கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பஞ்சாப்: ஆம் ஆத்மியின் வெற்றியும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் – ப்ரீத்தம் சிங்

Loading

பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்கள் 2022 ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வெற்றியை விவரிக்க உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்கள் ‘ஹன்ஜா ஃபெர் ஜித்’ என்ற பஞ்சாபி சொல்தொடரைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 92 இடங்களை வென்றது. இந்த வெற்றியின் சாரத்தையும் அளவையும் குறிப்பிடும் நெருக்கமான தொடர் அதுதான். ‘வரலாற்று மாற்றம்’, ‘அதிசயம்’, ‘அரசியல் சுனாமி’ போன்ற பிற தொடர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு வழிவகுத்த இந்தத் தேர்தல் முடிவை, அரசியல் பூகம்பம் என்று அழைப்பதையே நானும் விரும்புகிறேன்.

வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், 1997 தேர்தல் முடிவைப் போன்றது. அப்போது ஷிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி 93 இடங்களைப் பெற்றிருந்ததால், காங்கிரஸ் வெறும் 14 இடங்களில்தான் வெற்றி பெற்றது. எவ்வாறாயினும், வெறும் இடங்களின் எண்ணிக்கையைத் தாண்டிச் சிந்தித்தால், இந்த வெற்றி பழைய அரசியல் மேலாதிக்கத்திற்கு ஏற்படுத்திய அழிவு ஈடு இணையற்றது. இது 1997ல் நடக்கவில்லை. பஞ்சாபின் சமீபத்திய அரசியல் வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர்கள் – பிரகாஷ் சிங் பாதல், அமரீந்தர் சிங், ராஜிந்தர் கவுர் பட்டல், பிக்ரம் சிங் மஜிதியா, நவ்ஜோத் சிங் சித்து, சரண்ஜித் சிங் சன்னி – மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளனர். உண்மையில் இது ஓர் அரசியல் பூகம்பம். பஞ்சாப் மக்கள், பெரும் தலைவர்களை ஒதுக்கித் தள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

மூன்றாவது பாதை

சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட சிறு மேட்டுக்குடியின் ஆட்சியைக் கவிழ்க்கும் இந்த அரசியல் புரட்சி சுமார் இருபது ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. ஓர் அரசியல் புரட்சிக்கான இந்த ஏக்கம், பஞ்சாபின் இரண்டு ரிவாயதி (பாரம்பரிய) கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கும் அகாலி-பாஜக கூட்டணிக்கும் அப்பால் மூன்றாவது வழியைக் கண்டறிவது என அடிக்கடி சொல்லப்பட்டது (இது இப்போது விவசாயிகள் இயக்கத்தின் செல்வாக்கால் மாறிவிட்டது).

அகாலி தலைவர் பிரகாஷ் சிங் பாதலின் பிரிந்த மருமகனான மன்பிரீத் பாதல் தொடங்கிய பஞ்சாப் மக்கள் கட்சி, அந்த மூன்றாவது அரசியல் வழி விருப்பத்தின் முதற் பெரும் முயற்சி. அவர் நல்ல வரவேற்பைப் பெற்றார், ஆனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சகிப்புத்தன்மையும் பொறுமையும் இல்லாதவராக விளங்கினார். தான் முன்னெடுத்த பாதையிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து பாரம்பரிய அரசியலில் மீண்டும் கலந்தார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், பஞ்சாபிற்கு வெளியே போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்த ஆம் ஆத்மி, மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் நான்கு இடங்களை வென்றபோது, இந்த மூன்றாவது பாதை பெரும் ஊக்கத்தைப் பெற்றது. மருத்துவர் தரம்வீர் காந்தி பாட்டியாலா மகாராணியைத் தோற்கடித்தார். இது பழைய மேட்டுக்குடிக் கோட்டையில் ஏற்பட்ட விரிசல் ஆகும். ஆம் ஆத்மி கட்சி ஜனநாயக மாற்றின் அடையாளமாக, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அதிக வாக்குகள் பெற்றபோது, ஆம் ஆத்மி மீது மக்கள் நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் டெல்லித் தலைமையின் நிர்பந்தம், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மியைப் பல அமைப்புத் தவறுகளையும் அரசியல் தவறுகளையும் செய்ய வைத்தது. இதனால் வாசல் முன் வந்து நின்ற வெற்றியை ஆம் ஆத்மி உணரவில்லை. இருப்பினும், அப்போது ஆம் ஆத்மி முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. ஒருகாலத்தில் அதிகாரத்தில் இருந்த அகாலி தளத்தை, பஞ்சாப் சட்டசபையில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளியது.

மேலும் ஆம் ஆத்மி கட்சியில் பிழைகள் தொடர்ந்து நடந்தன. அதனால் ஆம் ஆத்மி பிளவுபட்டது. மாற்றம் குறித்த கனவு முடிந்துவிட்டது போல் தோன்றியது. ஆனால், 2020ல் பாஜக அரசு கொண்டு வந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இயக்கம் வந்தது.

பஞ்சாபி விவசாயிகள் முன்னணிப் படையாக உருவான விவசாயிகள் இயக்கம் முழுப் பஞ்சாபி சமூகத்தையும் உற்சாகப்படுத்தியது. இது நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிரான அகில இந்திய அந்தோலனாக (எதிர்ப்புப் போராட்டமாக) வளர்ந்தது. பஞ்சாப் விவசாயிகள் அமைப்பை இந்தப் போராட்டம் உயிர்பெற்று எழச் செய்தது. இந்தியாவில் எந்த வெகுஜன அமைப்பும் பஞ்சாப் விவசாயிகள் அமைப்பு போல் சமூகச் செல்வாக்கை இதுவரை அடையவில்லை. விவசாயி அமைப்புகளின் சமூகச் செல்வாக்குதான் இறுதியில் மோடி ஆட்சியைச் சட்டங்களை ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளியது.

விவசாயிகள் வெற்றியின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. ஆயினும், விவசாயிகள் இயக்கத்திற்கு முன், பாஜக ஆட்சிக்கு எதிராக எழுந்த அனைத்து எதிர்ப்புகளும் நசுக்கப்பட்டன. 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பெரும் கூச்சலுடன் மோடி அரசாங்கம் கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை, அவமானகரமான முறையில் திரும்பப் பெற திமிர்பிடித்த பிரதமரை, பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் கட்டாயப்படுத்தியது. இப்போராட்டம் பாஜக ஆட்சியில் நடந்த வலிமைவாய்ந்த மக்கள் போராட்டங்களில் ஒன்றாகும்.

விவசாயிகள் மறியல்

அந்த மாபெரும் (அரசியல் விளைவுகளுடன் கூடிய) பொருளாதார வெற்றியைப் பெற்ற பெருமையுடன், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் அந்தப் பெருமையை அரசியல் வெற்றியாக விவசாயிகள் இயக்கம் மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், விவசாய அமைப்புகள் சில பாராளுமன்ற அரசியல் புறக்கணிப்பை அரசியல் கருத்துநிலையாகக் கொண்டிருந்தன. மேலும், அந்த அமைப்புகள் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்ட வெற்றியை பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு உரிமையாக்கிவிடக் கூடாது என்று உணர்ந்த மற்ற விவசாய அமைப்புகளைக்கூட எதிர்த்தனர். இதனால் விவசாயிகள் இயக்கம் பிளவுபட்டது. விவசாயிகள் போராட்டப் பொருளாதார வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றும் முயற்சிக்கு இப்படிப்பட்ட பின்னடைவு ஏற்பட்டபோதிலும், விவசாயிகள் இயக்கத்தில் பஞ்சாபி சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பரவலான பங்கேற்பு, மேட்டுக்குடி ஆட்சிக்கு எதிரான அரசியல் உணர்வின் அளவை உயர்த்தியது. இந்த மேம்பட்ட அரசியல் உணர்வு, பாரம்பரிய மேட்டுக்குடியினரைத் தோற்கடிக்க, ஓர் கருவியாக ஆம் ஆத்மியைப் பயன்படுதிக் கொண்டுள்ளது.

டெல்லி தர்பார்

பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தது, ஆம் ஆத்மி கட்சி மீதுள்ள அன்பினால் அல்ல. மாறாக மேட்டுக்குடியினரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து கட்டுப்படுத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பாணி குறித்துப் பலத்த சந்தேகங்கள் உள்ளன. பஞ்சாபியர்கள் டெல்லி தர்பாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நீண்ட வரலாற்று மரபு உள்ளது. கேஜ்ரிவாலும் அவரது டெல்லி கூட்டாளிகளும், பஞ்சாபி அரசியல் பண்பாட்டின் இந்த அம்சத்தின் முக்கியத்துவத்தைத் தாமதமாக உணர்ந்திருந்தாலும், இறுதியில் பகவந்த் மானை ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்தனர். மான், எந்த நிர்வாகத் திறமைக்கும் பெயர் பெற்றவராக இல்லாவிட்டாலும், ஊழலற்ற, எளிமையான வாழ்க்கை முறைக்கும் செயல்பாட்டிற்கும் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

கெஜ்ரிவாலின் டெல்லி ஆட்சி மீது ஈர்ப்புக் கொண்டு, பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்ற கதையைப் பரப்பும் பல வர்ணனையாளர்களைப் போலல்லாமல், மானின் நேர்மையும் பிரபலமும்தான் பஞ்சாபி மக்களை ஆம் ஆத்மிக்கு ஈர்த்துள்ளது.

இதன் குறிப்பிடத்தக்க உட்பொருள் என்னவென்றால், கெஜ்ரிவால் மான்னையும் பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசாங்கத்தையும் கைப்பாவையாக ஆக்கிக் கட்டுப்படுத்துவதாகக் கருதப்பட்டால், காங்கிரஸ்-அகாலி மேட்டுக்குடிகள் தோற்பதற்கு வழிவகுத்த மக்கள் சினம் கெஜ்ரிவாலை நோக்கியும் திரும்பக்கூடும்.

தேர்தல் முறையின் சிக்கல்

பஞ்சாபில் ஆம் ஆத்மியின் வெற்றியின் அளவை மதிப்பிடுவதில், அதிக வாக்கு பெற்று முதலில் வரும் வேட்டாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்கும் இந்தியாவின் நடப்புத் தேர்தல் முறையையும் (FPTP), அதன் பொருத்தப்பாட்டையும் சுருக்கமாக ஆராய்வது பயனுள்ளது. இந்த விஷயத்தை எளிமையாக விளக்க, தேர்தல் முடிவுகளை மிகவும் முன்னேறிய ஜனநாயக நாடுகளில் ஏதோ ஒருவகையில் பயன்படுத்தப்படும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல்முறை (proportional representation) பயன்படுத்தப்பட்டிருந்தால் என்ன முடிவு கிடைக்கும் எனவும் எடுத்துக்காட்டுவேன். பஞ்சாப்பைப் பற்றி விவாதிப்பதற்கு முன், 2014ம் ஆண்டிலும் 2019ம் ஆண்டிலும் பாஜகவின் பொதுத் தேர்தல் வெற்றிகளைப் பற்றிச் சுருக்கமாக விவாதிக்கிறேன். 2014ல், பாஜக 31 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. நடப்புத் தேர்தல்முறை வெற்றிகள் மூலம், அது மக்களவையில் உள்ள 543 இடங்களில் 282 இடங்களை வென்றது. விகிதாச்சாரமுறை பயன்படுத்தப்பட்டிருந்தால், 31 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக 168 இடங்களில்தான் வெற்றிப் பெற்றிருக்கும்; அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையைக்கூடப் பெற்றிருக்க முடியாது.

2019ல், பாஜக 37.36 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. நடப்புத் தேர்தல் முறையால், அது 303 இடங்களைப் பெற முடிந்தது. விகிதாசாரமுறை பயன்படுத்தியிருந்தால், பாஜக 202 இடங்களைப் பெற்றிருக்கும். அரசாங்கம் அமைக்க இன்னும் 70 இடங்கள் அக்கட்சிக்குத் தேவைப்பட்டிருக்கும்.

2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களைப் பார்க்கும்போது, ஆம் ஆத்மி கட்சி 42.01 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நடப்பு தேர்தல் முறை மூலம் 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விகிதாச்சார முறையைப் பயன்படுத்தியிருந்தால், ஆம் ஆத்மி கட்சிக்கு 49 இடங்கள் கிடைக்கும். இந்த எண்ணிக்கை அரசாங்கத்தை அமைக்கத் தேவையான 59ஐவிட 10 இடங்கள் குறைவு. 22.98 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு நடப்புத் தேர்தல் முறையில் 18 இடங்கள் கிடைத்தன. ஆனால் விகிதாச்சார முறையைப் பயன்படுத்தினால், 27 இடங்களைப் பெறும். அகாலி தளம் 18.38 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நடப்புத் தேர்தல் முறையின் மூலம் 3 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் விகிதாசார முறையில் 22 இடங்களைப் பெற்றிருக்கும். 6.60 சதவீதத்துடன் பாஜக நடப்புத் தேர்தல் முறை மூலம் 2 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் விகிதாச்சார முறையில் 8 இடங்களைப் பெறும்.

நடப்புத் தேர்தல் முறை தேசிய அளவிலான பெரிய அரசியல் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றிபெற தவறான முறையில் வழிவகுக்கிறது என்பதை இந்தியாவின் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் உணர வேண்டும். நடப்புத் தேர்தல் முறை உருவாக்குகிற ஜனநாயக மறுப்பைப் பற்றி உணர்ந்துகொள்வது அவசியம். இதுபற்றி தேர்தல் சீர்திருத்தங்களுக்கான இயக்கத்திற்குப் பங்களிக்கக்கூடிய வகையில், அரசியல்-அறிவு சார்ந்த உரையாடல்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.

மிகப்பெரும் சவால்கள்

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு இருக்கும் இரண்டு பெரிய சவால்கள்: முதலாவது, பஞ்சாப் மாநிலத்தில் தனியார் மாஃபியாக்களை ஒழிப்பதும், வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கத் தேவையான மாநில வருவாய் நிலையை மேம்படுத்துவதும் ஆகும். இரண்டாவது, பொருளாதாரம், அரசியல், நிர்வாகம், பண்பாடு ஆகிய தளங்களில் அச்சுறுத்துகிற ஒன்றிய அரசின் மையப்படுத்தலுக்கு எதிராகப் பஞ்சாப் மாநில உரிமைகளைப் பாதுகாப்பது ஆகும். இவ்விரண்டு பணிகளும் குறிப்பிட்ட அளவு தொடர்பற்றது எனினும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மையப்படுத்தல் மாநிலங்களின் வருவாய் நிலையைப் பலவீனப்படுத்துகிறது, மாநில வளர்ச்சித் திறனைத் தேய்த்து அழிக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் சீரழிந்த வளர்ச்சிப் பாதையை ஆம் ஆத்மி கட்சியால் சீர்திருத்த முடியவில்லை என்றால், காங்கிரஸ்-அகாலி கட்சிகளின் மோசமான ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த அதே பஞ்சாபி மக்கள் 2027ம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவார்கள்.

(கட்டுரையாசிரியர் ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் வணிகப் பள்ளி விருதுநிலை பேராசிரியர். பஞ்சாப் அரசியல் பொருளாதாரம் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.)

மூலம்: News9live

தமிழில்: தமிழ் காமராசன்

நன்றி: ஊடாட்டம்

Related posts

Leave a Comment