாமை நடைமுறைகளும் இன்னும் சில வழிபாடு சார்ந்த சடங்குகளும் அடங்கும். இத்தகைய assimilation “இந்திய இஸ்லாம்” என்று கொண்டாடப்பட்டு மிகப்பெரும் அளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது; யாரெல்லாம் இத்தகைய கடன்வாங்கல் இல்லாமல் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறார்களோ அவர்களெல்லாம் “அடிப்படைவாதிகள்”.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களது பிரத்தியேகமான மத மற்றும் கலாச்சார அடையாளத்தை “சகிப்புத்தன்மை” மற்றும் “தேசிய உள்ளடக்கல்”(national integration) ஆகியவற்றின் பெயரால் விட்டுவிடவேண்டும் என்றும், இன்னும் அவர்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பது குறித்து இந்துக்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் இந்திய மையநீரோட்டத்தில் கலக்கவேண்டும் என்றும் கோரும் assimilationist demand ஐ மானுடவியல் மற்றும் வரலாற்றுச் சொல்லாடல்களும் எதிரொலிக்கின்றன. இந்தியப் புலமையாளர்கள் மேற்கத்திய உலகு என்று வரும்பொழுது வித்தியாசத்திற்கான உரிமையைக் கோருகிறார்கள், இந்தக் கோரிக்கை மிகுந்த அழுத்தத்தோடு பின்காலனிய எழுத்துக்களில் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த வித்தியாசத்துக்கான உரிமை இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கு மறுக்கப்படுகிறது… முஸ்லிம்கள் தேசிய வாழ்க்கை எனும் மைய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்பதால் அவர்களது வித்தியாசத்தின் மீதான இந்துக்களின் வெறுப்புக்கு அவர்கள்தான் பொறுப்பாவார்கள் எனும் வாதத்தை நாம் அடிக்கடி கேட்கிறோம். (பக். 72)

இந்தியாவை “இந்து”வோடு சமப்படுத்தும் மானுடவியல் இலக்கியங்களின் மையவாதச் சொல்லாடல்கள் பற்றிப்பேசும்போது அய்ஜாஸ் அஹ்மது இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நிறைய ஸ்மிருதி இலக்கியங்களை விடப் பழமையான இருப்பை கிறித்தவம் கொண்டிருந்தாலும், அது இண்டிக்–கலாச்சாரத்தின் பகுதியாக அரிதாகவே பார்க்கப்படுகிறது… இஸ்லாம் மத்திய கால பக்தி இயக்கத்தை விடப் பழமையான இருப்பைக் கொண்டிருந்தாலும், அது ஓரத்திற்கு தள்ளப்பட்டும், இந்தியக் கலாச்சாரத்தின் மேல்மிச்சமான ஒன்றாகவும்தான் பார்க்கப்படுகிறது.”

இவ்வாறு இந்துக் கலாச்சாரத்தோடு இந்தியக் கலாச்சாரத்தையும் சமப்படுத்தி, பல்சமய ஏற்பு மற்றும் சகிப்புத்தன்மையின் சொரூபமாக இந்து மதம் கட்டமைக்கப்பட்டுவிட்ட பிறகு, சகிப்பின்மையைச் சாராம்சமாகக் கொண்ட மதமாக இஸ்லாம் சித்தரிக்கப்படுகிறது. இது வெறுமனே இந்துத்துவ வட்டாரங்களில் மட்டுமல்ல, மாறாக லிபரல் வட்டாரங்களிலும் இத்தகைய இருமை வாதங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. கொஞ்சம் லிபரலாக இந்த வாதத்தைக் கட்டமைப்பவர்கள் இஸ்லாத்திற்குள் சூஃபியிசத்தின் இருப்பைச் சுட்டிக்காட்டுவார்கள். இது குறித்து ஷுப் மாத்தூர் தனது நூலில் இவ்வாறு விரித்துரைக்கிறார்:

லிபரல் போன்று தெரியும் இந்த நிலைப்பாடு “அவைதீக” (heterodox) சூஃபியிசத்துக்கும் சகிப்புத்தன்மையற்ற “வைதீக” (orthodox) இஸ்லாத்துக்கும் நடுவில் ஒரு முரண்பாட்டை உருவாக்கி சூஃபிகளுக்கு ‘இஸ்லாத்தின் சகிப்புத்தன்மைமிக்க ஒரு விதிமீறல்’ எனும் பாத்திரத்தை வழங்குகிறது. இஸ்லாத்துக்கும் சூஃபியிசத்துக்குமான இத்தகைய வேறுபடுத்துதல் சூஃபிகள் தங்களைக் குறித்து கொண்டிருக்கும் சித்திரத்துக்கு எந்தவகையிலும் பொருத்தமில்லாததாக இருக்கிறது. சூஃபிகள் தங்களை வைதீக இஸ்லாத்துக்குள் திசைவழிபட்டவர்களாகவே காண்கிறார்கள், மற்றும் அவர்களது மெய்ஞான நடைமுறைகளை (mystical practices) இஸ்லாமியப் பாரம்பரியத்தில் உறுதியாக நீடித்துக்கொண்டு இறைவனுடனான தங்களது தனிப்பட்ட உறவை வலுப்படுத்துவதற்கான சாதனமாகவே காண்கிறார்கள். இவ்வாறு தெற்கு ஆசிய மற்றும் இதர முஸ்லிம்களுக்குப் பரிச்சயமான, இஸ்லாமிய மரபோடு சாராம்சமாகவே தொடர்புபட்டிருக்கும் சூஃபியிசத்தின் வாழ்கை யதார்த்தத்தோடு நேரடியாக முரண்படுவதாகவே சூஃபியிசம் குறித்த கல்விப்புலப் பதிவுகள் இருக்கின்றன. (பக். 71)

இத்தகைய முறையில்தான் மேற்கத்திய-இந்தியக் கருத்தியல்கள் முஸ்லிம்களை மற்றமையாக்கம் செய்கின்றன. தற்கால முதலாளித்துவ உலக ஒழுங்கில் போர்களும் வன்முறைகளும் ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்காகவும், உள்நாட்டில் தேசிய அரசுகள் தங்களது கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணியும் ஒரு குடிமக்கள் இராணுவத்தைக் கட்டுவதற்கும் இத்தகைய மற்றமையாக்கங்கள் அவசியப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் யூதர்கள் அவ்வாறுதான் மற்றமையாக்கம் செய்யப்பட்டார்கள். இந்தக் கருத்தியல்களின் அடிப்படையே ‘கலாச்சாரப் பேச்சு’தான். உடைமையை ஏகபோகமாக அனுபவித்து அதிகாரங்களைக் குவித்துக்கொண்டிருக்கும் வர்க்கங்களின் நலனுக்காக மேற்கில் குடிபெயரும் தொழிலாளர்களான முஸ்லிம்களையும், தங்களது ஏகாதிபத்திய நலன்களுக்கான போர்களை நியாயப்படுத்த பூகோளத் தெற்குத் தேசங்களையும், இந்தியாவில் உடைமையையும் அதிகாரத்தையும் அனுபவித்துவரும் பெருமுதலாளி வர்க்கத்தின் நலன்களைக் காக்க இங்குள்ள முஸ்லிம் உழைக்கும் மக்களையும் பூதாகரப்படுத்தியே இத்தகைய ஆளும் வர்க்கக் கருத்தியல்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்கின்றன.

ஆனால் உடைமை, அதிகாரம் ஆகியவற்றின் மீதான தங்களின் ஏகபோகத்தை மறைத்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பிரச்சினைகளின் மூலாதரமாகச் சித்தரித்து, அதற்குக் கலாச்சாரம் சார்ந்த காரணங்கள் கற்பித்துதான் இத்தகைய கருத்தியல்கள் இயங்குகின்றன. இதற்குதான் ‘இந்தியாவை உடைக்க நினைக்கும் இஸ்லாமிய அபாயம்’, ‘மேற்கத்திய மதிப்பீடுகளின் மீது போர்தொடுக்கும் இஸ்லாம்’, ‘நாகரிகங்களின் மோதல்’ போன்ற கருத்துருக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழில் தேவர் சாதிப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்துதான் வந்திருந்திருக்கின்றன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம். அதனாலேயே மேற்கண்ட விவாதத்தின் பின்னணியில் வைத்து இந்தப் படத்தைப் புரிந்துகொள்வது நமக்கு நலன் பயக்கும்.

இக்கட்டுரையின் தொடர்ச்சியை இங்கு வாசிக்கலாம்.

Related posts

Leave a Comment