சாதிவாரிக் கணக்கெடுப்பும் சாதி ஒழிப்பும்
![]()
ஆனந்த் தெல்தும்ப்டே அவர்களின் ‘சாதிவாரி கணக்கெடுப்பு எனும் மோசடி’ (The Caste Con Census) நூல் குறித்த ஓர் விவாதக் குறிப்பு இது.
1
ஆனந்த் தெல்தும்ப்டே அவர்களின் ‘சாதிவாரி கணக்கெடுப்பு எனும் மோசடி’ (The Caste Con Census) நூலை படிக்கவும் விவாதிக்கவும் ஏன் விரும்புகிறேன்? இந்நூலாசிரியர், சமகால சாதி ஒழிப்பு இயக்கத்தின் மிக முக்கியமான அறிவாளிகளில் ஒருவர். அவருடைய இந்த நூல், சாதி ஒழிப்பு இயக்க வட்டாரத்தின் பொதுப்போக்கு கருத்துகளுடன் முற்றிலும் மாறுபட்ட நிலையில் நின்று விவாதிக்கிறது. ஒருவரின் கருத்துகளும் வாதங்களும் உடன்பாடு எனில் போற்றிக் கொண்டாடவும், மாறுபாடு எனில் தூற்றவும் முயன்றால் கற்றுக்கொள்வதற்கு ஒன்றும் இருக்காது. ஆகவே, அண்மைக் காலத்தில் சாதி ஒழிப்பு இயக்க அறிவாளிகளுள் முதன்மையானவர்களில் ஒருவராகத் திகழும் ஆனந்த் தெல்தும்ப்டே அவர்களின் The Caste Con Census நூலை வாசித்தறியவும் கற்றுக்கொள்ளவும் உரையாடவும் விரும்புகிறேன். இதன் பொருட்டே இந்தக் குறிப்பை எழுதிக்கொள்கிறேன்.
2
முதலில், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிரான ஆனந்த் தெல்தும்ப்டே அவர்களின் வாதங்களைச் சுருக்கி, பின்வருமாறு தொகுத்து உரைக்கலாம்:-
- மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதியைக் கணக்கெடுப்பது, சாதி ஒழிப்பில் எந்தப் பங்கையும் ஆற்றாது. மாறாக, சாதி அமைப்பையும், சாதி அடையாளங்களையும், சாதி மோதல்களையும் அதிகப்படுத்தி வலுபடுத்தவே செய்யும்.
- தரவுகள் சேகரிப்பதென்பது நடுநிலையான, நோக்கமற்ற நடவடிக்கை அல்ல. வரலாற்று நோக்கில் பார்த்தால், 1857 கிளர்ச்சிக்குப் பிறகு இந்திய மக்களைப் பிரித்தாளும் நோக்கத்துடன் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை காலனிய அரசு மேற்கொண்டது. இதுபோலவே, சரிந்துவரும் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் பொருட்டு, மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அறிவித்துள்ளது. இது நீண்டகால நோக்கில் மிக மோசமான விளைவுகளை உருவாக்கும் அறிவிப்பு; செயற்பாடு.
- காலனிய அரசு மேற்கொண்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதியைக் கணக்கெடுத்தது, சாதி அந்தஸ்து போட்டிகளுக்கும் சாதி மோதல்களுக்கும் இட்டுச் சென்றது. அவை சாதி அமைப்பையும் சாதி அடையாளங்களையும் வலுப்படுத்துவதற்கே வழிவகுத்துள்ளன. காலனியத்திற்கு முந்தைய கால நெகிழ்வான, தளர்வான, இடம்பெயரத் தக்க சாதி அமைப்பை இறுக்கமான, கெட்டித் தட்டிப் போன ஒன்றாக காலனிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளும் நிர்வாக நடவடிக்கைகளுமே மாற்றின.
- இந்தியக் குடியரசும் அரசியலமைப்பும் தொடக்கத்திலிருந்தே சாதியை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இடஒதுக்கீடு முதலான நடவடிக்கைகள் மூலம் நிர்வகிக்கத்தக்க, கையாளத்தக்க வகையினமாகச் சாதியை மாற்றி, சமகாலச் சமூகத்தில் நிலைநிறுத்தி இருக்கின்றன. தம் அரசியல் அணிதிரட்டலுக்காகவும் நடப்பிலுள்ள ஏற்றத்தாழ்வுகளைப் பேணிப் பாதுகாக்கவும் மட்டுமே சாதியை அரசியல் கட்சிகள் பயன்படுத்திவருகின்றன. சமூக நீதி என்கிற பெயரில் நடந்த அரசியல் அணிதிரட்டல் அனைத்துமே, மண்டல் அரசியல் அணிதிரட்டல்கள் அனைத்துமே சாதியை அரசியல் சந்தைப் பொருளாகவும், சமூக நீதியை வெறும் பேச்சாகவும் ஆக்கிவிட்டன. சாதி ஒழிப்பு பற்றிய கவலை சமகால அரசியலில் அற்றுப் போய்விட்டது.
- இடஒதுக்கீடு முதலான பாகுபாடுகளைக் களையும் சமூகநீதி நடவடிக்கைகளுக்கு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தேவை என்று வாதிடப்படுகின்றது. ஆனால், இந்திய அரசு பல்வேறு தரவுச் சேகரிப்புகளின் மூலம் ஏற்கெனவே போதுமான தரவுகளை வைத்துள்ளது. அதே வேளையில், 2011 சமூக-பொருளாதார-சாதிவாரிக் கணக்கெடுப்பு போல, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் ஒருபோதும் துல்லியமானதாக இருக்க முடியாது. ஏனென்றால், இந்தியாவில் சாதி அமைப்பையும் அடையாளங்களையும் தரவுகளைச் சேகரித்து, ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு அவை பன்முகத்தன்மை கொண்டவையாக உள்ளன.
- ஒரு சாதிக்குழு தம்முள் சமத்துவம் கொண்டது, சமூக வாழ்வில் ஒரே தன்மை கொண்டது என்ற நோக்கில்தான் அந்தக் குழுவிற்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், எந்த நிலையில் உள்ள சாதிக் குழுவும் தம்முள் சமத்துவமும், ஒரே வாழ்நிலையும் கொண்டவை அல்ல. மாறாக, ஏற்றத்தாழ்வுகள் கொண்டவைதாம். பட்டியல் பழங்குடிகள், பட்டியல் சாதிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆகிய எல்லாவற்றிலும் மேட்டுக் குடிகள் (elite) மட்டுமே இடஒதுக்கீட்டால் பயன்பெறுகின்றனர். அவர்கள் மேன்மேலும் சாதி அடையாளங்களை வலிமைப்படுத்தவும், உள் ஒதுக்கீடு முதலான மோதல்களை ஊக்குவிக்கவும் செய்கின்றனர். இந்த வகையில் இடஒதுக்கீடு சாதியை ஒழிக்கவில்லை; மாறாக வலிமைப்படுத்தியுள்ளது. சமூகத்தில் மேன்மேலும் அதிகமான பிளவுகளை ஏற்படுத்தி வலுப்படுத்திவருகின்றது.
- சுந்திர இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் போனதற்கு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்கப்பட்டதே காரணம் ஆகும். இது எண்ணற்ற சாதிக் குழுக்களை சமூக அளவிலும் கல்விநிலையிலும் பின்தங்கிய நிலையில் உள்ளோம் என வாதிட்டு, அரசு வேலைவாய்ப்புகளுக்காகப் போட்டிப் போட வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியே பொருளாதார அளவிலான நலிந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீடு. ஆகவே, சாதி அடையாளமும் அமைப்பும் வலுவாக இருப்பதற்கான மிக முக்கியமான காரணமாக இடஒதுக்கீடு உள்ளது.
- எனவே, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஆதரிக்கும் தருக்கமே எதிர்க்கப்பட வேண்டும்; சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடானது சாதி ஒழிப்பையும் சமத்துவத்தையும் கொண்டுவராது. உண்மையான இலக்கு சாதி ஒழிப்பாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்கிற சமத்துவமாக இருக்க வேண்டும்.
- அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம், அனைவருக்கும் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் என்பவற்றை உறுதிசெய்ய வேண்டும்; அத்துடன், இடஒதுக்கீட்டு முறையின் பலன்களை சாதிக்குழுக்களின் சிறு பகுதியினரே அனுபவிப்பதைத் தடுக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்; சாதியை ஒழிக்கும் கல்வி-பண்பாட்டு-அரசியல் வெகுமக்கள் இயக்கங்களை நடத்த வேண்டும்.
ஏறக்குறைய எந்தவிதக் குறைத்தலும் சுருக்கலுமின்றி, ஆனந்த் தெல்தும்ப்டே அவர்களின் வாதங்களைத் தொகுத்துக்கொள்ள முயன்றுள்ளேன். ஒரே வேளையில் இந்த வாதங்களிலும் கருத்துகளிலும் உடன்பாடும் முரண்பாடும் கொள்கிறேன். இதனையும் பின்வரும் பத்திகளில் சுருக்கமாக எடுத்துரைக்கிறேன்.
3
எல்லாவற்றுக்கும் முதலில் சாதி ஒழிப்பை முன்னிறுத்த வேண்டும்; உயர்த்திப் பிடிக்க வேண்டும்; எப்போதும் மறந்துவிடக் கூடாது என்கிற ஆனந்த் தெல்டும்ப்டே அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட வகுப்பினர்கள் அனைவரும் — மனிதத் தன்மையுள்ள எவரும் — ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். ஆனால், சாதி ஒழிப்பு என்பது புலனாகும் சாதிக் குழு மனப்பாங்கையும் அடையாளங்களையும் ஒழிப்பது மட்டுமல்ல.
குறுகிய சாதிக் குழு மனப்பாங்கையும் அடையாளங்களையும் ஒழித்து, ஒடுக்கப்பட்ட உழைக்கும் சாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதார் / ஒடுக்கப்பட்டோர் / தலித் / உழைக்கும் மக்கள் என்கிற வகுப்பு = வர்க்க உணர்ச்சியோடு ஒன்றுபடுதல் சாதி ஒழிப்புக்கு அவசியமானது என்பது மறுக்க முடியாத ஒன்று. அதேவேளையில், சாதி உணர்வுகளுக்கும் அடையாளங்களுக்கும் அப்பாற்றப்பட்டவராகக் கருதிக்கொள்ளும், காட்டிக்கொள்ளும், குறுகிய சாதி உணர்வுகளையும் அடையாளங்களையும் தூண்டிவிட்டு, குளிர் காய்ந்து, நாட்டின் ஒட்டுமொத்த வளத்தையும் அதிகாரத்தையும் அகப்படுத்திக்கொண்டு வாழும் பார்ப்பன – பனியா – இந்து உயர்சாதிப் பணக்கார வகுப்பினரை (இவர்களே இந்நாட்டின் பெருமுதலாளிகளாகவும் அதிகாரி வர்க்கமாகவும் அரசியல் தலைவர்களாகவும் உள்ளனர்) ஒழித்துக்கட்டுவதுதான் உண்மையான சாதி ஒழிப்பு ஆகும். இவர்கள் ஒழிக்கப்படாமல் அனைவருக்கும் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் என்கிற உத்தரவாதம் கிடைக்காது. ஆனால், ஆனந்த் தெல்தும்ப்டே அவர்கள் சாதி ஒழிப்பை குறுகிய சாதிக் குழு உணர்வு மற்றும் அடையாள ஒழிப்பு என்பதாக மட்டுமாகவே இந்நூலில் கையாள்கிறார்.
4
பல நேரங்களில் சாதி ஒழிப்பு நோக்கத்திற்காகக் கோரிக்கையாக எழுப்பப்பட்டு அரசு நடவடிக்கைகளாக ஆனவை, சாதி உணர்வையும் மோதல்களையும் பெருக்கியுள்ளன என்பதும் உண்மைதான். குறிப்பாக “இடஒதுக்கீடு” பார்ப்பனரல்லாதார் – ஒடுக்கப்பட்டோர் – தலித் வகுப்புகளின் மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியையும் வகுப்பு உணர்ச்சியையும் பெருக்கவில்லை; மாறாக, குறுகிய சாதிக் குழு உணர்ச்சியையும் அடையாளப் பற்றையும் பெருக்கியுள்ளது; இறுகப் பற்றிக்கொள்ளச் செய்துள்ளது. மிகவும் குறிப்பாக, இந்த வகுப்புகளில் இடஒதுக்கீடு மூலம் பயன்பெற்றுள்ளோர், புதிய வகைப் பார்ப்பனராக — கவர்மெண்ட் பிராமணராக —மாற முயன்றுவருகின்றனர். அதனால், அவர்கள் சாதி ஒழிப்பை முன்னெடுக்கும் வகுப்பு உணர்ச்சியைப் பெறவில்லை. இத்தோடு நிற்காமல், வகுப்பு உணர்ச்சியை வெறும் சாதி உணர்ச்சியாகவும் உருப்படுத்திவருகின்றனர். இவையெல்லாம் உண்மையே.
ஏற்றத்தாழ்வான இந்தியச் சமூகத்தில் பாகுபாடுகளை ஒழிக்கும் நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்ட, பின்தங்கிய சமூகங்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கைகளை (இதனையே “இடஒதுக்கீடு” என்று இழிவு கருதிச் சுட்டுகின்றனர், அதுவே பெருவழக்காகவும் மாறிவிட்டது), பார்ப்பன இந்து உயர்சாதி அதிகாரி வர்க்கத்தினர் இயன்றவாறெல்லாம் சிதைத்துவந்துள்ளனர்; வருகின்றனர். இதன் ஒருபகுதியே ‘பொருளாதார நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு’ என்கிற பெயரிலான நடவடிக்கை. இந்நடவடிக்கை, ஏற்கெனவே கல்வியிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் சமூக வெளிகளிலும் தம் எண்ணிக்கையைவிட மிகமிக அதிகமாகப் பிரதிநிதித்துவம் பெற்று அதிகாரம் செலுத்துவோரை மேன்மேலும் வலிமைப்படுத்தும் நடவடிக்கை; ஒட்டுமொத்தமாக, பின்தங்கியோருக்கு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கையைச் சிதைக்கும் நடவடிக்கை. இது, கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா குறிப்பிடுவதுபோல், பார்ப்பனரல்லாதாரைப் பழிவாங்கும் பார்ப்பன இந்து உயர்சாதியினரின் நடவடிக்கைகளில் ஒன்று.
எவ்வாறாயினும், ஒடுக்கப்பட்ட வகுப்புகள் பெரும் போராட்டங்கள் வழியாக, முன்னுரிமை வழங்கும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்தனர். இவற்றின் வழியாகவே, சமூக அளவில் பெரும் வலிமையையும் விழிப்புணர்வையும் அரசியல் தூண்டுதலையும் பெற்றுள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. இதுவே இன்றைய சாதி ஒழிப்பு இயக்கத்தின் உந்துதல் ஆற்றலாகவும் செயல்படுகின்றது.
ஆகவே, எந்தத் தரவுகளுமே இல்லாமல், “இடஒதுக்கீடு” என்பதை ஒருசில சாதிக்குழுக்களின் அல்லது சாதியின் சிறுபகுதியினர் மட்டுமே அனுபவித்துவருகின்றனர் என்று வாதிடுவது அர்த்தமற்றது. மற்றவற்றுக்கு எல்லாம் விரிவான ஆய்வுகளை மேற்கோள் காட்டும் ஆனந்த் அவர்கள், இதற்கு மட்டும் எந்த ஆய்வையும் மேற்கோள் காட்டாமல், ஆய்வையும் மேற்கொள்ளாமல், ஆளும் வட்டாரத்தின் வெறும் “கதைகளை” அப்படியே தலைமேற்கொண்டு விவாதிப்பது நியாயமானது அல்ல.
எவ்வாறாயினும், இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட “சமூக நிலையிலும் கல்விநிலையிலும் பின்தங்கியோருக்கு முன்னுரிமை அளித்தல்” உள்ளிட்ட பாகுபாடுகளை ஒழிக்கும் அரசு நடவடிக்கைகள் குறித்து ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் அறிவாளிகளும் அமைப்புகளும் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வுகளின் வழி பெற்ற படிப்பினைகளைக் கொண்டு, நடவடிக்கைகளைச் சீரமைக்க வேண்டும். உள்ஒதுக்கீடு முதலான கோரிக்கைகள் பிளவு எண்ணங்களை மட்டும் வெளிப்படுத்துவதில்லை; சமத்துவத்தையும், தம் உரிமையையும் நோக்கமாகக் கொண்டவையாகவும் இருக்கலாம். எனவே, எந்தவொரு சிறு குழுவின் கோரிக்கையும்கூட நியாயமாகப் பரிசீலனை செய்யப்பட வேண்டும். தம்முடைய வகுப்புகளில் உள்ள சமூக (சாதி) குழுக்களிடையே வாய்ப்புகள் சமமாகப் பகிரப்படுவதையும், இதுகுறித்த வெளிப்படையான உரையாடல்களையும் உறுதிசெய்யும் நடவடிக்கைகளையும் எப்போதும் மேற்கொள்ள வேண்டும். இதில் மிகக் குறுகிய மனப்பாங்கையும் ஒருதலைச் சாய்வு நோக்கையும் ஒழித்துக்கட்ட வேண்டும்.
இறுதியாக, “இடஒதுக்கீடு” நடவடிக்கையை ஆனந்த் அவர்கள் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உத்தரவாதம் போன்ற முழுதளாவிய நடவடிக்கை என்று கருதி வாதிடுகிறார். அல்லது, இலக்கு கருதிய நடவடிக்கை என்று கருதி கேள்விக்கு உட்படுத்துகிறார். ஆனால், ஏற்கெனவே உள்ள சாதி அமைப்பு, இந்தியச் சமுதாயத்தைக் கூறுபடுத்தி உள்ளது. அரசாங்கத்திலும் சரி, அரசாங்கத்தையே அழிக்கும் நோக்கம் கொண்ட புரட்சியிலும் சரி தலைமை தாங்குவோர் பார்ப்பன – இந்து உயர் சாதி வகுப்பினராகவே ஏன் உள்ளனர்? இதற்கு இந்தியாவில் உள்ள சாதி அமைப்பு அல்லாது வேறு எது காரணமாக இருக்க முடியும்?! அரசாங்க நடவடிக்கைகளிலும் பிற அனைத்து நடவடிக்கைகளிலும் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் பங்குகொள்வதையும் பங்கேற்பதையும் உத்தரவாதம் செய்யும் நோக்கம் கருதிய நடவடிக்கையே “பின் தங்கியோருக்கு முன்னுரிமை அளித்தல்” என்பதை நாம் ஆழமாக உணரவேண்டும். வாய்ப்பே அளிக்கப்படாத ஒருவர், தம் தகுதியை மட்டுமல்லாமல், தத்துவத் திறனையும் தியாகத்தையும்கூட நிரூபணம் செய்ய முடியாது. ஆகவே, ஆட்சி செலுத்தல் ஆயினும் சரி, புரட்சி செய்தல் ஆயினும் சரி, சமுதாயத்தின் பல்வேறு பகுதியினருக்கும் அனைத்து மட்டங்களிலும் பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும். எதுவொன்றும் இதிலிருந்து விலக்குப் பெறத்தக்க புனித நடவடிக்கை அல்ல.
5
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட தரவுகள் சேகரிப்பு நடுநிலையான நடவடிக்கை அல்ல; நோக்கம் கருதிய நடவடிக்கையே. இது முற்றிலும், முக்காலத்திலும் உண்மை. ஆனால், ஒரு நோக்கத்தோடு செய்யப்படும் தரவுச் சேகரிப்பு, அந்த நோக்கத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது.
1857 கிளர்ச்சியின் தோல்விக்குப் பிறகு, இந்தியாவைப் பிரித்தாளும் நோக்கத்தின் பொருட்டே காலனிய அரசு இயந்திரம் ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டது என்பது பார்ப்பன இந்து உயர்சாதித் தேசியவாதத்தின் “குழந்தைகளுக்குப் பயமூட்டும் பேய்க் கதை”. இந்தக் கதையாடலை எந்தக் குறுக்கு விசாரணையும் இன்றி அப்படியே தலைமேற்கொண்டு வாதிடுவதில் எந்த நியாயமும் இல்லை.
தாம் ஆட்சி செய்யும் இந்தியத் துணைக்கண்டப் பரப்பு, மக்கள், பண்பாடு ஆகியவை குறித்துப் போதுமான அறிவு தமக்கு இல்லை என்பதை பிரிட்டிஷ் ஆளும் தரப்பினர் 1857 கிளர்ச்சிக்குப் பிறகு உணர்ந்தனர். இதன் பொருட்டே, குலங்கள் குடிகள் குறித்த தம் சொந்த இனவியல் ஆய்வுகளையும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போன்ற தரவுச் சேகரிப்புகளையும் தொடங்கினர். 1891, 1901, 1911 ஆகிய காலனிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் இந்தியத் துணைக்கண்டப் பரப்பில் வாழ்ந்த சாதிகளை, சமூகங்களை, பழங்குடிகளை வருணப் படியில் அடுக்கும் முயற்சியை பிரிட்டிஷ் அலுவலர்கள் மேற்கொண்டனர். இம்முயற்சியே பெரும் பதற்றத்தையும் மோதல்களையும் உருவாக்கியது. ஆனால், வருணப் படிநிலையில் அடுக்கும் இம்முயற்சி வெற்றிபெறவில்லை.
எவ்வாறாயினும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பார்ப்பன இந்து உயர்சாதி ஆதிக்கத்தை பளிச்சென வெட்ட வெளிச்சமிட்டும் காட்டியது. இந்தத் தரவுகளின் வழியாக, இந்தியாவில் உள்ள இழிநிலைகளையும் அதுபற்றிய கவலையற்ற பார்ப்பன இந்து உயர்சாதித் தேசியவாதிகளின் ஆதிக்க அரசியல் குறித்தும் அம்பலப்படுத்தும் அரசியல் வலுப்பெற்றது. குறிப்பாக, அம்பேத்கர் – பெரியார் இயக்கங்கள் இத்தரவுகளின் வழியாகவே பெரும் விழிப்புணர்வை ஊட்டின.
ஆகவே, எவ்வாறாயினும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள், இந்திய அதிகார வர்க்கம் கொண்டுள்ள கள்ள மௌனத்தை உடைக்கும். இந்தியாவில் உள்ள சாதி அடுக்கு வாரியாகவே அதிகாரமும் செல்வமும் குவிக்கப்பட்டிருப்பதை, குறிப்பாக பார்ப்பன ஆதிக்கத்தை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டுவரும். இது எவ்வளவுதான் சாதிப் பிளவுகளைத் தூண்டினாலும், இறுதியில் பார்ப்பன எதிர்ப்பையும் பார்ப்பனரல்லாதார் வகுப்புகளின் ஒற்றுமை உணர்வையும் வலுப்படுத்தவே செய்யும்.
6
ஆனந்த் அவர்கள் The Caste Con Census நூலில் எழுப்பும் பல கவலைகள் நியாயமானவை. ஆனால், எண்ணெய்ச் சட்டியிலிருந்து எரியும் அடுப்பில் குதித்துவிட்டதைப் போன்றும், எலிக்குப் பயந்து வீட்டின் கூரைக்குத் தீயிட்டதைப் போன்றும் அவருடைய கவலைகள் மோசமான, ஒருதலைச் சாய்வான முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன. அந்த முடிவுகளுக்கு ஏற்ப, எல்லாவிதமான ஆய்வுகளையும் தரவுகளையும் எந்தக் கவலையுமில்லாமல் ஆனந்த் தெல்தும்ப்டே வளைக்கவும் செய்கிறார். சாதி ஒழிப்பு என்கிற நோக்கம் கருதியே அவர் இவ்வாறெல்லாம் செய்கிறார். எனினும், அந்த நோக்கம் வெறுமனே குறுகிய சாதிக் குழு உணர்வுகளையும் அடையாளங்களையும் ஒழிக்கும் நோக்கமாகக் குறுகிப் போய்விடுகிறது.
கண்ணுக்குத் தெரியாமலும், கண்ணின் பார்வையை மறைக்கும் அளவில்பிரமாண்டமாகவும் உள்ள சாதி அதிகார அடுக்கு அமைப்பு குறித்து எந்தக் கவலையுமில்லாததுமாக ஆகிவிடுகின்றது.
7
ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலை மிக விரைவாக மணற்கேணி பதிப்பகம் தமிழாக்கம் செய்து, ‘சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்’ என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளது. த. சித்தார்த்தன் என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார். மொழிபெயர்ப்பில் செயற்கை நுண்ணறிவுத் துணைக் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்தக் காலத்தில், இயந்திர மொழிபெயர்ப்புக் கருவிகளுக்குச் சவால் விடும் வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரிய செய்தி. அத்தோடு, இந்தத் தமிழாக்க நூலுக்கு நல்ல எடிட்டரும் வாய்க்கவில்லை என்பது, இதன் வாசிப்பைப் பெரும் துன்பம் ஆக்குகிறது.

