கட்டுரைகள் 

இந்திய கறுப்புப் பணம்: அளவும் அதன் முதலீட்டு முறைகளும் – ஜெயரஞ்சன்

கறுப்புப் பணம் உள்நாட்டில் முதலீடு செய்யப்படுவது மிகவும் சொற்பம். இதுகுறித்து ஆய்வு நடத்திய தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Drivers and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கறுப்புப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படுவதாக நிறுவுகிறார். மீதமுள்ள கறுப்புப் பணம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்படுகிறது. இத்தகைய பணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் பெருமளவில் சென்றடைகின்றன என்பதையும் அவர் பொதுவெளியில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு வெளியேறும் பணத்தின் அளவின்படி பார்த்தால் இந்தியா, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது.

The Drivers and Dynamics of Illicit Financial Flows from India

மிக முக்கியமாக, அவரது ஆய்வின் வாயிலாக நாம் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கள்ளப் பணத்தின் (அ) கறுப்புப் பணத்தின் அளவில் குறைந்தபட்ச மதிப்பீட்டை தெரிந்துகொள்ள முடிகிறது. அவர், நமது தாய்த் திருநாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளிவிவரங்களை அலசுகிறார். இந்திய நாட்டிலிருந்து ஏற்றுமதியான பொருள்களின் மதிப்பும் அளவும் மற்றும் அதேபோல் இறக்குமதியான பொருள்களின் அளவு மற்றும் மதிப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார். இந்தப் புள்ளிவிவரத்தை, எந்த நாடுகள் இந்தியாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்கின்றனவோ அந்த நாட்டின் ஏற்றுமதி/இறக்குமதி புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டு அதில் வரும் வேறுபாடுகளை கண்டடைகிறார்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு மின்சாரம் தயாரிக்கத் தேவையான உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்கப்படுவதாகக் கொள்வோம். அதற்கு இந்திய நிறுவனம் பிரான்ஸ் நிறுவனத்துக்கு பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பல நிறுவனங்கள் பல நாடுகளிலிருந்து தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும். இவை அனைத்தும் வகைப்படுத்தப்பட்டு அந்த ஆண்டு இந்தியா, பிரான்ஸ் நாட்டிலிருந்து இத்தனை இயந்திரங்களை இவ்வளவு விலைக்கு வாங்கியது என்ற தகவல் தொகுப்பு இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தால் வெளியிடப்படும். இதே போன்றதொரு தகவல் தொகுப்பை பிரான்ஸ் அரசின் வர்த்தக அமைச்சகமும் வெளியிடும். இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, 2014ஆம் ஆண்டு ரூ. 5000 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கொள்வோம். அதே ஆண்டு பிரான்ஸ் நாடு ரூ 2,000 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியானதாக தெரிவித்திருப்பதாகக் கொள்வோம். இந்த இரு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரூ 3,000 கோடி இந்தியாவிலிருந்து வெளியேறி இருப்பதும் (இயந்திரங்கள் வாங்குவது என்ற பெயரில்) ஆனால் அது பிரான்ஸ் நாட்டின் கணக்கில் வராததும் தெரியவரும். இந்த ரூ. 3,000 கோடியும் இந்தியாவிலிருந்து இறக்குமதி என்ற பெயரில் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட கள்ளப் பணம் ஆகும். இதைத்தான் Over Invoicing/ Under Invoicing மற்றும் Re-Invoicing என்று அழைக்கிறார்கள்.

இந்த தில்லுமுல்லுகளை விரிவாக விளக்க நான் முற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் துல்லியமாகக்கூட விளக்க முற்படவில்லை. இதுபோன்றெல்லாம் கள்ளப் பணம் வெளியேறுகிறது என்பதை விவரிக்க முயன்றுள்ளேன். இத்தகைய தில்லுமுல்லு பெருமளவில் இந்தியாவில் மட்டுமின்றி, வளரும் நாடுகள் குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் நடைபெறுகிறது என்பதை கள்ளப் பணம் குறித்த பல ஆய்வுகளும் சுட்டிக் காட்டுகின்றன.

வெளியேறும் கள்ளப் பணத்தின் அளவு

உங்களுக்கு தலைசுற்றல் ஏற்படும் என்றால் இக்கட்டுரையை மேலும் படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ஏற்றுமதி/இறக்குமதி என்ற வர்த்தக புள்ளிவிவரத் தரவுகளின் அடிப்படையில், 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் Mispricing என்று பொதுவாக அழைக்கப்படும் Over/Under/Re-Invoicing ஆகிய முறைகளைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளியேறிய பணத்தின் அளவை கணக்கிட்ட ஆய்வாளர்கள் மிரண்டுவிட்டனர். இந்த பத்தாண்டுகளில் இவ்வாறு இந்தியாவைவிட்டு வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ. 34,69,972 கோடிகளாகும். 2004ஆம் ஆண்டில் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ரூ 13,60,000 கோடியாகும். பத்தே ஆண்டுகளில் இந்தியாவைவிட்டு வெளியேறிய குறைந்தபட்ச மதிப்பு எத்தனை கோடானகோடிகள் என்பதை புரிந்துகொள்ள மேலும் பல புள்ளிவிவரங்கள் உள்ளன. இத்தகைய மதிப்பீடுகள் குறைந்தபட்ச மதிப்பீடுகள் மட்டுமே. ஏனெனில், பொருள் வர்த்தகத்தில் மட்டுமே இத்தனை தில்லுமுல்லுகள். சேவை வர்த்தகம் இந்தியா போன்ற நாட்டில் மிகப்பெரிய ஒரு துறையாகும். பல ஆயிரம் கோடிகளுக்கு வெளிநாடுகளுக்கு வர்த்தகம் நடைபெறும் ஒரு துறை. Software கம்பெனிகளின் வருமானம் எல்லாம் சேவை வர்த்தகத்திலிருந்து வருவதுதான். இந்தத் துறையின் (சேவை) வாயிலாக வெளியேற்றப்படும் பணமோ அல்லது உள்ளே கொண்டுவரப்படும் பணமோ இதில் அடங்காது. ஆகவேதான் இந்த ரூ. 56 லட்சம் கோடி என்பது குறைந்தபட்ச மதிப்பீடு என அந்த ஆய்வு கூறுகிறது.

ஆக, சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம்வாயிலாக வெளியேறியிருப்பதாகக் கொண்டால், மிகக்குறைந்த அளவாக கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ரூ. 350 லட்சம் கோடியாகும். இவ்வாறு Mispricing வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்ட கள்ளப் பணம், மொத்த கள்ளப் பணத்தில் ஏறத்தாழ 84 விழுக்காடு ஆகும். இம்முறையின்றி வேறுசில வழிகளும் இருக்கின்றன. அவற்றை நான் இங்கு விவாதிக்கவில்லை.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் பணம் எங்கு செல்கிறது?

இவ்வாறு கொண்டு செல்லப்படும் கள்ளப் பணத்தில் ஒரு சிறிய அளவு மொரீஷியஸ் மற்றும் சிங்கப்பூர் வழியாக (PN) அந்நிய முதலீடு என்ற பெயரில் இங்கு வந்துசேரும். ஆனால் இதுவொரு சிறு துளி. மற்ற பணமெல்லாம் அந்தந்த நாடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அதனால்தான் லண்டன் ஹோட்டல், சிங்கப்பூர் ஹோட்டல் என, பல முதலீடுகள்பற்றி வழக்குகளும் செய்திகளும் வருகின்றன. இவ்வாறு வரும் வழக்குகள் அபூர்வமானவை. இந்த வளர்ந்த நாடுகளை முதலீடுகளுக்குத் தேர்ந்தெடுக்க முக்கியதொரு காரணம், அந்நாடுகளின் பண மதிப்பு குன்றுவதில்லை. சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டேயிருக்கும். சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு இருக்கும். இந்தியா போன்று ஒருநாள் இரவில், ‘இந்தப் பணம் செல்லாது’ என்று கோமாளி அறிவிப்புகளும் வராது. அதை இங்கிருக்கும் பத்திரிகைகளும் நடுத்தர வர்க்கமும் கைகொட்டி தேசியம் என்ற பெயரால் வரவேற்பது அங்கு நடக்காது. இவை அனைத்தும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்குத் தெரிவதால்தான் இவ்வளவு பணம் அங்கு கொண்டுசெல்லப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது.

பேராசிரியர் நரசிம்ம ரெட்டி

இவ்வாறு கொண்டுசெல்லப்படும் பணம் முக்கியமாக இரண்டு துறைகள்வழியாக வெளியேறுகிறது என மற்றுமொரு ஆய்வு கண்டுள்ளது. இரண்டு வருடங்களுக்குமுன்பு, நாட்டிலுள்ள கள்ளப் பணம் குறித்து ஹைதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நரசிம்ம ரெட்டி ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

அந்த ஆய்வில் அதிர்ச்சிமிகுந்த கண்டுபிடிப்பை அவர் வந்தடைந்தார். பண்ட ஏற்றுமதி, இறக்குமதியில் அணு உலை மற்றும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் ஆலைகளை நிறுவ இறக்குமதி செய்யப்படும் முறையில்தான் 60 விழுக்காடுக்கும் மேலான கள்ளப் பணம் வெளியேறியது என்பதை அந்த ஆய்வு சான்றுகளோடு நிறுவுகிறது. எனவேதான், தமிழக கடற்கரைப் பகுதிகளில் இத்தனை அனல்மின் நிலையங்கள் தனியாரால் தொடங்க அனுமதிக்கப்பட்டு, முதலீடும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆலைகளின் வாயிலாக எத்தனை லட்சம் கோடி கறுப்புப் பணம் வெளியே கொண்டுசெல்லப்பட்டிருக்கும், உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். அதனால்தான் நாம் நமது மின்சாரத்துக்கு இவ்வளவு விலை கொடுக்கிறோம்.

இங்கு முக்கியமான ஒரு கூறையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இந்திய வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த நிபுணர்களும் மெத்தப்படித்த மேதாவி பத்திரிகையாளர்கள் பலரும் Cashless Economy எனும் மின்னணு வர்த்தகம் அல்லது பணப் பரிமாற்றம் வந்துவிட்டால் கறுப்புப் பணம் ஒழிந்துவிடும் எனக் கூறிவருகின்றனர். நாட்டின் நிதியமைச்சர் இந்த ‘செல்லாத’ அறிவிப்பை விளக்கிப் பேசும்போது, இந்த ‘செல்லாத’ அறிவிப்பு நாட்டில் மின்னணு வர்த்தகத்தை நோக்கி மக்களைத் தள்ளுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார். மக்கள், பணத்தை கையாள்வதில்தான் ஊழல் உருவாகிறதாம். வங்கி அட்டைகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் அதற்கு இடம் இருக்காதாம். இதுவும் ஒரு அரசியல் கருத்தாக்கம் என்றுதான் நாம் கொள்ள வேண்டும். அந்த நிலை உருவாவதற்கான தோதுகள் நம்மிடம் இப்போது இல்லை என்பதுபோன்ற நடைமுறைகள்சார்ந்த சிக்கல்கள் எல்லாம் இருக்கின்றன. ஆதார் அட்டையை திணித்ததுபோல அந்த அட்டையையும் திணிக்கமுடியாதா எங்களால் எனவும் வினவுகின்றனர் . நீங்கள் நினைத்தால் எதையும் திணிக்கலாம். ஆனால் நீங்கள் கூறும் பயன்களை நினைத்தால் எப்படிச் சிரிப்பது என்றுதான் புரியவில்லை.

கூடங்குளம் அணு உலை

இந்தியாவிலிருந்து வர்த்தகம் (Under Invoicing, Over Invoicing, Re – Invoicing) வாயிலாக வருடந்தோறும் வெளியே கொண்டு செல்லப்படும் பல லட்சம் கோடி கறுப்புப் பணம் ஸ்தூல ரூபாய் நோட்டுகளாக கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டவையல்ல. அனைத்தும் மின்னணு பரிமாற்றம் வழியாக நொடிப் பொழுதுகளில் வெளியேறியவைதான். ‘நான் செய்த இறக்குமதிக்காக இத்தனை கோடிகள் அந்த நாட்டுக்கு வழங்குகிறேன்’ எனக்கூறி சென்ற பணம்தானே இவ்வளவும். உண்மை இவ்வாறு இருக்க, மின்னணு பரிமாற்று முறை வந்தால் கறுப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று கூறுவதும், சத்தியம் செய்வதும் யாரை ஏமாற்ற? அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின் அதிலும் காசு பார்க்கலாம் என சில முதலாளிகளுக்கு நமது அரசு துணைபோவதெல்லாம் வேறு என்ன? உங்கள் பணம் வங்கியில் உள்ளது. மின் வாரியத்துக்கு நீங்கள் பணம் செலுத்த வங்கிகளின் மின்னணு பரிமாற்று முறையை பயன்படுத்தும்போது, நாம் ஒவ்வொருமுறையும் ஒரு சேவைக் கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டும். இது பரவலாகும்போது அந்த பரிமாற்று முறையை நடத்துபவர்கள் எவ்வளவு பணம் பண்ணலாம் என்பதை எண்ணிப் பாருங்கள். அவர்கள் ஒரு சேவையை வழங்குகிறார்கள். அதற்கு ஒரு கட்டணம் என்ற வாதம் சரி என எடுத்துக் கொள்வோம். அதேசமயத்தில், ஒருவர் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதற்கு மாற்றுவழி கண்டிப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக, வெளிநாடுகளில் கட்டண சாலைகள் இருப்பதுபோல். நீங்கள் விரும்பினால் அதில் பயணிக்கலாம். இல்லையென்றால் கட்டணமில்லா சாலையில் அதற்கு இணையாகவும் பயணிக்கலாம். ஆனால் இங்கோ, கட்டணச் சாலையில் மட்டுமே பயணிக்கும் ஒரு கொள்ளைத் திட்டத்தை அரசே முன்னின்று செயல்படுத்துவது கவனத்தில் கொள்ளத்தக்கது. புதியதொரு அமைப்பு நம் நாட்டில் கொண்டுவரப்பட்டால் அதில் இருக்கும் வாய்ப்புகளை நீக்கிவிட்டு, நம்மை கட்டாயப்படுத்துவது என்பது இந்தியாவுக்கே உரித்தான ஒன்று. அதுதான் ‘Cashless Economy’ என்று கூறுபவர்கள் ‘ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத’ கதையை நமக்கு நினைவூட்டுகிறது.

தலைமை அமைச்சரின் கறுப்புப் பணத்தின்மீதான போர் என்றும், Surgical Strike என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு வரவேற்கப்படும் அறிவிப்பு, கள்ளப் பணத்தின் இந்தக் கூறை தொட்டுக்கூட பார்க்க முடியாது. அதனால்தான் வணிகப் பத்திரிகைகளில் கருத்து தெரிவிக்கும் பொருளாதார வல்லுநர்களும் நடுத்தர வர்க்கங்களின் அரைகுறை புரிதலைக்கூட முழுப் புரிதலாக காட்டிக்கொள்ளும் கணக்கர்கள், செய்தியாளர்களும் கூத்தாடி வருகிறார்கள். மக்களின் அவலங்களை சிறிய தியாகம் எனவும் எதிர்காலம் சிறக்கும் எனவும் பம்மாத்துக் கதைகளை கூறி வருகிறார்கள். நமது சமுதாயம் எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இந்தப் புரிதலே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இதில் வெற்றிபெற்றவர்கள் யார்? இந்தப் புரிதலை பயன்படுத்திக்கொண்டு பல கோடானகோடி கறுப்புப் பணம்பற்றி சிறு துரும்பைக்கூட அசைக்காத ஆளும் நடுவண் அரசு கள்ளப் பணத்துக்கு எதிரான போர் என மார்தட்டிக் கொள்வது எத்தகைய நடிப்பு என்பதை அறிந்துகொள்வோம்.

இந்தியாவிலிருந்து 2014ஆம் ஆண்டு வெளியேறிய கறுப்புப் பணத்தின் அளவு ரூ.56.5 லட்சம் கோடி. இந்தியாவில் சுற்றில் உள்ள பணத்தின் அளவு ரூ.16 லட்சம் கோடி. அதில் ஏறத்தாழ ரூ.14 லட்சம் கோடி செல்லாததாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட பணத்தில் கறுப்புப் பணம் என்பது நான்கில் ஒரு பங்கு என்று வைத்துக்கொண்டால்கூட ரூ.3.5 லட்சம் கோடி. ஒரு ஆண்டில் வெளியே கொண்டுசெல்லப்பட்ட பணம் ரூ.56.5 லட்சம் கோடி. எவ்வளவு கறுப்புப் பணத்தை, நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன்வாயிலாக அழிக்கமுடியும்? உள்நாட்டில் நோட்டுகளாக உள்ள ஒரு சிறு பகுதியைத்தான் அழிக்க முடியும். மிகப்பெரும் பகுதி வெளியே அல்லவா உள்ளது. ஆக, இந்த அறிவிப்பின் உள் அரசியல் என்ன என்பது வெளிச்சம் ஆகிறது அல்லவா? கறுப்புப் பணத்தை ஒழிக்காமலேயே, ஒழித்த மாவீரன் என்ற பிம்பம் மற்ற எல்லா தோல்விகளையும் மறைக்க பாஜக-வுக்கு இப்போது தேவை. அதற்கு பலிகடா எப்போதும்போல் சாமானியன். சாமானியனை காவு கொடுக்க கொள்கையளவில் துணைபோவது நடுத்தர வர்க்கம். கள்ளப் பணக்காரன் மோனாலிசா சிரிப்போடு கடந்துபோவது புலனாகிறதா? அவன் பணம்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முதலீடு செய்யப்பட்டுவிட்டதே! அவன் தூங்கவில்லை என்பது உண்மையாயின், கவலையால் இருக்காது; அந்த மகிழ்ச்சியால் இருக்கும்.

ஜெ. ஜெயரஞ்சன்

கட்டுரையாளர்:

ஜெ.ஜெயரஞ்சன். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும், புத்தகங்களிலும் வெளிவந்துள்ளன.

நன்றி: மின்னம்பலம்

Related posts

Leave a Comment