கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தோற்றப் பொலிவும் தொழில்நுட்பத் தேடலும்

Loading

அதிகாரமாக்கலுக்கான கருவிகள்

ட்டம் இயற்றி அமல்படுத்தியதோடு நிறுத்தவில்லை வெள்ளை மேலாதிக்கம்; பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தியதோடு மட்டுப்படவில்லை வெள்ளை மேலாதிக்கம்; அதற்கும் மேலாக செயல்பட்டது. காட்சி அமைப்பை வரையறுப்பதன் வழியாகவும் வெள்ளை மேலாதிக்கம் வலுவாக நிலைநிறுத்தப்பட்டது.

அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான இனவெறுப்பு பலவகைகளில் வெளிப்பட்டது; வெவ்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டது. அதிலொன்றுதான் ‘காட்சி அமைப்பு ஒடுக்குமுறை’. கறுப்பர்கள் எப்படி தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தெந்த இடங்களில் தென்படக்கூடாது – இப்படி வரையறுத்துக் கட்டுப்படுத்துவதே ‘காட்சி அமைப்பின் வழி’ ஒடுக்குதல்.

திரைப்படங்களில், குற்றவாளிகள் என்றால் அது கறுப்பர்கள்; வேலைக்காரர்கள் என்றால் அது கறுப்பர்கள்; நகைச்சுவை என்ற பெயரில் கீழ்மையான கருத்துகளைச் சொல்லும் கதாபாத்திரங்களா? அதுவும் கறுப்பர்கள்தான். நாளிதழ்களிலோ குற்றம், அவலம், ஏழ்மை ஆகியவற்றுடன் மட்டுமே கறுப்பர்களின் புகைப்படங்களுக்கு தொடர்பிருக்கும்.

இதெல்லாம் ஏதோ எதேச்சையாக நடந்ததல்ல. வெள்ளை மேலாதிக்கத்தின் கோட்பாடு இது; செயல்தந்திரம் இது. இதனை, ‘படிம அறிவியல்’ (The Science of Imagery) என்கிறார் மால்கம் X . நூற்றாண்டுகளாக வெள்ளையர்கள் கட்டமைத்த இந்தப் படிமங்களை உடைத்து, மாற்றுப் படிமத்தை நிலைநிறுத்த விரும்பினார். அதற்கு தானே முன்னுதாரணமாக இருந்தார்.

நேர்த்தியின் அரசியலே கிளர்ச்சிதான்!

சிறைக்குச் செல்வதற்கு முன்னிருந்த மால்கம் லிட்டிலின் தோற்றம் நகைப்புக்குரியதாக இருக்கும். அக்கால கறுப்பின இளைஞர்களின் விருப்பத்திற்குரிய கண்களைக் கூசச் செய்த வண்ணங்களில் ஆடைகளை அணிந்த அவர், இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதும் முழுத் தோற்றத்தையும் மாற்றினார். வெள்ளையர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இந்த மாற்றத்தை அவர் நாடவில்லை; மாறாக, கறுப்பினத்தின் சுயமதிப்பை மீட்டெடுக்க தானே முன்மாதிரியாக மாறினார்.

நேர்த்தியான கருப்பு சூட், அதனுள்ளே கசங்காத வெள்ளைச் சட்டை, கச்சிதமாக கழுத்தைப் பொதிந்த Bow Tie, சீராக ஒட்ட வெட்டப்பட்ட சிகை, பளபளவென மெருகூட்டப்பட்ட காலணிகள். இவற்றுடன், தன் முகவெட்டுக்கு பொருத்தமான பிரத்யேக Browline மாடல் கண்ணாடி (அது, இப்போது Malcolm X Glasses என பிரபலமாக அறியப்படுகிறது), அந்தக் கண்ணாடிக்குப் பின்னால் கூர்மையான பார்வை.

இதெல்லாம் ஆடம்பரமல்ல. ஓர் அறிக்கை – ஓர் அறிவிப்பு. “வெள்ளையனே நீ நிர்ணயித்து வைத்திருக்கிற படிமங்களுக்குள் நாங்கள் பொருந்தமாட்டோம். உன் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்ற மாட்டோம்” என உரத்துச் சொல்லும் பிரகடனம்.

மால்கம் என்றவுடன் நினைவுக்கு வரும் தோற்றம் இதுதான். மால்கமின் சீருடை இதுதான் – எதிர்ப்பின் சீருடை. மால்கம் மட்டுமல்ல, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தொண்டர்கள் அனைவரும் இவ்வாறுதான் நேர்த்தியாக ஆடை அணிந்தனர். அந்தத் தோற்றத்தில் மிளிர்ந்த ஒவ்வொரு மடிப்பும், ஒவ்வொரு பொத்தானும், ஒவ்வொரு தையலும் சொல்லின: “வெள்ளையனுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல.”

புகைப்படம்: நினைவல்ல, நிரூபணம்!

சோம்பேறிகள், அழுக்கானவர்கள், ஒழுங்கற்றவர்கள் – இதுதான் கறுப்பர்களைப் பற்றிய வெள்ளையர்களின் பார்வை. காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள் என்ற கடுமையான சொற்களுக்குப் பதில் மென்மையான சொற்கள். அவ்வளவுதான். ஆனால், பொருள் எப்போதும் ஒன்றுதான். அர்த்தம் அதேதான்.

இந்தப் பார்வையை வெள்ளையர்களிடமிருந்து போக்கவே முடியாது. கறுப்பர்களைப் பற்றிய வெள்ளையர்களின் கீழ்த்தரமான எண்ணங்கள் அவர்களின் உள்ளங்களில் ஆழப்பதிந்து கிடந்தது. நூற்றாண்டுகளாக நீடிக்கும் இந்தப் படிமங்கள் வெறும் அவதூறுகள் அல்ல; அடிமைத்தனத்தையும் பாகுபாட்டையும் நியாயப்படுத்தும் இனவெறி கருவிகள். இந்தப் படிமத்துக்கு நேரெதிரான படிமத்தை கறுப்பர்களிடம் விதைத்தார் மால்கம். வெள்ளை இனவெறியர்கள் விரும்பிய ஒருபடித்தான தோற்றத்துக்கான மறுப்பே மால்கமின் தோற்றம். தோற்றப் பொலிவையும் உடையலங்காரத்தையும் ஓர் அரசியல் ஆயுதமாகவே அவர் தரித்தார்.

“வெள்ளைக்காரனின் மனதை மாற்ற முயல வேண்டாம். உங்களால் வெள்ளையனின் மனதை மாற்ற முடியாது. அமெரிக்காவின் தார்மிக மனசாட்சியிடம் கோரிக்கை வைப்பது வீண் – அப்படி ஒன்று அமெரிக்காவிடம் இல்லை, அமெரிக்காவின் மனசாட்சி செத்து விட்டது. அமெரிக்கா தன்னுடைய மனசாட்சியை இழந்து வெகுநாட்களாகி விட்டது. அங்கிள் சாம்-மிடம் மனசாட்சியெல்லாம் கிடையாது.

நம்முடைய மனங்களைத்தான் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். கறுப்பர்களைப் பற்றிய வெள்ளையனின் மதிப்பீட்டை மாற்ற முடியாது. நாம்தான் நம்மைப் பற்றிய மதிப்பீடுகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மை நாமே புதிய பார்வையில் ஒருவருவரையொருவர் அணுக வேண்டும்.”

இந்தக் கூற்றை, மால்கமே செயல்படுத்திக் காட்டினார். தன்னை கம்பீரமான, ஒழுக்கமான, அறிவார்ந்த நபராக காட்சிப்படுத்த விரும்பினார்.

கறுப்பர்களை குற்றவாளிகள், வன்முறையாளர்கள் என ஊடகங்கள் திரும்பத் திரும்ப பொதுப்புத்தியில் பதிய வைத்தன. மார்ட்டின் லூதர் கிங் போன்ற அகிம்சாவாதிகளுக்கு போதிய முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள், மால்கமை வன்முறையை போதிப்பவராக சித்தரித்து ஓரம் கட்டின. அப்போதுதான் Life பத்திரிகை மால்கமை பின் தொடர்ந்து படம் எடுக்க, ஈவ் அர்னால்ட் (Eve Arnold) என்ற பெண் புகைப்படக் கலைஞரை நியமித்தது. இச்சந்தர்ப்பத்தை மால்கம் நழுவவிடவில்லை.

வெள்ளையர்கள் அமெரிக்க கறுப்பின வரலாற்றையே அழித்து, அதை திரித்து எழுதினர். இதனைச் சரி செய்வது கடினம். ஆனால், இனி எழுதப் போகும் வரலாற்றை நாம் சரி செய்யலாம் அல்லவா? வரலாற்றை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை அழிக்க முடியாதல்லவா? மறுக்க முடியாதல்லவா?

புகைப்படம் அப்படியான ஆதாரங்களில் ஒன்று. புகைப்பட சான்றை மறுக்க முடியாது; புறக்கணிக்க முடியாது. நிழற்படங்களின் இந்தச் சக்தியை மால்கம் நன்கு உணர்ந்திருந்தார். அதனால், ஆகச் சிறந்த புகைப்படங்களை எடுக்க ஈவ் அர்னால்டை பயன்படுத்திக் கொண்டார்.

“புகைப்படம் என்பது வெறும் நினைவல்ல, அது ஒரு நிரூபணம் – ஆவணம்” என்பது மால்கமின் நிலைப்பாடு. எனவேதான் புகைப்படங்கள் சிறப்பாக வர மால்கம் மிகவும் மெனக்கெட்டார்; ஈவ் அர்னால்டுக்கு உதவினார். மால்கமை, அவர் சார்ந்த இயக்கத்தினரை, இயக்க செயல்பாடுகளை, கறுப்பினத்தவர்களைப் பற்றியெல்லாம் ஈவ் அர்னால்ட் எடுத்த புகைப்படங்களில் நேர்த்தியும் கலைத் தன்மையும் இருந்ததோடு அதில் ஓர் உரையாடலும் ஒளிந்திருக்கும்.

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின், பெண் தொண்டர்களை வெள்ளை நிற தூய உடைகளில் தலை முக்காடிட்டவாறு புகைப்படம் எடுக்க மால்கம் உதவினார். அதேபோல, தன்னை புகைப்படம் எடுக்கும்போதும், நேராக தோள்களை விரித்து பார்வை உறுதியாக இருப்பது போல காட்சி தருவார். இது மால்கமின் புரட்சிகர உடல் மொழி. உடலையே ஓர் அறிக்கையாக அவர் பாவித்தார்.

“மால்கம் காட்சிகளை அமைத்துக் கொடுத்தார். இந்தப் படம் இப்படி வரவேண்டும் என்பதுபோல… நான் கேமராவை கிளிக் செய்தேன். அவ்வளவுதான். இது மிகவும் வேடிக்கையாக இருந்தது” என நகைச்சுவை ததும்ப கூறுகிறார் ஈவ் அர்னால்ட். அவரிடம் மால்கம் அடிக்கடி சொல்வது இதுதான்: “எங்கள் மக்கள், தங்களை எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி என்னைக் காட்டுங்கள் – வலிமையானவர்களாக, கண்ணியமானவர்களாக, திறமையானவர்களாக…”

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய போதும், பகட்டாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பேராசைக்காரனின் குணம் தன்னில் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் மால்கம் கவனமாக இருந்தார். “ஒருமுறை அவர், புகைப்படக் கலைஞரைப் போல, தன் கைகளால் புகைப்படத்தை வடிவமைக்கும் செயலில் ஈடுபடும்போது (Frame) அந்தத் தோற்றத்தில் அவரைப் படம்பிடிக்க பலமுறை முயன்றேன். ஆனால் அவர் என்னை விட மிகவும் வேகமானவராக அப்படி படம் எடுப்பதை சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டார்” என்கிறார் ஈவ் அர்னால்ட்.

சற்று சாய்ந்த நிலையில் கருப்பு தொப்பி, நட்சத்திரமும் பிறையும் பொறிக்கப்பட்ட மோதிரம் அணிந்த கையை கழுத்தில் கைவைத்தபடி, மால்கமின் முகம் பக்கவாட்டு தோற்றத்தில் தெரியும் வகையில் ஈவ் அர்னால்ட் எடுத்த புகைப்படம், அவர் எடுத்த படங்களிலேயே மிகவும் புகழ்பெற்ற புகைப்படமாக போற்றப்படுகிறது.

எதிர்காலத்தைக் கைப்பற்ற தொழில்நுட்பத்தை கைப்பற்று!

1963-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற குடியுரிமைப் போராட்டமொன்றில் ஒரு நபர் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். கேமராவும் கையுமாக போராட்டக்காரர்களை பரபரப்பாக படம் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் புகைப்படப் பத்திரிகையாளர் அல்ல, மால்கம்தான்!

“நீங்கள் எடுத்த புகைப்படத்தின் கீழே இந்தப் போராட்டம் எங்கே நடந்தது என்ற விவரத்தை போட்டு விடுங்கள். இல்லையெனில், இவ்வளவு ஜனத்திரளையும் பார்க்கும் போது, இது நாஜி ஜெர்மனியோ அல்லது இனவெறி மிகைத்த மிஸ்ஸிசிப்பி மாகாணமோ என தவறுதலாக நினைத்துவிடுவார்கள்…” என பத்திரிகையாளர்களிடம் மால்கம் கவனப்படுத்தினார். வெறுமனே போராட்ட புகைப்படமாக அதனைப் பார்க்காமல் அதன் பின்னாலிருந்த அரசியலைப் உற்றுநோக்கினார் மால்கம்.

புகைப்படக் கலையை பொழுதுபோக்கு அம்சமாக அல்லாமல் ஓர் ஆயுதமாக பாவித்து, அதன் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்து வைத்திருந்தார். அதனால்தான் ஈவ் அர்னால்ட் நேர்த்தியான புகைப்படங்களை எடுக்க மால்கமால் ஒத்துழைப்பு வழங்க முடிந்தது. “புகைப்படக் கலைஞருக்கும் புகைப்படம் எடுக்கும் பொருளுக்குமான மவுனமான ஒத்துழைப்பை உருவாக்குவதில் மால்கம் கைதேர்ந்தவர்” என அவரை ஈவ் அர்னால்ட் பாராட்டினார்.

புகைப்படங்களை வெறும் ஆவணமாகவோ, புகைப்படக் கருவியை வெறுமனே தருணத்தை பதிவு செய்யும் உபகரணமாக அவர் கருதவில்லை. காலத்தை நினைவுகூரும் சாதனமாக அல்லாமல், எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான கருவியாக புகைப்படத் தொழில்நுட்பத்தை அவர் கணித்தார். வரலாற்றை மீட்டெடுப்பதற்கான, மறுகட்டமைப்பு செய்வதற்கான ஆயுதம் கேமரா. ஒவ்வொரு ‘க்ளிக்’கும் ஓர் எதிர் வாதம் (Counter Narrative). ஒவ்வொரு ‘ஃபிரேமும்’ ஒரு மறுப்பு – காட்சி அமைப்பு ஒடுக்குமுறைக்கான மறுப்பு.

அதனால்தான் அவர் கேமராவை எப்போதும் தன்னுடன் வைத்திருந்தார்; காட்சிகளை பதிவு செய்தார்; புகைப்படக் கலையில் நுழையும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். சலனக் காட்சிகளை பதிவு செய்யும் தொழில்நுட்பம் வளர்ந்த போது, அந்த வகை கேமராவை வாங்கி ஒளிப்பதிவு நுணுக்கங்களைப் பழகினார். ஆஃப்ரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, கறுப்பினத்தவர்களின் முன்னேற்றம் குறித்த காட்சிகளை ஒளிப்பதிவு செய்து, அமெரிக்கா திரும்பிய பின் அமைப்புத் தொண்டர்களுக்கு அதை திரையிட்டு காண்பித்தார்.

1960-கள் தொழில்நுட்பம் துரிதமாக வளர்ந்த காலக்கட்டம். நவீன ஒலிப்பதிவு சாதனங்கள், தொலைக்காட்சி என மக்கள் தொடர்பு கருவிகள் அடுத்தடுத்த மேம்பட்ட தொழில்நுட்பங்களில் வந்து கொண்டே இருந்தன. பெரும்பாலான கறுப்பினத் தலைவர்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். வெள்ளையர்களின் கருவிகளாகக் கருதி அதனை அண்டத் தயங்கினர். ஆனால், மால்கம் X தொழில்நுட்பங்களை அனைவருக்குமானதாகப் பார்த்தார்.

தொழில்நுட்பங்கள் சக்தி வாய்ந்தது என்பதைத் தாண்டி, யார் அதனை கட்டுப்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என நவீன மக்கள் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வெள்ளை இனவெறி கருத்தாக்கங்களை பரப்பும்போது, கறுப்பர்களும் அதே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்கள் கதைகளைச் சொல்ல வேண்டுமென மால்கம் விரும்பினார்.

தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் உந்துதல் வெறும் ஆர்வக்கோளாறால்ல. மால்கமைப் பொறுத்தவரை அது உயிர் வாழ்வதற்கான உத்தி. சிறையில் இருந்தபோது ஆங்கில மொழியில் நிபுணத்துவம் பெற அகராதியையே முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர் அவர். தனக்கு ஆர்வமில்லாத துறை என்று எதுவுமில்லை என குறிப்பிடும் மால்கம், எது குறித்த அறியாமையையும் போக்கிக் கொள்ள எப்போதுமே தயாராக இருந்தார். 

அதேபோல கறுப்பர்களும் எல்லா துறைகளிலும் நிபுணத்துவம் பெற வேண்டுமென்றும், அப்போதுதான் கறுப்பின தேசியவாதத்தின் தற்சார்பு முழுமையடையும் என்று நம்பினார். ‘கறுப்பர்கள் அறிவற்றவர்கள்’ என்ற வெள்ளை மேலாதிக்கத்தின் அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்க தொழில்நுட்ப அறிவில் விஞ்சுவது ஒன்றே தகுந்த பதிலடியாக இருக்க முடியும் என்பது மால்கமின் நம்பிக்கை.

தோற்றமும் தொழில்நுட்பமும் விடுதலை ஆயுதங்கள்

தோற்றப் பொலிவும் தொழில்நுட்பத் தேடலும் அதிகாரமாக்கலுக்கான (Empowerment) கருவிகள். நிகழ்காலத்தில் சமூக மாற்றத்திற்கான அடையாளம் ‘தோற்றம்’, எதிர்காலத்திற்கான முதலீடு ‘தொழில்நுட்பம்’. அதிகாரத்தை அடைவதற்கான வழிகளில் ஒன்று தொழில்நுட்பம். தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்தியவர்களே கருத்தாக்கங்களையும் கட்டுப்படுத்தினர். தொழில்நுட்பம் கைவரப் பெறுவதில் தேக்கமடைந்தால், அதிகாரத்தை அடைவதற்கான இடைவெளி அதிகரிக்கும்.

ஒடுக்குபவர்கள் அனைத்து தொழில்நுட்பங்களையும் உடனே பெற்றுக் கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு அந்தத் தொழில்நுட்பத்தின் அடுத்த பதிப்பு வரும்போதுதான் முந்தைய பதிப்பு கிடைக்கிறது. இந்த இடைவெளி இருக்கக் கூடாது என ஆதங்கப்பட்டார் மால்கம்.

அதுபோல வெறுமனே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (Consumer), அதன் ஒரு பகுதியாகி (Character) விடாமல், தொழில்நுட்ப விற்பன்னர்களாக (Creators) இருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார். அதன் வெளிப்பாடுதான் நவீன கேமராக்களை கையாள்வதில் அவர் காட்டிய ஈடுபாடு. மால்கம் X கேமராவை பயன்படுத்தியது, கறுப்பினம் எந்த அறிவுப் புலத்திலிருந்தும் விலக்கி வைக்கப்படக் கூடாது என்ற கொள்கை அறிவிப்பு. ஏனெனில், கறுப்பர்கள் ‘தாழ்ந்த உயிரினம்’ என்ற வெள்ளை மேலாதிக்கத்தை உடைக்க அது ஒன்றே வழி.

விடுதலை என்பது வெறும் சட்டம் சார்ந்த உரிமை மட்டுமல்ல. சுய வரையறைக்கான உரிமை, சுய பிரதிநிதித்துவத்துக்கான உரிமை, சுய அடையாளப்படுத்தலுக்கான உரிமை. நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள்? உலகம் உங்களை எப்படி பார்க்கிறது – பார்க்க வேண்டும்? வரலாறு உங்களை எப்படி பதிவு செய்ய வேண்டும்? – இவை எல்லாமே அரசியல். இந்த அரசியலின் ஆயுதங்கள்தான் தோற்றப் பொலிவும் தொழில்நுட்ப தேடலும். மால்கம் பயன்படுத்திய மிகக் கூர்மையான இந்த ஆயுதங்கள் அவர் கொல்லப்பட்டு அறுபது ஆண்டுகள் கழித்து, இப்போதும் தேவைப்படுகின்றன ஒடுக்கப்பட்ட மக்களுக்கு!

•••••

Related posts

Leave a Comment