குறும்பதிவுகள் 

இந்திய இஸ்ரேல் உறவு

Loading

இந்தியாவின் தொடக்க காலத் தலைவர்கள் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக நின்றனர். ஆனால் இன்று இந்தியாவும் இஸ்ரேலும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறியுள்ளன. இந்தப் பெரிய திருப்பம் எவ்வாறு ஏற்பட்டது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

மகாத்மா காந்தியும் ஜவஹர்லால் நேருவும் ஃபலஸ்தீனத்தில் யூத தேசிய அரசு அமைப்பதைக் கடுமையாக எதிர்த்தனர். ‘ஃபலஸ்தீன் அரேபியர்களுக்குரியது’ என்று காந்தி திட்டவட்டமாகக் கூறினார். 1947இல் ஃபலஸ்தீனை பிரிப்பதற்கான ஐநாவின் திட்டத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்தது. நேரு தலைமையிலான இந்தியா அணிசேரா இயக்கத்தில் நின்று, அரபு நாடுகளுடன் நெருக்கமாக இருந்தது.

இருப்பினும் இந்தியாவின் இந்நிலைப்பாடு போர்க்காலங்களில் பலவீனமடைந்தது. மாறுதலுக்கு உள்ளானது. 1962 சீனா-இந்தியப் போர், 1971 பாகிஸ்தான் போர், 1999 கார்கில் போர் ஆகியவற்றில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ரகசியமாக ஆயுதங்கள், பீரங்கிகள், ட்ரோன்கள் வழங்கியது. இப்பின்னணியில் இந்த இராணுவத் தொடர்பு படிப்படியாக வலுப்பெற்றது.

1980-90களில் இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் வலுவடைந்தன. அவை இஸ்ரேலின் சியோனிசத்தை, யூத தேசியவாதத்தை தமது முன்மாதிரியாகக் கருதின. ஏனெனில், வலிமையான இராணுவமும், மத அடையாள அரசுமே வேண்டும் என்பது இந்துத்துவத்தின், சியோனிசத்தின் கொள்கையாக இருந்தது.

1992இல் நரசிம்ம ராவ் ஆட்சியில் இஸ்ரேலை முழு அங்கீகாரம் அளித்து தூதரக உறவு தொடங்கப்பட்டது. கார்கிலுக்குப் பிறகு உறவு பகிரங்கமானது. 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாத எதிர்ப்பு, தீவிர கண்காணிப்பு (Surveillance) என இரு நாடுகளும் ஒரே மொழியில் பேசத் தொடங்கின.

இப்போது இஸ்ரேல் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தர்களில் ஒன்றாக உள்ளது. ட்ரோன்கள், ஏவுகணைகள், ராடார்கள் எனப் பெரும்பாலானவை இஸ்ரேலிலிருந்து வருகின்றன. விவசாயம், நீர் மேலாண்மை, தொழில்நுட்பத்திலும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

மோடி ஆட்சிக்குப் பிறகு உறவு மேலும் வேகமாக வளர்ந்தது. 2017இல் மோடி முதல் இந்தியப் பிரதமராக இஸ்ரேல் சென்றார். இந்துத்துவமும் சியோனிசமும் சில கருத்துகளில் ஒத்துப்போவதால் இந்தக் கூட்டணி நாளுக்கு நாள் ஆழமடைகிறது.

கடந்த பிப்ரவரி 25-26 அன்று நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது 2017க்குப் பிறகு அவரது இரண்டாவது பயணம். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை தனிப்பட்ட முறையில் வரவேற்றார். மோடி இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் (Knesset) உரை நிகழ்த்திய முதல் இந்தியப் பிரதமர் என்ற அவப்புகழை அடைந்திருக்கிறார்.

ஃபலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு தேச தீர்வை ஆதரிப்பதாகக் கூறினாலும், உறவு இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக ஆகியிருக்கிறது. குறிப்பாக, ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல்களை, ஆயதுல்லாஹ் காமினியின் கொலையை இந்தியா கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்துத்துவ-சியோனிச கூட்டணி எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. இவர்கள் இந்தியாவை முச்சந்தியில் நிற்க வைக்காமல் ஓயமாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Related posts

Leave a Comment