கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிறையிலிருந்து… ஷர்ஜீல் இமாம்

Loading

[மாணவச் செயற்பாட்டாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான ஷர்ஜீல் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராகப் போராடியதற்காக ஜனவரி 2020ல் கைது செய்யப்பட்டார். இன்றுடன் (28.01.2023) சிறையில் மூன்று வருடங்களை நிறைவுசெய்கிறார். திகார் சிறையிலிருக்கும் ஷர்ஜீல் இமாம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே]

இந்தச் சிறை வாழ்க்கை என்னுள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை இன்னும் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் இரண்டு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று, என்னை நான் எப்படிப் பார்க்கிறேன்? மற்றொன்று, பிறர் என்னை எப்படிப் பார்க்கிறார்கள்? நிச்சயமாக இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

முதலில் மற்றவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை ஆய்வோம். மக்கள் என்னைப் பலவிதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்களுக்கு நான் ஒரு தீவிரவாதி; தில்லியில் கலவரத்தைத் தூண்டியவன். அவர்களுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. நான் கைதாகி ஒருமாதம் கழித்துதான் கலவரம் ஏற்பட்டது என்ற உண்மையில் அவர்களுக்கு அக்கறையில்லை. இங்கிருக்கும் மற்றொரு அறிவாளிக் கூட்டம் சொல்கிறது, “இவன் தீவிரவாதியல்ல; ஆனால், நிச்சயமாக இவன் தேசவிரோதி”. நான் பிரிவினைவாதி என்ற இவர்களின் நம்பிக்கைதான் இத்தகைய கூற்றுகளுக்குக் காரணம். சர்ச்சையாக ஏதாவது பேசி அதன் மூலம் ஒரேநாளில் புகழடைய விரும்பும் அரசியல்வாதி என்று சொல்லும் கூட்டமும் இருக்கிறது. இப்படியாக, சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் என் சிறைவாசத்தை நியாயப்படுத்தும் பெரும்பான்மை மக்களுக்கு என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதில் விருப்பமில்லை. மாறாக, ஊடகத் தகவல்கள் கொண்டும், அவரவர் அரசியல் சார்பு கொண்டும் என்னை இகழ்ந்துரைப்பதில் மனநிறைவு கொள்கிறார்கள்.

இவனுக்கு மேலதிகச் சிறைத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று விரும்பும் இக்கூட்டத்தினர் தவிர்த்து, அநியாயமாகச் சிறைவைக்கப்பட்டிருக்கிறேன் என்று பரிதாபப்படும் ஒரு கூட்டமும் உண்டு. “அவன் அரசியல்வாதிதான், சர்ச்சையாகப் பேசிப் புகழடைய விரும்பியவன்தான். ஆனால், அதற்காக ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கக் கூடாது. அவன் தீவிரவாதியல்ல, சாதாரண கல்லூரி மாணவன்” என்று பேசும் இவர்களுக்கும் முந்தைய வகையினருக்கும் பெரிய வேறுபாடில்லை. உங்களுடைய பரிதாபம் எந்த வகையிலாவது உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. இருப்பினும் நன்றி.

இவர்களல்லாமல் வேறுசில மக்களும் உள்ளனர். கொஞ்சம் எல்லை மீறினாலும், ஆளும் பாசிச அரசால் பாதிப்புக்குள்ளாகும் முஸ்லிம் மக்களுக்காகப் போராடியதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டிருக்கிறேன் என்று அவர்கள் நம்புகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ளும் இவர்களே எனக்கு நம்பிக்கையளிக்கின்றனர்.

கடைசியாக, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தோ, நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்கும் விதம் குறித்தோ எந்தப் புரிதலுமற்று தன்னியல்பாக என்மீது இரக்கம் கொள்ளும் சாதாரண முஸ்லிம்கள். இந்தப் பெரும்பான்மை – பிற்போக்குச் சமூகத்தில் அன்றாடம் வறுமையையும் வன்முறையையும் எதிர்கொண்டு வாழும் இம்மக்களின் அன்பே எனக்கு நிறைவையும் ஊக்கத்தையும் தருகிறது. வாழ்நாளில் நான் எழுதும், பேசும் அனைத்தும் இவர்களுக்கு உடனடியாகப் புரியாமல் போகலாம். ஆனால், நிச்சயம் அதில் பெரும்பாலானவற்றை அவர்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்வார்கள். சமத்துவம், சமூகநீதி என்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரியவைக்க முடியும்.

சரி முதல் பரிமாணத்திற்கு வருவோம். என்னை நான் எப்படிப் பார்க்கிறேன்?

கைதாகும்போது எனக்கு 31 வயது, இப்போது 34. 16 வருடங்களுக்கு முன்பு 2006ல் மும்பை ஐஐடியில் சேர்ந்தேன். 2011 முதல் கைதாகும்வரை மென்பொருள் பொறியியலாளராகப் பணிபுரிந்தேன். 2013ல் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறு படிக்கத் தொடங்கினேன். 2017ல் எம்.ஃபில் படிப்பு, 2020ல் முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோதுதான் கைதுசெய்யப்பட்டேன். இந்நிலையில், இரண்டு வேறுபட்ட ஆனால், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சிந்தனைகள்வழி என்னுடைய சுயத்தை விவரிக்க முடியும். அரசியல், மதம், தேசியவாதம், மையவாதம், பெரும்பான்மைவாதம், இன்றைய தேர்தல் முறை, பட்டியல் சமூகத்திலிருந்து முஸ்லிம், கிறித்தவர்களை விலக்குவது போன்ற பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதை உள்ளடக்கியதுதான் அரசியல் சிந்தனை. அதிகாரப் பரவலாக்கம், மாநில சுயாட்சி, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, முஸ்லிம் – கிறித்தவ தலித்களுக்கு இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமவாய்ப்பு, மொழி – மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு, பெருநிறுவனங்களை அரசுடைமையாக்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அரசியல் சிந்தனை முன்வைக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால், அமைப்பு ரீதியான குறைகளை நீக்கி, தேசியவாத நச்சுகளைக் களைந்து, மக்களாட்சி, சமூகநீதி, சிறுபான்மை உரிமை, கூட்டாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தை முன்னகர்த்திச் செல்ல வேண்டும். தெற்காசிய அரசியலைப் பொறுத்தவரை, நாம் அம்பேத்கர், ஜின்னா, லோகியா, பெரியார் ஆகியோரின் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.

மதச் சிந்தனைகளைப் பொறுத்தவரை, மதவெறி, மூடநம்பிக்கை, சாதியம், ஆணாதிக்கம், தனிமனிதச் சுதந்திரத்தின் மீதான வரம்புகள் என அடிப்படைவாதத்தின் தீய விளைவுகளையும் மதகுருக்களின் அதிகாரத்தையும் எதிர்த்துப் போரிட முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பற்றிய மௌலானா ஆஸாத்தின் அரசியல் பகுப்பாய்வு மீது தனிப்பட்ட முறையில் விமர்சனம் உண்டு. ஆனால், 20ம் நூற்றாண்டில் தெற்காசியாவில் அவருக்கு இணையான மார்க்க அறிஞர்கள் வெகு சிலரே உள்ளனர். கீழ்க்கண்ட குர்ஆன் விளக்கவுரையே அதற்குச் சாட்சி.

“மதம் மொத்த மனித இனத்திற்குமானது; ஏகத்துவம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது; நன்மை செய்தோருக்கு மறுமை நாளில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதை குர்ஆன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது. இதுதவிர மற்றவை அவசியமற்றதாகிவிடுகின்றன. முஸ்லிமோ முஸ்லிம் அல்லாதவரோ, ஷீஆவோ சுன்னியோ, இரட்சிப்பு ஒவ்வொரு நம்பிக்கையாளரின் உரிமையாகும்.”

(மௌலானா அபுல் கலாம் ஆஸாத், தர்ஜுமான் குர்ஆன், தொகுதி 2)

நம் மத நம்பிக்கை ஏற்படுத்திய தாக்கங்களில் முக்கியமானது, இயற்கை வளங்களும் பொதுச் சொத்துகளும் இறைவனுக்கும் மனித குலத்திற்கும் உரித்தானவை, தனி நபர்களுக்கோ நாடுகளுக்கோ அல்ல. நீதிக்காகப் போராடுபவர்களின் மார்க்கமே இஸ்லாம். தங்கள் மத அமைப்புகளுடன் இத்தகைய போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிமல்லாதவர்களும் என்னை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். என் மத நம்பிக்கை பற்றிய விவரிப்புகள் சிலருக்கு பண்படாததாகவும் மத நிந்தனையாகவும் தோன்றலாம். ஆனால், மௌலானா ஆஸாத், அல்லாமா இக்பால், ஈரானிய புரட்சியாளர் அலீ ஷரீஅத்தி, உச்சமாக முஹம்மது நபி ஆகியோரின் வழியிலமைந்த செம்மையான பாதை இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த இடத்தில் ஃபைஸ் அஹமது ஃபைஸை வழிமொழிகிறேன். அவரது கவிதையொன்றில், அடக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் நபியின் துணையை நாடும்விதமாக,

‘நீதிக்கும் இரக்கத்திற்கும் வழிகோலும் உங்கள் குரலுக்கு உலக அடக்குமுறையாளர்கள் கட்டாயம் பதில் சொல்வார்கள்’

என்று எழுதியிருப்பார்.

சிறை செல்வதற்கு முன், தொடக்கத்தில் குறிப்பிட்ட கூட்டத்தினரில் சிலரை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தேன். இன்னும் சிலரோ இரண்டு குழுவுக்கும் பொதுவான நபர்களாக இருக்கிறார்கள். நான் வெளியே வந்தபிறகு சந்திக்கும் நபர்கள் இந்தப் பொதுவான குழுவில் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். அவர்களே இன்றைய சமூகத்தின் அவசரத் தேவையாக இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட்கள் பற்றிச் சில வார்த்தைகள் :

நான் கம்யூனிசத்திற்கு எதிரானவன் கிடையாது. சமகால மனித வரலாற்றின் சமூகப் பொருளாதாரப் பகுப்பாய்வுக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டாங்களுக்காகவும் அவர்கள்மீது மரியாதை உண்டு. இவை நிச்சயம் எதிர்காலத் தத்துவார்த்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். பிரச்சினை என்னவென்றால், அவர்கள் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை அறிவியலாகப் பார்க்கிறார்கள். நூறாண்டுகளுக்கு முன்பே பொருள்முதல்வாதத்தை இயற்பியல் நிராகரித்துவிட்டது. மேலும், நிர்ணயவாதத்திற்கும் பொருள்களின் தொடக்கம் பற்றிய ஆய்விற்கும் வித்திட்ட ஹெய்ஸன்பெர்க்கிற்கு முன்பு, காலம் – வெளி பற்றிய சிந்தனைகளுக்கு வித்திட்ட ஐன்ஸ்டீனுக்கு முன்பு, மனித குல வரலாறு பற்றிய பாரம்பரிய மார்க்சிஸ்ட்டின் பார்வை குறுகிய நோக்கிலானது என்று மேற்கூறிய நிகழ்வுகள் உணர்த்தும் முன்பு, நியூட்டனின் இயக்கவியல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்துதான் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற அறிவியல் உருவானது.

அறிவியல் மீதான இத்தகைய தவறான நம்பிக்கைதான், சில கம்யூனிச நாடுகளிலும், சமகால இஸ்லாமிய நாடுகளிலும் உள்ளதுபோன்ற, சர்வாதிகாரத்தை உண்டாக்கி, தங்கள் கருத்தை மக்கள்மீது திணிக்கிறது. அறிவியல் அடிப்படையில் அமைந்த சமூகக் கோட்பாட்டின் மீதான வெறிதான், தங்கள் அடையாளத்திற்காகப் போராடும் மொழி – மதச் சிறுபான்மையினரின் நடவடிக்கைகளை, மனித வரலாற்றின் அறிவியில் போக்கிற்கு எதிரானது என்று கூறி அவர்களை கூட்டு வன்முறைக்கு ஆளாக்குகிறது. அவர்களின் புரட்சிகர மத உணர்வுகளையும் கற்பனையான ஒன்றென நிராகரிப்பதற்கும் இதுவே வழிகோலுகிறது.

என்னை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பது குறித்த விரிவான பதிவு இது. அனுபவங்களும் அறிவும் கூடக் கூட இதில் மாற்றங்கள் ஏற்படலாம். என்னுடைய அரசியல் – மதச் சிந்தனைகள் பற்றிய அடிப்படை வரையறைகளை முன்வைத்திருக்கிறேன். இனி என்னைப் பற்றி முடிவெடுப்பது வாசகரின் பொறுப்பு. இரண்டு கவிதை வரிகளோடு முடித்துக் கொள்கிறேன். ஒன்று ரூமியினுடையது,

‘நான் இந்தியனும் அல்லன் சீனனும் அல்லன்

பல்கேரியனும் அல்லன் சாக்சினனும் அல்லன்

நான் ஈராக்கிலிருந்தும் வரவில்லை, குராசானிலிருந்தும் வரவில்லை’

மற்றொன்று, தன் ஆசான் ரூமியைப் பின்பற்றி ஆறு நூற்றாண்டுகள் கழித்து இக்பால் எழுதியது,

‘துறவிக்கு கிழக்கும் இல்லை மேற்கும் இல்லை

அதுபோல என் வீடு தில்லியிலும் இல்லை ஈரானிலும் இல்லை உஸ்பெகிஸ்தானிலும் இல்லை.’

தமிழில் : சிவராஜ் பாரதி

(நன்றி: நீலம், நவம்பர் 2022)

Related posts

Leave a Comment